அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை,
மாலை நேரம் சுமார் ஒரு நான்கு மணி இருக்கும், தனது மகள் லாவண்யாவை அழைத்தாள் லட்சுமி.
“கண்ணு, அம்மா கொஞ்சம் சுமதியக்கா வீட்டு வரைக்கும் போய் வாரேன், நீங்க கதவ சாத்திட்டு பத்திரமா இருக்கீங்களா?.”
“சரிங்கம்மா, ஏம்மா இந்த நேரத்துல அங்க போறீங்க? என ஒப்புக்கு வினவினாள் மகள் லாவண்யா.
“அந்த அக்கா கொஞ்சம் முன்னாடி ஆள் அனுப்பி இருக்காகம்மா, அவ்க பொண்ணுக்கு கல்யாணமாம், நாளக்கி பொண்ணு பாக்க வர்றாங்களாம்.”
“அதான் ஒத்தாசயா வேலைக்கு கூப்பிட்டு இருக்காக, இன்னக்கி சாயங்காலமாத்தான் மாப்ள வீட்ல இருந்து வர்றாங்களாம்”.
கொஞ்சம் போய்ட்டு வரேம்மா” என்று கூறிக்கொண்டே தனது காலணியை மாட்டிக் கொண்டிருந்தாள்.
‘லட்சுமி’ கணவனால் கைவிடப்பட்ட ஓர் கைம்பெண்.
சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு, கல்யாணமாகி இரண்டு வருடங்களில் லாவண்யா கைக்குழந்தையாக இருந்தபோது விட்டுவிட்டு போனவன் தான், இன்று வரை எங்கு இருக்கிறான் என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.
அன்று முதல் இன்று வரை கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறாள் லட்சுமி.
இதில் தனது பெண் குழந்தையையும் வளர்த்து பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தாள், மேற்கொண்டு படிக்க பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் வேறு வழியின்றி படிப்பை நிறுத்த சொல்லி விட்டாள்.
‘லாவண்யா’வும் அம்மாவின் சூழ்நிலை அறிந்து மறுப்பேதும் சொல்லாமல் அத்தோடு தனது படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டாள்.
‘லட்சுமிக்கு வருமானம் அந்த ஊரில் எந்த வீட்டிலேனும் விஷேஷம் என்றால் அவ்வீட்டில் உள்ள பெண்களுக்கு கூடமாட ஒத்தாசையாக வீட்டு வேலைக்கும், சமையல் வேலைக்கும் உதவுவதற்காக கூப்பிடுவார்கள்.
அங்கு சென்று வேலைபார்த்து இரவு திரும்பும்போது ஏதேனும் கூலியாக கொடுப்பார்கள்.
சிலவேளைகளில் அங்கு ரெண்டு நாட்கள் முதல் பத்து நாட்கள் வரையிலும்கூட வேலை செய்யச் சொல்வார்கள், அவ்வாறு வேலை செய்து முடித்ததும் மொத்தமாக ஆயிரம், ரெண்டாயிரம் என கொடுப்பார்கள். அதுவே அந்த மாதம் முழுக்க லட்சுமி’க்கான குடும்ப தேவைகளை தீர்க்க போதுமானதாக இருக்கும்.
இதுதவிர சாயங்கால வேளைகளில் கடைகளுக்கும், வீடுகளுக்கும் சமோஸா, வடை மற்றும் பஜ்ஜி போன்ற பலகாரங்கள் சுட்டுக் கொடுத்தும் தமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
பல்வேறு கடின சூழ்நிலைகளுக்குள் நின்றும், கடந்தும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் ‘லட்சுமி’ எல்லா கஷ்டங்களையும் தாம் சுமந்தாலும் இன்று வரை தனது மகள் ‘லாவண்யா’விற்கு எவ்வித சிரமமும் வந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் வைராக்கியமாய் இருப்பாள்.
தன் பிள்ளைக்கு வீட்டு வேலையைத் தவிர்த்து, தாம் பிழைப்புக்காக செய்யும் வேலைகளில் அவளைத் தவிர்த்து வந்தாள்.
ஆனால் ‘லாவண்யா’வோ தன் தாய் கஷ்டப் படுவதை தாங்க மாட்டாமல், சாயங்கால வேளையில் பலகாரங்கள் சுடும் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாள்.
‘லட்சுமி’ எவ்வளவோ சொல்லியும் கேட்காமல்.
“என் கண்ணு முன்னால நீ மட்டும் கஷ்டப்படுறது என்னால தாங்க முடியலம்மா உனக்காக இந்த வேலையையாவது கொஞ்சம் செயறேன்ம்மா”. என கெஞ்சி கூத்தாடி செய்வாள்.
இது தவிர வீட்டு வேலைகள் எதிலும் தன் தாயை ஈடுபடுத்த விடாமல் தானே எல்லா வேலையையும் செய்து முடித்து விடுவாள்.
இரவு நேரங்களில் களைப்புடன் படுத்து கிடக்கும் ‘லட்சுமியின்’ கால்களை பிடித்து விடுவாள், வேலைகள் ஓயாமல் செய்தே காய்ச்சி போயிருக்கும் ‘லட்சுமி’யின் கரங்களை அமுக்கி விடுவாள்.
களைத்துப் போன உடலோடும், காய்த்துப் போன கரங்களோடும் தன்னைக் காக்க பாடுபடும் தன் தாயை நினைத்து சில வேளைகளில் அவளுக்கு அழுகை அடைத்துக் கொண்டு வரும் இருப்பினும் தாய்க்கு தெரியாமல் பொங்கி வரும் கண்ணீரை முகம் திருப்பி மறைத்துக் கொண்டு இரு கைகளால் அவசரமாக துடைத்துக் கொள்வாள்.
இதைப் பார்த்ததும் ‘லட்சுமி’ அவசர அவசரமாக பதறுவாள்.
“ஏம்மா!, கண்ணு அழுவுற, அம்மா உன்னை ஏதாச்சும் கஷ்டப் படுத்திட்டேனாம்மா.” என்பாள்.
உடனே தன் கைகளால் அம்மாவின் வாயைப் பொத்தி.
“அப்படியெல்லாம் சொல்லாதீங்கம்மா, நீங்க கஷ்டப் படுறதை என்னால ஒரு புள்ளயா இருந்து பாக்க முடியலம்மா, நான் ஒரு ஆம்பள புள்ளயா இருந்திருந்தா உங்கள இந்த நெலமையில வெச்சு இருப்பேனாம்மா.”
கடவுளே! ஏன் எங்களை இப்டி சோதிக்கிறே. என்பாள்.
“அப்டியெல்லாம் ஆம்பள புள்ள, பொம்பள புள்ளன்னு பிரிச்சு பாக்காதம்மா. எல்லாமே புள்ளதான், நீ எனக்கு கெடச்சுதுல நான் கடவுளுக்கு ரொம்பவும் கடம பட்டு இருக்கேன்மா, இல்லனா இந்த கட்ட இத்தன வருஷத்துக்கு இந்த உசுர வச்சுக்கிட்டு இருந்திருக்குமா சொல்லு”. என்றாள்.
இப்படியாக இரவுகள் கழிந்தன.
ஒருநாள், லட்சுமி’யின் வீட்டிற்கு வந்த ‘ராசு’ அவரின் முழுப்பெயர் ராசய்யன் லட்சுமியின் உறவுக்காரர் அண்ணன் முறை வேண்டும் அவரை ராசப்பா’ என்றுதான் லட்சுமி அழைப்பாள் .
லட்சுமியிடம்.நெடுங்கடை’யில எனக்குத் தெரிஞ்சவங்க பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்கம்மா. மாப்ள கண்டக்டரா இருக்காராம், கவுர்மெண்டு உத்தியோகமாம், நல்ல குடும்பம் பொண்ண கட்டுறியா என்றார்.
திடீரென இப்படி ராசய்யா’ கேட்டதும், விழி பிதுங்கி நின்றாள் லட்சுமி’.
“என்னண்ணே! திடுதிப்புன்னு இப்டி வந்து சொல்றீங்க, என்னிட்ட புள்ளக்கி போடுறதுக்கு பொட்டுக்கூட நகநட்டு ஒன்னும் இல்லையே நான் என்ன செய்வேன்” .
தனது இயலாமையை நினைத்து பதறினாள் லட்சுமி’.
“உன் நெலமய சொல்லி இருக்கேன். இருந்தாலும் வந்து பாத்துட்டுத்தான் முடிவ சொல்லன்னும்னாங்க.” வரச் சொல்லவா”. என்றார் ‘ராசய்யா’.
இருந்தாலும் ஏதோ தைரியத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று வரச் சொல்லிவிட்டாள். ‘லட்சுமி’.
மறுநாள் காலையில் மாப்பிள்ளையின் அம்மாவும், அண்ணன் சம்சாரமும் பெண் பார்க்க வந்து இருந்தனர்.
மாப்பிள்ளை வரவில்லை இன்றைய தினம் அவர் டியூட்டியில் இருப்பதாக கூறினர்.
‘லாவண்யா’வைப் பார்த்ததும் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.
மாப்பிள்ளையின் போட்டோவைக் காட்டினர்.’லட்சுமிக்கும் மாப்பிள்ளையை மிகவும் பிடித்துப் போனது.
மாப்பிள்ளை ‘ராஜன்’ அவளின் மனசுக்கு நிறைவாகவே தோன்றினான்.
மாப்பிளையின் அம்மாதான் முதலில் பேசினார்.
“பொண்ண எங்களுக்கு ரொம்ப புடிச்சி போச்சிம்மா.மேற்கொண்டு மாப்ளக்கி ஒரு பத்து பவுனு போடுங்க, மத்தபடி ஒரு இருவதாயிரம் கொடுத்திடுங்க கல்யாணத்த சீக்கிரத்துல முடிச்சிடுவோம், என்னோட மூத்த மவனுக்கும் இப்படித்தான் செஞ்சாங்க.” என்றார்.
அதைக் கேட்டு பதறிப் போன ‘லட்சுமி’ இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகி விட்டார்.
அவர்கள் சென்றுவிட.
லட்சுமிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.
“கடவுளே!! இம்புட்டுக்கு நான் எங்க போவேன்.” எம்புள்ளக்கி இப்டி ஒன்னத்தயும் சேக்காம இப்டி கடங்காரியா நிக்கிறேனே! நான் என்ன செய்வேன்!.
என நொந்து கொண்டாள்.
இருந்தாலும் ஒரு நம்பிக்கை கொண்டவளாக இருந்தாள்.
நாம இந்த ஊருல எத்தன வூட்டுக்கு கூப்புட்ட ஒடனே ஒதவப் போனோம். அப்டி இருக்கறப்போ நம்ம மக்களுவ நமக்கு ஒதவாமயா இருப்பாங்க?.
என நம்பிக்கை கொண்டவளாக எழுந்தாள்.
நேரே முதல் வீடாக சுமதியின் வீட்டை நோக்கி சென்றாள்.
வா, லட்சுமி, வா வா.நல்லா இருக்கியா? என்று வரவேற்றாள் சுமதி.
“நல்லா இருக்கேன் அக்கா!, நீங்க நல்லா இருக்கீங்களா?.”
“எல்லோரும் நல்லவிதமா இருக்கோம் ஒக்காரு” என்றதும் ஒரு ஓரமாக சென்று சோபாவிற்கு அருகே இருக்கும் தரையில் அமர்ந்து கொண்டாள்.
சுமதி’ சோபாவில் அமர்ந்துகொண்டு .
“என்னவிசயம் லட்சுமி சாயங்காலம் அதுவுமா! வந்திருக்கே!, எனக் கேட்டாள்.
“அது வந்து.’.தயக்கத்தை போக்கிவிட்டு கேட்டாள் .லட்சுமி.
“வேற ஒன்னுமில்லக்கா, எம்பொண்ண நெடுங்கடை’யில ஒரு மாப்ளக்கி கேட்டு வந்திருக்காக”. நல்ல வரன் அதுக்குத்தான் ஒங்க கிட்ட ஒதவியா வந்தேன்.” ஒருவழியாக சொல்லி முடித்து விட்டாள்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவள்.
“ரொம்ப சந்தோசம், லட்சுமி!, நல்லதுமா, கொஞ்சம் சித்த ஒக்காரு, இப்ப வரேன், என்று அறைப் பக்கமா போனவள் கொஞ்ச நேரம் கழித்து திரும்பி கையை மூடியவாறே வந்தாள்.
ந்தா.இத வெச்சுக்கோ. லட்சுமி.என கையை நீட்ட.
லட்சுமி’ ஆவலுடன் இரு கைகளையும் நீட்டினாள்.
அவளின் இரு கரங்களின் இடுக்கில் ஒரு நூறு ரூபாயை வைத்தாள் சுமதி’
விரித்த கரங்களில் விழுந்த நூறு ரூபாயைக் கண்டதும் பெரும் ஏமாற்றமாகிப் போனது ‘லட்சுமி’க்கு.
இருப்பினும் ஏமாற்றத்தை வெளியில் காட்டாமல் கிளம்பினாள் .
“நல்லதுக்கா, சரி நான் வரேன்க்கா!”.
அதே! நேரம் சுமதியின் இளைய மகன், வீட்டுக்குள் ஓடி வந்து .
அம்மா, ஐஸ்கிரீம் வந்திருக்கும்மா., எனக்கு காசு கொடும்மா வாங்கனும் என்றான் .
“கொஞ்சம் இருடா வரேன்”. என்றவள் உள்ளே சென்று வந்து அவனிடம் .
நூறு’ ரூபாயைக் கொடுத்து “இந்தாபுடி போய் வாங்கிக்கோ” என்றாள்.
அதைப் பார்த்ததும், லட்சுமி’க்கு அழுகையும், ஆற்றாமையும் பொங்கிக் கொண்டு வந்துவிட்டது.
தன் வாயை, ஒரு முனையில் பிடித்திருந்த முந்தானையால் பொத்தியவாறே! அவ்வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறினாள்.
வரும் வழியெல்லாம் அவளுக்கு ஆற்றாமையினால் அழுகை பொங்கிக் கொண்டு வருவதை தவிர்க்க முடியவில்லை.
தனக்குள்ளேயே! கூறிக்கொண்டாள்.
“என்ன ஒலகமடா இது கடவுளே.!.”
“ஒரு ஐஸ்கிரீமுக்கு கொடுக்குற முக்கியத்துவம்தானா? அவங்களப் பொருத்தவரைக்கும் எம்பொண்ணோட வாழ்க்கைக்கும் கொடுக்குறதுங்கிறது.”.
“அவுங்க கூப்பிட்டப்பல்லாம் போயி நின்னதுக்கு கொடுக்குற கைமாறு இதுதானா?” என தன் ஆற்றாமையை தனக்குள் கொட்டிக்கொண்டாள்.
வீட்டிற்குள் வந்து, தன் மகளைப் பார்த்ததும் அவளுக்கு இன்னும் அழுகையும், ஆற்றாமையும் அதிகமானது.
“கடவுளே! இந்த ஒலகத்த நம்பி எம்பொண்ணுக்கு ஒரு நல்லது பண்ணி நான் பாக்கவே முடியாதா?”.
“இந்த பிச்சகார சிறுக்கிக்கு புள்ளயா பொறந்ததுதான் எம்புள்ள பண்ணுன தப்பா?.
என தனக்குத்தானே! கேட்டுக் கொண்டாள்.
அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் ‘லாவண்யா’ என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டாள்.
கவலையுடன் அமர்ந்திருக்கும் அம்மாவிடம் சென்றவள்.
“அம்மா கவலைப் படாதீங்கம்மா.நான் வேணா ஒங்க கூடவே இருந்திடுறேம்மா எனக்கு இப்போ எதுக்கும்மா கல்யாணம்லாம்.”
அவசரமாக பதறினாள் ‘லட்சுமி’
“அப்படியெல்லாம் சொல்லாதேம்மா, ஒன்ன நல்லா வெச்சு பாக்கனும்னுதானே இந்த ஒத்த உசுரு இன்னும் சுத்திகிட்டு கிடக்கு.”
ஒன்ன அந்த கடவுள்.நல்லா வெச்சுருப்பான்மா நீங்க கவலப் படதீங்கடா என் ராசாத்தி”.என ஆறுதல் படுத்தினாள்.
அங்கே சிறிது நேரம் அமைதி நிலவியது.
பின்னர் இருவரும் இரவு உணவருந்திவிட்டு உறங்க சென்றனர்.
ஆனால், லட்சுமிக்கு உறக்கம் வரவில்லை,.
பொழுது விடிந்தது.
காலை ஏழுமணி இருக்கும் ,,,
வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
அவசரமாக யாராயிருக்கும் என கதவைத் திறந்து பார்த்தாள் லட்சுமி’
அங்கே!,
பைக்கிலிருந்து, இறங்கி வாசல் கதவை தட்டினான் லாவண்யா’விற்காக லட்சுமி பார்த்து இருக்கும் மாப்பிள்ளையான .
’ராஜன்’.
அவனை ஜன்னல் வழியாகப் பார்த்ததும் பதற்றமானாள் ‘லட்சுமி’
வந்தவன் கதவருகே! நின்று ”கொஞ்சம் உள்ளே வரலாங்களா?”
என்று கூறிவிட்டு பதிலுக்காக காத்திருந்தான்.
அவசரமாக லட்சுமி உள்ளிருந்து,
“வாங்க தம்பி, நல்லா இருக்கீங்களா? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா! “
என அறைக் கதவின் பின்னால் நின்றுகொண்டு விசாரித்தாள் லட்சுமி’
“எல்லாரும் நல்லா இருக்கோம் அத்தை!, நீங்க எப்படி இருக்கீங்க! “
என சம்பிரதாயமாக விசாரித்தவாறே, பேச்சைத் துவங்கினான்.’ராஜன்’.
“அத்தை வேற ஒன்னும் எடுத்துக்காதீங்க! நான் ஏன் இப்ப இங்க வந்தேன்னா, விசயம்லாம் தெரிஞ்சுகிட்டேன், உங்க பொண்ண பாக்க வந்தப்போ! எங்க வீட்டுல சிலத உங்ககிட்ட கேட்டதா, கேள்விப்பட்டேன். அது விசயமாத்தான் இங்க வந்து உங்கள்ட்ட கொஞ்சம் பேசிட்டு போலாம்னு வந்தேன்.” என்று ‘ராஜன்’ கூறியதும்.
தன் புருவத்தை உயர்த்தி ‘இவர் என்ன பேச போறாரோ? என யோசித்துக் கொண்டே!
“சொல்லுங்க தம்பி! நாங்க வேற என்ன செய்யணும்?.”
என்று கேட்டாள் லட்சுமி’
உடனே ‘ராஜன்’ படபடத்தான்.
“அப்டியெல்லாம் ஒன்னும்மில்லத்த!.நீங்க ஒன்னும் செய்ய வேணாம், அத சொல்லத்தான் வந்தேன்.”
தன்னுடைய விழிகள் விரிய ஆச்சரியமாய் பார்த்தாள் ‘லட்சுமி’ அவனை. கதவிடுக்கில் நின்று.
மேலும் ராஜன் சொன்னான்.
‘”அத்த!, கடவுள் உதவியால நான் இப்போ நல்லவிதமா இருக்கேன், நல்லா சம்பாதிக்கிறேன், ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டேன் நல்ல வேல கெடக்கிறது அவ்வளவு லேசானதில்ல,.அப்புறம் கடவுள் எனக்கு உதவி புரிஞ்சான்.இப்போ என்னோட வேலையிலயும் அந்த கடவுள் முன்னேற்றத்த கொடுத்திருக்கான். நானும் கஷ்டத்துலர்ந்து வந்தவன்தான் அதுனால எல்லாரோட கஷ்டத்தையும் புரிஞ்சி வெச்சு இருக்கேன்.”
“ உங்களையும், உங்க பொண்ணையும் பத்தி தெரிஞ்சுகிட்டேன் வீட்டுல கேட்டு தெரிஞ்சுகிட்டேன் என் மனசுக்கு நிறைவா இருந்துச்சு.உங்க மருமவனா, இல்லாம உங்க மவனா உங்க பொண்ண நல்லா வெச்சு பாத்துக்குவேன்.நீங்க கவலைப் படாதீங்க அத்த!”.
அவனை ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் பார்த்தாள் ‘லட்சுமி’
மேலும் ராஜன் தொடர்ந்தான்.
“ நான் எப்போ, வேலையில சேர்ந்தேனோ!, அப்போவிலிருந்து நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு நானே! கொடுத்துதான் கல்யாணம் முடிக்கணும்னு ஒரே கொள்கையோட இருந்தேன்.அதுக்காக அப்போவிலிருந்து கையில காச சேக்க ஆரம்பிச்சுட்டேன்.இப்போ இதுவரைக்கும் கடவுள் உதவியால ஒரு பத்து பவுனு வரைக்கும் சேர்த்துட்டேன். அத்தோட கொஞ்சம் பணமும் என் கல்யாண செலவுக்கு சேத்து வச்சு இருந்தேன்.”
“அத இப்போ இங்க கொண்டு வந்து இருக்கேன், எங்க வீட்டுல உங்கள்ட்ட கேட்ட எல்லாம் இதுல இருக்கு இத தயவு செஞ்சு மறுக்காம வாங்கிக்கோங்க அத்த!.”
என்று தான் கொண்டு வந்த ஒரு மஞ்சப்பையை நீட்டிக்கொண்டே நின்றான்.
.ராஜன் .
‘அவன் ஒவ்வொரு வார்த்தையாக சொல்ல சொல்ல .’ லட்சுமி ’ ஸ்தம்பித்துபோய் வாயடைத்து நின்று விட்டாள் .
பேச்சு வரவில்லை.
பின்னர் “அத்த!” என்று ‘ராஜன்’ கூப்பிட்டதும்தான் அவள் சகஜ நிலைக்கு வந்தாள்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு .அவசரமாக அதை மறுத்தாள் ‘லட்சுமி ’ .
“கடவுளே!, அதெல்லாம் வேணாம் தம்பி, உங்க வீட்டுக்கு இதெல்லாம் தெரிஞ்சா நல்லா இருக்கதுங்க நீங்க கொண்டு போய்டுங்க தம்பி . என்றவள்.
“ எங்க சொந்தக்காரங்ககிட்டல்லாம் கொஞ்சம் கேட்டு இருக்கேன்.கல்யாணத்துக்குள்ள ஏதோ தோது பண்ணிடறேன். இத தயவு செஞ்சு எடுத்திட்டு போயிடுங்க தம்பி ”. என்று பதறினாள்.
சாவகாசமாக லேசாக சிரித்துக் கொண்டே, சொன்னான்,.’ராஜன்.
“அத்த! தயவு செஞ்சு அப்டியெல்லாம் எங்க வீட்ட பத்தி ஒன்னும் நெனச்சுடாதீங்க, இது எல்லாம் எங்க அம்மாவுக்கும் தெரியும், அவங்கதான் உங்க நெலமய என்னிட்ட சொல்லி இத போய் கொடுத்து சொல்லிட்டுவா’னு அனுப்பி வெச்சாங்க.
“ஒரு காலத்துல நான் கல்யாணத்துக்கு பட்ட கஷ்டத்தை இன்னொரு பொண்ணுக்கு நாம கொடுக்கக் கூடாதுடா!. நீ போயி இத முறைப்படி கொடுத்துட்டு வான்னு சொல்லி அனுப்பிச்சதே அவங்கதான்.”
“அன்னக்கி என் அண்ணனோட சம்சாரம் அண்ணிகூட இருந்ததால, அவங்க முன்னாடி உங்க கவுரவத்த உசத்தியா காட்டனும்னுதான் அவங்க அப்படி கேட்டாங்களாம்.”
“மத்தபடி! உங்க பொண்ண பாத்த ஒடனே இதுதான் நம்ம வீட்டு மருமக’னு முடிவே பண்ணிட்டாங்களாம்”.இதுலாம் அவங்க சம்மதத்தோடத்தான் எடுத்தாந்தேன்.”
“தயவு செய்து இப்பவாவது எங்கள புரிஞ்சுக்கோங்க!.நான் உங்களுக்கு மறுமவனா இல்லாம ஒரு மவனா இருப்பேன்.”…
“ஒங்க கஷ்டமெல்லாம் கடவுளின் கருணையால இன்னியோட போய்விட்டதா நெனச்சுக்கோங்க அத்த!”.
அப்ப நான் வரட்டுங்களா அத்த!”.
என சொல்லிவிட்டு கதவை நோக்கி நடந்தான்.”ராஜன்.’.
அவன் செல்வதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் ‘லட்சுமி
ராஜன்’ அவளுக்கு இன்னொரு மகனாகவே தெரிந்தான்.
கடவுளே!!, நீ கொடுக்கும் ஒவ்வொன்னுக்கும் காரணமில்லாமல் இல்லை, நீயே! எல்லாத்தையும் தெரிஞ்சவனாகவே இருக்கே!.என உள்ளம் உருகினாள்.
இதுவரைக்கும் எம்பொண்ணுக்காக நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்ப உம் மூலமா எனக்கு நிம்மதி கெடச்சிருக்கு.என வேண்டினாள்.
மனதுக்குள் நிறைய ஆவலோடும், ஆறுதலோடும் வாசலைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
அவளின் மனசு நெறஞ்ச மாப்பிள்ளை ராஜன். .
அவளின் கண்களை விட்டு மறையும்வரை.