“என்னங்க?” என்றாள் அரைகுறை தூக்கத்தில் இருந்தவனிடம்.
“என்ன?” என்றான்.
“இப்பொழுதைக்கு குழந்தை நமக்கு வேண்டாம், கலைச்சுடலாம்…” என்றாள்.அவள் சொல்லி முடிக்கவில்லை. திடுக்கிட்டு தூக்கம் முற்றிலும் கலைந்தவனாய் எழுந்து உட்கார்ந்தான்.அவள் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியை. நல்ல சம்பளம். மாதம் இருபத்தைந்தாயிரம் தாண்டும்.அவனுக்கு கெமிக்கல் பிசினஸ். நல்ல வருமானம்.
“ஏன் வேண்டாம்? என் தம்பிங்க எல்லாருக்கும் குழந்தை பிறந்து மூணாவது நாலாவதுன்னு கிளாசுக்கு போயிட்டிருக்கு. அம்மா வேற கேட்டுட்டே இருக்கா ஏதாவது விசேஷம் இருக்காடான்னு. உனக்கு என்ன புத்தி பிசகிப்போச்சா? குழந்தை கடவுளோட வரம்.
அதைப்போய் கலைச்சுடலாம்ன்னு சாதாரணமா சொல்றே…”
“எனக்கு பிடிக்கலை. எப்பப் பார்த்தாலும் என்னைச் சுத்தி குழந்தைங்கதான். இப்ப வேண்டாம். கொஞ்ச நாள் சந்தோஷமா இருப்போம். அப்புறம் பார்த்துக்கலாம்…”
அவனுக்கு எரிச்சல் ஆனது.
“என்ன நினைச்சுட்டு இருக்கே? ஏற்கனவே ரெண்டு தடவை கலைச்சிருக்கே… அதையே நான் யார்கிட்டயும் சொல்லாம மறைச்சுட்டேன்…”
“எனக்குப் பிடிக்கலை…”
“என்னதான் பிரச்னை உனக்கு? அவனவன் குழந்தை பொறக்கலைன்னு கோயில் கோயிலா சுத்தறான். உனக்கு ஏன் இந்த எண்ணம்? ரெண்டு பேருக்கும் நல்ல சம்பளம். குழந்தைக்கு நல்ல எஜுகேஷன் தர முடியும். நல்லா வளர்க்க முடியும். அப்புறம் என்ன?’’
“எனக்குப் பிடிக்கலைன்னா விட்டுடுங்க. காரணம் எல்லாம் கேட்காதீங்க. குழந்தைன்னு பொறந்தா உங்க சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சுடுவாங்க. எனக்கு உங்க சொந்தக்காரங்க மூஞ்சிய பார்க்க பிடிக்கலை!”
“சரிதான்! உன்னை பொண்ணு பார்க்க வந்தப்ப, ‘ரொம்ப பாந்தமா இருக்காடா… நல்ல வேலையிலயும் இருக்கா’ன்னு ஓகே பண்ணது அம்மாதான்…”
“ரூட்டை மாத்தாதீங்க. உங்க குடும்பத்துல யாரையும் எனக்கு பிடிக்கலை. அதுதான் ஒதுக்கியே வச்சிருக்கேன். எனக்கு நீங்க மட்டும் போதும். உங்க சொந்தக்காரங்க வேண்டாம். போதுமா? உடனே ஏற்பாடு பண்ணுங்க. இல்லே நானே போய் பண்ணிப்பேன்!”
அவள் எப்பொழுதும் அப்படித்தான். பிடிவாதம் பிடித்தால் பிடிவாதம்தான். யாரையும் மதிக்க மாட்டாள். ஒரு பண்டிகை என்றால் கூட யாரையும் பார்க்கப் போகலாம் என்று சொல்ல மாட்டாள். பக்கத்திலேயே இருக்கும் அவள் அக்கா வீட்டுக்கு மட்டும் போவாள்.
அவன் வீட்டுக்காரர்கள் வந்துவிட்டாலே முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு ‘ஸ்கூல் பேப்பர்ஸ் கரெக்ஷன் இருக்கு’ என்று ரூமிற்குள் புகுந்து கொள்வாள்.வந்தவர்களுக்கு முகத்தில் அடித்தாற்போல் இருக்கும். அவன் தம்பி சில நாள் முன்னால் மதுரையில் இறந்து போனான். அவனைப் பார்க்கக் கூட கணவனை அனுமதிக்கவில்லைவீட்டிலேயே தலையில் தர்ப்பையும் எள்ளும் போட்டுக் குளித்தான்.
அவனுக்குத் தெரிந்து சில பார்ப்பன குடும்பங்களில் இப்படித்தான். பல பேர் திருமணங்களுக்குப் பின் இப்படித்தான் தீவுகளாக மாறி விடுகிறார்கள். சுயநலம் பெருகும்போது இப்படி ஆகும் என்று ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர் எதிலோ பேட்டி கொடுத்ததைப் படித்தது நினைவில் வந்தது.
“என்ன பேசாம இருக்கீங்க?”
“நான் சொன்னா நீ கேட்கப் போறதில்லே. உனக்கு என்ன தோணுதோ பண்ணிக்க!”
“நீங்க வரணும் கையெழுத்துப் போட…”
“வெளி நாட்டுக்கு போயிருக்காருன்னு சொல்லு…”
“ஆமாம் இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…”காலையில் மறுபடியும் வாக்குவாதம் தொடர்ந்தது.
“இது மூணாவது. நினைவில் இருக்கு இல்ல?”
“இருக்கட்டும். எனக்கு விருப்பம் இல்லேன்னா விடுங்க. சும்மா போட்டு தொந்தரவு பண்ணிட்டே இருக்காதீங்க…”
அவனுக்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. ஒரு குழந்தைக்காக ஒரு தம்பதி சென்னையில் இருந்து குருவாயூருக்கு நடந்தே சென்று பிள்ளை பாக்கியம் பெற்றது நினைவில் வந்தது. எத்தனை சொன்னாலும் திருந்த மாட்டாள். சம்மதம் இல்லாமலே போனான். ஆரம்பத்திலேயே அடங்கிப் போனால் ஆண்களுக்கு ஆபத்துதான். அதன் பின் ஆயுசு வரைக்கும் இப்படித்தான் அடங்கிப் போக வேண்டும்.
படிவங்களில் கையெழுத்து வாங்கும்போது கைனகாலஜிஸ்ட் கேட்டார்.
“கட்டாயம் பண்ணி ஆகணுமா? யோசிச்சுக்கங்க. எத்தனை பேர் குழந்தை இல்லாம இருக்காங்க? யாருக்காவது கொடுக்கலாம் இல்லே, பெத்து…”
“டாக்டர், நாங்க வந்தது கலைக்க. தானம் கொடுக்க இல்லே!” கொஞ்சம் கோபமாகவே சொன்னாள்.கலைத்து விட்டு வீடு திரும்பியாகி விட்டது. ஒரு வாரம் தான் பேசாமல் இருந்தான்.
பின் வழக்கம் போல் மாறிக் கொண்டான். வேறு விதி.
ஒரு வாரம் கழித்து அவள் நல்ல மூடில் இருந்த போது கேட்டான். “என்னதான் உன் பிரச்சனை? ஏன் இப்படி பண்றே?”
“குழந்தை பெத்துக்க எனக்கு விருப்பம் இல்லே. வேலையை விட்டுத்தான் பார்த்துக்கணும். உங்க வருமானம் மட்டும் பத்தாது. அப்புறம் எப்படி நம்ம விருப்பப்படி குழந்தையை வளர்க்கறது?”‘‘ஏன், உங்க ஸ்கூல்ல வேலை செய்யற யாருக்கும் குழந்தையே இல்லையா? அவங்க எப்படி பார்த்துக்கறாங்க?”
“அவங்க மாமியார் வந்து பார்த்துக்கறாங்க…”‘‘நானும் அம்மாவை வரச் சொல்றேன்…”
“அதான பார்த்தேன்…”
“உனக்கு விருப்பம் இல்லேன்னா குழந்தையைப் பார்த்துக்க காசு கொடுத்து ஓர் ஆளைப் போட்டுப்போம்…”
“அதெல்லாம் நாமளே கவனிக்கற மாதிரி வராது…” அவள் மசிவது போல் தெரியவில்லை.ஒரு மாதம் கடந்திருக்கும். அவள் பள்ளி சக ஆசிரியை கல்யாணத்துக்குப் போய்விட்டு வந்தார்கள். அங்கே யாரோ கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. வீட்டுக்கு வந்ததும் அவனிடம் சப்தம் போட்டாள்.
“இவளுக்கு என்ன வந்தது..? எப்ப ஸ்வீட் தரப்போறேன்னு கேட்கறா. இவளுக்கு ஆசைன்னா பெத்துக்க வேண்டியதுதானே?”
நாம் நினைப்பதை எல்லாம் இறைசக்தி செய்வதில்லை. அன்றைய ஆசைக்கூத்தில் அடுத்த மாதமே மாதவிலக்கு தள்ளிப் போனது.
டாக்டரிடம் போனாள். அவர் உறுதி செய்து விட்டார். “ஆமாம் கர்ப்பம்தான்!”
இரண்டு மாதங்கள். வழக்கம் போல ஆரம்பித்து விட்டாள். “இப்ப வேண்டாம்…”
அவனை வற்புறுத்தி டாக்டரிடம் அழைத்துப் போனாள்.அவர் செக் செய்துவிட்டு “கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருக்கு. இப்ப கலைக்க முடியாது. அப்படியே கலைச்சாலும் கர்ப்பப்பையையும் சேர்த்து ரிமூவ் பண்ண வேண்டியிருக்கும்…” என்றார்.
அவன் அதிர்ந்து போனான். “டாக்டர், வேற வழியே இல்லையா?”
“இல்ல… நான் சொல்ல வேண்டாம்ன்னு பார்த்தேன். குழந்தை சரியாவும் ஃபார்ம் ஆகலை. அதையும் கலைச்சுட்டு கர்ப்பப்பையையும் எடுக்கறதுதான் சேஃப். இல்லைனா வளர வளர உயிருக்கே ஆபத்து…” என்று சொன்னவர் தொடர்ந்து மெடிக்கல் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார்.
அவளும் அதிர்ந்துதான் போனாள். ஒரு வாரம் லீவ் போட்டுவிட்டு சிகிச்சையைத் தொடங்கினாள்.எல்லாம் முடிந்தது.
“பத்து நாள் லீவ் போட்டு ரெஸ்ட் எடுத்துக்கங்க…” என்றார் டாக்டர்.
காரில் வீடு திரும்புகிற வரை அவன் பேசவேயில்லை. எல்லாம் விதி என்று விதியின் மீது பழி போட முடியாது. நம் கையில்தான் எல்லாம் என்று தோன்றியது. குழந்தைகளின் அலறல் சப்தம் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
“கமாக்களை மாற்றி நாம்தான் முற்றுப் புள்ளிகளை வைத்துக் கொள்கிறோம்…” என்றான் அவளைப் பார்த்து. அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
– ஏப்ரல் 2019