மன அழகு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 1,858 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெண் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்ததும், “ஏண்டா, அந்தப் பெண்ணுக்கு என்ன குறை என்று வீட்டிலே போய் பதில் சொல்கிறோம் என்று சொல்லி விட்டு வந்தாய்” என்றாள் கணேஷின் அக்கா பத்மினி.

“அந்தப் பொண்ணு முகத்தைப் பார்த்தாயா? கல்யாணம் முடிந்த பிறகு வெளியே எங்கேயாவது நாலு இடத்திற்கு கூட்டிண்டு போக முடியுமா?”

“அடப் போடா. ஏதோ ஒரு ஆஸ்பத்திரியிலே வேலை செய்றது. நர்ஸ் வேலை. மாசம் மூவாயிரம் சம்பளம். இந்தக் காலத்திலே இவ்வளவு. அடக்கமான பொண்ணு பார்க்கவே முடியாது” என்றாள் அம்மா.

“உங்களுக்கெல்லாம் பிடித்துப் போனதற்காக நான் அவளை ஒண்ணும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீங்கள் ஒழுங்கா எனக்கு கொஞ்சம் பார்க்க லட்சணமா ஒரு பொண்ணைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு வெளியே போனான் கணேஷ்.


ராஜேஷின் அம்மாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருந்தார்கள். அவளுக்கு பிளட் பிரஷர் எகிறிக் கொண்டிருந்தது. ராஜேஷ் லீவு போட்டு அம்மாவுடன் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

“ஏன் சார். நாங்கள் இவ்வளவு கனிவாகப் பார்த்துக் கொள்கிறோமே. எங்கள் மேல் நம்பிக்கையில்லாமல் லீவு போட்டுக் கொண்டு இப்படி அம்மாவின் முந்தானைக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறீர்களே” என்று சிரித்தாள் நர்ஸ் சந்தியா.

“இல்லை சிஸ்டர். நீங்கள் இவ்வளவு பொறுமையாக கனிவாக கவனமாகப் பார்த்துக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை” என்ற போது “நர்ஸ் இங்கே வாம்மா. இவ்வளவு கனிவா பேச எங்கேம்மா கத்துக் கொண்டாய்” என்று அருகில் அழைத்தாள் ராஜேஷின் அம்மா.

“அம்மா நாங்கள் வேலை செய்வதாக எப்போதுமே நினைக்கக் கூடாது. பிறரின் பிணியைத் தீர்க்கும் சமூக சேவகியாகத் தான் இருக்க வேண்டும் என்று எங்கள் குரு அடிக்கடி சொல்வார். அப்படி செய்யும் போதுதான் ஒரு மனிதனின் நோயும் விரைவில் குணமடையும்.”

சரி. மாத்திரை சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கம்மா என்றவாறு மாத்திரைகளை எடுத்துத் தந்திவிட்டு நகர்ந்தாள் நர்ஸ் சந்தியா.

கொஞ்ச நேரம் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த ராஜேஷ், யாரோ வருவதை நிமிர்ந்து பார்த்த போது கணேஷ் வந்து அமர்ந்தான்.

“என்னடா அம்மாவிற்கு இப்போது எப்படி இருக்கிறது?”

“பரவாயில்லை”

“டாக்டர் என்ன சொன்னார்?”

“நாளைக்கு டிஸ் சார்ஜ் பண்ணி விடலாம்னார்” என்று ராஜேஷ் அசிரத்தையாக சொன்ன போது பக்கத்து அறையிலிருந்து வந்த சப்தம் கணேஷை ஈர்த்தது.

“நர்ஸம்மா உங்களுக்குக் கோடி புண்ணியம். நீங்க என் புள்ளையை இவ்வளவு நல்லாக் கவனிச்சிட்டதால தான் சீக்கிரமா சொகமாயிட்டான். சாகப் போற பிள்ளையை திருப்பிக் கொடுத்தியே.

அவன் மருந்து சாப்பிட அடம் பிடிச்ச போது கூட எவ்வளவு பொறுமையாக மருந்து கொடுத்தே.

அவன் உன் முகத்திலே துப்பின போது கூட எவ்வளவு அமைதியாக முகத்தைத் தொடைச்சிட்டு ஊசி போட்டே மவராசி. ரொம்ப நல்லாயிருக்கணும்” என்றாள் அந்தம்மா.

“யாருடா அந்த நர்ஸ்” என்று கேட்டான் கணேவு ராஜேஷிடம்.

“உண்மையிலே இவ்வளவு பொறுமையும் கனிவும் அமைதியுமா பணிவிடை செய்கிற நர்ஸை பார்த்தில்லைடா” என்றான் ராஜேஷ்.

“அந்த நர்ஸ் பேரென்னடா”

“சந்தியா”

“என்னது..” வேகமாக எழுந்து பக்க அறையில் போய் அந்த நர்ஸைப் பார்த்த கணேஷ் அப்படியே திகைத்து போனான்.


வீட்டிற்கு வந்தவன், “அம்மா நாம் பார்த்த நர்ஸ் பெண்ணை எனக்குப் பேசி முடியுங்கள்” என்றான்.

“இவனுக்கு திடீரென்று என்னாயிற்று” என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றனர் கணேஷின் அம்மாவும், அக்காவும்.

– 18.8.1996

Print Friendly, PDF & Email
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *