மனைவி மந்திரம்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 11,931 
 
 

கல்யாணத்துக்கு முன்பிருந்த ரகுராமன் இப்போது மாறிவிட்டான். எப்படி இப்படி மாறினான் என்றுதான் தெரியவில்லை. அவனுடைய மாறுதல் எல்லாருக்கும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. கல்யாணத்துக்கு முன்பு அவன் என்ன சொன்னான்?

“மனைவி வேலைக்குப் போகக் கூடாது. வேலைக்குப் போகும் பெண்களை எனக்குப் பிடிக்காது. வேலைக்குப் போகும் பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளமாட்டேன். பொண்டாட்டி வேலைக்குப் போனா புருஷனை மதிக்கவே மாட்டா’ இப்படிச் சொன்ன அந்த ரகுராமனா இன்றைக்கு இப்படி? அப்படி அவன் என்ன செய்துவிட்டான்?

மனைவி மந்திரம்ரகுராமன் தன் மனைவியைப் படிக்க வைக்கிறானாம். இதுதான் எல்லாரும் ஆச்சரியப்படுவதற்கு, அவனை அதிசயமாகப் பார்ப்பதற்குக் காரணம்!

பெண்கள் வேலைக்கே போகக் கூடாது என்றவன், இப்போது தன் இளம் மனைவியைப் படிக்க வைப்பதற்கு என்ன காரணம்?

“”அவளுக்குப் படிக்கணும்னு ஆசை. அந்த ஆசையை அவ பொறந்த வீட்ல நிறைவேத்திக்க முடியல. அதான் புருஷனுக்கு தலையணை மந்திரத்தைப் போட்டு, புகுந்த வீட்ல அந்த ஆசையை நிறைவேத்திக்கிட்டா”

“”அதானே… கல்யாணம் முடிஞ்சி பத்தாவது நாள்ல புருஷனை தனிக்குடித்தனத்துக்கு அழைச்சிக்கிட்டு போயிட்டானா எந்த அளவுக்கு மந்திரம் போட்டிருப்பான்னு பாத்துக் கோயேன்”

ஊர்க்கிழவிகள் இப்படித்தான் பேசிக் கொண்டார்கள். தலையணை மந்திரம் என்றால் என்ன? அந்த மந்திரத்தை எப்படிப் போட வேண்டும்? என்பதைத் தெரியாதவர்கள் இந்தக் கிழவிகளிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த தலையணை மந்திரம் என்கிற வார்த்தையை அவர்கள்தான் அடிக்கடி உச்சரிக்கிறார்கள்.

ரகுராமனிடம் இதுபற்றிக் கேட்டால், அவன் சொல்வான்:

“”ஒருத்தர் சம்பளத்தை வச்சுயெல்லாம் இப்போ குடும்பத்தை நடத்துறது ரொம்ப கஷ்டமான காரியம். அவா இந்த ஒரு வருஷமும் படிச்சிட்டாவே வேலைக்குப் போயிடுவா. அப்புறம் அவா சம்பளமும் வந்ததுன்னா கஷ்டப்பட வேண்டாம்லா அதான்”

மனைவி வேலைக்கே போகக்கூடாது என்றவன், இப்போது தன் மனைவியை வேலைக்கு அனுப்ப ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்துப் படிக்க வைக்கிறானென்றால் அதற்கு அந்தக் கிழவிகள் சொன்னதைப் போல தலையணை மந்திரம்தான் காரணமா? ரகுராமனிடம் நெருங்கிப் பழகக் கூடியவர்கள் கொஞ்சம் அந்தரங்கமாக, ரகசியமாகக் கேட்டால் அவன் சொல்வான்:

“”ச்சீய்… அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. என் படிப்பு முடியற வரைக்கும் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னு அவா சொல்லிட்டா. அதனால எங்க ரெண்டு பேருக்கும் படுக்கை கூட இப்போ தனியாத்தான்” என்பான் ரகுராமன்.

திருமணத்தை முடிக்காமல் பிரம்மச்சர்ய விரதம் இருக்கலாம். இல்லையென்றால் திருமணத்தை முடித்து, குழந்தைகளைப் பெற்று, குழந்தைகளெல்லாம் வளர்ந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பிரம்மச்சர்ய விரதத்தை மேற்கொள்ளலாம். இதென்ன புது விரதம்? திருமணம் பண்ணிக் கொள்ளாமலேயே தாம்பத்யத்தை நடத்தலாம் என்கிற கலாசாரம் பரவி வரக்கூடிய காலகட்டத்தில் இப்படியொரு விரதமா?

ரகுராமன் சொன்னதைக் கேட்டவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். தலையணை மந்திரத்தைப் பற்றிப் பேசியவர்கள் இப்போது இந்தப் புதிய விரதத்தைப் பற்றிப் பேசினார்கள். “அடி ஆத்தி…’ என்று கன்னத்தில் கை வைத்தார்கள். இப்படியும் நடக்குமா? என்று அதிசயித்தார்கள். இதைக் கேள்விப்பட்ட ரகுராமனின் தாயார், அவனுடைய வீட்டுக்குப் படையெடுத்துக் கிளம்பி வந்துவிட்டாள்.

“”கல்யாணம் முடிஞ்சி பத்தாவது மாசத்துல பேரப் புள்ளைய பெத்துக் குடுக்கிறதை விட்டுட்டு இதென்னடி புதுக் கருமமா இருக்குது. இப்படி எங்காச்சும் நடக்குமா?” ரகுராமனின் தாய் வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தாள்.

ரகுராமன் தன் தாயை அமைதிப்படுத்தினான். அவளை அமைதிப்படுத்தி, சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் அவனுக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது.

புதிதாக திருமணம் முடிந்து ஒரே வீட்டில் தனியாக வாழ்கிற தம்பதிகள் ரகுராமனின் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது சாத்தியமாகுமா? சாத்தியமில்லை என்பதை அடுத்த மாதத்திலேயே ரகுராமன் நிரூபித்துவிட்டான். ஏனெனில் அவனுடைய மனைவி இப்போது கர்ப்பமாயிருக்கிறாள்.

இந்தக் குழந்தை உண்டானதை அவனுடைய மனைவி ஏதோ விபத்து நடந்துவிட்டதைப் போல நினைத்து, அந்த விபத்திலிருந்து தப்பிப்பதற்காக, “” குழந்தையைக் கலைத்துவிடலாம்” என்றாள். அதற்கும் ரகுராமன் தலையாட்டினான்.

அந்தப் புதிய விரதத்தைச் சரியாக கடைப்பிடிக்க முடியாததால் நடந்துவிட்ட விபத்தில் உருவான குழந்தையைக் கலைப்பதற்காக இருவரும் பெண் மருத்துவர் மலர்விழியிடம் சென்றார்கள். டாக்டர் மலர்விழி ஆச்சரியப்பட்டார்.

“”முதல் குழந்தையை ஏன் கலைக்கிறீங்க?”

“”இவா படிச்சிக்கிட்டிருக்கா. அதான் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சிப் பார்த்துக்கலாம்னு” ரகுராமன் சொன்னான்.

“”முதல் குழந்தையைக் கலைக்கிறது அவ்வளவு நல்லதில்லை. இந்தக் குழந்தையைப் பெத்தெடுக்கிறதுதான் உங்களுக்கு நல்லது”

“”டாக்டர் உங்க அட்வைஸ் எங்களுக்குத் தேவையில்ல. குழந்தையைக் கலைக்க முடியுமா? முடியாதா?” வெடுக்கென்று கேட்டுவிட்டாள் ரகுராமனின் மனைவி. டாக்டர் புன்னகைத்தார்.

“”டாக்டர்களுடைய அட்வைஸ் இல்லாம குழந்தையைக் கலைக்கக் கூடாதும்மா. நீங்க நாளைக்கு வந்து என்னைப் பாருங்க. க்ளீன் பண்ணிடலாம்”

இருவரும் டாக்டரிடம் விடை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

மறுநாள் ரகுராமனின் குழந்தை கருவிலேயே கலைக்கப்பட்டது.

ரகுராமனுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஏக சந்தோஷம். “இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று சபதம் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் எச்சரிக்கையாக இருந்தார்களோ இல்லையோ, ரகுராமனின் மனைவி கர்ப்பமாகவே இல்லை. அவளும் இப்போது படித்து முடித்து வேலைக்குப் போய்விட்டாள். ஆனால் குழந்தை மட்டும் அவளுக்குப் பிறக்கவே இல்லை.

அன்றைக்குக் குழந்தை வேண்டாம் என்று மருத்துவமனைக்குச் சென்றவர்கள், இன்று குழந்தை வேண்டுமென்று மருத்துவமனைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். பார்க்காத வைத்தியம் இல்லை. ஆனாலும் ரகுராமனின் மனைவி உண்டாகவில்லை. ரகுராமனின் தாய் துள்ளி குதித்தாள். முதல் குழந்தையை கலைத்தது அவளுக்குத் தெரியாததால், அவளை மலடி என்று ஏசினாள்.

மனைவியின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு, இதுநாள் வரைக்கும் தலையாட்டிக் கொண்டிருந்த ரகுராமன், இப்போது தலையாட்ட மறுத்தான். இதுநாள் வரைக்கும் வேலை செய்து கொண்டிருந்த மனைவியின் மந்திரம், இப்போது வேலை செய்யாமல் போனதென்ன? கணவனைத் தலையாட்ட வைத்த, தன்வசப்படுத்திய மனைவியின் மந்திரத்தால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லையே என்ற உண்மை தெரிந்துவிட்ட காரணத்தாலா?

எந்த உண்மை அவனுக்குத் தெரிந்ததோ, மனைவியின் மந்திர மயக்கத்திலிருந்தவன் மயக்கம் தெளிந்தவனாகக் காணப்பட்டு, அவள் மீது எரிச்சல் கொண்டான். முதல் குழந்தையைக் கலைத்தது தவறு என்பதை இருவரும் இப்போது உணர ஆரம்பித்தனர். அதுமட்டுமல்லாமல், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி சண்டை போட ஆரம்பித்தார்கள்.

குழந்தை இல்லாததைக் காரணம் காட்டி, ரகுராமனின் தாயார் அவனுக்கு இன்னொரு கல்யாணத்தை பண்ணிவிடலாம் என்று நினைத்தாள். அதற்கு அவனும் சம்மதித்தான். மனைவியின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு “அவளே சரணாகதி’ என்று கிடந்தவன், தன் தாயை எதிர்த்துப் பேசி தனிக்குடித்தனம் சென்றவன், அவளால் இனி குழந்தை பெற முடியாது என்பதால் அவளை விட்டுப் பிரிந்து இன்னொருத்தியிடம் சரணடைய சம்மதிக்கிறான் என்றால், மனைவியின் மந்திரத்தைவிட ஒரு குழந்தை என்பது சக்தி வாய்ந்ததல்லவா?

ஒரு குழந்தையைப் பெற வேண்டும் என்றுதானே அவன் அவளிடம் சரணடைந்திருக்கிறான்? அந்த சரணாகதி வெறும் சல்லாபத்துக்கு மட்டும்தான் என்றால் திருமண பந்தம் என்பது அவசியம்தானா? அவசியம் இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் இருவரும் வந்து, விவாகரத்து பண்ணிக் கொண்டார்கள்.

ரகுராமனின் மனைவி வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்ததால், அவளுக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அவள் யாரையும் சார்ந்திராமல், ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாள். கல்யாணத்துக்குப் பின்பு அவள் படித்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று? படிக்கவில்லையென்றால் அவள் இப்போது வேலைக்குப் போயிருப்பாளா? அவள்தான் தனியாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா?

ரகுராமனின் தாயார் எப்படியாவது அவனுக்கு இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிவிட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்தாள். எத்தனையோ பெண்களைப் பார்த்தார்கள். ஆனால் யாரையும் ரகுராமனுக்குப் பிடிக்கவில்லை. ரகுராமனின் தாய் எத்தனையோ முயற்சிகளை எடுத்தும், அவனுக்கு மறுமணம் செய்து வைக்க முடியவில்லை. ரகுராமனுக்குத் தனிமையின் தவிப்பு வாட்டியது.

மனைவியின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு “அவளே கதி’ என்று கிடந்தவன், இப்போது போக்கிடம் இல்லாமல் பரிதவித்தான். வேறு வழியில்லாமல், அவனுடைய முன்னாள் மனைவியைச் சந்தித்தான்.

“”லட்சுமி என்னை மன்னிச்சுடு. நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் குழந்தையாய் இருப்போம். நாம ரெண்டு பேரும் மீண்டும் கல்யாணம் பண்ணிக்குவோமா?” என்று கேட்டான். அவள், “”சரி” என்றாள்.

– கோடாவிளை த.அருள் (செப்டம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *