மன்னிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 8,461 
 

காலை ஏழு மணிக்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு, வாசலில் கிடந்த மலேசிய நண்பனை எடுக்க வந்தாள் பாரு.

தொலைபேசி அழைத்தது.

`யார் இவ்வளவு சீக்கிரம்?’ என்ற யோசனையுடன் உள்ளே போய், `ஹலோ, வணக்கம்!’ என்றாள் அசுவாரசியமாக.

முகமன் சொல்லாது, “துர்கா போயிட்டாளாம்!” என்ற குரல் — தோழி கமலினியுடையது.

“எங்கே?” என்று வாய்வரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு, எதுவும் பேசத் தோன்றாது வெறித்தாள் பாரு.

`தொலைந்தாள்!’ என்று ஒரு அலாதி நிம்மதி எழுந்தது.

அடுத்து ஏதேதோ பேசிக்கொண்டே போன கமலினியின் குரலில் மனம் பதியவில்லை.

தன் ஆருயிர்த்தோழி என்றெண்ணிய துர்கா! அப்படி ஒரு துரோகம் நினைப்பாளா தனக்கு?

வாரம் ஒருமுறை கணவருடன் சிவன் கோயிலுக்குப் போகும்போதெல்லாம், அருகிலிருந்த அவள் வீட்டுக்குப் போவாளே! அப்போதெல்லாம் சிரித்துச் சிரித்துப் பேசியதெல்லாம் நாடகமா?

“இனிமே அதோட வீட்டுக்கு என்னைக் கூப்பிடாதே!” என்று கண்டிப்பான குரலில், அதுவும் அஃறிணையில் கணவர் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது பாருவுக்கு. தொடர்ந்து, “க..டை!” என்ற கெட்ட வார்த்தையை அவர் பிரயோகித்தபோது, அப்படியெல்லாம் யாரையும் துச்சமாகப் பேசுபவர் இல்லையே என்று அவள் யோசனை போயிற்று. “ஏன்?”

அவள் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. “கூப்பிடாதே. அவ்வளவுதான்!” என்று முரட்டுத்தனமாகக் கூறிவிட்டு அப்பால் விரைந்தார்.

பாரு, துர்கா இருவரும் ஆண்டு தவறாது, தியாகராஜ ஆராதனையை ஒட்டி நடக்கும் விழாவில் பஞ்சரத்ன கிருதிகளைப் பாடுவார்கள்.

ஒருமுறை, துர்காவின் பாட்டில் விளையாட்டாய் ஏதோ தப்பு கண்டுபிடித்துச் சிரித்துவிட்டாள் பாரு.

துர்காவுக்கு வந்ததே ஆங்காரம்! “பேசாம பாடறதுன்னா பாடு. இல்லாட்டா, வாயை மூடிண்டு வீட்டிலேயே இரு!” என்று கட்டைக்குரலில் அலறிவிட்டு அவள் வெளியேறியபோது, கூடப் பாடுபவர்கள், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் எல்லாருமே விதிர்விதிர்த்துப் போனார்கள்.

முதலில் அவமானமாக உணர்ந்த பாருவுக்கு, கணவர் அவளைக் கவனிப்பதேயில்லை, அவருடைய உத்தியோகம்தான் அவருக்கு மனைவி என்றெல்லாம் துர்கா தன்னிடம் குறைப்பட்டுக் கொண்டது நினைவிலெழுந்தது. `பாவம்! என்னிடம் அந்த ஆத்திரத்தைக் காட்டியிருக்கிறாள்!’ என்று, கொந்தளித்த மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அதற்கடுத்த மாதம் ஒரு கச்சேரியில் துர்காவைப் பார்த்ததும், புன்னகையுடன் அவள் அமர்ந்திருந்த இடத்துக்கு விரைந்தபோது, தரையில் ஏதோ தேடுவதுபோல குனிந்து, அவளை தவிர்த்தது ஏன்?

அடுத்தடுத்து பல முறை அதேபோல் நடக்க, “துர்காவுக்கு ஏனோ என்னைப் பிடிக்காம போயிடுத்து!” என்று குழந்தைபோல் கணவரிடம் முறையிட்டபோது, அவர் நிதானமாக, “அது நீ செஞ்ச எதனாலேயுமில்லே!” என்றார்.

அடுத்து அவர் கூறியது!

இவளா? இவளா!

எவ்வளவு உயர்வாக எண்ணியிருந்தோம் தோழியைப்பற்றி!

“நாம்ப கடைசியா அவ வீட்டுக்குப் போனோமே, அப்போ..,” முகத்தில் வேதனையும், அவமானமும் ஒருங்கே கொப்பளிக்க, அன்று நடந்ததை நினைவு கூர்ந்தார் அவர்.

அடுத்த பல நாட்கள் அவருடைய வார்த்தைகளையே அசைபோட்டாள் பாரு.

அந்தப் பாவி சிரித்து சிரித்துப் பேசியதெல்லாம் தன்னைப் பார்த்த பூரிப்பில் இல்லையா? தன் கணவரை வசப்படுத்தத்தானா?

`மடியாகப் பூஜை செய்கிறேன் பேர்வழி’ என்று ரவிக்கை போடாது அரைகுறையாக உடுத்து, பரிமாறும்போது ஒரு கையால் லேசாகப் புடவையை விலக்கி, கண்ணால் வேறு சமிக்ஞை செய்வாளா ஒருத்தி?

பாருவால் நம்ப முடியவில்லை. நம்பப் பிடிக்கவில்லை.

“ஒரு வேளை புடவை நெகிழ்ந்துபோனதை நீங்கதான் தப்பா,” என்று, தானே நம்ப முடியாத ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டபோது, “ஒங்கிட்டபோய் சொல்றேனே!” என்று கத்தினார் கணவர். “எனக்கென்ன அவ்வளவுகூடத் தெரியாதா? நமக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு! கிளிபோல நீ பக்கத்திலேயே இருக்க..! அந்தக் கழுதை என்னை என்னன்னு நினைச்சிண்டது?”

`இதை நீங்க எப்பவோ சொல்லியிருந்தா, நான் அவ்வளவு வேதனைப் பட்டிருக்க மாட்டேனே!’ என்று சொல்ல நினைத்து, தன்னை அடக்கிக்கொண்டாள் பாரு.

முன்பே சொல்லியிருந்தால், `அவ அப்படி நடந்துக்கற அளவுக்கு நீங்க என்ன பண்ணினேள்?’ என்று தான் கேட்டுவிடுவோமோ என்று பயந்திருக்கலாம். இப்போது, மனைவி படும் வேதனையைப் பொறுக்காது உண்மையைச் சொல்லியிருக்கிறார், பாவம்!

ஒரு ஆண் பெண்ணிடம் தப்பாக நடக்க முயற்சித்தாலும், பெண் ஆணிடம் அப்படி நடந்தாலும், அதை ரசித்து ஏற்க முடியாதவருக்கு ஆத்திரமும், அவமானமும், பயமும் ஏற்படுவது இயற்கைதானே!

அதற்குப் பிறகு பாருவும் எந்த இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. தற்செயலாக அவளைப் பார்க்க நேர்ந்தாலும், அவமானத்தால் இறுகிய உதட்டுடன் துர்கா விலகிவிடுவாள்.

அப்படி ஒரு சந்திப்பின்பிறகு, “அந்தக் கழுதை அப்படியேதான் இருக்கு. வயசானதில கொஞ்சம் புத்தி வந்திருக்கலாம்!” என்று பாருவிடம் எகத்தாளமாகச் சொன்னவர், “என்னைப் பாத்துட்டு ஓடி வந்தா ஒன் சிநேகிதி. `ஐயோ! ஒங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு!ன்னு என் கையைப் பிடிக்க வந்தா!” அந்த நிகழ்ச்சியை நினைக்கும்போதே ஏற்பட்ட அருவருப்பில் உடலைச் சிலிர்த்துக்கொண்டார். “அப்போ நீ எங்கிட்ட வர்றதைப் பாத்தாளா? பயந்து ஓடிட்டா,” என்று சிரித்தார். “நல்லவேளை, நான் தப்பிச்சேன்!”

“அவ ஹஸ்பண்ட் வேலை முடிஞ்சா கிளப், குடின்னு இருக்கிறவர். நீங்களோ, ஜாகிங், ஜிம் அப்படின்னு போய், இந்த அம்பது வயசிலேயும் ஒடம்பை சின்னப்பையனாட்டம் வெச்சிண்டு இருக்கேள்!” என்று புகழ்வதுபோல், தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டாள் பாரு. “எதுவுமே தனக்குக் கிடைக்காட்டாதான் அது ஒஸ்தியாத் தோணும்!”

“ஒனக்கு நான் சுலபமா கிடைச்சுட்டேனே! அதான் ஒனக்கு என்னோட அருமை புரியலியாக்கும்!” புன்சிரிப்புடன் அவளைச் சீண்டினார்.

இந்தமாதிரி எவ்வளவு சின்னஞ்சிறு நிகழ்வுகள், நினைத்து நினைத்து ரசிப்புடன் லயிக்கும் வண்ணம்! இதையெல்லாம் தன்னிடமிருந்து பறிக்கப்பார்த்தாளே, துர்கா!

பல வருடங்களாகியும், பாருவின் ரணம் பூரணமாக ஆறவில்லை.

அந்தத் தோழிதான் இறந்துவிட்டாளாம்.

இன்னும் ஒரே ஒரு சந்தேகம் பாக்கி இருந்தது.

“எப்படி?” தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவளிடம் விசாரித்தாள்.

“ப்ரெஸ்ட் கான்சர்!”

வலி உயிர் போயிருக்குமே! உடலில் எத்தனையோ அங்கங்கள் இருக்க, சொல்லிவைத்தாற்போல் மார்பில் புற்றுநோய் வருவானேன்!

`எங்களைத் தவறாகப் பயன்படுத்தத் துணிந்த உன்னிடம் நாங்கள் இருக்கமாட்டோம்!’ என்றுதான் அவை பழுதாகிவிட்டனவோ?

துரோகத்திலேயே மிகக் கொடிது மித்திரத் துரோகம் எனபார்களே! ஒரு வேளை, அதன் விளைவோ?

பாருவின் எண்ணப்போக்கில் ஒரு முட்டுக்கட்டை.

முதலில் நெறிகெட்ட ஆசை, அது நிறைவேறாத ஆத்திரம், நெருங்கிப் பழகிய அப்பாவி சிநேகிதியின் வாழ்வைக் கலைக்கப்பார்த்தோமே என்ற குற்ற உணர்வு, இறுதியாக, இவர்களுக்குத் தன் உண்மை சொரூபம் தெரிந்துவிட்டதே என்ற அவமானம்.

அதனால்தானே அவள் அப்படி விலகி, விலகிப் போனாள்!

மனக்குமுறலைப் பிறரிடம் சொல்லி ஆற்றிக்கொள்ளவும் வழியில்லாதுபோக, உள்ளுக்குள்ளேயே குமைந்திருப்பாள். வடிகால் இல்லாத உணர்ச்சிகள் அவள் உடலையே அரித்தெடுத்திருக்க வேண்டும்.

`பாவம், துர்கா!’ வாய்விட்டு வந்தன அவ்வார்த்தைகள்.

பாருவுக்கு ஏதோ தோன்ற, மீண்டும் குளியலறைக்குப் போனாள். ஏற்கெனவே ஈரமாக இருந்த தலையில் தண்ணீரை மொண்டு விட்டுக்கொண்டாள்.

“எத்தனை தடவை குளிப்பே?” வெளியிலிருந்த கணவர் குரல்கொடுத்தார்.

“வேணுங்கிறவா செத்துப்போயிட்டா!” என்று தெளிவான குரலில் மறுமொழி கேட்டது மறுபுறத்திலிருந்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *