மரணம் எனும் ஜனனம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 12,242 
 
 

நீர்க்குமிழியின் வட்டத்துள் தான் ஈன்ற ஆசாபாசங்கள் வந்து எட்டிப் பார்ப்பதை தன்னால் உணர முடிகிறது. பேச நா எழவில்லை. முதல் தொப்புள் கொடி அறுத்த மூத்த மகன் நெஞ்சு வலியோடு வந்து நின்னு கண்ணீர் வராது வற்றிப் போய் தன்னைப் பார்ப்பது ரொம்பவும் அவஸ்தையாயிருக்கிறது. “கவலைப்படாதே… நீ காலத்தோடு முந்தி நிற்பாய்’ என்று கைகளால் ஆதரவுடன் தொட்டுப் பேச மனசு துடிக்கிறது.

காலக் கொடுமை என் மூக்கில் மூன்று நான்கு பெரிதும் சிறிதுமான குழாய்கள். வாய் வழியே காற்று கால்பந்தாடிக் கொண்டு சென்று வருகிறது. கைகள் அசைக்க முடியவில்லை. உள்ளே நரம்பினுள் ஏதோ கரப்பான் பூச்சிகள் கைகொட்டி சிரித்து ஓடுவது போல் தெரிகிறது. கண்களின் இமைகள் “அடக் கடவுளே பாறாங்கற்களை வைத்தா செய்திருப்பார்கள்’. மூடித் திறக்க வாலி பலம் தேவைப்பட்டது.

மரணம் எனும் ஜனனம்கட்டிலுக்கு அருகில் என்னைப்போல் ஒரு தாய், மகன் திட்டி விட்டு சோறு போட மாட்டேன் என்று சொன்னதால் பாலிடால் குடித்து விட்டு வந்து அவஸ்தைப்படுகிறாள். மற்ற மூவர் ஐ.சி.யூ.வில். ஆண்கள் என்ன விவரம் என்று கேட்கத் தோன்றவில்லை.

நர்ஸ் ஏன் இப்படி கெடுபிடி செய்து எல்லாரையும் விரட்டிக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை. “என்னைப் பாதுகாப்பதாய் நினைத்து வந்தவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாள், பாவம்’.

புதுவை ஜி.எச்.சில் நானிருப்பதுதான் அதிமுக்கியத்துவ ஐ.சி.யூ. வார்டு. சாத்துக்குடி ஜூûஸக் குழாயில் செலுத்துகிறார்கள். ம்…இதை நான் நன்றாக இருக்கும்போது, கையில் சொந்தங்கள் கொடுத்திருந்தால் அழகாக உரித்து நாலு பேருக்கும் கொடுத்து நானும் சாப்பிட்டிருப்பேன். அது அடுத்த ஜென்மத்திலாவது நடக்குமா?…

என்ன இது கண்களில் ஏழெட்டு வண்ணங்கள் திரை போட்டு வந்து போகிறது. காகங்கள் அருகில் அதில் அமர்ந்து என்னிடம் ஏதோ சொல்லி கரைகின்றன. அட.. ஆமாம்.. அந்த காகத்தில் ஒன்றாய்.. கொஞ்சம் கொஞ்சமாய் என் முகம் மறைந்து காகம் ஆகி.. ஓ… பித்ருக்களாகிறேனோ..!

சுடுகாடு தெரிகிறதே.. கடற்கரை ஓரம் டூ வீலர் போய் மணல் அழுத்திய இடம்… ஆ.. ஆமாம். நானிறந்து புதைத்த மறு நாளேவா இந்த அடையாளம்.

மூன்றாம் நாள் கூட இல்லையா? புதைத்த ஐந்து நிமிடங்களில் போவது போல் போக்கு காட்டி வந்து பாலூற்றி சடங்கு செய்து காலத்தை சேகரிக்கிறார்களோ? வடை, இட்லி, பலகாரம்… நிறைய.. நான் பசித்த போது எங்கே கிடைத்தது. “இருங்கள்… இதோ யாரோ இறந்த சமாதியின் மேல் வைத்து இரண்டாவது மகன் கத்தி அழைக்கிறான். வயிறார சாப்பிட வேண்டும்.. சாப்பிடும்போது வந்து உட்கார்ந்த பித்ருக்கள் “நீ கொடுத்து வைத்தவள்’. “எங்களுக்கு இது கூட இல்லை. எல்லாம் ஓட்டலிலிருந்துதான் வந்தன’ என்று ஆசுவாசப்படுத்திவிட்டுச் சென்றனர்.

கொஞ்சம் மங்கலாகி “”இதென்ன வீட்டில் கூட்டம்.. தனது சிறிய போட்டோவை வைத்து படையலிடுகிறார்களோ… தன் தாய் வீட்டு விட்டுப் போன உறவில் ஒரு பையன் வந்து நின்று கும்பிடுகிறான். எனக்குக் கண்ணில் நீர் வழிகிறது. வேர்வையாய்… செத்தால்தான் தாய் வீட்டு உறவா?”

மின்னல் வெட்டாய் நீர்க்குமிழியில் திவசம் நடத்துவது தெரிந்தது. ஒப்புக்காக வீட்டுக்கு ஒருவராக, ஆணோ, பெண்ணோ வந்து பந்தலில் நாற்காலியில் அமர்ந்து விட்டு கண் கலங்கி சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.

என்ன சம்பிரதாயம் இது! சாவுக்கும், கல்யாணத்துக்கும் மட்டும் கூடும் உறவில் என்ன லாபம்? அரைகுறை வேக்காட்டில் சாப்பிட்ட திருப்திதான் வாழ்வில். நானிருந்தவரை எவரையும் “போ’ என்று சொன்னதில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறவை சேர்த்துக் கொள்ளத் துடித்தேன். அக்கம்பக்கத்தார் ஏசி மகிழ்ந்ததுதான் மிச்சம்.

ஏன் இப்படி, “நானிருக்கிறேனா? இல்லையா?’ என்று இரண்டு மிஷின்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன, சித்தி புத்தியைப் போல்….

கவலையோடு இருக்கும் மற்றவர்களுக்கு “நானிருக்கிறேன். இன்னும் வேளையிருக்கிறது’ என்று சொல்ல அரை மணி நேரம் பிரயத்னப்பட்டு, ஆன்மபலம் காட்டி, மலையைத் தூக்கிப் புரட்டுவது போல் முயற்சித்து கண்ணை திறந்து, லேசாக காலை அசைக்கிறேன்…

நர்ஸ் பதட்டமானார்.. “நினைவு வருது குட்..ரெஸ்பான்ஸ் சார்.. நாலு நாள் கழிச்சு சக்ஸஸ்…’ என… என் மூத்த மகன் கண்களில் மடை திறந்த கண்ணீர்.. போன் கால்கள் பறக்க சொந்தபந்தம் எல்லாம் ஆசுவாசப்பட்டு பேசுவது புரிந்துகொள்ள முடிகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல் புறா படிப்பது பிடித்தமானது எனக்கு. அதில் ஒரு குதிரையின் மீதேறி மகனையும் அமர்த்திக் கொண்டு உலகைச் சுற்றி வர கழுத்து வரை ஆசை முட்டுகிறது.

மரண அவஸ்தை… ஜனிக்க வேண்டும் மீண்டும். சாவது பிடிக்கவில்லை. எதற்காக நான் சாக வேண்டும். பன்னிரெண்டு வயதில் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, ஐந்து வருடத்துக்குப் பின் ருதுவாகி பிள்ளை பெற்று ஐந்து குழந்தைகளுக்குத் தாயாகி, புருஷன் சம்பாதிக்க முடியாமல் “தேமே’ என்று திண்ணையில் அமர்ந்து “பெட்டிக் கடை வியாபாரி’ என்ற பெயரில் காலணா பிரயோஜனமில்லாத போதும், ஜாக்கெட் தைக்க ஆரம்

பித்து கூலி வேலை செய்து பிள்ளைகளைக் கரையேற்றி, அவர்களுக்குப் பேரன், பேத்திகளும் பிறந்து இதுவரை அவர்களுக்கும் ஜாக்கெட் தைத்துக் கொடுத்து கை கால் வராமல் ஓய்ந்து போக- “அட எனக்காக இனி உட்கார்ந்து பேச, படிக்க வாழ்க்கை தேவையில்லையா?… எனக்கென்று எந்தக் கனவும் இருக்காதா?

பார்த்துப் பார்த்து சமைத்துப் போட்ட எனக்கு வாயாற யாராவது ஒரு வாய் சோறு போட்டு நான் சாப்பிட ஆசையிருக்காதா?

நான் வாழ வேண்டும். வாழ்வது இனிதான். எதற்கு எழுபத்தெட்டு வயது என்று சொல்கிறார்கள். எனக்கு வயது இப்போதுதான் தொடங்கப்பட வேண்டும்.

என் இதயத்துக்குள் கூடு கட்டியிருக்கும் ஆசாபாசங்கள் எழுந்து கை, கால் முளைத்து இனிமேல்தான் நடமாட வேண்டும்.

நிர்மலமாய் வந்து வண்ணக்குமிழி காட்டி அசர வைக்கும் இந்த வண்ணங்களைத் தூரப் போகச் செய்ய மட்டும் இந்த நர்ஸ், டாக்டர் உதவி செய்தால் போதும். நான் எழுந்து நடமாடி “எப்படி வாழ்கிறேன் பார்!’

வள்ளலார் கோயிலுக்குச் சென்று வந்த அனுபவத்தில் எனக்குள் ஜீவ ஒளி பிரகாசிக்கிறது. எழுந்து ஒரு வயதாகும்போது சொந்த பந்தங்கள் நடுவே நான் அப்பழுக்கற்ற அருள் ஜோதிப் பிரவாகமாய் ஜொலிப்பேன். “யாருக்கு நான் இம்சை செய்தேன்?’

எனக்குள் எழும் எண்ணங்களைக் கோர்க்கத்தான் நர்ஸ் உதவி செய்ய வேண்டும். அதற்காகத்தான் இம்முறை கண்கள் திறந்து சைகை செய்கிறேன். அவளுக்குப் புரியவில்லையோ? என் பெரிய மகளை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்துகிறாள்.

“கண்கள் வீங்கி அழுதபடி’ “ஏன்?’ இவளைப் படிக்க வைக்க நான் வாத்தியார் வீட்டுக்கு எத்தனை முறை நடந்திருப்பேன். புலவர் கோர்ஸில் படித்துவிட்டு வரன் வர திருமணம் செய்தேன். வந்தவர் மகளைவிட குறைவான படிப்பு. படிப்பா முக்கியம்? பணமா முக்கியம்? தன்னம்பிக்கை உள்ளவர். பாசத்துக்காக ஏங்கியவர். இப்போது நல்லபடியாக குடும்பம் உள்ளது. பிறகேன் அழுகிறாள், பிள்ளை, சொந்த வீடு, மற்றவர் மதிக்கும் உயர்வு. பிறகென்ன? டேய் பேரன் நீ சோகப்படாதே.. நான் பிறக்கப் போகிறேன். உன்னோடு கை கோர்த்து ஓடப்போகிறேன்…

முடியவில்லை, மூச்சை எவனோ கயிறு கட்டி எருமாடு கணக்காய் இழுக்கிறான். ம்… இப்போது நீர்க்குமிழிப் போராட்டமில்லை. கொஞ்சம் உடல் மட்டும் கனக்கிறது.

யாரோ காதில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். அப்புறம் முறத்தை எடுத்து வீசுவது போல் காற்றில்

வார்த்தைகளை நிரப்பிக் கொட்டுகிறார்கள். அது லேசாய் ஒதுக்குப்புறமாய் கவிழ்கிறது.

“”ம…க…ன்…வந்…திரு..க்…கான்…கண்…திற…ந்து…பாரு…ங்க…”

முழு பலத்தையும் ஒன்று கூட்டி சடாரென இமையைத் தூக்கி நிறுத்துகிறேன். வாயில் ஏதோ திரவமெடுத்து வைக்கிறான். இவ்வளவு பெரிய தண்ணீர்க் கட்டியா?… முடியவில்லை. மோதுகிறது தொண்டையில்.

மடி…யார் மடி… ஓ..மூத்த மகளா? எதுக்கு இது? அவளும் ஒரு தண்ணீர்க் கட்டி… ஏற்கெனவே கஷ்டம்… இது வேறயா?

நர்ஸ் ஏதோ அவர்களிடம் சொல்கிறாளே. “”அவங்க ஆசை நீங்க விட்ட தண்ணில திருப்தியாயிடும். நிம்மதியா போவாங்க. உங்களால என்ன முடியுமோ? அதை இருபது நாளா பாத்துக்கிட்டீங்க… இப்படி ஒரு பசங்களையும், சொந்தத்தையும் என் சர்வீஸ்ல பார்த்ததில்லே…” இன்னும் ஏதோ அள்ளி விட்டுக் கொண்டிருந்தாள்.

“அடிப் பாவி. ஏன் இப்படி.. நான் நல்லா இருக்கிறேன். பிறக்கப் போறேன் இப்பதான். என் மனசுல இருக்கிற ஆசையை பக்கம் பக்கமா படிச்சு இப்பதான் நிறைவேத்தப் போறேன். பசங்க கிட்ட எதுக்கு தேவையில்லாம பொய் சொல்றே…’ நான் இப்ப எழுந்து நடக்கப்போறேன்… ஆமா.. என்று சொல்ல வயிற்றுக்குள் இருக்கும் வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு தள்ளிக் கொண்டு தொண்டையைத் தாண்டும்போது… அய்யோ… இந்தத் தண்ணீர்க் கட்டிகள் குறுக்கே… ஆனமட்டும் தள்ள முயற்சித்து பலத்தை எல்லாம் கூட்டி… ரத்த நாளங்களின் துணையோடு எம்பி நிற்கிறேன்.

அட.. வார்த்தை நசுங்கி தூள் தூளாகி உள்ளேயே போய்க் கொண்டிருக்கிறது. யாராவது வந்து தடுத்து நிறுத்துங்களேன். என்னால் இயலவில்லை. என் தவத்தாலும் முடியவில்லை. பிறக்கத் துடிக்கும் மனசுக்கு யாராவது வந்து ஒரு கை கொடுத்தால் புண்ணியமாய்ப் போகும்.

புண்ணியம் செய்தன மனமே… யார்… யார்… யாருமில்லையா? அட… நீர்க்குமிழ்கள் மேகங்களாய்த் திரண்டு கண்கள் மேல் வேகமாய் மோத வருகிறதே… கண்ணா… நீ வந்து தடுத்து நிறுத்து.

“நான் நிறைய பார்க்க வேண்டும். வாழ்ந்த பகுதிகளின் எல்லை தாண்டி மீண்டும் புதிதாய் வாய்ப்பில்லையா? ……இவர்கள் எல்லாம் சுற்றி பார்க்கிறார்களே நான் ஜனிப்பதற்கில்லையா?’

“ஆ….’

எல்லோரும் அழுகையை பரப்பினார்கள். எனக்குப் பிறக்க ஆசைப்பட்ட நெஞ்சக்குழியின் மீது…!

எங்கோ பித்ருவின் கரைசல்..

“”கா..கா..கா…”

ஒன்று சேரவா?

ஒன்றுபடுத்தவா?

அட… அது…அது… பித்ரு… நான்தானா?

ய்

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *