மரபணு மாற்றங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 3,113 
 

காலைமணி. 10. 30.

இதமான குளிரில் ஊட்டி தொட்டபெட்டா அருகில் உள்ள காமராசர் முதியோர் காப்பகம் எவ்வித கூச்சல் குழப்பமின்றி வெகு அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது.

எல்லா ஆண், பெண், முதியவர்களும் தங்கள், தங்கள் இடம், இருக்கை, படுக்கைகளிலிருந்து பிரிந்தும் பிரியாமலும் தங்கள் விருப்பத்திற்கு மற்றவர்களோடு பேசி, பழகி, யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற காரியங்களில் ஈடுபட்டு காப்பக வளாகம் முழுதும் பரவி இருந்தார்கள்.

இவர்கள் எல்லோரையும் விட்டுப் பிரிந்து….. வயது 65. தொந்தி, தொப்பை இல்லாத உடல். செக்கச் சிவந்த நிறம். வசீகர முக பளீர் அழகு, ஆறடி உயரம் உள்ள அருண்குமார் மரத்தடியில் இருக்கும் ஒரு சிமெண்ட் பெஞ்சில் தனியே அமர்ந்து அன்றைய தினசரி விரித்துப் படித்துக் கொண்டிருந்தார்.

கச்சலான உடல். அமைதியான முகம் வயது 61 ஆன கீதா தோளில் தொங்கும் துணிப்பையோடு கைகளை கட்டிவாறு மெல்ல நடந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு அருண்குமாரைப் பார்த்ததும் அதிர்ச்சி, ஆச்சரியம். ஒருகணம் துணுக்குற்று நின்றவள் மெல்ல நடந்து அவர் முன் நின்றாள்.

படிப்பில் ஆழ்ந்திருந்த அருண்குமார் தன் முன் எவரோ நிற்பது அறிந்து வாசிப்பதை நிறுத்தி ஏறிட்டுப் பார்த்தார்.

அவருக்கும் அதிர்ச்சி, ஆச்சரியம், விழிகளில் விரிப்பு.

பல ஆண்டுகளுக்குப் பின் எதிர்பாராத சந்திப்பு. அவரால் நம்பவே முடியவில்லை.

“நீ… நீ…. ” தடுமாறினார்.

“நானேதான் ! கீதா !”

“இது காணவில்லையே…?!…. “அருண்குமாரால் இன்னும் நம்பமுடியவில்லை.

“இல்லே…”

“உட்கார் !”

அருகில் அமர்ந்தாள்.

“இங்கே எப்போ வந்தே..?”

“இப்போதான் !”

“என்னைப் பார்க்க வந்தியா..?”

“இல்லே”

”அப்புறம்…?”

“இந்த நிமிசத்திலிருந்து நானும் இங்கே ஒரு உறுப்பினர்.”

“அப்படியா..??.!!..”

“ம்ம்…..”

“இந்தக் காலத்துல நம்மைப் போன்றவர்களுக்கு கடைசி காலம் எல்லாம் முதியோர் காப்பகம்தான் போல.”

“ஆமாம்…! என்னாச்சு உங்க குடும்பம், பிள்ளைங்க…? “கீதா விபரம் அறிய கேட்டாள்.

இருவரும் பத்து வருடங்கள் ஒரே அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள்..

“அவுங்க அவுங்க அவுங்க வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க…”அருண்குமார் பொதுவாக சொன்னார்.

” புரியலை..?”

“பெரிய பையன் சதீஷ் அமெரிக்க குடியுரிமையில் பிள்ளைகுட்டிகள் குடும்பத்தோடு இருக்கான். அடுத்தவன் சுரேஷ் அதே போல கனடாவில் இருக்கான். மனைவி மேலே போய்ட்டாள். நான் இங்கே வந்துட்டேன். !”

“எத்தினி காலமா இங்கே இருக்கீங்க.”

“மனைவி தவறிய ஒரு வருச காலமாய் இதுதான் புகலிடம்.”

“புள்ளங்களோடு போக வேண்டியதுதானே..?”

“போகலாம். நிரந்தரமாய் தங்க முடியாது. எங்கே போனாலும் வருசத்துக்கு மூணு மாசம்தான் சுற்றுலா விசா.”

இவளுக்குப் புரிந்தது.

“அந்த மூணு மாசமும் அங்கே சந்தோசமா இருக்க முடியாது. மொழி தெரியாமல் வீடே சிறையாய் அடைந்து இருக்கனும். அதுக்கு இது உத்தமம். சொந்த பூமி, பிறந்த மண் அருமை.”

“இந்த முடிவு நீங்களா எடுத்திறீங்களா..? பெத்தபிள்ளைகள் முடிவா..?”

“என் சொந்த முடிவு..”

“பிள்ளைகள் பணம் அனுப்புறாங்களா..?”

“அனுப்புறேன்னு சொன்னாங்க. நான்தான் எனக்கு ஓய்வூதியம் போதும்ன்னு சொல்லி மறுத்துட்டேன்.”

“பேச்சு வழக்கு தொடர்பில் இருக்காங்களா..?”

“வாரத்துக்கு ஒரு முறை. மகன், மருமகள், பேரன் பேத்திகள் எல்லாரும் பேசுவாங்க..”

“பார்க்க வருவங்களா..?”

“தாய் செத்ததுக்காக கொள்ளி போடனும்ன்னு மூத்தவன் வந்தான். நான் செத்தால் இளையவன் வருவான். நீ எப்படி கீதா..?”

“உங்க கதைதான் என் கதையும்.! இரண்டு பொண்ணுங்களும் வெளிநாட்டில் வாழ்க்கை. நான் தனிமரமாய் இங்கே.”

“வீட்டுக்காரர் ..?”

“நம்ம ரெண்டு பேரையும் தப்பா பேசியவர் உங்கள் ஒதுங்களுக்குப் பிறகு எனக்கு. விவாகரத்து கொடுத்து மொத்தமாய் ஒதுங்கிட்டார்.”

“கீதா..?.?!!….” அருண்குமார் மெலிதாய் அலறினார்.

“வீண் சந்தேகத்துக்கு அவ்வளவு வலிமை !!” பெருமூச்சு விட்டாள்.

ஒரே அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்பவர்களின் சாதாரண பேச்சு, பழக்கம், நட்பை தவறாக எடுத்து , சந்தேகக் கண் கொண்டு பார்த்து… என்ன கொடுமை. !

“நீ இப்படி விபரம் சொன்னதுமே…வீண் பிரச்சனை வேணாம், என்னால் உன் வாழ்க்கை வீணாக வேண்டாம்ன்னு ஒதுங்கி வேற கம்பேனிக்குப் போன பிறகுமா உனக்கு விவாகரத்து..?!”

“ஆமாம். அதுக்கு அவர் சொன்ன காரணம் வேற. நீங்க தப்பு செய்ததால் அப்படி ஓடி ஒளிந்து பதுங்கிட்டீங்களாம். இப்படி நிறைய தினம் பேச்சு, ஏச்சு சித்ரவதைகள். முடிவாய்… ‘ எனக்கு மன நிம்மதி வேணும் ‘ ன்னு சொல்லி அவராகவே முடிவெடுத்து விவாகரத்து .! அதன் பிறகுதான் எனக்கும் நிம்மதி. பிள்ளைகளை நல்லவிதமாய் வளர்த்து கட்டிக் கொடுத்து… நானும் நிம்மதியாய் இங்கே வந்தாச்சு.”

‘எப்படி இப்படி மனிதர்கள்.!! ஏனிந்த முரண்பாடு..?!’ நினைக்க வெறுப்பு கசப்பாக இருந்தது அருண்குமாருக்கு.

வெகுநேர யோசனைக்குப் பின்…

“கீதா..! ” மெல்ல அழைத்தார்.

“சொல்லுங்க…? ” இவளும் அவரை ஏறிட்டார்.

“நமக்கு இந்த முதியோர் சரணாலயம் தேவை இல்லேன்னு நினைக்கிறேன். நல்ல நண்பர்களாய் ஒண்ணா வாழலாம்.”

“யோசிக்கலாம் !” சொல்லி நிமிர்ந்தவளுக்கு அதிர்ச்சி.

அருண்குமாருக்கும் அதிர்ச்சி.

அவளின் முன்னாள் கணவன் புது உறுப்பினனாக அவர்கள் முன் நின்றான். புன்னகை புரிந்தான்!!

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *