(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஏங்க இந்த கிச்சனுக்கு பின்னாலே இருக்கற வராந்தாவுலே வாஷிங் மிஷின் வெச்சிருக்கோமே அதுக்கு பின்னாலே ரெண்டு புறா எங்கிருந்தோ குச்சியெல்லாம் கொண்டாந்து கூடு கட்டி இருக்குது. ரெண்டு புறாவும் அங்கங்கே கழிஞ்சி வெக்குது. வீடே நாறுது, அதைத் துரத்துங்க என்றாள் காமினி.
அங்கே போய்ப் பார்த்தேன், என்னை தள்ளிக்கொண்டு ஜோடியாகப் படபடவென்று பறந்து போனது ரெண்டு புறாவும். அவை பயந்து பறந்ததோ என்னைப் பயமுறுத்தப் பறந்தோ. உண்மையில் திடுக்கிட்டுப் பயந்தது நான். ஜன்னல் கதவுகள் வாஷிங் மிஷின் மேலெல்லாம் புறாக்களின் எச்சம்.
வாஷிங் மிஷின் பின்னால் கூடு கட்டி இல்லறம் நடத்தி இரு குட்டிகள் வேறு போட்டிருந்தன. அந்தக் குட்டிகளைப் பார்க்க பாவமாய் இருந்தது. சரி அந்தக் குட்டிகளுக்கு ரெக்கை முளைச்சதும் பறந்து போயிடும் இப்போ துரத்தினா எப்பிடி புறா தன்னோட குட்டிகளை தூக்கிண்டு போவும், கொஞ்சநாள் பொறுத்துக்க என்றேன்.
இரண்டு வாரம் கழித்து சிறகுகள் முளைத்து இரண்டு புறாக்குட்டிளும் பறந்து போனது. நானும் காமினியும் வாஷிங் மிஷினை நகர்த்தி, அந்த இடத்தை சுத்தம் செய்து வைத்தோம். அன்று மாலையே மீண்டும் அந்தப் புறாக்கள் வழக்கமாய் தாங்கள் வந்து உட்காரும் இடத்தில் சமையலறையின் ஜன்னல் கதவுமேல் வந்து அமர்ந்தது.
மீண்டும் இவை இல்லறம் நடத்தும், வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு இதமாக, அமைதியாக அந்தப் புறாக்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இதோ பாருங்க ஒரு முறை உங்களுக்கு இடம் கொடுத்தேன், உங்க குட்டிகளையும் பத்திரமா தொந்தரவு செய்யாம காப்பாத்திக் கொடுத்தேன், அதுனாலே இனிமே இங்கே வராதீங்க, வந்தா துரத்துவேன் என்றேன்.
புறாக்களும் புரிந்தாற் போல படபடவென்று பறந்து போயின. இரவு யதேச்சையாய் ஏதோ சத்தம் கேட்க வராந்தாவில் எட்டிப் பார்த்தேன், அதே புறாக்கள் திருட்டுத்தனமாய் அதே கதவுகள் மேல் உட்கார்ந்திருந்தது. கையில் கிடைத்த மூங்கில் கழியால் அவைகளை மிரட்டி விரட்டினேன்.
அங்கே வந்த காமினி என்னாங்க அதிசியமா இருக்கு? நீங்க புறாவையெல்லாம் துரத்த மாட்டீங்களே, என்ன ஆச்சு உங்களுக்கு என்றாள் காமினி நல்லா யோசிச்சுப் பாரு. பெத்து வளத்து ஆளாக்கின பெத்தவங்களையே பிள்ளைங்க மனிதாபிமானமோ, நன்றியோ இல்லாம வீட்டை விட்டுப் போகச்சொல்றாங்க. இவங்க இந்தப் புறாக்களுக்கா மனிதாபிமானம் காட்டுவாங்க . அதுனாலேதான் இந்தப் புறாக்களின் நன்மைக்காகத்தான் துரத்தறேன். பாவம் அதுங்களாவது வேற இடத்திலே போயி நிம்மதியா இருக்கட்டும்.
சொல்லிகிட்டே இருக்கேன் அதுங்க புரிஞ்சிக்காம அடம் பிடிக்குதுங்க, மறுபடியும் இங்கேயே வந்து உக்காருதுங்க. எல்லாத்தையும் வெளிப்படையா சொல்ல முடியுமா? நம்மோட நல்லதுக்குதான் சொல்றாங்கன்னு புரிஞ்சிக்கிட்டு அடங்கி நடக்கணும் இல்லே சொன்னா கேக்கணுமில்லே நியாயத்துக்கு அடங்க மறுத்தா சிங்கமா இருந்தாலும், புலியா இருந்தாலும், புறாவா இருந்தாலும் தண்டிச்சுதான் ஆகணும் என்றேன் நான்.
புரியாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் காமினி.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.