மரப்பாச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2024
பார்வையிட்டோர்: 181 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

தெருவில் ஆடு கத்துவதுபோல் ஒரு குரல் கேட்டது.

ஈஸிசேரில் சாய்ந்தபடியே தங்கமணி திரும்பிப் பார்த்தான். அவன் உடலில் மின்சாரம்போல் ஓர் உணர்ச்சி ஊடுருவிச் சென்றது. கையிலிருந்த புஸ்தகம் நழுவிக் கீழே விழுந்தது.

அவன் எதிரே வாசற்படியில், ஒரு பெண் வந்து நின்றாள். அவளுக்குச் சுமார் இருபது வயசிருக்கும். மெல்லிய கிழிந்த துணி ஒன்றை இடுப்பில் சுற்றிக்கொண்டு, அதையே மார்பின் மேலும் ஒரு சுற்று வரும்படி விட்டுக்கொண் டிருந்தாள். அவள் முகத்தில் கண்ட அழகே தங்கமணியை அப்படித் திடுக்கிடச் செய்தது. மாசற்ற பளிங்குபோல் இருந்த முகத்தில் மையிட்டது போன்றிருந்த கருவிழிகள் இரண்டும் ஜிலுஜிலு என்று ஒளிவிட்டுப் பிரகாசித்தன. கட்டுக்கடங்காம லும், பின்னியிராமலும் அவிழ்ந்து சுருள் சுருளாய்த் தொங்கிய தலைமயிரின் பொன்னிறம், அதில் எண்ணெய் பட்டுப் பலநாள் ஆகியிருக்கும் என்பதைக் காட்டியது. தேகத்தில் ஒவ்வோர் அவயவமும் தந்தத்தால் கடைசல் பிடிக்கப்பட்ட பதுமையின் உறுப்புக்களைப்போல் பொருத்தமாய் அமைந் திருந்தது. திருஷ்டி பரிகாரம்போல், ஒவ்வொரு கரத்திலும் கன்னங்கரேலென்றிருந்த ஒரு கண்ணாடி வளையலை அணிந்திருந்தாள்.

இங்கிலீஷ் ஸினிமா ஒன்றில் பார்த்த ‘ஜிப்ஸி’ நாட்டியக்காரியின் தோற்றம் தங்கமணிக்கு ஞாபகம் வந்தது. கண்கொட்டாமல் ஒரு நிமிஷம் அவளைப் பார்த்துவிட்டுப் பிறகு வெட்கத்துடன் தலை குனிந்தான். அடுத்த விநாடி மறுபடியும் தலையை உயர்த்தி,”என்ன?” என்று கேட்டான்.

அவன் கேள்வி காதில் விழாததுபோல் அவள் சிரித்துக்கொண்டு நின்றாள். அந்த மோகனப் புன்னகை தங்கமணியின் அறிவைச் சிதற அடித்தது. மறுபடியும், “யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?” என்றான்.

அவள் தன் வலது கையை நீட்டி, “ஆ-ஆ-எ- ஏ-” என்று வாயினால் என்னவோ உளறினாள்.

தங்கமணிக்கு நெஞ்சு திக் என்றது; “நீ என்ன ஊமையா? பேசத் தெரியாதா?” என்று அவன் கேட்டதற்குப் பதிலாக அவள் தலையை ஓர் அசைப்பு அசைத்தாள்.

தங்கமணி அயர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டான். கடவுளின் விளையாட்டுத்தான் எவ்வளவு விபரீதமா யிருக்கிறது ! இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு ரூப சௌந்தர்யத்தைக் கொடுத்தவன், இவளை ஏன் பேசவொட்டாமல் அடித்துவிட்டான்? வெளித் தோற்றத்தினால் பார்ப்பவரை மயக்கும் இவள் ஹ்ருதயம் எப்படிப்பட்டதோ? அந்த ஹ்ருதயத்தில் எழும் உணர்ச்சிகளை வார்த்தைகள் மூலம் வெளிப் படுத்த முடியாமல் அல்லவா போய்விட்டது? – இப்படி அவன் மனத்தில் எண்ணங்கள் ஓடிய போது அவன் நெஞ்சின்மேல் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைத்ததுபோல் இருந்தது.

அந்தப் பெண் மறுபடியும் கையை நீட்டி, வாயினால் என்னவோ உளறிக் கொட்டினாள். தங்கமணி எழுந்திருந்து உள்ளே சென்று, ஓர் இரண்டணா நாணயத்தைக் கொண்டு வந்து அவள் கையில் வைத்தான். அவள் கண்களை நம்பாதவள் போல், கையில் விழுந்த காசையும் அவன் முகத் தையும் இரண்டுதரம் மாறிமாறிப் பார்த்துவிட்டுக் களுக்கென்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். உடனே, ‘இப்படிச் சிரித்துவிட்டோமே’ என்று அவளுக்கே வெட்கம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. சிவந்து போன முகத்தை மார்பின்மேல் கவிழ்த்து மறைத்துக் கொண்டு அங்கிருந்து விடுவிடென்று நடந்து சென்றாள்.

தங்கமணி மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்து புஸ்தகத்தைப் பிரித்தான். ஆனால் படிப்பு ஓடவில்லை. அந்தச் செம்பட்டை மயிர் பறக்கும் முகமும், கருவிழிகளும் அவன் மனத்தை விட்டு அகல மறுத் தன. அவள் சிரிப்பின் ஒலி இன்னும் கணீரென்று அவன் காதில் எதிரொலித்துக்கொண் டிருந்தது.

தங்கமணி கிராமத்துக்குப் புதிதாய் வந்தவன். பட்டணத்திலேயே இருந்து இருந்து படித்துப் பட்டம் பெற்ற அவன், சிறிதுகாலம் நிம்மதியாய் இருப்போம் என்று சாந்தியை நாடிக் கிராமத்துக்கு வந்தான். அவனுக்குச் சொந்தமான வீடு ஒன்று அங்கே அவ்வளவு காலம் பூட்டிக் கிடந்தது. கிராம முன்சீப் அவனுக்கு உறவினரானதால் சாப்பாட்டை அவர்கள் வீட்டில் வைத்துக்கொண்டான். பகலில் படிப்பது, மாலையில் வயல் பக்கம் உலாவச்செல்வது, இரவில் எட்டு மணிக்கெல்லாம் படுத்துத் தூங்குவது, இப்படிச் சில நாட்கள் சென்றன. அவன் நாடிவந்த சாந்தியும் அவனுக்குக் கிட்டியது. அந்தச் சமயத்தில் தான், அன்று காலை அந்த ஊமைப்பெண் இந்திர ஜாலம் போலவும் அரபிக் கதைகளில் வரும் விசித்திர நிகழ்ச்சிகளைப் போலவும் திடும் பிரவேசமாய்த் தோன்றி மறைந்தாள்.

தங்கமணியின் மனத்திலிருந்த சாந்தியெல்லாம் பறந்தது. ‘ஹோ’ என்ற இரைச்சலுடன் ஒரு பெரும் புயற்காற்று அங்கே குடிபுகுந்தது. மனத்தை ஒரு நிலையில் நிற்கவொட்டாமல் கொந்தளிக்கச் செய்தது.


மறுநாள் காலையில் வீடு கூட்டுகிற கிழவி வந்தபோது தங்கமணி அந்த ஊமைப் பெண்ணைப் பற்றி விசாரித்தான்.

“அந்த ஊமைச்சியா? இங்கேயும் வந்துட்டாளா அவ? நான் இருக்கிறபோது வந்திருந்தா காலை ஓடிச்சிருப்பேன். ஏன் வந்தா இங்கே அவ?” என்றாள் கிழவி.

தங்கமணிக்குக் கிழவியிடம் கோபம் உண்டாயிற்று. “பாவம், ஏன் அந்தப் பிச்சைக்காரியைத் திட்டுகிறாய்? அவள் உன்னை என்ன செய்தாள்? வாயில்லாதவள்!” என்றான்.

“வாயில்லாதவளா? அத்தனையும் விஷம்! இனிமே இங்கே வரவிடாதீங்க அவளை!” என்று கூறிவிட்டுக் கிழவி தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள்.

சிறிது நேரம் கழித்துத் தங்கமணி மறுபடியும் அந்தப் பெண்ணைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தான்; “யார் அவள்? இந்த ஊர்தானா?” என்றான்.

“அவளா? ஆலப்பாக்கத்திலிருந்து வந்தவ அவ. நம்மக் குள்ளக் கவுண்டன் இருக்கானே, அவன் அக்கா மவ; அப்பனும் ஆத்தாளும் செத்துப்பூட்டாங்க. அநாதையாய்ப் பூட்டுதேன்னு குள்ளக் கவுண்டன் போயி கண்ணாலம் பண்ணிக்கிட்டு வந்தான், ஊமையா இருந்தாலும் இருக்கட்டுமின்னு. ஆன ஊமைப் பெண்ணெ கட்டிண்டு யார் சாமி மாரடிப்பாங்க? என்ன சொன்னாலும் பதில் சொல்லத் தெரியாது. கடைசியிலே குள்ளன் நம்ம ஊர் எல்லம்மாளையும் ரெண்டாந்தாரமாகக் கட்டிக்கிட்டான்.”

“அப்புறம் இவளை அடித்து விரட்டி விட்டானாக்கும்?’

“ஏன் விரட்டறான்? அவளே கெடுத்துக்கினா. போட்டதைத் துன்னுட்டு விழுந்து கெடக்கக் கூடாது, வேலை செஞ்சிக்கிட்டு ? அந்தக் களவாணிப் பய பச்சையப்பனே இழுத்துக்கிட்டு எங்கேயோ ஓடிப்போயிட்டு ரெண்டு மாசம் கழிச்சுத் திரும்பி வந்தா. வந்தா யார் சாமி மறுபடியும் வீட்டிலே சேப்பாங்க? அதான் அடிச்சு விரட்டிட்டான். இப்ப பிச்சை எடுத்துத் திங்கிறா! யாரும் அவளை வீட்டுக்குள்ளே சேக்கமாட்டாங்களே!”

“ஐயோ பாவம்!”

“பாவம் என்ன சாமி வெச்சிருக்கு? இன்னும் இந்த ஊரைவிட்டு விரட்டாமலே இருக்காங்களே அவளை! இன்னும் யார் யாரை கெடுக்கப் போறாளோ?”

கிழவி போன சற்று நேரத்துக்குப் பிறகு அந்த ஊமைப்பெண் அன்றும் முதல் நாளைப்போல் அங்கு வந்து நின்றாள். தங்கமணியைப் பார்த்ததும், மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் தன் இரண்டு கைகளையும் எதிரில் நீட்டி இப்படியும் அப்படியும் அசைத்தாள். வளைகள் கிலுகிலு என்று சப்திப்பதைப் பார்த்து அவன், “ஏது, வளை அடுக்கிக் கொண்டாயா என்ன?” என்றான்.

“ஆமாம்” என்று சொல்வதுபோல் ஊமைப் பெண் தலையை அசைத்தாள்.

“ஏது காசு?'”

அவள் முகத்தில் மறுபடியும் வெட்கத்துடன் கூடிய புன்னகை தவழ்ந்தது; ‘நீ கொடுத்தது’ என்று சொல்வதுபோல் மோவாய்க் கட்டையை அவன் பக்கம் உயர்த்தினாள்.

தங்கமணி நடுக்கத்துடன் ஓரடி பின் வாங்கி நின்றான். தன்னை நோக்கி உயர்த்தப் பட்ட மோவாய்க் கட்டையையும், அதன்மேலிருந்த சிவந்த அதரங்களையும் பார்க்கையில் அவன் மனம் சற்றுச் சஞ்சலமடைந்தது.

‘இந்த ஊரில் ஒருவரும் இவளை வீட்டில் சேர்ப்பதில்லை. நாமோ நேருக்கு நேர் நின்றுகொண்டு இவளுடன் வார்த்தையாடுகிறோம். பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்?’ என்று ஒரு கணம் தோன்றியது. பிறகு, யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

“நான் கொடுத்த காசுக்கு, வளையல் அடுக்கிக் கொண்டு விட்டாய்! நேற்றுச் சாப்பாட்டுக்கு என்ன செய்தாய்?” என்றான்.

அவள் கையை இப்படியும் அப்படியும் காண்பித்து என்னவோ பேசினாள். ஒன்றும் அவனுக்குப் புரியவில்லை. வேறு எந்த வீட்டிலோ சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டதாகக் கூறுகிறாள் என்று தங்கமணி ஊகித்துக்கொண்டு, “இப்போது என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

“ஒன்றும் வேண்டாம்” என்பதுபோல் அவள் கையையும் தலையையும் பலமாக ஆட்டினாள். “பின் எதற்காக வந்தாய்?”

இந்தக் கேள்வி வாயிலிருந்து வெளிப்பட்டதும் தங்கமணி உதட்டைக் கடித்துக்கொண்டு, “ஏன் இப்படிக் கேட்டோம்?” என்று தன்னையே கோபித்துக்கொண்டான். அப்போது அவள் கண்களில் தோன்றிய பார்வையின் பொருள் சட்டென்று அவனுக்கு விளங்கவில்லை. ‘குழந்தை ஒன்று, தனக்குப் பிடித்த ஒரு மனிதரிடம் போகவேண்டுமென்று தாவிக்கொண்டு வருகிறது. ஆனால் அவரோ கோபத்துடன் அதன்மேல் எரிந்து விழுகிறார். அப்போது அது திடுக்கிட்டு ஒரு பார்வை பார்க்கிறது’. – அப்படி இருந்தது அவள் அப்பொழுது பார்த்த பார்வை. அந்தக் கண்களின் ஆழத்திலே மறைந்து கிடந்த உண்மை என்னவாய் இருக்கும் என்று தெரியாமல் அவன் திகைப்படைந்தான்.

அவள், அவனைப் பார்ப்பதைவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டாள். தங்கமணிக்கு விஷயம் விளங்கியது. தன் எதிரில் நிற்பது ஒரு வயசு வந்த பெண்ணானாலும், அவள் ஹ்ருதயத்துக்குள் துடித்துக் கொண்டிருந்தது ஒரு குழந்தையின் உள்ளம். அந்தக் குழந்தை மனத்தைப் புண்படுத்திவிட்டது மனித சமூகம். அதன் உறவை நாடின் அவளை, அது தன் அருகில் நெருங்கவொட்டாமல் விரட்டி விரட்டி அடித்தது. சகோதர மனிதர்களின் தொடர்பை விரும்பியே அவள் ஏக்கங்கொண்டு புதிய முகங்களைத் தேடி அலைந்தாள்.

தங்கமணி, “உன் பெயர் என்ன? நீ எனக்குச் சொல்லவில்லையே?” என்றான்.

அவள் தலை நிமிர்ந்தாள். அவள் முகம் இழந்து விட்ட ஒளியை மறுபடியும் பெற்றது. ஆனால் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வெளிப்படவில்லை.

தங்கமணி பெருமூச்சுடன் உள்ளே சென்று உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான்: ‘இவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு பிறகு விரட்டி யடித்தானே ஒருவன், அவன் அதிருஷ்டத்தை என்ன வென்பது?’


மறுநாள் அவள் வரவில்லை. வருவாள் வருவாள் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்து பார்த்த தங்கமணியின் மனம் வேதனை அடைந்தது. வாயிற்படியில் நின்று தெருவில் இருபுறமும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஏமாற்றம் அடைந்தான். அதற்கடுத்த நாளும் அவள் தோன்றாமற் போகவே அவன் மனத்தில் பெரிய ஏக்கம் குடிகொண்டது. அன்று பால் கொண்டுவந்த சிறுவனிடம் அவளைப் பற்றிப் பிரஸ்தாபித்ததும் அவன், “மரப்பாச்சியா?” என்று சிரித்தான்.

“மரப்பாச்சியா? அதென்ன ?”

“அதான் சாமி, அவ பேரு.”

“மரப்பாச்சி என்று ஒரு பேரா?”

“ஆமாங்க; என்ன சொன்னாலும் பதில் சொல்லாமே மரப்பாச்சிப் பொம்மை மாதிரி உம்முனு நின்னுண்டு இருப்பா. எல்லாரும் மரப்பாச்சின்னு தான் அவளைக் கூப்பிடறது.”

“அவள் எங்கே, இப்போது கண்ணிலே படுகிறதில்லை?”

“ஏன், படாமே என்னாங்க? இங்கேதான் இருக்கா, எங்கே போறா? நேத்துக்கூட நான் பாத்தேனே, மோட்டுக் கழனீலே, அரச மரத்தடியிலே?”

பையன் அவளைப்பற்றி உத்ஸாகத்துடன் பேசுவதைக் கண்டு தங்கமணி, “யார் அவள்?” என்று கேட்டான்.

பையன் சொன்னான் : “அவ குள்ளக் கவுண்டரு மூத்த ஸம்சாரங்க. கவுண்டரு ரெண்டாம் பொஞ்சாதி கட்டிக்கிணாரு. அவ இவளெப் போது விடிஞ்சாப் போது போனா அடி அடின்னு அடிச்சுப் பாடு படுத்தினா. அதுக்காக மரப்பாச்சி பயந்துகிட்டு ஓடினா. ஆனா அவ பாவம், எங்கே போவ? மறுபடியும் இங்கேதானே திரும்பி வரணும்! ஆனா இவங்க மறுபடி அவளெ வீட்டிலே சேக்கமாட்டேன் னுட்டாங்க. அதான் அவ பிச்சை எடுக்கறா!”

அன்று மாலை அவன் உலாவச் சென்றபோது, பையன் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அந்த மேட்டுக் கழனி அரச மரத்தடிப் பக்கம் சென்றான். அவன் எதிர் பார்த்தபடியே மரப்பாச்சி அங்கே காணப்பட்டாள். மரத்தடியில் உட்கார்ந்து, தான் சேகரித்த காட்டுப் புஷ்பங்களை மடியில் வைத்துக்கொண்டு ஒரு வாழை நாரினால் மாலையாகக் கட்டிக்கொண்டிருந்தாள். காற்றில் பறந்துகொண்டிருந்த கூந்தலில், நெற்றிக்குமேல் ஒரு பெரிய வெள்ளை நந்தியாவட்டைப் புஷ்பத்தைச் செருகி யிருந்தாள். தங்கமணி வந்ததும் அவள் ஆச்சரியத்துடன் சட்டென்று எழுந்தபோது, மடியிலிருந்த புஷ்பங்களும் தலையில் இருந்த நந்தியாவட்டையும் கீழே விழுந்தன.

“ஐயையோ, எதற்காக எழுந்திருந்தாய் நீ?” என்று சொல்லிக்கொண்டு தங்கமணி கீழே குனிந்து அந்த நந்தியாவட்டையைக் கையில் எடுத்தான். அதைத் தானே முன்பிருந்த இடத்தில் வைத்து விடலாமா என்று தோன்றிய ஆசையைக் கஷ்டப் பட்டு அடக்கிக்கொண்டு, புஷ்பத்தை அவள் கையில் கொடுத்து, “தலையில் வைத்துக்கொள்!” என்றான்.

அவள் வெட்கத்துடன் தலையை அசைத்துக் கொண்டு நின்றாள்.

“உன் பெயர் மரப்பாச்சியாமே?”

அவளுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள். “சரி, அது இருக்கட்டும். நீ ஏன் இரண்டு நாட்களாய் என் வீட்டுப் பக்கம் வருகிறதில்லை?”

மறுபடியும் அன்று அவள் பார்த்த பார்வையே அதற்குப் பதிலாகக் கிடைத்தது. ‘நான் வருவதுதான் உனக்குப் பிடிக்கவில்லையே!’ என்று அந்தப் பார்வை சொல்வதுபோல் இருந்தது.

“இதோ பார், மரப்பாச்சி! நீ என் வீட்டுக்கு வருவது எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொள்ளாதே. உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எல்லாரையும் போல் நான் உன்னிடம் குரூரமாய் நடந்து கொள்ள மாட்டேன்.”

‘ஒரு பட்டிக்காட்டு ஊமைப் பெண்ணிடம் நான் என்ன வெல்லாம் பேசுகிறேன்?-‘ என்று தங்கமணி பேச்சைப் பாதியில் நிறுத்திக்கொண்டான்.

அப்போது சட்டென்று மரப்பாச்சி என்னவோ சொல்லிக்கொண்டு மேற்றிசை அடிவானத்தைத் தன் கையினால் சுட்டிக் காட்டினாள்.

மேற்கே, ஒரு கறுத்த மேகம் அடிவானத்தி லிருந்து தலையை நீட்டிக்கொண்டிருந்தது. திடீர் திடீரென்று அதைப் பொத்துக்கொண்டு வரும் மின் வெட்டுத்தான் அவ்வாறு மரப்பாச்சியின் கவனத்தைக் கவர்ந்தது. அவள் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த பெருமகிழ்ச்சி அவள் கண்கள் மூலம் அப்பொழுது ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

தங்கமணி அவள் பக்கம் திரும்பி, “மரப்பாச்சி ! மழை வந்துவிட்டால் நீ என்ன பண்ணுவாய்?” என்று கேட்டான்.

அவள் ஒரு மாதிரியாக முகத்தை அசைத்துக் கொண்டு, கண்களைக் குறும்புத்தனமாக ஒருதரம் மூடித் திறந்தாள். ‘ஹும்! இந்த மழைக்கெல்லாம் நான் பயப்படுவேனா?’ என்று அவள் வாயைத் திறந்து பளிச்சென்று சொல்லியிருந்தால்கூட அவள் கருத்தைத் தங்கமணி அவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருக்கமாட்டான். அவனுக்குத் திகைப்புண்டாயிற்று. ‘இதற்குள், அவள் மனத்தில் தோன்றும் எண்ணங்களெல்லாம் அவள் வாய்விட்டுப் பேசாமல் இருக்கும்போதே நமக்கு எப்படித் தெரிகின்றன? என்ன ஆச்சரியம்?’ என்று நினைத்துக்கொண்டான்.


அன்றிரவு புயற்காற்று அடித்தது.

பளிச்சுப் பளிச்சென்று வானத்தில் கண்ணைச் சிமிட்டிக்கொண் டிருந்த நக்ஷத்திரங்கள் ஒவ்வொன்றாய் மறைந்தன. வானமெங்கும் மை இருள் பரவியது. ‘உஸ்’ என்ற சப்தத்துடன் மரங்களினூடே. வீசிய காற்று, சிறிது நேரத்துக்குள் ஹோ என்று கடல் அலையைப்போல் இரைந்துகொண்டு சுழன்று சுழன்று அடித்தது. கடபுடா என்ற இடியும், கண் ணைப்பறிக்கும் மின்னலும் மனத்துக்கு அச்சத்தைக் கொடுத்து வீட்டுக்குள் பதுங்கச் செய்தன. காற் றுடன் மழையும் சேர்ந்துகொண்டு பெய்யத் தொடங்கியது.

அறைக்குள் படுத்துக்கொண்டு கண்ணை மூடினான் தங்கமணி. ‘உஸ்’ என்று ஒரு காற்றடித்த போது ஜன்னல் வழியாய் மழைநீரின் சாரல் அறைக்குள் வீசியது. தங்கமணி சட்டென்று எழுந்திருந்து கையில் ‘டார்ச்’ விளக்குடன் ஜன்னலை மூடச் சென்றான். விளக்கு வெளிச்சம் ஜன்னல் வழியாய் வெளியே அடித்தபோது ஜன்னலுக்கு எதிரில் இருந்த வேப்பமரத்தடியில் ஓர் உருவம் நிற்பதைப் பார்த்தான்.

“யார் அது?” என்றான். பதில் இல்லை. “மரப்பாச்சி!”

மரப்பாச்சி தன் கைகளை மார்பின்மேல் கட்டிக் கொண்டு, கண்ணைக் கூசச்செய்த அந்த வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் பெரிதும் மூடின கண்களுடன் ஜன்னல் பக்கம் நோக்கினாள்.

“ஜயையோ, மரப்பாச்சி! இந்த மழையில் நனைந்துகொண்டா வெளியில் நிற்கிறாய்? உள்ளே வா! உள்ளே வா!”

தங்கமணி அறைக்குள்ளிருந்து வெளியே வந்து வாயிற் கதவைத் திறந்தான். மரப்பாச்சி ரேழிக்குள் நுழைந்தாள். அவளுடன் மழை நீரும் சர்ரென்று உள்ளே வாரி அடித்தது. பளிச்சென்று தோன்றிய மின்னல் ஒளியில் தங்கமணி, அருகில் நின்ற அவ்வுரு வத்தைப் பார்த்தான். அவள் உடம்பு தெப்பமாய் நனைந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. மேலே சுற்றியிருந்த புடைவைத்துண்டு தேகத்துடன் பூசினாற்போல் ஒட்டிக்கொண்டிருந்தது. தங்கமணி விளக்க மறுபடியும் ஏற்றி, வாயிற் கதவைத் தாழிட்டு அவளை நோக்கியபோது அவன் தேகம் ஒரு குலுங்கு குலுங்கியது.

“மரப்பாச்சி! நீ தெப்பமாய் நனைந்துவிட்டாய். ஒரு வேஷ்டி தருகிறேன்; உடுத்துக்கொள். தலையையும் துடைத்துக்கொண்டு இங்கேயே படுத்துக் கொள். ஒரு போர்வையும் தருகிறேன்” என்றான். அவள் குளிரினால் வெட வெட என்று கைகால்கள் நடுங்க நின்றாள்.

தங்கமணிக்குத் தூக்கம் வரவில்லை. நெருப்பின் மேல் படுத்திருப்பது போன்று இருந்தது அவனுக்கு. ரேழியிலிருந்த அந்த உருவத்தைத் தன் மனத்திலிருந்து பெயர்த்தெறிய முயன்றான். ஆனால் அந்த உருவமோ நிமிஷத்துக்கு நிமிவும், இன்னும் ஆழமாக அவன் மனத்தில் வேரூன்றிப் பதிந்தது. அந்த முகம் அவன் மனக்கண்ணை விட்டு அகலவில்லை. விநாடிக்கு ஓர் அழகும், விநாடிக்கொரு சாயலும் பாவமும் பெற்று அது அவன் அறிவைக் கலங்கச் செய்தது.

ஒரு சமயம் முத்துப்போன்ற பற்களைக் காட்டி இள நகை புரியும்; ஒரு சமயம் களுக்கென்று வெட்கம் கலந்த சிரிப்புச் சிரிக்கும்; ஒரு சமயம் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, விரல்களின் இடுக்குகள் வழியாய்த் தன் குவளைக் கண்களை மட்டும் காட்டும்.

படுத்துக்கொண்டிருந்தவன் போர்வையை உதறிவிட்டு எழுந்திருந்தான். கையில் டார்ச்சுடன் ரேழிக்கு வந்தான். அந்தக் குளிரில், பூனைக் குட்டியைப்போல் சுருட்டிக்கொண்டு அங்கே படுத் திருந்த மரப்பாச்சி வெளிச்சத்தைப் பார்த்து எழுந்து உட்கார்ந்தாள்.

“மரப்பாச்சி!” – தங்கமணியின் குரலில் ஒரு நடுக்கம் தோன்றியது.

அவள் “ஊம்-” என்ற வண்ணம் எழுந்து நின்றாள்.

“இதோ பார் மரப்பாச்சி ! நான் முன்சீப் வீட்டுக்குப் போகிறேன். நீ கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொள்” என்று அவன் தாழ்ப்பாளை இழுத்தான்.

அவள் அச்சம் நிறைந்த முகத்துடன், தாழ்ப் பாளைத் திறந்த அவன் கையின் மேல் தன் கையை வைத்துவிட்டுச் சட்டென்று இழுத்துக் கொண்டாள். திறந்த வாயுடனும், மருண்ட கண்களுடனும் அவள் தன்னை விழித்துப் பார்த்தபோது, ஏன்? ஏன்? எங்கே போகிறாய்? இந்த மழையிலா? என்று திகிலுடன் கேட்கப்பட்ட கேள்விகள் – துடித்துக் கொண்டிருந்த கேள்விகள் – அந்தக் கண்களின் மூலம் தன்னை நோக்கிப் பாய்வதை அவன் உணர்ந்தான்.

“ஆமாம், மரப்பாச்சி! நான் முன்சீப் வீட்டுக்குப் போகிறேன். நீ கதவைப் போட்டுக்கொண்டு உள்ளே போய்ச் சௌகரியமாய்ப் படுத்துக்கொண்டு தூங்கு.” கதவைத் திறந்துகொண்டு தங்கமணி அந்தக் கும்மிருட்டில், கொட்டுகிற மழையில் வாயிற்படிகளில் கால் வைத்து இறங்கினான்.

மரப்பாச்சி ஒரு நிமிஷம் பிரமை பிடித்தவள் போல் ஸ்தம்பித்து நின்றாள். கதவைத் தாழிடுமுன் அவள் வெளியே தலையை நீட்டித் தெருவை நோக்கின போது, ஒரு மின்வெட்டுத் தோன்றித் தெருவை ஜோதி வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு மறைந்தது. தெரு வெறிச்சென்று இருந்ததைப் பார்த்தாள் மரப்பாச்சி.

– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

து.ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916-ல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார். ராமமூர்த்தியின் 'கழைக்கூத்தன்' சிறுகதை 'சக்தி' இதழில் 1943-ல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடனில் முத்திரைக்கதைகள் எழுதினார். 'கதம்பச்சரம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *