ராஜராஜன் சார், சமீபத்தில் பணி ஓய்வுப் பெற்ற உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்.
எண்ணம், சொல், செயல், பார்வை எல்லாமே தனித்துவமாய், வித்தியாசமாய் இருக்கும் அவரிடம்.
Old age is not for taking rest. To Strive, To seek, To find… Not to Yield…
என்ற ‘லார்ட் டென்னிசன்’ ன் தத்துவத்தைத் தன் கொள்கையாய்க் கொண்டவர். எந்தவொரு நிலையிலும், எவருக்காகவும் தன் முடிவை மாற்றிக் கொள்ளாதவர்.
“அவுருக்கிட்ட யாரு பேசுறது…! ஊரு உலகத்துல இல்லாத அதிசமாத்தானேப் பேசுவாரு…!”
“சரியான கோணக்-கட்சி ஆசாமி…! அவருட்ட பேச நம்மாலாவாதுப்பா!”
“வடக்குன்னா தெக்கும்பாரு…! கீழன்னா மேலம்பாரு…! அவுருகிட்டப் பேசி ஜெயிச்சிர முடியுமா…?”
“நொரநாட்டியம் பேசுறவருகிட்டே நமக்கென்ன ஒறவுங்கறேன்…!”
இப்படியெல்லாம் பரவலாக அவரைப் பற்றி, அபிப்ராயம் இருப்பதால் யாரும் அவரிடம் பேசவே யோசிப்பார்கள்.
ராஜராஜன் சார், தன் மனைவி வசுந்தரா டீச்சரைப் பள்ளி வளாகத்துக்குள், இறக்கிவிட்டு ‘யு டர்ன்’ போட்டுத் திரும்பினார்.
சோகமான முகத்துடன், உடைந்த குரலில், “சார்…!” என்று அழைத்துக்கொண்டே ஓடி வந்தான் பத்தாம் வகுப்புப் படிக்கும் ராம்சரண். முகம் அழுது அழுது வீங்கியிருந்தது.
வண்டியைப் ‘பிரேக்’கில் நிறுத்தினார். கால் விரல்களைத் தரையில் அழுந்த ஊன்றிக் கழுத்தைத் திருப்பி அவனைப் பார்த்தார்.
“ராம்சரண்…! என்னடாக் கண்ணா…? சிங்கக் குட்டி நீ அழலாமா? ” பாசத்துடன் கேட்டார்.
“சார்…! அது வந்து…! அது… வ…ந்…து….!”
ஏதோச் சொல்ல வந்துச் சொல்ல முடியாமல் தடுமாறினான் ராம் சரண்.
சாவியை இடது பக்கம் திருகி, இஞ்சினை அமர்த்தினார். இடது காலால் ‘ஸைடு ஸ்டாண்ட்’டை இறக்கி, வண்டியைச் சாய்த்து நிறுத்தியபின், நின்றார்.
சிறுவன் அருகில் வந்தார். குனிந்து, அவன் முதுகில் ஆதரவாகக் கை வைத்தார் ராஜராஜன்.
“சொல்லு சரண்…!” – குரலில் பாசம் இழையோடியது.
“ம்…ம்…ம்…ம்…”
உடைந்து, அழுதான் ராம்சரண்.
“சாப்ட்டியா சரண்…? சாப்பாடு வாங்கித் தரட்டுமா…?”
“சாப்பாடெல்லாம் வேண்டாம்…!” – என்பதைப் போலத் தலையசைத்தான். நிறுத்த முடியாமல் தேம்பியழுதான்.
தற்சமயம் ராம்சரண் முன் நிற்கும், இதே அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில், ராஜராஜன் சார், தலைமையாசிரியராகப் பதவி வகித்து, பணி ஓய்வுப் பெற்ற ஓய்வூதியரானவர்.
ஒரு வாரம்தான் ஆகிறது அவர் ஓய்வு பெற்று. பணி ஓய்வுப் பெற்ற மறுநாள் முதலே, இதேப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் அவர் மனைவி வசுந்தராவை ராஜராஜன் சார்தான் தினமும் பள்ளி வளாகத்தில் இறக்கி விட்டுத் திரும்புகிறார்.
“நான் ஆட்டோவுலப் போறேனே…?” – என்று கணவரின் ரிட்டையர்மெண்ட்டுக்கு மறுநாள் கேட்டாள் வசுந்தரா.
“எதுக்கு நீ ஆட்டோவுலப் போகணும்…?”
“தலைமை ஆசிரியரா ‘கெத்தா’ பணியாற்றி, ரிடையர் ஆன நீங்க, அதே வளாகத்துக்கு, ஒரு டிரைவர் போல என்னை விட்டும், அழைத்தும் போனால் நாலு பேர் நாலு விதமாப் பேசுவாங்களே…?” – என்ற தன் எண்ணத்தைச் சொன்னாள்.
“மத்தவங்களுக்காகவோ, மத்தவங்கப் பேச்சுக்காகவோ நாம வாழக்கூடாது வசு; ‘வரட்டு ஈகோ!’ வாழ்வின் சமநிலையைக் கெடுத்துரும்; நாம…, நமக்காக வாழணும்…!” – என்று மனைவியைச் சமாதானம் செய்ததோடு, காலை, மதியம், மாலை மூன்று வேளையும், காலந்தவறாமல் பள்ளி வளாகத்தில் மனைவியை இறக்கிவிடுவதும், மீள அழைத்து வருவதுமாய்ச் செயல்பட்டார் 36 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜராஜன்.
“ஆட்டோக் காசை மிச்சப்படுத்த, அவரேப் பொண்டாட்டியக் கொண்டு வந்து விடறதும், அழைச்சுக்கிட்டு போறதும் பார்க்கச் சகிக்கலை…!”
“இப்படிக் காசு பணத்த மிச்சப்படுத்திப், போகக்குள்ற, எதைத் தலையிலக் கட்டிக்கிட்டுப் போகப்போறாராம்…?”
“கடைஞ்செடுத்த கஞ்சனய்யா இவர்…!”
“அவுரு பொண்டாட்டி…! அவுரு கொண்டாந்து வுடுறாரு. அதுல உங்களுக்கு எங்க வலிக்குது…?”
இப்படியெல்லாம் ஒட்டியும் வெட்டியும், ராஜராஜனின் காதுப் படவே மானாவாரியாகப் பேசினார்கள்.
அதுமட்டுமில்லை. பள்ளி வளாகத்திற்குள் மனைவியோடு நுழையும்போது நேருக்கு நேர் பார்த்தாலும், ‘இந்த ஆளால நமக்கென்ன லாபம்…!’ – என்ற நோக்கில், கண்டு கொள்ளாமல் முகத்தைத் திருப்பி, அலட்சியப்படுத்திய ஆசிரியர்களையும் பொருட்படுத்தவில்லை ராஜராஜன்.
பள்ளிக்கூடங்களில், தலைமை ஆசிரியர் என்பவர் எப்போதும் தனித்து விடப்பட்டவர்தான். அவருக்குக் கீழ் வேலைப் பார்க்கும் அனைவரும் அனைத்துச் சலுகைகளையும் அவரிடமிருந்துப் பெற்றுக் கொள்வார்கள்.
மேலதிகாரிகள் வரும்போது, தன் கீழ்ப்பணியாற்றும் அனைவரையும் விட்டுக் கொடுக்காமல் பார்த்துக் கொள்வதைத் தலைமையாசிரியர்கள் கடமையாகக் கருதித்தான் செய்வார்கள்.
என்னதான் செய்தாலும், எவ்வளவுதான் சலுகை காட்டினாலும், ஏதேனும் சிக்கல், பிரச்சனை என்றால், தலைமை ஆசிரியரைக் கைக்காட்டிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள் ஆசிரியர்கள்.
தலைமையாசிரியர்தான் எதற்கும், பதில் சொல்லவேண்டிய, கையொப்பமிடவேண்டிய இடத்தில் இருப்பதால் (Sole Responsibility), ஆசிரியர், மாணவர், பெற்றோர், கல்வித்துறை, இப்படி பண்முகத்தாக்குதல்களைச் சமாளிக்கவே சரியாய் இருக்கும்.
கல்வித்துறை அவசர அவசரமாகக் கேட்கும் புள்ளி விவரங்களையோ, மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர்கள் அவ்வப்போது கேட்கும் விபரங்களையோத் துல்லியமாகத் தராமல், தலைமை ஆசிரியரைத் தலைகுனிய வைக்கும் ஆசிரியர்களும் உண்டு.
அது மட்டுமில்லை, தலைமை ஆசிரியர் ஏதேனும் சிக்கலில் மாட்டினால், அதில் குளிர்காய நினைக்கும் ஆசிரியர்களும் ஒரு சில சதவீதம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
‘கம்யூட்டர் முதல் கக்கூஸ் பராமரிப்பு’ வரை அனைத்தும் அத்துப்படியாகி, முழுமையான விழிப்புணர்வுடன், திறமையாகப் பணியாற்றினால்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரியராகத் தாக்குப் பிடிக்க முடியும் என்பதுதான் யதார்த்தம்.
சற்றே ஏப்பை-சாப்பையாக, ‘ஏனோதானோ’வென இருந்தால் மூன்றுப்-பிடித்து எண்ணி, முக்காடிட்டு, ஓரமாய்க் உட்காரவைத்துவிடுவார்கள்.
அதிகாரம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளத் தலைமைப் பதவியைத் தூக்கித் தலையில் வைத்துக் கொள்ளாத தாமரையிலை தன்மையோடுத், தன் உயரம், தன் எல்லை உணர்ந்து, எந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்கிற நுணுக்கம், தெரிந்துத் திறமையாகப் பணியாற்றும் ஒருவரை யாராலும் அசைக்க முடியாதல்லவா…?
அப்படித்தான் பணியாற்றி ஓய்வுப் பெற்றார் ராஜராஜன்.
வாய்விட்டு அழுகின்ற ராம்சரணைப் பார்த்தபோது, ‘அவன் ஏதோ தாங்கமுடியாத மன அழுத்தத்தில் இருக்கிறான்…!’; – என்பதை ‘ஆலோசனை உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ராஜராஜன் உடனே அனுமானித்துவிட்டார்.
‘மன அழுத்தத்தில் இருந்து விடுபட மூன்று வழிகள்.’ என்ற, சமீபத்தில் படித்த, ஜப்பானிய ஆய்வு நினைவுக்கு வந்தது.
கவலைப்பட நேரமே இன்றித் தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடுதல் முதல் வழி.
இரண்டாவது, எதையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுதல்.
கடைசீ வழி, வாய் விட்டு அழுதல்.
முதல் இரண்டை விட, மூன்றாவது வழிதான் சுலபமாக இருப்பதால், உலகம் பூராவும், மனநல மருத்துவர்களும், ஆலோசகர்களும் மன அழுத்தத்தைப் போக்க, மனப்பாரத்தை இறக்கிவைக்கப், பெரும்பாலும், தனிமையில் வாய்விட்டு அழும் மூன்றாவது முறையையே பரிந்துரைக்கிறார்கள்.
ஜப்பானில் இந்த ‘அழுகைத் தெரபி’க்கு என்றே ஹோட்டல்களில் அறைகள் நாளொன்றுக்கு 25 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் பெற்றுக்கொண்டு, வாடகைக்கு விடுப்படுகிறது.
கதவைச் சாத்திக்கொண்டு, முடிந்த அளவு சத்தம் போட்டு, அழுது ஒப்பாரி வைத்தாலும், வெளியேத் துளிச் சத்தம் கூட வராத அளவுக்குப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறைகள் அவை.
முகம் பார்க்கும் கண்ணாடியை முன்னால் வைத்துக் கொண்டு அழுவது.
தனக்கு வேண்டாதவர் படத்தைச் சட்டமிட்டுத் தமக்கு முன்னால் மாட்டி வைத்துக்கொண்டு அரற்றுவது.
சோகக் காட்சிகள் அடங்கிய வீடியோவைப் பார்த்து, அதில் தன்னையும் இணைத்துக் கொண்டுக் கதறுவது. இப்படியாக, அழுவதற்கான, பல்வேறுபட்ட அமைப்புகளும் சூழல்களும் நிறைந்த அறைகள் அவை.
அழுது முடியும் வரை, அழுபவர்க்குத் தேவையான உணவு, நீர் போன்றவை முறையாக அளிக்கப்படுகிறது. அது மட்டுமில்லை… நிறையக் கண்ணீர் சுரக்க, கிளிசரின் போன்ற ஊக்கிகளும் தாராளமாகக் கிடைக்கும் அங்கே.
அழும்போது அவ்வப்போதுக் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளத் துவாலை, கைக்குட்டை எல்லாம் கூட அங்கு விநியோகிக்கப்படுகிறது.
க்ளையண்ட், அழுது அழுது, சமநிலைக்கு வந்தபின், முகத்தைக் கழுவிக்கொண்டோ, குளித்துவிட்டோ, ‘மேக் அப்’ செய்து கொள்ளக், குளியலரை வசதிகளும், அலங்காரச் சாதங்களும்கூடத் தயாராக இருக்கும்.
தனி அழுகை மட்டுமல்ல…, கும்பல் கும்பலாகச் சேர்ந்து அழும், கூட்டு அழுகைத் தெரபியும் இப்போது பிரபலமாகிறது.
கூட்டு ஒப்பாரிக்கு, கூடுதல் வசதிகள் தேவைப்படுவதால், கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் தெரபி மையங்கள் வைத்திருப்போர்.
தெரபிஸ்ட்டுகளின் வழிகாட்டுதல்படி முறையாக ‘அழுகைத் தெரப்பி’ நடத்தப்படுவதால், இந்தத் தெரபிக்குத்தான் ஜப்பானில் ‘மவுசு’ அதிகம் என்கிறது அந்தக் கட்டுரை.
நம் கிராமங்களில், “ஓ…ன்னு ஒரு கொரல் அழுதுதான் ஆத்திக்கிடணும்…!” – என்று சர்வசாதாரணமாகச் சொல்லும் முறையை, ‘அழுகைத் தெரபி’ எனப் பெயர் வைத்து மேல்நாட்டில் மட்டுமல்லாது நம் நாட்டின் நகரப் பகுதிகளிலும், சம்பாதிப்பதையும் பற்றிய தகவல்கள் ராஜராஜன் சார் மனதில் எழுந்தது.
ராம்சரண் அழுது முடிக்கும் வரை காத்திருந்தார் அவர்.
“சார்….”
“சொல்லு சரண்…!”
“இந்த, மருதப்பன் சாரும் , மாயவன் சாரும்…” என்று தொடங்கிய ராம்சரண் மீண்டும் அடக்கமுடியாமல் அழத் தொடங்கிவிட்டான்.
அந்த இரண்டு பெயர்களைச் சொன்ன உடனேயே ‘என்ன நடந்திருக்கும்…?’ என்பதை ராஜராஜனால் ஊகிக்க முடிந்தது.
ராஜராஜன், அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராய்ப் பணியேற்ற நாளிலிருந்து, அந்த இரண்டு ஆசிரியர்களும் எப்படியெல்லாம், நிர்வாகத்துக்குக் குடைச்சல் கொடுத்தார்கள் என்பது அவர் கண்முன் காட்சிகளாய் விரிந்தது.
‘தன் மேல் இருக்கும் தனிப்பட்டக் விரோதத்தைப் பள்ளி நடைமுறைகளில் காட்டுகிறார்களே…?’ – என்று அவர்களின் அறியாமையை எண்ணி அவர்கள் மேல் பரிதாபம்தான் பட்டார் ராஜராஜன்.
‘எடுத்துச் சொன்னால் காதில் வாங்கமாட்டார்கள். பட்டுத் திருந்தட்டும்…!’ என அவர்களை முழுமையாகத் (Ignore) தவிர்த்துவிட்டார்.
தலைமை ஆசிரியரால் அளிக்கப்படும், துறைச் சார்ந்த எந்தப் பணியையும், பொறுப்பேற்றுச் செய்யாமல், சட்டம் பேசுவார்கள்.
‘மீட்டிங்’ போட்டால் அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பார்கள்;
அப்படியேக் கலந்து கொண்டாலும், முன்னுக்குப் பின் முரணாக ஏதேனும் பேசிச் சூழ்நிலையை இறுக்கமாக்குவார்கள்;
கண்ணுக்கு மறைவாகத் தலைமை ஆசிரியரைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவார்கள்.
ஒத்துழையாமை இயக்கம் நடத்துவார்கள்
வகுப்பறைச் செயல்பாடுகள், பாடக்குறிப்பேடு சமர்ப்பித்தல், தேர்வு, மதிப்பெண் பட்டியல்… இப்படி அத்தியாவசியச் செயல்களைத் தவிர, மற்ற எந்த செயல்பாடுகளையும் அவர்கள் இருவரிடமும் வலியுறுத்தியதில்லை ராஜராஜன்.
ஆலோசனை உளவியல் நிபுணரான ராஜராஜன் அந்த இருவரின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் ‘தவிர்க்கும் ஆளுமைக் கோளாறும்’ (‘Escapism’) , அதன் அடிப்படையில் அவர்கள் செய்யும் ‘தடுப்பு உத்திகளையும்’ (preventive strategy) இனம் கண்டவர்.
Not taking decision is also a decision – என்கிற முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பாணியில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டார்.
போகப் போகச் சரியாகிவிடும் என்று விட்டுப்பிடித்தார்.
தலைமை ஆசிரியரின் திட்டத்தையும் எண்ணத்தையும், அறியாத வேறு சில ஆசிரியர்கள், அந்த இருவரிடமும் ராஜராஜன் பயப்படுவதாக எண்ணினர்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன் பணியை சீரிய முறையில் ஆற்றினார் அவர்.
கணினியை சிறப்பாக நிர்வகிக்கக் கற்றுக்கொண்டார் ராஜராஜன் சார்.
இரவும் பகல் பாராது ஓயாது உழைத்துப் பள்ளியின் புள்ளி விபரங்கள் அனைத்தையும் தனி ஒருவராகவேக் கணினியில் பதிந்தார்.
யாரையும் சார்ந்திருக்காமல், தானே நேரடியாகச் செய்ததால், அனைத்து விபரங்களும் விரல் நுனியில் நின்றன.
அரசோ, கல்வித்துறையோ எந்த விபரங்கள் கேட்டாலும் உடனடியாக, அனைத்து விபரங்களையும் நேர்த்தியாகச் சமர்ப்பிக்க முடிந்தது தலைமை ஆசிரியர் ராஜராஜனால்.
கல்வித்துறையில் மிக நல்ல பெயர் அவருக்கு. ஓய்வு பெறும் வருடத்தில் நல்லாசிரியர் விருதும் அளித்துக் கல்வித்துறை அவரை கௌரவித்தது.
“அந்த ரெண்டு சாரும் ரொம்ப ரொம்ப மோசமாப் பேசறாங்க சார்…!”
ஒரு வழியாகச் சொல்ல வந்ததைச் சொன்னான் ராம்சரண்.
“உன்னை எதுக்கு அவங்க மோசமாப் பேசணும்?”
“என்னை இல்லை சார்…!” – அவசரமாக மறுத்தான் சிறுவன்.
சில கனங்களுக்குப் பிறகு அவனே தொடர்ந்தான்.
“உங்கப் பேரைச் சொல்லிச் சொல்லித் தரக்குறைவாப் பேசுறாங்க சார்…!” சொல்லிவிட்டுக் கண் கலங்கினான்.
கொரோனா பாதிப்பால், தந்தையை இழந்தவன் ராம்சரண். தந்தையில்லாக் குடும்பம் சீர்குலைந்தது. தாயுடன் ஆதரவற்ற நிலையில் தவித்த , ஒரே மகன் ராம்சரணை தன் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பில் சேர்த்துக்கொண்டதோடு, தனிக் கவனம் கொடுத்து, அவன் அறிவை வளர்த்தார்.
வாழ்வாதாரமாக, ராம்சரணின் தாய்க்கு ஒரு பெட்டிக்கடையும் வைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார் ராஜராஜன்.
தற்போது பத்தாம் வகுப்புப் படிக்கும் ராம்சரணுக்கு, தன் குடும்பத்தின் குலதெய்வமாய்ப் போற்றி வணங்கும் ராஜராஜன் சாரைப் பற்றி அவதூறு பேசும்போது, அதை எப்படி அந்தப் பிஞ்சு உள்ளத்தால் தாங்க முடியும்…? அதுதான், உடைந்து கொட்டிவிட்டான்.
அந்த மருதப்பனும், மாயவனும் தன்னைப் பற்றி என்ன பேசியிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிந்தது ராஜராஜனால்.
மட்டையை வேகமாக வீசும்போது, அதில் பந்துப் படாவிட்டால், எதிர்வினையற்ற நிலையில், புஜங்கள் வலிக்குமல்லவா?. அதுப்போல வலிதான், அந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் இப்போது.
ராஜராஜன் சார் பணியில் இருந்தபோது, இவர்கள் இருவரும் வீசிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும், சாடல்களுக்கும், ஒத்துழையாமைக்கும்… எந்தவித எதிர்வினையும் ஆற்றாமையால், அவர்கள் வலிகண்டு பிதற்றுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர் ராஜராஜன்.
“ராம்சரண்…!”
“சொல்லுங்க சார்…!”
“அவங்க என்ன பேசினாங்க…? எப்படியெல்லாம் திட்டினாங்க…? – ன்னு நீ சொல்லவே வேண்டாம். எனக்கேத் தெரியும்…!”
‘…!…!…!…!…’ ராம்சரணுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ராம்சரண்…!
“ம்…!”
“நான் கேக்கறதுக்கு மட்டும் நீ பதில் சொல்லு…?”
“கேளுங்க சார்…!”
“அந்த ரெண்டு சாரும் உன் வகுப்புக்கு வராங்கதானே?”
“வர்றாங்க சார்….!”
“பாடமெல்லாம் நல்லாச் சொல்லித் தராங்கதானே…?”
“சொல்லித் தராங்க சார்…! என்னதான் சிறப்பாப் பாடம் சொல்லித்தந்தாலும், இதுபோல, ஒரு தலைமை ஆசிரியரை வாய்க்கு வந்தபடிப் பொது வெளீலத் தப்புத் தப்பாப் பேசுறது சரியில்லதானே சார்…!”
“ஆமாம்…! ஆமாம்…! சரியில்லைதான்…! ஒத்துக்கறேன்! இருந்தாலும்…!” – என்று நிறுத்தினார் ராஜராஜன்.
“…………..!” என்ன சொல்லப் போகிறார் என்று ஆவேலோடு காத்திருந்தான் ராம்சரண்.
“வாழ்க்கை முழுக்க, இந்த ரெண்டு சாருங்களை மட்டும் நீ மறக்காம நெனப்புல வெச்சிக்கிட்டே ஆகணும் சரண்…!”
“ ………………?” – ‘சார் என்னதான் சொல்ல வருகிறார்…?’ ராம்சரணின் மனதுக்குள் கேள்வி எழுந்தது.
“நீ எப்பவாவது யாரையாவது அந்த ஆசிரியர்களைப் போலப் பேசியிருக்கியா சரண்…!”
“இல்ல சார்…!”
“எதிர்காலத்துல நீ யாரையாவது அப்படிப் பேசுவியா?”
“சத்தியமாப் பேசவே மாட்டேன் சார்…!”
“குறிப்பா இந்த மருதப்பன் சாரும், மாயவன் சாரும்தான் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தைத் தாண்டி நிறைய சொல்லித்தர்ற ஆசிரியர்கள். அதை நீ புரிஞ்சிக்கணும் சரண். அதுக்காக அவங்களுக்கு நன்றி சொல்லணும் நீ…!”
“நீங்க சொல்றது எனக்குப் புரியலை சார். ஒரேக் குழப்பமா இருக்கு…?” – என்றான் பத்தாம் வகுப்புப் படிக்கும் ராம் சரண்.
பெரும்பாலான ஆசிரியர்கள், வாழ்க்கைப் பற்றிய நேர்மறை சிந்தனைகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும்தான் சொல்லிக் கொடுக்கறாங்க;
மருதப்பன் , மாயவன் சார்களைப் போலச் சிலர்தான் எப்படியெல்லாம் பேசக்கூடாது, எப்படியெல்லாம் ‘பிகேவ்’ பண்ணக்கூடாதுன்னும் தங்கள் செயல்கள் மூலம் மாணவ சமுதாயத்துக்குக் கத்துக் கொடுக்கறாங்க…!”
“……………….”
தன் குல தெய்வமாகப் போற்றும் ராஜராஜன் சார் மூலம், சற்றும் எதிர்பார்க்காத இப்படி ஒரு வித்தியாசமான பார்வைக் கோணத்தைத் தெரிந்துகொண்ட ராம்சரணுக்கு முன்னால், இதுவரை குன்றென நிமிர்ந்து நின்ற ராஜராஜன் சார், இப்போது இமயமாய் உயர்ந்து நின்றார்.
– தினமணி கதிர் (16.06.24)