(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இப்படி அப்பா அம்மாவைப் பகைத்துக் கொண்டு ஒரு பஞ்சாபிப் பெண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டுமா என்று நினைக்கும் போது விஜய்க்கு மனது கொஞ்சம் வலிக்கவே ஆரம்பித்தது.
வந்த இடத்தில் ஏதோ ஒரு பஞ்சாப் கோதுமை வளத்தில் திகழ்ந்த மிருணாளினி கவர்ந்திருக்க, திருமணம் வரை தீவிரமாகிப் போய்விட்டது தவறோ என்று திண்டாடினான்.
இப்படி பஞ்சாப் வந்து சண்டிகரில் அரசாங்க வேலை பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கும் இந்த மிருணாளினிக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு வருடத்திற்கு முன்னால் இந்தப் பெண் யார் என்று கூட எனக்குத் தெரியாது. என்னைப் படித்துப் பாதுகாத்து, எனக்கு அரசாங்க வேலைத் தேடி தந்த என் பெற்றோரைப் பகைத்து விட்டு இந்தப் பெண்ணிற்காக நான் ஏன் அல்லாடுகிறேன்.
காதல் இதுதான் என்றால் ஏன் என் பெற்றோர்கள் கூட இதை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்? ‘வேறு மொழி வேறு இனம்… நமக்கும் அவளுக்கும் எப்படி ஒத்துப் போகும். அவள் உணவு, உடை, கலாச்சாரம் எல்லாமே வேறு வேறு. இன்றைக்கு அவளு டைய உடம்பின் மீது ஆசை உன் கண்ணை மறைக்கிறது. கொஞ்ச நாள் போனால் ஏண்டா இவளை மணந்து கொண்டு இப்படி அல்லாடுகிறோம் என்று நீயே வருத்தப்படுவாய்’ என்கிறாள் அக்கா.
மிருணாளினி மேல் எனக்கு ஏற்பட்டது வெறும் கவர்ச்சி அழைப்புதானா? காதல் இல்லையா? குழம்பிக் கொண்டு என்ன செய்வது என்று எண்ணி குமைந்து கொண்டிருந்தவனை “விஜய்” என்ற குரல் கவர்ந்திழுக்க வாசலுக்கு வந்தான்.
“இன்னும் புறப்படவில்லையா? என் வீட்டிலே பொய் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். ரெஜிஸ்டிரார் ஆபீஸில் என் நண்பர்கள் நம் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட காத்திருப்பார்கள். நீங்கள் இன்னும் புறப்படாமல் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? ஏதாவது பிரச்சனையா?” பஞ்சாபியில் படபடவென்று கேட்டுவிட்டு அவனுடைய முடியைக் கலைத்தாள்.
‘இந்தச் சண்டிகர் நகரில் ஏகப்பட்ட சொத்து, வசதிகளோடு வாழும் இவளுக்கு ஏன் பெற்றோரை பகைத்துக் கொண்டு என்னை மணந்து கொள்ளத் துணிச்சல் வந்தது? நான் ஏன் இப்படி குழம்பிப் போய் நிற்கிறேன். இவளுக்கு என் மீது இவ்வளவு காதல் பற்று இருக்கும் போது நான் மட்டும்…. என்று யோசித்துக் கொண்டிருந்த விஜயை “ஏன் அப்படி பார்க்கிறீர்கள்” என்று கேட்டாள் மிருணாளினி.
“ஒரு நிமிடம் இரு. இப்போது புறப்பட்டு வந்து விடுகிறேன்” என்று மனம் தெளிந்தவனாக கிளம்பினான் விஜய்.