கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2024
பார்வையிட்டோர்: 942 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருவரும் வண்டியிலிருந்து இறங்கும்போதே, நான் மாடி ஜன்னலின் பின்னிருந்து இவர்கள் என்னை வாழ்விக்க வந்தவர்கள் என்று கண்டு கொண்டேன், எனக்கு இப்படித் தோன்றுவானேன் என்று கேட்டால் என்ன சொல்வேன்? கல்கத்தா கரண்டி கைநழுவித் தரைமீது விழுந்ததும் எழும் கிண்கிணிக்குத் தனிக் காரணம் ஏது? அந்தத் தற்செயல்தான் காரணம். 

“வா, வா; மாமிக்கு நமஸ்கரி! இன்னும் ஜோடனை முடியவில்லையா? அவாளுக்கு வண்டிக்கு நேரமாச்சே!” 

இரண்டு கைகளிலும் டிபன் தட்டுகளுடன் அம்மா, அப்போதுதான் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். 

”நன்னாயிருக்கு உங்கள் தமாஷ்! பெண்ணைப் பார்க்க வந்தவாள் வந்தவுடனே வந்தவாளிடமே அவா போறதைப் பத்தி ஞாபகப்படுத்தறது!” 

“அப்படின்னா, அப்படின்னு அர்த்தமாடி? உங்கள் சுபாவத்தைத் தெரிவிச்சேன்-” 

“உங்கள் சுபாவத்தை என்ன சொல்லவாம்? நீங்கள் எப்போ விளையாடறேள், எப்போ வினை பேசறேள்னு உங்கள் இடக்கு எங்களுக்கே இன்னும் புரியல்லியே, சம்பந்தம் பண்ண வந்திருக்கறவாளுக்குப் புரிஞ்சுடுமா?” 

மழையில் நனைந்த -குருவிபோல் கேலி வருத்தத்தில் அப்பா தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டதும் வந்தவர்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது. 

“உங்கள் தர்க்கம் எதுவோ. ஒண்ணு நிச்சயம். இந்த ரயில் தப்பினால் எங்களுக்கு மறு ரயில் இன்னிக்கு இல்லை” என்றார் மாமி. 

“ஜாடை தெரிந்து கோள்ளவேண்டும்.” 

“ஜடையை முன்னேயே தைத்திருக்கவேண்டும்” என்று அப்பா பாட ஆரம்பித்துவிட்டார். 

“ஏதேது, இதுவும் சங்கீதக் குடும்பம் போல இருக்கு! பேச்சே பாட்டாய் வரதே!” 

இதுதான் சமயம் என்று மடக்கின ஆட்டுக்குட்டி போல நான் உள்ளிருந்து ஓடிவந்து நமஸ்கரித்து நின்றேன், 

“வா, குட்டி,பக்கத்தில் உட்காந்துக்கோ. டே, சம்பத்! நன்னாப் பாத்துக்கோ. அப்புறம் ரயிலில் போற வழி யெல்லாம் அது சரியா, இது சரியான்னு என்னை அரிச் செடுக்காதே. உன் மன்னி சொல்லியனுப்பியதெல்லாம் ஞாபகப்படுத்திக்கொள். பெண்ணே, உனக்கும் அதே வார்த்தைதான். அவா பண்ணி வெச்சான்னு ரெண்டுபேரும் பெரியவாளைக் குத்தம் சொல்லிண்டிருக்காதேங்கோ.” 

மாமி ‘ஜாலி’ப் பேர்வழிதான். 

“என் பிள்ளை, நான் பெத்தது எனக்கு ராஜா. உன் கழுத்தில் கயிறு ஏறினப்புறம்தான், அவன் உனக்கு ராஜா. அதையும் சொல்லிப்பிட்டேன்.” 

அவருக்கு என்னவாம் குறைச்சல்? மாமிக்கே என்ன குறைச்சல்? ராஜாவைப் பெற்றவள் ராணியில்லாமல் தாதி யாவாளா? கூடத்தில் முன்னேரத்திலேயே கவிந்துவிடும் இருளைப் போக்கத் தட்டிவிட்ட மெர்குரி விளக்கு வெளிச்சத்தில் மாமி தக்காளிச் சிவப்பில் ரஸத்துடன் தகதகத்தார். 

”எங்கே, சுவாமிபேரில் ஒரு பாட்டுப் பாடேன்!” 

“பாட்டா. உஷ்! மூச்சு விடக்கூடாது!”- அப்பா உதட்டின் மேல் லிரலை வைத்தார். 

”என் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்க வந்ததிலிருந்து பாட்டு வாத்தியாருக்குத் தொண்டை அவர் ஜன்மத்துக்கும் கட்டிப்போச்சு! பாருங்கோ என எஜமானி என்னை முறைக்கிற முறைப்பை! அடியே! அடியே! ஜாக்கிரதை! ஏற்கெனவே துவாரபாலகி மாதிரி மேட்டு விழி, கொட்டிவிடப் போறது ! ஏன், குட்டை அவிழ்த்துவிட்டேன்னு கோபமா? நீ பின் குரல் கொடுத்து ஏமாற்றி விடலாம்னு பார்த்தையா? உன் குரலைத்தான் இவா வந்ததிலிருந்து கேட்டிண்டிருக்காளே!” 

அப்பா, அப்பா! உங்களுக்கு இரக்கமில்லையா? 

”சம்பத்துக்குப் பாட்டுன்னா உசிர். அவனே பாடுவான். வெந்நீருள்ளில் அவன் ஒரொரு சமயம் வெளுத்து வாங்கற கச்சேரியில், பின்னால் குளிக்கக் காத்திண்டிருக்கறவா பாடு லாட்டரி என்னடா சம்பத்!” 

“என் பெண் நன்றாய்க் கல்சட்டி, வாணலியெல்லாம் தேய்ப்பாள். வெங்காய சொஜ்ஜு வைப்பாள் பாருங்கோ, அடாடா, அமாவாசை, சனிக்கிழமை விரதங்கள் எல்லாம் கலைஞ்சுடும்” – அப்பா நாக்கில் ஊறிய ஜலத்தை ஸுர்ர் என்று உள்ளுக்கிழுத்துக் கொண்டார், 

மாமி காதில் வாங்கிக்கொண்டாரோ? தெரியவில்லை.

”என் மூத்த பிள்ளைக்கும் சங்கீதத்தில் நல்ல ஞானம், எங்காத்து ஆண்களுக்கே சங்கீதத்தில் பிரியம் ஜாஸ்தி.” 

‘இந்தாத்து மாமாவுக்கு சிறு தீனி சில்லுண்டியில் பிரீதி ஜாஸ்தி” – அம்மா இடைமறித்தாள். “இட்டிலி பாதின்னா சட்னி ஒண்ணேகால்; அப்புறம் டாக்டர் பில் 33” 

மாமி காதில் வாங்கிக்கொண்டாரோ? தெரியவில்லை. 

“போதும் போதாதற்கு மூத்தநாட்டுப் பெண் வந்து சேர்ந்ததும் முத்தாய்ப்பு வெச்ச மாதிரி ஆயிடுத்து. சாதம் கூடத் தாளத்துக்குத்தான் கொதிக்கிறதுன்னா பார்த்துக் கோங்கோளேன். மன்னியும் கொழுந்தனும் ஓசையை அப்படி அலசியிருக்கா. என்னடா சம்பத், அப்படித் தானே?” 

அவர் முகம் தழலாடிற்று. 

”மாமியார் மெச்சறேன்னு நினைச்சுக்கப்படாது. மற்ற தெல்லாம் எப்படியோ, என் நாட்டுப்பெண் பாட்டு கந்தர்வ கானம்தான். ஆள் பார்வைக்கும் பங்கரையில்லை. இத்தனைக்கும் சிக்ஷையில்லை. பிறவியோடு வந்ததுன்னு தான் சொல்லணும். சும்மா சொல்லக்கூடாது.” 

‘வாஸ்தவம்தானே! அஞ்சு விரலும் ஒரே மாதிரியா யிருக்கா?” என்று அப்பா தன் கையை அல்லாசாமி காட்டினார். கரணை கரணையாய் முடிச்சும் முறுக்கும் ஏறிய முரட்டு விரல்கள். எங்கள் விரல் பத்து பண்ணலாம். 

“பிள்ளையார் ஏதோ காத்திண்டிருக்காரே, தன் அம்மா மாதிரியே தனக்கு அமையணும்னு, அது மாதிரி சம்பத் தன் மன்னிபோல் தனக்கு வாய்க்கத் தவங்கிடக்கான். என்னடா சம்பத். அப்படித்தானே?” 

என் மனம் அதன் விளிம்பில் தத்தளிக்கின்றது. வாழ்க்கைப் படுதல், பரீக்ஷை தேறுவது இது எல்லாம் முதல் கல்லிலேயே மாங்காய் விழுந்தால்தான் மணத்தது. மன்னி: உன் பேரைச் சொல்லி என் வாழ்வு பறிபோகாமல் பார்த்துக் கொள், மன்னி! உன்னை நான் பார்த்ததில்லை. மானஸ மாய் உன் காலில் விழுகிறேன். மாமி இதயத்துள் புகுந்து அவர் மனஸை மாற்று. இந்த வரன் தவறி – வரிசை வரிசையாய் என்னை நாலு பேர் வந்து பார்த்துப் போய் அவர்கள் கண்ணெச்சிற் படாமல் என்னைக் காப்பாற்று- நான் கோரினது நடந்துண்டிருக்கா? மாமி ஏதோ பேசறாரே!” ஒண்ணிருந்தால் ஒண்ணு இல்லை. நீங்கள் சொன்ன மாதிரி அஞ்சு விரலும் ஒரே மாதிரியாயிருக்கா?” 

“லக்ஷத்தில் ஒரு வார்த்தை. அப்படியிருந்து விட்டால் உலகம் ஏது? அப்புறம் அதுவே என்னத்துக்கு?” 

”என் உயிர் ஊசலாடறது; நீங்கள் ரெண்டு பேரும் சிலம்பம் விளையாடிண்டிருங்கோ,” 

”இவனுக்கும் என் மூத்த பையனுக்குமிடையே எனக்கு மூணு பெண்கள். மூணு பேரும் பாட்டுன்னா வாய்ப்பாடு ஒப்பிப்பார்கள். மூணும் கணக்கில் புலி. 16×1=16…’ 

“My God!” 

மாமி காதில் வாங்கிக்கொண்டாரோ? தெரியவில்லை.

”ஆனால் கலியாணம் ஆகாமல் போயிடுத்தா? மூணும் அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் குடியும் குடித்தனமும் நடத்திண்டுதானிருக்கு” 

“இருக்கட்டும் இருக்கட்டும், பகவான் புண்ணியத்தில் இருக்கிற இடத்தில் சௌக்யமாய் இருக்கட்டும்.” – அப்பா பக்தியுடன் கரங் கூப்பினார். 

”அவாவாள் இருக்கிற இடத்தில்தான் இருக்கா.” மாமி என்னைப் பார்த்துக் கண்சிமிட்டினார். “அடி பொண்ணே, உங்க அப்பா பயப்பட வேண்டாம்; உனக்கு நாத்தனார் பிடுங்கல் இருக்காது” என்று அதற்கு அர்த்தம். 

இன்றைக்கென்றே தோட்டத்து மரத்திலேயே பழுக்க விட்டுப் பறித்து, ஒவ்வொரு முத்தாய் உதிர்த்துப் பழத்தட்டில் குவித்திருந்த மாதுளை விதைகள் தங்கள் ரஸமிகுந்த அர்த்தத்துடன் மாமிக்கு “ஒத்தான்சாய்க்’ கண் சிமிட்டின. 

“ஹும், நாங்கள் கிளம்பறோம். நிஜமாகவே நீங்கள் சான்ன மாதிரி ரயிலுக்கு நேரமாகிவிடும் போல் தானிருக்கு. அந்தத் ஊருக்குப் போய்த் தெரிவிக்கிறேன், எல்லாம் தையல்நாயகி புண்ணியத்தில் நான் நினைக்கிறபடி நேருவதா யிருந்தால். ஆனியிலேயே முகூர்த்தத்தைக் குறிச்சுடுவோம்.” 

அப்பா பேந்தப் பேந்த விழித்தார், “இதுதானே ஆனி?” 

“ஆமாம். இன்னிக்குத்தான் இரண்டோ மூணோ பதினைஞ்சு, இருவது வாக்கில்—” 

அப்பா அம்மாவைப் பார்த்தார். அம்மா அப்பாவைப் பார்த்தாள். மாமி எங்கள் மூவரையும் மாறி மாறிப் பார்த்தார். 

“அதுக்கில்லே-‘ என்று அப்பா தன் குரலை பாகு இழுத்தார். 

”எதுக்கில்லை?” _ மாமி முகத்தில் என்ன ஆச்சரியம்! எவ்வளவு பாங்கான பாசாங்கு பேசுகின்றது? 

“சில ஏற்பாடுகள் பண்ணவேண்டியிருக்கு” என்று அப்பா முனகினார். 

“அதென்ன ஏற்பாடுகள்? உமக்கு இங்கே கஷ்டமாயிருந்தால் பட்டணத்துக்கு வாரும். கலியாணத்தை நடத்தித் தரேன். காலையில் தாம்பூலம் மாற்றி, மத்தியானம் தாலிகட்டி,மாலை வண்டி ஏறிண்டிருக்கையிலேயே அன்னி ராத்திரி மாப்பிள்ளையழைப்புக்கு இன்னொரு கோஷ்டி சத்திரத்து வாசலில் ஜட்காவிலிருந்து இறங்கிண்டேயிருக்கு, இந்த நித்ய கல்யாண வைபோகம் கண்கூடான ப்ரத்தியக்ஷம். காசை வீசியெறிஞ்சால் கான்ட்ராக்டிலே பண்ணுவான்கள்- ஒவ்வொருத்தனுக்கு இதுவே பிழைப்பு-‘ 

“நீங்கள் கடைசியிலே சொன்னேளே, அதுதான் இழுப்பு”அப்பா உண்மையான பீதியுடன் கையைப் பிசைந்தார். “சில் ஏற்பாடுகள் ஒன்றுகூட வேண்டியிருக்கு.” 

“அப்படியானால் உம்முடைய உத்தேசம்தான் என்ன?” “ஏன் பெண்ணுக்குக் கலியாணம் பண்ணுவதாய்த்தான் உத்தேசம்.” 

மாமி ஆச்சரியத்துடன் தலைநிமிர்ந்தார். ஆனால் அப்பா முகத்தில் எவ்வித மாறுதலுமில்லை. அப்பா, இப்படித்தான் சில சமயங்களில், தானறியாமலே ஒரு ‘விதூஷக்.’ 

“பிள்ளையை நிச்சயம் பண்ணி வெச்சிண்டால்-“

“ஏன், எங்களிடமிருந்தே வாங்கிப் பண்ணிவிடலாம்னா?” 

அப்பாலின் விழிகள் விரிந்தன. மாமி சொன்னது அப்பாவுக்கு நிஜமாகவே யோசனையாய்ப் பட்டுவிட்ட தோன்னு எங்களுக்குப் பயமாப் போச்சு, ஏன் என்றால் அப்பா அப்படிச் சில சமயங்களில் இன்னதுதான் பண்ணுவார். பண்ணமாட்டார்னு நாங்களே அறிய முடியாது. அவருக்கு மேல் யோசனைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றே அம்மா இடைமறித்து, “எல்லாத்தையும் உத்தேசிச்சு ஆவணிதான் சௌகரியப்படும்” என்றாள். 

மாமி முகம் விழுந்தது. 

“என் மூத்த நாட்டுப் பெண் இந்தக் கலியாணம் நேர எப்படித் துடிதுடிச்சுண்டிருக்கா தெரியுமா?” 

”இருக்க வேண்டியதுதானே? சிறிசுகள்”. 

“இப்போ வரத்துக்கே ஒற்றைக் காலில் நின்னாள்,” 

“அழைச்சிண்டு வந்திருக்கலாமே!” 

“ரயில்காரனுக்குக் கொட்டியிறைக்கிறதுலே என்ன லாபம்? சுபகாரியத்துக்கு மூணு  பேராய்க் கிளம்ப  வேண்டாம்னுதான். ஆமா, இப்போ ரெண்டு பேராய் வந்தே ஒத்திப் போட்டாறது. சுபஸ்ய சீக்கிரம் – ஆச்சா ஆச்சான்னு நடந்துடணும்…” 

நாங்கள் குற்றம் செய்தவர்களாய்த் தலைகவிழ்ந்தோம். நாங்கள் ”பெஞ்சு மேல்” நின்றது கண்டு மாமி முகம் சற்று இளகிற்று. 

“சரிதான், அவள் தான் ஆசைப்பட்றாளே நான் தங்கிட்டு அவள் வரட்டும்னு விடறதுக்கும் இல்லை, ஏழு பூரா ரொம்பியாச்சு.” 

“ஆ!” 

“வெட்கம் கெட்டு முகூர்த்தத்துக்குத் துடியா ஏன் நிக்கறேன்னு இப்போ புரிஞ்சுதா? ஆவணியில் நீங்கள் உங்கள் மீனாக்ஷி கலியாணத்தை நடத்தறப்போ, அகஸ் தியர் விந்திய மலைக்குப் போயிட்டாப்போல, அவள் பிள்ளைப் பேறுக்குப் பிறந்த வீட்டுக்குப் போயிடுவாள். மனசையெல்லாம் இங்கே விட்டு விட்டு. மாதமும் அவளுக்கு அப்போத்தான்-“மாமி குரல் அதன் மேல் பட்டு விரிச்சாப் போல் தனக்குத்தானே அடங்கிப் போயிற்று. ‘இத்தனை நாள் கழிச்சு இப்போத்தான் தரிச்சிருக்கு. ஏற்கனவே சற்றே பூஞ்சை-” 

பாய் நடுவே பொம்மை யானைத் தலையில் சொருகிக் கனிந்து கொண்டிருக்கும் ஊதுவத்திப் புகையுடன் மாமி யின் சொற்கள் இழைந்து போயின. 

என் கூந்தலில் பதிந்த பந்துச் சரத்தில் மல்லி மலர்ந்து மணம் கம்மென்று கூடம் முழுதும் எழுந்தது: குத்து விளக்கை விட்டில் வட்டமிட்டது. பட்டாபிஷேகப் படத்திலிருந்து ஸீதையின் அபயகரமும் கண்களும் கருணை சொரிந்தன. மன்னி, உன் பேர் ஸீதையோ? அப்படி நினைத்ததுமேஎனக்கு நெற்றியில் வேர்வை முத்திட்டுக் குளிர்ந்தது. 

சமையல் அறையில் சாமான் ஏதோ உருண்டது, 

“ஹூம்-” தன்மேல் கவிந்த யோசனைகளைக் கலைக்கத் தலையை உதறிக்கொண்டு மாமி எழுந்தார். பெரிய சரீரம். தரையில் கையை முன்னால் ஊன்றிக் கொண்டுதான் எழ முடிகிறது. எல்லோரும் எழுந்து நிற்கிறோம். 

“நம் இஷ்டத்தில் என்ன இருக்கு? இதிலேயே பாருங்கள். நான் என்னவோ நினைச்சுண்டு வந்தேன். என் யத்தனம் என்ன பண்ண முடிகிறது? காலமே இப்போ எப்படியிருக்குன்னா, அப்பப்போ அது அதுன்னு உலகத்திலே எல்லாத்துக்குமே சமாதானமடைஞ்சுபோக வேண்டியிருக்கு. டே சம்பத், எழுந்திரு. ஆவணியில் தான் கலியாணமாம். மாமி, குங்குமம் கொடுங்கோ. பெண்ணே, நமஸ்காரம் பண்றையா? சரி, பண்ணு; சமத்தாயிரு. பயப்படாதே, நான் காலத்தோடு ஓட்டிப் போற மாமியார்தான். கிறிசுகளைப் பிரிச்சு வெக்கறதில் எங்களுக்கென்ன லாபம்? எல்லாம் ஆவணி வரைக்கும் தான், பொறுத்துக்கொள்|” 


நள்ளிரவில். தூக்கத்தில் – (அல்ல விழிப்பா?) அரை மயக்கத்தில் திடுக்கென விழித்துக்கொண்டேன். செவியருகே, ரகஸ்யமாய் ஏதோ கீதம் ஒலித்து, நான் விழித்த தருணமே அதுவும் மறைந்தது. அது அப்படி திடுதிப்பென் நின்றதுதானோ எனக்கு விழிப்பு வந்துவிட்டது. அதன் இன்ப அயட்டல் விண் விண் எனத்தெறித்து இதயம் நொந்தது. றையில் சூழ்ந்த கும்மிருட்டில், அதன் இசைக் கோடுகளின் ஸன்னமான ஜ்வாலைகள் சற்று குரூரமான அழகுடன் ஒளிர்ந்து நெளிந்து ஒன்றுடனொன்று நெய்த கோலக் கூட்டினின்று எண்ணெய்க் குளியல் உலர்ந்து பிசுபிசுவென் அடர்ந்து வங்கியிட்டு லேசான பொன்னிறத்தில் பொங்கிய கூந்தலலைகள் நடுவே ஒரு முகக்கோடு விளிம்பு கட்டிக் கொண்டு உருவாகி மிளிர்ந்தது…அட, நான் அவரை நினைக்க முயன்றால், இவள் எங்கு வந்தாள்? 

என் உள்ளுணர்வில் நான் கேட்ட இசையிலேயே உருவாகி, அதில் தன்னை மறந்த தவத்தில் கண்கள் மூடி யிருந்தன. வான்முகட்டில் இறங்கிய மழை மேகங்கள் போல் கன்னங்களின் மேல் தாழ்ந்த இமைகளின் அடிப் பாரத்திலிருந்துதான் உள் உறங்கும் விழிகளின் தன்மையை ஒருவாறு யூகிக்க முடிந்தது, நீண்ட ரப்பை மயிர்கள் நுனி சுருண்டு, நட்ட அரிவாள்கள் போல் கன்னச்சரிவில் தவழ்ந்தன. 

என் விழிகளைக் கசக்கிக் கொண்டேன். சீனாப் பொம்மை போல் வழுவழுத்த கன்னங்களின் பனி வெளுப்பு, அதைச் சூழ்ந்த ரோஜாத் திட்டுடன், இமைத்திரையை மெத்தென்று அடைத்துக்கொண்டது. 

தந்தி நாதம் மறுபடியும் செவியோரம் ஒதுங்குகையில், புலி நகங்கள் தொண்டையில் பிராண்டின. 

யார் நீ அலோகி? 


ஆனியின் பொன்னான வெய்யிலில் மனம் உருகித் தவிக்கின்றது. போனவர் கடிதம் போடுவாரோ? அல்லது போடவே மாட்டார்களோ? 

என்னைப் பார்த்துப் போனவர் மன்னியிடம் என்ன சொன்னாரோ? 

“அந்தப் பெண் வாயைக்கூடத் திறக்கவில்லை. திறக்க விட்டால்தானே? அந்தப் பிராம்மணன்தான் தாய்க் கோழி மாதிரி குறுக்கே விழுந்து தடுக்கிறானே!” 

மன்னி என்ன சொன்னாளோ? 

“பெண் பாடாட்டாப் போறது. அத்தை, பேசுவாளான்னாவது தெரிஞ்சுக்க வேண்டாமா?”

“அப்படியே மூடிவெச்சு ஆனாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை, பிராம்மணன் பலே கெட்டிக்காரன், ஆவணியில் தான் பண்ணுவானாம். கேட்டையோ? விட்டுத் தள்ளு.’ 

இந்த மானஸப் பேச்சு கேட்டதுமே எனக்குப் பகீரென்றது. 

விட்டுத் தள்ளா? 

வயதில் மணமாகாத சினேகிதிகள் எனக்கு இருக் கிறார்கள். கலியாணம் ஆகாதா ஆகாதா எனக் காத் திருந்து காத்திருந்து ஆவல் இற்றுப் போய், கடைசியில், யார் வந்தாலும் சரி வாழ்வு தந்தால்போதும் எனும் ஏக்கத்தில் வயதிலேயே வதங்கிவிடும் கதி எனக்கு நேராமல் இருக்கணுமே! 

பெண்ணாய்ப் பிறந்தவள் சொந்த வீட்டுக்காரன் மாதிரி. சொந்த வீட்டுக்காரனுக்கு வீடு பிடித்ததோ பிடிக்கவில்லையோ. அவள் வீடு ஒரு வீடுதான். குடி யிருப்போருக்கு எந்த வீடு பிடித்ததோ, அதுதான் கணக்கு. 

நியாயமும் அதுதானே? 

ஆனால் மன்னி என்ன சொன்னாளோ? 

ஒரு வாரம் ஆனபின் “கலியாணத்துக்கு வேண்டிய மேல் ஏற்பாடுகளைக் கவனிக்கலாம்” என்று பிள்ளை வீட்டார் தோரணை குறையாமல், கடிதத்தில் சம்மதம் வந்த பின்தான் தெரிந்தது. 

மன்னி மனம் நல்ல மனம்தான். 

உள்ளபடி மன்னி சொல் எவ்வரை சென்றதோ அறியேன். ஆனால் என் இஷ்டப் பிரதிஷ்டையில் அவள் ஏகபோகம் செலுத்தினவளாய்த்தான் பட்டாள். 


இந்த ஆடிமூட்டம் நெஞ்சிலும் புகுந்து கவிகின்றது, இந்த மப்பு ஒன்று. மழையாவது விட்டுப் பெய்யணும். அல்லது வெய்யிலுக்காவது வழி விடணும். இரண்டும் இல்லை. கவலை விட்டவர்களுக்குத்தான் மந்தாரம் மனோ கரம். என் நிலையில் உள்ளவளுக்கு மனம் புழுங்கிப் பிட்டாய்ப் பிசையும் வேதனைதான். 

வர வர. இந்த அப்பா ஏன் இப்படி இருக்காரோ? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அறுபது நாழியும் மோதல், ஏற்கெனவே எட்டுப் பொருத்தம். இப்போ கேட்கவே வேண்டாம். 

”இந்தக் கலியாணத்துக்குன்னு நீங்கள் இந்தத் துரும்பை இந்தப் பக்கம் நகத்தினேன்னு நெஞ்சைத் தொட்டுண்டு சொல்ல முடியுமா? பெண்ணுக்கு இந்த வருஷம் குருபலன் வருமான்னு சாஸ்திரத்துக்காவது ஜோஸ்யரைச் சந்திச்சுக் கேட்டிருப்பேளா? ஒரு தடவை விரல் மடக்குங்கள்”

அப்பா “பின்னி” கறுப்பு. பெட்ஷீட்டில் “ஸாலிடேர்” விளையாடிக் கொண்டிருக்கிறார். 

“எட்டுப் பெண்ணைப் பெற்று ஜாதகக் கட்டைத் தூக்கிண்டு, ஊர் ஊரா அலைஞ்சு, வீடுவீடா ஏறி, முட்டி விட்டுப் போச்சா? நமக்கு இருப்பது ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு. 

அப்பா, சீட்டின் மேல் வைத்த கண் மாறாமலே, அதுவும் பொண்ணு. 

”அது சரி, சொல்லமாட்டேளோ? சரி, அதுக்கு நீங்கள் பண்ணினது என்ன தட்டுக் கெட்டுப் போச்சு? எதுக்கும் எல்லாத்துக்கும் தலையில் அக்ஷதையைப் போட்டுண்டு நானல்லவோ கிளம்ப வேண்டியிருக்கு! எத்தனை நாளைக்கு உங்கள் ஆட்டம் இப்படியே செல்லும்னு நினைச்சுண்டி ருக்கேள்? எத்தனை பேர் என்னைக் கேக்கறா தெரியுமா? “ஏண்டி முகூர்த்தத்தைக் குறிச்சுக்கூட எழுதிட்டேளே. உங்காத்து மாமா சும்மா உக்காந்திண்டிருக்காரே! இந்த ரீதியிலே ஐப்பசியிலாவது நடக்குமா? இல்லை, தைக்குத் தள்ளிண்டு போயிடுவேளா?’ன்னு!” 

அப்பா சுவாரஸ்யமாய் சீட்டை மாற்றி வைக்கிறார். அப்பா, உங்களைக் கரிக்கிறேன். என்னதான் ஆண்களுக்கு ஆயிரம் நாங்கள் அடங்கினவர்கள் ஆனாலும் எங்களுக்குரிய மரியாதை எங்களுக்குக் கிடையாதா என்ன? 

“உண்மையைச் சொல்லுங்கள். கலியாணத்துக்குப் பணம் கொடுக்கறவன் கொடுக்கப்போறானா இல்லையா? இல்லை, நீங்கள் வாங்கி இட்லியும் சட்னியும் சொஜ்ஜுமாவே கரைச்சிட்டு நிக்கறேளா?” 

ஊஹும், அப்பா அசைஞ்சு கொடுக்கக் காணோம். 

பால் தீய்ந்த நாற்றம் திடீரென மூக்கைப் பொசுக்குகிறது. 

தலையில் அடித்துக்கொண்டு வைதவண்ணம் அம்மா உள்ளே ஓடுகிறாள். 

கலியாணம் விசாரிக்க மாமிகள் வருகின்றனர், 


“இந்த நாளில் எங்களது எல்லாம் எங்களுக்கு மேல் மாமியாய், குதிர் குதிராய் நிக்கறத்துக்குப் பாலாவுக்கு இவ்வளவு சுருக்கக் கூடினது அவள் செய்த புண்ணியம்தான். ஆனால் ஒண்ணு – நான் சொல்றேன்னு நினைச்சுக்காதே. அகிலா! நிச்சயம் பண்ணியாச்சுன்னு மீசையை முறுக்கறத் துக்கு இல்லை. கலைக்கிற மந்திரிகள் எங்கேயும் இருக்கா. கழுத்தில் தாலி ஏர்ற வரைக்கும் எதுவுமே நிச்சயமில்லை. அத்தனை நாள்வரைக்கும் அவாளுக்கு ஏன் விட்டுக் கொடுக்கணும்? நீங்கள் பார்த்திருக்கிறதை விடக் கிளியாய்ப் பெண்ணை வெச்சிண்டிருக்கேன். குயிலாய்ப் பாடுவாள். எல்லாம் ரெடி. நாளைக்கே பண்ணிடலாம். அந்தப் பெண்ணைப் பத்தி உங்களுக்கென்ன கவலை? எவனாவது கட்டறான். முன்னே பின்னே – அவ்வளவுதானே?’ அப்படீம்பா.” 

என் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 

“ஆமா மாமி,பாட்டி சொல்றது வாஸ்தவம்தான். கேவலம் அம்பது நூறிலே கடைசி நிமிஷத்தில் எத்தனையோ சம்பந்தம் பிரண்டு போயிருக்கு. தாரைவார்த்துக் கொடுத்த பிறகு தாலி கட்டற நேரத்துக்குள்ளே தகராறு வந்துடுத் தாம். கேஸ் கோர்ட்டு வரைக்கும் போச்சாம்,” 

“நீங்கள் சொல்றது எனக்குப் புரிஞ்சு நான் என்ன பண்றது? யாருக்கோ கலியாணம்னு இவரைப் பத்திரிகை வெச்சு அழைக்கணும்போல் பிராம்மணன் ஹாய்யா இருக்காரே!” 

“பாலா தலையில் என்ன எழுதியிருக்கோ! ஒண்ணு நிச்சயம். ஒருவர் தாலியை இன்னொருத்தன் கட்ட முடியாது”. 

இது எனக்கு ஆறுதலா அங்கலாய்ப்பா? சுவரா, ஒண்ணுமே புரியல்லியே! 


அப்பா என்னவோ சீட்டாடிக்கொண்டு எதிர்வீட்டுத் திண்ணையில் அரட்டையடித்துக் கொண்டு, புகையிலையைப் பொடியாய் நறுக்கிக்கொண்டு, அல்லது வாசலில் இலை பொறுக்கவந்த பசுமாட்டின் கழுத்தைச் சொறிந்து கொடுத்துக்கொண்டு, கொல்லையில் பவழமல்லி பக்கத்தில் கிளைத்திருக்கும் கீரையைக் கிள்ளி அதன் நரம்பு பார்த்துக் கொண்டுதானிருக்கிறார். 

ஆனால் எப்படியோ தெரியவில்லை. திருடன் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனதுபோல் சாமான்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்பாடுகள் கண்ணெதிரில் வளர்வது தெரியாமலே படிப்படியாய் நடந்து கொண்டிருக்கின்றன. கட்டை வண்டியில் மூட்டைகள், மூட்டை மூட்டையாய் இறங்குகின்றன. கொல்லைப்புறத்தில் கோட்டையடுப்புக் காக அகழ் எடுத்தாகிறது. தட்டான் திருட்டுத்தனமாய் வந்துபோகிறான். மாயவரம் வேணுகோபால் பிள்ளை, குழலை அக்குளில் இடுக்கிய படியே, கூழைக் கும்பிடு போட்டுத் தாம்பூலம் பெற்றுக்கொள்கிறான். பூக்காரன் அச்சாரம் வாங்கிப் போயாச்சு. பந்தலின் அடைப்பில் வாசல் திண்ணை திடீரென இருள்கின்றது. இந்த இருள் எவ்வளவு இன்பமாயிருக்கின்றது! 

உக்கிராண உள்ளில் வாழைப் பழ வாசனை தேங்கிப் போச்சு. சந்தனச் சேறு கூடத்தில் இப்பவே கொட்டியிறைய ஆரம்பிச்சாச்சு. 

பெண்களைப் போல், வாய் ஓயாமல் அரற்றாமல், காரியங்களை அவையவை வழியில் இயங்க வைத்து அவைகளைத் தாமே நிறையக் காண்பது ஆண்களுக்கே உரிய வரம் என்று நினைக்கிறேன். “எல்லாம் எங்களால்தான்” என்று கத்திக் கத்தி நாங்கள் காணும் வாய் வெற்றிக்கு அவர்கள் காட்டும் நேர்த்தியான மௌனத்தை மழுங்குனி மாங்கட்டைத்தனம் என்று ஏசி, நாங்கள் எங்கள் ஆத்திரத்தைத் தீர்க்கப் பார்க்கிறோம். 

அப்பா, இப்போ உங்களைப் பார்க்க எனக்கு எவ்வளவு ஆ ஆசையாயிருக்கு தெரியுமா? 

இத்தனை சந்தடியிடையே அப்பா ஒரு தரம் பட்டணம் போயும் வருகிறார். 

“அப்பா, மன்னியைக் கண்டேளா எப்படியிருக்கி றான்?” 

”மன்னியா அது யாருடா மன்னி? கலியாணத்துக்கு முன் னாலேயே கண்டாகிற உறவு?” 

அம்மா, பருப்புத் தேங்காய்க்கு பாகைக் கிளறிக் கொண் டே, “ஆமாம், இப்பவே அழைச்சுப் பார்த்துப் பழக்கிக்க வேண்டியதுதான். சிலருக்கு அக்கான்னு கூப்பிட்டால் பிடிக் காது. நாலு பேருக்கு நடுவே பிறந்து வளர்ந்திருந்தால்தானே தெரியப் போகிறது? போன இடத்தில் கர்ப்பிணியாய் ஒரு பெண்ணையும் நீங்கள் பார்க்கல்லியா?’ 

“சரிதான், அங்கே ரெண்டு மூணு பேர் பிள்ளையார் வேஷம் போட்டிண்டிருந்தா. யாரென்று நாள் கண்டேன்? இதென்ன பிள்ளையாண்டிருக்கிற சீஸனா?” விநாயக சதுர்த்தி வரதே அதனாலா?” 

அம்மாவுக்குக் கன்னம் கதுப்பாடுகிறது. 

“பாலா, போயும் போயும் உங்கப்பாக்கிட்டே வாயைக் கொடுக்கிறையே! ஏதாவது கேட்டால் ஏதாவது ஒரு பதில் – மனுஷன் ரத்தத்தில் ஊறிப்போச்சு!” 

”வண்டிச் சப்தம் கேட்கிறது? எதிர்கொண்டு அழைக்க ணுமே. சமயத்தில் மேளக்காரன் எங்கே போயிட்டான். டே வாஞ்சி, ஓடுடா வெற்றிலைத் தட்டைத் தூக்கிண்டு, சந்தனப் பேலாவை மறந்துட்டையே! மணி அய்யர். என்ன இப்பத் தான் சாவகாசமாய் இலையைப் பாளம் போடறேள்?” 

“ஒண்ணும் கவலைப்படாதேங்கோ. அண்ணா! இது நாளைக் காலைக்கு, டிபன் பந்தி அங்கே நடந்திண்டிருக்கு.’ 

கலியாண கோஷம் திடீரென அலைபுரண்டு வந்து செவி மோதுகையில், தன்னுடன் என்னை அடித்துக் கொண்டு போ கையில், என்னைப் பம்பரம் சுற்றிவிட்டாற்போல். நானே நினைவின் அரைவசத்தில்தான் இருக்கிறேன். 

எண்ணின எண்ணங்கள் எல்லாமே பலியாது.காத்தி ருந்த தவம் மாத்திரம் பலித்த நன்னாள் நிஜமாகவே வந்து விட்டதா? என்னைச் சுற்றி நேர்வனவெல்லாம் நிஜந்தானா? ஜலத்துள் அமிழ்ந்தவளுக்குக் கேட்கும் கரை நிகழ்ச்சிபோல். பேச்சுகள் இனரச்சலினின்று அப்பப்போ பிரிந்து வந்து அரைக் காதடைப்பில் கேட்டு, திரும்பவும் இரைச்சலிலேயே கலந்து விடுகின்றன. 

இஷ்டம் இஷ்டப்படி நடந்தாலும், அப்படி நடந்து விட்டதை நம்ப முடியாமல் அதுவே ஒரு சிறு பயமாகவே இருக்கிறது. 

கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன். என் மிாமியாரின் தேஜஸ் கண் கூசுகிறது. ஒன்று நன்கு தெரிகின்றது; அவர்கள் வீட்டில் எத்தனை பேராயினும் சரி. அத்தனை பேரும் அவரைச் சுற்றி இயங்கும் கிரஹங்கள்தான். 

“என்ன பெண்ணே, முழிக்கறே? வா, வா, எல்லோரும் உன்னைப் பார்க்கத்தானே வந்திருக்கோம். இன்னிக்கு எல்லோருக்கும் ஒரு நமஸ்காரம் போட்டால் போதும், நாளைக்கு முகூர்த்தத்துக்குப் பின்தான் ஆளுக்கு ஆள் முதுகை ஒடிக்கிறது இருக்கவே இருக்கே! எது கிழக்கு? புது இடம் வந்தாலே திக்குத் தப்பிப் போறது. இவர்தான் உன் மாம னார். இரு. சேர்ந்து நிற்கிறோம். எங்களுக்கு ஒண்ணு தனியாப் போடு. இவள் உன் நாத்தளார்மார்கள். எல்லோரும் உனக்குப் பெரியவாள் தான்- இவர்தான்” 

என்னையறியாமலே மன்னி முகம் தேடுகிறேன். சபலம் அடித்துக் கொள்கிறது, ஒரு வேளை – கடைசி நிமிஷத்தீவ்- ப்ளான் மாறி – மன்னியும் -! 

‘இதுதான் உன் மச்சினன்,” 

ஒற்றைநாடி தேகம் ஜியோமிதி வளைவுபோல் துளிக்கூட பிசகாது இறங்கிய நெற்றிக்கோடு தன் பாதத்தில் கிளைப் பிரிந்த அடர்ந்த புருவங்களின் கீழிருந்து என் மேல் தங்கியும் என்னைப் பாராத விழிகள். நெற்றிப் பொட்டில் அடைநரை, 

அந்த நிமிஷத்தின் அவசரத்தில் மனதின் பரபரப்பில் என்னைச் சூழ்ந்த இரைச்சலில் அதற்குமேல் பதிவாகவில்லை. இவர் பக்கலில் என் அரைத் தூக்கத்தில் (அல்ல விழிப்பா?) கற்பனையாய்த் தோன்றிய முகத்தைப் பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன். இவ்விருவரில் எவர் நிஜம், எவர் கனவு? கனவுக்கும் உண்மைக்கும் வித்தியாசம் என்ன? இந்தக் கேள்விகளே ஏன்? இவைகளால் எனக்கென்ன பயன்? ஆனால் வெல்லப்பாகு போல் பிசுக்காய், நெஞ்சில் சுற்றிச் சிக்காகின்றன.


எதிர்க்சாரியில் இரண்டு வீடு தாண்டி சம்பந்திகளை இறக்கியிருக்கின்றது? 

நேற்றைய அலுவல்கள் ஓயவே மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டது, ஆச்சு, இன்னும் இரண்டு மணி நேர இடைவேளைதான். மறுபடியும் காரியங்கள் ஆரம்பித்து விடும். ஆனால் எனக்குத் தூக்கம் வரவில்லை. தலையணை யில் தலைசாய மறுத்துவிட்டது. இருப்புக் கொள்ளவில்லை. மொட்டை மாடிக்கு வருகிறேன். என்னையறியாமலே பார்வை சம்பந்திகளின் விடுதிப்பக்கம் செல்கிறது, அங்கும் ஓர் உருவம் நிற்கின்றது, என்னைப் போலவே அங்கும் யாருக்கோ பாவம் தூக்கம் இல்லை. 

ஒற்றை நாடி. 

இருந்தாற் போலிருந்து அதனின்று இரு கிளைகள் பிரி கின்றன. மாதா கோவில் ஸ்தூபி உச்சியில் சிலுவைக்குறி போல். 

ஊரோசை அடங்கிய அந்நேரத்தில் பட்டை வீறும் நிலவில் ஆகாயத்னதயே தழுவ முயலும் அளவாய் ஆகிவிட்ட அவ்வுருவை, வாழ்வின் ஏக்கச் சின்னமாய்க் காண்கையில், உடல் புல்லரிக்கிறது, தொண்டையை அடைக்கிறது. 

மன்னி, நீ கொடுத்து வைத்தவள். இதுவரைகூட அவரால் உன்னைப் பிரிந்திருக்க முடியவில்லை. 

ஒன்று புரிகிறது. உலகத்தில் யாவருமே, இருவர் ஒருமைக்கு! அவ்விருவரும் உள்படத்தான் ஒருவருக்கொருவர் குறுக்கே நிற்பவர்தான். 


பிறகே, முகூர்த்தத்தின்போது கூட அவர் கண்ணில் பட வில்லை. சங்கோசமோ, கபாலத்தில் இரைச்சல் ஆகவில்லை யோ. அல்ல வேறு என்ன நினைப்போ! 

பெண்ணும் பிள்ளையும் மஞ்சள் நனைத்த துணியுடன் பிள்ளை விடுதிக்குச் சென்றபோது மாமியாரும் இல்லை. 

”அம்மாவும் அண்ணாவும் ஊருக்குக் கிளம்பிப் போயிட் டா. அண்ணாவுக்கு அவசரமா ஆபீசுக்குப் போகணுமாம், வாசற் கதவைப் பூட்டிண்டல்லவா வந்திருக்கோம்! நாங்கள் இருக்கிற இடம் கொஞ்சம் ஒதுக்கு. கதவை உடைச்சிண்டு பட்டப் பகலில் ஆள் உள்ளே புகுந்தாலும் பக்கத்தில் கேட்பா ரில்லை. சுலியாணம் முடிஞ்சு திரும்பி வரவாளை வாவென்று அழைக்கக் கூட அங்கே ஆள் இல்லையே! அதனால் அம்மா வும் போயிட்டாள்.” 

சேஷ ஹோமம் முடிந்த வீடு என்பது சரியாயிருக்கிறது. போட்டது போட்டபடி, கண்டது கண்டபடி, குப்பையோடு குணமும் கொட்டிவாரி இறைஞ்சு கிடக்கு. ஒரு பக்கம் புஸு புஸுன்னு அவிழ்த்துப் போட்டுக் குவிஞ்சுக் கிடக்கும் புடவைகள், கூடம் பூரா.அக்ஷதையும் பொரியும், பூவும், 

என் சாமான்களுடன் சிதறிய என் மனதையும் சேர்த்துக் கட்டுகிறேன். ஆமாம். எனக்கு இனி இங்கு என்ன வேலை? 

நன்றி கெட்டவளே! 

அதற்கென்ன செய்வது? பிறந்த வீட்டு நன்றியை இனிக் கொண்டாடிக் கொண்டிருந்தால்,புகுந்த வீட்டுக்கு விசுவாசம் எப்படிச் சரியாய்ச் செலுத்துவது? 

வண்டியேறிய பிறகுகூட என் வீட்டுக்கு நான் போகும் ஆவல் எஞ்சினுக்கு முன்னால் பாய்ந்து செல்கிறது. 

“தோ பாருடீ!” 

வயலில் ஒரு யானை மேய்ந்து கொண்டிருக்கிறது. ரயிலைக் கண்டு தும்பிக்கையை உயரத் தூக்கிப் பிளிறுகின்றது. 

இவர்கள் யானை பார்த்ததில்லை; நான் பட்டணம் பார்த்ததில்லை. 

வண்டியை விட்டிறங்குகிறோம். ஆனால் வீடு வெறிச் சென்றிருக்கிறது. வாசலில் கோலமில்லை. செம்மண் இல்லை. ஆரத்தியுடன் காத்திருப்பார் யாருமில்லை. உள்ளே போவதா? வாசலிலேயே நிற்பதா? ஒன்றுமே புரியவில்லை. 

“அம்மா!” 

அம்மா உள்ளிருந்து வருகிறார். இருகைகளிலும் சற்று நீள வாகில் ஒரு மூட்டையை ஏந்தியபடி நேரே என்னிடம் வந்து அதைக் கொடுக்கிறார். என் திகைப்பில் என்னென்று புரியாமலே வாங்கிக் கொள்கிறேன். சுற்றிய துணியிலிருந்து முஷ்டித்த இரு பொம்மைக் கைகள் நெளிகின்றன. 

அம்மா கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டே யிருக் கின்றது. உதடுகள் நடுங்குகின்றன. 

“மன்னீ!” 

என் பக்கத்திலிருந்து கிளம்பிய வீறல் என் கணவருடைய குரலாகவே தெரியவில்லை. அவர் வாயினின்று ஒரு பக்ஷி பறந்து போன மாதிரி எனக்குத் தோன்றிற்று. 

பிறகே அவர் பாடிக் கேட்டதாகவே எனக்கு ஞாபகமில்லை.

– தயா (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *