மறக்க மறக்க

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2024
பார்வையிட்டோர்: 1,155 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாதர்! என்னை மன்னியுங்கள்! என்னால், என் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. ஏற்கெனவே இதே தவற்றைச் செய்துவிட்டுங் தங்களிடம் முழங்காலிட்டேன். என் பாவங்களை உங்கள் வழி கர்த்தரிடம் முறையிட்டு, என்னை மன்னித்து விட்டதாகவே வீட்டிற்குச் சென்றேன். என் மனத்தின் பலவீனம், உருவாகும் சுற்றுப்புறச் சூழ்நிலையில் அதே தவற்றை மீண்டும செய்யக்கூடிய நிலை வந்து விட்டதை எண்ணி வருத்தப்படுகிறேன். கணவர் கப்பல் பொறியாளராகப் பணியாற்றுகிறார். ஆண் டொன்றுக்கு நீரில் பாதி. நிலத்தில் பாதியாகப் பணியாற்றுவதால், என் உணர்ச்சிகளுக்குச் சவால் வரும்போது தோற்றுவிடுகிறேன். என் கைக் குழந்தையின் கண்முன்பே என் திரைமறைவுத் திருவிழா அரங்கேறுகிறது. இது தவறு. என் கணவனுக்கு நான் செய்யும் துரோகம் புரிகிறது.

அந்தக் கணத்தில், உணர்ச்சி நெருங்கி வரும்போது அறிவு என்னைவிட்டு விலகிப்போய்விடுகிறது. என் பாவ மீறல்களை ஆண்டவரிடம் சொல்லி எனக்கு மன்னிப்பை வாங்கித் தாருங்கள்.”

“சென்ற மாதம் பரமபிதாவிடம் கேட்டு மன்னிப்புக் கொடுத்தேன். மீண்டும் மீண்டும் என்றால்… ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மனந் திருந்தாவிட்டால் எப்படி?” அருள்தந்தை கேட்டார்.

“நான் பாவி! என்னைக் கடவுள் மன்னிக்கவே மாட்டாரா பாதர்?”

“ஏன் மாட்டார்?” சகேயு என்கிற பேராசை பிடித்த மோசமான குணமுடைய தனவந்தன் மனம் மாறி, மரத்திலேறி அமர்ந்துகொண்டு, ஆண்டவன் வருகைக்காகக் காத்திருந்தான். அவ்வழியே சென்ற ஆண்டவர், அவனைப் பார்காமலேயே “கீழே இறங்கி வா!” என்று சொல்லி அவனுக்கு ‘இழந்து போனதைக் தேடவும் ரட்சிக்கவுமே மனுஷ குமாரனாகிய நான் இவ்வுலகிற்கு வந்திருக்கிறேன்’ என்று சொல்லி மன்னித்து, அவனை ஏற்றுக் கொண்டார். என்கிறபோது, உனக்கும் மன்னிப்புக் கிடைக்கும். ஆனால், நீர் மனத்தில் உறுதியுடன் இரும். தவறு ஏற்படக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து, ஓர் ஆரோக்கியமான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும்” என்று பாவ மன்னிப்பை வழங்கும் அருள் தந்தை சொல்லி எழுந்தார்.

சுவரின் மறுபுறம் மண்டியிட்டு அமர்ந்து மன்னிப்பைக் கேட்டுப் பெற்ற மேரி ஹெலன், இரண்டு நிமிட நேரம், எழும்ப முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். துயரம் நெஞ்சைக் கனக்கச் செய்தது. துக்கம் தொண்டைக்குள் தேங்காயாய்த் துருவல் செய்தது.

மெல்ல எழுந்து அந்த மாதா கோயிலின் திடலைக் கடந்து, ஓரத்தில் நின்ற மரத்தின் அடியில் உள்ள சிமெண்ட் பலகையில் அமர்ந்தாள். அந்த நேரம் பார்த்து, பாவ மன்னிப்பை வழங்கிய தந்தை அந்த அறையிலிருந்து ஹெலன் வெளி வருவதைக் கவனிக்க நேரிட்டது. அவளுக்குத் தெரியாது. அந்தத் தந்தைதான் பாவமன்னிப்பை வழங்கியவர் என்று. ஆனால், அந்த அறையிலிருந்து வெளி வருவதைப் பார்த்ததால், அவள்தான் ‘அவள்’ என்பதை உறுதிபடுத்திக் கொண்டார் அவர்.

ஒரு குழந்தைக்குத் தாய் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. கச்சிதமான உடல்வாகு; நீண்ட நெறிகுழல்; அகன்ற அழகான கண்கள்; தன்னைப் பார்ப்பவரை, பார்க்கும் அந்த இடத்திலே, அந்தக் கணத்திலேயே வசீகரிக்கக்கூடிய காந்த சக்தி படைத்தவளாக இருந்தாள். அவள் அசைந்து நடக்கும் இடை ஒடியும் நடைக்கு, மனத்தைக் கெட்டியாக்கும் வல்லமை படைத்தோர் இல்லை எனலாம்.

வேறுபக்கம் நோக்கிச் செல்லச்சென்ற அருள் தந்தையின் கால்கள் அவர் அறியாமல் அந்த மரநிழல் நோக்கிச் சென்றன.

“பெண்ணே!” தந்தை குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“உன் முகத்தில் ஒரு சோகம் குடிகொண்டிருக்கிறது. உன்வீடு சூரிய உதயம் பார்த்து இருக்கிறதா?” கேள்விக்குப் பதில் சொல்ல அவளை யறியாமல் எழுந்து விட்டாள்.

இல்லையென்று தலையை அசைத்தாள்.

“இருக்காது என்றுதான் நான் நினைத்தேன். உன் வீட்டில் சமையல் செய்யும் போதாவது, கிழக்குத் திசை நோக்கி நிற்கிறாயா?”

அதற்கும் இல்லை என்று தலையசைத்தாள்.

“நினைத்தேன்” என்று சொல்லிவிட்டு திரும்பினார். இரண்டு அடி நடந்திருப்பார். வேகமாக முன்வந்து, நடைமறித்து.

“ஏன் பாதர்” எதற்காகக் கேட்டீர்கள்?” என்று கேட்டாள்.

“உன் வீட்டில் வலது கோடி மூலையில் சாத்தானின் அந்தகார சக்திகளின் ஏவல்களும் செய்வினைகளும், ஆக்ரமிப்பும் நடந்து வருவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், வீட்டில் விரைவில் ஒரு அசம்பாவிதம் நடக்க வழியிருக்கிறது.” நடந்துகொண்டே சொல்லிச் சென்றார்.

“தடுப்பதற்கு வழியில்லையா பாதர்?”

“இருக்கிறது, ஒரு ஜெபம் செய்தால் போதும். நான் ஒரு பாதரை அனுப்புகிறேன். உன் முகவரியை, அலுவலகத்தில் பதிவு செய்து விட்டுப்போ..

உன் பெயரென்ன?

“மேரி ஹெலன்”

“நீ போகலாம்..”

விடை பெற்றுக்கொண்டு, அங்குள்ள அலுவல கத்திற்குச் சென்றாள்.

அருள் தந்தை ஜெபம் செய்ய இன்று மதியம் வரப் போகிறார் என்று சிலநாள் கழித்துத் தொலைபேசி வழி அவளுகுச் செய்தி வந்தது வீட்டை நன்றாகச் சுத்தம் செய்து, பொருள்களை எல்லாம் ஒழுங்கு செய்துவிட்டுத் தந்தையின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

அதே அருள் தந்தை வந்தார். ஒடிப்போய் ஆவலுடன் வரவேற்றாள்.

“என்ன பாதர்! நீங்களே வந்துவிட்டீர்கள்!” “கடைசி நேரத்தில் இங்கு வருவதாக இருந்த பாதருக்குத் தவிர்க்க முடியாத பணி வேறொன்று வந்துவிட்டது.

நீ எதிர்பார்த்துக்கொண்டு இருப்பாயே என “என் பாக்யம். நீங்களே வந்தது.

எண்ணி, நானே வந்துவிட்டேன்.

என்று சொல்லிவிட்டு, தயார் செய்து வைத்திருந்த, பலகாரத்தை எடுத்துவர உள்ளே செல்ல முற்பட்டவளைத் தடுத்தார்.

“எனக்கு எதுவும் வேண்டாம் மா… நான் சீக்கிரம் திரும்ப வேண்டும்”

என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

“வாங்க பாதர்! வீட்டைப் பாருங்கள்!”

ஹெலன் தன் வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். மூன்றறை வீடு. சிறிய வீடுதான். ஒவ்வொரு இடத்திலும், நின்று நிதானமாகக் கண்ளை மூடித் தியானம் செய்வதாய் நிற்பார். இப்படியாகச் சமையலறை, குளியலறை உட்படி எல்லா இடங் களையும் பார்த்துவிட்டு வலதுபுறம் உள்ள அறைக்குள் சென்றார்.

அந்த அறையில் உள்ள படுகையில் அவளுடைய ஒரு வயது மகள் உறங்கிக் கொண்டிருந்தாள். அங்கு ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். அதன்பின் திரும்பி சுற்றுமுற்றும் பார்த்ததைப் புரிந்து கொண்டு, அங்கிருந்த முக்காலி ஒன்றை எடுத்து, தந்தை உட்கார ஏதுவாக ஹெலன் வைத்தாள்.

தந்தை அமர்ந்து, கொண்டுவந்திருந்த விவிலியத்தைப் பிரித்தார். தரையில் அவர் எதிரே வந்து அமர்ந்தாள். அவள் தலையில் ஒருகையை வைத்துக்கொண்டு தந்தை படிக்கத் தொடங்கினார்.

“என் உள்ளங் கைகளில், உன்னை வரைந்து வைத்திருக்கிறேன். நான் உன்னைவிட்டு விலகுவது மில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை. ஆகாயத்துப் பறவைகளும், காட்டுப் புஷ்பங்களும் விதைக்கிறது மில்லை; நூற்கிறதுமில்லை. அவைகளை போஷித்துக் காத்துவருகிற கடவுள் உன்னையும் கைவிட மாட்டார்.”

என்று தந்தை இன்னும் சில பக்கங்களைப் புரட்டிப் படித்து முடித்து, சிறிது நேர ஆழ்ந்த தியானத்திற்குப் பிறகு, அவளுக்கு ஆசீர்வாதம் செய்தார், அவளும் பதிலுக்குத் தினந்தோறும் சொல்லும் புதிய ஏற்பாட்டின் பரமண்டல ஜெபத்தைச் சொன்னாள்.

“எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழ விடாதேயும், தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும்” என்றாள்.

“ஆமென்” எனச் சொல்லிவிட்டு எழுந்தார்.

“பாதர்! மறுபடியும் நான் என்ன செய்ய வேண்டும்?”

“இந்த ஜெபம் ஒருநாளில் முடிவதில்லை. மீண்டும் வரவேண்டும்.

“எப்போது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

“அடுத்த வாரம் இதே நாள் இதே நேரம்”

சொல்லிவிட்டு, தந்தை விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

அன்று, ஹெலன் சுமை இறங்கிய மகிழ்ச்சியுடன் நன்கு உறங்கினாள். அவளுடைய பிரச்சினையைக் கடவுள் எற்றுக் கொண்டதாக உணர்ந்தாள்.

அருள்தந்தை, அன்றைய கடமைகளை எல்லாம் முடித்துவிடு, உறங்கச் சென்றார்.

வழக்கம்போல், படுத்தால் பத்து நிமிடத்திற்குள் உறங்கிவிடும் பழக்கமுடையவர், உடன் உறக்கம் வரவில்லை. படுக்கையில் உருளவில்லை; புரளவில்லை; எழுந்து உட்காரவில்லை; கண்களைத் திறக்கவுமில்லை. ஆனால், அவர் நினைவில் மட்டும் அன்று சந்தித்த ‘அவள்’ வந்து போகிறாள்.

‘அவளுடைய அழகும், புன்னகை சிந்தும் முகமும், நடையழகும் மாறி மாறிக் காட்சியாய்த் தோன்றின. இவ்வளவு அழகான பெண்ணை விட்டுவிட்டுக் கணவனால் எப்படிப் பல மாதங்களாய்க் கப்பலுக்குச் சென்று பணி செய்ய முடிகிறது? உணர்ச்சிகளை அடக்க முடியாத அவள் என்ன செய்வாள்… அவள் செய்யும் தவற்றில் நியாயம் இருக்கிறதோ? அந்தத் தங்கப் பதுமையைப் பார்த்தால், யாருக்கும் அவளை அடைய வேண்டுமென்கிற ஆசையைத் தூண்டிவிடும் படியானவளாகவே இருக்கிறாள்’ இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டிருந்த தந்தைக்குக் தூக்கம் வராமல் போய்விட்டது. அவருடைய அமைதியான உறக்கத்தை அவள் கலைத்துவிட்டாள்.

அருள் தந்தை, எதை மறக்க வேண்டும்; வேண்டும் என்று நினைக்கிறாரோ அதேதான் நினைவிற்கு வந்துகொண்டே இருக்கிறது. பாவம் அவரும் கடவுளால் படைக்கப்பட்ட சாதாரண மனிதர்தாமே!

உறக்கம் வராமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தந்தை அநேகமாகப் பின்னேரம்தான் உறங்கியிருக்க வேண்டும்.

மறுவாரம் அதே நாளில், தந்தை, ஹெலன் வீட்டிற்கு வந்தார். எதிர்பார்திருந்த அவளும், முகம் மலர அன்புடன் வரவேற்று உபசரித்தாள்.

“இந்த முறை எதுவும் சாப்பிடாமல் போகக் கூடாது, கண்டிப்பாகச் சாப்பிடவேண்டும்”

“சாப்பிடுறேன்மா… கொண்டுபோ…”

மகிழ்ச்சியுடன், ஓடிப்போய், கேக்கும் சீடை முறுக்கும் கொண்டு வந்தாள். அருகில பேபிவாக்கரில் உட்கார்ந்திருந்த, குழந்தையைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். கன்னத்தைச் செல்லமாகச் சுண்டினார். கேக்கில் விரலைத் தொட்டுக் குழந்தையின் வாயில் தடவிவிட வேண்டினாள்.

“ஒதாராளமாக…” ஜெபம் ஒன்றைச் கொண்டே அவ்வாறே செய்தார்.

குழந்தையோ, கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு குதூகலித்து, உதடுகளை மடித்து, சப்பிக் கொண்டு ருசி பார்த்தது. அவளைப் போலவே குழந்தையும் அழகாக இருப்பதாக அவர் கருதினார்.

பழச்சாற்றையும் கொண்டு வந்து வைத்துவிட்டு ஹெலன் அமர்ந்தாள், சிறிது நேரம் உரையாடிய பின்பு, “ஜெபத்தை ஆரம்பிப்போமா” என்றார்.

“ஓ… எஸ்.. வாங்க பெட்ரூமுக்குள்ளே பாதர். குழந்தை அங்கேயே இருக்கட்டும். நீங்க சென்ற வாரம் வந்து போனதிலிருந்து, எனக்குச் சிறிது ஆறுதலாக இருந்தது. முன்பெல்லாம், எதையாவது நினைத்துக் கொண்டே, தூக்கம் வராமல் கஷ்டப்பட்டுள்ளேன். இப்போது படுத்தவுடன் தூங்கிவிடுகிறேன் பாதர்” என்று சொல்லிக்கொண்டே அழைத்துச் சென்றாள்.

“இன்றைக்கு நீங்கள் ஸ்டூலில் அமர வேண்டாம். கொஞ்சம் வசதிக்குறைவாயிருக்கும். நம்மவீடு தானே. கூச்சப்படாமல் ‘பெட்’டிலேயே உட்காருங்கள்.” என்று சொல்லி அவரை அமரச் செய்துவிட்டு, கீழே தரையில் உட்காரப் போனவளை, பாதர், அவள் கைப்பட்டைத் தோளைப் பிடித்துத் தடுத்து, எழுப்பிப் படுகையிலேயே எதிரே அமர வைத்தார்.

விவிலியத்தைப் படிக்கும் முன்பு அவளை நல்வழிப்படத்தும், நம்பிக்கையூட்டும் உபதேசங்களைச் செய்தார்.

‘மனத்தில் திடனாக இருக்க வேண்டும்… எந்த நேரத்திலும், சபலத்திற்கோ, சஞ்சலத்திற்கோ ஆட்பட்டுவிடக்கூடாது நெருக்கடியான நேரம்; ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டால், உடனே பைபிளைத் திறந்து படித்து, உன் மன வேகத்தின் உணர்வுகளைத் திசை திருப்பிவிட வேண்டும். அதிலிருந்து தப்பிக்க அதுவே வழி.

விவிலியத்தை திறந்து தந்தை படித்தார்.

“வருத்தப்பட்டுப் பாரம் (பாவம்) சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் மனம் திருந்தி என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்.”

மேலும் தொடர்ந்தார். அவர் படிக்கும் ஒவ்வொரு வாசகத்தையும் பொருளையும் அவள் உணர்ந்து செவி மடுத்தாள்.

‘நான் செய்த பாவங்களை அறிந்தவர்போல் அதற்கு ஏற்ற ஜெபங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார். இவர், சாதாரண மனுஷியாகிய என்னை விட உயர்ந்தவர். அதனால் தான் எல்லாம் தெரிந்திருக்கிறது’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள். பாவமன்னிப்புத் தந்த தந்தைதான் இவர் என்று அவளுக்கு தெரியாது.

தந்தை மேலும் படித்தார்.

“இதற்கு மேல் நீ இதே தவற்றைச் செய்து கொண்டே வந்தால், பாவத்தின் சம்பளம் மரணம். இதிலிருநது நீ தப்பிக்க முடியாது.” என்றெல்லாம் விவிலியத்தில் சொல்லியுள்ளது போலவே வாழ்க்கை முறை, அறிவுரைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தார். ஒவ்வொன்றுக்கும், விவிலியத்திலிருந்து பல எடுத்துக்காட்டுப் பகுதிகளைப் படித்துக் காண்பித்துக் கொண்டே தந்தை எழுந்து நின்றார்.

ஹெலனும் எழுந்து நின்றாள். அவள் தலையில் கையை வைத்துக் கொண்டு தோத்திரங்களைச் சொன்னார். அருகில் நெருங்கி, அவளை அணைத்துக்கொண்டே ஜெபித்தார். அவளும் அருள்பெற்ற ஆனந்தத்தில் அவருடைய பண்பாட்டு அணைப்புக்கு ஈடுகொடுத்து அணைத்துகொண்டாள். ஒரு தாய் மகளை, அன்புடன் அணைப்தாக உணர்ந்தாள். ஒரு கடவுளின் தூதர் பாவப்பட்ட மனித ஜென்மத்திற்கு விமோசனம் அருளுவதற்காக அணைத்து ஆசீர்வதிப்பதாக உணர்ந்து பரவசப் பட்டாள்.

உடலோடு உடல் ஒட்டும்போது ‘அத்தகைய படிப்பும், அறிவும், ஞானமும் உடைய தியாக புருஷரின் சக்தியில்; ஞானப் படைப்பில் எனக்கும் நூறில் ஒரு பங்காவத மின்சாரம் போல் கிடைக்காதா’ என்று ஏங்கி அவருடைய இரு கைகளின் அணைப்புக்குள் பெரிய எதிர்பார்ப்புகளுடன் சுகம் தேடினாள்.

அந்த அணைப்பின் மூலம், இனித் தன் வாழ்கையில் வசந்தம்தான். செய்த பாவங்கள் தன்னைவிட்டு நீங்குவதாகவே உணர்ந்தாள். இந்த முறை தன் கணவர் வரும்போது’அவர்

முன்னால், ஒரு புனித ஆற்றில் குளித்த பவித்திரப் பாவையாகக் காட்சியளிப்பேன். என் மனத்தில் எந்தக் கள்ளமோ அந்தரங்கமோ இருக்கக்கூடாது. கடவுள் இந்த அருள் தந்தை மூலம், என் அறிவுக் கண்களைத் திறந்துவிட்டார். என்றெல்லாம் எண்ணி எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து தன்னை மறந்து அவர் மார்பில் புதைந்து கொண்டிருந்தாள்.

ஆனால், தந்தையோ ஒன்றை மறக்க முற்படுகிறார். “அந்த ஒலியை என் காதால் கேட்டது தவறாகிவிட்டது. எந்தச் சொற்றொடர்கள் என் நினைவுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறேனோ,

அதே சொற்றொடர்கள் அசரீரி போல் ஒலிக்கிறது. “என்னால் என் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. என் உணர்ச்சிகளுக்குச் சவால் வரும்போது தோற்றுவிடுகிறேன்.”

இந்த வாசகங்கள் பலமுறை ஒலித்துக் கொண்டேயிருந்தது. அவருடைய விரல்கள் அவளுடைய ரவிக்கையின் பின்புறக் கொக்கிகளைக் களைந்துவிட்டன. பிரேசியரின் நாடாக்களை அவிழ்த்தும் விட்டார், தந்தையின் விரல்க்ள் படக்கூடாத இடங்களில் பட்டபோது; மேல்சட்டை தளர்வுற்றதை உணர்ந்தபோதுதான், சுவிசேஷ பரவசத்திலிருந்து மீண்டாள்.

நிலைமை என்னவென்று புரிந்தது. தேவ போதகரின் நிலை வெளிப்படையாக அறிவிக்கப் பட்டது. அவரால், உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அவருக்கு ஏற்பட்ட சவாலில் தோற்று வருவதை அவள் அறிந்துகொண்டாள்.

அவர் அணைப்பிலிருந்து நழுவி மெல்ல விடுபட்டு, அவர் கையிலிருந்த விவிலியத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்டி அவள்படிக்கத் தொடங்கினாள்.

“வருத்தப்பட்டுப் பாரம் (பாவம்) சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் மனம் திருந்தி என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்”

“இதற்குமேல், இதே தவற்றைச் செய்துகொண்டே வந்தால் பாவத்தின் சம்பளம் மரணம். இதிலிருந்து தேவ போதகராக இருந்தாலும் தப்பிக்க முடியாது” என்று அவள் படித்துக் கொண்டிருக்கும்போதே, அருள் தந்தை மெதுவாக நடந்து வெளியேறினார்.

கறுப்பு வெள்ளையானது.

வெள்ளை கறுப்பானது.

அவர் யாரிடம் சென்று பாவமன்னிப்புக் கேட்பார்?

படித்தவர் பார்வையில்

குமார்
Blk 97.C’ Wealth Crescent
Singapore -140097.

‘வேலியே பயிரை மேய்வது போல’ என்ற பழமொழியை நினைவுறுத்தும் சிறுகதை. இக்கதை மிகவும் அருமையான வகையில் எடுத்துக் கையாளப் பட்டது. சற்று தவறினாலும ஆபாசம் என்ற முத்திரை விழும் என்பதை உணர்ந்து கம்பி மேல் நடப்பது போன்று திறமையான சொற்றொடர்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

சமூகத்தில் நிகழும் சில அவலங்களை வெளிச்சம் போடும் சிறுகதையாகவும் திகழ்கிறது. இப்போதைய காலகட்டத்தில் சமூக பிரச்சினைகளை மையக் கருத்தாக எடுத்தாளும்போது அதிலும் முக்கியமாக மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்தாளுவதற்கு மிகவும் தைரியம் தேவை. இதனை ஒத்த வெளிநாடுகளில் மதங்களைக் கடந்து, நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஊடகங்கள் வாயிலாக அன்றாடம் அறிந்து வேதனையுற்றதன் எதிரொலியாக இக்கதை அமைந்துள்ளது. சிலருடைய வெறுப் பையும்கூட ஈட்டித் தரலாம். அதனால், இதைப்போல ஆதாரத் தகவல் இருந்து, இத்துடன் பிரசுரித்தால் ஆறுதலாயிருக்கும்.

மிக எளிமையாக இரண்டே காட்சிகளைக் கொண்ட சிறுகதையை அதுவும் இரண்டே பாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கையாண்டவிதம் மிகவும் பாராட்டுக்குரியது. ஆங்கிலமொழிக் கலப்பு இல்லாமல் நேர்த்தியாகச் சொற்களைப் பயன்படுத்தியது பாராட்டுக்குரியது.

திருந்தி வாழ நினைக்கும் நாயகியின் வேதனை களை மிக அழகாகச் சித்திரித்துள்ளார். அவளுடைய சமயோசித புத்தி கடைசியில் கதைக்கு நல்லதொரு முடிவாக அமைந்திருப்பது ரசிக்கத் தகுந்த அளவில் உள்ளது.

மொத்தத்தில் சிக்கலான கருவை ஆசிரியர் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்பதே என் கருத்தாகும்.

– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *