மனிதக் குரங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 181 
 
 

உதடுகளை மூடிக்கொள்ள முடியாதபடி முன்னோக்கிய மேற்பல் வரிசை; சிறிய பரிதாபகரமான கண்கள்; புருவங்களே இல்லை என்று சொல்லிவிடலாம். ‘குறூ’ தலை அலங்காரம். இலங்கைக்கு வரும் முன்னரேயே பொருளாதார நோக்கம் கருதிக் கால் அங்குலத்துக்கு மேல் நீளாது வெட்டி விடப்பட்ட தலைமயிர்; சிறிய காதுகள்; வறுமையினால் இளமையிலேயே நரையும் திரையும் தேங்கிவிட்ட கன்னங்கள்…

ஏன்? இப்படி அசிங்கமான வர்ணனை செய்வதைவிட அது ஒரு குரங்கு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால் அப்படிச் சொல்வதற்கு இல்லை. அது ஒரு மனிதன்; கந்தசாமி என்று பெயர். அவனை உண்மையாகவும் முற்றாகவும் அறிந்தவர்களுக்கு அவன் பெயர் “கந்தூஸ்” அல்லது “கந்தா”.

ஆனால் என்றுமேதான் நாம் யாரையும் முற்றாக அறிந்து கொண் டோமா? மென்மையாகப் பேசுகின்ற பொருளாளியைக் கனவான் என்கின்றோம். தன் குறைகளை மறக்க அதிகாரத் தொனியுடன் பேசும் ஒரு வனை ஆளப் பிறந்தவன் என்கின்றோம். இரண்டொரு பத்திரிகை களைப் படித்துவிட்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் மேற்கோள் கூறுபவனை அறிவாளி என்று கூறுவதற்குக் கூட நாங்கள் தயங்குவ தில்லை. ஆனால் ‘கந்தூஸ்’ அப்படி எல்லாம் இல்லை.

நான் அவனை வெகு நாட்களாகவே அறிந்திருக்கும் பாக்கி யத்தைப் பெற்றிருந்தேன். ஆமாம் பாக்கியம்தான்; பூர்வ புண்ணி யத்தின் பயன் என்று கூடக் கூறுவேன். ஏனென்றால் அவனுடைய இருதயம் வைரத்திலும், வைடூரியத்திலும் பார்க்க மதிப்பில் உயர்ந்தது. வைரத்தையும் வைடூரியத்தையும் எந்தப் பொற்கொல்லனும் எந்த நகை வியாபாரியும் மதிப்பிட்டு அதன் பெறுமதி இத்தனை ரூபா இத்தனை சதம் என்று சொல்லி விடலாம்… அந்தக் குரங்கு முக மனிதனின் இருதயம் அனிச்சம்பூவிலும் மென்மையானது. அது கூட எந்த வரட்டுக் கவியும் உவமை சொல்லிக் கழித்துவிடலாம் – ஒரு கற்பனைப் பெண்ணின் கால்களுக்கு உவமையானது என்று!

ஹ! பெண்ணின் கால்கள், பாதங்கள்! இவைதானா அனிச்ச மலரின் மென்மைக்கு உவமை? பெண்ணின் இருதயத்தைக் கூறி னாலும் பாதகம் இல்லை. அதுவும் லட்சத்தில் ஒரு பெண்…

***

அந்த லட்சத்திலே ஒருத்தியான ஒரு பெண் என்றுதான் நினைத்தேன். கந்தூஸும் அப்படி நினைத்திருக்கக் கூடும். அவள் பெயர் காமசௌந்தரி. சிவகாமசௌந்தரி என்பதன் திரிபு. காலப் போக்கில் சிவம் உதிர்ந்து, காமமே சௌந்தர்யமாய், சௌந்தர்யமே காமமாய், காதலாய், கணம் யுகமாய், யுகமே கணமாய்… அவை எல்லாம் பிறகு நடந்தவை.

கந்தூஸைச் சிறுவயது முதற்கொண்டே நான் அறிவேன். அவனை மற்ற மாணவர்கள் கொரில்லா என்று கேலி செய்ய நான் அண்ணே என்று அழைத்த காலம் அது. அதற்குக் காரணம் உண்டு. கணித ஆசிரியர் உன்மத்தம் கொண்டு – ஆமாம், உன்மத்தம்தான் – பூவரசம் கட்டையால் கன்னத்தில் கருணையே இன்றி விளாசி என் கன்னம் பள்ளிக்கூட வாயிலில் பையன் களுக்கு வியாபாரம் பண்ணும் பிட்டு வாணிச்சியம்மை விற்கும், மூன்று நாள் வயது சென்ற கொழுக்கட்டை போலச் செந்நிறம் பாய்ந்து வீங்கிய பொழுதெல்லாம் கந்தூஸ்தான் என் கண்ணீரைத் துடைத்துத் தேற்றியவன்.

“இந்த அறுந்துபோன கணக்குப் பாடத்தை வீட்டில் கொஞ்சம் படித்துக் கொண்டு வரப்படாது?”

“போ, அண்ணே ! இந்தக் கணக்குப் பாடம் யாருக்கு வேண்டும்?”

“இலக்கியப் பாடத்தில் நூறு புள்ளி எடுத்தாலும் கணக்குப் பாடத்தில் தொப்பி என்றால் சோதனையே தொப்பி!”

“வீட்டில் எனக்குக் கணக்குப் பாடம் சொல்லித்தர யாரும் இல்லை.”

எனக்கு மறுபடி அழுகை!

“சீ! இதற்கு அழுவார்களா? ஒவ்வொரு நாளும் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் நான் ஒரு மணி நேரம் உனக்குக் கணக்குப் பாடம் சொல்லித் தருகிறேன்” என்று கணிதத்தில் நிபுணனான அந்தக் “கொரில்லா” சொன்னதோடமையாது, மாலை தோறும் என்னை ‘மார்பிள்’ விளையாடவும் விடாமல் பலவந்தமாக மறித்து வைத்து எனக்குக் கணிதம் ஊட்டுவான்…

ஆனால், சிலசமயம் என் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு நானும் அவனை “கொரில்லா” என்று பழிப்பதுண்டு. இதற்கு எல்லாம் அவன் கோபம் கொள்வதே கிடையாது. அவன் எதற்கும் யார்மேலும் எந்தக் காலத்திலும் கோபப்பட்டது கிடையாது. அவன் கருணையே வடிவானவன்.

அதன்பிறகு பத்து வருடங்களாக அவனை நான் காணவே இல்லை. சோதனைகளில் எல்லாம் சித்தியடைந்து பட்டங்கள் பெற்று, ஒரு வக்கீல் ஆகி கறுத்த கோட் அணியும் இளம் பட்டினிப் பட்டாளத்தில் நானும் ஒருவனாகச் சேர்ந்து கொண்டிருந்தேன். அச்சமயம்! ஒருநாட் காலை முதல் மாஜிஸ்ரேட் கோர்ட்டில் போய் இருந்து அனுபவசாலிகளான மற்ற கறுத்த கோட்டவர்கள் வழக்குகள் நடத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கோட் பையில் அன்றைய வருவாய் என்று ஒன்றும் இல்லாமல் வீதியை நோக்கி நிலத்தைப் பார்த்த வண்ணம் நடந்து கொண்டிருந்தேன். ஒரு திருப்பத்தில் யாரோ என்மேல் மோதினார்கள். நான் சிறிது கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தேன், மறுகணம் “அண்ணே! நீயா?” என்று அலறியே விட்டேன்.

இளைய பள்ளி நாட்களில் ஒரு அழுக்குப் படிந்த நாலு முழ வேஷ்டி மட்டும் அணிந்திருந்த கந்தூஸ் எனப்படும் கந்தசாமி இப்பொழுது அதேபோல் அழுக்குப்படிந்த மலிவான எட்டு முழ வேஷ்டியும் கிழிந்த ஒரு ஷர்ட்டும் அதற்குமேல் நிறம் மங்கிப் போன ஒரு கோட்டும் அணிந்திருந்தான். அத்துடன் பொருக்கு வெடித்த பாதங்களில் ஒரு சோடி குதிதேய்ந்த அரைச்சப்பாத்து! ஆனால் முகமும் தலையும் அதே பழைய கொரில்லாதான்…. அவனுடைய வறுமைக் கோலம் என் மனத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது. அவனது கொரில்லாச் சிரிப்பிலோ பேச்சிலோ சோகமோ கவலையோ இல்லை.

“ஐசே! நீ… நீங்களா?” என்று தடுமாறிச் சிரித்தான். “நீங்கள் வக்கீல் சோதனை பாஸ் பண்ணி இந்த நகரில் தொழில் ஆரம்பித் திருப்பதாகக் கேள்வியுற்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்!”

“ஆனால், அண்ணே! நீ?”

“ஒரு குமாஸ்தா வேலை தேடித் திரிகிறேன். அதற்குள் சட்டக்கல்லூரி மாணவர்களுக்குப் பாடக் குறிப்புக்கள் ‘டைப்’ செய்து விற்று வருகிறேன்.”

“எவ்வளவு ஊதியம் கிடைக்கிறது?”

“ஏதோ, என் வயிற்றுப் பாட்டையும் பார்த்து என் தம்பியின் பள்ளிக்கூடச் செலவும் கட்டி வருகிறேன்.”

“எங்கே குடி இருக்கிறாய்?” –

“ஒரு விடுதியில் ஒரு சிறிய அறை கிடைத்திருக்கிறது. அதுவே பெரிய பாக்கியம். மாதம் ஐந்து ரூபாதான் வாடகை.”

அவனுடைய மேனியில் காணப்பட்ட சோர்வு எனக்குக் கவலை உண்டாக்கிற்று. “உன் உணவு?” என்று கேட்டேன்.

“இந்த நகரம் நிறையத்தான் சோற்றுக் கடைகள், ரொட்டிக் கடைகள், தோசைக் கடைகள் எத்தனையோ இருக்கின்றனவே!” அவன் சிரித்தான்.

“ஆனால் நீ என்னுடன் வந்து இருந்துவிடேன். ஒரு சிறு வீட்டில் நான் தனியாகவே இருக்கின்றேன். அதில் என் அலுவல கத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறேன்.”

“வேண்டாம், அது உங்களுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் உங்கள் அலுவலகத்தில் ஏதாவது எழுத்து வேலை, டைப் அடிக்கும் வேலை இருக்கும். அதை வந்து நான் செய்து தருகிறேன். புதிதாக வக்கீல் தொழில் ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு ஒரு குமாஸ்தா வைத்துச் சம்பளம் கொடுக்கமுடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால் சம்பளம் எதுவும் இல்லாமலே செய்து தருகிறேன். உங்கள் டைப் அடிக்கும் யந்திரத்தையும் சில சமயம் என் தேவைக்கும் பாவித்துக் கொள்கிறேன்.”

ஆ! இவன் எவ்வளவு நல்லவன்! தீயவர்களும் நயவஞ்சகர்களும் வெற்றி கண்டு வாழும் இந்த உலகில் வாழ்வின் இன்னல்களுக்குச் சிறிதும் அஞ்சாத தைரியசாலியான இந்த மனமாசில்லான் உணவுக்கும் உடைக்கும் கூட இவ்வளவு கஷ்டப்படவேண்டி நேரிட்டதே என்று என் மனம் தாங்கொணா வேதனை அடைந்தது. அதனால் அவனைப்போல நானும் சிரிக்க முயன்றேன்.

“அண்ணே, உன் இஷ்டப்படியே செய்து கொள்! அதற்குள் எங்காவது ஒரு அரசாங்கக் காரியாலயத்தில் உனக்கு ஒரு வேலை தேடித் தர முயல்வேன். ஆனால் இப்போது என்னுடன் வா, உணவு அருந்துவோம்.”

மறுவாரமே அவனுக்கு மாதம் எண்பது ரூபா சம்பளத்தில் ஒரு குமாஸ்தா உத்தியோகம் கிடைத்தது.

அதன் பிறகுதான் அவன் காம சௌந்தரியை மணம் செய்து கொண்டான்.

***

திருமண ஓலையில் அவள் பெயர் சிவகாமசௌந்தரி அம்மாள் என்றுதான் கண்டிருந்தது. திருமணத்திற்குப் பின் ஒரு நாள் அவன் என்னைத் தன் வீட்டிற்கு மத்தியான போசனத்திற்கு அழைத்திருந்தான். அப்பொழுதுதான் அவள் சிவத்தைத் தவிர்த்து விட்ட காமசௌந்தரி என்பதைக் கண்டுகொண்டேன். உடல் சௌந்தர்யம் என்னவோ இருந்தது. ஆடையின் சௌந்தர்யமும், அணியின் சௌந்தர்யமும், இளமையின் சௌந்தர்யமும் இருந்தன. ஆனால் மனத்தின் சௌந்தர்யம்? அன்பின் சௌந்தர்யம்? அவளுடைய செவ்வரி படர்ந்த கண்களின் பார்வை வெட்டும், புன்னகையும் பேச்சும் என் மனத்தில் கேள்விக்குறிகளாய் நிலைத்து நின்றன. தலைகுனிந்தபடி உணவு அருந்திவிட்டு கொரில்லாவிடம் விடைபெற்றுக்கொள்ள முனைந்தேன். அவன் விடவில்லை.

“சௌந்தரம் எப்படி?”

“யார் சௌந்தரம்?”

“என் மனைவி. பதிவுப் பெயர் சிவகாமசௌந்தரி. வீட்டில் எல்லோரும் சௌந்தரம் என்றுதான் அழைப்பார்கள்.”

“அதுவா? நான் கவனிக்கவில்லை” என்று மழுப்ப முயன்றேன்.

“அழகான பெண். இவள் எனக்கு வாய்க்கக் கூடியவள் அல்ல; முற்பிறப்பில் நான் செய்து வைத்த புண்ணியத்தின் பயன். குணம் தங்கக் கம்பி. வீட்டு வேலைகளில் சாமர்த்தியக்காரி. பாருங்கள், வீட்டிற்குச் சமையற்காரனே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். சமையல் திறத்தில் அவளுடைய கைவண்ணம் இன்று நீங்கள் பார்த்தீர்களே!”

புதுப் பொம்மை கிடைத்த குழந்தை சிரித்துத் தன் பிஞ்சு உள்ளம் எல்லாம் அதில் பறிகொடுப்பதுபோல் கந்தூஸும் சிரித்தான். இறும்பூதெய்தினான்….. கூரையில் ஏறி நின்று கொக்கரித்துக் கூவாததுதான் குறை!

“அண்ணே, உன் மனைவியின் கைவண்ணம் என்ன, அவளுடைய கண் வண்ணத்தையும் கவனித்தேன்” என்று ஒழிப்பு மறைப்பு இல்லாமலே சொல்லிவிட எழுந்த என் நாவை அடக்கிக் கொண்டு, “அண்ணே, நீ உன் அலுவலகத்துக்குப் போய் விட்டால், இந்தத் தனி வீட்டில் உன் மனைவிக்கு யார் துணை?” என்று கேட்டேன்.

“அவள் வீர மகள்! அவளுக்கு எதற்குத் துணை ?”

“ஆனால் நீ கூறுவதுபோல இவ்வளவு அரிய பண்புகள் எல்லாம் வாய்ந்த பெண்ணிற்கு நிறையச் சீதனமும் வாய்த்திருக்க வேண்டுமே?”

“ஆம்! ஏதோ இந்த நகரத்தில் ஒரு வீடும், பணமாகப் பத்தாயிரம் ரூபாவும் தருவதாகக் கூறினார் இவளுடைய தந்தை!”

“நொத்தாரிஸ் மூலம் ஸ்ரீதன உறுதி எழுதித் தந்தார்களா?”

“இல்லை , மூன்று மாதங்களுக்குள் எழுதித் தருவதாகக் கூறி யிருக்கிறார்கள். இவளுடைய தந்தை என் காரியாலயத்தில் வேலை செய்யும் ஒரு சக குமாஸ்தா! அதுவும் அவருடைய ஒரே ஒரு மகள்!”

-எழுதிக் காலில்லையானால் 2

“ஏன் எழுதித்தரமாட்டார்கள்? அவர் என் சகபாடியா யிற்றே !”

“ஆம் – ஆம்! உடனடியாக இது ஒரு கடமையாகக் கருதி எழுதியே தந்து தீர்த்து விடுவார்கள். இது துணிகள் மலிந்த காலம். இந்த மலிவான இந்தியன் டசூர் சூட் அணிந்து கொள்வதை விட, இங்கிலாந்தில் இருந்து வரும் டுவீட் துணியில் இரண்டொரு ‘சூட்’ தைத்துக்கொண்டால் நல்லது…” என்று சிறிது கோபமாகவே பேசினேன்.

“ஐயா, எனக்கு ஆடம்பரங்கள் விருப்பம் இல்லை. எஞ்சும் பணம் எல்லாம் என் மனைவியின் ஆடைகளுக்கும், அணி களுக்கும், அலங்காரங்களுக்கும் என்று நான் தீர்மானித்துவிட்டேன். ஒரு அழகிய பெண் வீட்டில் அலங்காரமாக நடமாடினால் அதுவே ஒரு பாக்கியம் – ஒரு சம்பத்து என்பது தாங்கள் அறியாததா?”

எனக்குக் கோபம் வந்தது. என்னுடைய முழு அன்புக்குப் பாத்திரமானவனும், பால் போல் வெள்ளையுள்ளம் படைத்தவனும் ஆகிய கந்தூஸின் மேல் எங்ஙனம் என் கோபத்தைக் காண் பிக்கலாம்!

“அண்ணே! நீ முன்னர் என்னை ‘நீ’ என்றும், ‘அடா’ என்றும் அழைத்து எனக்குப் பாடம் சொல்லித் தரவில்லையா? இப்பொழுது நான் வக்கீல், நீ ஒரு அரசாங்க அலுவலகத்தில் சாதாரண குமாஸ்தா என்பதற்காக என்னை ‘நீங்கள்’ ‘தாங்கள்’ என்று ஏன் அழைக்கின்றாய்? நான் இப்பொழுதும் உன்மேல் கொண்ட அன்பை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் நீ என்று உன்னை அழைக்கின்றேன். வணக்கம். நான் போகவேண்டும்.”

அதற்குள் சிவத்தை உதிர்த்துவிட்ட காமசௌந்தரி வெற்றிலைத் தட்டு, சிகரட் பாக்கெட் முதலியவற்றுடன் வந்து நின்றாள். என் மனத்தின் பொரிவு இன்னும் அதிகமாகியது.

“வணக்கம்! நான் இவைகள் பாவிப்பதில்லை. உங்கள் அழைப்பிற்கு நன்றி!” என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் வீதியில் இறங்கிவிட்டேன்.

மழை மேகங்கள் மேல்வானத்தை மூடி வைத்திருந்தன. ஆதவன் அந்த மேகத்திரையில் மறைந்துகொண்டு பூவுலகிற்கு ஒளியும் உயிரும் தருவதாகப் பாசாங்கு செய்தான். அதற்குள் பேய்க்காற்று ஒன்று எழுந்து தடித்த வயது முதிர்ந்த வாகை மரங்களின் வாடிய செம்மலர்களை நிலத்தில் சிதற வைத்தது. எங்கோ தொலைவில் ஒரு குயிலின் சோகம் நிறைந்த தனிக்குரல்…

விளையாடுவதற்கு ஒரு அழகிய பொம்மை கிடைத்தவன் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்து அலுத்துப் போகட்டும் என்று நான் சில மாதங்கள் கந்தூஸைப் பார்க்கப் போகாமல் இருந்துவிட்டேன். அத்துடன் ஆயிரம் கவலை எனக்கு! என்னுடைய வக்கீல் தொழில் வளர்ந்து கொண்டு வந்தது — உடம்பு புரட்டி தவழ்ந்து பிறகு குறுநடை பயிலும் குழந்தை போல.

ஆனால் கந்தூஸ் என்ற கந்தசாமி மட்டும் என்னை சனிக் கிழமை தோறும் – மத்தியான போசனத்துக்கோ இரவுப் போசனத்துக்கோ – அழைக்கத் தவறுவதில்லை. நான் போவதே இல்லை. அவன் என்ன நினைத்தானோ?

அவனுக்கு என்னைக் காணாமல் இருக்க முடியவில்லையோ ஏதோ அறியேன். ஒருநாள் என் அலுவலகத்திற்கு அதே அழுக் கேறிய உடை, சீவாத தலை முதலிய அவனுக்கே பிரத்தியேகமான அலங்காரங்களுடன் வந்தான். “வா அண்ணே ” என்று கூறக் கூடிய அன்பு சிறிது சிதறிப் போய் இருந்தாலும், “வாருங்கள், இருங்கள்” என்று மற்றவர்களுக்குச் சொல்வது போல் மரியாதைக்குச் சொல்லி வைத்தேன்.

என்னை உத்தியோக அலுவல் சம்பந்தமாகப் பார்க்க வந்திருந்தவர்களை ஒவ்வொருவராக அனுப்பி வைத்தேன். ஈற்றில் நானும் கந்தூஸ் என்ற கொரில்லாவும் எஞ்சி நின்றோம். அவன் சிரித்தான். “என்ன, மலை மனிதனைத் தேடி வராவிட்டால், மனிதன் மலையைத் தேடி வருவதுதானே!” அவன் சிரிப்பிலே ஏதோ ஒன்று அசம்பாவிதமாகப்பட்டது.

“அண்ணே, நீ ஏதாவது கஷ்டத்தில் மாட்டிக் கொண்டாயா?”

“இல்லை, உங்களைப் பார்க்க வருவது ஒரு கஷ்டமா?”

“ஆனால், விஷயத்தைக் கூறு!”

“ஒன்றும் இல்லை …” என்று இழுத்தவன், “உங்களுக்கு மறைத்து வைத்து என்ன பயன்! எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்” என்று சிரித்தான். அவனுக்கு ஆனந்தம் தாள வில்லை .

“நீ விவாகம் செய்து இன்னும் ஏழு மாதங்கள் கூடப் பூர்த்தியாகவில்லையே…!” என்று பதறிவிட்டேன்.

“அதனால் என்ன! ஏழு மாதங்களில் குழந்தைகள் பிறப்ப தில்லையா? பிறக்கும்பொழுது குழந்தையின் நிறை என்ன தெரியுமா? ஒன்பது றாத்தல்!”

ஒன்பது மாதங்கள் நிறைவு பெற்று ஜனனம் ஆகும் குழந்தைகள்கூட ஒன்பது றாத்தல் நிறையுள்ளவையாக இருப்பது துர்லபம். இந்த வளம் இல்லாத நாட்டிலே, என்று என் எண்ணங்கள் ஓடின….

“பிள்ளையின் முகம் உன் முகத்தைப் போல அழகாக இருக்கின்றதா?”

“என்னை விட்டுத்தான் தள்ளுங்கள். எனக்குச் சிறு வயது முதல் “கொரில்லா” என்ற பெயர் நிலைத்துவிட்டதே! ஆனால் என் குழந்தை அதிசுந்தரரூபலாவண்யன். அவன் எனக்கு மைந்தனாகப் பிறந்ததும் என் பூர்வபுண்யபலன்” என்று சிரித்தான்.

‘அட, கொரில்லாவே, மனிதக் குரங்கே, உனக்கு வெண்மையானது எல்லாம் என்றும் பால்தானா?’ என்று எனக்குள் மருகினேன்…

– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.

இலங்கையர்கோன் என்ற பெயரில் எழுதிய த. சிவஞானசுந்தரம், செப்டம்பர் 6, 1915 - அக்டோபர் 14, 1961) ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் என்று பாராட்டுப் பெற்றவர். இவர் விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு காட்டினார். வாழ்க்கைச் சுருக்கம் இலங்கையர்கோன் யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழத்து சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *