மனைவியும் காதலியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 5,830 
 

(இதற்கு முந்தைய ‘மகளின் வருகை’ சிறுகதையைப் படித்த பின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

ராஜலக்ஷ்மியும் ரேழிக்கு விரைந்து வந்து சுகுணாவை வரவேற்றாள்.

ஆனால் வீட்டினுள் வந்த சுகுணாவின் மனம் பூராவும் எரிந்துபோன மோட்டார் பைக்கின் மேலேயே இருந்தது.

“வந்ததும் வராததுமா எழவு நியூஸ்தான் இங்கே…”

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”

“என் புருஷனை உங்களை நம்பித்தானே இந்த ஊருக்கு அனுப்பினேன். அவருக்கு எது நேர்ந்தாலும் நீங்கதானே பொறுப்பு?”

“சுகுணா, இந்தப் பேச்சை எங்கிட்ட பேசாதே… அவர் நல்ல மாப்ளை மாதிரி இல்லை.”

“அதுக்கு ஏன் இப்படி கோபப்படறீங்க?”

“அவ்வளவு தூரத்துக்கு நான் கோவமா இருக்கேன்.. புரிஞ்சுக்க.”

“மாப்ள மேலயா?”

“எனக்கு வேற ஒரு விஷயமா கோபம். என்னன்னு கேக்காத… அது என் சொந்த சமாச்சாரம்.”

“உங்க சொந்த சமாச்சாரம் எதையும் நான் கேக்கல. பைக் எரிஞ்ச விஷயத்தைத்தான் கேக்குறேன். நம்ம ஊர்ல அதுவும் உங்க கண் முன்னாடி இது எப்படி நடக்கலாம்?”

“எனக்கு ரெண்டு விஷயம் மனசுல படுது சுகுணா… சொல்லட்டா?”

“சொல்லுங்க.”

“நான் உன்னிடம் சொல்லறதை நீ யார்கிட்டையும் வாயைத் தொறக்கக் கூடாது…சரியா?”

“சரி.” அப்போது ராஜலக்ஷ்மி சமையலறையில் கூர்மையாக நின்றாள்.

“என்னோட முதல் பாயிண்ட். உன் புருஷனுக்கு ஹைதராபாத்ல எவனோ பெரிய எதிரி இருக்கான். பைக்கை அங்கேயே தீ வச்சு கொளுத்திடலாம்னு நினைச்சிகிட்டு இருந்திருப்பான். எதனாலேயோ முடியாம போயிருக்கணும். அதான் நட்டநடு ராத்திரியில இங்கன வந்து காதும் காதும் வச்ச மாதிரி தீயை வச்சிட்டு ஓடியே போயிட்டான்…”

“அப்படிச் சான்ஸே கிடையாது அப்பா. அவரை எதிரியா நினைக்க யாராலேயும் முடியாது… அதுவும் இப்படித் தீ வைக்கிற அளவுக்கு…” சுகுணா ஆவேசத்துடன் மறுத்தாள்.

“போடி பைத்தியம்… அவனோட வண்டி எரிஞ்சிருக்கா இல்லையா?”

“அதனால அவருக்கு பெரிய எதிரி இருக்கான்னு அர்த்தமா?”

“எதிரி இல்லாம கிறுக்கனா தீ வைப்பான்? என்னோட ரெண்டாவது பாயிண்ட், நாலஞ்சி நாளைக்கு முன்னாடி உன்னோட கணவன் ஆத்துல முங்கி சாகப்பாத்த நம்ம மாடசாமி ஆசாரியோட மக புவனாவை காப்பாத்தினார்ன்னு ஊரெல்லாம் ஒரேபேச்சு. ஒரே ஆட்டம் பாட்டம்! அதையேன் கேக்குற… என்னோட பாயிண்ட் என்னன்னா மாடசாமி மகளை இவன் காப்பாத்தின அன்னைக்கு ராத்திரியோ இல்லை அடுத்தநாள் ராத்திரியோதான் பைக் தீ பிடிச்சி எரிஞ்சுது…”

“மாடசாமி மகளை அவர் காப்பாதினதுக்கும் அவர் பைக் எரிஞ்சு போனதுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? எதையாவது உளறாதீங்கப்பா.”

சபரிநாதனுக்கு கோபம் வந்தது. எனினும் கட்டுப் படுத்திக்கொண்டு, “சம்மந்தம் இருக்கு சுகுணா… அது நாம வணங்குற கேசவ பெருமாளுக்குத்தான் தெரியும்.” என்றார்.

சுகுணா பல நிமிடங்களுக்கு தீவிர யோசனையில் இருந்தாள். சபரிநாதன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி உட்காரவே முடியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதற்குமேல் பேச அவருக்கு பயமாக இருந்தது. அதனால் கண்களை மூடிக்கொண்டு அமைதிகாத்தார்.

சுகுணா எழுந்து கொண்டாள். சத்தம்போட்டு “ராஜி எப்பவும்போல எனக்கு இப்பவும் நம்ம வீட்லதான் சாப்பாடு… நான் போய் அவரைப் பார்த்து பேசிட்டு வரேன்…” சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.

சபரிநாதன் அவசரமாக, “நிதானமா பேசிட்டு வா… ஆனா நான் சொன்ன பாயிண்ட்ஸ் மட்டும் அவர்கிட்ட இப்போதைக்கு சொல்லவேண்டாம்…” என்றார்.

“சொல்லலைப்பா” சுகுணா கொஞ்சம் எரிச்சலுடன் சொன்னாள். அந்த எரிச்சல் சபரிநாதனின் கொந்தளித்த மனநிலையில் ஊசியாக இறங்கியது.

சுகுணா வேகமாக வெளியேறி சுப்பையா வீட்டுப் படிகளில் ஏறினாள். அவளுக்கு ஒரு உண்மையை புரிந்துகொள்ள முடிந்திருந்தது. அப்பாவுக்கு தன் கணவரிடம் ஏதோவொரு பிரச்னை இருக்கிறது. ஆனால் உடனே அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்கிற பொறுமை அவளுக்கு அப்போது இல்லை. சுப்பையா வீட்டுப் படிகளில் ஏறிய வேகத்தில்கூட அவளின் பொறுமையின்மை தெரிந்தது. மேல்படியில் ஏறியதும் சுகுணா நிமிர்ந்து பார்த்தாள். வீட்டுக்கதவு சாத்தியிருந்தது. கதவைத்தட்டி “என்னங்க” என்று கூப்பிட்டாள். தட்டிய வேகத்தில் வெறுமே சாத்தி வைக்கப்பட்டிருந்த கதவு லேசாக திறந்துகொண்டது. சுகுணா நன்றாக கதவைத்திறந்துகொண்டு வீட்டுக்குள் சென்றாள். உள்ளே சுப்பையா இல்லை…

சில வினாடிகள் வீட்டிற்குள் வெறுமே நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில்தான் சுப்பையா எங்காவது போயிருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் அடுத்த அறைக்கு நகர்ந்துசென்று பார்த்தாள். கொஞ்சமாகத்தான் பொருட்கள் இருந்தன. ஆயினும் ஒவ்வொன்றும் ஒழுங்காகவும் கச்சிதமாகவும் இடம் பெற்றிருந்தன. அங்கிருந்த சின்ன மேஜையின் மேல் மூன்று நிறங்களில் மூன்று பைல்கள் இருந்தன. சுகுணா மேலாக இருந்த பைலை கையில் எடுக்காமல் வெறுமே திறந்து பார்த்தாள்.

அதில் வண்ணமலர்க் கொத்துபோல ராஜலக்ஷ்மியின் பெரிதாக்கப்பட்ட புகைப்படம் பளபளப்புடன் தெரிந்தது. உடனே சுகுணா திகைத்து விட்டாள். இவரிடம் எப்படி அப்பாவின் புது மனைவியின் போட்டோ? அதுவும் இவ்வளவு பெரிய சைஸில்? அதுவும் இல்லாமல் நான்கு விதமான போட்டோக்கள்..?

சுகுணா உடனே பைலை மூடி வைத்துவிட்டாள். திறக்கக்கூடாத எதையோ திறந்து எதையோ பார்த்துவிட்ட சஞ்சலமும் கவலையும் அவளுக்குள் ஏற்பட்டுவிட்டன. வெகுளியான, அழகான ராஜலக்ஷ்மியை தன் கணவன் பேச்சால் மயக்கிவிட்டானோ! என்ற சந்தேகம் அவள் மனதில் முதல்முறையாக துளிர்விட்டது. நெருப்பையும் பஞ்சையும் அருகருகே வைத்தது தன்னுடைய முட்டாள்தனம்…. மனதில் விசனத்துடன் கணவருக்காகக் காத்திருந்தாள். ஐந்து நிமிடங்கள் கழித்து சுப்பையா வந்தான்.

“எங்கே போயிட்டீங்க கதவைக்கூட பூட்டாம?” வெடுக்கென்று கேட்டாள்.

“இதோ, வேதபாடசாலை வரைக்கும் போயிட்டுவரேன் சுகுணா.”

“நான் கேக்கிற கேள்விக்கு எதையும் மறைக்காம பதில் நீங்க சொல்லணும்…”

“நீ என்ன கேட்டாலும் எதையும் ஒளிக்காம பதில் சொல்றேன்…”

“வாட் இஸ் திஸ்?”

சுகுணா பைலை விரித்து ராஜலக்ஷ்மியின் போட்டோவை காட்டிக் கேட்டாள். சுப்பையா இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் திகைத்துப் போய்விட்டானே தவிர, பயந்து விடவில்லை. எப்படி விளக்குவது என்று தயங்கினானே ஒழிய தலை குனியவில்லை.

“சொல்லுங்க… இதெல்லாம் உங்ககிட்ட ஏன் இருக்கணும்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” அவள் குரல் உடைந்தது.

“இப்பவே தெரிஞ்சிக்கணுமா சுகுணா?”

“ஆமாம். இந்த நிமிஷமே தெரிஞ்சாகணும் எனக்கு. இவ்வளவு பெரிசா என்லார்ஜ் செய்யப்பட்டு அவளோட போட்டோஸ் உங்ககிட்ட இருக்கிறதுல விபரீதமான காரணம் ஏதாவது இருக்குமோன்னு பயமாயிருக்கு எனக்கு…”

சுப்பையா பெருமூச்சுடன் சொன்னான், “இந்த போட்டோவை நான் எடுத்தப்ப இருந்த காரணம் வேற சுகுணா. ஆனா இப்போ போட்டோக்களை பத்திரமா வச்சிண்டு இருக்கேனே, இதுக்கான காரணம் வேற… ஆனா என்னோட ரீஸனிங் ஒருவேளை விபரீதமானதா படலாம். விளக்கங்களை அடிப்படை விஷயங்களோடு சொல்றேன். நீயும் அதை அடிப்படை நிலையிலேயே தயவுசெய்து ரெகக்னைஸ் பண்ணிக்கோ… சுருக்கமா சொன்னா எல்லா காரணங்களுக்கும் உந்துதலா இருந்தது உன் அப்பாவோட விபரீதமான கேரக்டர்தான்.”

“…………………………….”

“இந்த நிமிஷம் எல்லா விஷயங்களையும் உன்கிட்ட சொல்லிவிடலாம் என்கிற மனோ நிலையில் நான் இல்லாவிட்டாலும்கூட, நீ கேட்டுட்டதால எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன். ஆனா இங்கேயிருந்து நாம் அதைப்பேச வேண்டாம். என்னோட இப்பவே வா… படித்துறைப் பக்கம் போய் உட்கார்ந்து எந்தக் குறிக்கீடும் இல்லாம பேசுவோம்…”

இந்த உரையாடலை தன்வீட்டு சமையலறை ஜன்னல் அருகே நின்றுகொண்டு உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்த ராஜலக்ஷ்மியின் உள்ளத்தில் பரவசமும், பயமும் மாறிமாறி சிலிர்த்துக்கொண்டன. கண்களை மூடி கேசவ பெருமாளை வேண்டியபடி நின்றாள்.

வீட்டுக்கதவை பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு சுப்பையா சுகுணாவுடன் வாசலில் இறங்கியபோது சபரிநாதன் அவருடைய வீட்டுத் திண்ணையில் நெடுமரம் போல நின்றுகொண்டிருந்தார். அவருடைய உணர்வுகளை மாயச்சூழல் ஒன்று சுப்பையாவுக்கு எதிராகவே சுழல வைத்தது. அந்த மாயச்சூழலில் சபரிநாதனுக்கு அவ்வப்போது தலையே நிலை கொள்ளாமல் ஆடியது. பக்கத்து வீட்டிற்குள் மகள் சுகுணாவும் இந்த மாப்பிள்ளைப் பயல் சுப்பையாவும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்களோ ஏது பேசிக் கொண்டிருக்கிறார்களோ என்ற அளவற்ற தவிப்பில் திண்ணையில் அவர் நின்று கொண்டிருந்தபோதுதான், இருவரும் படித்துறைக்குப் போவதற்காக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்.

அப்போது சுப்பையாவின் எதிரில் வந்த மாடசாமி மகள் புவனா தயங்கி நின்று சுப்பையாவைக் கும்பிட்டாள்.

“என்னம்மா இந்நேரத்ல எங்கே கிளம்பிட்டே?”

“கோயிலுக்குப் போறேன் அண்ணாச்சி. ஒங்க புது மோட்டார் பைக் பாத்தேன். பாக்கவே அழகா இருக்கு அண்ணாச்சி…”

“கோயில்ல சாமிகிட்ட புது பைக்குக்கும் யாரும் தீ வச்சிடக் கூடாதுன்னு வேண்டுதல் பண்ணிக்கறயா?”

“ஆயிரம் தடவைகள் வேணுமானாலும் பண்ணிக்கிறேன் அண்ணாச்சி.”

புவனா சிறிது நகர்ந்ததும் “யார் இது?” என்று சுகுணா கேட்டாள்.

சுப்பையா இதற்கு பதில் சொல்வதற்கு முன் தெருவில் குறிக்கிட்ட நாலைந்து பேர்களுக்கு அவர்களின் ஒவ்வொரு விதமான விசாரிப்புகளுக்கும் பதில் சொல்ல நின்றதில், திம்மராஜபுரத்தில் சுப்பையா மரியாதைக்கு உரியவனாக உயர்ந்திருப்பது தெரிந்து சுகுணாவுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *