மனைவியை நைஸ் பண்ணத் தெரியனும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 4,884 
 
 

சண்டை போட்டா வீட்டுக்காரியைச் சரி படுத்தத் தெரியனும்.! இல்லேன்னா வில்லங்கம், விவகாரம், விவாகரத்து ! – இதுக்குப் பயந்துக்கிட்டுத்தான் இத்தினி காலமா பொண்டாட்டியோட சண்டை போடாமல் இருந்தேன். ஆனாலும் எத்தினி காலத்துக்குத்தான் இப்படி இருக்க முடியும்..?

நேத்திக்கு முதல் நாள். முந்தாநேத்து.

எனக்கும் என் மனைவிக்கும் சின்ன மனஸ்தாபம். வார்த்தைகள் முத்திப் போய் வாய் வார்த்தைகள் அத்துப்போச்சு.

முதல் நாள் அன்னைக்கி எனக்கும் கோபம் அவளுக்கும் கோபம். அவ பேசாமல் பொங்கிப் போட்டதைத் தின்னுட்டு நானும் பேசாம படுத்துட்டேன்.

இந்த இருட்டு எமகாதகனுக்குத்தான் மனுசன் நல்லது கெட்டது, நிலைமை புரியாதே..!- கட்டில்ல சாய்ந்த கொஞ்ச நேரத்துலேயே எப்போதும்போல் வந்து தொல்லை கொடுத்தான்.

“டேய் ! என் மூச்சு காத்து பட்டாலே போதும். அவள் என்னைக் கொன்னு மென்னு தின்னுடுவாள் ! அவ்வளவு கோபத்துல இருக்காள். இந்த சமயத்துல நீ வந்தேன்னு வாசனை அடிச்சா… அவ்வளவுதான் !! நான் தொலைஞ்சேன். மூச்சு காட்டாதே. ஓடிடு.!”துரத்தினேன்.

கேட்கிற ஆளா அவன். கயவாளி !!

முரண்டு பண்ணினான் .

என் முரட்டுத்தனத்தால ஆளை அடிச்சி துரத்தி சமாளிச்சுப் படுத்துட்டேன்.

ரெண்டாம் நாள். நேத்து…

காலையில் அவள் முகத் தூக்கலே எனக்கு மனசு பொறுக்கலை.

‘ராத்திரி ஒரு நாள் அவஸ்த்தையே போதும். இன்னைக்காவது இவளைச் சமாதானப் படுத்தி தினம் தொல்லை கொடுக்கிறவனுக்குத் தீனி போடனும்…! ‘ – னு தீர்மானிச்சு ….

மாலை அலுவலகம் விட்டதும் ஒரு கிலோ அல்வாவும், பத்து முழம் குண்டு மல்லியும் வாங்கி வீட்டுக்குள் போனேன்.

வெட்கத்தை விட்டு சமாதான வெள்ளைக்கொடியாய் இரண்டையும் நீட்டினேன்.

“எனக்குத் தேவை இல்லே !”முகத்தில் கொஞ்சமும் மலர்ச்சி இல்லாமல் என் முகத்தில் அடிச்சாப்போல சொல்லி முகரையைத் திருப்பி திரும்பிப் பார்க்காமல் போய்ட்டாள்.

எனக்கு ரொம்ப மான அவமனம் . ! – வழிஞ்ச ரெண்டையும் கைத்துண்டு எடுத்து முகத்தைத் துடைச்சிக்கிட்டு…ரெண்டையும் மேசை மேல் வச்சுட்டு அறைக்குப் போனேன்.

‘இப்படி தடாலடியாக கால்ல விழுந்திருக்கக் கூடாது. இந்த ஒரு விஷயத்துக்காகவாவது புருசன்கள் பொண்டாட்டிகள் கால்ல விழுந்தே ஆகணும்ன்னு எதிர்பார்த்தே… ஆண்கள் இன்னும் வாடி வதங்கி வழிக்கு வரட்டும்னு பெண்கள் முரண்டு பிடிப்பாங்க. அதான் இப்போ நடந்திருக்கு. நாமும் இன்னும் ரெண்டுநாள் விட்டுப் புடிச்சி, கோபத்தைத் தணிய வச்சி, ஆளை நைசா பேசி வழிக்குக் கொண்டு வந்திருக்கணும் ! ‘ன்னு நெனைச்சி.. கட்டிலில் கால்களுக்கிடையில் தலையணையனையைச் சொருகி படுத்தேன்.

கட்டிலுக்குச் சொந்தக்காரன் இன்னைக்கும் வந்து குதிச்சான்.

என்னிடம் வந்த தன் தூக்க எதிரியைச் சண்டைப் போட்டுத் துரத்தினான்.

நான் வழி இல்லாம…..

“ரோச முறுக்குல கொஞ்சம் புத்தி பிசகிட்டேன். நாளைக்கு எப்படியாவது உன் பசியைத் தீர்க்கிறேன் !”ன்னு கெஞ்சி கூத்தாடி அவனைச் சமாதானம் பண்ணி ஒரு வழியாய்த் தூங்கினேன்.

இன்னைக்கு ஞாயிறு. விடுப்பு தினம்.

‘எப்படி ஆளை வழிக்குக் கொண்டு வருவது…? ‘ன்னு நெனைச்சி…. உப்பும் இல்லாமல் உரைப்பும் இல்லாமல் போட்ட காலைச் சிற்றுண்டியை வாய்ப்பேசாமல் கம்முன்னு சாப்பிட்டு கப்புன்னு கிளம்பினேன்.

வழியில் மீன் மார்க்கெட். அதிசயமாய் அதிக அளவில் அங்கு நண்டுகள் தென்பட்டது.

‘என் மனைவிக்கு நண்டுகள் என்றால் உயிர் . பிடித்துக் கொண்டு போய் ஆளைக் கவுக்க வேண்டியதுதான் ! ‘நெனைச்சி…

பத்து பெரிய நண்டுகளாகப் பொறுக்கி எடுத்து விலை பேசி..வீட்டிற்குச் சென்றேன்.

“அனிதா ! உனக்குப் பிடிச்ச நண்டு !”எதிரில் வைத்தேன்.

“தூக்கிக் கொல்லையில் கொட்டுங்க…”அதை ஏறெடுத்துப் பார்க்காமல் கூட வெடித்தாள்.

“ஏன் செல்லம்..?”பார்த்தேன்.

“என்னை வெறியேத்தனும்முன்னே செய்யுறீங்க. என்னோட வாழப் பிடிக்கலைப் போல…..?” கமறினாள் .

“அனிதா..ஆ…”அரண்டு பார்த்தான்.

“பின்னே என்ன.? இன்னைக்கு அமாவாசை. இதைச் சமைக்க முடியுமா…? என்னால சாப்பிடத்தான்.முடியுமா…? இன்னிக்கும் நீங்க தொல்லை கொடுக்கக் கூடாதுன்னு உப்பு உரைப்பு இல்லாம சட்டினி வச்சு போட்டேன். அதுகூட புரியலையன்னா என்ன மனுசன் நீங்க…..?” பார்த்தாள்.

எனக்குள் சம்மட்டி அடி. ! நண்டுகளைச் சட்டென்று தூக்கி கொல்லையில் வீசினேன்.

ஐநூறு நட்டம் ! மனம் வருந்தினாலும்….

சண்டை, சச்சரவுகள் வந்தால்… பொம்பளைங்க புத்திசாலிங்க. புருசனைக் கைக்குள் போட்டுக்க வழி தெரியுது. எதை எப்படிச் செய்யனும்ன்னு புரியுது. ஆண்கள்தான் வழி தெரியாத முட்டாப்பசங்க. பொண்டாட்டியை நைஸ் பண்ணாத தெரியணும்ங்க.!!

என்ன சரிதானே..!! ?

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *