கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 1,478 
 

ரகு இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்கா கிளம்ப போகிறான். அவனுக்கு என்னென்ன தேவையாய் இருக்கும் என்று மாலதி ஒவ்வொன்றாய் எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்து கொண்டிருக்கிறாள்

மாலதி நீ எல்லாத்தையும் எடுத்து வச்சு பெரிய மூட்டையா என்னைய சுமக்க வச்சுடாதே” ரகு தன் மனைவியிடம் சிரித்துக்கொண்டே சொன்னான்.

ஐயே உங்களுக்கு என்ன தேவைன்னு எனக்கு தெரியாதா? பொய் கோபம் காட்டினாள் மாலதி

ம்..உன்னை பிரிஞ்சு எப்படித்தான் இருக்கப்போறேனோ? சீக்கிரமே நான் அங்க வர்றதுக்கான ஏற்பாடை செய்யுங்க. மாலதியின் பதிலால் முகத்தில் புன்னகை வந்தது ரகுவுக்கு.

முன் அறையில் ரகுவின் அப்பா ராமநாதனும், அவனின் அம்மா சுகன்யாவும் அமைதியாய் இவர்கள் இருவரின் உரையாடலை கவனித்து கொண்டிருந்தார்கள். மகன் சிரித்து சிரித்து மாலதியிடம் பேசியது கூட ரகுவின் அம்மா சுகன்யாவுக்கு எப்பொழுதும் கோப்ப்படாதவள் அந்த மன நிலையில் கோப்பட்டாள். காரணம் “நான் அமெரிக்கா போகப்போகிறேன்” என்று சற்று முன்தான் இவர்களுக்கு தெரிவித்திருந்தான். அதுவும் மாலதி ஏங்க உங்க டிரெஸ் எல்லாம் பேக் பண்ண ஆரம்பிக்கலாமா? என்று கேட்டாள். அதை கேட்டுக் கொண்டே வந்த சுகன்யா? எதுக்குடா உன் டிரெஸ் எல்லாம் எடுத்து வைக்க சொல்றா?

ரகுவுக்கு இந்த கேள்வி சற்று சங்கடத்தை கொடுத்தாலும், அம்மா சாரி உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன். எனக்கு அமெரிக்கா போறதுக்கு விசா ரெடியாயிடுச்சு. இன்னும் ஒரு வாரத்துல கிளம்பிடுவேன்.

முன் ஹாலில் காலை பேப்பரில் மூழ்கியிருந்த ராமநாதனுக்கும் இவன் சொன்னது காதில் விழுந்ததும் திடுக்கிட்டு தன் மனைவியின் முகத்தை பார்த்தார். என்ன சொல்றான் இவன் என்ற கேள்வி பார்வையில் தொக்கி நின்றது.

சுகன்யா ஏண்டா திடீருன்னு சொல்றே,நீ அமெரிக்கா போறதுக்கு முயற்சி பண்ணிட்டிருக்கேன்னாவது சொல்லியிருக்கலாமில்லை.

ரகு கொஞ்சம் எரிச்சலாய் பார்த்தான். அம்மா இப்ப என்ன நடந்துடுச்சுன்னு கோபப்படறே, ஆறு மாசமா முயற்சி பண்ணிகிட்டு இருக்கறேன். போன மாசம்தான் ஓ.கே ஆச்சு, சரி எல்லாம் ரெடியான பின்னாடி சொல்லலாமுன்னு நினைச்சேன்.

அப்ப அமெரிக்கா போறதுக்கு முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்னு எங்களுக்குத்தான் சொல்லலை, மாலதிக்கு சொல்லிட்டியா? ம்… நானும் அவளும் பிளான் பண்ணிட்டுதான் இந்த அமெரிக்கா போறதுக்கு ஏற்பாட்டையே ஆரம்பிச்சோம்.

சுகன்யாவுக்கும் கண்களில் குபுக்கென கண்ணீர் வந்தது. இது வரை வளர்த்து, போன வருடம் கல்யாணம் செய்து வந்த மனைவிக்கு ஆறு மாசத்துக்கு முன்னால் அமெரிக்கா போகும் திட்டத்தை சொல்ல முடிகிறது, பக்கத்தில் இருக்கும் அப்பா அம்மாவுக்கு சொல்ல முடியவில்லை.

மனதுக்குள் வேதனை நிறைந்திருந்தாலும், போகும் முன் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தவள் தன் வாயை இறுக மூடிக்கொண்டாள்.

இவர்கள் பேசிக்கொள்வதை உட்கார்ந்து அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தார் ராமநாதன். என்ன சொல்வது? மனைவியை கண்ணை காட்டி அழைத்தவர், அந்த சேரை இழுத்து போட்டு உட்கார் என்று சுகன்யாவை உட்கார வைத்தார்.

சரி நீங்க வாங்க மாலதி கணவனை கையை பிடித்து அழைத்து சென்றவள் ஒரு பெட்டியை காண்பித்து இந்த பெட்டியிலேயே எல்லாத்தையும் வச்சுடறேன். என்றாள்.

மனைவிடம் பேசிவிட்டு இருபது நிமிடம் கழித்து வெளியே வந்தவன் முன்னறையில் அப்பாவும், அம்மாவும் உட்கார்ந்திருப்பதை பார்த்து ஒரு நிமிடம் தயங்கியவன், அம்மாவிடம் மெல்ல வந்து ப்ளீஸ்.ம்மா புரிஞ்சுக்க, இது எங்களோட கனவு. இப்பத்தான் காரியம் கூடி வந்திருக்கு. இப்ப உனக்கு என்ன பயம்? நான் போயிட்டா என்ன பண்ணுவோமின்னுதானே. கவலையே படாதே. உனக்கும் அப்பாவுக்கும் நல்ல ஹோம் ஒண்ணுக்கு ஏற்பாடு பண்ணிடறேன்.இதை விட அங்க எல்லா வசதியும் இருக்கு.எதுக்கும் கவலைப்படாதே.

அப்ப மாலதி எங்க கூட இருக்க மாட்டாளா?

அம்மா நான் கிளம்புன உடனே அவ அவங்க வீட்டுக்கு போயிடுவா. ஒரு மாசம் லீவு போட்டிருக்கா. அதுக்கப்புறம் “ஜாபை” அங்கேயே மாத்திட்டு அவங்க கூடவே இருப்பா. நான் ஒரு வருசத்துல அவளுக்கும் வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டு கூப்பிட்டுக்குவேன்.

அப்பா அம்மா கூட இருக்கறதுக்கு நீதான் முடியாதுன்னுட்டே, இப்ப உன் சம்சாரத்தையும் எங்களை விட்டு தள்ளி வச்சுக்கறே.

சுகன்யாவின் இந்த கேள்விக்கு ரகுவால் பதில் சொல்ல முடியவில்லை. மெல்ல வெளியேறினான்.

பாருங்க ஒண்ணும் பேசாம போறான். சுகன்யா மெல்லிய விசும்பலுடன் சொல்ல ராமநாதன் கொஞ்சம் அமைதியா இரு. இப்ப என்ன நடந்துடுச்சுன்னு அழுகிறே?

ஏங்க இத்தனை வருசம் வளர்த்துன பையன், நம்ம இரண்டு பேரும் முழுசா இருக்கோம், ஒரு வார்த்தை நான் அமெரிக்கா போகலாமுன்னு இருக்கேன் அப்படீன்னு முதலிலேயே சொல்லியிருக்கலாமில்லை.

ஒரே மகன், செல்லமாய் வளர்த்திருக்கிறாள். கல்யாணம் செய்து வைத்து இந்த ஒரு வருடமாய் மகனையும்,மருமகளையும் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தவள். இப்படி திடீரென்று மகன் ஒரு குண்டை தூக்கி போடுவான் என்று எதிர் பார்த்திருக்க மாட்டாள். அதுவும் மாலதி மேல் தனி பாசம் வைத்திருந்தவள், இவளுக்கு உறவுப்பெண் வேறு. ஒன்று விட்ட அண்ணனின் பெண். அவளாவது கூட இருக்கிறேன் என்று சொல்லி இருந்தால் சந்தோசப்பட்டிருப்பாள். அவளும் இவர்களை விட்டு போக போகிறாள் என்றதும் மனது தடுமாறுகிறாள். இத்தனையும் நினைத்து தன் மனைவியை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் ராமநாதன்.

ரகுவை விமானம் ஏற்றி வழி அனுப்ப இவர்களின் குடும்பமும், சம்பந்திகளான சுகன்யாவின் அண்ணன் குடும்பமும் விமானநிலையம் வந்திருந்தனர். எல்லா சோதனைகளும் முடிந்து ரகு விமானம் ஏறி பறக்கும் வரை அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒன்றாய் வீட்டுக்கு வந்தனர்.

மறு நாள் மாலதி தன் அப்பா அம்மாவுடன் போய் வருகிறேன் என்று சொன்னாள். ராமநாதனும், சுகன்யாவும் எதுவும் பேசாமல் அமைதியாய் அவர்கள் மூவரையும் அனுப்பி வைத்து விட்டு கதவை சாத்தினர்..

அவர்கள் கிளம்பி சென்ற பின் சுகன்யா குலுங்கி குலுங்கி அழுதாள். ராமநாதனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. அதுவரை மகனும் மருமகளும் சிட்டுக்குருவிகளாய் அந்த வீட்டுக்குள் வளைய வந்தவர்கள், இப்பொழுது யாரும் இல்லாமல் வெறுமையாய். அவருக்கும் மனதெல்லாம் வேதனை….

யாரோ மென்மையாய் கதவை தட்டும் சத்தம், அதுவரை அழுது கொண்டிருந்த

சுகன்யா விருக்கென நிமிர்ந்தவள் அவசர அவசரமாய் தன் கண்களை துடைத்துக் கொண்டு கதவை திறந்தாள்.

வெளியே மாலதி நின்று கொண்டிருந்தாள். அத்தையின் முகத்தை பார்த்தாள். அழுது ஓய்ந்திருந்தது தெரிந்தது. கேள்விக்குறியுடன் சுகன்யாவும் மருமகளை பார்க்க,

அவங்க இரண்டு பேரையும் இப்பத்தான் பஸ் ஏத்தி அனுப்பிச்சுட்டு வர்றேன். புன்னகையுடன் சொன்னாள். அப்ப நீ போகலியா? அந்த வருத்தத்திலும் மெல்லிய சந்தோசம் பொங்க கேட்ட சுகன்யாவை பார்த்து “சாரி அத்தை முதல்ல நாங்க அப்படித்தான் நினைச்சோம்” ஆனா அன்னைக்கு உங்க முகத்தையும், மாமா முகத்தையும் பார்த்த பிறகுதான் நாம் எப்ப இவ்வளவு சுயநலமாயிட்டோமுன்னு புரிஞ்சுது, அதனால, நான் லீவை கேன்சல் பண்ணிட்டு இங்கேயே இருந்து வேலைக்கு போறேன். அவர் என்னைய அமெரிக்கா கூட்டிட்டு போற வரைக்குமாவது உங்களோட இருக்கலாமில்லை.புன்னகையுடன் மாமியார் முகத்தை பார்க்க..

“அச்சோ என் ராசாத்தி” என்று மருமகளின் முகத்தை நெட்டி முறித்து தன் தலையில் குட்டிக்கொண்டாள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *