தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 11,197 
 

நெஞ்சு படபடக்கிறது. படபடப்பு அதிகமாகிறது. தன்னை அறியாமலேயே கண்ணீர் வழிகிறது. கைக்குட்டை துணியால் கண்ணீரைத் துடைத்தும் நீர் விழியில் நிரம்பி வழிகிறது. பக்கத்து இருக்கையில் இருந்த அமலா எழுந்துவந்து, “”வினோ ஏன் இப்படி இறுக்கமா இருக்கே? சி.இ.ஓ.கிட்டே அரைநாள் பர்மிஷன் சொல்லிட்டு, போயிட்டு வா…” என அவள் சொன்னதும் தெளிவு வந்தவளாய் முகத்தை துடைத்து நேரே என் மேலதிகாரியின் அறைக்கு சென்று அரைநாள் லீவு சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அமலா அருகில் வந்து, “”என்ன சொல்லி லீவு கேட்டே?” எனக் கேட்டாள்.

மனசு“”என் சொந்தக்காரர் ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை; பார்க்கப் போறேன்னு லீவு சொன்னேன்…” என குரல் தழுதழுத்தவாறு பதில் சொன்னேன்.

“”சரி..சரி போய்ப் பார்த்திட்டு ஆபிஸ் டைம் முடியுறதுக்குள்ளே ஹாஸ்டலுக்கு வந்துடு. ரொம்ப நேரம் அங்கே நிக்காதே” என அமலா சொன்னாள்.

அந்த அலுவலகத்தில் மற்ற அலுவலர்கள் தங்கள் வேலையில் மூழ்கிப் போயிருந்ததால், யாரிடமும் பேசாமல் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.

வெயில் சுள்ளென்று அடித்தது. கண்கள் கூசியது. கண்ணை கசக்கி பார்வையைச் சரி செய்தேன். அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டிலிருந்த ஆட்டோ டிரைவர், “”மேடம் ஆட்டோ வேணுமா?” எனக் கேட்டார்.

“”பஸ் ஸ்டாண்டிற்குப் போகணும்..” என்றபடி ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன்.

மனசு துக்கத்தை மீறி பயண நேரத்தை கணக்கு போட்டு பார்த்தது. பஸ் ஸ்டாண்டிலிருந்து குளித்தலைக்கு ஒன்றரை மணி நேரம் பயணம். ஆக, போகவர மூன்று மணி நேரம். அங்கு அரைமணி நேரம். அதற்கு மேல் அங்கே இருக்கக்கூடாது என மனது சொல்லியது. பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு புறப்படத் தயாராய் இருந்த குளித்தலை வழியாக கரூர் போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.

“எவ்வளவு வைராக்கியமா இருந்திட்டேன். பன்னிரெண்டு வருசமாச்சு குளித்தலையை மறந்து. ஆனா இன்னைக்கு எந்த மண்ணுல அவமானப்பட்டேனோ, மனசுல ஆறாத ரணம் ஏற்பட்டுச்சோ அந்த மண்ணை மறுபடியும் மிதிக்கிறபடி ஆயிடுச்சே..’ என மனசு பேசுகிறது. “ஏம்மா கொஞ்சம் தள்ளி உட்காரு…’ என ஒரு பாட்டி அருகில் உட்கார இடம் கேட்டபோதுதான் பஸ், மெயின் கார்டு கேட்டில் நின்று ஆள் ஏற்றுவது தெரிந்தது. பஸ் கிளம்பியது. மீண்டும் நினைவு பின்னோக்கி போனது.

நகரமும் இல்லாத கிராமமாகவும் இல்லாத குளித்தலையில் சின்னம்மா வீட்டில் தங்கி பதினோறாம் வகுப்பு படிப்பதற்காக நான் குளித்தலைக்கு வந்த காலம் வசந்த காலம். சின்னம்மா குடியிருந்த வீடு உள்ள தெரு அழகான தெரு. ரோட்டின் இருபுறமும் மகிழம்பூ மரங்கள் வரிசையாய் நின்று நிழல் பந்தல் அமைத்திருந்தன. மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறமுடைய மலர்கள் மரத்திலிருந்து உதிர்ந்து ரோடு முழுவதும் சிதறிக் கிடந்தன. முதன்முதலில் அந்தத் தெருவில் நுழைந்தபோது பூக்களை கொட்டி என்னை வரவேற்பது போல மனசு மகிழ்ச்சியானது. ஆனால் பூக்களின் மீது கால் வைத்து நடக்க வேண்டுமே எனத் தயங்கினேன். எனக்கு பூக்கள் என்றால் கொள்ளை பிரியம். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருக்கும் மலர்களோடு பேசுவேன். காற்றில் அவை அசைந்து என் பேச்சிற்கு அழகாய் தலையாட்டும். இதை பார்த்து என் அம்மா “”ஏன்டி உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கா, பூச்செடியோட பேசிகிட்டு இருக்கே…” என்பாள்.

“”அம்மா உனக்கு இதெல்லாம் புரியாது போம்மா…” என்பேன் நான்.

சிதறிக் கிடக்கின்ற பூக்கள் மீது நடந்தேன். ஆனால் என் சின்னம்மா பூக்களை மிதித்தபடி நடந்து சென்றவள் பின்னால் திரும்பி என்னைப் பார்த்து, “”ஏன்டி லூசு இன்னும் இந்த பழக்கம் உன்னைவிட்டு போகலையா?” எனக் கேட்டாள்.

நான் தரையைப் பார்த்தபடியே “”உனக்கு இதெல்லாம் புரியாது சின்னம்மா…” என அம்மாவிடம் சொல்லும் பதிலையே சொன்னேன். அப்போது எதிரே ஆண்மை நிறைந்த குரல் கேட்டது.

“”அத்தை… யாரது நடு ரோட்ல நடை பயிலறது?”

நிமிர்ந்து குரல் வந்த வழியைப் பார்த்தேன். எதிரே சைக்கிளில் இப்போதுதான் துளிர்க்கும் அரும்பு மீசைப் பையன். வசீகரமாக இருந்தான். சின்னம்மா அவனைப் பார்த்து, “”இவ எங்கக்கா மவதான் தம்பி… இவபேரு வினோதினி. நம்ம ஊரு பள்ளிகூடத்திலே பதினோறாம் வகுப்பு படிப்புக்கு வந்திருக்கா. அவளுக்கு பூவுன்னா ரொம்ப இஷ்டம். அதான் அதுமேலே கால்படாம நடந்துவர்றா…” என சொன்னாள். அவன் விழிகளை அகல விரித்து என்னைப் பார்த்தான். பார்வையின் வீச்சு தாங்காமல் நான் தலை குனிந்தேன்.

அவன் எங்களைக் கடந்து போனவுடன் நான் சின்னம்மாவிடம் “”ஏன் சின்னம்மா அவன்கிட்ட போயி இவ்வளவு விவரம் சொல்லுற?”

எனக் கேட்டேன். “”அவன், இவன்னு சொல்லாதே வினோ. அந்த தம்பி ரொம்ப நல்ல புள்ளை. அந்த தம்பியும் உன்னை மாதிரிதான். ஒருநாள் அவங்க வீட்டுக்கு போயிருந்தேன். நல்ல வெயில் நேரம். அப்ப இந்த தம்பி சின்ன சின்ன மண் சட்டியில் தண்ணி ஊத்தி அவுங்க வீட்டு மொட்டை மாடிக்கு கொண்டு போச்சு. நான் அந்த தம்பிய பார்த்து என்ன தம்பி செய்யுற என கேட்டேன். அதுக்கு அந்த தம்பி சொல்லுச்சு. “அத்தை இது வெயில் காலம். வறட்சியான நேரம். எல்லா உசுருக்கும் அடிக்கடி தண்ணி தாகம் எடுக்கும். நமக்கு தாகம் வந்தா தண்ணி கேட்டு வாங்கி குடிச்சுடுவோம். ஆனா பாவம் இந்த பறவை, பட்சியெல்லாம் அதுக எங்க போயி தண்ணி குடிக்கும். அதான் அதுகளுக்கு தண்ணி ஊத்தி வைக்கிறேன்…’ அப்படின்னு சொல்லுச்சு. சொன்ன மாதிரியே கீச்சு, கீச்சுன்னு சத்தம் போட்டுகிட்டு நாலு அஞ்சு குருவிங்க தண்ணி குடிச்சதப் பார்த்து நானே வாயடைச்சு போயிட்டேன்..” என குட்டி கதையாக சொன்னாள்.

இப்படியாக அவனைப் பற்றி நான் கேள்விப்படும் செய்தியெல்லாம் அவன் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவன் மீது அந்த தெருவில் உள்ளவர்கள், மிகுந்த மரியாதை வைத்திருந்ததும் என்னை அறியாமலேயே என் மனதில் நுழைந்தான், ஜீவா என்கிற அவன். அவனும் என்னை ஒருவித தயக்கத்தோடு கவனிக்க ஆரம்பித்ததையும் தெரிந்து கொண்டேன். அவன் படித்த பள்ளியிலே நானும் சேர்ந்தேன். தினமும் காலையும் மாலையும் பள்ளிக்குப் போகும் போதும், திரும்பி வரும்போதும் பார்வையால் இருவரும் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் படித்த தோழிகளுக்குத் தெரிய வந்தது. அவனுடைய நண்பர்களும் தெரிந்து கொண்டு அவனை கிண்டல் செய்யத் தொடங்கினர். ஆனால் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமலேயே தினமும் பார்வையால் எங்கள் அன்பு வளர்ந்தது.

ஜீவாவின் குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம். மச்சு வீடு, தோட்டம், தொறவு என வசதி. அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. ஆண்டுகள் இரண்டு ஓடியது. இன்னும் நான் அவனுடன் நேரிடையாகப் பேசவில்லை. ஆனால் பார்வையாலேயே இருவரும் நெருங்கிவிட்டோம். இப்போது எங்கள் விஷயம் தெரு தொடங்கி ஊர் முழுவதும் தெரிய ஆரம்பித்தது. அவனோடு நான் நேரிடையாக பேசியது இன்றும் ஞாபகம் உள்ளது.

ஒருநாள் சின்னம்மா வீட்டிற்கு எதிரே இருக்கும் பிள்ளையார் கோவில் சிமென்ட் கட்டையில் வந்து உட்கார்ந்தான் ஜீவா. மணி அப்போது ஏழு. நான் சின்னம்மா வீட்டு சன்னல் வழியாக அவனைப் பார்த்தேன். நான் பார்ப்பது அவனுக்கு தெரியாது. நேரம் அப்போது ஒன்பது மணி.

ஜீவா இன்னும் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. தெரு நிசப்தமாகி நித்திரையில் இருந்தது. இவன் மட்டும் ஏன் இன்னும் இங்கே உட்கார்ந்திருக்கிறான். போய் கேட்போமா? வேண்டாம்; யாரையாவது துணைக்கு அழைச்சிட்டுப் போய் கேள் என்றது மனது. பக்கத்து வீட்டுக்குப் போய் “”அக்கா, அக்கா” என குரல் கொடுத்தேன். அரைத் தூக்கத்திலிருந்த நீலா அக்கா எழுந்து “”யாரு, வினோவா, இந்த நேரத்திலே எழுப்புறே… என்ன விஷயம்?” என வெளியே வந்தபடி கேட்டாள்.

நான் தயங்கியபடி “”அக்கா, ஜீவா ஏழு மணியிலிருந்து கோயில்லே உட்கார்ந்து இருக்கு. இப்ப மணி ஒன்பதாச்சு. என்ன பிரச்னைன்னு தெரியலே வா.. அக்கா… என்னான்னு கேட்போம்…” என்றாள்.

நீலா அக்கா சிரித்துக்கொண்டே “”ஏன் நீயே போய் கேட்கிறது?” என்றவர், “”சரி… வா கேட்போம்” என்றபடி எழுந்தார். இருவரும் ஜீவாவின் எதிரே போய் நின்றோம்.

“”ஏன் ஜீவா இங்கேயே ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்கியாம். எதுவும் பிரச்னையா? உனக்கு மேலே இவ ரொம்ப கவலையா இருக்கா..” என அக்கா கேட்டாள்.

“”வேறொண்ணும் இல்ல அக்கா. நம்ம வீட்டுக்கு பின்னாடி ஒரு பெரிய பூவரசு மரம் இருந்துச்சுல்ல. அந்த மரத்துக்கிளையில சாயந்தரமானா நூத்துக்கணக்கில குருவிங்க வந்து தங்கும். பொழுது போறவரைக்கும் கீச்சு கீச்சுன்னு சத்தமா இருக்கும். அதுங்க காலையிலேருந்து போன இடம், தேடுன இரை இதப்பத்தி பேசுதுங்கன்னு நினைப்பேன். நான் சின்னப் பிள்ளையா இருந்ததிலிருந்து இதை கவனிச்சிட்டு வர்றேன். நேத்து அந்த மரத்தை அப்பா வியாபாரிகிட்டே வித்திட்டாரு. நான் மரத்தை விக்க வேணாம்னு சொல்லியும் பணக்கஷ்டம் அதனால வித்துட்டேன்னு சொல்லிட்டார் அப்பா.

இன்னைக்கு ஆளுங்க வந்து மரத்தோட கிளையெல்லாம் வெட்டி, அடிமரத்தையும் வெட்டி சாய்ச்சிட்டாங்க, சாயந்திரமான மரத்துல அடையுற அந்த குருவியெல்லாம் இப்ப எங்க அடைஞ்சிச்சோன்னு நினைச்சுப் பார்த்தேன். ரொம்ப சங்கடமா இருந்திச்சு. அதான் இங்கே உட்கார்ந்திருக்கேன்”.

இதைக் கேட்ட நீலா அக்கா சிரித்துக்கொண்டே, “”என்ன ஜீவா பைத்தியம் மாதிரி, இதுக்காகவா எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்திருக்கே?” என்று கேட்டாள். உடனே தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்து ஜீவா கேட்டான், “”வினோ நீ சொல்லு இது பைத்தியக்காரத்தனமா?”

நான் சொன்னேன், “”இல்ல ஜீவா நீ பைத்தியம் இல்ல; நீதான் மனுசன்…” இதைக் கேட்டவுடன் ஜீவா எழுந்து போனான். இன்னும் இறுக்கமாக அவனைப் பற்றிக் கொண்டது மனசு.

பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிந்தது. பிரச்னையும் வந்தது.

“”ஏன்டி அந்த வினோவை நம்ம ஜீவா வைச்சிருக்கான்னு ஊரே பேசிக்கிது. உன்னோட காதுல கேட்கலையா? இதை இப்படியேவிட்டியான்னா ஒரு நாளைக்கு தாலி கட்டி வீட்டுக்கு கூட்டியாந்திடுவான். நம்ம சாதியென்ன, அவ சாதியென்ன… உடனே இதுக்கு ஒரு முடிவுகட்டு..” என ஜீவாவின் அம்மாவிடம் சொந்தங்கள் ஊதிவிட, அன்று மாலையே ஜீவாவின் அம்மா பத்திரகாளிபோல் சின்னம்மா வீட்டிற்கு வந்தாள்.

“”ஏன்டி ஆள் புடிக்கவா இவள இங்க படிக்க வைக்கிறே; உன்னோட சாதியென்ன கொலமென்ன. மரியாதை கெட்டிரும். ஜீவாவுக்கின்னு பொண்ணு வைச்சிருக்கிற என் தம்பி வந்தான்னா இங்க கொலையே விழும்..” என காட்டுக் கத்தலாய் பேச, ஊரே வேடிக்கை பார்க்கிறது. நான் அவமானத்தால் கூனிக்குறுகி நின்றேன். கோபமாய் எழுந்த சின்னம்மா துடைப்பத்தை எடுத்து கண்டபடி என்னை அடித்தாள். நான் அடியை வாங்கிக் கொண்டே நின்றேன். இதைப் பார்த்த ஜீவாவின் அம்மா ஏதோ திட்டியபடி போனாள். தகவல் அம்மாவுக்கும் அப்பாவிற்கும் தெரிந்து, என்னை எங்கள் ஊருக்கு அழைத்துப் போனார்கள். ஜீவாவை நான் பார்க்கவில்லை. அவனும் என்னைத் தேடி வரவில்லை. மனது இறுகிப் போனது. அசிங்கப்பட்டும் அவமானப்பட்டும் போன குளித்தலையில் இனி காலடி எடுத்து வைக்கக்கூடாது என தீர்க்கமானேன். நல்லவேளை இரண்டு ஆண்டுகள் கழித்து சின்னம்மா இறந்தபோது சென்னையில் எனக்கு பட்டபடிப்பு தேர்வு நேரம். நான் குளித்தலைக்கு வரவில்லை.

சென்னையிலேயே படிப்பு முடிந்தவுடன் சென்னையிலேயே தொழிலாளர் நலத்துறையில் வேலை. சென்னையிலேயே திருமணம். அன்பான கணவர். அன்பின் வெளிப்பாடாய் இரண்டு பிள்ளைகள். கொஞ்சம் கொஞ்சமாய் காலம் ஜீவாவின் நினைவுகளை மனதிலிருந்து நீக்கிவிட்டது. பதவி உயர்வுடன் திருச்சி அலுவலகத்திற்கு பணி மாறுதல். மகளிர் தங்கும் விடுதியில் தங்கினேன்.

“”குளித்தலை பள்ளிகூடம் இறங்கணுமா?” –

கண்டக்டர் குரல் கொடுத்தபோதுதான் சுய நினைவு வந்தது. சன்னல் வழியாக நானும் ஜீவாவும் படித்த பள்ளிக்கூடத்தைப் பார்த்தேன். பழைய பள்ளிக்கூடம் இல்லை. மரங்கள் நிறைந்த தோப்புக்குள் இருந்த பள்ளிக்கூடத்தில் இன்று மரங்கள் இல்லை.

குளித்தலையும் முற்றிலும் மாறியிருந்தது. பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் நின்றது. இறங்கி நேரத்தை பார்த்தேன். மணி மூன்று. மனம் மட்டுமல்ல, உடலும் சோர்வாக இருந்தது. அருகில் இருந்த ஓட்டலுக்கு சென்று காபி ஆர்டர் சொல்லிவிட்டு அமர்ந்தேன். நினைவு மீண்டும் பின்னோக்கியது.

அலுவலகத்தில் வேலையில் கவனமாக இருந்தபோது, கேபினுக்குள் நுழைந்த உதவியாளர், “”அம்மா, கனகம் காட்டன் மில் லேபருங்க உங்களை பார்க்கணுமாம்; உள்ளே அனுப்பவா..” என கேட்டார்.

“”சரி வரச் சொல்லுங்க…”

என சொல்லி மீண்டும் வேலையில் மூழ்கினேன். கதவை திறந்துகொண்டு ஐந்துபேர் உள்ளே வந்தனர். எதிரே நிற்பவரை பார்த்தவுடன் நெஞ்சு படபடத்தது. என் எதிரே ஜீவா.

“”அம்மா வணக்கம்! நாங்க கனகம் நூற்பாலை தொழிலாளர்கள். நான் தொழிற்சங்கத் தலைவர். என் பெயர் ஜீவா. கடந்த பத்து வருஷமா சம்பள உயர்வு நிர்வாகத்திடம் கேட்கிறோம். ஆனா நிர்வாகம் எங்களை ஏமாத்திகிட்டே வருது. மில் நல்ல லாபத்திலேதான் ஓடுது. நிர்வாகம் தொழிலாளிகளின் உழைப்பை உறிஞ்சி…” என ஏதோ உணர்ச்சிகரமாக ஜீவா பேசுவது தெரிகிறது. ஜீவாதானா என் எதிரே நிற்பது? உடல் மெலிந்து கண்கள் குழிவிழுந்து உருக்குலைந்து போய் என் எதிரே ஜீவா. ஜீவா என்னைத் தெரியவில்லையா? என என் மனது கேட்பது ஜீவாவின் காதில் விழ வாய்ப்பில்லை.

“”என்னம்மா நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க ஒண்ணும் சொல்லாம வேறே சிந்தனையிலே இருக்கிற மாதிரி தெரியுது. நீங்க ஒரு நேர்மையான அதிகாரின்னு கேள்விப்பட்டு போராட்டத்திற்கு முன்னாடி உங்ககிட்ட ஒருதரம் சொல்லிப் பார்ப்போன்னு வந்திருக்கோம்..” என ஜீவா சொன்னவுடன்.

நான் அதிகாரியாய் மாறி, “”முதலில் உட்காருங்கள்…” என்றேன்.

“”பரவாயில்லை. இந்தாங்க எங்க கோரிக்கை மனு. எங்க மில் நிர்வாகத்தை கூப்பிட்டு பேசுங்க. நல்ல முடிவு சொல்லுங்க. நாங்க வர்றோம்…” என சொல்லி ஜீவாவும் மற்றவர்களும் போனார்கள்.

நானும் கடமையை செய்ய ஆலை நிர்வாகத்தினரையும் தொழிற்சங்கத்தினரையும் அழைத்துப் பேசி, மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக முடிவு ஏற்பட்டது. இதற்காக நான்கு அல்லது ஐந்துமுறை என்னை சந்தித்த ஜீவா, என்னைத் தெரியாதது போல நடந்து கொண்டார். ஆனால் என் மனது மட்டும் இனம் புரியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு மன அழுத்தத்தை புதிதாக ஏற்றிக் கொண்டது. இதுபற்றி அமலாவிடம் பகிர்ந்து கொண்டபோது அவள் சொன்னாள். மனசைப் போட்டு குழப்பி கொள்ளாதே; அவரைப் போலவே நீயும் தெளிவாய் இரு… என்று சொன்னாள்.

ஒரு வாரம் கழித்து நன்றி சொல்ல தொழிலாளர்களோடு வந்த ஜீவா, அப்போதும் என்னை தெரியாதது போலவே நடந்து கொண்டார். வேறு ஏதும் பிரச்னை என்றால் எனக்கு போன் பண்ணுங்கள் என சொல்லி என் அலுவலக நம்பரை சொன்னேன். ஜீவா உட்பட அனைவரும் எழுதிக் கொண்டார்கள்.

காபி வந்தது. காபியை குடித்துக் கொண்டே காலையில் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை நினைத்து பார்க்கிறேன். அலுவலகத்தில் எனக்குரிய போன் பெல் அடித்தது. நான் ரிசீவரை எடுத்து, “”ஹலோ யார் வேணும்…” என கேட்கிறேன்.

எதிர்முனையில் அழுகையுடன், “”நான் குளித்தலையிலிருந்து ஜீவா பொண்ணு பேசுறேன். எங்கப்பா இறந்திட்டாரு… சாகறதுக்கு முன்னாடி இந்த நம்பரை கொடுத்து தகவல் சொல்லச் சொன்னாரு…” அழுது கொண்டே அந்த பெண் பேசினாள். நான் பேசவே இல்லை.

ஹோட்டலை விட்டு இறங்கி நான் இரண்டு ஆண்டுகாலம் வசித்த தெருவை நோக்கி நடக்கிறேன். தெளிவான மனதுடன் தைரியமாக நடக்கிறேன். தெரு மாறியிருந்தது. குடிசை வீடுகள் இல்லை. கட்டடங்களாய் வீடுகள் மாறியுள்ளன. ரோடும் மாறியிருந்தது. ரோட்டோரம் இருந்த மகிழம்பூ மரங்கள் இல்லை. பூக்கள் இல்லை. பிள்ளையார் கோவில் மட்டும் அப்படியே இருக்கிறது. தைரியமாக நடந்து வந்த என் கண்களுக்கு ஜீவாவின் வீடு தூரத்தில் தெரிகிறது. பழைய நினைவுகள் சுனாமி அலைகளாய் மனதில் அடிக்கிறது. நடை தளர்கிறது. கண்கள் இருட்டுகிறது. ஜீவாவின் வீட்டருகே வந்துவிட்டேன். இருபது, இருபத்தைந்து பேர் வெளியே உட்கார்ந்திருந்தார்கள். ஜீவாவுடன் அலுவலகத்திற்கு வந்த இருவர் எழுந்து வந்து, “வாங்க அம்மா’ என என்னை ஜீவா உடலருகே அழைத்துப்போனார்கள். அந்த மெலிந்த தேகம் மெüனித்து மரப்பெஞ்சில் கிடந்தது. எனக்கு கண்ணீர் கொட்டுகிறது. கதறி அழவேண்டும் போல இருக்கிறது. கட்டுப்படுத்திக் கொண்டேன்.

ஜீவா தன் மனைவி மீது அதிக பாசம் வைத்திருக்கவேண்டும். அவள் மயக்கமாகக் கிடந்தாள். அவளை தேற்றிக் கொண்டிருந்தார்கள். நான் அருகில் இருந்தவரிடம் கேட்டேன். ஜீவாவின் மகள் யாரென்று? அழுது கொண்டிருந்த அந்த பெண் பிள்ளையை அழைத்துவந்தார். நான் ஆறுதலாய் அவளை அழைத்தேன். அவள் அழுகைக்கிடையே சொன்னாள், “”அப்பா ஆஸ்பத்திரியிலே இருந்தப்ப இந்த பேப்பரை உங்கக்கிட்டே கொடுக்கச் சொன்னார்…” என சொல்லி, ஒரு துண்டு பேப்பரை நீட்டினாள். நான் பிரித்துப் பார்த்தேன் உள்ளே…

“”என்னை மன்னித்துவிடுங்கள்.

– இப்படிக்கு ஜீவா ” என எழுதியிருந்தது. மனதை கட்டுப்படுத்திக் கொண்டு கிளம்பத் தயாரானேன். ஏதோ நினைவுவந்தவளாய் ஜீவாவின் மகளிடம் கேட்டேன்.

“”உன் பெயர் என்ன?”

அவள் அழுதுகொண்டே சொன்னாள், “”வினோதினி; அப்பா என்னை வினோன்னு கூப்பிடுவார்…” என சொல்லி கதற ஆரம்பித்தாள். நான் ஊருக்குத் திரும்பினேன்.

திருச்சிக்கு வந்து ஹாஸ்டலுக்குப் போனேன். ரூமிலிருந்த அமலா கேட்டாள். ஜீவா எனக்கு எழுதிய பேப்பரை அவளிடம் கொடுத்து நடந்தவற்றை சொன்னேன். கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.

“”சரி விடு வினோ; இனி நடக்கிறத பார். மனசை தெளிவாக்கிக்க; மறுபடியும் சொல்றேன். மனசைப் போட்டு குழப்பிக்காதே…” என சொன்னாள்.

எழுந்தேன்; முகத்தை துடைத்துக் கொண்டு ஜீவா எழுதிய பேப்பரை கிழித்து குப்பைக்கூடையில் போட்டேன்.

அமலா ஆச்சரியமாய் “”ஏய்… என்ன செய்யிறே…” எனக் கேட்டாள்.

நான் நிதானமாக செல்போனை எடுத்து அவரை கூப்பிட்டேன். எதிர்முனையில் அவர், “”என்ன வினோ நல்லாயிருக்கியா? சாப்பிட்டியா?” எனக் கேட்கிறார். நான் சொன்னேன். “”உங்களையும் பிள்ளைகளையும் விட்டுட்டு இங்கு வேலை பார்க்கமுடியல. உடனே சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுங்க…” என பதிலளித்து செல்போனை வைத்துவிட்டு, தெளிவாய் படுக்கையில் விழுந்தேன்.

– வீ.எஸ்.கணேசன் (ஏப்ரல் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *