மனைவியின் அப்பா

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,432 
 
 

பக்கத்தில் எங்கேயோ கரும்புச் சோகை களில் தீயைப் பற்றவைத்ததுபோல எங்கும் புகை மூட்டமாக இருந்தது. ஆனால், இது சுடரும் சேதாரமும் இல்லாத பனி மூட்டம்தான். கண்ணுக்கு எட்டிய தூரத்திலும் கண்ணுக்கு முன்னேயும் பனியே பரவி இருப்பதால், உலகம் எங்கும் பனியே மேவி உள்ளதோ எனச் சந்தேகம் வந்தது.

இந்த மலையடிவார நகரத்தில் நானும் என் மனைவியுமாக வந்து இறங்கினோம். எந்த நேரமும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், பனிப்பொழிவில் கூடுதல் குளிர். ஏறக்குறைய ஒரு முழு இரவு அவளுடன் பேருந்தில் பயணித்து வந்த நான், இந்தச் சிறு நகரத்தில் வந்து இறங்கிய பின்னால், அவளுடன் கை குலுக்கி அவளைத் தனியே வழியனுப்பிவைக்கிறேன். தன்னுடைய வீட்டுக்குத் தனியே செல்ல ஆயத்தமாகிறாள் அவள். இங்கிருந்து ஆட்டோ பிடித்தால், எட்டாவது நிமிடத்தில் அங்கு சென்றுவிடலாம்.

அவளுடைய வீடு என்றும் என்னுடைய வீடு என்றும் நான் பிரித்துப் பார்த்தது இல்லைதான். எங்கள் விடுமுறை நாட்களில் அங்கே நாங்கள் ஒன்றுகூடி இது ‘இருவருக்குமான வீடு’ என்று சில வருடங்கள் வாழ்ந்து இருக்கிறோம். அவளுக்குக் கை குலுக்குகிறேன். காற்றின் ஈரப்பதம் கைகளின் வெம்மையை உணரவைத்தது. இந்தக் குளிர் நேரத்தில் அவளுடன் இருப்பதைத் தவிர, பெரிய வேலை ஒன்றும் இப்போது எனக்கு இல்லை. அவளுடன் நானும் சென்றால் கதகதப்பான வெம்மையை அவளுடனும் குழந்தையுடனும் இருந்தவாறு கழிக்கலாம்தான். மழையை ஒட்டி மகளுக்கும் பள்ளியில் உள்ளூர் விடுமுறை அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும், இப்போது மனைவியுடன் இணைந்து ஆட்டோவில் ஏறிப் போக முடியாது.

மனைவியின் அப்பா1ஆட்டோ ஒன்றில் ஏறி அமர்ந்த அவளுடைய கண்களில் உருகிக்கொண்டு இருந்தது அரக்கின் சுடர்ப் பளபளப்பு. எந்தத் திசை போனாலும் பின்தொடரும் மோப்பமுடைய கண்கள். அந்தக் கண்கள் என் பின்னால் தொடர்வதாக நினைத்துக்கொண்டே, நான் வேறு திசையில் போகும் பேருந்து ஒன்றில் ஏறுகிறேன்.

பூமியின் ஜனத்தொகை குறைந்துவிட்டதோ எனச் சந்தேகப்படும்படி ஆட்கள் குறைவான பேருந்து அது. பேருந்துப் பயணம் ஏதோ புவியைத் தவிர்த்து விண் மார்க்கமாக ஏகுவதுபோல் இருந்தது. பேருந்து வாழைத் தோப்பு ஒன்றைக் கடந்துகொண்டு இருக்கிறது. அது எனக்கும் மனைவிக்குமான பழைய உரையாடல் ஒன்றை மனதில் தருவிக்கிறது.

”கல்யாண வீட்டில் ஏன் வாழை மரம் கட்டுகிறார்கள்? ‘கட்டாவிட்டால் விழுந்துவிடும்’ என்று பிளேடு போடுவதுபோலப் பதில் சொல்லக் கூடாது.”

”அப்படியானால் பதில் இதுதான்… நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக எதையாவது வெட்ட வேண்டும் என்றால், அதை வெட்டிவிட வேண்டியதுதான். அது கொப்பும் குலை தள்ளு வதுமாக இருந்தாலும் சரி.”

வாழைத் தோப்பினை அடுத்து பேருந்து செவ்வரளித் தோட்டம் ஒன்றைக் கடக்கிறது.

‘செவ்வரளித் தோட்டத்துல உன்ன நெனச்சேன்…’ மனதில் முழுப் பாடலின் சிறு நெல்லித் தித்திப்பைச் சுவைத்து முடிப்பதற்குள், வெங் காயக் காடு ஒன்று வந்துவிட்டது. மெலிதாக முறுவலிக்கிறேன். பொன்முறுவல் தாளிதத்தில் வெங்காயம் மூக்கையே நாக்கு ஆக்கிவிடுகிறது. சுவை மயக்கம் நீடித்தால், எண்ணெய்க் கிடப்பில் அதுவே தீய்ந்து கரிமண் ஆகிவிடுகிறது.

பக்குவத்தைத் தவறவிட்ட தருணம். அன்பே! நம்மை இந்தப் பிரிவு வந்து தீண்டியது. இந்தப் பிரிவின் ஆதாரக் காரணி என்பது பக்குவத்தைத் தவறவிட்ட ஒரு புள்ளிதான். இந்தப் பிரிவுக்கான சண்டையும் அவளுடன் அல்ல. அவளுடைய அப்பாவுக்கும் எனக்குமானது.

உறவு ஒரு வெங்காயம். பிரிவும் ஒரு வெங்காயம். சருகிதழ்கள் உள்முகம் குவிந்த ஒரு மலர் வெங்காயம்.

மனைவியின் அப்பா2பார்வையைத் தோட்ட வெளிகளில் இருந்து சாலையோர மரங்களுக்குத் திருப்புகிறேன். மற்ற வகை மரங்கள் பிடிப்பற்றுப் பின்னோக்கி ஓட… செங்கொன்றை மரம் மட்டும் கண்ணில் நிறைந்து உள்ளில் ஓடி, அதன் வேரோ ஆழத்தின் ஞாபகத்தை நிரடுகிறது.

முதன்முதலில் இதேபோன்ற செங்கொன்றை மரத்தடியில்தான் அவளைச் சந்தித்தேன்.

அது ஒன்றும் காதலர்கள் சந்திப்பு அல்ல. முறையான பெண் பார்க்கும் படலம்தான். பெண் பார்த்து முடித்துவிட்டு ‘பெண்ணுடன் ஆண் தனியே கொஞ்ச நேரம் பேச வேண்டும்’ என்பது நடைமுறைக்கு வந்துவிட்டபடியால், அவளுடன் பேசும் சந்தர்ப்பத்தில் இந்தக் கொன்றை மரமும் யதேச்சையாக அமைந்துவிட்டது. அந்தக் கட்டத்தில் நானும் அவளும் சம அளவு சம்பளம் வாங்குகிறவர்களாக வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்து வந்தோம். நான் ஓர் ஓவியனாக, அதே துறையில் மாதச் சம்பளம் பெறுகிறவனாகவும் இருந்தேன். அவள் கணினி நிபுணியாக அண்டை மாநிலத்து நகரில் வேலை செய்துவந்தாள்.

ஒருவேளை பெண் பார்க்கும் படலத்துக்கு அடுத்து ஜாதக மற்றும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்து போகாதபட்சத்தில் அவளை முற்றிலுமாக இழந்துவிடுவோம் என்கிற பயத்தில் அவளிடம் பேசினேன்.

”நாம் இந்தச் சேவற்கொண்டைப் பூ மரத்தின் மலர்கள் சாட்சியாகப் புரிந்துகொள்ளலாம். இதரரும் இயற்கையும் ஆமோதித்து நாம் ‘இணை’யாக ஆகாத பட்சத்தில், நட்பாகவேனும் நீடிப்போம்!”

என்னுடைய அந்தப் பேச்சு அவளைக் கூடுதலாகக் கவர்ந்துவிட்டது. அப்புறம் ஜாதகப் பொருத்தமும் பேச்சுவார்த்தைகளும் இயைந்துவந்ததால் திருமணம் உறுதிப்பட்டது. நாங்கள் இணைந்தோம். எங்களின் திருமணத்தின்போது நான் ஒரு பெருநகரத்திலும் அவள் வேறு ஒரு பெருநகரத்திலும் வேலை பார்க்கிறவர்களாக இருந்தோம். சில மாதங்கள் கடப்பதே பெரும் பாரமாக அமைந்தது. அவளுடைய வேலையின் பொருட்டு எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அவள் இருக்கும் ஊரிலேயே வாழ்வது என முடிவாயிற்று.

நான் புறத்திலிருந்து செய்யும் பணிகளின் மூலம் எனக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அதைக் கொண்டும், அவளுடைய சம்பளத்தைக் கொண்டும் வாழ்ந்துவிடுவது என்று தீர்மானம்ஆயிற்று. பிற்பாடு அவளது சம்பளம்தான் முக்கியப் பங்கு வகித்தது வாழ்க்கையில். நான் வேலையை விட்டது என்னையே இழந்ததைப் போன்றதான தவறான முடிவு என்றெண்ணிப் பிற்பாடு பலமுறை கலங்கினேன்.

கலையை வாழ்வாதாரமாக எண்ணி வாழ்வதில் ஒரே பிரச்னை என்னவெனில்… அது, வெற்றி அடைய வேண்டும். வெற்றி இல்லாதவனாகக் கலையைக் கட்டிக்கொண்டு வாழ்வது என்பது வாழ்வு, கலை, வாழ்வுக் கலை அவ்வளவை யும் பாழ்படுத்திவிடும்.

என் மனைவியின் முன்னேற்றத்தில் எந்தத் தடைகளும் வந்துவிடக் கூடாது என, அவளுடைய இருப்பிடத்தில் வாழ்வது என முடிவான பின்னால், அந்நாட்களில் என்னால் சோபிக்க முடியாமல் போய்விட்டது. ‘மகளைவிடக் குறைவாகச் சம்பாதிக்கிறவன் இவன்’ என்கிற எண்ண ஓட்டம் எப்படியோ என் மாமனாருக்கு உருவாகிவிட்டது. அது பல ரூபங்களில் வெளிப்பட்டுக்கொண்டே வந்தது. குறிப்பாக, மனைவி வெளிநாடு செல்வதாக முடிவான பின், நானும் மகளும் மாமனாரின் ஊரில் தங்குவதற்கான தருணம் வாய்த்த பின் அது அதிகமாகவே வெளிப்பட்டது.

‘எதாவது ஒரு ஓவியம் அல்லது மாயம்… என்னை உச்சத்தின் படிக்குக் கொண்டுசென்று விடும். அப்போது நான் அவளைப் போலவோ அல்லது அவளைவிடவோ சம்பாதிக்கிற ஆளாகவோ மிளிர முடியும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்தாலும், அது நம்பிக்கையாக உருமாறும் அளவுக்குக்கூடத் தரவுகள் வந்து சேரவில்லை.

கலையின் எளிய வெற்றிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் மனோபாவமும் மாமனாருக்கு இல்லை.

தூரிகை மற்றும் வரைபுலப் பலகைகளையும் தாள்களையும் வீடு பெருக்க வேண்டிய ஒரு விழா நாளில் மாமனார், ”இந்தக் குப்பைகளை எல்லாம் ஓரமாத் தூக்கிப் போட வேண்டியதுதான?” என்று கேட்டது, என்னை ரொம்பக் காயப்படுத்தியிருந்தது.

இப்போது நேர்ந்துள்ள பிரிவுகூட அதன் தொடர்ச்சியான விளைவுதான். கடும் கோடையும் காற்றடிப்பும் முடிந்துவிட்ட இந்தப் பருவத்தில், செம்மலரின் ஒற்றை இதழ்கூட மரத்தில் இல்லை. பேருந்தில் நான் பார்த்த கொன்றை மரத்தில் தண்டின், கிளைகளின் வண்ணங்கள்கூட மனம் கவரவில்லை. பேருந்து ஓடை ஒன்றின் மேல் பாலத்தில் நகர்கிறது. நதி எனப் பெயர் தாங்கிய ஓடை. மண்ணின் உள் அடுக்குகளில் கடைசி மேல் படலம் வரை ஈர நொதிகொண்டு கிடக்கிறது நதி.

இந்த நதியினுடைய ஊற்றுக்கண்ணின் முதல் முகம், இடது பக்கத்தில் உள்ள சரிவான மலைத் தொடரில் எதாவது ஒரு சிறு வளைவில் இருக்க வேண்டும். பேருந்து திரும்பியும் வளைந்தும் ஓடும் பாதைப் போக்கினூடே… ‘அன்பே… உனக்கும் எனக்கும் இடையில் தாழ் மேகங்களை அளாவிக்கிடக்கிறது மேற்குத்தொடர்ச்சி மலை!’

எப்போதும் நம்மிடையே கிடக்கிறது ஒரு கடல், ஒரு நதி, ஒரு மலைத்தொடர்ச்சி அல்லது குறைந்தபட்சம் ஒரு வீடேனும். அந்த வீடு எனது சொந்த ஊரின் வீடாகவும் இருக்கலாம். அல்லது மாமனார் கட்டிக்கொண்டு இருக்கும் இப்போதைய வீடாகவும் இருக்கலாம். என்னையும் குழந்தையையும் விட்டுவிட்டு வெளிநாட்டில் மனைவி வாழ்ந்து இரண்டு வருடங்கள் உழைத்ததில் கட்டியதுதான் இப்போதுள்ள மாமனாரின் வீடு. முன்பு கல்நார் வேயப்பட்ட கூரையாக இருந்த அந்த வீட்டை, மெத்தைக் கூரையாக மாற்றும் ஏற்பாட்டின்போதும் நானும் மாமனாருடன்தான் இருந்தேன்.

பேருந்து நின்று பெரும் உறுமல் ஒடுங்கும் இடைவெளிகளில் கார்காலப் பூச்சிகளின் இரைச்சல் கேட்கிறது. மழைக் காலத்தில் தவளைகள் பூச்சிஇனத்தைச் சேர்ந்ததாக மயங்கிவிடுகின்றன. தவிரவும் பறவைகள் ‘மழைக் காலப் பறவைகள்’ ஆகி அந்தியின் குடை விரிவது வரை சுற்றிப் பறந்தலைகின்றன. குறிப்பாக, றெக்கைகள் வண்ணம் மாறிவிடுகின்றன.

சூரியனின் ஒளிக்கதிர் றெக்கைகளைத் தொடும் முன் மாயக் கரம் ஒன்று இடையே முப்பட்டகக் கண்ணாடி ஒன்றைச் செருகிவிடுகிறது. அதே போன்றதொரு கண்ணாடி இப்போது மனைவியின் கைப்பையிலும் இருக்கக் கூடும் அவள் அறியாமலேயே. ஆனால், அவளது கைப்பையில் இப்போது உள்ளங்கை அகலம் உள்ள கண்ணாடி ஒன்று இருப்பதை அறிவேன். வெளிநாட்டில் இருந்து அவள் வாங்கி வந்த அரிய பொருட்களில் அதுவும் ஒன்று. அது முப்பட்டகக் கண்ணாடி அல்ல என்பது சிறு ஆறுதல்.

அவளுடைய பணிக்கு இடையே வெளிநாட்டுப் பயணத்துக்கான வாய்ப்பு உருவானபோதுதான், நானும் மகளும் மாமனார் வீட்டில் தங்கிக்கொள்வது என்கிற முடிவு செய்தோம்.

”அவருடன் இருப்பது சிரமம்” என்றாள் மனைவி. அவளுக்கு அப்பாவையும் தெரியும் கணவனையும் தெரியும் அல்லவா?

நான் அவ்வப்போது வேலை நிமித்தம் வெளியூர்களுக்குப் போய்வருவதனால், மகள் அங்கு இருப்பது என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

மாமனார் உண்ணும் நேரமும் உறங்கும் நேரமும் தவிர, ஓய்வே அறியாமல் தோட்டத்தில் உழன்று உழைத்துக்கொண்டே இருப்பார். அடுத்தடுத்து தனக்குத்தானே வேலைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிற அவருடைய திறன் கண்டு நான் வியப்படைவேன். நான் அவ்வளவு கடின உழைப்பாளி கிடையாது. எனது வாழ்க்கைமுறையிலும் உடல் அயர்ச்சி யிலும் ஓய்வுக்குப் பிரதான இடம் இருந்தது. இதுவும் எங்களிடையே பூசலுக்குக் காரணம் என்பதைக் காட்டிலும் இருவருடைய கடிகாரங்களும் வேறு வேறு. அதனால் காலண்டர்களும் வேறு வேறு என்று சொல்வதே பொருத்தம்.

தோட்டத்தில் சிறுசிறு வேலைகளை நான் செய்துவந்தேன். அது போதுமான அளவு என்றாலும்கூட மாமனார் விருப்பப்படும் அளவுக்குப் போதுமானதாக இருக்கவில்லை.

”இதை மட்டும் பண்ணீட்டா… அந்த வேலையை யாரு பாக்குறது?” என என் மகளிடம் ஜாடைமாடையாகச் சொல்ல, அப்புறம் நான் அதைச் செய்து முடிப்பேன். அவர் விழித்திருக்கிற நேரம் நானும் விழித்து உழைக்க வேண்டும் என்பது அவருடைய எதிர்பார்ப்பு. எனக்கோ இரவில் தூக்கம் இல்லாமல் இருப்பதும் பகலில் கணிசமான நேரம் உறங்குவதுமான பழக்கம். கையாலா காதவன் என்கிற பதத்தை மறைமுகமாக அவ்வப்போது என் காதுபடவும் படாமலும் சொல்லிக்கொண்டுவந்தார் மாமனார்.

இதன் நீட்சி வெளிநாட்டில் இருந்து மனைவி திரும்பிய இரண்டாம் நாளே வெடித்தது. அவளது கண் முன்னே நானும் மாமனாரும் கை கலக்கும் அளவுக்குப் போய்விட்டது. ஓர் ஆண்டு பிரிவில் இருந்தவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நானும் மனைவியும் மகளும் ஒன்றாக வரப்பு ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த அந்த மாலை நேரத்தை அவர் அனுமதித்து இருக்கலாம். ஒரு ஐம்பது ரூபாய்க்குச் சந்தையில் விற்கிற கிழங்கு பிடுங்குற வேலையைப் பாதியில் விட்டுவிட்டு வந்தேன் என்று கடுமையான சொல்லால் என்னைத் தாக்கினார்.

”சத்துக்கெட்ட…’

இப்படியான வார்த்தை என் அகராதியில் ஒப்புக்கொள்ள இயலாதது. இந்த உலகில் சத்துக்கெட்ட உயிர் என ஒன்றில்லை. அவருடைய சொல்லில் மறைக்கப்பட்ட பின்னொட்டு ரொம்பவும் என் கோபத்தைத் தூண்டுவதாக இருந்தது. எழுந்து சென்று அவரை அடிக்கப்போய், சின்ன அளவிலான கைகலப்பில் அது முடிந்தது. அந்த ரணத்தை நேர் அலங்காரங்களோடு விளக்கிவிட முடியாது. காலத்தின் கருணைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எனது கையில் தூரிகைக்குப் பதிலாக பேனா கத்தியோ அவருடைய கையில் அரிவாளோ இல்லாமல் போனது, எங்கள் இருவரையும் அல்லது இருவரில் ஒருவரைக் கொலைகாரர் ஆக்காமல்விட்டது. மனைவியின் மனதில் விலக்கிவிட முடியாத ஆறாத ரணம். வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டாவது நாள், அப்படியான மனக்காயத்தை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.

அவள் சம்பாதித்துக்கொண்டு வந்திருந்ததில் என்னுடைய விகிதாசாரம் ரொம்பவும் தாழ்ந்துபோய், அப்படித் திட்டுவதற்கு அவர் துணிந்து இருக்க வேண்டும்.

அப்போது எனக்குக் காலில் ஏற்பட்டு இன்னும் காயாமல் இருக்கிற காயத்தை உற்றுப் பார்க்கிறேன். சர்க்கரை வியாதி ஏதும் இல்லாததால் விரைவில் இது ஆறிவிடக்கூடியதுதான் என நம்புகிறேன்.

வலது குதிகால் பாதத்தின் மேல் பக்கம் உள்ள காயத்தின் மேல் ஈ ஒன்று வந்து அமர்கிறது. இது எனது சொந்தக் காயம். இதன் மீது உரிமை கொண்டாடுகிறது அந்த ஈ. புண்ணின் மீது அமரும் ஈக்களுக்குக் கருட நிலை வாய்க்குமா எனத் தெரியவில்லை. கொலை நோக்கம் இன்றி அதை விரட்டுகிறேன். ஏனெனில், இந்தப் பயணம் முடியும் வரை என்னோடு அது உடன் வருவதாயும் இருக்கலாம்.

இனி, மாமனாரின் வீட்டுக்குப் போவதில்லை என வைராக்கியத்தில் இருந்தேன்.

இப்போதைய அவளது இடம் இன்னும் முழுக்கப் பணி தீராத வீடு. இன்னும் கொஞ்சம் வேலைகள் பாக்கியிருக்கின்றன. உண்மையில் வீடு கட்டும் ஆவேசத்தில் கண் விழிப்பும் ஓய்வுமற்ற உழைப்பின் பலனாகத்தான் உணர்ச்சிவசப்பட்டு நானும் மாமனா ரும் சண்டை போட்டுக்கொண்டோமோ என்றும் தோன்றுகிறது. போதுமான ஓய்வு இல்லாவிட்டால் சண்டைகள் வரும் என்பதே உண்மையும் நியதியுமாகும்.

ஆட்டோவில் ஏறிய அவள் அங்கு இந் நேரம் பத்திரமாகச் சென்று சேர்ந்திருப்பாள். கட்டடப் பணி இன்னமும் முடியாத அவளுடைய வீட்டில் காங்கிரீட் கூரை வேய்வதற்காக முற்றத்துக் கெட்டித்த கம்பி ஜல்லித் தூணில் நீர் பொசித்த நினைவாடுகிறது எனக்கு. அவள் சென்று வெள்ளையடிக்கப்போகும் கூரையில் நிழல் இல்லை இப்போது எனக்கு.

பேருந்து கடக்கும் இந்தச் சிற்றூரில் அவளது பெயர் தாங்கிய பலகை ஒன்று நினைவின் ஆழக் கொழுவினை இழுத்துவருகிறது. புடலைக் கொடி பூத்த பந்தல் ஒன்றின் தாங்கு கால்களுக்கு இடையே புள்ளினம் ஒன்று தத்தி அமர்கிறது. வழியில் போகும்போது ஒற்றை மைனாவைப் பார்த்தால் சோகம் மிகும் என்றும், இரண்டு மைனாக்களைப் பார்த்தால் மகிழ்ச்சி மிகும் என்றும் சொல்லி இருக்கிறாள் அவள். அந்த இன்னொரு மைனாவை இப்போது ஆவலாகக் கண் தேடுகிறது. மூடநம்பிக்கையோ இது?

இரட்டை மைனாக்களைப் பார்ப்பதற்கு நிகழ்தகவு அதிகம். நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் இரட்டை மைனாக்கள். சோகமோ மகிழ்வோ நிகழும்போது மைனாவைப் பார்த்தது மறந்துவிடுவது என்பது மைனாக்களின் கொடுப்பினை.

மைனாக்களை மறந்துவிட்டிருந்த நேரம் பேருந்து நிறுத்தம் ஒன்றில் இரண்டு சீட்டுகளுக்கு முன்னிருந்து ஒரு பலூன் எழுகிறது. மேகமற்ற பகல் வானத்தின் நிறம்கொண்ட பலூன். அதையட்டிய மஞ்சள் வண்ணமும் பச்சை வண்ணமு மான பலூன்கள். அவை ஒன்றோடு ஒன்று காற்றுக் குச்சி ஒன்றின் மேல் பிணைந்து கட்டப்பட்டு மிதக்கின்றன.

பலூன் செண்டுடன் இறங்கும் அந்தப் பெண் திருமணம் ஆனவள் என்பதான அடையாளங்களைச் சுமந்திருக்கிறாள். அநேகமாக பலூன்கள் அவளது குழந்தைக்காக இருக்கலாம்.

”நீ உன் மணாளனையும் மழலையையும் சடுதியில் அடைவாயாக!’ என்று ஆசியிடத் தோன்றுகிறது. பலூன் பெண்ணாகப்பட்டவள் விளையாட் டுப் போட்டிகளின் அடையாளச் சுடர் ஏந்தும் வீராங்கனைபோலக் காட்சியளித்தாள். பலூன் உடைவதற்கு முன்னால் அவள் குழந்தையைச் சென்று சேர வேண்டும். ஏனென் றால், குழந்தைகளின் கைகளில் உடைபடுவதற்கு முன் காற்றுக்கு நிறங்கள் உண்டு.

வாகனச் சக்கரங்களைவிட வேகமாக மேகங்கள் விரைகின்றன. மேகங்கள் சூழ்ந்தலைந்து அடுப்புச் சாம்பல் நிறம்பெற்று மெதுமெதுவாகக் கருக்கின்றன. பேருந்து ஒரு பல்லக்காகக் குறுகிவிட்டதான உணர்வு. கதவும் காற்று வழியும் ஒன்றேயாகிப்போன என் சாளரப் பார்வையில், கையில் குச்சிகளும் காவடிப் பாங்கில் தோளில் தொங்கும் துணித் தொட்டில்களுமாக மலையடிவாரத்தில் இரு பெண்கள். மலையின் உச்சித் திசை நோக்கிப் போகும் பாதையில் ஒருவர் பின் ஒருவராக நடக்கிறார்கள். இடது கையில் காவிய ஏட்டுச் சுவடிகள் அவர்கள் குறி உரைப்போர் எனக் காட்டுகிறது. அவர்கள் ஒரு குறி உரைத்து நீயும் நானும் ஒன்றென இணைந்தால் எப்படி இருக்கும்.

மழைச் சரம் நிலம் துளைக்கும் மங்கலான நேரமிதில் மலை உச்சியில் நானும் நீயும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

பயணத்தில் நான். தொடர் மலையின் உடும்பு முதுகுக்குப் பின்னால் நீ…

விடாது பற்றுகிறது நினைவின் தீ. மலை கண்டு நெட்டுயிர்க்கும் என் முகத்தில், உணரும் மழையின் புணரும் முதல் துளி.

அந்த ரசாபாசத்துக்குப் பின்; அப்போதைய பிரிவுக்குப் பின், மனைவியின் நடவடிக்கை மட்டுமே என்னுடையதும் அவளுடையதுமான நிலையைத் தீர்மானிக்க வேண்டியதாக இருந்தது. நல்ல வேளையாக எனக்கும் மாமனாருக்குமான சண்டை எங்களை நிரந்தரப் பிரிவில் கொண்டுவிடவில்லை. மனைவி என்னையும் அவளது அப்பாவையும் ஒரு சேரக் கடிந்துகொண்டாள். நானும் மாமனாரும் ஒரே இடத்தில் இருப்பது நல்லதல்ல என முடிவு செய்தாள். மிக விரைவில் அவளது பழைய பெருநகரத்தில் வேலையைச் சம்பாதித்துக்கொண்டு, மகளையும் என்னையும்

தன்னோடு கூட்டிக்கொண்டாள். எனது சொந்த ஊரில் இருந்து கிளம்பிப் போய் மகளோடும் மனைவியோடும் இணைந்துகொண்டேன்.

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு தனது அப்பாவுடன் போனில் பேச ஆரம்பித்தாள். அவ்வப்போது கைமாறும் போனில் நான் மாமியாருடன் எப்போதாவது பேசுவது உண்டே தவிர, மாமனாருடன் பேசுவது கிடையாது.

தான் கர்ப்பமுற்றிருக்கிற செய்தியை அவரிடம் சொன்னபோது மகிழ்ச்சி தெரிவித்தவர், அடுத்த தொலைத்தொடர்பு நாட்களில் ‘கவனமா இரு… பத்திரமா இரு…’ என்று அன்பைப் புலப்படுத்தியவண்ணம் இருந்தார்.

குழந்தை பிறந்தபோது விவசாய வேலைகள் தன் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு இருப்பதால் எங்கும் நகர முடியவில்லை என உடனடியாக வரவில்லை.

ஓரிரு மாதங்கள் அப்படிக் கடந்த பின் அப்பா வும் மகளும் பேசிக்கொண்டதை அடுத்து, குழந்தைக்கு முடி எடுக்கிற விழாவைப் பதினோ ராவது மாதத்தில் பார்த்துக்கொள்ளலாம் என முடிவு எடுத்தார்கள்.

நீண்ட தூரம் பேருந்தில் கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய் அலைக்கழிய வேண்டாமே என அப்படி ஒரு முடிவு.

குழந்தைக்கு ஆறு மாதம் முடிவதற்கு முன்னதாகவே காதுத் தோடு எடுத்துவைத்துவிட்டதாக போன் செய்தார். தோடு எடுக்கப் போய் வந்த கதையை ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் அவர் என் மனைவிக்கு விவரித்ததை அவள் பிற்பாடு சொன்னாள்.

நாங்கள் ஒரு கார் பிடித்து அவரைப் பார்க்கப் போக வேண்டி வரும் என்பது அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை என அக்கடா என ஆசுவாசித்திருந்த சனிக்கிழமை மாலை மாமியாருக்குப் போன் செய்தபோது, அவர் நன்றாக இருக்கிறார் எனச் சொன்னார். ‘ஒரு தடவை போனை அவரிடம் தரச் சொல்லலாமா’ என்கிற எண்ணம் எனக்குள் தழைத்தது. பின் அந்த எண்ணம் உடனே உதிர்ந்து போயிற்று.

மனைவி மட்டும் அவருடன் பேசினாள். அப்புறம் நாங்கள் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கத் தயாராகிற பத்து மணிக்கு அலைபேசி அழைத்தது. அவர் அமரராகி விட்டார்.

கார் பிடித்துப் போய்ச் சேர்ந்தபோது காலையில் அவர் கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்தார்.

”ஒரு ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில வெச்சுப் பாக்கக்கூட இல்லாமப் போயிட்டீங்களே அப்பா!” என என் மனைவி அழுதாள்.

எங்கோ வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதில் மழையும் வெயிலும் மாறி மாறி வரும் கார்த்திகை மாதத்து நாளாக இருந்தது அது. மாலையில் போய் அடக்கம் முடித்துவிட்டு வீடு மீண்டோம். நேற்று மாலையில் அவர் வைத்த மூன்று தென்னங்கன்றுகள் காற்றில் படபடத்துக்கொண்டு இருந்தன. இறப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு வரை குழி தோண்டி மூன்று தென்னங்கன்றுகளை நட்ட உழைப்பாளி.

உறவும் உறங்காக் கண்களும் ஆங்காங்கே பசியிலும் சடைவிலும் விழித்திருக்கும் முன் இரவு திகைந்துவிட்டது. சட்டென மின்னல் வெட்டி மழை பிடித்துவிட்டது. மின்னலின் மழை ஒளிரலில் இன்னும் ஒரு முறைகூடப் பார்த்திராத, இனி பார்க்கவே இயலாத தன் பேத்திக்கு அவர் வாங்கிவைத்திருந்த காதுத் தோடு நினைவுக்கு வந்துவிட்டது.

தாழ்வாரத்துக்குப் பக்கத்தில் நின்றிருந்த என் மீது முதலில் மழைத் துளி வீழ்ந்தது. அப்புறம் மனைவி வந்து என் நெஞ்சில் தலையால் மோதி கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

”ஐயோ! அப்பா மழைல நனைவாரேப்பா… மழையில நனைவாரேப்பா…”

வார்த்தைகளற்றுச் சொல்ல எத்தனிக்கும் ஏதேதோ வெளிப்பாடுகள் மழையை ஊடுருவிப் போகும் வல்லமையை இழந்திருக்கின்றன. அவருடைய குழி நிலம் சேற்றுப் பகுதியாக மாறிக் கொண்டு இருக்கும் இப்போது, ஒரு பறவை எச்சத்தில் ஒரு விதையாக அந்தச் சேற்றில் விழுந்து தாவரமாக முளைப்பது ஒன்றே எனது இப்போதைய விருப்பமாக இருந்தது. கண்ணில் பொங்கும் உப்பு மழைத் துளிகளுடன் மனைவியை மெள்ள அணைத்துக்கொள்கிறேன். சூடான மழைத் துளி நெஞ்சை நனைக்கிறது.

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

1 thought on “மனைவியின் அப்பா

  1. அருமையான சிறுகதை, உண்மையில் உணர்ச்சிகளின் வெளிப்பாடு மற்றும் எண்ணங்களின் போரட்டங்கள் அருமையாக சித்தரிக்க பட்டு இருந்தது. வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *