மரநிழல் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 6,992 
 
 

அக்கா சற்று சந்தோஷமான மனநிலையில் இருப்பதுபோலத் தென்பட்டது. இன்று ஷெல்லடிச் சத்தம் இல்லை. இடம் பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பலாம் என்ற அறிவித்தலும் வந்திருக்கிறது. சொந்த இடங்களைப் போல் சொர்க்கம் வேறேது?

இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரு தொகைப்பேர் பூரணி மாமி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். இவ்வளவு சனத்தொகையையும் மாமி வீடு தாங்காது என்று சகலருக்கும் தெரியும். ஆனாலும் வேறு வழியில்லை. மாமி முகம் கோணாது எல்லோரையும் ஆதரித்தாள். வேளா வேளைக்கு சாப்பாடு போட்டாள்.

ஒரு ஷெல்லடிச் சத்தம் கேட்டாலே வயிற்றுக்குழப்பம் வருகிற கேஸ் அக்கா. இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஷெல் மழை பொழிந்தபோது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்தவர்களில் அக்காவும் ஒருத்தி. சனங்கள் வீதியில் மூச்சு விடமுடியாத நெருக்கத்தில் ஓட.. ஓட.. பாதையின் இரு மருங்கும் ஷெல்கள் விழுந்து வெடித்தன. உயிரிழந்தவர்களையும், கை கால் தலைகள் துண்டிக்கப்பட்டு துடித்துக்கொண்டிருக்கும் உடன்பிறப்புக்களையும் அந்தந்தப்படியே விட்டு ஓடி.. ஓடி.. ஷெல்கள் செய்த கொடுமைகளை பேசிப் பேசியே அக்கா மாய்ந்துபோனாள். வந்து இரண்டு நாட்களாக ரொய்லெட்டும் ஆளுமாகத் திரிந்தாள். ‘பிள்ளை சரியாகப் பயந்துபோனாள்.” என அம்மா அடிக்கடி கவலைப்பட்டாள். அக்கா இன்று நோர்மலாயிருக்கிறாள் என்பதை திரும்பவும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அக்காவைச் சுற்றி சில பழசுகளும், ஒருசில இளவட்டத்தினரும், குஞ்சுகுருமான்களும் என ஒரு கூட்டம் சேர்ந்திருந்தது. விளக்கு வசதி குறைவானபடியால் வேளைக்கு சாப்பாட்டை முடித்துக்கொண்டு.. பின்னர் இப்படி சுற்றியிருந்து கதையளக்க நிலா வெளிச்சம் உதவி செய்யும். இந்த இரண்டொரு நாட்களிலேயே தனது பேச்சு வல்லமையால் அக்கா வந்தவர்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கிறாள் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அக்கா தொண்டையை சற்று செருமி சரிபார்த்துக்கொண்டாள். பேசுவதற்கு முன் மைக்ரெஸ்ரிங் செய்வதுபோல முன்னெச்சரிக்கையாக அங்குமிங்கும் பார்த்து ‘தம்பி இருக்கிறானா?” என்பதுபோல நோட்டமிட்டாள். நான் அவள் கண்களில் படாமல் ஒதுங்கியே இருந்தேன். எனக்கு முன்னால் எப்போதுமே அவள் அடக்கி வாசிப்பாள். அவளது பேச்சுக்கு நான் ஏதாவது அபிப்பிராயம் சொன்னால் ‘இவனுக்கு வயசுக்கு மீறின வாய்!” என முறைப்படுவாள். எனக்கு வாய் பெரிசல்ல. ஆனால் சில வேளைகளில் சமயாசந்தர்ப்பம் தெரியாமல் அக்கா பேசுவதை கேட்க எரிச்சல் வரும்.

‘உங்களுக்குத் தெரியுமா?.. இந்த உலகம் ஒரு பேரழிவிலையிருந்து தப்பியிருக்குது. எந்த நேரமும் அழியக்கூடிய உலகத்திலதான் நாங்கள் இருந்து சீவிக்கிறம்.. அடிபடுகிறம்.”

அக்கா இன்றைக்கு ஒரு சமயப்பேருரை நிகழ்த்தப்போகிறாளோ என எனக்குச் சந்தேகம் தோன்றியது.

அக்காவின் பேச்சுக்கு எதிர்க் குரலாக.. ‘அடிபடுகிறது சீவிக்கிறதுக்காகத்தானே?” என ஒரு குஞ்சின் குரல் எழுந்தது.

‘வாயைப் பொத்திக்கொண்டு சொல்லுகிறதைக் கேளடா..!”

தனது மகனை அடக்குமுறை செய்தார் சின்ராஸ் அண்ணர். அவருக்குக் கதை கேட்கிற சுவாரஸ்யம்.

‘தம்பி சொல்லுறது சரி. இந்த உலகத்திலை உள்ள உயிரினங்களெல்லாம் சீவிக்கிறதுக்காக அடிபடவேண்டித்தான் இருக்கு. பறவைகள் மிருகங்கள் கூட இப்படித்தான். தங்கட இனத்தைக் காப்பாற்ற.. தற்பாதுகாப்புக்காக மற்ற விலங்குகளோடை அடிபடுகிறது.”

ஆரம்பத்திலே எழுந்த எதிர்ப்புக் குரலை அக்கா சாதுரியமாகச் சமாளித்துவிட்டாள்.

‘என்றாலும் தங்கச்சி.. வாயோரியாய் இதென்ன கதை? நாலு பக்கத்தாலையும் ஷெல் அடிக்கிறாங்கள்.. நீயும் அழியப்போகுது அது இதெண்டு கொண்டு?.. வேறை ஏதாவது நல்ல கதை சொல்லு..!”

‘பயப்படாதையுங்கோ ஆச்சி. இதுவும் நல்ல கதைதான் கேளுங்கோ!” சொர்ணம் ஆச்சியைச் சமாதானப்படுத்திவிட்டுத் தொடர்ந்தாள் அக்கா.

‘உங்களுக்குத் தெரியுமா.. இந்த அண்டவெளியில் கோடானு கோடி விண்கற்கள் சுற்றிக் கொண்டிருக்கு. அவை சின்னஞ் சிறிய கற்கள் போன்ற அளவுகளில் இருந்து மிகப் பிரமாண்டமான அளவுகளிலையும் இருக்கு. சிலவற்றை உபகோள்கள் என்றும் சொல்லுகினம். அந்த அளவுக்கு மிக மிகப் பிரமாண்டமானவை..!”

‘சில வேளைகளில் அவை பாதை விலகி பூமியை நோக்கி வந்து மோதவும்கூடும். தற்செயலாகத்தான்! அப்படி மோதினால்.. முடிஞ்சுது கதை! எல்லாரும் ஒரேடியாய் போகவேண்டியது தான்!.”

‘என்னடி தங்கச்சி.. இவங்கள் அடிக்கிற ஷெல்லை விடப் பெரிய சாமானே..?”

‘பெரியதென்றால் குட்டிச் சந்திரன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெரிய விண்கற்கள்.. அஸ்ற்றொய்ட் என்று இங்கிலிசில சொல்லுவினம்..”

‘இது பூமியில சன சந்தடியுள்ள இடத்திலை மோதினால் உடனடியாய் ஐம்பது மில்லியன் ஆட்கள் செத்துப்போவினம். எரிமலைகள், பூகம்பம் ஏற்படும். கடலில் மோதினால் பத்துப் பதினைந்து மைல் உயரத்துக்கு தண்ணீர் கொந்தளித்து எழும்பும்.. புயல் காற்று வீசும். பூமிக்கு ஏற்பட்ட அதிற்சியில் கிளம்புகிற தூசித் துணிக்கைகள் பூமியைச் சுற்றி மூடிக்கொள்ளும். சூரிய வெளிச்சம் தடுக்கப்பட பூமியை இருள் சூழும். கடுமையான குளிர் ஏற்படும். ஆயிரக்கணக்கான வருஷங்களுக்குத் தொடர்ந்து அமிலமழை பொழியும். உயிரினங்களெல்லாம் வாழமுடியாது அழிஞ்சுபோகும்.”

‘கடவுளே!” என்று பெருமூச்செறிந்தாள் சொர்ணம் ஆச்சி. பிறகு சொன்னாள். ‘தங்கச்சி எல்லாருமாகச் சேர்ந்து கோளறு திருப்பதிகம் பாடுவம்.. வேயுறுதோழிபங்கன்.. விடமுண்ட கண்டன்.. மிக நல்ல வீணை தடவி..”

‘ஆச்சிக்கு விசர்! பிறகேனணை ஷெல் அடிக்கிறாங்கள் எண்டு ஓடி வந்தனி..? வீணையைத் தடவிக்கொண்டு அங்கேயே இருந்திருக்கலாமே?” என்றான் சின்ராஸ் அண்ணரின் இளையமகன். அவன் ஆச்சிக்காக அனுதாபப்படுகிறானா அல்லது சினப்படுகிறானா என்று புரியாமல் இருந்தது.

‘ஓமடா தம்பி!.. இந்த யாழ்ப்பாணத்துச் சனங்கள் எவ்வளவு விரதம் இருக்கிறதுகள்? கோயில் குளமென்று திரியிறதுகள். அதுகளுக்குத்தானே இந்த சோதனை எல்லாம்?” பொறுக்க முடியாதவள்போல இப்போது வாயைத் திறந்து பேசியவள் திலகம் அன்ரி.

‘சோதனைகள் தறகாலிகமானவை.. கடவுள் எங்கடை உறுதியைச் சோதிக்கிறார். இருந்து பாருங்கோ.. தர்மம்தான் கடைசியிலை வெல்லும்.!”

சற்று நேரம் மற்றவர்களைப் பேசவிட்டு மௌனமாயிருந்த அக்கா ‘சரி எங்கட கதைக்கு வருவம்” என அவர்களது கவனத்தைத் திருப்ப முயற்சித்தாள்.

நான் இன்னும் அக்காவின் முன் தோன்றி அவளது கவனத்தைத் திருப்ப முயலாமல் சுவர் மறைவிலிருந்து சகலதையும் கேட்டுக்கொண்டிருந்தேன். உலகம் அழிவது பற்றி அக்கா மேற்கொண்டு சொல்லப்போகும் சங்கதிகளை கேட்கும் ஆர்வம் எனக்கும் இருந்தது.

உலகம் அழியும் என்ற கதை புலுடா என்றுதான் நான் முன்னர் எண்ணியிருந்தேன். உலகம் நிரந்தரமானது.. அழிவற்றது என எல்லோரையும்போலவே நானும் நினைத்திருந்தேன். சின்னஞ்சிறுவனாக இருந்தபோது.. உலகம் ஒரு நாள் இருள் சூழ்ந்து அழியப்போகிறது.. புயல் காற்று பூகம்பம் வந்து எல்லா உயிர்களும் அழிந்துபோகும் என்று சொல்லப்பட்ட வேறு வேறு கதைகளைக் கேட்டிருக்கிறேன். அவை அப்போது ஒருவிதப் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. உலகம் அழிந்தால் அம்மாவும் செத்துப்போவாளே..! கடவுளே உலகம் அழியக்கூடாது.. நாங்களெல்லாம் சாகக்கூடாது!

அம்மா சாகக்கூடாது!.. என அம்மாவை நினைத்து நினைத்து அழுதிருக்கிறேன்.

‘அம்மா உலகம் அழிஞ்சுபோகுமா?.. நாங்களெல்லாம் செத்துப் போவமா..?”

‘ஆரப்பு சொன்னது இப்படி?.. நாங்கள் ஒருக்காலும் சாகமாட்டம். ஆரோ உன்னை பயப்படுத்திறதுக்குச் சொல்லியிருக்கினம்.. நம்பாதை…!”

அம்மா சொன்னதை அப்படியே நம்பினேன். மனசில் தைரியம் வந்தது. ஆனால் இப்போது அக்கா என்ன புதுக்கதை சொல்லுகிறாள்..? தனது கையாலும் கூடக் குறையப் போட்டுச் சொல்லக்கூடிய வல்லமை படைத்தவள் அக்கா என்ற ரகசியமும் எனக்குத் தெரியும். அதனால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருந்தேன் நான். எனினும் அக்கா சொல்வதைத் தொடர்ந்து கேட்டேன்.

‘ஆதிகாலத்தில் உலகத்தில டைனோசர் என்ற பயங்கரமான பிரமாண்டமான விலங்குகள் வாழ்ந்தன. இவையெல்லாம் ஒரேயடியாய்ச் செத்து அழிஞ்சுபோனதுக்குக் காரணம் இதுபோல ஒரு விண்கல் பூமியில மோதி, அதனால் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு அமிலமழை பெய்து உயிர் வாழமுடியாத நிலமை ஏற்பட்டதுதான் என்று சொல்லுகினம். பிறகு காலப்போக்கில் தோன்றிய புதிய விலங்குகள்தான்… நாங்கள்..”

‘அந்த நிலைமை எங்களுக்கும் வரக்கூடும் என்பதுதான் விஞ்ஞானிகளின்ர கவலை.. சில வருஷங்களுக்கு முந்தி ஒரு பெரிய விண்கல் பூமியை நோக்கி வந்தது. இந்தா கதை முடியப்போகுது என்று நினைக்கிற தருணத்திலை பூமியில இருந்து ஒரு நானூற்றைம்பது மைல் வித்தியாசத்திலை விலத்திக்கொண்டு போட்டுது. அதனாலை தப்பிப் பிழைச்சம்..!”

‘என்ன தங்கச்சி தப்பிப் பிழைச்சம் எண்டு சொல்லுகிறாய்.. இஞ்சால இவன்கள் கண்மண் தெரியாமல் ஷெல் அடிக்கிறான்கள். ஆரார் இருப்பமோ ஆரார் போகப்போறமோ..? இப்பிடி அலைஞ்சு திரிஞ்சு இடிபட்டுச் சாகிறதைவிட அப்படி எல்லாரும் ஒரேயடியாய் போய் சேர்ந்திருக்கலாம்..!” திலகம் அன்ரி இனியும் ஆத்தாத சோகத்தில் கதைத்தாள்.

‘கவலைப்படாதையுங்கோ அன்ரி.. இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அடிக்கப்போகிறான்கள்..? இருந்து பாப்பம்..!” ஷெல் என்ற சொல் கேட்டாலே வயிற்றைக் கலக்குகிறது என்று சொல்லுகிற அக்காவே இப்படிச் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அல்லது திலகம் அன்ரியை ஆறுதல் படுத்துவதற்காக அப்படிக் கதைத்தாளோ தெரியாது.

சொர்ணம் ஆச்சி ஈனஸ்வரமான குரலில் மெல்லக் கேட்டாள்..

‘தங்கச்சி.. அந்த விண் கல்லோ.. விண் கில்லோ.. அது விலத்திக்கொண்டு போட்டுதுதானே.. இனிப் பயமில்லைத் தானேணை?”

‘இல்லையெண்டு சொல்லேலாது ஆச்சி. இதே மாதிரி திரும்பவும் நடக்கக்கூடும். இப்பிடி ஒரு பேரழிவு ஏற்படாமல் தடுக்கிறது எப்படியெண்டு உலகத்திலையுள்ள விஞ்ஞானிகளெல்லாம் தலையைப் போட்டு உடைச்சுக் கொண்டிருக்கினம்.”

‘அவங்கள் என்னவும் செய்யட்டும் தங்கச்சி.. நாங்கள் கோளறு திருப்பதிகம் பாடுவம்.. முந்தியொருக்கால் எட்டுக் கிரகங்கள் சேர்க்கையின்போது உலகம் அழியப்போகுது எண்டுதானே சொன்னவை..! நாங்களெல்லாம் வீடு வீடாய் இருந்து கோளறு திருப்பதிகம் பாடினனாங்கள்.. ஒரு வில்லங்கமும் நடக்கயில்லைத்தானே.. பத்தோ பன்னிரண்டு நாட்களுக்கு கடுமையான மழை பெய்திச்சுது அவ்வளவுதான்..!”

‘என்னணை அமில மழையோ..?” எனக் கேட்டுவிட்டுச் சிரித்தான் சின்ராஸ் அண்ணரின் மகன். ‘ஆச்சி உப்பிடித் தேவாரம் பாடி அகிம்சை முறையிலை போராடி எங்கட ஆட்கள் களைச்சுப்போச்சினம். கண்ட பலனும் ஒண்டுமில்லை. முள்ளை முள்ளாலைதான் எடுக்கவேணும். கீதையிலை கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்லுறார் தெரியுமா..? அக்கிரமங்கள் தலைதூக்கும்போது அவற்றை அழிப்பதற்காகப் பாவிக்கப்படவேண்டிய ஆயுதம் பலாத்காரம்தான்..!”

‘அட…!” எனக்கு இன்னொரு முறை ஆச்சரியம்.. சின்ராஸ் அண்ணரின் மகனைப் பார்த்து! கீதை என்பது பகவானைப் பற்றிய பக்தி சிரத்தையான புத்தகம் என்றுதான் நினைத்திருக்கிறேன். அதில் இப்படியெல்லாம் தத்துவங்கள் இருக்கிறதா? அதை இவனும் அறிந்துவைத்திருக்கிறானே! ஆச்சியின் பாசையிலேயே சொல்லி மடக்கிவிட்டானே என்று தோன்றியது.

ஆச்சிக்கு எரிச்சல் போலும்: ‘தம்பி.. இளம் கன்று பயமறியாது.. உனக்கு நான் சொலுறது பகிடியாயிருக்கோ?” என்றாள்.

‘தம்பி சொல்லுறது சரிதான்.” என அக்கா நிலைமையைச் சமாளித்தாள்.

‘விஞ்ஞானிகள் அதுபோல ஒரு முடிவைத்தான் எடுத்திருக்கினம். விண்கல் பூமியை நோக்கி வரயிக்கை அதை எதிர்த்து ஏவுகணைபோல ஒன்றை அனுப்பிறது. அது அண்ட வெளியிலை அந்த விண்கல்லை உடைச்சுச் சிதறடிக்கும். அதிலையும் சில கற்கள்.. உடைஞ்ச சிதறல்கள்.. பூமியை நோக்கித்தான் விழும். எண்டாலும் அதாலை பெரிய பாதிப்பு இராது. இன்னொரு விஷயம், இப்படி ஒரு கல் பூமியை மோதப்போகுது எண்டு கடைசி நேரத்திலை… நாப்பத்தெட்டு மணித்தியாலத்துக்குள்ளதான் தெரியவரும். அதுக்குள்ள நடவடிக்கை எடுக்கவேணும்.”

‘கடவுளே..!” என்றாள் சொர்ணம் ஆச்சி..

‘எப்படித் தங்கச்சி… அதுகும் இவங்கள் அடிக்கிற இந்த ஷெல்லைப் போலையெல்லோ இருக்குது… சொல்லாமல் பறையாமல் இருந்தாப்போல சத்தம் கேட்குது. வந்து விழமுதல்… என்ன செய்யிறது… எங்கை ஓடுறது என்டே முடிவெடுக்கேலாமல் இருக்கு..”

‘பயப்படாதையுங்கோ ஆச்சி… அப்படியொரு விண்கல் பூமியில மோதுறதுக்குரிய சந்தர்ப்பம் எத்தனையோ மில்லியன் வருசத்தில ஒன்றுதானாம். சொல்லப்போனால் இன்னும் கோடி வருஷங்களுக்கு இப்படி நடக்கவே மாட்டுது. விஞ்ஞானிகள் சொல்லுகினம் அப்பிடி நடந்தாலும் அது மோதவிடாமல் தடுக்க தங்களாலை நடவடிக்கை எடுக்கேலும் எண்டு..!”

இப்போது பூரணி மாமியின் குரல் கேட்டது.. ‘நானொரு விஷயம் கேட்கிறன்.. இவ்வளவு கோடி வருஷங்களில எப்பவோ ஒருக்கால் தற்செயலாக நடக்கக்கூடிய பேரழிவிலை இருந்து மனிச இனத்தை எப்பிடிக் காப்பாத்திறது எண்டு உலகத்திலை உள்ள விஞ்ஞானிகள் எல்லாம் யோசிக்கினம். அது எனக்கு விளங்குது. மனிச உயிர்.. மனிச வாழ்க்கை அவ்வளவு மகத்துவமானது. ஆனால் உந்த உலகத்திலை உள்ளவைக்கு இஞ்ச யாழ்ப்பாணத்திலை நடக்கிற சங்கதியள் தெரியாதோ..? மக்கள் குடியிருப்புகளை நோக்கித்தானே ஷெல் அடிக்கிறாங்கள். குழந்தை குட்டிகளோடை குடல் தெறிக்க ஓட… ஓட… ஷெல் விழுந்து வெடிச்சு எல்லாரையும் அழிக்குது?..

அக்கா பதில் பேசமுடியாதவள் போல் மௌனித்திருப்பது தெரிந்தது.

சின்ராஸ் அண்ணர் சொன்னார். ‘உலகத்திலை உள்ளவையெல்லாம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கினம் எண்டுதானே செய்திகளிலை போடுகினம்!” அவர் எரிச்சல்பட்டுப்போய் நிற்கிறார் என்பதை அவரது குரல் தெரிவித்தது. ‘இந்த நிரந்தரமில்லாத அழிஞ்சுபோகக்கூடிய உலகத்திலை இருந்துதானே சிலபேர் உங்கட உரிமையைத் தரேலாது.. அது இது எண்டு சொல்லுகினம். ஷெல் அடிச்சுக் கொல்லுகினம். அழிச்சொழிக்கப் பாக்கினம்.”

இதற்கு அக்கா பதில் சொல்லவில்லை.

‘அதுதானே தங்கச்சி… எவ்வளவு சனங்கள்… மரநிழலிலையும் தாவாரங்களிலையும் சீவிக்குதுகள். உந்த ஷெல் செய்கிற அநியாயம்தானே அதுகள் வீடு வாசலுக்குப் போகேலாமல் இருக்கு. அப்போதை பார்த்தன்… ஒரு மனிசி றோட்டுக் கரையில.. மரத்துக்குக் கீழே இருந்து பிள்ளைக்குப் பால் குடுக்குது. மற்றக் குழந்தையள் பக்கத்திலை அழுவாரைப்போல நிக்குதுகள்.. திண்டுதுகளோ இல்லையோ… நான் நல்லாய் அழுதிட்டன். எத்தினை சனங்கள் தங்கட சீவிய காலத்திலேயே வீட்டிலையிருந்து தூக்காத இறங்குப் பெட்டியளையும் சுமந்து கொண்டு அங்கையும் இஞ்சையும் அலைஞ்சு திரியுதுகள்… கடவுளே!” திலகம் அன்ரி விக்கலெடுத்து அழுவது கேட்டது.

அன்ரியின் மகள் சொன்னாள்.. ‘எனக்கென்றால் இந்த ஷெல் அடியை எப்பிடி நிப்பாட்டிறதெண்டுதான் யோசனையாயிருக்கு… அதுக்குப் பிறகுதான் நாங்கள் நிம்மதியாய் சீவிக்கலாம். அதுக்கு ஒரு வழி இல்லையோ…?

இந்த கேள்விக்கும் அக்கா பதில் கூறவில்லை. அன்ரியின் மகள் என் வயதொத்த சிறுமிதான். எனக்கு மண்டைக்குள் என்னவோ செய்தது. அவளது கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் என் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும்போலிருந்தது.

எழுந்து முன்னே போனேன்.

‘விண்கல் பூமியை மோதாமல் எப்படித் தடுக்கலாம் என்று ஆராச்சி செய்யிற விஞ்ஞானியளும் மனிசர்தானே? அவையளாலை அது முடியுமென்றால் எங்களாலை எங்கடை பூமியிலை ஷெல் விழுந்து வெடிக்காமல் ஒரு வழியைக் கண்டுபிடிக்கேலும்.”

எனது இந்தப் பதிலால் மௌனம் கலைந்த அக்கா ‘எட விக்கிரமன் இவ்வளவு நேரமும் கேட்டுக்கொண்டே இருந்தனி!” என்றவாறே எழுந்தாள்.

அந்தக் கணத்திற்தான் எதுவோ மோதுவதுபோல வெடித்து நிலமதிர்ந்தது. அக்காவின் கதையும் முடிஞ்சது. அப்போது தப்பிப் பிழைத்த ஓரிருவரில் நானும் ஒருவன்.

– நங்கூரம் 1995 – காற்றோடு போதல் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு 2002, எம்.டி குணசேன அன் கம்பனி, கொழும்பு

Print Friendly, PDF & Email
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *