மனமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 4,447 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டாக்டர் இன்று வருவதாகச் சொன்னாரே, வந்தாரோ?”

“வந்தார், லக்ஷ்மி.”

“உம்… லேடி டாக்டரைப் பார்த்தாராமா?”

“பார்த்தாராம்.”

“அவள் என்ன சொன்னாளாம்?”

“ஆப்பரேஷன் பண்ணத்தான் வேணும் என்றாளாம்.”

“ம்…..ம்…”

“இல்லாவிட்டால் பிரயோசனப்படாது என்றாளாம்.’

“ம்……ம்….”

“டாக்டரும் ஆப்பரேஷன் பண்ணிக்கொள்வதுதான் நல்லது என்று அபிப்பிராயப்படுகிறார்.”

“ம்………..”

“ஒன்றும் பயமில்லை என்றார். ரொம்பச் சின்ன ஆப்பரேஷன் தானாம்.”

“பயமில்லேன்னாலும்….. குளோரபாரம் கொடுத்துத்தானே ஆப்பரேஷன் பண்ணுவா?”

“ஆமாம். என்றாலும், பெரிய டாக்டர் தேவையில்லை என்றார். தானே குளோரபாரம் கொடுப்பதாயும், லேடி டாக்டர் ஆப்பரேஷனைச் செய்துவிடலாம் என்றும் நம் டாக்டர் சொன்னார்”.

“அது சரி, வலிக்காதா?”

“வலிக்கும், வலிக்கும். ஆனால் வலி தெரியாதிருக்கத்தான்…”

“ஆப்பரேஷன் சரியாகப் போயிடும். குளோரபாரம் மயக்கத்திலிருந்து விழிச்சுக்கணுமே; விழிச்சுக்காமலே இருந்து விட்டேனானால் ….”

“போடி அசடே, அதெல்லாம் ஒன்றும் பயமில்லை.”

“உங்களுக்கென்ன? நான் போனா இன்னொருத்தியைப் பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கொண்டு விடுவீர்கள்!”

“அசடு!”

“நான் சொல்றபடி எல்லாந்தான் கேட்கறதே இல்லை என்று ஆய்விட்டது. இன்னொருத்தி வந்தா அவள் சொல்றபடி கேட்டு ஆடுவீர்கள். என்னிடம் இப்போ போடற டார்லிங் கை எல்லாம் அப்புறம் அவளிடம் போட ஆரம்பித்துவிடுவீர்கள்.”

“இதென்ன, இப்படி அசடாப் பேசறே?”

“நான் போனப்புறம் லக்ஷ்மி என்று ஒருத்தி இருந்தது கூட உங்களுக்கு ஞாபகம் வராது; இல்லையா? நான் சொல்றது நிஜந்தானே?”

“இந்தா, பாரு. இந்த அசட்டுப் பேச்சை எல்லாம் விட்டு விட்டு ….”

“உள்ளதைச் சொன்னால் அது அசட்டுப் பேச்சோ?”

“என்ன உள்ளத்தைச் சொன்னே, உள்ளத்தை?”

“பெட்டி நிறையப் புதுப் புடவை வைத்திருக்கிறேன். அதை அவள் எடுத்துக் கட்டிப்பாள்”

“இப்படிப் பேசிக்கொண்டேயிருந்தால் நான் போறேன்.”

“எனக்கு வைரத்தோடு வாங்கிப் போடுவது என்றால் உங்களுக்குப் பணமே அகப்படாது போய்விடும். அவளுக்கு என்றால் அவள் வந்த மறுநாளே எப்படியோ பணமும் வந்துவிடும். இளையாளோ, இல்லையோ? அவள் வரும்போது கையில் செப்பு வளைகளுடனும், கழுத்தில் பித்தளைச் சங்கிலியுடனும் வருவாள். வந்து பத்து நாளைக்குள்ளே அதெல்லாம் பத்தரை மாத்துத் தங்கமாக மாறிவிடும்; உங்கள் ரஸவாதத்தினாலே!”

“நீ இப்படித்தான் அசட்டுப் பிசட்டு என்று பேசிக் கொண்டிருப்பயா?”

“அசட்டுப் பிசட்டு என்ன? உலகத்தில் நடக்கிறதைச் சொன்னேன்.”

“அப்ப சரிதான். டாக்டரிடம் சொல்லி ஆப்பரேஷன் வேண்டாம் என்று சொல்லிவிடச் சொல்லுகிறேன். அதனால் என்ன நஷ்டம் இப்போ?”

“நான் போனப்புறம் என் இடத்திலே வந்து இன்னொருத்தி நன்னாயிருப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பேனா? பாருங்களேன், உங்களையும் உங்கள் இளையாளையும் நான் என்ன பாடுபடுத்தி வைக்கிறேன்; பாருங்களேன்” என்று கண்ணைச் சிமிட்டிக்கொண்டே புன்சிரிப்புடன் சொன்னாள் லக்ஷ்மி.

“போடி, அசடே!” என்றான் சீனிவாசன் செல்லமாக. “எங்கே கொஞ்சம் சரியாகப் பேசு. டாக்டருக்குச் சொல்லி அனுப்ப வேணும். என்ன சொல்லியனுப்ப?”

“இவளைச் சீக்கிரம் தீர்த்து விட்டால் தேவலை என்று இருக்கிறதோ உங்களுக்கு?”

“மனசு புண்ணாகிற வரைக்குமா கேலி பண்ணிக் கொண்டிருப் பா? போடி, போ. என்ன பண்ணலாம்? சொல்லு.”

“எனக்குப் பயமாயிருக்கு. ஆப்பரேஷன் என்றால், எதிர் வீட்டுப் பெண்ணுக்கு ….”

“அதெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ளாதே…”

“அதுதானே ஞாபகம் வருகிறது! நான் எப்படித் தீர்மானித்து, வேணும் வேண்டாம் என்று சொல்றது?”

“எனக்கு என்னவோ பயமில்லை என்றுதான் தோன்றுகிறது. டாக்டரும் அப்படித்தான் சொல்கிறார். ரொம்பவும் சின்ன ஆப்பரேஷன்தான்; இதற்கு ஆப்பரேஷன் என்றே பெயர் சொல்வதற் கில்லை என்று சொல்கிறார்…”

“பின்னே குளோரபாரம் கொடுப்பானேன்?”

“அது கொடுக்காமே முடியாதாம். இருந்தாலும் அவர் பயப்பட ஒன்றுமில்லை என்கிறபோது….”

“பெட்டி நிறையப் புதுப்புடவை….”

“மறுபடியும் அந்தப் பேச்சை ஆரம்பித்தால் நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டு , சீனிவாசன் தன் ஆபீஸ் அறைக்குள் சென்று விட்டான்.

சீனிவாசனும் லக்ஷ்மியும் பத்து வருஷங்களுக்கு முன் கல்யாணமான, ஆனால் இன்னும் புது மெருகு அழியாத , இளந் தம்பதிகள். அவர்களுடைய புது மெருகு அழியாததற்குப் பல காரணங்கள் இருந்தன. – அவர்களுடைய குழந்தை உள்ளங்கள், அவர்களுடைய நல்ல ஸ்திதி, முதலியன. ஆனால், முக்கியமான காரணம் அவர்களுக்குக் குழந்தை பிறக்காததுதான் என்று சொல்லலாம்.

முன் காலத்திலெல்லாம் தம்பதிகளுக்குத் தக்க காலத்தில் குழந்தை பிறக்காவிட்டால் – அது சரியோ தப்போ !- அவர்கள் ராமேசுவரத்துக்குப் பயணம் கிளம்புவார்கள். இப்போதெல்லாம் குழந்தை பிறக்காவிட்டால் இதுவும் சரியோ தப்போ, யார்தான் சொல்ல முடியும்? – டாக்டரைத் தேடிக்கொண்டு கிளம்பிவிடுகிறார் கள். சீனிவாசனும் லக்ஷ்மியும் வருஷக் கணக்கில் சற்று மெதுவாகவே டாக்டரையும் லேடி டாக்டரையும் தேடிக்கொண்டு கிளம்பியிருந்தார்கள். டாக்டர்களின் முடிவு லக்ஷ்மியின் கர்ப்பப்பையில் ஏதோ சிறிய கோளாறு இருப்பதாகவும், ஒரு சிறிய ஆபரேஷன் செய்து அதைச் சரிப்படுத்திவிடலாம் என்பதுந்தான். இந்த முடிவை டாக்டர் வந்து சீனிவாசனிடம் தெரிவித்துப் போன அன்று காலைதான் மேலே கண்ட சம்பாஷணை தம்பதிகளுக் கிடையே நடந்தது.

லக்ஷமிக்கோவெனில், குழந்தைகள் என்றால் அபாரமான வாஞ்சை. அதைத் தீர்த்துக்கொள்ள வேறு வழியில்லாமல், அவள் தன் கூடக் குடியிருப்பவர்களின் குழந்தைகளை எல்லாம் சீராட்டிப் பாராட்டிப் பொழுது போக்கிக்கொண்டிருப்பாள். “தெருவில் ஆடிவருந் தேனைப் பார்க்குந்தோறும் பார்க்குந்தோறும், ” அள்ளி அணைத்திடவே” அவள் ஆவி துடிக்கும். குழந்தையில்லாத குறை அவள் மனத்தில் பெருங்குறைதான். ஆனால், ஆப்பரேஷன் என்றாலோ பயமாகவே இருந்தது. தனக்குத் தெரிந்தவர்களில் எத்தனைபேர் ஆஸ்பத்திரியில் இறந்திருக்கிறார்கள் என்று விரல்விட்டு எண்ணிப் பார்த்தாள். எண்ணிக்கை இரண்டு கை விரல்களில் அடங்காது போல் இருந்தது. எங்கேயாவது ஒரு துளிரத்தம், அல்லது ரத்தம்போல ஏதாவது சிந்திக்கிடப்பதைக் கண்டால் அவள் தலை சுற்ற ஆரம்பித்து விடும். பிறருக்குக் காயம் பட்டுவிட்டாலே அவள் மனம் மட்டுமின்றி அவள் உடலும் துன்பப்படும். இப்படிப்பட்டவள் ஆப்பரேஷன் என்றால் பயந்தது இயற்கைதானே! ஆனால் குழந்தை…!

சீனுவாசனுக்கும், எப்படியோ, என்ன நேரிடுமோ என்ற பயம்தான். இருந்தாலும் ஆப்பரேஷன் செய்து கொண்டுவிடுவதே சரி என்று அவன் தீர்மானித்துவிட்டான். ஆனால், இதை அவன் தன் மனைவியிடம் இன்னும் கூறவில்லை. அவளே யோசித்துத் தீர்மானத்துக்கு வரட்டும் என்று இருந்துவிட்டான். ஆனால் அடிக்கடி, “டாக்டர் பயமில்லை என்று சொன்னார்; பயமேயில்லை” என்று தனக்கும் தன் மனைவிக்கும் ஒருங்கே தைரியம் பிறப்பதற் காகச் சொல்லிக்கொண்டேயிருந்தான்.

கணவன் ஆபீஸுக்குப் போன பிறகு, லக்ஷ்மி பூஜை அலமாரிக்கெதிரில் புஷ்பம் வைத்துப் பார்த்தாள். கடவுளே ஆப்பரேஷன் செய்து கொள்ளலாம் என்று சொல்வது போலத்தான் இருந்தது. ஆனால் அதிலும் அவளுக்குப் பரிபூரணமான நம்பிக்கை வரவில்லை. சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல அவள் பூ நூல் போட உட்கார்ந்தாள். அதில் அவள் மனம் செல்லவில்லை. ஏதோ புஸ்தகத்தைப் பிரித்துக்கொண்டு உட்கார்ந்து பார்த்தாள்; அதிலும் மனம் செல்லவில்லை . ஓர் ஏடு புரட்ட ஒரு மணிநேரம் ஆயிற்று. சாரமில்லை என்று புஸ்தகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு முன் வராந்தாவில் போய் நின்று கொண்டு தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றாள். தெருவில் குறுக்கும் நெடுக்குமாக எத்தனை குழந்தைகள் ஓடியாடித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தன? அவற்றை எல்லாம் அவரவர்களின் தாய்மார்கள் ஆப்பரேஷன் செய்துகொண்ட பின்னரா பெற்றெடுத்தார்கள் என்று அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். தான் மட்டும் ஆப்பரேஷன் செய்துகொண்டால்தான் ஆகும் என்று தனக்கு நேர்ந்திருந்த விதியை எண்ணி நொந்து ரெகண்டாள்.

எப்படியோ அன்றைப் பொழுது கழிந்து கொண்டிருந்தது.

மத்தியான்னம் கீழ்த்தளத்தில் குடியிருப்பவர்களின் பெண் சாலு பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பியதும் ”மாமி” யைத் தேடிக் கொண்டு மாடிக்கு வந்தாள். அவள் மாமியைக் கண்டவுடன், “ஏன் மாமி இன்னிக்கு என்னமோ போல இருக்கையே?” என்று தன் கொச்சை மொழிகளால் கேட்டாள். அவளைக் கண்டவுடனேயே லக்ஷ்மியின் ‘என்னமோ போல இருக்கும் தன்மை’ எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது. ஆனால் கால் மணிநேரத்தில் சாலு பள்ளிக்கூடம் போக அவளை விட்டுக் கிளம்பியபின், அந்த ‘என்னமோ போல் இருக்கும் தன்மை’ – சூன்யம் – மறுபடியும் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டது.

மாலை ஐந்தரை மணிக்குச் சீனிவாசன் ஆபீஸிலிருந்து வந்தான். வரும்போதே, “என்ன லக்ஷ்மி? தீர்மானம் ஆயிற்றா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

லக்ஷ்மி, சிறிது நேரம் தயங்கிவிட்டுச் சற்று இழுத்தாற் போலேயே பதில் அளித்தாள் : “வேண்டாம். ஆப்பரேஷன் வேண்டாம் என்றே சொல்லிவிடுங்கள்” என்றாள்.

சீனிவாசன் இதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை . தன் வார்த்தைகளை எதிர்த்து அவன் ஏதாவது சொல்வான் என்று அவள் ‘ எதிர்பார்த்தாள், ஏமாந்துவிட்டாள். சற்று நேரம் கழித்துச் சீனிவாசன் சொன்னான்: ‘இன்று ஷர்லி டெம்பிள் படம் ஒன்று புதிசாக வந்திருக்கிறது. போய்ப் பார்க்கலாம், கிளம்பு.”

லக்ஷ்மி, “இன்று வேண்டாம்” என்று சொல்லலாமா என்று எண்ணினாள். ஆனால் சொல்லவில்லை. சற்று யோசித்து, “போகலாம்” என்ற முடிவுக்கே வந்தாள். ஆப்பரேஷனைப் பற்றி ஏதோ ஒரு முடிவுக்கு வந்து அதை வெளியிட்டு விட்டபின் அவள் மனசிலிருந்து பெரும் சுமை இறங்கி விட்டது போல் இருந்தது. தவிரவும் ஷர்லி டெம்பிள் படம் என்றால் அவளுக்குப் பிடிக்கும். கால் மணியில் கிளம்பத் தயாராகி விட்டாள்.

சினிமாப் பார்த்துவிட்டு அவர்கள் வீடு திரும்பும் போது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது. கடைத்தெருவில் சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதில் நேரம் கழிந்துவிட்டது. ஒரு பொம்மைக் கடையில் கண்ட ஓர் அழகான செலுலாயிடு பொம்மையை வாங்கவேண்டும் என்று லக்ஷ்மி பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டாள். சீனிவாசன் சிரித்தான். ‘இதை வைத்துக் கொண்டு நீயும் நானுந்தான் விளையாட வேண்டும்’ என்றாள். ஆனால், அந்தச் செலுலாயிடு பொம்மை தலையைத் திருப்பித் திருப்பிக் கண்களைக் பரக்க விழித்து உருட்டிச் சிமிட்டிச் சிமிட்டி மூடியதைப் பார்க்க அவனுக்கும் வேடிக்கையாகத்தான் இருந்தது; சிரிப்பு வந்தது.

பொம்மையை வாங்கிக் கையில் எடுத்துக்கொண்டே லக்ஷ்மி, ”சாலுவுக்காக வாங்கினேன்” என்றாள். அதற்குப் பிறகு அவள், சாலுவுக்காக ஒரு சாக்கலெட் பொட்டலமும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானாள்.

வண்டியில் வழி நெடுகத் தாங்கள் பார்த்த படத்தைப் பற்றியே இருவரும் பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவருடைய மனசிலும் வேறு ஏதோ ஒரு விஷயந்தான் முன் நின்றது. ஆனால் ஒருவரும் அதைப்பற்றி மனம் விட்டு பேசவில்லை .

வீடு வந்து சேர்ந்தவுடன், விளக்கைப் போட்டுவிட்டுச் சாலுவுக்காகத் தான் வாங்கிக்கொண்டு வந்த சாமான்களை அவளிடம் கொடுப்பதற்காக லக்ஷ்மி, ”சாலு! சாலு!?” என்று மாடியில் இருந்தபடியே கூப்பிட்டாள். பதில் இல்லை. கீழ்த்தளத்து முற்றத்துப் படிக்கட்டில் இறங்கி நின்று கொண்டு லக்ஷ்மி சாலுவை மறுபடியும் கூப்பிட்டாள். அதற்கும் பதில் இல்லை . சற்று உரக்கவே, “சாலு! சாலு!” என்றாள்.

“அர்த்த ராத்திரியிலே என்ன சாலு வேண்டிக்கிடக்கு?” என்று கீழேயிருந்து ஒரு பெண் குரல் மெதுவாக, ஆனால், லக்ஷ்மியின் காதிலும் விழும்படியாகக் கேட்டது. பிறகு அதே சற்று உரக்க, “சாலு தூங்கப் போய்விட்டாளே!” என்றது. அதே சமயம், “ஏன் மாமி?” என்று சாலுவின் குரல் எழுந்ததும், உடனே அது பலவந்தமாக அடங்கியதும் தெரிந்தது.

சற்று நேரம் திகைத்துப் போய், லக்ஷ்மி படிக்கட்டிலேயே நின்றாள். அவளுக்குச் சற்று முன் பதில் சொன்ன அதே பெண் குரல் சற்று மெதுவாகவே வேறு யாரிடமோ , “மாடியிலே குடியிருக்கிற அந்தக் குழந்தையில்லாத பெண்…” என்று சொல்ல ஆரம்பித்தது அவள் காதில் விழுந்தது. அதற்கு மேல் அவள் என்ன சொன்னாள் என்று கேட்க லக்ஷ்மி பிரியப்படவில்லை. தடதடவென்று படியேறி மாடிக்குப் போய்விட்டாள். கையில் வைத்திருந்த அந்த அழகிய செலுலாயிடுப் பொம்மையையும், ‘மணமும் குணமும் முந்திரிப் பருப்பும் நிறைந்த’ சாக்கலேட்டை யும் ஆத்திரத்துடன் கை கொண்ட மட்டும் விசி ஒரு மூலையில் எறிந்துவிட்டாள். சாக்கலேட்டுப் பொட்டலம் உருத்தெரியாமல் நசுங்கிப்போயிற்று. ஒரு பாவமும் அறியாத செலுலாயிடுக் ‘குழந்தை’ திருப்பிய கழுத்துத் திருப்பிய படியே, விழித்த கண்

விழித்து நிலைத்தபடியே தனக்கு இருந்த சொல்ப சக்திகளையும் இழந்துவிட்டுப் பரிதாபகரமாக மல்லாந்து விழுந்து கிடந்தது.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன் எதுவுமே சொல்லாமல் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தான்.

சாப்பாடெல்லாம் முடிந்ததும், சமையலறைக் காரியங்களை எல்லாம் அவசர அவசரமாக முடித்துக்கொண்டு , லக்ஷ்மி சீனிவாசனின் நாற்காலியண்டை வந்து நின்றாள்.

“என்ன?” என்றான் சீனிவாசன்.

“வெற்றிலை போட்டுக் கொள்ளுங்கள்” என்று வெற்றிலை எடுத்துச் சுண்ணாம்பு தடவிக் கிழித்துக் கொடுத்தாள் லக்ஷ்மி. பின்னர் ஒரு விநாடி தயங்கி விட்டுச் சொன்னாள்: “டாக்டரிடம் சொல்லி விடுங்கள். முடியுமானால் நாளைக்கே ஆப்பரேஷன் செய்து விடட்டும்”.

சீனிவாசன் புன்சிரிப்புடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்; “எல்லாம் ஏற்கனவே சொல்லி ஏற்பாடாகி விட்டது. காலையில் எட்டு மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் ஆஜராகிவிடவேண்டியது தான் பாக்கி” என்றான். லக்ஷ்மியின் உடம்பு விதிர்த்தது; ஆனால் முகம் புன்முறுவல் பூத்தது.

– 1955 (சக்தி),க.நா.சு. சிறுகதைகள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *