கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 12,356 
 
 

முருகானந்தம் அய்யா போய்விட்டார். 60 வயசு. நோய் நொடின்னு ஒருநாள் படுக்கவில்லை. நடமாடிக் கொண்டே போய் சேர்ந்து விட்டார். காலை பதினோரு மணிக்கு கழனியை சுற்றிவிட்டு வந்தவர் மருமகளிடம் குடிக்கத் கொஞ்சம் நீராகாரம் கேட்டிருக்கிறார். மருமகள் கொண்டு வந்து கொடுப்பதற்குள் சோபாவில் சாய்ந்து விட்டார்.

முருகானந்தம் வீட்டின் முன்பாக ஊர் ஜனங்களும் கூடியிருந்தனர். ஊரில் சாவு விழுந்து விட்டால் சவம் எடுக்கிற வரைக்கும் அந்தத் தெரு ஆட்கள் ஒருத்தரும் வேலைக்கு போறதில்ல. சவத்தை எடுத்ததுக்கு அப்புறம்தான் சொந்த வேலைக்கு போகணும். இது வாலாயமாய் இருக்கும் ஊர் நடைமுறை.. விவசாயிகளும், நெசவாளிகளும், நிறைந்திருக்கும் ஊர் அது. சாவு வீட்டைச் சுற்றிலும் ஒரு மவுனம் விரவியிருந்தது. உள்ளே போகும் பெண்கள் கொஞ்ச நேரம் மார்பில் தப் தப்பென்று அடித்துக் கொண்டு பிலாக்கணம் பாடியழுதார்கள். அழுது முடித்தவர்கள் கண்களை துடைத்தபடி வெளியேறிக் கொண்டிருந்தனர். திண்ணைமேல் ஊர் காரியஸ்தர் வேதாச்சலம் அய்யா உட்கார்ந்துக் கொண்டு சவத்தை குளிப்பாட்டுவதற்காக வாங்கி வந்திருந்த கடைசெலவு சாமான்களை தட்டில் பரப்பிக் கொண்டிருந்தார். தெருவில் பாடை தயாராகிக் கொண்டிருந்தது. பூ ஜோடிப்பு நடக்கிறது. பக்கத்தில் ஒருத்தன் கொள்ளி சட்டியில் சிறிது கட்டை நெருப்பு வைத்து மேலே வறட்டியை போட்டு நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தான். தெருவில் இருப்பவர்களுக்கும் உள்ளே இருப்பவர்களுக்கும் சிரத்தையாக டீ விநியோகமாகிக் கொண்டிருந்தது.

முருகானந்தம் ஊரில் நல்ல மனுஷன் என்று பெயரெடுத்தவர். சற்று ரோஷமான ஆள். முணுக்கென்று கோபம் வந்துவிடும். இரண்டு தடவை ஊர் தலைவராக இருந்தவர். மூன்றாம் தடவை தன் தம்பி தலைவருக்கு நிற்கிறான் என்று கேள்விப்பட்டு ஒதுங்கிக் கொண்டார். ஊரில் போர் போட்டு, டேங்க் கட்டி குடிதண்ணீர் வசதி செய்தது, ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்தது, ரேஷன் கடை கொண்டு வந்தது, மெயின் ரோடிலிருந்து சீரான சாலை, எல்லாம் வந்தது இவர் காலத்தில்தான். இந்த தடவை தலைவராக அவருடைய தம்பிதான் போட்டியின்றி அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்.

சாவு மேளம் பொரிந்துக் கொண்டிருக்கிறது. பறையடிப்பவர்கள் சற்றைக்கொரு தரம் வெள்ளையும் சள்ளையுமாய் வரும் மேட்டுக் குடிகளிடம் பாட்டுபாடி சுபோஜெயம் சொல்லி காசு கறந்துக் கொண்டிருந்தார்கள். மேளம் அடிக்கிறவன் நாலு பேர், ஒப்பாரி பாட்டு படிக்கிறவன் ஒருத்தன், அப்புறம் சுடுகாட்டில் சிதை அடுக்கி தயார் செய்பவர்கள் ரெண்டு பேரு. ஆக மொத்தம் ஏழு பேருக்கும் சாயரட்சைக்கு சவத்தை எடுத்த பிறகு ஆளுக்கு ஒரு குவார்ட்டர் சரக்கு, தண்ணி பாக்கெட் ஒண்ணு, தொட்டுக்க வறுத்த கறி இல்லையென்றால் ரத்தப் பொரியல் ஒரு பொட்டணம் என்றால் கூட அறுநூறு ரூபாய்க்கு மேல் தேற்றியாகணும். ஜரூராக சுபோஜெயம் கலெக்‌ஷன் நடந்துக் கொண்டிருக்கிறது. பளிச்னு ஒருத்தர் வரப்படாது. அவர் கிட்ட பணம் கறக்காம அனுப்பறதில்லை.

முதலில் முருகானந்தம் குடும்பமும், அவருடைய தம்பி கோபால் குடும்பமும் கூட்டுக் குடித்தனமுமாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். முருகானந்தம் தம்பியிடமும், பிள்ளைகளிடமும் மிக்க பாசமுள்ளவராகத்தான் வாழ்ந்து வந்தார். அப்புறம் வீட்டில் வாழ வந்த பெண்களுக்குள் வந்த வாய்ச்சண்டை பின்னால் ஆண்களுக்குள் பெரிய சண்டையாகி அடிதடி வரைக்கும் போய் பிரிந்து விட்டார்கள். எப்பவும் அற்ப காரணங்களுக்காக வரும் சண்டைகள்தான் வெட்டு குத்து ரேஞ்சுக்கு போகும் என்பது வாஸ்தவமான பேச்சு. அடுத்தடுத்த காலங்களில் சொத்து பாகம் பிரிப்பதில் எழுந்த தகறாரில் பங்கீடு நடக்காமலே நின்றுபோனது. இரண்டு பக்கங்களிலும் வளர்ந்து விட்ட பிள்ளைகளால் பிரிவு நிரந்தரமாகிப் போனது. பிரிந்து இன்றைக்கு பத்து வருஷங்கள் கடந்து விட்டன. பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தர் ஜென்மப் பகையாளியாக திரிந்துக் கொண்டிருந்தார்கள். தம்பி பக்கத்தில இரண்டு கிலோமீட்டரில் புதூர் கிராமத்தில் மளிகைக் கடை வைத்திருக்கிறான். தினமும் ஊரிலிருந்து போய் வந்து கடையை கவனித்துக் கொள்கிறான். எடுபிடிக்கு ரெண்டு பணியாட்கள்.

சவத்தை தெற்கு திசையில் தலையை வைத்து கிடத்தியிருந்தார்கள். தலைமாட்டில் குத்து விளக்கு எரிந்துக் கொண்டிருக்கிறது. கால்மாட்டில் உயிர் பிரியும் போது அவசரமாக உடைத்த தேங்காய் முடிகள் வைக்கப் பட்டிருந்தன. காரியஸ்தர் வேதாசலம் கத்திக் கொண்டிருந்தார். “டேய்! யார்றா அவன் தலைமாட்டில கட்டிலுக்குக் கீழே நெல் சிப்பம் ஒண்ணு கொண்டாந்து வையிடான்னு சொன்னனே என்ன ஆச்சி? சீக்கிரம். டேய்! நீ சவத்துக்கு நெத்தியில கனக்க விபூதி பூசுங்கடா.”— சொல்லிக் கொண்டே சவத்துக்கு வீக்கம் ஏறாதிருக்க ஒரு சீலைத்துணியில் சோற்றுப்பை கட்டி மார்மீது வைத்து மேலே துணியை மூடினார். அந்நேரத்துக்கு அவங்க வீட்டு வகையறாவைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொருத்தராய் தெருமுனையிலிருந்தே உரக்க ஒப்பாரி பாடி அழுதுக் கொண்டே வந்து, உள்ளே வந்ததும் மாரடித்துக் கொண்டு பாடி அழ ஆரம்பித்தார்கள். காரியஸ்தர் வேதாசலம் சவத்தினுடைய மூத்த பிள்ளையைக் கூப்பிட்டார். கூடவே மற்ற இருவரும் சோகமாய் வந்து நின்றார்கள். “ஏம்பா! சொந்தக்காரங்க எல்லாருக்கும் தகவல் போயிட்ச்சா?. எல்லாரும் வந்துட்டாங்களா?. இன்னும் யார்னா வரவேண்டியது இருக்கா?.” “எல்லாரும் வந்தாச்சிங்க.”—-அவர் சற்று குனிந்து தணிந்த குரலில். “உங்க சித்தப்பனுக்கு தகவல் சொன்னியா இல்லையா? ஆளைக் காணோமே.”—–அதற்கு மூன்று பேரும் பிலுபிலுவென்று சீறிக் கொண்டு வந்துவிட்டார்கள். “அந்தாளுக்கு எதுக்கு தகவலு சொல்லணும்?. உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லே. பத்துவருச பகை. வாழ்வு சாவுக்கெல்லாம் தள்ளியாச்சி, இன்னிக்கி இன்னா திடீர்னு சொட்டுதா?. அந்தாளு வரக்கூடாது.”—-மூத்த பிள்ளை மாதவன் கூடுதலாக எகிறினான்.

“டேய் மாதவா! இன்னா இருந்தாலும் கூடப் பொறந்தவன். அதில்லாம ஊரு தலைவர். எதனா வில்லங்கம் பண்ணாம இருக்கணும்டா. அவனுக்கு பவர் இருக்குதுடா.” “ எதுவா இருந்தாலும் சரி நாங்க பார்த்துக்கறோம். அந்தப் பேச்சை வுடுங்க. வரக்கூடாதுன்னா வரக்கூடாதுதான். எங்களையே அடிக்க ஆள் செட் பண்ணான்யா அவன். துரோகி.” “டேய்! இன்னாடா சொல்றீங்க?. இன்னும் உங்கப்பனுக்கும் அவனுக்கும் பாகப்பிரிவினை ஆவலியேடா. நாளைக்கு செட்டில்மெண்ட் எழுத அவன் தாட்சண்யம் வோணும்டா. முன பின்ன யோசிச்சி நடங்க. இப்பிடி எடுத்தேன் கவுத்தேன்னு பேசாதீங்கப்பா.”

“அன்னைக்கி கத அன்னைக்கி . எங்க தாட்சண்யம் இல்லாம அவன் மட்டும் பாகப் பிரிவினை நடத்திக்குவானா?. வுடுப்பா அந்தாளு வரக்கூடாது.” “டேய்! வாணாம்டா சொல்றத கேளுங்க.” “நாங்க வாணான்றோம் நீ இன்னமோ திரும்பத் திரும்ப அவனுக்கோசரம் வக்காலத்து வாங்கறியே. அந்த பேச்சை வுடுப்பா.” “ சரி..சரி..மணி மூணு ஆச்சி. இப்ப குளிப்பாட்ட ஆரம்பிச்சால்தான் அஞ்சி மணிக்காவது சவத்தை கெளப்ப முடியும். நாவிதன், ஏகாலி, வந்துட்டாங்களா பாரு. போயி குளிச்சி முடியுங்க. டேய்! பணிச்சவனை தாரை ஊதச் சொல்லு.”—–அவர்கள் குளிக்கப் போனதும் அங்கே தாரை சத்தம் ரெண்டு தடவை எழுந்தடங்கியது. சவத்தை குளிப்பாட்டப் போகிறோம் என்று ஊருக்கு சமிக்ஞை. பங்காளிகள் வீடுகளைச் சேர்ந்த இளைஞர் படை ஒன்று மளமளவென்று கிணற்றிலிருந்து தண்ணீர் சேந்தி வந்து தெருவில் அண்டாக்களில் நிரப்ப ஆரம்பித்தார்கள். ஒரு தாம்பாளத் தட்டில் அபிஷேக சாமான்கள் ரெடியாக இருந்தது. ஊர் முக்கியஸ்தர்களில் ஒருத்தர் பெருந்தனத்திடம் வந்து

“இன்னாபா இந்த பசங்க சித்தப்பன் நாத்தமே உதவாதுன்னு அடாவடி பண்ணுதுங்க?.”

“இன்னா பண்ணச் சொல்ற?. இவங்க சித்தப்பனும் ரொம்ப ரோஷக்காரன். சுலுவுல இறங்கி வரமாட்டாப்பல. வந்தாலும் ஒருத்தரையொருத்தர் அடிச்சிக்குவானுங்கப்பா. ரெண்டு தரப்பிலேயும் ஆன்னா ஊன்னா கத்திய துக்கிடுவானுங்க. அந்த கூத்தை நாமல்லாம் பார்க்கலியா இன்னா?. சரி வுடு நமக்கு இன்னா கிரகச்சாரம்?. சாவு வூட்ல சண்டை வாணாம். ஆவற காரியத்த பார்ப்போம்.”

ஒரு பக்கம் ஓரமாய் அந்த வீட்டுக்கு பாத்தியப் பட்ட சம்பந்திகள் எல்லாரும் கூடி நின்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். சவத்தை எடுத்தப்புறம் ராத்திரி சாப்பாட்டு பொறுப்பு அவங்களுடையது. சம்பந்த சோறுன்னு சொல்றது. ஆதி நாளில் அரிசி பருப்பு முதற்கொண்டு எல்லாவற்றையும் வாங்கி, ஆக்கி பரிமாறுவது வரைக்கும் சம்பந்திகள் பொறுப்பு. இன்றைக்கு இத்தனை சாப்பாடு என்று ஓட்டலில் ஆர்டர் குடுத்திட்றது. செலவை பங்கிட்டுக் கொள்வது என்பது நடைமுறை சம்பிரதாயம். ஆனால் இன்றைக்கும் கொண்டான் குடுத்தான் வீட்டார்கள்தான் இருந்து பந்தி பரிமாறிவிட்டு போகணும். முருகானந்தத்தின் பிள்ளைகள் மூவரும் சோகமாய் உட்கார்ந்திருக்க, அவர்களுடைய தாய் மாமன்கள் இரண்டு பேரும் கிட்டே வந்தார்கள். “டேய்! மாதவா! மூணு பேரும் நாங்க சொல்றதைக் கேளுங்கப்பா. வாழ்வுல சேரலேன்னாலும் சாவுல சேரணும்னு சொல்வாங்கடா. உங்க சித்தப்பனுக்கு தகவல் சொல்லணும்டா. அவன் வந்தா நீங்க எதுவும் பேசவேண்டாம். கிட்ட கூட வரத்தேவல. நாங்க பார்த்துக்கறோம். வந்து பர்த்துட்டு போயிரட்டும். தடை சொல்லாதீங்க.” —-அதுக்கு இளைய புத்திரன்தான் பதில் சொன்னான். “மாமா! கம்னு போயிடுங்க. அந்தாளு வந்தான்னா ஒதை விழும். என்னைக்கா இருந்தாலும் பதிலுக்கு பதில் அவனை ஒதைக்காம வுட்ரதில்லைன்னு காத்துக்கிட்டு இருக்கோம். அது இன்னைக்கே நடந்திடும். ஆமா சொல்லிட்டோம். அந்த கம்மனாட்டி இங்க வரக்கூடாது. இனிமே யாரும் இந்த பேச்சை எடுத்துக்கிணு எங்க கிட்ட வராதீங்க. எந்த காலத்திலேயும் அந்த துரோகிய கிட்டே சேர்க்காதீங்கடான்னு எங்கப்பனே சொல்லிட்டு போயிருக்காரு ஆமா.”—மூவரும் ஆவேசமாய் கத்தினார்கள். அத்துடன் அவர்கள் நகர்ந்தனர். பெரியவன் மாதவன் நடுவிலவன் காதை கடித்தான்.

“டேய்! இந்த கெழவன்க பேச்சை நம்ப முடியாது. நம்ம சம்மதம் இல்லாமலே கூட அந்த ஆளை வரவழிச்சி விடுவாங்க. அப்படி ஒருக்கா வந்துட்டா மொத அடி உன்னுது புரியுதா?”

“சரிண்ணா.”

ஆயிற்று நாலு மணிக்கெல்லாம் சவத்தை வெளியே கொண்டு வந்து விட்டார்கள். “டேய்! தலை தெற்கு திசையில இருக்கணும். பெஞ்ச்சை வடக்கு தெற்கா போடுங்கப்பா.”—— பெண்களின் ஒப்பாரி கூடுதல் சத்தத்துடன் இருக்க சில பெண்கள் மாரடித்து அழ ஆரம்பித்தார்கள். காரியஸ்தர் ஒவ்வொரு சடங்காக சொல்லச் சொல்ல மூத்த பிள்ளை சிரத்தையாக செய்துக் கொண்டிருந்தான்.

“மொதல்ல தவலை தண்ணிய கால்ல இருந்து தலை வரைக்கும் சோர ஊத்துடா.”—ஊத்தியாச்சி.

“அடுத்து சிரசில் எண்ணை சீயக்காய் பொடி வைத்து தேய்த்து ஒரு குடம் தண்ணீர் ஊத்து. ஆச்சா?. அடுத்து மஞ்சள் தூளை தண்ணியில கரைச்சி அபிஷேகம் பண்ணி ஒரு குடம் தண்ணிய ஊத்துடா..”—அவரே மஞ்சள் பொடியை தண்ணீரில் கரைத்துக் கொடுத்தார். அது முடிஞ்சிது.

“அப்புறம் பாலை எடுத்து பாதத்திலிருந்து சிரசு வரைக்கும் அபிஷேகம் பண்ணு. ஆச்சா?. மேல ஒரு குடம் தண்ணிய ஊத்து. அப்புறம், தயிர் அபிஷேகம், அப்படி இல்லடா, தயிரை சிரசில வெச்சி தண்ணி ஊத்துப்பா. ஆச்சா? சீக்கிரம் அடுத்து கடைசியா இளநீர் அபிஷேகம்.”——அப்புறம் மேலே வெள்ளைத்துணி போர்த்தி சுற்றி, நெற்றியில் விபூதியை கனக்க பூசி, மேலே பன்னீர் போன்ற வாசனாதி திரவங்களை தெளிக்கச் செய்தார். தலைமாட்டில் ஊதுவத்தியை கத்தையாய் கொளுத்தி செருகினார். “டேய்! அந்தம்மாவை கூட்டியாங்க. இங்க பக்கத்தில உட்கார வைக்கணும். அவங்களுக்கும் தண்ணி ஊத்தி குளிப்பாட்டணும்.”—

“ஏம்பா! இந்த குளிர்ல அவங்க எதுக்கு? தலையில தண்ணி தெளிச்சிக்கலாம்பா.”

“ டேய்! யார்றா அவன் ஊஹும் சடங்கு சம்பிரதாயங்களை மீறக் கூடாது. முறைன்னு ஒண்ணு இருக்கில்ல?. உம் சீக்கிரம் சீக்கிரம். ஏம்பா! தாய் வூட்டு கோடி சேலை எங்கப்பா, யாரு போட்றது?.”

இந்த ஊருக்கே சாவு சடங்குகளை முழுசாக அறிந்தவர் வேதாச்சலம் அய்யாதான். ஊரிலே சாவு விழுந்தா யாருக்கு இல்லேன்னாலும் முதல்ல அவருக்குத்தான் செய்தி போகும். அவரும் தன் வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒரு சேவையாய் வந்து செய்வார். இரண்டாவது பிள்ளை அம்மாவை அழைத்து வந்து பக்கத்திலேயே ஒரு ஸ்டுல் பொட்டு உட்கார வைத்தான். அதன் பின் அவளையும் குளிப்பாட்டச் செய்தார்கள். முகத்தில் மஞ்சள் பூசி தலையில் மீண்டும் ஒரு குடம் தண்ணீர் ஊற்றினார்கள்.. அந்தம்மாவுக்கு அழகூட திராணி இல்லை, குளிரில் வெடவெடவென்று நடுங்குகிறது.. அடுத்து அந்தம்மா கையில் பூச்சரம் கொடுக்கப் பட்டது. யாரோ ஒரு வயதான விதவை ஒருத்தி வழி நடத்த, இட வலமாக புருஷனை மூன்று முறை சுற்றி வந்து அவர் பாதங்களின் மேல் பூ சாற்றி அப்படியே சரிந்து கணவன் காலைக் கட்டிக் கொண்டு குலுங்கினாள். பிள்ளைகள் மூன்றுபேரும் அம்மாவை நெருங்கி வந்து நின்று அழுதார்கள். எல்லாம் முடிந்தது. தாய் வீட்டு கோடியும் போட்டாச்சி. கடைசி தீபாராதனையையும் காட்டியாயிற்று. அடுத்து சவத்தை தூக்கி பாடையில் வைக்க வேண்டியதுதான் பாக்கி.

அந்நேரத்திற்கு திமுதிமு வென்று முருகானந்தத்தின் தம்பி கோபால் கூக்குரல் போட்டுக் கொண்டே மூச்சிரைக்க உள்ளே ஓடி வந்தான். குடும்பத்தோடு மூன்று நாட்கள் கொல்லிமலை டூர் போனவன் இப்போதுதான் திரும்பியிருக்கிறான். வந்தவன் விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் எல்லா மாச்சரியங்களும் பொசுங்கிப் போய் பாசம் மேலிட, ஓடிவந்திருக்கிறான். கூடவே அவனுடைய மனைவியும், இரண்டு பிள்ளைகளும் வந்து நின்றனர். இருந்தவர்கள் யாருக்கும் எதுவும் புரியவில்லை. என்ன நடக்குமோ என்ற அச்சம் எல்லோரிடமும் விரவியிருந்தது. முருகானந்தத்தின் பிள்ளைகள் மூன்று பேரும் கோபத்தில் திமிறிக் கொண்டு அடிதடிக்கு தயாராக நிற்கிறார்கள். வந்த சித்தப்பன் நெருங்கி அண்ணன் முகத்தை குனிந்து பார்த்தான். அவ்வ்ளவுதான் ஒரு நிமிஷம் வாய் கோணிக்கொள்ள மாறுகண்போல வித்தியாசமாய் பார்த்தான். மூச்சு திணறலாக க்கே.கே.கே என்று பெருசாய் ஒரு கேவல், அவ்வளவுதான் தடாலென்று மயங்கி கீழே விழுந்தான். சுற்றியிருந்தவர்கள் ஓடிப் போய் அவனை புரட்டிப் போட்டார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்து அவனுடைய ஆவேசத்தை தணித்தார்கள். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவன் அண்ணன் காலை பிடித்துக் கொண்டு கதறி தீர்த்து விட்டான். மாலை மாலையாய் கண்ணீர் வடிகிறது.

“ஐயோ அண்ணா! பத்து வருசமா துரோகியா தூர நின்னுப்புட்டேனே. பழசையெல்லாம் நினைச்சிப் பார்க்காத துக்கிரியா பூட்டனே. அப்பிடி இன்னாத்த சாதிச்சிப்புட்டேன்?. ஐயய்யோ! எணா…எணா…! “— பட் பட்டென்று முகத்தில் அடித்துக் கொண்டு அழுதான். சுற்றிலும் உட்கார்ந்திருந்த பெண்கள் அழுகுரலும் இப்போது உயர்ந்தது.

“பாருண்ணா! புத்தி கெட்ட கோபாலு பாவி வந்திருக்கேண்ணா.”—அவனுடைய அழுகை நிற்கவில்லை. பாதாதிகேசம் அண்ணனை தடவிக் கொண்டேயிருந்தான்.. நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. அப்புறம் சவ அடக்கத்துக்கு இருட்டிவிடும். சுற்றிலும் இருந்தவர்கள் அவசரப் பட்டார்கள். வேதாச்சலம் கையமர்த்தினார்.

“கொஞ்சம் பொறுங்கப்பா, பத்து வருச துக்கம் கொதிச்சி அடங்கட்டும்.”—– யாரோ ஒருத்தர் வற்புறுத்தி தள்ளிவிட இப்போது அந்த மூன்று பிள்ளைகளும் சித்தப்பனை நெருங்கி நின்றார்கள். பார்த்துவிட்டு அவர்களை கட்டிக் கொண்டு அழுதான். தன் அண்ணியைப் பார்த்துவிட்டு தலைதலையென்று அடித்துக் கொண்டு அழுதான்.

“உங்களையெல்லாம் மறந்துட்டு வெட்டி ஜம்பத்துக்கு வெலையாயிட்டேண்டா. எல்லாரும் இந்த சித்தப்பனை மன்னிச்சிடுங்கடா…” ——தூரமாய் நின்றிருந்த தன் இரண்டு பிள்ளைகளைப் பார்த்துவிட்டு உரக்க

“ என் கப்பலே கவுந்து போச்சிடா. இன்னமும் ஏண்டா நமக்கு வெடாசு?. வாங்க.”—-இப்போது இரண்டு பிள்ளைகளும் வந்து தங்கள் பெரியப்பா பிள்ளைகளோடு சேர்ந்துக் கொண்டார்கள். அவருடைய மனைவி ஏற்கனவே ஓரகத்தியின் பக்கத்தில் போய் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.. பிள்ளைகள்ஒருத்தரையொருத்தர் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். ஆனாலும் முருகானந்தம் பிள்ளைகள் மட்டும் அரை மனதோடு இறுக்கமாகத்தான் நின்றார்கள். அந்நேரத்திற்கு காரியஸ்தர் வாயைத் திறந்தார். “ஏம்பா கோவாலூ! சாவுல நீங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்தது எங்களுக்கெல்லாம் சந்தோஷம். எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க சவத்த கெளப்பணும். லேட்டாவுது. ஏண்டா சாமிநாதா! மசமசன்னு நிக்காத நெய்பந்தத்துக்கு குரல் குடு.”— இப்போது நாவிதன் உரக்க குரல் கொடுத்தான். “ நெய்ப்பந்தம் புடிக்க பாத்தியப் பட்டவங்கள்லாம் வந்து புடிங்கய்யோ.”—இது உறவுகள் நெய்பந்தம் பிடிக்கும் சடங்கு. வேதாச்சலம் அய்யா உரக்க குரல் கொடுத்தார்.

“ எல்லாருக்கும் சொல்றேன். புள்ளைங்க, பேரப் புள்ளைங்க, பேத்திங்க, வூட்ல பொறந்த பொண்டுங்க, ஒருகால் விட்ட பொண்டுங்க பங்காளிங்க, ஒருகால் வுட்டவங்க, எல்லாருக்கும் கொளுத்திய நெய்பந்தங்களை சாமிநாதன் தர்றான் பாரு. அதை புடிச்சிக்கிட்டு சவத்தை மூணு தபா இடவலமாக சுத்தி வரணும். அப்புறம் எல்லா பந்தங்களையும் கொள்ளிச்சட்டியில் போட்டுட்டு சவத்தின் கால்மாட்டில் விழுந்து கும்பிட்டு முடிக்கணும். தெரிஞ்சிதா?. சீக்கிரம் சீக்கிரம்.”——- எல்லாரும் அழுதபடி சுற்றி முடித்தார்கள். இடுகாட்டுக்கு வரமுடியாதவர்களுக்காக அங்கியே வாய்க்கரிசி போடும் சடங்கை நடத்தி முடித்தார்கள். அப்புறம் காரியஸ்தர் சொற்படி பிள்ளைகளே சேர்ந்து சவத்தை தூக்கிக் கொண்டு வந்து பாடையில் வைத்தார்கள். பெண்களின் அழுகைச் சத்தம் கூடியது. சிலர் கீழே விழுந்து புரண்டு அழுதார்கள். உறவுப் பெண்கள் பாடையை இடப்பக்கமாக மாரடித்துக் கதறியபடி மூன்று முறை சுற்றி வந்து பின்பு ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

ஆயிற்று மூத்த பிள்ளை குளித்து முடித்து ஈர வேட்டியுடன் கொள்ளிச் சட்டியை முன்னே பிடித்துக் கொண்டு செல்ல ஊர்வலம் கிளம்பியது. வழிநெடுக ஒப்பாரி பாடல் கேசட் ஓடிக்கொண்டிருந்தது. தெருக்கோடி வரையிலும் ஏகாலிகள் பாதையில் துணிகளை விரித்துக் கொண்டே செல்ல, அதன் மீது ஊர்வலம் நகர்ந்தது. பறையின் உச்சகட்ட சத்தத்தில் ஊர் அதிர்ந்தது. ஒருத்தர் ஒரு முறத்தில் அரிசி பொரியை வைத்துக் கொண்டு வழியெங்கும் இறைத்தபடியே சென்றார். பாடையில் தொங்கும் பூமாலைகளை உறவினர்கள் வழியெங்கும் பிய்த்து போட்டுக் கொண்டே சென்றனர். சித்தப்பனும், அவர் பிள்ளைகளும் பாடையையொட்டி நடந்தார்கள். இடையில ஒருதடவை காரியஸ்தர் வேதபுரி அய்யா வந்து பாடையை ஒருபக்கம் தோள் கொடுத்துக் கொண்டிருந்த நடு பையனிடம் கிசுகிசுப்பாய் எதையோ சொல்ல, அவன் வேண்டா வெறுப்பாய் தன் சித்தப்பனுக்கு தோள் மாற்றி விட்டு நகர்ந்தான்.

ஆயிற்று சுடுகாடு வந்தாயிற்று. அரிச்சந்திரன் கோயில் எதிரில் பாடையை இறக்கினார்கள். சற்று தூரத்தில் சிதைக்காக விறகுகள் அடுக்கப் பட்டிருந்தன. அரிச்சந்திரன் கோவிலின் முன் அரிச்சந்திரன் அகவலை வெட்டியான் சொல்ல ஆரம்பித்தான்.

நீரால் அடியேன் நெடுங்கால் பறவியே,தீராமணியே திருமால் மகன் தோன்றி, உலகம் தோன்றி, ஊர் தோன்றி, ஊருக்கு வடக்கே காளி கோயில் தோன்றி, ஊருக்கு மேற்கே பெருமாள் கோயில் தோன்றி ஊருக்குக் கிழக்கே திருபனை சாற்ற சாம்பவன் கோயில் தோன்றி பூவு தோன்றி, புஷ்பம் தோன்றி . . . .

அடுத்து சித்தப்பன் ஒரு பக்கம் கை பிடிக்க, பாடையை சிதையருகே தூக்கிச் சென்று, சிதையை மூன்று சுற்று சுற்றி கீழே வைத்தார்கள். படையல் போட்டு எல்லாச் சடங்குகளையும் முடித்து தீபாராதனை காட்டி சவத்தை சிதையில் வைத்தார்கள். தோள்மிது பானையில் தண்ணீர் சுமந்தபடி

கொள்ளி வைக்கும் பிள்ளை மூன்று சுற்று சுற்றி வந்து பானையைப் போட்டு உடைத்து விட்டு நிற்க, வேதாச்சலம் அய்யா குரல் கொடுத்தார்.

“வாய்க்கரிசி போட்றவங்கள்லாம் வந்து போடுங்கப்பா. சீக்கிரம் கீழ்க்காத்து ஓட்டுது.” ——எல்லாரும் வரிசையாய் வந்து வாய்க்கரிசி போட்டுவிட்டு நகர அடுத்ததாக சவத்தின் கால்களை பிணைத்திருந்த கட்டுகளையும், இடுப்பு அரைஞான் கயிற்றையும் அறுத்து விட்டார்கள். இன்னும் சித்தப்பன் நினைத்து நினைத்து அழுதுக் கொண்டிருந்தான். அப்புறம் சவத்தின் மேல் விறகுக் கட்டைகள் அடுக்கப் பட்டன. வேதாச்சலம் அய்யா கவனித்துவிட்டு சிதை அடுக்கினவர்களை அதட்டினார்.

“டேய்! நெஞ்சாங்கட்டைய வெக்கலியா?. இன்னாடா வேலை செய்யறீங்க?.—-பூதவுடல் நெருப்பில் எரியும் போது முன்பக்கமாக வளைந்துக் கொள்ளும். அதைத் தடுப்பதற்காக கனமான விறகு திம்மை ஒன்றை மார்பின்மேல் வைப்பார்கள். அதை நெஞ்சாங் கட்டை என்பார்கள். அடுத்து எல்லா உறவுக்காரங்களும் கதற மூத்த பிள்ளை சிதைக்கு நெருப்பு வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான். கூடவே துணைக்கு அவன் மச்சான்.. வந்த கும்பலும் ஆற்றில் தலைமுழுக கிளம்பியது. வேதாச்சலம் அய்யா உரக்க குரல் கொடுத்தார்.

“யாரும் போவாதீங்கப்பா. ஒரு நிமிசம் இங்க வாங்க.”—-எல்லாரும் கூடினர். கொள்ளி வைத்து விட்டுச் செல்லும் மூத்த பிள்ளையும் நின்றான்.

“ஏம்பா! மாதவா! இத்த நாம வூட்ல போயி உக்காந்துதான் பேசணும். நான் ராத்திரிக்கு சென்னை கிளம்பறேன். வர ஒரு வாரம் ஆயிப்புடும். அதான் இங்கியே சொல்லிட்றேன். நாளைக்கு காத்தால எல்லாரும் வந்து பால் வெச்சிடுங்க. அப்புறம் திதி பார்த்து தேதிய குறிச்சி வெச்சிட்டேன். உயிர் வுட்ட பதினஞ்சாம் நாளு சனிக்கிழமை நடப்பு, பதினாறாம் நாளு ஞாயிற்றுக் கிழமை கருமாதி. மாதவா! இன்னா சொல்ற?.”— மூத்தவன் சற்று நேரம் மவுனமாக நின்றான். அப்புறம் வாயைத் திறந்தவன் தம்பிகளை பார்த்துவிட்டு தயங்கி சொன்னான்.

“ எங்க சித்தப்பாவை கேளுபா.”— சித்தப்பன் முன்னே வந்து நின்றான்.

– கணையாழி நவம்பர்2019 இதழில் பிரசுரமான கதை.

Print Friendly, PDF & Email
நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள் என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய…மேலும் படிக்க...

1 thought on “மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *