கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 1,733 
 
 

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

22-ம் அத்தியாயம் : பலாத்காரத் திட்டங்கள்

பத்மா ஸ்ரீதரைத் தான் மணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதும், சிவநேசருக்கு வந்த ஆத்திரத்தை அளவிட்டுச் சொல முடியாது. தன் வாழ்நாளிலே, எதிலுமே தோல்வி பெறாத அவர் இந்த விஷயத்தில் இப்பெண்ணிடம் இப்படிப்பட்ட பேச்சைக் கேட்க வேண்டி வந்ததே, தன் மகனைத் தன் முன்னாலேயே குருட்டுப் பிள்ளை என்று கூறினாளே இக்குமரி – அவளை விட்டு வைப்பதா என்ற அளவுக்கு அவரது கோபம் ஆவேசங் கொண்ட கடுஞ் சினமாகக் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. “வருவது வரட்டும். பலாத்காரமாக அவளைத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்.” என்ற எல்லைக்குக் கூட அவரது எண்ணங்கள் சென்றுவிட்டன. உண்மைதான். அவர் நினைத்தால் அதுவும் அவரால் செய்ய முடியாத ஒன்றல்ல. கொழும்பு நகரில் அப்பிரதேசத்தில்தான் இலங்கையில் மகா பயங்கரமான காடையர்களும் அகில இலங்கை ரெளடித் தலைவர்களும், கஞ்சா வியாபாரிகளும் கள்ளக்கடத்தல் பேர்வழிகளும், சாராயக்குதச் சொந்தக்காரர்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் சிவநேசர் என்றால் எப்போதுமே அளவுக்கு மீறிய மதிப்பு. இதற்குக் காரணம் அவர்களில் முக்கியமான ஒரு சிலருக்கு மிக எக்கச்சக்கமான நேரங்களில் சிவநேசர் பல உதவிகளைச் செய்திருந்ததேயாகும். அவர்களைப் பார்த்துச் சிவநேசர் தம் சுண்டு விரலை அசைத்தால் போதும். அவர்கள் உடனே நாட்டையே அசைத்துவிடுவார்கள். அத்தகைய செல்வாக்கு அவருக்கு அவர்களிடையே இருந்து வந்தது. மேலும் இத்தகைய கோஷ்டிகளைக் கட்டியாள்வதற்கும், இது போன்ற வேலைகளைச் செய்து முடிப்பதற்கும் வேண்டிய பணத்தைப் பற்றிய கவலையும், சிவநேசருக்கு இல்லை. இன்னும் என்றுமே பணத்தைத் தண்ணீர் போல் அள்ளி வீசிச் செலவிடுவதற்கும் அவர் பின்னிற்பவரல்லர். எனவே, பலாத்காரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக் காரியங்களைச் சாதிப்பது அவருக்கு இலகுவான காரியமே.

பத்மா ஸ்ரீதரை நிராகரித்த அன்று மாலை “கிஷ்கிந்தா”வின் மாடியிலிருந்த நிலா முற்றத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக விஸ்கியை அருந்திக் கொண்டிருந்த சிவநேசர் மனதில் இப்படிப்பட்ட பலாத்கார எண்ணங்கள் பேய் நடம் புரிந்து கொண்டிருந்தன. ஒருவரிடமும் ஒன்றும் பேசாமல் விஸ்கி மேல் விஸ்கியாகக் குடித்துக் கொண்டிருந்த அவரது முகம் நிமிஷத்துக்கு நிமிஷம் பயங்கரமாக மாறிக் கொண்டிருந்ததை அவதானித்த பாக்கியம் பயந்து போய்விட்டாள். என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என்ற அச்சம் அவளைப் பீடித்தது. எரிமலை வாய் திறந்து தீக்குழம்பைக் கக்க ஆரம்பித்ததும், அதைப் பார்த்தவர்கள் பூகம்பம் அதிக தொலைவிலில்லை என்று அதனை எதிர்பார்த்திருப்பது போல், சிவநேசரின் போக்கைப் பார்த்து ஏதோ அநர்த்தம் சீக்கிரமே விளையப் போகிறது என்று அதனை எதிபார்த்திருந்தாள் பாக்கியம். அவ்வித எதிர்பார்ப்பின் காரணமாகக் கணவனிலும், குடும்பத்தின் எதிர்காலத்திலும் எப்பொழுதும் அக்கறை கொண்டவளாகிய அவள் அவ்வித விளைவுகள் ஏற்பட்டால், அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் தன் புலனைச் செலுத்தினாள். பத்மா ஸ்ரீதரை இவ்வாறு கைவிட்டாளே என்பதால் சிவநேசருக்கு ஏற்பட்ட அதே வேதனை அவளுக்கும் ஏற்படத்தான் செய்தது. ஆனால் அவ்வேதனையால் சிவநேசரின் உள்ளத்தில் பிறந்ததோ, உலகத்தையே சர்வ நாசமாக்கும் சூறாவளி. ஆனால் பாக்கியத்தின் மனதில் ஏற்பட்ட எதிரொலியே வேறு. உள்ளம் சாம்பி, இரத்தக் கண்ணீர் வடித்தாள் அவள்.

விநாடிக்கு விநாடி பலாத்கார எண்ணங்கள் வலுப் பெறப் பெற்ற சிவநேசர் படிப்படியாகத் தீர்க்கமான முடிவுகளைச் செய்து கொண்டிருந்தார். பரசுராமர், துர்வாசர், விஸ்வாமித்திரர் என்ற மகாமுனிவர்களின் கோபம் போல அவர் சினமும் அத்துமீறிவிடவே அவர் மனமும் ரெளத்திரகாரமான கொந்தளிப்பு நிலையை அடைந்தது. சர்வாங்கார காலத்து மகாருத்திரன்போல் கொதிப்படைந்த கண்ணோடு பற்களை நறநறவென்று அவர் கடித்துக் கொண்டிருந்ததைப் பாக்கியம் பார்த்தும் பாராதவள் போல் கவனித்துக் கொண்டிருந்தாள்.

படிப்பாளியாகிய சிவநேசருக்கு எந்த நிலையிலும் தாம் படித்தறிந்த விஷயங்கள் ஞாபகம் வராமல் இருப்பதில்லை. பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோமா என்று நினைத்த அவருக்கு, அர்த்தசாஸ்திரத்தில் கெளடில்யன் கூறியுள்ள எழுவகைத் திருமணங்களும் ஞாபகம் வந்தன. இவற்றில் ஒன்று இராட்சத திருமணம். பலாத்காரமாக ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்யும் இதனைக் கூடக் கெளடில்யன் ஒப்புக் கொள்ளுகிறான். இத்திருமணத்தின் முடிவாகச் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் திருப்தி ஏற்படுமாயின் அது அங்கீகரிக்கத்தக்கதே என்பது அவரது தீர்ப்பு. உண்மையில் பல இடங்களில் கூட பலாத்காரத் திருமணங்கள் கூட நல்ல இல்லற வாழ்வுக்கு அடிப்படியாவதை நாம் காணத்தானே செய்கிறோம்.

கோபத்தில் துடிதுடித்த சிவநேசருக்குக் கொலைக்கார எண்ணங்கள் கூடத் தோன்றின. “கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் முழுவதையும் பிய்த்தெறிந்துவிடுவோமா? பத்மாவையும் பரமானந்தரையும் சுட்டுச் சாம்பாலாக்கி உள்ளங்கையில் வைத்து ஊதிவிடுவோமா?” என்று கூட யோசித்தார் அவர். இந்த யோசனையில் திடீரென ” நன்னித்தம்பி இங்கே வா.” என்று சப்தமிட்டார் சிவநேசர்.

நன்னித்தம்பி ஓடோடி வந்தார். சிவநேசர் அவரிடம் “கொச்சிக்கடை கஞ்சா நல்லையாவை டெலிபோனில் எடு. ‘மூன்றைஸ்’ கிளப்பில் ஆளைப் பிடிக்கலாம்.” என்றார். நன்னித்தம்பியும் “சரி” என்று டெலிபோனுக்கு ஓடினார்.

‘மூன்றைஸ்’ கிளபில் டெலிபோன் அலறியது.

“யாரது? நானிங்கே நல்லையா பேசுகிறேன்.”

“இங்கே பேசுவது சிவநேசர். உடனே உன்னை நான் காண வேண்டும்.”

“சிவநேசரா? எங்கே இருந்து பேசுகிறீர்கள் ஐயா? எங்கே வர வேண்டும்.”

“ஹோர்ட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’வில் இருந்து பேசுகிறேன். உடனே புறப்பட்டு வா.”

“சரி ஐயா.”

இந்தச் சம்பாஷணை நடந்து முக்கால் மணி நேரத்தில் மணிக்கு அறுபது மைல் வேகத்தில் வந்த பெரிய கார் ஒன்று ‘கிஷ்கிந்தா’ வளவுக்குள் வந்து நிற்க, அதிலிருந்து வாட்டசாட்டாமான ஓர் ஆள் பங்களாவுக்குள் நுழைந்தார் அந்த வாட்டசாட்டமான ஆள்தான் கஞ்சா நல்லையா.

கஞ்சா நல்லையா எப்பொழுதும் விலை உயர்ந்த பட்டுச் சட்டையும் வேட்டியுமே அணிந்திருப்பார். அவர் கைவிரல்களில், இடது கையில் இரண்டு மோதிரங்களும் வலது கையில் ஒரு மோதிரமுமாக மூன்று மோதிரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. தங்கப் பட்டியிட்ட கைக்கடிகாரம் மணிக்கட்டை அலங்கரிக்க, கழுத்தில் பெரிய சங்கிலி ஒன்றும் வடம் போல் ஊசலாடிக் கொண்டிருந்தது.

சிவநேசர் நிலாமுற்றத்தில் அவரை வரவேற்றார். “வா நல்லையா. உட்கார்.” என்று அங்கிருந்த நாற்காலி ஒன்றை அவர் சுட்டிக் காட்டினார். நல்லையா சிவநேசருக்கும், பாக்கியத்துக்கும் தனது பார்வையாலும் புன்னகையாலும் அஞ்சலி செலுத்திக்கொண்டே நாற்காலியில் உட்கார்ந்தார். வேலைக்கார சுப்பையா பாக்கியத்தின் உத்தரவுப்படி விஸ்கி ட்ரேயுடன் கூடிய தள்ளு வண்டியை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினான். நல்லையா விஸ்கியை வார்த்துக்கொள்ளாமல், சோடாவை மட்டும் ஒரு கிளாசில் ஊற்றி அதில் ஒரு மிடறை அருந்தினார். அதைக் கண்ட பாக்கியம், “என்ன நல்லையா, வெறும் சோடாவைக் குடிக்கிறாய்?” என்று கேட்டாள். “இல்லை. நான் சமீப காலமாகக் குடிப்பதைக் குறைத்துக் கொண்டு வருகிறேன்.” என்று பதிலளித்தார் நல்லையா.

கஞ்சா நல்லையா என்ற பெயரைக் கேட்டதும் கொழும்பு முழுவதுமே அலறுமாயினும், தடை செய்யப்பட்ட கஞ்சா வர்த்தகத்தைச் செய்து இலட்சாதிபதியாக விளங்கினார் என்பதைத் தவிர அவர் மீது வேறு எவ்வித குற்றத்தையும் இலகுவில் சுமத்திவிட முடியாது. நல்லையா உண்மையாக எல்லா வகையிலும் நல்லையாவாக இருக்க விரும்பிய ஒருவர் தான். ஆனால் நியாயமான முறையில் தன் திறனுக்கேற்ற ஒரு தொழிலைச் செய்ய அவர் தமது இளமைக் காலத்தில் முயன்ற போது அவருக்கேற்பட்டது பெரிய ஏமாற்றமே. வாழ்க்கையின் ஆரம்பத்தில் இது விஷயத்தில் தோல்விக்கு மேற் தோல்வி பெற்ற அவர், வேறு வழியில்லாமல் சந்தர்ப்ப சூழல்களின் காரணமாகக் கஞ்சாத் தொழிலில் ஒரு சில்லறைப் பேர்வழியாகச் சிக்கினார். ஆனால் இன்றோ அத் தொழிலில் இலங்கையின் மாபெரும் தலைவர்களில் ஒருவராக மலர்ந்துவிட்டார். இன்று அவரமைத்த கஞ்சா வர்த்தகம், கிளப்புகள் என்ற வலைப்பின்னலிலே பல நூற்றுக்கணக்கானவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததோடு, தம் குடும்பத்தினரின் தேவைகளுக்கும் ஏராளமானவர்கள் அவரை நம்பியிருந்தார்கள். இந்நிலையில் அவருக்கு இச்சட்ட விரோதத் தொழிலில் இருந்து மீட்சியே இல்லாது போய்விட்டதென்றாலும், தமக்கு இத்தொழிலில் கிடைத்து வந்த பெரும் பணத்தில் ஒரு பகுதியை அவர் ஏழைகளுக்கு உனவளிப்பதற்கு எப்பொழுதும் செலவிட்டு வந்தார். பரிமாறிய ஏழைகளின் முகத்தில் பூக்கும் நன்றிப் புன்னகையைப் பார்ப்பதில் அவருக்கு அளவில்லாத திருப்தி. இது தவிர, ஆண்டு தோறும் சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழாவொன்றும் பெரும் பணச் செலவிலே அவர் செய்து வந்தார்.

நல்லையாவின் இப்போக்கெல்லாம் நன்கு தெரிந்ததனாலே பாக்கியத்துக்கு அவர் மீது கஞ்சாக்காரராச்சே என்ற வெறுப்பு இல்லை. அத்துடன் முன்னொரு சமயம் நல்லையா வழக்கொன்றில் மாட்டிக் கொண்ட போது சிவநேசர் தன் முழுச் செல்வாக்கையும் உபயோகித்து அவரை அதிலிருந்து காப்பாற்றியிருந்தார். அப்போது நல்லையா சொன்ன ஒரு வசனம் இன்னும் அவள் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. ” நான் கடவுளை மறந்தாலும் மறப்பேன். உங்களை மறக்க மாட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அடிமை. என்னாலான எந்த உதவியையும் எப்பொழுதும் செய்வேன்” இவ்வாறு சொல்லி நல்லையா சிவநேசரைத் தன் இருகரங்களாலும் வணங்கி ஐம்பதினாயிரம் ரூபா கொண்ட ஒரு நோட்டுக் கட்டை அவரிடம் கொடுத்ததையும் சிவநேசர் அதை வாங்க மறுத்ததையும் ஞாபகப்படுத்திக் கொண்டாள் அவள். “என்ன நல்லையா, சிவநேசர் பணத்துக்காக எதையும் செய்வார் என்று நீ நினைத்தாயா என்ன? பணத்தை எடுத்துக் கொள்” என்று சிவநேசர் சொன்னதும், நல்லையா உணர்ச்சி மேலிட்டுக் கண் கலங்கியதையும், “அப்படியானால் நீங்கள் செய்த நன்றிக்கு நான் என்ன செய்வது? நான் ஏதாவது செய்ய இடமளிக்க வேண்டும்” என்று அவர் கூறியதும் அவளுக்கு நினைவு வந்தன. அதற்குச் சிவநேசர் சிரித்து, “எனக்கு ஒரு கட்டுக் கஞ்சா கொண்டு வா” என்று விளையாட்டாகக் கூற, அன்று பிற்பகலே ஒரு கட்டுக்குப் பதில் பல கஞ்சா கட்டுகளை நல்லையா கொண்டு வந்ததும் அவள் மனத்திரையில் பளிச்சிட்டன.

சிவநேசரும் நல்லையாவும் உரையாடத் தொடங்கியதும் பாக்கியம் அவர்கள் பேசுவதற்குத் தான் தடையாக இருக்கக் கூடாது என்று மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்று விட்டாள். அங்கு தனக்குத் தெரிந்த அளவுக்கு ஸ்ரீதர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றித் தன் மூளையைக் குழப்பலானாள்.

சிவநேசர் நல்லையாவிடம் ஸ்ரீதரின் காதல் விவகாரம் பற்றியும் அது இப்போது அடைந்துவிட்ட இக்கட்டான நிலை பற்றியும் குறிப்பிட்டார். தான் முதலில் இத்திருமணத்தை எதிர்த்தது, ஸ்ரீதர் தன் கண் பார்வையை இழந்தது முதலிய சகல விவரங்களையும் ஆதியோடந்தமாய் கூறிய அவர், முடிவில் “நல்லையா என்ன ஆனாலும் பரவாயில்லை. பத்மாவைக் கடத்திச் சென்றேனும் ஸ்ரீதருக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். வருவது வரட்டும். எல்லாவற்றையும் என்னால் சமாளிக்க முடியும்” என்றார்.

நல்லையா சிறிது நேரம் மெளனமாயிருந்து விட்டு, “நீங்கள் சொல்லும் பெண்ணை எனக்கு நன்றாகத் தெரியும். ஸ்ரீதர் தம்பியின் காரில் அப்பெண் போய் வருவதை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ பொழுதுபோக்குக்காக அவர் அப்பெண்ணைப் பிடித்துச் சுற்றித் திரிகிறாரென்று நான் எண்ணினேனேயல்லாமல், இவ்வளவு தூரம் அப்பெண் மீது அவருக்குக் காதல் ஏற்பட்டிருந்தது என்று எனக்குத் தெரியாது. அப்பெண்ணுடன் போகும் பொழுது கூட என்னைக் கண்டால், தம்பி தன் கையால் அடையாளம் காட்டிச் சிரித்து விட்டுப் போவது வழக்கம்” என்றார்.

“நல்லையா, ஸ்ரீதர் என் ஒரே மகன். அவன் பிள்ளையும் குட்டியுமாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும். அதற்கேற்ற திட்டத்தை உடனே நீ தீட்டு. கோடு, போலீஸ் ஒன்றைப் பற்றியும் யோசியாதே. எல்லாவற்றுக்கும் நானிருக்கிறேன். என்ன சொல்கிறாய்?” என்றார் சிவநேசர்.

“சொல்வதற்கென்ன இருக்கிறது? உங்கள் கட்டளை இது. செய்து முடிப்பது என் வேலை. நீங்கள் எனக்குச் செய்த உதவிகளுக்கு இப்போதாவது பதில் உபகாரம் செய்ய எனக்குச் சந்தர்ப்பமளிக்கிறீர்களே, அது எனக்குப் பெரிய வாய்ப்பல்லவா?” என்றார் நல்லையா.

அதைக் கேட்ட சிவநேசர் தம் ஆசனத்தை விட்டெழுந்து நல்லையாவின் சமீபம் சென்றார். அவர் தோள்களைத் தன் கரங்களால் தொட்டு “நல்லையா, பணச் செலவை பற்றி யோசிக்காதே. எவ்வளவு வேண்டுமானாலும் நான் செலவிடத் தயார். உடனே தொடங்கு வேலையை. இரண்டு மூன்று தினங்களில் எல்லாம் முடிய வேண்டும்.” என்றார்.

நல்லையா, “சரி” என்று தலையை அசைத்துச் சிறிது நேரம் மெளனமாயிருந்துவிட்டு, “ஆனால் ஒரு விஷயம், இப்பெண் ஒழுங்கான ஒரு பெண்ணல்ல. சமீப காலமாக ஒரு மீசைக்கார வாலிபனுடன் மோட்டார் சைக்கிளில் அவள் சுற்றித் திரிவதை நான் கண்டிருக்கிறேன். இருவரையும் ஆள் வைத்து ஒரே அமத்தாக அமத்தி அவனை விரட்டிவிட்டு அப்பெண்ணை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்து விடுவேன். ஆனால் ஒழுக்கம் என்ற விஷயத்தில் ஒரு சல்லி பெறாத ஒரு பெண்ணுக்காக இப்படிப்பட்ட பெரிய காரியங்களை நாம் செய்யத்தான் வேண்டுமா?” என்று கேட்டார்.

நல்லையாவின் இப்பேச்சைக் கேட்டு சிவநேசர் திகைப்படைந்து விட்டார். “நீ சொல்வது உண்மைதானா? பத்மா கண்டவர்களுடனும் ஊர் சுற்றும் பெண்ணா? அப்படியானால் என் ஸ்ரீதர் எவ்வளவு ஏமாற்றப்பட்டு விட்டான்? அவனோ பத்மா மகா உத்தமி என்று நினைக்கிறான். அவள் பெரிய ஏமாற்றுக்காரியாகவல்லவா இருக்கிறாள்” என்றார்.

நல்லையா “ஐயா எதற்கும் கொஞ்சம் பொறுங்கள். நாளைக் காலை ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு வருகிறேன். அப்போது நீங்கள் என்ன உத்தரவு போடுகிறீர்களோ அதை நான் இரவுக்கு முன் முடித்துவிடுகிறேன். உங்களுக்காக மட்டுமல்ல. தம்பி ஸ்ரீதருக்காகவும் நான் இதைச் செய்ய வேண்டும். உங்களோடு பழகியது போல் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையென்றாலும் அவரது சிரித்த முகத்துக்காக எதையும் செய்யலாம். உண்மையில் அவர் கண் பார்வை இழந்து விட்டாரென்ற செய்தியை என்னால் தாங்க முடியவில்லை ஐயா.” என்றார்.

போகும் வழியில் பாக்கியம் நல்லையாவை வழிமறித்து “ஐயாவின் திட்டமென்ன?” என்று கேட்டாள். நல்லையா விவரத்தைக் கூறியதும், “அவர் கோப வெறியில் சொல்வதை அப்படியே செல்வதற்கு நீ கிளம்பி விடாதே. நல்லையா” என்றாள் பாக்கியம்.

“நான் அப்படிச் செய்வேனா அம்மா? உங்கள் குடும்பம் எங்கள் குடும்பம் போல் சாதாரணமான குடும்பமா என்ன? நாங்கள் எந்த இழிவையும் இகழ்ச்சியையும் தாங்கிக் கொள்வோம். உங்கள் குடும்பமோ பரம்பரைப் புகழும் செல்வாக்கும் வாய்ந்த குடும்பம். ஆகவே கீழ்த்தரமான செய்கைகளினாலே அம்மதிப்புக்குப் பங்கம் விளைவிக்க நான் ஒரு போதும் ஒருப்பட மாட்டேன். ஆனால் ஐயா சொன்னதற்கெல்லாம் “ஆமாம்” சொல்லிவிட்டுத்தான் போகிறேன். ஏனெனில் அவரை எதிர்த்துப் பேச யாராலும் முடியாது. ஆனால் நாளைக் காலை அவராகவே மனம் மாறிவிடுவார் என்று நினைக்கிறேன்,” என்று சொல்லிப் பத்மா ஒரு புதிய காதலனுடன் மோட்டார் சைக்கிள் சவாரி போவதைப் பற்றியும் பாக்கியத்துக்குக் கூறினார் நல்லையா. “இப்படிப்பட்ட பெண் ஸ்ரீதர் தம்பியின் மனைவியாவதை நான் விரும்பவே இல்லை.” என்றார் அவர்.

“நிச்சயம் இப்படிப்பட்ட பெண் எங்கள் வீட்டுக்கு வேண்டாம்.” என்றாள் பாக்கியமும்.


கொழும்பில் இவை நடந்து கொண்டிருக்க “அமராவதி”யில் ஸ்ரீதர் நித்திரையில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன் இம்முறை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிறகு தாய் பாக்கியத்தைப் பிரித்து தனியாக இருந்த இரண்டாவது இரவு இது. முதல் இரவு நேற்றைய இரவாகும். நேற்று மத்தியானம் கழித்தே சிவ நேசரும் பாக்கியமும் கொழும்புக்குப் புறப்பட்டனர். புறப்படு முன்னர் பாக்கியம் ஸ்ரீதரைக் கட்டி முத்தமிட்டு “நாளை பகல் நாங்கள் பத்மா வீட்டுக்குப் போகிறோம். நாளை மறு தினம் அல்லது அடுத்து நாள் திரும்பி விடுவோம். அது வரைக்கும் தனியாக இருக்க வேண்டுமென்று கவலைப்படாதே. தெய்வானை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள். உனக்கு விருப்பமான முறையிற் சமைத்துத் தருவாள். வேண்டியதை அவளிடமோ மற்ற வேலைக்காரர்களிடமோ கேட்டுப் பெற்றுக் கொள். ரேடியோகிராமுடன் போதிய அளவு இசைத்தட்டுகள் வைத்திருக்கிறேன். இஷ்டப்படி போட்டுக் கேட்டுக் கொள். பேச கற்துனைக்குச் சின்னைய பாரதியையும் பிள்ளைகளையும் வரச் சொல்லியிருக்கிறேன். அவர்களுடன் விளையாடிக் கொண்டிரு. ‘ரேடியோ’வும் இருக்கிறது. இவை தவிர உன்னோடு எந்நேரமும் விளையாட மோகனாதான் இருக்கிறாளே” என்று கூறினாள்.

ஸ்ரீதர் பதிலுக்கு “அதெல்லாமிருக்கட்டுமம்மா, நாளை இரவு தவறாமல் எனக்கு ‘கிஷ்கிந்தா’விலிருந்து டெலிபோன் பன்ண வேண்டும். மறந்து விடக் கூடாது” என்றான்.

அந்த ஏற்பாட்டின்படி இரவு ஆறு மணியிலிருந்தே டெலிபோன் செய்தியை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தான் அவன். சின்னைய பாரதியின் குழந்தைகள் அங்குமிங்கும் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தார்கள். இடையிடையே ஸ்ரீதரிடம் கும்பலாக வந்து ஏதாவது கேலிப் பேச்சுப் பேசிச் சென்றார்கள். ஸ்ரீதர் அவர்களில் மிகவும் சிறியவளான இலட்சுமியை மடி மீது தூக்கி வைத்து அவளுக்குப் பாட்டுப் பாடிக் காட்டினான். தனக்கும் அப்படி ஒரு குறுகுறுத்த குழந்தை இருந்தால் எவ்வளவு நல்லது என்று எண்ணிய அவன் அதன் உச்சியை ஆசையோடு முத்தமிட்டான்.

குழந்தை இலட்சுமி, “மாமா, எனக்கும் உங்கள் வீட்டுப் பஞ்ச வர்ணக் கிளி போல் ஒரு கிளி வேண்டும். தருவாயா?” என்று கேட்டாள்.

“அம்மா வரட்டும். கொழும்பு மிருகக்காட்சிச் சாலையிலிருந்து நல்ல பஞ்சவர்ணக் கிளி ஒன்றை உனக்கு வரவழைத்துத் தருகிறேன்.’ என்று குழந்தைக்கு வாக்குறுதி அளித்தான் அவன். இதை அவன் விலையாட்டுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே பிஞ்சு மனம் மகிழ, கிளி ஒன்றை வாங்கிக் கொடுக்கத் தீர்மானித்தான் அவன்.

அதன்பின் அவர்களை விறாந்தையில் சென்று விளையாடும்படி கூறிவிட்டுக் கட்டிலில் சாய்ந்தான் ஸ்ரீதர். சின்னைய பாரதி ஏதோ பழைய வடமொழி நூலைச் சப்தமிட்டு வாசித்துக் கொண்டிருந்தார். காளிதாசன் அல்லது பசுபூதியாக இருக்க வேண்டும். அவர்களில்தான் அவருக்கு ஈடுபாடு. அவரது குரலும் குழந்தைகளின் விளையாட்டோசையும் சேர்ந்து இரவின் அமைதியைக் குலைத்தன.

இரவு எட்டு மணியாகியும் கொழும்பிலிருந்து டெலிபொன் வராமற் போகவே தானே ‘கிஷ்கிந்தா’வுக்கு ‘ட்ரங்கோல்’ எடுத்துப் பேசினான் ஸ்ரீதர். வேலைக்காரச் சுப்பையா பதிலளித்தான்.

“சுப்பையா, அம்மாவைக் கூப்பிடு” என்றான் ஸ்ரீதர்.

“அம்மா மாடியில் இல்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். கீழே சென்று அழைத்து வருகிறேன்.” என்று ஓடினான் சுப்பையா.

பாக்கியம் ஸ்ரீதருடன் அப்போது பேச விரும்பவில்லை. அவனிடம் பத்மா விவகாரத்தை எப்படிச் சொல்வது என்று அவளால் முடிவு செய்ய முடியாதிருந்ததே அதற்குக் காரணம். உண்மையைக் கேட்டால் ஸ்ரீதரின் இதயம் வெடித்து விடும் என்று பயந்தாள் அவள். ஆகவே சுப்பையாவிடம் “ஐயாவும் அம்மாவும் இப்போதுதான் காரில் ஏறி எங்கோ போய்விட்டார்கள் என்று சொல்லு” என்று உத்தரவிட்டாள். சுப்பையாவும் அவ்வாறே செய்தான். அதைக் கேட்ட ஸ்ரீதர், “அம்மா, வந்ததும் உடனே எனக்கு டெலிபோன் பண்ணும்படி சொல்லு.” என்று சுப்பையாவுக்கு ஆணையிட்டான்.

பாக்கியம் அதன்பின் கீழ் வீட்டு விறாந்தையில் நின்ற நன்னித்தம்பியிடம் டெலிபோனில் நடந்த விஷயத்தைச் சொன்னாள். “இன்று இரவு முழுக்க டெலிபோன் பண்ணாமல் இருக்க மாட்டான். அடிக்கடி டெலிபோன் பண்ணுவான். இதை எப்படிச் சமாளிப்பது? எனக்கொன்றும் தெரியவில்லையே” என்று கவலையோடு கூறினாள்.

நன்னித்தம்பியர் சிறிது நேரம் யோசித்துவிட்டு “இப்படிப்பட்ட நேரங்களில் நாம் பொய்தான் சொல்ல வேண்டும். தம்பி மீண்டும் டெலிபோன் பண்ணினால் “இன்று நாங்கள் பத்மாவைப் பார்க்கப் போனோம். ஆனால் அவள் தந்தைக்கு உடம்பு சுகமில்லாததால் அவர்கள் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்கள். நாளை ஆஸ்பத்திரிக்குப் போகலாம் என்றிருக்கிறோம்” என்று கூறிவிடுவோம். அதற்கிடையில் இப்பிரச்சினையைத் தீர்க்க வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று ஆலோசிப்போம். இதை விட நாம் வேறு என்ன செய்ய முடியும்,” என்றார்.

பாக்கியத்துக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது. ஆகவே உடனேயோ ‘ட்ரங்கோல்’ எடுத்து மகனுடன் பேசினாள் அவள். “அம்மா, நீ இல்லாமல் இங்கே இருப்பது எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது, தெரியுமா? நேற்று எப்படியோ கழிந்துவிட்டது. இன்று பாரதியயின் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அவருடைய கடைக்குட்டி இலட்சுமி குறு குறுத்த பெண். ஆனால் என்னதான் அவர்களோடு விளையாடினாலும் நீ இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அது சரி, அம்மா, பத்மாவை நீ பார்த்தாயா? அவளை உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்றாள் ஸ்ரீதர். அதற்குப் பாக்கியம் நிலைமையைச் சமாளிக்கத் தான் நன்னித்தம்பியோடு சேர்ந்து தயாரித்திருந்த பொய்யை மெல்ல அவிழ்த்துவிட்டான். ஸ்ரீதர் அதை நம்பி விட்டதால் தற்காலிகமாக – அதாவது அடுத்த நாள் வரையாவது பிரச்சினை ஒருவாறு தீர்த்து வைக்கப்பட்டது.

ஸ்ரீதர், “அம்மா, நாளை ஆஸ்பத்திரிக்குப் போய் வந்ததும் உடனே எனக்கு நீயே போன் செய்துவிடு. நான் பேசும்வரை காத்திருக்க வேண்டாம்.” என்றான்.

“ஆம் ஸ்ரீதர்., அப்படியே செய்தேன்.” என்றாள் பாக்கியம்.

அடுத்த நாட் காலை கஞ்சா நல்லையா எட்டு மணிக்கே வந்துவிட்டார். சிவநேசர் மேல் மாடியில் அவரை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார். பாக்கியமோ சிவநேசர் ஆத்திரத்தில் ஏதாவது அவசர முடிவெடுத்து ஆத்திரத்தில் ஏதாவது செய்துவிடக் கூடாதென்பதற்காகத் தானும் அவர்கள் பேச்சை ஒரு புறம் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.

நல்லையா எதிர்பார்த்தது போல் சிவநேசர், பத்மா “ஒழுக்கமற்ற” பெண் என்பதற்காக தம் முடிவை எவ்விதத்திலும் மாற்றியதாகத் தெரியவிலை. “இக்காலத்துப் பெண் கல்யாணம் பண்ணுவதற்கு முன்னர் பலருடனும் பழகும் படியான சூழ்நிலைகள் ஏற்டத் தான் செய்கின்றன. ஆனால் கல்யாணத்துக்குப் பின்னர் எல்லாம் சரியாய்ப் போய்விடும்,” என்பது பல நூல் கற்ற அவரது எண்ணம். உண்மையில் அரச குடும்பங்களில் கூட இவ்வித நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. “பிரித்தானிய இளவரசியாகிய மார்கரெட் தனது திருமணத்துக்கு முன்னர் பலருடன் பழகியதாகக் கூறப்பட்ட போதிலும், பின் ஒருவரை மணந்து வாழவில்லையா? ஆகவே பத்மாவை ஒழுக்கமற்றவள் என்று கூறுவது இவர்கள் மடமையைத்தான் காட்டுகிறது. இன்னும் ஸ்ரீதரால் பத்மா இல்லாமல் வாழ முடியாது. அவனுக்கு அவன் விரும்பும் பத்மாவை அளிக்க வேண்டும். அதுதான் எனது வேலை.” என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தார் அவர்.

ஆகவே நல்லையாவை நோக்கி “நல்லையா, விஷயத்தை இன்றே முடித்துவிட வேண்டும்.” என்றார் அவர்.

“எல்லாம் ரெடி. உடனே தொடங்க வேண்டியதுதான்.” என்றார் நல்லையா.

“எனக்குத் தெரியும் — நீ இதைச் செய்து முடித்துத்தான் வேறு காரியம் பார்ப்பாய் என்று. அப்போது நீ உடனே புறப்பட்டு போ. என்ன அவசரமானாலும் உடனே எனக்கறிவி. டெலிபோனில் பேசுவதை விட நேரிலே வருவதுதான் நல்லது. உன்னாலே வர முடியாவிட்டால் ஆளை அனுப்பு. எவ்வளவு சீக்கிரத்தில் அந்தப் பத்மாவைக் கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வா. ஆனால் அவளை எந்த விதத்திலும் காயப்படுத்திவிடக் கூடாது. எப்படியானாலும் எனக்கு மருமகளாகப் போகிறவளல்லவா? ஆனால் எமது திட்டத்தைத் தடுக்கும் மற்றவர்களை நீ என்ன செய்தாலும் பரவாயில்லை” என்றார் சிவ நேசர்.

பாக்கியம் இடைமறித்து “இதென்ன பயங்கரத் திட்டம். நல்லையா நீ இதைச் செய்யக் கூடாது.” என்றாள்.

சிவ நேசர் வெகுண்டார். “பாக்கியம், நீ வாயை மூடு. உனக்கு இந்த விஷயங்கள் தெரியா. நீ கீழே போ. இவ்விஷயங்களில் பெண்களால் ஆண்களுக்கு ஆலோசனை சொல்ல முடியாது” என்றார்.

நீட்சேயின் தத்துவக் கருத்துகளை தமது வாழக்கைத் தத்துவங்களாக ஏற்றிருந்த சிவநேசர் பெண்கள் சம்பந்தமாகவும் அந்த ஜெர்மானிய தத்துவ தரிசகரின் கருத்துகளை ஓரளவு ஏற்றுக் கொள்ளவே செய்தார். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமேயல்லாது ஆலோசனை கூறும் அளவுக்கு வரக் கூடாது என்பது அவரது உள்ளத்தோடு ஒட்டியிருந்த ஒரு கருத்தாகும்.

ஆனால் பாக்கியமோ இன்று விட்டுக் கொடுப்பதில்லை என்று தீர்மானித்துவிட்டாள். இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு பெண் தன் மனதைத் திடப்படுத்தி வாதாடாவிட்டால் விஷயம் தலைக்கு மேல் போய்விடும் என்று அவள் அஞ்சினாள். மகாபாரதத்தில் திரெளபதி பல இடங்களில் இப்படித் தன் கணவர்களுடன் போரிட்டதை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டாள்.

“அந்தப் பெண் பத்மா இன்னொருவனுடன் கூடித் திரிகிறாளாம். நல்லையாவே சொல்லுகிறார். அப்படிப்பட்ட உதவாக்கரை பெண்ணை மருமகளாகப் பெறவா இப்படிப்பட்ட பெரிய திட்டம் போடுகிறீர்கள்? அப்பெண் என் மருமகளாக என் வீட்டில் அடி எடுத்து வைக்க நான் ஒரு போதும் விட மாட்டேன்.”

“பாக்கியம், நீ கூட என்னை எதிர்த்துப் பேசத் துணிந்து விட்டாயா? வாயை மூடிக் கொண்டு பேசாமல் இரு. ஸ்ரீதருக்கு அந்தப் பெண்ணும் இல்லாவிட்டால் வேறு யார் கிடைப்பார்கள்? அவனைத்தான் எல்லோரும் குருடன் குருடன் என்று ஒதுக்குகிறார்களே.”

“அதற்காக ஒழுக்கமற்ற ஒரு பெண்ணை அவனுக்குக் கட்டி வைப்பதா? அது மட்டுமல்ல, இவ்விதம் ஒரு பெண்னைப் பலாத்காரமாகக் கடத்தினால் போலீசார் சும்மா இருப்பார்களா?”

“அதைப் பற்றி நீ கவலைப்படாதே. பணத்தைச் செலவிட்டு அதைச் சமாளிப்பேன். அந்த வாத்தியாரை என்னால் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறாயா என்ன? அவனைக் கொன்று அவன் தலையைக் களுத்துறையிலுள்ள என் ரப்பர்த் தோட்டத்திலும், உடலைக் கிளிநொச்சியிலுள்ள என் வயலிலும் புதைத்துவிட்டால் போகிறது.”

“அந்த வாத்தியார் மீது உங்களுக்கென்ன கோபம்? அவர் ஸ்ரீதருக்காகத் தானே பேசினார்? மகள்தான் மறுத்துவிட்டாள்.”

“மறுத்த மகளை இப்பொழுது சம்மதிக்க வைக்கப் போகிறோம். வாத்தியார் பேசாமலிருந்தாற் சரி. யாருக்கும் கஷ்டம் வராது.”

“ஆனால் இவ்வளவு பெரிய திட்டம் தீட்டும் நீங்கள் ஒன்றை யோசித்தீர்களா?”

“ஒன்றல்ல, எல்லாவற்றையுமே யோசித்துவிட்டேன். அதன் பயனாகத்தான் பத்மாவை ஸ்ரீதருக்கு எப்படியும் கட்டி வைப்பதென்று தீர்மானித்திருக்கிறேன் நான்?”

“பாவம் ஸ்ரீதர்! கண்களை இழந்து நிற்கிறான். உங்கள் திட்டத்தில் சிறிது தவறேற்பட்டாலும் அவன் ‘கோடு’ ஏற வேண்டி வரும் என்பதை யோசித்தீர்களா? பத்திரிகைகள் எல்லாம் ‘அமராவதி’ வளவைப் பற்றி அலறும். அவற்றை என்னால் ஒரு போதும் சகிக்க முடியாது. ஸ்ரீதருக்கு நஞ்சு கொடுத்து நானும் நஞ்சு குடித்துச் செத்து விடுவேன். அதன் பின் ‘அமராவதி’ மாளிகையில் நீங்கள் தனியே உட்கார்ந்து கொண்டிருங்கள். உங்களுக்கென்ன குறை? பணம்தான் நிறைய இருக்கிறதே. பணமிருந்தால் வேறொன்றும் வேண்டியதில்லையல்லவா?”

“அப்போது நீ என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?”

“ஒன்றும் செய்ய வேண்டாம். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. நடப்பது நடக்கட்டும். சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் ஆகக் கூடாது.”

இவ்வாறு கூறிய பாக்கியம் முன்னாளிரவு டெலிபோனில் தான் ஸ்ரீதரிடம் கூறிய பொய்த் தகவல்களைப் பற்றிக் குறிப்பிட்டாள். “இந்தப் பொய்யை வைத்துத்தான் ஸ்ரீதரைச் சில காலத்துக்குச் சமாளிக்க வேண்டும். பத்மாவின் தந்தையார் சுகமில்லாமலிருக்கும்பொழுது கல்யாணத்தை எப்படி நடத்துவது? பொறுத்திருப்போம் – என்ற முறையில் பேசி வர வேண்டியதுதான்” என்றாள்.

“ஆனால் இந்தக் கதையை எவ்வளவு காலத்துக்குக் கொண்டு போக முடியும்? எப்பொழுதோ ஒரு நாள் உண்மையைக் கூற வேண்டித்தானே வரும்?”

“கொண்டு போகக் கூடிய அளவுக்குக் கொண்டு போவோம். அதற்குப் பின்னர் கடவுள் விட்ட வழி”

நல்லையாவுக்குச் சிவநேசர் கூறிய புதிய மின்வெட்டு வேக பலாத்கார முறை சிறிதும் பிடிக்கவில்லை. எனினும், சிவநேசர் மீது கொண்ட தனிப்பட்ட மதிப்பின் காரணமாக எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்துவிட்டு முடிவாக “ஐயா, அம்மா கூறுவதையும் நாம் அலட்சியம் செய்யக் கூடாது. இன்னும் இதில் நாம் யோசிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயமும் இருக்கிறது. நீங்கள் நேற்றுத்தான் பத்மாவைப் பெண் கேட்டுப் போயிருக்கிறீர்கள். ஆகவே இன்றே பத்மா காணாமல் போய் விட்டால் உடனே உங்கள் மீதுதான் சந்தேகமேற்படும். ஆனால் ஸ்ரீதர் தம்பியைச் சிறிது காலம் நாம் சமாளித்துக் கொண்டால் ஒரு மாதமோ இரண்டு மாதமோ கழித்து எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாவிட்டால் பத்மாவை நாம் கிளப்பி வந்து விடலாம். அப்படிச் செய்தால் ஸ்ரீதர் தம்பியைக் கோடேறாது தடுப்பதும் இலேசாயிருக்கும்.” என்றார்.

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்க ‘கிஷ்கிந்தா’ வளவுக்குள் ஒரு ‘ஸ்டேஷன் வாகன்’ வந்து நின்றது. மேல் மாடியிலிருந்தபடியே அதனைப் பார்த்த கஞ்சா நல்லையா அதில் இருந்த இரு வாலிபர்களையும் மேலே வரும்படி சைகை காட்டினார். “முதலாளி மேலே வரச் சொல்லுகிறார்” என்ற படியே அவர்கள் இருவரும் மாடிப்படியில் தடதடவென்று ஏறி வந்து விட்டார்கள்.

வந்தவர்கள் சிவநேசருக்கும், பாக்கியத்துக்கும் தம் தலையைத் தாழ்த்திவிட்டு நல்லையாவின் முகத்தைப் பார்த்தார்கள். “என்ன விஷயம்?” என்றார் நல்லையா. “தனியாய்ப் பேசுவோமா” என்றான் வாலிபர்களில் ஒருவன். “இங்கு வெளியார் யாருமில்லை. ஆகவே இங்கேயே எல்லாவற்றையும் பேசலாம்” என்றார் நல்லையா.

“அந்தப் பெண்னைக் கண்டுவிட்டோம். தேர்ஸ்டன் வீதியிலுள்ள பெரிய பள்ளிக் கூடத்தில் படிக்கிறது. பள்ளிக் கூடத்தில் இருந்து வெளியேற இரண்டு கேட்டுகள் இருக்கின்றன. இரண்டு பக்கத்திலும் காவல் வைத்துவிட்டேன். வில்சனும் செபமாலையும் நிலைமையைச் சமாளித்துக் கொள்வார்கள். இன்றே அப்பெண்னை நீங்கள் சொன்ன ராகமை வீட்டுக்குக் கொண்டு போய்விடலாம், முதலாளி. குருவி தப்புவதற்கு எந்த வழியுமே இல்லை. ஐயாவுக்கு எல்லா வேலையும் சரி என்று சொல்லி விடுங்கள். எதிர்ப்பொன்றும் ஏற்படுவதற்கு இடமே இல்லை. இருந்தாலும் கை காவலாக எல்லோர் கையிலும் கைத் துப்பாக்கிகள் வைத்திருக்கிறோம். காலையில் புறப்படு முன்னர் முதலாளி சொன்னபடி மாரியம்மனுக்குக் கர்ப்பூரம் கொளுத்தினோம்.” என்றான் அவர்களில் சிரித்த முகத்துடன் விளங்கிய ஸ்ரீபால என்ற இளைஞன்.

இதைக் கேட்ட நல்லையா சிவநேசர் முகத்தையும் பாக்கியத்தின் முகத்தையும் பரபரப்புடன் நோக்கினார். பாக்கியம் தலையை அசைத்தாள். “வேண்டாம் இந்த வேலை. நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன். விரும்பாத பெண்ணைப் பலாத்காரமாக அவனுக்குக் கட்டி வைப்பதை விட ஸ்ரீதர் கல்யானம் செய்யாமலே இருக்கட்டும்” என்றாள் அவள். அவளுடைய திடமான எதிர்ப்பைக் கண்டு சிவநேசரே கலங்கிவிட்டாரென்றால் நல்லையாவின் நிலையை சொல்லவா வேண்டும்?

“அம்மா சொல்வது சரி. இரண்டு வாரம் கழித்து விஷயத்தைச் செய்வோம். இப்பொழுது ஒத்தி போடுவது நல்லதுதான்” என்றார் அவர்.

“சரி” என்று தலை அசைத்தார் சிவநேசர்.

இதற்கிடையில் நன்னித்தம்பி அங்கு வந்தார். “தம்பி ஸ்ரீதர் அம்மாவை டெலிபோனில் அழைக்கிறார்.” என்றார் அவர். பாக்கியம் அதைக் கேட்டதும் டெலிபோனுக்கு ஓடினாள். நல்லையா தன் கையாட்களிடம் “செபமாலையையும் வில்சனையும் கிளப்புக்குப் போகச் சொல்லுங்கள். எல்லோரையும் நான் பின்னேரம் சந்திக்கிறேன்.” என்றார். வேலைக்காரச் சுப்பையா எல்லோருக்கும் கோப்பி கொண்டு வந்தான். சிவநேசரும் நல்லையாவும் கோப்பியை மெளனமாக அருந்தினார்கள். சிவநேசரைப் பொறுத்த வரையில் அவர் வாய்தான் கோப்பியை அருந்தியதே அல்லாமல் அவர் மனம் வேறெங்கோ இருந்தது. அவர் மூளையை அழுத்திக் கொண்டிருந்த திக்குத்திகாந்தரம் தெரியாத சிந்தனை என்னும் பனி மூட்டத்துள் தம்மால் ஏதாவது ஒரு நல்ல வழியைக் கண்டு பிடிக்க முடியாதா என்று அவர் உள்ளம் அலைந்து கொண்டிருந்தது.

23-ம் அத்தியாயம்: பத்மா – ஸ்ரீதர் திருமணம்!

தான் குருடாகிவிட்டது தனக்குப் பெருங் குறைதான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அதற்காகத் தன்னை நேசித்தவர்கள் தன்னை வெறுத்தொதுக்குவார்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே ஸ்ரீதருக்கு ஏற்பட்டதில்லை. “நான் நேசித்த ஒருவருக்கு இவ்வித இடர்ப்பாடு ஏற்பட்டிருக்குமேல், எவ்விதம் நடந்து கொள்ளுவேன்?” என்று அவன் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மையேயாயினும் அவ்விதம் அவன் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு அவன் அளித்திருக்கக் கூடிய பதில் பின் வருமாறே அமைந்திருக்கும், “பாவம், கண்ணை இழந்துவிட்டாள் அவன், இந்த நேரத்தில் தான் எனது அன்பு அவனுக்கு அதிகமாகத் தேவை. ஆகவே தான் அவனுக்கு முன்னிலும் அதிகமாக அதை அள்ளி வழங்குவேன்.” ஆம், நிச்சயமாக ஸ்ரீதர் இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் என்பதோடு அவ்வாறே நடந்துமிருப்பான். இப்படிப்பட்ட அவன் தன் ஒளி மங்கிய நிலையிலே, பத்மாவின் அன்பு தன் மீது முன்னிலும் பார்க்கப் பன்மடங்கு அதிகமாகச் சுரக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லையல்லவா?

இன்னும் ஸ்ரீதர் கண்களை இழந்ததற்குப் பதிலாக, பத்மா கண்களை இழந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஸ்ரீதர் பதைபதைத்திருப்பான். இரவும் பகலும் பத்மாவுக்காக உருகி இருப்பான். அவள் மீது அவனுக்கு ஏற்கனவே இருந்த மாறாக் காதல் அழியாத நிரந்தரக் காதலாக, சிரஞ்சீவிக் காதலாக வளர்ச்சியடைந்திருக்கும். அந்தக் காதலின் அரவணைப்பிலே பத்மாவின் உள்ளம் தன் துன்பத்தை மறந்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்திருக்கும்.

ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் ஏதாவதொன்றை நம்பினால் அந்த நம்பிக்கையை ஐயங்களும் அச்சங்களும் அரிப்பதற்கு அவன் விடுவதேயில்லை. கள்ளங்கபடமற்ற அவனது மனதின் இயற்கையான ஒரு போக்காக இது அமைந்துவிட்டது. அதனாலேயே பத்மாவுடன் தான் காதல் புரியத் தொடங்கிய போது கூட அதைத் தனது தந்தை சிவநேசர் ஒரு வேளை எதிர்க்கக் கூடும் என்ற அச்சம் அவனுக்கு ஏற்படவில்லை. சரியான காரியங்களை யாரும் எதற்காக எதிர்க்கப் போகிறார்கள் என்பதே அவ்னது எண்னம். அதனால்தான் அவனிடம் சுரேஷ் “அப்பா உன் திருமணத்தை ஆட்சேபிக்கக் கூடும்” என்று எடுத்துரைத்த போது கூட “உனக்கு எனது அப்பாவைப் பற்றித் தெரியாது.” என்று பதிலளித்தான் அவன். இன்னும் தாய் பாக்கியம் “நீ கண் பார்வை இழந்திருப்பதால் பத்மா உன்னை நிராகரிக்கக் கூடும்.” என்ற போதும் இதே போன்ற ஒரு பதிலை அவன் அளித்ததும் அதனால்தான். “அம்மா உனக்குப் பத்மாவைப் பற்றித் தெரியாது. அதனால் தான் இப்படிப் பேசுகிறாய்.” என்று தீர்ப்பளித்தாள் அவள்.

இன்னும் அவன் கருத்திலே “பத்மா மிகவும் நல்லவள்.” இவ்வசனத்தை அவன் தனது தாய் பாக்கியத்துக்கும் ஏன் தந்தையார் சிவநேசருக்கும் கூடக் கூறியிருக்கிறான். ஆகவே நல்லவளான பத்மா, நளாயினி போன்ற பத்மா தன்னை நிராகரிக்கக் கூடும் என்ற நினைவுக்கே அவள் நெஞ்சில் இடமில்லாது போயிற்று. அதன் காரணமாக கொழும்பிலிருந்து சீக்கிரமே நல்ல செய்தி வரும் என்றும், ஓரிரு வாரங்களிலேயே தனது திருமண நாள் குறிக்கப் பட்டுவிடும் என்றும் எண்ணினான் அவன்.

ஆனால் தாய் பாக்கியம் ‘கிஷ்கிந்தா’விலிருந்து அவனோடு டெலிபோனில் பேசும் போது பத்மாவின் தந்தையார் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறி, அதனால் விஷயங்கள் சற்றுத் தாமதமாகலாம் என்று குறிப்பிட்டிருந்தாள். இது அவனுக்குச் சிறிது ஏமாற்றத்தை உண்டு பண்ணியதானாலும் “என்ன செய்வது” என்று பொறுத்துக் கொண்டாள். தாயிடம் பரமானந்தருக்கு என்ன நோய் என்று அவன் கேட்டதும் அவளுக்கு அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக “இருதய நோய், சிறிது கடுமையாகத் தானிருக்கிறது” என்று சொல்லி வைத்தாள்.

ஸ்ரீதரை இடையிடையே ஞாபகப்படுத்திக் கொண்டவர்களில் நன்னித்தம்பியரின் முதலாம் வகுப்புப் பட்டதாரி மகள் சுசீலா ஒருத்தி. பத்மாவைப் பெண் பார்க்கப் போன சிவநேசருடனும் பாக்கியத்துடனும் தந்தையார் நன்னித்தம்பி சென்றிருந்ததால் ஸ்ரீதரைப் பற்றித் தாயார் செல்லம்மாவுடன் அடிக்கடி பேசுவதற்கு அவளுக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

காலையில் தாயும் மகனும் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாய் போட்டு, அதில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, சுசீலா தாயிடம் “பாவம் அந்த ஸ்ரீதர், சீக்கிரமே அவருக்குக் கல்யாணம் நடக்குமல்லவா?” என்றாள்.

“ஓமென்றுதான் நினைக்கிறேன். கல்யாணத்திற்காக ஒன்றிரண்டு நாள் நாம் ‘அமராவதி’யில் போய்த் தங்கும்படி கூட நேரிடலாம். ஆனால் பாக்கியமிருக்கிறாரே. அந்த மனுஷிக்காக நான் எதுவும் செய்வேன்.” என்றாள் தாய்.

சுசீலா “அம்மா, இப்பொழுது ஸ்ரீதர் அந்தப் பெரிய வீட்டில் தனியாகவல்லவா இருக்கிறார்? எப்படி அவர் தனியாய் இருப்பாரோ எனக்குத் தெரியாது. எனக்கென்றால் பயமேற்பட்டுவிடும். வா அம்மா, நாங்கள் ‘அமராவதி’க்குப் போய் ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு வருவோம். கண் பார்வை இழந்தாவருக்கு நாங்கள் போவது ஒரு தெம்பாகவிருக்கும்” என்றாள்.

அதற்குச் செல்லம்மா ‘ஸ்ரீதர் தனியாக இல்லை. பாரதியாரும், பிள்ளைகளும் அங்கே இருக்கிறார்கள். என்றாலும் வா, போய் விட்டு வருவோம். ஆனால் ஒன்று. ஸ்ரீதரைப் பார்த்து விட்டு நீ அன்றைக்குப் போல் மீண்டும் அழுதுவிடக் கூடாது. தெரிகிறதா?” என்றாள்.

“போ அம்மா, நான் என்ன குழந்தைப் பிள்ளையா அழுவதற்கு? இப்பொழுது நான் முன் போலில்லை. எனக்கு இப்பொழுது முன்னிலும் பார்க்க மனத் திடம் எவ்வளவோ அதிகம்” என்றாள் சுசீலா.

அவர்களிருவரும் ‘அமராவதி’க்குப் போன போது அதன் பெரிய இரும்புக் கேட்டுகள் மூடப்பட்டுக் கிடந்தன. பக்கத்திலிருந்த சிறு கதவு மட்டும் திறந்திருந்தது. மாளிகைக் காவலாளி அவர்களைக் கண்டதும் “என்னம்மா எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டாள். “தம்பி ஸ்ரீதர் தனியாக இருக்கிறாரல்லவா? சும்மா பார்த்துப் பேசிவிட்டு போக வந்தோம்.” என்றாள் செல்லம்மா. “சரி அம்மா போங்கள்” என்று அவர்களுக்கு வழி காட்டினான் அவன். நன்னித்தம்பியர் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் ‘அமராவதி’ வளவுக்கு வந்து போவதற்கு எப்பொழுதுமே எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை.

சுசீலாவும் தாயும் வழியிலே இருந்த பெரிய வெள்ளை ஜம்பு மரத்தைத் தாண்டி மாளிகையை நோக்கி நடந்தார்கள். ஜம்புக் காய்கள் ஒன்றிரண்டு கீழே விழுந்து கிடந்தன. அவற்றிலொன்றை எடுத்து வாயால் கடித்துச் சாப்பிட்ட வண்ணமே மாளிகையை நோக்கி நடந்தாள் சுசீலா. தாய் செல்லம்மாவோ தனக்கு ஜம்புக்காய் பிடிக்காது என்று கூறிவிட்டாள். ஜம்புக்காய் தனக்கு வயிற்றுவலியை உண்டாக்கும் என்பது அனுபவத்தால் அவளுக்கு ஏற்பட்ட நம்பிக்கை.

சுசீலாவும் தாயும் மாளிகையைச் சமீபிக்க மோகனாவின் குரல் காற்றிலே மிதந்து வந்தது. “பத்மா, பத்மா” என்ற அதன் மழலைக் கூச்சல் தாயையும் மகளையும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து வேப்ப மரத்தின் கீழே மாங்கொட்டை போட்டு விளையாடிக் கொண்டிருந்த சின்னைய பாரதியின் குழந்தைகளின் கூச்சலும் அவர்கள் காதுகளைத் துளைத்தது. சின்னக் குழந்தை லட்சுமியோ தன்னைப் பெரிய பிள்ளகள் தமது விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாததால் சிணுங்கிச் சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அதைக் கண்ட சுசீலா “பாவம்” என்று சொல்லிக் கொண்டே குழந்தையை ஓடிப் போய்த் தூக்கிக் கொண்டு “ஏன் அழுகிறாய், பாப்பா?” என்று கேட்டாள். தாய் செல்லம்மா, “குழந்தையைக் கீழே விடு. சேலை ஊத்தையாகிறதல்லவா?” என்று சொன்னாள். சுசீலாவோ அதைப் பொருட்படுத்தவில்லை. குழந்தைக்குக் கிச்சு கிச்சுக் காட்டினாள். செக்கச் செவேலென்று குண்டாயிருந்த குழந்தை சிரித்து விளையாட ஆரம்பித்தது. சுசீலாவின் பின்னலைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேனென்றது. சுசீலா “பின்னலை விடு. இல்லாவிட்டால் அடிப்பேன்.” என்று பயமுறுத்தினான். குழந்தை அப்பொழுதும் விடவில்லை. “விடு தங்கச்சி விடு” என்று மீண்டும் சப்தமிட்டாள் சுசீலா. அவ்வாறு கூறிக் கொண்டே கையிலிருந்த ஜம்புக்காயை அதற்கு உண்ணக் கொடுத்தாள்.

அப்பொழுது விறாந்தையில் ஒரு சலனம் ஏற்பட்டது. அங்கே நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதர் எழுந்து நின்று கொண்டு முக மலர்ச்சியோடு, “யாரது? பத்மாவல்லவா? அம்மா, பத்மாவை நீ அழைத்துக் கொண்டு வந்து விட்டாயா? ஏனம்மா நீ எனக்கு இதை டெலிபோனில் அறிவிக்கவில்லை.” என்று கேட்டான்.

சுசீலாவும் தாயும் குழப்பமடைந்தனர். அவன் பேசியதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஸ்ரீதருக்கு பத்மா மீது அவன் கொண்ட எல்லை மீறிய காதலின் காரணமாகப் பைத்தியம் தான் பிடித்துவிட்டதோ என்ற சந்தேகம் கூட அவர்களுக்கு ஏற்பட்டது. என்றாலும் இது என்ன விஷயம் என்றறிய விரும்பிய செல்லம்மா “பத்மாவா? பத்மா இங்கில்லையே. நானும் சுசீலாவுமல்லவா இங்கிருக்கிறோம்.” என்றாள்.

“ஆ. பொய் சொல்ல வேண்டாம். இப்போது தானே பத்மா பேசினாள்?” என்றாள் ஸ்ரீதர்.

அதற்குச் சுசீலா பதிலளித்தாள்:

“இல்லையே, இங்கு பேசியது ஒன்றில் அம்மா. அல்லது நான்” என்று சுசீலா கூறவே ஸ்ரீதர் கல கலவென்று நகைத்துக் கொண்டு “என்னை ஏமாற்ற வேண்டாம் பத்மா. நான் ஏமாற மாட்டேன். நீ பத்மா தான். உன் குரலை நான் மறந்துவிடவில்லை. என் கண்கள் குருடுதானே என்று நீ இப்படி வேடிக்கை செய்கிறாய். ஆனால் இந்த வேடிக்கை எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை பத்மா.” என்றான்.

இப்பொழுது செல்லம்மாவுக்கும் சுசீலாவுக்கும் பளிச்சென்று ஓர் ஐயமேற்பட்டது. ஒரு வேளை சுசீலாவின் குரல் பத்மாவின் குரல் போலிருக்கிறதோ என்பதே அது. அது தான் அவன் சுசீலாவின் குரல் பத்மாவின் குரலாக எண்ணிக் கொண்டு இப்படிப் பேசுகிறான். இந்தக் குழறுபடி மேலும் நீடிப்பது நல்ல நல்ல என்றெண்ணிய செல்லம்மா ஸ்ரீதரிடம், “தம்பி, நீ நினைப்பது தவறு. அம்மா இன்னும் கொழும்பிலிருந்து வரவில்லை. நாளைக் காலை அவர்கள் வரக் கூடும். இதற்கிடையில் நீ தனியாய் இருக்கிறாய். போய்ப் பார்த்துவிட்டு வருவோம் என்று சுசீலாவும் நானும் உன்னைப் பார்க்க வந்தோம்” என்றாள்.

ஸ்ரீதரின் நிலை எக்கச்சக்கமாகிவிட்டது. செல்லம்மா கூறியது உண்மையே என்பது அவனுக்குத் தெரிந்து விட்டது. ஆம். சுசீலாவின் குரல்தான் பத்மாவின் குரல் போல அவனுக்குக் கேட்டிருக்கிறது. உண்மையில் அவர்கள் அவனை ஏமாற்ற முயலவில்லை. தன் காதுதான் தன்னை ஏமாற்றிவிட்டது. இதை நினைத்ததும் அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. என்றாலும், “என்ன ஆச்சரியம், பத்மாவுக்கும் சுசீலாவுக்கும் எத்தகைய குரலொற்றுமை” என்று அதிசயித்தான் அவன்.

பின்னர், ஒருவாறு நிலைமையைச் சமாளித்துக் கொண்டு, வேலைக்காரர்களை அழைப்பித்து செல்லம்மாவுக்கும் சுசீலாவுக்கும் குளிர்பானங்களைக் கொடுக்கும்படி செய்வித்தான். அதன்பின் இசைத்தட்டு சங்கீதத்தை அவர்களோடு உட்கார்ந்து கேட்டான். சுசீலாவோ, பாதியில் குழந்தை லட்சுமியை அழைத்துக் கொண்டு ‘அமராவதி’ வளவைச் சுற்றிப் பார்க்கப் போய் விட்டாள். அங்கே அவள் மானோடும் மயிலோடும் சிறிது நேரம் விளையாடினாள். பின்னர் தோட்டத்துத் தடாகத்தில் தாமரைப் பூக்களிடையே நீந்தி விளையாடிய மீன்களை லட்சுமிக்கு வேடிக்கை காண்பித்தாள். இவ்வாறு சிறிது நேரத்தைக் கழிந்த பின்னர் தாயும் மகளும் வீடு திரும்பினார்கள். வழியிலே சுசீலா செல்லம்மாவிடம், ‘அப்பா எப்பொழுதம்மா கொழும்பிலிருந்து வீடு திரும்புவார்.” என்று கேட்டாள். “யாருக்குத் தெரியும்? இருந்தாலும் அநேகமாக நாளை திரும்பலாம்” என்று பதிலளித்தாள் தாய்.

செல்லம்மா கூறியவாறே நன்னித்தம்பியர் சிவநேசருடனும் பாக்கியத்தோடும் அடுத்த நாள் யாழ்ப்பாணம் மீண்டார். கொழும்பிலிருந்து வருபவர்கள் ‘அமராவதி’யை அடையுமுன்னர் நன்னித்தம்பியர் வீட்டைக் கடந்தே செல்ல வேண்டும். அவ்வாறு கடக்கும் கட்டத்துக்குச் சிவநேசரின் கார் வந்ததும் நன்னித்தம்பி “ஐயா எங்கள் வீட்டில் இறங்கித் தாகசாந்தி செய்து செல்ல வேண்டும்.” என்று சிவநேசரைத் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். “சரி” என்று சம்மதித்த சிவநேசர் காரோட்டியிடம் காரை நிறுத்தும்படி கட்டளையிட்டார்.

சிவநேசர் அவ்வாறு நன்னித்தம்பியின் கோரிக்கைக்கு எவ்வித பதிலுமின்றிச் சம்மதித்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. பாக்கியமும் அவரும் நன்னித்தம்பியரும் கஞ்சா நல்லையாவுமாகச் சேர்ந்து, பரமானந்தர் சுகவீனமாக இருப்பதால் பத்மாவின் திருமணத்தை இன்னும் ஓரிரு மாதங்களுக்கு நடந்த முயலாத நிலை தோன்றியிருப்பதாக ஸ்ரீதரிடம் சொல்லுவதற்கு முடிவு செய்திருந்தார்கள். இருந்தாலும் இவ்வாறு மனமறிந்த படு பொய்யைத் தமது அன்பு மகனுக்குக் கூறுவதில் அவருக்குத் திருப்தியில்லை. இவ்விஷயம் அவர் மனத்தையும், ஏன் பாக்கியத்தின் மனதையும் கூடப் பெரிதும் குடைந்து கொண்டேயிருந்தது. ஆகவே அவர்கள் நெஞ்சம் ‘அமராவதி’க்குப் போய் அங்கே ஸ்ரீதரை நேரில் பார்ப்பதற்கே கூசியது. இப்படிப்பட்ட நேரங்களில் விஷயங்களைத் தள்ளிப்போட முயல்வது பலரது வழக்கம். நன்னித்தம்பியர் வீட்டில் சிறிது நேரம் தங்கிச் செல்வது தாம் விரும்பாத விஷயத்தை மேலும் சிறிது தாமதிக்க உதவக் கூடுமல்லவா?

சிவநேசரின் கார் வீட்டு வாசலில் நின்றதும் சுசீலா துள்ளிக் குதித்து ஓடி வந்து விஷயம் என்னவென்று பார்த்தாள். “அம்மா, அப்பா வந்துவிட்டார்” என்று அங்கிருந்தபடி தாய்க்குக் குரல் கொடுத்தாள் அவள். காரோட்டி சுப்பிரமணியம் காரிலிருந்து இறங்கிக் கார்க் கதவைத் திறந்தான். பாக்கியமும் சிவநேசரும் ஒருவர் பின்னொருவராக இறங்கினார்கள். நன்னித்தம்பியர் முன்னாற் சென்று விறாந்தையில் அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகளை இழுத்து வைத்தார். செல்லம்மாவும் சுசீலாவும் சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றார்கள். ஆனால் வீட்டின் காவல் நாயான வைரவப்பிள்ளை மட்டும் விருந்தினர் வருகையை ஆட்சேபிப்பது போல் குலைக்க ஆரம்பித்தது. “வைரவப்பிள்ளை, பேசாமலிரு.” சுசீலா, நாயை அதட்டினாள்.

“வைரவப்பிள்ளையா? யாரது?” என்றார் சிவநேசர். “அது எங்கள் நாயின் பெயர்.” என்றார் நன்னித்தம்பியர். அசாதாரணமான அந்தப் பெயரைக் கேட்டதும் இலகுவில் சிரிக்காத சிவநேசர் முகத்தில் கூட புன்னகை பூத்துவிட்டது. “அது சுசீலா வைத்த பெயர்.” என்றாள் செல்லம்மா. அதைக் கேட்ட பாக்கியம் சுசீலாவின் முகத்தைப் பார்த்துப் புன்னகை செய்தாள். சுசீலாவோ நாணத்தால் அங்கிருந்து விரைவாக நழுவி விட்டாள். மனத்தில் பெரிய பாசம் இருந்த போதிலும் இச்சிறிய சம்பவம் எல்லோர் மனதிலும் ஒரு வித கலகலப்பை ஏற்படுத்தவே செய்தது. சுசீலாவின் அதட்டலைக் கேட்டு வைரவப்பிள்ளையும் அடங்கிவிட்டது. மெல்லச் சிவநேசர் பக்கம் சென்று வாலைக் குழைத்துக் கொண்டு நின்றது. செல்லம்மா “சுசீலாவின் குரல் கேட்டால் போதும். நாயனார் உடனே அடங்கிவிடுவார்” என்று வேடிக்கையாகச் சொன்னாள். எல்லோரும் சிரித்தார்கள்.

நன்னித்தம்பியரின் வீடு இரண்டு மூன்று அறைகளுடன் கூடிய மிகச் சிறிய வீடேயானாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருந்தது. வீட்டைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள். அவற்றின் கீற்றுகளினூடே வீசிக் கொண்டிருந்த தென்றற் காற்று, வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய முல்லைச் செடியின் வாசத்தை வாரிக் கொணர்ந்து மூக்கிற் புகுத்தி, மனதில் ஓர் இன்பப் போதையை ஏற்றியது. இன்னும் வீட்டு விறாந்தைக்குச் சமீபமாக வரிசையாக நடப்பட்டிருந்த ரோஜாச் செடிகள் செழித்துப் பூத்திருந்த பென்னம் பெரிய ரோஜா மலர்களுடன் அழகுக் காட்சி நல்கின. எல்லாம் சுசீலாவின் கை வண்ணம். பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று வந்திருந்தும், இன்னும் வேலை எதுவும் கைக்குக் கிடைக்காததால் வீட்டை அழகுபடுத்தும் இத்தகைய பணிகளை ஒழுங்காகச் செய்து வந்தாள் அவள்.

பாக்கியமும் சிவநேசரும் அச்சிறிய இல்லத்தின் அழகிய தோற்றத்தை உள்ளூர மெச்சினார்கள்.

செல்லம்மா சிவநேசருக்கும் பாக்கியத்துக்கும் ஆட்டுப் பால் கலந்து கோப்பியை எவர்சில்வர் தம்ளர்களில் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்கள் அதை அருந்திய பின்னர் ஸ்ரீதரின் பிரச்சினையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.

பாக்கியம் “என் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. ஸ்ரீதருக்கு என்ன சொல்லப் போகிறேன்?” என்ற கவலையோடு கூறினாள். “ஏன் என்ன விஷயம்?” என்றாள் செல்லம்மா. சுசீலாவோ பெரியவர்கள் பேச்சில் தான் கலந்து கொள்வது நல்லதல்ல என்று உள்ளே போய்விட்டாள். இருந்தாலும் உள்ளே இருந்தபடியே அவளால் ஒற்றுக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. அதிலும் கல்யாண விவகாரம், அதுவும் காதலோடு பின்னிய கல்யாண விவகாரமென்றால் யாருக்குத்தான் அதைப் பற்றி ஆறிய ஆசை ஏற்படாது? ஆகவே அக்கறையோடு ஒற்றுக் கேட்க ஆரம்பித்தாள் அவள்.

பாக்கியமும் நன்னித்தம்பியும் விஷயத்தை விளக்கினார்கள். “ஸ்ரீதர் உண்மையாக நேசிக்கும் பெண் அவள். அவளில்லாவிட்டால் தனக்கு வாழ்வில்லை என்று ஸ்ரீதர் நினைக்கிறான். மேலும் அவளை ஒழிய வேறொருத்தியை இந்த வாழ்க்கையில் திருமணம் செய்வதில்லை என்று தனக்குள் தானே சத்தியம் செய்து கொண்டிருக்கிறான் அவன். இன்னும் இவ்வுலகில் பத்மாவைப் போல் தன்னை வேறு யாரும் நேசிக்கவில்லை என்றும் அவன் நம்புகிறான். ஆனால் அப்படி அவன் ஆசையோடு காதலிக்கும் யுவதி அவனைக் குருடனென்று கூறிவிட்டாள். குருடனை மணமுடிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டாள். இதை நாம் எப்படி அவனுக்குச் சொல்வது? பத்மா தன்னைக் கை விட்டு விட்டாள் என்ற செய்தியை அவனால் தாங்க முடியுமா? ஸ்ரீதரால் அதைத் தாங்க முடியாது. நெஞ்சம் வெடித்துச் செத்து விடுவான். செல்லம்மா, நான் என்ன செய்வேன்?” என்று புலம்பினாள் பாக்கியம்.

சிவநேசர், “ஆம், நன்னித்தம்பி, பத்மா ஸ்ரீதரைக் கைவிட்ட செய்தியை நாம் அவனுக்குச் சொல்லவே கூடாது. அவனால் அதைத் தாங்க முடியாது. எங்கள் ஒரே மகன் அவன். ‘அமராவதி’யின் ஆசைக் கொழுந்து. இவ்விஷயத்தைக் கேட்டால் உள்ளம் வெதும்பிப் போய்விட மாட்டானா? அவன் எம்மைக் கண்டதும் நல்ல செய்தி கூறுவோமென்று எதிர்பார்ப்பான். அப்படிப்பட்டவனுக்கு நாம் எப்படி இந்த உண்மையைக் கூறுவது?” என்றார்.

சில விநாடி நேரம் ஒருவரும் ஒன்றும் பேசாது மெளனமாயிருந்தார்கள். பின் நன்னித்தம்பி பேசினார். “என்னைப் பொறுத்தவரையில் நான் ஏழை. அந்தஸ்தில் உங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் ஏற முடியாது. இல்லாவிட்டால் நிச்சயம் எனது மகள் சுசீலாவை ஸ்ரீதருக்கு நான் மணமுடித்துத் தருவேன். ஸ்ரீதருக்குக் கண்ணில்லாதது ஒன்றுதானே குறை? மற்றும் அழகில், அறிவில், படிப்பில், அந்தஸ்தில், செல்வத்தில், திடகாத்திரத்தில் எல்லாவற்றிலும் சிறந்தவர் உங்கள் மகன். அவருக்கு இணையான ஒரு வாலிபரை இம்முழு உலகத்திலுமே காண முடியாது.” என்றார்.

ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்த சுசீலாவின் உள்ளம் திக்கென்றது. ஸ்ரீதரைப் பத்மா நிராகரித்தாள் என்ற செய்தியைக் கேட்டு, “பாவம் ஸ்ரீதர்” என்று பதைபதைத்துப் போயிருந்த அவள், தன் பெயர் இழுக்கப்பட்டதும் மின்னலால் தாக்குண்டவள் போலானாள். “உண்மையில் ஸ்ரீதரில் ஒரு குறையுமே இல்லை.” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள். நன்னித்தம்பியர், கண் பார்வை குறைந்ததை ஒரு குறையாகக் குறிப்பிட்டது கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.

சிவநேசர் நன்னித்தம்பியின் பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டார். “நன்னித்தம்பி, நீ உண்மையாகவே இதைச் சொல்லுகிறாயா? அல்லது வெறும் ஒப்புக்குப் பேசுகிறாயா?” என்று கேட்டார்.

“சத்தியமாகச் சொல்லுகிறேன். ஆனால் இதைச் சொல்ல நான் எவ்வளவு அஞ்சுகிறேன் தெரியுமா? சேர் நமசிவாயத்தின் வழி வந்த உங்களுடன் நாம் சம்பந்தம் செய்வது பற்றிப் பேசும் போதே என்னுடம்பு நடுங்குகிறது.” என்றார் நன்னித்தம்பி. செல்லம்மா “இந்தப் பேச்சில் என்ன பிரயோசனம்? ஸ்ரீதர் இவ்வுலகில் ஒரே ஒரு பெண்ணையே விரும்புகிறான். அது பத்மா. அவன் ஒரு போதும் சுசீலாவையோ வேறு யாரையோ திருமணம் செய்யச் சம்மதிக்க மாட்டான்” என்றாள்.

சுசீலாவும் “ஆம் அது உண்மைதானே? அம்மா மிகவும் புத்திசாலி. படிக்காதவளாயிருந்தும் எவ்வளவு விவேகமாகச் சிந்திக்கிறாள்.” என்று நினைத்துக் கொண்டாள்.

தான் குருடாகிவிட்டது தனக்குப் பெருங் குறைதான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அதற்காகத் தன்னை நேசித்தவர்கள் தன்னை வெறுத்தொதுக்குவார்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே ஸ்ரீதருக்கு ஏற்பட்டதில்லை. “நான் நேசித்த ஒருவருக்கு இவ்வித இடர்ப்பாடு ஏற்பட்டிருக்குமேல், எவ்விதம் நடந்து கொள்ளுவேன்?” என்று அவன் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மையேயாயினும் அவ்விதம் அவன் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு அவன் அளித்திருக்கக் கூடிய பதில் பின் வருமாறே அமைந்திருக்கும், “பாவம், கண்ணை இழந்துவிட்டாள் அவன், இந்த நேரத்தில் தான் எனது அன்பு அவனுக்கு அதிகமாகத் தேவை. ஆகவே தான் அவனுக்கு முன்னிலும் அதிகமாக அதை அள்ளி வழங்குவேன்.” ஆம், நிச்சயமாக ஸ்ரீதர் இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் என்பதோடு அவ்வாறே நடந்துமிருப்பான். இப்படிப்பட்ட அவன் தன் ஒளி மங்கிய நிலையிலே, பத்மாவின் அன்பு தன் மீது முன்னிலும் பார்க்கப் பன்மடங்கு அதிகமாகச் சுரக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லையல்லவா?சிவநேசர் சிறிது நேரம் மெளனமாயிருந்துவிட்டு “ஸ்ரீதருக்கு நாம் பத்மா அவனை நிராகரித்து விட்டாள் என்று சொல்லாமல் சுசீலாவைத் திருமணம் செய்து வைத்தால், சுசீலாவும் வாழ்க்கை பூராவும் தானே பத்மா என்று நடிக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமாகக் கூடிய காரியமா? இன்னும் அவள் தன்னை உண்மையாகக் காதலிப்பதாக நம்பிய பத்மாவே குருடனோடு தன்னால் வாழ முடியாது என்று கூறிவிட்டால். இந்நிலையில் வேறெந்தப் பெண் அவனுடன் வாழச் சம்மதிப்பாள்? சுசீலாவைப் பொறுத்தவரையில் அவள் ஸ்ரீதருடன் எப்பொழுதுமே பழகியதில்லை. ஆகவே அவனிடம் இத்தகைய தியாகத்தை நாம் எதிர்பார்க்க முடியுமா? சுசீலா அதற்குச் சம்மதிப்பாளா? நாடகத்தில் வாழ்க்கையை நடித்துக் காட்டுவது இலகுவானது. ஆனால் வாழ்க்கையையே நாடகமாக்கி நடித்துக் கொண்டிருப்பது மிக மிகக் கடினம். சுசீலா இதைச் செய்தால் எங்கள் குலம் தழைப்பது மட்டுமல்ல, பட்டுப் போன ஸ்ரீதரின் வாழ்வும் தளிர்க்கும். தான் காதலில் அடைந்த தோல்வியை அறியாமலே அவன் மகிழ்ச்சியோடு வாழ முடியும். ஆனால் எதற்கும் சுசீலாவும் சம்மதிக்க வேண்டுமே” என்றார்.

நன்னித்தம்பியர் “சுசீலாவைக் கூப்பிட்டுக் கேட்டுப் பார்ப்போம்.” என்றார்.

“வேண்டாம். எப்படி நாம் ஒரு பெண்ணிடம் குருடனைக் கட்டிக் கொள்வாயா என்று கேட்பது? நான் திருமணம் பேசிய கந்தப்பசேகரர் மகள் அவனைக் கைவிட்டாள். இப்பொழுது அவன் காதலித்த பெண்ணே கைவிட்டுவிட்டாள். இந்நிலையில் சுசீலாவிடம் நான் இக்கேள்வியைக் கேட்க மாட்டேன். இது நடக்கக் கூடியதல்ல.”

இவ்வாறு அவர் கூறி நிறுத்தியதுதான் தாமதம். சுசீலா திடீரென கதவடியில் தோன்றினாள். அவள் கண்கள் கண்ணீரால் குளமாயிருந்தன. ஒரு விநாடி ஒன்றும் பேசாது நின்றாள் அவள். எல்லோரும் அவள் திடீர் வரவைக் கண்டு திடுக்கிட்டார்கள். அவள் முகத்தை நோக்கினார்கள்.

பீறி வரும் உனர்ச்சிப் பெருக்கோடு, அவள் தந்தையார் நன்னித்தம்பியின் முகத்தை நோக்கித் தளதளத்த குரலில் “அப்பா, நீங்கள் இங்கே பேசியது முழுவதையும் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் ஸ்ரீதரைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயார். அவருடைய வாழ்க்கையில் விளக்கேற்றுவதற்காக நீங்கள் கூறிய விதம் பத்மாவாக மாறிவிடவும் தயார். இன்றிலிருந்து நீங்களும் என்னைப் பத்மாவென்றே அழையுங்கள்.” என்றாள்.

பாக்கியத்துக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தன் கணவர் சிவநேசரின் ஆலோசனையை அவன் ஏற்றுக் கொண்டு விட்டாளா? “சுசீலா, நீ உண்மையைத் தான் கூறுகிறாயா? ஸ்ரீதரைக் கல்யாணம் செய்யச் சம்மதிக்கிறாயா? என்னுடைய குருட்டுப் பிள்ளையைக் கட்ட நீ சம்மதிக்கிறாயா? உண்மைதானா சுசீலா, அல்லது விளையாடுகிறாயா? என் குருட்டு மகனுக்கு மணப்பெண்ணாக, எனக்கு மருமகளாக வர நீ உண்மையிலேயே விரும்புகிறாயா?” என்றாள் அவள்.

சுசீலா “ஸ்ரீதரை இப்படிக் குருடு, குருடு என்று நீங்களே சொல்லலாமா? அப்படிச் சொல்லாதீர்கள். அவரில் ஒரு குறையுமே எனக்குத் தெரியவில்லை. அவர் போல் அழகர், நல்லவர், அன்புள்ளம் படைத்தவர் யாருக்குக் கிடைப்பார்? நான் அவரைக் கல்யாணம் செய்ய முற்றிலும் சம்மதம்.” என்றாள்.

சிவநேசர் கண்கள் கலங்கின. பாக்கியம் எழுந்து அவனைத் தன் மார்போடணைத்துக் கொண்டாள். செல்லம்மாவை நோக்கி “இன்றிலிருந்து உன் மகள் என் மகளாகிவிட்டாள். ஸ்ரீதரை விட இவளைத்தான் என் பிள்ளை என்று நான் போற்றுவேன். இனிமேல் இவள் தான் அமராவதி.” என்றாள்.

சுசீலா சிரித்தாள். “ஸ்ரீதர் என் குரலைப் பத்மாவின் குரலென்று எண்ணுகிறார். நேற்று நடந்த விஷயத்தை அம்மாவிடம் கேளுங்கள்.” செல்லம்மா விஷயத்தைச் சொன்னாள். அதைக் கேட்ட பாக்கியம், “அப்படியானால் விஷயம் மிகச் சுலபமாகிவிட்டது.” என்றாள்.

சிறிது நேரத்தில் சிவநேசரும் பாக்கியமும் “அமராவதி”க்குப் போனதும் ஸ்ரீதர் பாக்கியத்திடம் “அம்மா விஷயம் என்னவாயிற்று?” என்று ஆவலோடு கேட்டாள்.

“என்ன ஆவது? அடுத்த வாரம் உனக்கும் பத்மாவுக்கும் திருமணம்.” என்றாள் பாக்கியம்.

“அப்படியானால் உனக்குப் பத்மாவைப் பிடித்திருக்கிறதென்று சொல்லு. அதுதான் நான் முன்னரே சொல்லியிருக்கிறேனே – பத்மா மிகவும் நல்லவள் என்று. நீ நம்பமாட்டேன் என்றாய். இப்போது என்ன சொல்லுகிறாய்? பத்மா நல்லவள்தானே? நான் சொன்னதில் தவறில்லையல்லவா?”

“ஆம் ஸ்ரீதர். பத்மா மிகவும் நல்லவள்.”

இதைக் கேட்ட ஸ்ரீதரின் மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது. அப்பா என் திருமணத்தை முதலில் எதிர்த்த போதிலும் இப்பொழுது அவரே முன்னின்று எல்லாவற்றையும் செய்துவிட்டார். உனக்கும் அவருக்கும் நான் என்ன கைமாறு செய்வேன் அம்மா?” என்றான் அவன். ஸ்ரீதரின் ஆனந்தம். உண்மையில் அர்த்தமில்லாத ஓர் ஆனந்தம் – அது பொய்மையில் பிறந்த ஏமாளியின் ஆனந்தம் என்பதை நினைத்ததும் பாக்கியத்தின் மனம் துன்பப்படவே செய்தது. இருந்தாலும் என்ன செய்வது? அவள் தனக்குள்ளேயாவது இன்பத்துடன் வாழ்வதற்கு இதை விட வேறு வழி என்ன? இந்த வழியும் தோன்றியிருக்கா விட்டால், “பத்மா உன்னைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டாள்.” என்று அவனுக்குச் சொல்லும் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன விபரீதம் நடந்திருக்குமோ, தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருப்பானோ அல்லது பைத்தியமே பிடித்திருக்குமோ – யாருக்குத் தெரியும்? இவ்வாறு எண்ணித் தனது உள்ளத்தைத் தேற்றிக் கொண்டாள் பாக்கியம்.

கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிப் பாக்கியம் ஸ்ரீதருக்குப் பின் வருமாறு விவரித்தாள்:

“பத்மாவின் அப்பாவுக்குக் கடுமையான இருதய நோய். அவரைப் படுக்கையிலிருந்து எழக் கூடாது என்று டாக்டர்கள் தடை செய்திருக்கிறார்கள். அதனால் அவரால் இங்கு வர முடியாது. இருந்தாலும் பத்மாவை உடனே யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்று திருமணத்தை நடத்திவிடுங்கள் என்று கூறிவிட்டார் அவர். அந்த ஏற்பாட்டின் படி இன்னும் ஒரு வாரத்தில் விமான மூலம் பத்மா இங்கு வந்து விடுவாள். வந்த உடனேயே திருமணம் நடைபெறும். பெண்ணின் தகப்பனார் திருமணத்தில் பங்கு கொள்ள முடியாத நிலையில் இருப்பதால், விசேஷமான கொண்டாட்டங்கள் வேண்டியதில்லை என்று அப்பா தீர்மானித்திருக்கிறார். எங்கள் வீட்டுக் கோயிலிலேயே கல்யாணத்தை நடத்திவிட எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம்.”

ஸ்ரீதர் எப்பொழுதும் அந்தஸ்துக்கேற்ற படாடோப வாழ்க்கையையும் கொண்டாட்டங்களையும் விரும்புவனாதலால் காதும் காதும் வைத்தாற் போன்ற திருமணத்தை அவன் விரும்பவில்லை. என்றாலும் குருடனுக்கு இது போதாதா என்ற எண்ணமும் அவனுக்கு ஏற்பட்டது. “எப்படியும் என் வாழ்வின் ஜோதி என்று வாழ்ந்தடைந்து விட்டாளே, அது போதும்.” என்று திருப்தியுற்றான் அவன்.

பாக்கியம் செய்த ஏற்பாட்டின்படி ஒரு வாரம் கழித்து சுசீலா ‘அமராவதி’ வளவுக்கு வந்தாள். அவன் வந்ததை அறிந்ததும் ஸ்ரீதர் மோகனாவைத் தூண்டி “பத்மா” என்று அழைக்கும்படி செய்தான். அன்று பிற்பகலே ‘அமராவதி’க் கோவிலில் பஞ்ச நாதக் குருக்கள் புரோகிதத்தில் பத்மா – ஸ்ரீதர் திருமணம் நடைபெற்றது. புற உலகிற்கு அது ஸ்ரீதர் – சுசீலா திருமணமானாலும் ஸ்ரீதரின் உள்ளுலகில் அது பத்மா – ஸ்ரீதர் திருமணம்தானே!

பாக்கியம் ‘அமராவதி’ மாளிகையின் மிகப் பெரியதும் ஆடம்பரமானதுமான அறையை ஸ்ரீதரின் திருமண அறையாக மாற்றியிருந்தார்கள். தெய்வலோகம் போல் அலங்கரிக்கப்பட்டுப் பல விதமான வாசனைப் பொருள்களின் மூக்கைப் பிய்க்கும் நறுமணத்துடன் விளங்கிய அவ்வறையினுள் விலையுயர்ந்த பட்டாடைகள் புனைந்து, தன் அந்தகக் கணவனுடன் பள்ளிக் கொள்ளச் சென்றாள் சுசீலா.

“பத்மா, நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. இல்லாவிட்டால் குருடனென்றறிந்ததும் நீ என்னை நிராகரித்திருப்பாயல்லவா? நீ எவ்வளவு நல்லவள். உன்னைப் போன்ற உத்தமி இவ்வுலகில் யாருக்குக் கிடைப்பாள்? நீ இந்த ஜென்மத்தில் மட்டும் எனது காதலியல்ல. சென்ற ஜென்மத்திலும் அதற்கு முன்னைய ஜென்மங்களிலும் நீயே என் காதலியும் மனைவியுமாக விளங்கிருக்கிறாய். இனி வரும் ஜென்மங்களிலும் நானுன்னைப் பிரிய மாட்டேன். ஊழிக் காலத்திலே உலகம் முற்றாக அழியும் வரை நாம் இப்படியே பிறப்புக்கும் பிறப்பு காதலாகச் சென்றுக் கொண்டேயிருப்போம். ஏன், சைவ மதத்தின் படி ஆத்மாக்கள் என்றும் அழிவற்றன அல்லவா? சர்வ சங்காரத்தின் பின் தோன்றும் நவ உலகிலும் கூட நாம் மீண்டும் கணவன் மனைவியாகக் கூடுவோம். ஆம் பத்மா, என்னால் உன்னைப் பிரியவே முடியாது” என்று காதல் மொழிகளை விடாது பேசினான் ஸ்ரீதர்.

சுசீலா ஸ்ரீதரை எவ்வளவு தூரம் தன் பேச்சாலும் செயலாலும் மகிழ்விக்க முடியுமோ அவ்வளவு தூரம் அவனை மகிழ்வித்தாள். பத்மாவுக்கும் அவளுக்குமிருந்த குரலொற்றுமை இதற்குப் பேருதவியாயிருந்தது. விடிவதற்கு முன் ஸ்ரீதர் சுசீலாவிடம் “பத்மா நீ எவ்வளவு நல்லவள்.”, “நீ எவ்வளவு நல்லவள்” என்று குறைந்தது பத்தாயிரம் தடவையாவது சொல்லியிருப்பான்.

‘அமராவதி’யில் இவை நடந்து கொண்டிருக்க, கொழும்பில் கமலநாதனுடன் காதற் பேச்சுப் பேசி கால்பேஸ் கடற்கரையில் புற்றரையில் அமர்ந்திருந்தாள் பத்மா. கமலநாதன் மீசையைத் தன் காந்தள் விரல்களால் முறுக்கி மேலேற்றிவிட்ட அவள், “மீசையை இப்படி முறுக்கிவிடுங்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருக்கும்” என்று ஆலோசனை கூறினாள்.

கமலநாதன் “ஸ்ரீதரின் தந்தையார் பெண் கேட்டு வந்தாராமே? நீ மறுத்துவிட்டாயாமே. அவன் கண்கள் குருடென்பதனால்தானே நீ இந்தக் கல்யாணத்தை மறுத்தாய்?” என்று கேட்டான்.

அதற்குப் பத்மா “உங்களுக்குப் பைத்தியமா? முனிசிப்பல் விளையாட்டுச் சங்க நடன விருந்தன்று உங்களோடு நெருங்கிப் பழகிய அன்றே ஸ்ரீதரை நான் மறந்து விட்டேன். ஆளைப் பார், தெரியாதவர் மாதிரிப் பேசுகிறார்” என்றாள். அவ்வாறு சொல்லிக் கொண்டே இருளிலே அவனது தோளிலே தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

இவை நடந்து ஒரு மாதம் கழித்து கொழும்பு ‘தப்ரபேன்’ ஹோட்டலில் கமலநாதன் – பத்மா திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தேறியது. நகர மேயர் உட்படப் பல பிரமுகர்கள் திருமணத்துக்கு வந்திருந்தார்கள். பரமானந்தருக்கோ பத்மாவின் திருமணம் ஒரு பாரம் தீர்ந்தது போன்ற உணர்ச்சியைக் கொடுத்தது. தங்கமணியும் கல்யாணத்துக்கு வந்திருந்தாள். விமலாவும் லோகாவும் கல்யாணக் கேக்குகளை இரசித்துச் சாப்பிட்டார்கள். அடுத்த வீட்டு அன்னம்மா இக்கல்யாணத்தின் பயனாகத் தன் வாழ்வில் முதல் முதலாக ஒரு பெரிய ஹோட்டலின் உட்புறத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றாள். இப்படிப்பட்ட இடங்களில் நடமாடி அவளுக்கு முன்னர் பழக்கமில்லாவிட்டாலும், இது பற்றிப் பத்மாவின் ஆலோசனைகளை முன்னரே அவள் பெற்றிருந்தபடியால் ஓரளவு விரசமில்லாமலே அவள் அங்கு நடந்து கொண்டாள்.

திருமணத்தின் பின்னர் தம்பதிகள் ‘பெலிஹூல் ஓயா’ என்னும் மலை நாட்டுச் சுகவாசஸ்தலத்துக்குத் தமது ‘தேன் நிலவு’க்குப் போனார்கள்.

24-ம் அத்தியாயம்: நாடகமே உலகம்!

“அமராவதி” இப்பொழுது ஒரு நாடக அரங்கமாகி விட்டது. ஓர் ஆள் மாறாட்ட நாடகம் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏதோ பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து வைப்பதற்காக நாடகத்தைத் தொடங்கியாகி விட்டது. ஆனால் கடைசி வரை இந்நாடகத்தை வெற்றிகரமாக நடத்துவது அவ்வளவு இலகுவாகத் தோன்றவில்லை. இந்நாடகத்தில் சிவநேசர் உட்பட எல்லோரும் வெறும் பார்வையாளர்களாகவும், மேடை நிர்வாகிகளாகவுமிருக்க, நடிகையாக இருந்து நாடகத்தின் முழுப் பாரத்தையும் தோளிலே சுமக்க வேண்டிய பொறுப்பு சுசீலாவைச் சார்ந்துவிட்டது. தான் ஏற்றுக் கொண்ட நாடக பாத்திரத்திற்கேற்ற குரற் பொருத்தம், வயது, படிப்பு என்பன அவளுக்கு அமைந்திருந்தமை இதற்கு உதவியாக இருந்தது உண்மைதான். என்றாலும் ஸ்ரீதரும் பத்மாவும் நீண்ட காலம் ஒருவருடன் ஒருவர் பழகியவர்களாததால் பழைய சம்பவங்கள் பலவற்றை அவன் சுசீலாவிடம் இடையிடையே ஞாபகமூட்டிய போது, அவனது வசனங்களுக்குப் பொருத்தமான பதில் வசனங்களைப் பேசுவது சுசீலாவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சில வேளைகளில் பொருத்தமான பதில்கள் அடியோடு தோன்றாது போகும். அவ்வேளைகளில் விஷயங்களைத் திறமையாகப் பூசி மெழுகி மழுப்ப வேண்டியிருந்தது. இயற்கையாகவே சுசீலா புத்திசாலியாகவும் கற்பனை வளம் வாய்க்கப் பெற்றவளாகவும் விளங்கியதால், இதை அவளால் ஓரளவாவது சாதிக்க முடிந்தது. இன்னும் பொதுவாகவே ஆண்களை விடப் பெண்களுக்குப் பொய் சொல்லும் ஆற்றல் அதிகம் என்று சொல்லுவார்கள். இதன் உணமை எப்படியிருந்த போதிலும், சுசீலாவைப் பொறுத்தவரையில் இந்த ஆற்றலை மிக விரைவில் அவள் தன்னிடம் வளர்ந்துக் கொண்டு ஸ்ரீதரின் வாழ்க்கைக்கு இன்பத்தை அளிக்கத் தன்னாலானதை எல்லாம் செய்து வந்தாள்.

இயற்கையாகவே இளகிய இதயம் படைத்த அவள், ஸ்ரீதரின் நிலையைப் பார்த்து ஏற்கனவே அவன் மீது அனுதாபம் கொண்டிருந்ததால், சிவநேசரும் பாக்கியமும் அவனது பெற்றோருடன் உள்ளத் தவிப்போடு பேசிய வார்த்தைகளைக் கேட்டதும் தன்னை மறந்து உணர்ச்சிப் பெருக்கில் ஒன்றையும் யோசியாமல் திடீர் முடிவுக்கு வந்து அந்தகனான ஸ்ரீதரின் ஆள் மாறாட்ட மனைவியாகி, இன்று அவனோடு இல்லறமென்னும் நுகத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாள். இந்தத் திருமணத்தில் இருந்த பிரச்சினை ஒரு குருடனை அவள் கட்டினாள் என்பதல்ல. இன்னொரு பெண்ணாக நடிக்க வேண்டியிருந்ததே, பெரிய தொல்லையாக இருந்தது. சாதாரணமாக மேடை நாடக நடிகர்களைப் போலவே நாடகம் உண்மையில் ஆரம்பிக்கும் வரை அதாவது அமராவதிக் கோவிலில் தாலி கட்டி ஸ்ரீதரோடு பள்ளியறை புகும் வரை தான் ஏற்றுக் கொண்ட பாத்திரம் எத்தகைய கஷ்டமான பாத்திரம் என்பதை அவள் உணரவில்லை.

உண்மையில் பத்மா என்ற பெயரை திடுதிடுப்பென்று ஏற்றுக் கொண்ட போதிலும், பத்மாவின் தந்தை பெயர் என்ன, தாயின் பெயரென்ன இருவரும் ஜீவந்தராயிருக்கிறார்களா, இவர்களில் எவராவது இறந்து போய் விட்டார்களா என்பது போன்ற சாதாரண விவரங்களைக் கூட அவள் போதிய அளவு சேகரித்து கொள்ளவில்லை. இதனால் ஒரு வேளை ஸ்ரீதர் சுசீலாவின் ஆள் மாறாட்டத்தைத் தெரிந்துக் கொண்டுவிட்டால் என்ன ஆவது? அவ்விதம் அவன் தெரிந்து கொண்டுவிட்டால் என்ன விபரீதம் நேரிடுமோ? இதை எண்ணியதும், சுசீலாவை நெஞ்சை நடுங்க வைக்கும் பேரச்சம் பீடித்தது. அதனால் ஸ்ரீதருடன் பேசும்போது மிகவும் சாவதானமாக யோசித்துப் பேச வேண்டியது தன் கடமை எனபதை உணர்ந்தாள் அவள். தவறான ஒரு சொல் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடலாம். ஆகவே எப்பொழுதும் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிவிட்டது.

தனது திருமணத்தின் முதலிரவன்று படுக்கையறையில் நாணத் தெளிந்து ஸ்ரீதருடன் சாதாரணமாகப் பேசிப் பழக ஆரம்பித்த பிறகு அவனுக்கு உற்சாகமூட்டுவதற்காக அவன் கன்னத்தில் முத்தமிட்டு, ஒரு காதற்பாட்டைக் குரலெடுத்துப் பாடினாள் சுசீலா. ஸ்ரீதர் அதைக் கேட்டதும் மிகுந்த ஆச்சரியத்துடன் “பத்மா, நீ எப்போது பாடக் கற்றுக் கொண்டாய்? என்னுடன் எத்தனையோ மாதங்களாக ஊர் சுற்றித் திரிந்தும் ஒரு நாளும் நீ பாடியதில்லை” என்றான். சுசீலா திருதிரு என்று விழித்தாளாயினும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “நான் என்னுடைய சங்கீதத் திறமையை எங்கள் முதலிரவுக்கென்றே ஒளித்து வைத்திருந்தேன். பெண்கள் ஆண்களைப் போல் தங்கள் திறமைகளை ஒரேயடியாகக் காட்டிவிட மாட்டார்கள்” என்றாள். ஸ்ரீதருக்கு அப்பதில் திருப்தியாகவே பட்டது. விடிவதற்கிடையில் “பத்மா இன்னும் பாடு, இன்னும் பாடு” என்று அவளைப் பலமுறை பாட வைத்துவிட்டான் அவன்.

இச்சம்பவம் அவள் மனப் பயத்தை மேலும் அதிகரித்துவிட்டது. மிகவும் கஷ்டமான பரீட்சையில் தான்சிக்கிக் கொண்டு விட்டதாகவும், அதில் தன்னால் சித்தி எய்துவது சாத்தியந்தானா என்றும் அவள் கலங்கலானாள். இவ்வாறு அவள் கலங்கியபோது சில காலத்துக்கு முன்னர் தான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது கண்டியில் சக மாணவிகள் சிலருடன் தான் பார்த்த ஹிந்தி படமொன்று அவளுக்கு ஞாபகம் வந்தது. இப்படத்தின் கதாநாயகன் தன்னைப் போன்ற உருவமைந்த இன்னொருவனாக நடித்துச் சில மோசடிகள் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதற்கு அவனுக்கு பெருந் துணையாக அமைகிறது மற்றவனின் தினக்குறிப்பு புத்தகம். விரிவாக எழுதப்பட்ட இத்தினக்குறிப்புப் புத்தகத்தில் அவனது முழு விவரங்களும் காணப்படுகின்றன. அவற்றை நன்கு உபயோகித்துத் தனது மோசடிகளை மிகவும் திறம்படச் செய்ய முடிகிறது கதாநாயகனால். உண்மையில் மற்றவரின் மனைவியைக் கூடத் தானே அவளது உண்மைக் காதலன் என்று நம்ப வைத்துவிடுகிறான் அவன். இக்கதை ஞாபகம் வந்ததும் சுசீலா ஸ்ரீதரிடம் தினக்குறிப்புப் புத்தகம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமென்றும், அவ்வாறு அவனெழுதிய தினக்குறிப்புப் புத்தகம் இருக்கும் பட்சத்தில் அது தனக்குப் பெருந் துணையாகலாம் என்பதால் அதனைத் தேடிப் பார்க்க வேண்டும் என்றும் முடிவு செய்தாள். அவளது இம்முயற்சி வீண் போகவில்லை. ஸ்ரீதரின் தினக்குறிப்புப் புத்தகம் அவளிடம் சிக்கவே செய்தது. ஆனால் சினிமாக் கதையில் காட்டப்பட்ட விரிவான தினக்குறிப்புப் புத்தகம் போல் அது அமையவில்லை. அப்படிப்பட்ட வசதியான நிலைமைகள் சினிமாவிலோ கதைகளிலோதான் காணப்படும். வாழ்க்கையில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது துர்லபம். இருந்தாலும் அவள் கைக்கு அகப்பட்ட ஸ்ரீதரின் தினக்குறிப்புப் புத்தகம் அவளுக்கு ஓரளவு உபயோகமாகவே அமைந்தது. ஸ்ரீதரின் அறையில் காணப்பட்ட பெரிய அலமாரியைத் துருவி ஆராய்ந்த போதே அது அவளுக்கு அகப்பட்டது.

தினக்குறிப்புப் புத்தகம் வைத்திருப்பது இப்பொழுது மிகவும் கர்நாடகமாகக் கருதப்பட்டு வருகிறது. தப்பித் தவறித் தினக்குறிப்புப் புத்தகம் வைத்திருப்பவர்களும் கூட அதை வேலைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உதவியான கால சூசிகையாகப் பயன்படுத்துகின்றனரே அல்லாமல் விரிவான வாழ்க்கை வரலாற்றை அதில் எழுதுவதில்லை. முன்னரெல்லாம் அப்படியல்ல. படித்தவர்கள் தமது அன்றாட அனுபவங்களை மறவாது பதிய வைப்பதற்குத் தினக்குறிப்புப் புத்தகங்களை உபயோகித்தனர். இவ்வாறு அவர்கள் எழுதி வைத்த தினக்குறிப்புகள் பல, பின்னர் நூல்களாகக் கூட வெளியிடப்பட்டிருக்கின்றன. பிரெஞ்சு எழுத்தாளர் அன்ட்ரே கிடேயின் தினக்குறிப்பு நூல் இவற்றில் பிரசித்தமான ஒன்று.

ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவன் தனது தினக்குறிப்புப் புத்தகத்தை விரிவான வாழ்க்கை வரலாறு போலவும் எழுதவில்லை. வெறும் கால சூசிகையாகவும் வைக்கவில்லை. இரண்டுங் கெட்ட ஒரு முறையில் அவன் அதை எழுதி வைத்திருந்தான்.இன்னும் அவன் அதை விடாது தொடர்ந்து எழுதவுமில்லை. சில சமயம் பல வாரங்களுக்கு ஒரு குறிப்புமே காணப்படவில்லை. இன்னும் சில சமயங்களில் தொடர்ந்தாற் போல் இரண்டு வாரங்களுக்கு ஒரே உற்சாகமாகக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தான்.

அவன் எழுதியிருந்த குறிப்பில் ஒன்று பின்வருமாறு:

“இன்று பத்மா பரமானந்தர் என்ற பெண்ணை நாடக மன்றக் கூட்டத்தில் சந்தித்தேன். அவள் என்னுடன் நாடக மன்றத்தின் கூட்டுச் செயலாளராகத் தெரியப்பட்டாள். அவளே இவ்வுலகின் பேரழகி. அவளுக்கு என்னைப் பிடித்திருந்தது. இருவரும் பல்கலைக்கழக நூல் நிலையத்துக்கு அருகாமையிலுள்ள நூல்களமைந்த நடைபாதையில் நீண்ட நேரம் உரையாடி நின்றோம். அவள் இளைப்பாறிய ஒரு வாத்தியாரின் மகள். என் தகப்பனார் என்ன தொழில் புரிகிறார் என்று அவள் கேட்டாள். அவரும் இளைப்பாறிய ஒரு வாத்தியாரே என்று புளுகொன்றை அவிழ்த்துவிட்டேன். நான், அவளிடம் இவ்வாறு பொய் சொல்லாமல் நான் கோடீஸ்வரர் சிவநேசரின் மகன் என்று கூறியிருந்தால், நிச்சயம் அவள் மிரண்டு போயிருப்பாள். என்னிடம் பேசவே அஞ்சியிருப்பாள். நான் பெரும் பணக்காரனாயிருப்பது பல்கலைக்கழகத்தில் எனக்கு எவ்வளவு தொல்லையை உண்டு பண்ணுகிறது. ஆண்களும் சரி, பெண்களும் சரி, என்னை மிகவும் கனம் பண்ணவே செய்கிறார்கள். ஆனால் எவருமே என்னிடம் அஞ்சாது மனந்திறந்து பேச வருகிறார்களில்லை. இதனால் நண்பர்களில்லாத காட்டு வாழ்க்கையாக என் வாழ்க்கை கழிகிறது. இந்நிலையைப் போக்கத்தான் நான் பத்மாவுக்குப் பொய் சொன்னேன். ஆனால் இவ்வாறு நான் பொய் சொன்னது சரிதானா?”

இன்னொரு குறிப்பு பல்கலைக்கழக நாடகத்தன்று பத்மா தனது தந்தை பரமானந்தரை ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைத்ததைக் கூறியது. ஆகஸ்ட் 14ந் திகதியன்று எழுதப்பட்ட குறிப்பில், “இன்று என் கண்மணி பத்மாவின் பிறந்த தினம்.” என்று கூறப்பட்டிருந்தது.

இவ்வாறு பல தகவல்கள் குறிப்புகளில் காணப்பட்டமை, சுசீலாவுக்குத் தன் நாடகத்தைத் திருப்திகரமாக ஆடுவதற்கு உதவியதென்றாலும் அவற்றில் சில அவளது பெண்மையுணர்ச்சியைக் கிளறிப் பொறாமையையும் கோபத்தையும் அவளிடம் தோற்றுவிக்கவும் செய்தன. நீச்சல் ராணிப் போட்டியைப் பற்றி எழுதும் போது பத்மாவின் தொடைகளைச் சிற்றெறும்புகள் கடித்த விவரத்தையும் தான் அத்தழும்புகளைத் தடவிவிட்டதையும் வேடிக்கையாக எழுதியிருந்தான் ஸ்ரீதர். அதை வாசித்ததும் தினக்குறிப்புப் புத்தகத்தைக் கிழித்தெறிந்துவிடலாமா என்று கொதிப்படைந்தாள் அவள். தன் கண்களை அல்லது காதுகளை உண்மையில் நேசிக்கும் எந்தப் பெண்ணால்தான், அவளை இன்னொரு பெண் தீண்டுவதைப் பொறுக்க முடியும்? உண்மையில் அப்பொழுது பத்மா மட்டும் பக்கத்திலிருந்தால் அவளைக் கைகளால் பிறாண்டி விரட்டிவிட்டிருப்பாள் சுசீலா. அத்தகைய கொந்தளிப்பு அவளையறியாமலே சுசீலாவுக்கு ஏற்பட்டுவிட்டது. சிற்றெறும்புகள் அவளைக் கடித்தது போதாது, பூரானும் சிலந்திப் பூச்சியும் கூட பத்மாவுக்குக் கடித்திருக்க வேண்டுமென்று சிந்தித்தாள் அவள். “போயும் போயும் நல்ல பெண்ணிடம் போய் அவர் இவ்வளவு அன்பைக் காட்டுகிறார். கண் பார்வை குன்றியதும் குருடனுக்கு மனைவியாக மாட்டேன் என்று கூறிய கல் நெஞ்சுக்காரப் பெண்ணுக்கல்லவா அவர் இவ்வளவு அன்பைக் காட்டியிருக்கிறார். வேறு வேலையில்லாமல் தழும்பைத் தடவி விட்டாராம் அவர். கொள்ளிக்கட்டையால் சுட்டிருக்க வேண்டும் அவளை.” என்று அர்த்தமில்லாமல் தன்னுள் தான் சீறிய அவள் திடீரெனக் கன்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டாள்.

சுசீலா ஸ்ரீதரைக் கல்யாணத்துக்கு முன் காதலிக்கவில்லை என்பது உண்மையேயாயினும், வெறும் இரக்க உணர்ச்சி , பெண்மையிடத்துலுள்ள தாய்மையிற் பிறந்த அனுதாப உணர்ச்சி மட்டுமே அப்பொழுது அவள் உள்ளத்தில் அலை மோதியது என்பது உண்மையேயாயினும், முதலிரவின் நெஞ்சுறவின் பின்னர் அவள் இதயம் முற்றாகத் திறந்து அவனை அங்கே சிறையிட்டு வைத்துவிட்டது. இனி அவனை யாரும் தொடவிடேன். அவன் என் சொத்து, அவன் சொன்னது போல் ஏழேழு ஜென்மத்துக்கும் அதற்கப்பாலும் ஊழிவரையும், ஊழிக்குப் பின்னாலும் கூட அவன் எனக்கே உரியவன். அவனை வேறு எவளாவது தொட வந்தால் உடனே அவளைச் சுட்டுச் சாம்பலாக்கி விட்டே மறு வேலை பார்ப்பேன் என்ற ரீதியில் அவள் எண்ணக்கோவை ஒரு சங்கிலித் தொடர் போல் வளர்ந்துவிட்டது. “ஸ்ரீதர், கண்தான் மயங்கியிருக்கிறதே தவிர, இனிமை கலந்த அன்புப் பேச்சிலேயும் இதர கவர்ச்சிப் பண்புகளிலேயும் இப்படிப்பட்ட ஆண் மகன் எங்கே இருக்கிறான்? இப்படிப்பட்டவன் என் கணவனாகக் கிடைக்க எங்கள் புண்ணியாக செய்தேன்?” என்பது போன்ற நினைவுகள் அவள் மனதை மயக்க வைத்தன. இருந்தாலும் அவள் உள்ளத்தில் பெரும் ஏக்கம் ஒன்றும் ஏற்படவே செய்தது. “நான் தான் அவரைக் காதலிக்கிறேன். அவர் என்னைக் காதலிக்கவில்லை” என்பதே அது. “அவர் என்னை அதாவது சுசீலாவைக் கல்யாணம் செய்யவில்லை. பத்மாவைத்தான் திருமணம் செய்திருக்கிறார். என்ன அநியாயம்? அவரை வெறுத்தொதுக்கிய பெண்ணுக்காக அவருள்ளம் உருகுகிறது. எனக்காக அல்ல.” என்று வெதும்பினாள் அவள். ஒவ்வொரு தடவையும் ஸ்ரீதர் சுசீலாவை நோக்கிப் பத்மா என்றழைத்தபோது அவள் இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு சுக்கு நூறாகப் பிளப்பது போலிருந்தது அவளுக்கு. போதாதற்கு மோகனாவின் “பத்மா, பத்மா” என்ற கூச்சல் வேறு வீடு முழுவதையும் நிறைந்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்கும் போதெல்லாம் சுசீலாவுக்கு அதன் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாமா என்று கூடத் தோன்றும். ஆனால் இயற்கையிலேயே உயிரினங்கள் மீது அன்பும் இரக்கமும் கொண்ட அவள் அடுத்த விநாடியே மனதை மாற்றிக் கொண்டுவிடுவாள். “இந்த உலகத்தில் ஒருவனுக்குத் தன் பெயரை விட இனிமையான சொல் வேறில்லை.” என்பார்கள். ஆனால் சுசீலாவைப் பொறுத்த வரையில் அவள் தன் பெயரை முற்றாக இழந்துவிட்டாள். ஒருவன் பெயர் இன்னொருவருக்கு வெறும் சொல்லாக மட்டும், ஓர் இடுகுறியாக மட்டும் காட்சியளிக்கலாம் ஆனால் அவனுக்கோ அது அவனது உள்ளுணர்வில் கலந்த உயிர்ப்பொருளுக்குச் சமானமாயிருக்கிறது. அந்த உயிரை இழந்து, ஒரு வேதனை நிறைந்த வெறுமை நிலையிலிருந்தாள் சுசீலா.

ஸ்ரீதரின் பொருள்களைத் துருவி ஆராய்ந்து சுசீலாவின் கைக்கு அகப்பட்ட இன்னொரு பொருள் பத்மாவின் நீச்சலுடைப் படம். “இது தான் பத்மாவாக இருக்க வேண்டும். நீச்சலுடையில் அவளைக் கடற்கரையில் படமெழுதியதாகத் தினக்குறிப்பிலே எழுதியிருக்கிறாரல்லவா? அப்படம் இதுவாகத் தானிருக்க வேண்டும்.” என்று எண்ணிய அவள் அப்படத்தை ஒரு நிமிட நேரம் உற்றுப் பார்த்துவிட்டுத் தன்னை அறியாமலே அதன்மீது காறித் துப்பிவிட்டாள். “இந்தக் கொடியவளை நினைத்தல்லவா அவர் இன்னும் உருகிக் கொண்டிருக்கிறார்? அவள் பெயரைச் சொல்லியல்லவா என்னை அழைக்கிறார்?” என்ற நினைவு அவள் உள்ளத்தில் ஏற்படுத்திய எரிச்சலுக்கு அளவே இல்லை. “இந்தப் படத்தை என் கண்கள் இனி காணக் கூடாது” என்று எண்ணிய அவள் அப்படத்தை அமராவதி மாளிகையின் அதிக புழக்கமில்லாத ஓர் அறைக்குள் கொண்டு போய்ப் போட்டாள். “சனியன், நீ இனி இங்கேயே கிட” என்று படத்துடன் பேசினாள் அவள்.

இவ்வாறு அவள் இடையிடையே உணர்ச்சிவசப்பட்டாளாயினும் நாடகத்தை ஒழுங்காக நடிப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாகவே இருந்தாள்.

நாடக நடிகை இவ்விதம் தன்னைப் பலவாற்றாலும் சிறப்பாகத் தயார் செய்து கொண்டிருக்க, நாடக அரங்க நிர்வாகத்தைத் திறம்பட நடத்தும் வேலையில் சிவநேசர் தன் புலனைச் செலுத்தி வந்தார்.

ஸ்ரீதர் – சுசீலா திருமணம் முடிந்ததும் சிவநேசருக்கு ஏற்பட்ட முதலாவது அச்சம் வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் எல்லோருக்கும் நன்னித்தம்பியின் மகள் சுசீலாவை ஏற்கனவே நன்கு தெரியுமாதலால், அவர்கள் மூலம் சில சமயம் ஸ்ரீதர், தங்கள் ஆள் மாறாட்ட நாடகத்தைத் தெரிந்து கொள்ளக் கூடும் என்பதாகும். இதனைத் தவிர்க்க, இரு வழிகளே இருந்தன. ஒன்று விஷயத்தை வெளிப்படையாகவே வேலைக்காரர்களிடம் பேசி அவர்களுக்கு அதைப் பற்றி மூச்சுவிடக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போடுவது. மற்றது, வேலைக்காரர்களை வேலையிலிருந்து நீக்கிப் புதிய வேலைக்காரர்களை நியமித்துவிடுவது. இதில் இரண்டாவது வழியையே பின்பற்றுவது என்று சிவநேசர் முடிவு செய்தார்.

‘அமராவதி’ வளவில் வாசக் காவலாளி தொடக்கம், வீட்டு வேலைக்காரி தெய்வானை ஈறாக மொத்தம் பதினாறு வேலைக்காரர்கள் இருந்தார்கள். ஸ்ரீதரின் திருமணம் முடிந்த அடுத்த நாளே அவர்கள் எல்லோரையும் வெவ்வேறு இடங்களுக்கு வேலை மாற்றம் செய்தார் சிவநேசர். ஒரு சிலர் கிளி நொச்சியிலிருந்த அவரது விவசாயப் பண்ணைக்கும், மற்றும் சிலர் களுத்துறையிலிருந்த ரப்பர்த் தோட்டத்துக்கும் அனுப்பப்பட்டனர். சிலர் சிலாபத்திலும் நீர்கொழும்பிலுமிருந்த அவரது தென்னந்தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். தெய்வானை சுந்தரேஸ்வரர் கோவில் கணக்கப்பிள்ளை வீட்டில் தங்கியிருந்து கோவில் வளவைச் சுத்தம் செய்யும் வேலைக்கு அனுப்பப்பட்டாள்.

இவ்வாறு இவர்கள் அனுப்பப்பட்டதால் ஏற்பட்ட காலி ஸ்தானங்களை நிரப்ப, களுத்துறை ரப்பர்த் தோட்டத்திலிருந்தும், சிங்களத் தொழிலாளர் பலர் அமராவதிக்குக் கொண்டு வரப்பட்டனர். தெய்வானைக்குப் பதிலாக குசுமா என்னும் சிங்களப் பெண் வீட்டு வேலைக்காரியாக நியமிக்கப்பட்டாள். இந்த ஏற்பாடுகள் யாவும் சேர்ந்து ஆள் மாறாட்ட நாடகம் திறம்பட நடப்பதை உறுதி செய்தன. போதாதற்கு மாளிகை வாசலின் காவலும் முன்னிலும் அதிகமாகப் பலப்படுத்தப்பட்டது. மிகவும் அவசியமானவர்கள் மட்டுமே வீட்டுக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள். சின்னைய பாரதியாரைப் பொறுத்தவரையில் அவர் மட்டும் மாளிகைக்கு வர அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மனைவி, பிள்ளைகள் அடிக்கடி அமராவதிக்கு வருவது நிறுத்தப்பட்டது.

பாவம், ஸ்ரீதரோ தன்னை ஏமாற்ற நடந்த இந்த முயற்சிகள் எதையும் அறியமாட்டான். அவனைப் பொறுத்த வரையில் கபோதியாய் இருந்தாலும் தன்னை போன்ற அதிர்ஷ்டசாலி இவ்வுலகில் வேறு யாரும் இல்லை என்றே அவன் நம்பினான். என்றும் எப்பொழுதும் ஒரு கனவுலகிலே, எல்லையற்ற இன்பத்தின் மடியிலே அவன் புரண்டு கொண்டிருந்தான். இரவு பகல் என்று பாராது தன் அன்புப் ‘பத்மா’வைத் தன் அருகில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பதே அவன் பொழுது போக்காயிற்று. பத்மா இருக்கும் போது எனக்கு வேறென்ன குறை என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான் அவன்.

சுசீலாவைப் பொறுத்த வரையில் தனது பாகத்தை மிகவும் கவனமாக நடித்து வந்தாள். அவனுக்குத் தன் கையால் முட்டைக் கோப்பி தயாரித்துக் கொடுப்பாள். பின்னர் ஸ்நான அறைக்கு அவனை அழைத்துச் சென்று அவனைக் குளிப்பாட்டுவாள். முன்பெல்லாம், சிவநேசருக்கு முகச் சவரம் செய்பவரும் சவரத் தொழிலாளி ஒருவன் ஸ்ரீதருக்கும் சவரம் செய்துவிடுவது வழக்கம். சுசீலா வந்த பிறகு இதை அவள் நிறுத்தி விட்டாள். ‘சேப்டி ரேசரா’ல் தானே தன் கையால் ஸ்ரீதருக்குச் சவரம் செய்துவிடப் பழகிக் கொண்டாள் அவள். இவ்விதம் அவள் சவரம் செய்ய ஆரம்பித்தது இருவருக்கும் நல்ல வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருந்தது. இவை முடிந்ததும் அவனுக்கு நல்ல ஆடைகளை உடுக்கத் தருவாள். பக்கத்திலிருந்து அவனுக்குப் பிரியமான உணவுகளை உண்ணக் கொடுப்பாள். பின் காலைப் பத்திரிகைகளை வாசித்துக் காட்டுவாள். அவன் விரும்பினால் ‘ரேடியோ’ வைப்பாள். ரேடியோகிராமில் இசைத் தட்டுகளைப் போடுவாள். வளவில் அவனை அங்குமிங்கும் அழைத்துச் சென்று பொழுது போக உதவுவாள். புத்தகங்களை வாசித்துக் காட்டுவாள். வேடிக்கைக் கதைகள் சொல்லுவாள். சில சமயங்களில் பாட்டுகள் பாடி அவனை மகிழ்விப்பாள். இவற்றை எல்லாம் அவள் உற்சாகமாகவே செய்த போதிலும், சுசீலா என்பதற்குப் பதிலாக ஸ்ரீதர் அவளை பத்மா என்றழைத்தபோது மட்டும் அவள் உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டது. ஆனால் அந்த வேதனையை எவ்விதமும் வெளிக் காட்டாமல் ஸ்ரீதருக்கு மகிழ்ச்சி தருவதிலேயே அக்கறையாக இருந்தாள் அவள்.

ஸ்ரீதர் சுசீலாவைப் பத்மாவென்று பொதுவாக அழைத்த போதிலும் இடையிடையே டார்லிங், இராசாத்தி, என் கண்ணே, கிளியே என்றெல்லாம் அழைப்பான். இவ்விதம் அவள் அழைக்கும் போது சுசீலாவின் மனம் மகிழும். ஒரு நாள் அவள் ஸ்ரீதரிடம் ” நீங்கள் என்னைப் பத்மா என்றழைக்க வேண்டாம். வேறு பெயர் சொல்லி அழையுங்கள்.” என்றாள்.

“ஏன்? பத்மா என்ற பெயர் அழகாயில்லையா? எவ்வளவு அழகான பெயர் அது?” என்றாள் ஸ்ரீதர்.

“ஆனால் அதைவிட அழகான பெயர்கள் எத்தனையோ இருக்கின்றனவே உலகில்” என்றாள் சுசீலா.

“ஒன்றைச் சொல்லு” என்றான் ஸ்ரீதர்.

சுசீலா சிறிது நேரம் பேசாதிருந்துவிட்டு, ” நான் உங்களை இராசா என்றழைக்கிறேன். நீங்கள் என்னை இராசாத்தி என்று அழையுங்கள்” என்றாள். “சரி இராசாத்தி, அப்படியே அழைக்கிறேன்.” என்றான் ஸ்ரீதர் சிரித்துக் கொண்டு. தன் அன்புக் கணவனின் இதயத்துக்குத் தன்னோடு போட்டியிட்ட சக்களத்தியான பத்மா என்ற சொல் தன் காதில் அடிக்கடி விழாது போனால் அது போதும் என்பதே அவள் கருத்து. ஆனாலும் ஸ்ரீதர் இரண்டு முறை அவளை இராசாத்தி என்று அழைத்தால் மூன்றாம் முறை அவளைப் பத்மா என்றழைக்கவே செய்தான்.

ஆள் மாறாட்ட நாடகத்தை எவ்வித பிடியுமின்றி முற்றும் வெற்றிகரமான ஒரு நாடகமாக நடத்திவிட வேண்டுமென்பதே சிவநேசரின் திட்டம். ஆகவே அதற்குத் தடையாக இருந்த சகல விஷயங்களையும் வெட்டிச் சாய்த்து வந்தார் அவர்.

ஸ்ரீதர் சில சமயங்களில் பரமானந்தரின் சுகத்தைப் பற்றி விசாரிப்பாள். “பத்மா, அவரை அமராவதியில் வந்திருக்கும்படி சொல்வதுதானே.” என்று அவன் இடையிடையே சுசீலாவிடம் கூறுவது வழக்கம். அவள் இது பற்றிப் பாக்கியத்திடம் சொன்னாள். பாக்கியம் அதைச் சிவநேசரிடம் எடுத்துக் கூறவே, சிவநேசர் இப்பிரச்சினையை ஒரே திரியாக முடித்துக் கட்டிவிட ஒரு திட்டம் தீட்டிவிட்டார்.

ஒரு நாள் அவர் ஸ்ரீதரிடம் “கொழும்பிலிருந்து டெலிபோன் செய்தி வந்திருக்கிறது. பரமானந்தர் திடீரென மாரடைப்பால் செத்துவிட்டாராம். பத்மாவும் நாங்களும் போய் வருகிறோம். நன்னித்தம்பியும் மனைவியும் இங்கு உன் தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள்” என்று கூறிப் ‘பத்மா’வையும் பாக்கியத்தையும் அழைத்துக் கொண்டு கொழும்பு ‘கிஷ்கிந்தா’வுக்குப் புறப்பட்டுவிட்டார். இரண்டு நாட் கழித்து அவர் ‘அமராவதி’ மீண்ட போது பரமானந்தர் பிரச்சினை மீண்டும் தலை எடுக்காதபடி முற்றாகத் தீர்ந்துவிட்டது.

கொழும்பிலிருந்து மீண்ட சுசீலாவிடம் ஸ்ரீதர், “பத்மா, அப்பா இறந்தது உனக்குப் பெரிய கவலையாயிருக்குமே, என் செய்வது. நாடகக் கலையில் அவர் போல் ஆர்வம் கொண்ட வேறு கிழவர் எவரையும் நான் பார்த்ததில்லை.” என்றான்.

சுசீலா உண்மையில் அப்பாவை இழந்தவள் போலவே நடிக்க வேண்டியதாயிற்று. கண்ணுக்கு முன்பே தந்தை நன்னித்தம்பியர் சுறுசுறுப்போடு நடமாடிக் கொண்டிருக்க, தந்தையை இழந்தவள் போல நடிப்பது அவளுக்கு இலேசாக இருக்கவில்லை. “அப்பா இறந்துவிட்டார்” என்று சொல்லும் ஒவ்வொரு தடவையும் அப்பா “நீண்ட நாள் வாழ வேண்டும்” என்று தனக்குள் தானே தெய்வங்களை வேண்டிக் கொண்டாள் அவள்.

பாக்கியத்தைப் பொறுத்தவரையில் தன் மகனைப் பல்வேறு பொய்களால் ஏமாற்ற வேண்டியிருக்கிறது என்பது அவளுக்கு அதிக துக்கத்தைத் தரவே செய்ததாயினும் இது சம்பந்தமாக வள்ளுவரின் குறளொன்று அவள் துக்கத்தை ஓரளவு குறைத்தது. வள்ளுவர் “பொய்மையும் வாய்மை உடைத்தே புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்” (குற்றமற்ற நன்மையைத் தருமாயின் பொய்யும் சத்தியத் தன்மை கொண்டதேயாகும்) என்று கூறியிருப்பதை அவள் இடையிடையே நினைவுபடுத்திக் கொண்டாள். சிவநேசரும் தானும் சுசீலாவுமாகச் சேர்ந்து அவ்வீட்டில் நடத்திக் கொண்டிருந்த நாடகம் பொய்மை நிறைந்ததேயாயினும், அபாக்கியவானான ஓர் இளைஞனுக்கு அதனால் இன்ப வாழ்வு சித்தித்தது சிறப்பல்லவா என்று அவள் தன்னைத் தானே தேற்றிக் கொள்வது வழக்கம்.

இந்த ஆள் மாறாட்ட நாடகத்தால் சுசீலாவுக்கு ஏற்பட்ட சோதனைகளோ பல. உதாரணமாக ஸ்ரீதரும் சுசீலாவும் மேல் மாடியில் ஊஞ்சற் பலகையில் ஒரு நாள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, தந்தை நன்னித்தம்பியரும் தாய் செல்லம்மாவும் அங்கு வந்தனர். ஆளரவம் கேட்ட ஸ்ரீதர் “இராசாத்தி, அது யார்?” என்று கேட்டான்.

சுசீலா திடுக்கிட்டு விட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வாய் தவறி “அப்பாவும் அம்மாவும்” என்று சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? “அப்பாவா? அப்பா பரமானந்தர் தான் செத்துவிட்டாரே? அம்மாதான் உனக்கில்லையே?” என்று ஸ்ரீதர் கூறியிருப்பானல்லவா? அதன் பயனாக நாடகமே முற்றாக வெளிப்பட்டிருக்கவும் கூடும். ஆகவே எப்படியோ தன் வாயை அடக்கிக் கொண்டு, “நன்னித்தம்பியரும் பெண்சாதியும்” என்று கூறினாள் அவள். பெற்ற தாயையும் தந்தையையும் கூடத் தாய் தந்தையர் என்று கூற முடியாத நிலை. சொந்த அப்பாவையும் அம்மாவையும் கூட பிறத்தியாரைப் போல் பேர் சொல்லி அழைக்க வேண்டியிருக்கிறதே என்றெண்ணியதும் அவள் நெஞ்சம் பட்ட வேதனையைக் கூற முடியாது.

தன் கணவனின் சுகத்துக்காகத் தன்னைத் தானே இவ்வாறு அழித்துக் கொண்டு வாழ்ந்தாள் சுசீலா. அவள் தன் பெயரை மட்டுமா இழந்தாள். பெற்றோரையுமல்லவா இழந்து விட்டாள்.

ஸ்ரீதருக்குத் தனது திருமணத்தை விமரிசையாகச் செய்ய முடியாது போய் விட்டதே என்பதும், ‘கிஷ்கிந்தா’வில் கனவு கண்ட மாதிரித் தனது நண்பன் சுரேஷ் தனது கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியாது போய் விட்டதே என்பதும் பெரும் கவலையைத் தந்து வந்த விஷயங்களாகும். இருந்தாலும் என்ன செய்வது, சற்றும் நினையாத மாதிரிச் சந்தர்ப்ப சூழல்கள் மாறிப் போய் விட்டதால் ஏற்பட்ட விளைவுகள் இவையென்று அவன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

இருந்தாலும் திடீரெனச் சுரேஷின் நினைவு வந்ததும் ஒரு வேலைக்காரனின் துணையோடு யாருமறியாமல் சுரேசுக்கு ஒரு கடிதத்தை எழுதிப் போட்டுவிட்டான் ஸ்ரீதர். பெரிய காகிதங்களில் கொட்டை எழுத்துகளில் எழுதிய அக்கடிதத்தை அவன் தன் ‘பத்மா’வுக்குக் காட்ட விரும்பவில்லை. கடிதத்தில் பத்மாவை வானளாவப் புகழ்ந்திருந்ததால் நிச்சயம் ‘பத்மா’ அதை வெட்கத்தின் காரணமாகத் தபாலில் சேர்க்க மறுத்திருப்பாள் என்று அவன் அஞ்சியதே அதற்குக் காரணம்.

இக்கடிதத்தில் ஸ்ரீதர் தானே இவ்வுலகின் பெரிய அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டிருந்தான். “இல்லா விட்டால் நான் குருடனாகிய பிறகும் பத்மா என்னை மணமுடிக்கச் சம்மதித்திருப்பாளா?” என்று அவன் கேட்டிருந்தான். ‘பத்மா’ போன்ற ஒரு பெண் இப்படி ஒரு குருடனைத் திருமணம் செய்த வரலாற்றை நான் கதைகளில் கூடப் படித்ததில்லை. ஆகவே அவளை ஓர் உத்தமி என்றும், தெய்வப் பெண்ணென்றும் நான் கொண்டாடுவதில் தப்பில்லையல்லவா? சுரேஷ், நீ ‘அமராவதி’க்கு வந்தால் பத்மாவின் பெருமையை நேரே காண்பாய். கண்ணற்ற எனக்குக் கண்ணக விளங்குகிறாள் அவள்.” என்று அவன் எழுதியிருந்தான்.

இதற்குச் சுரேஷ் விமானத் தபால் மூலம் அனுப்பிய பதில் பத்து நாட்களில் வந்து சேர்ந்துவிட்டது. அதைச் சுசீலாவிடம் கொடுத்து வாசிக்கும் படி சொன்னான் ஸ்ரீதர். சுசீலா வாசித்தான்:

என் அன்பு நண்பா ஸ்ரீதர்,

உண்மைதான். நீ அதிர்ஷ்டசாலியே. உன் கண்கள் பார்வை இழந்ததை அறிந்தும் உன்னைத் திருமணம் செய்த பத்மாவை எவ்வளவும் பாராட்டலாம். அவளை நீ உன் வாழ்வின் தெய்வமென்கிறாய். நான் அதை மறுக்கமாட்டேன். நீ சகல சம்பத்தும் பெற்று வாழ வேண்டுமென்பதே என் நினைவு. நான் இலங்கை வந்ததும் உன்னைக் காண அமராவதிக்கு ஓடி வருவேன். பிற பின்.

இப்படிக்கு, சுரேஷ்.

இக்கடிதத்தை வாசித்துக் காட்டிய சுசீலாவுக்குத் தாங்கொணாத கொந்தளிப்பு உள்ளத்தில் ஏற்பட்டது. பத்மா, பத்மா, பத்மா – தன்னை உயிரிலும் மேலாக நேசித்த காதலனை, கண் பார்வை குன்றியதென்பதற்காக ஒரேயடியாகக் கைவிட்டுவிட்ட கேடு கெட்ட பெண் தெய்வப் பெண்ணாகப் போற்றப்படும் இவ்விசித்திரத்தை என்னென்பது? இதை யாருக்குச் சொல்வது? கொடுமை செய்த பத்மா போற்றப்படுகிறாள். ஆனால் சுசீலாவோ? அவள் பெயரே உலகிலிருந்து மறைந்து விட்டது. ஆம், ஸ்ரீதருடைய உள்ளக் கோவிலின் மூலஸ்தானத்தில் பத்மா வீற்றிருக்க, சுசீலாவுக்கோ அக்கோவிலின் பிரகாரங்களில் கூட இடமில்லாது போய்விட்டது.

பல்லைக் கடித்துக் கொண்டு நாத் தளு தளுக்கக் கடிதத்தை வாசித்த சுசீலாவிடம் ஸ்ரீதர் “பார்த்தாயா சுரேஷின் கடிதத்தை. அவனும் என்னைப் போலவே உன்னை ஒரு தெய்வ மகளாகக் கொண்டாடுகிறான்” என்றான். சுசீலா என்ன சொல்லுவாள்?

ஒரு நாள் சுசீலா ஸ்ரீதரிடம் ஏதோ ஒரு திடீர் நினைப்பிலே “உங்களுக்கு நன்னித்தம்பியர் மகள் சுசீலாவைத் தெரியுமா?” என்று கேட்டான்.

“ஆம் தெரியும்” என்று தலையை ஆட்டிய ஸ்ரீதர் “ஏன் நீ அவளைச் சந்தித்தாயா?” என்று ஒரு கேள்வியையும் கேட்டு வைத்தான்.

பேதையான சுசீலா “ஆம், நேற்றுச் சந்தித்தேன். அவளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.” என்று கேட்டாள். ஸ்ரீதர் சுசீலாவைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்ல மாட்டானா என்ற உள்ளத்தின் ஏக்கத்திலேயே அவள் அக்கேள்வியைக் கேட்டாள்.

ஆனால் ஸ்ரீதரோ “சுசீலாவைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது? நான் என் பத்மாவைத் தவிர வேறு பெண்களைப் பற்றி எப்பொழுதுமே எண்ணுவதில்லை இராசாத்தி” என்றான்.

பத்மா! அவள் என்ன சொக்குப் பொடி போட்டாளோ ஸ்ரீதரின் உள்ளத்தை இவ்வளவு தூரம் கவர்ந்துவிடுவதற்கு.

சுசீலாவின் வாழ்க்கையில் இடையிடையே இப்படிப்பட்ட எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த போதிலும், அவற்றைத் தனது திட சங்கல்பத்துக்கு விடப்பட்ட சவாலாகக் கருதி எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு கொண்டிருந்தாள் அவள். “நான் ஸ்ரீதரைத் திருமணம் செய்வதற்குத் திடீர் முடிவு செய்தது எனது சொந்த இன்பத்தைக் கருதியல்லவே. பட்டுப் போன அவரது வாழ்க்கையைத் தளிர்க்க வைப்பதற்குத்தானே. அதில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். அவ்வெற்றியை மேலும் பேணுவதற்கு நான் செய்ய வேண்டிய தியாகங்கள் பல. அவற்றைப் பெரிதுபடுத்தி ஒருபோதும் நான் என் சிந்தையைக் கலங்க விட மாட்டேன்.” என்று தீர்மானித்த அவள் நாளடைவில் எதையும் தாங்கும் நெஞ்சுரத்தைப் பெற்றுவிட்டாள்.

சில சமயங்களில் விசித்திரமான எண்ணங்கள் சிலவும் அவள் உள்ளத்தில் வரும். “பத்மாவோடு பழகுவதற்கு முன் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கேற்பட்டிருந்தால் நிச்சயம் அவர் இன்று பத்மாவை நேசிப்பது போல் என்னை நேசித்திருப்பார். என் பேச்சு அவருக்குப் பிடித்திருக்கிறது. என் பாட்டு அவருக்குப் பிடித்திருக்கிறது. நான் தினசரி அவருக்குச் செய்யும்ப் பணிவிடைகள் அவருக்குப் பிடித்திருக்கின்றன. என் கைகளின் திரட்சி, தோளின் வளைவு, ஏன் பொதுவாக என் அங்க அமைப்பு முழுவதும் அவருக்குப் பிடித்திருக்கிறது. அடிக்கடி அவர் அவற்றை வர்ணிக்கத் தானே செய்கிறார். ஏன் அன்றொரு நாள் “பத்மா, முன்னர் நீ இவ்வளவு மொளு மொளு என்றிருக்க மாட்டாயே. திருமணத்திற்குப் பின் கொழுத்து விட்டாய். நிச்சயம் அது உன் அழகைக் கூட்டியிருக்கும். ஆனால் என்னால்தான் உன்னழகைப் பார்க்க முடியாதே” என்றாரல்லவா? இது எதைக் காட்டுகிறது? தன் நினைவிலுள்ள பத்மாவின் மனச் சித்திரத்தையும் என்னையும் ஒப்பிட்டு நானே பத்மாவிலும் பார்க்க அழகி என்று அவர் கருதுவதைத் தானே? அப்படியானால் இருவரையும் ஒரு சேரக் கண்டிருந்தால் நிச்சயம் என்னைத்தான் அவர் விரும்பியிருப்பார்?” – இத்தகைய எண்ணங்கள் சுசீலாவின் இதயத்தில் ஒருவித திருப்தியைக் கொண்டு வரும்; உள்ளத்தின் சோகம் விஸ்வரூபம் எடுத்து வாழ்க்கையைக் கெடுக்காது தடுக்கும்.

ஸ்ரீதர் – சுசீலா திருமணம் நடந்து பத்து மாதங்கள் கழித்து ஒரு நாள் ‘அமராவதி’ வளவில் பெரிய கொண்டாட்டம். குலத்தை விளங்க வைக்கச் சின்ன ஸ்ரீதரன் ஒருவன் அங்கு வந்துவிட்டதே அதற்குக் காரணம். வீடு ஓரே ஒளிமயமாயிற்று. எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்பட்டது. பிள்ளை பிறப்பதற்கு முன் ஸ்ரீதரை ஓர் அச்சம் மிகுந்திருந்தது. ஆகவே தாய் பாக்கியம் சுசீலாவின் அறையிலிருந்து ஓடி வந்து அவனை உச்சி மோந்து “அடே உனக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கிறான்” என்ற போது “அம்மா, அவன் கண்கள் எப்படியிருக்கின்றன? நன்றாயிருக்கின்றன அல்லவா?” என்று கேட்டான் ஸ்ரீதர்.

“இது என்னடா கேள்வி. அவன் கண்கள் மிகவும் நன்றாயிருக்கின்றன. நீ பிறந்த போது எவ்வளவு அழகாயிருந்தாயோ அதை விட அழகாயிருக்கிறான் அவன்” என்றாள் தாய்.

“ஆனால் அதைத்தான் என்னால் பார்க்க முடியாதே” என்றான் ஸ்ரீதர்.

அதைக் கேட்ட பாக்கியத்தின் கண்கள் கலங்கின.

ஸ்ரீதரின் குருட்டுக் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. அது ஆனந்தக் கண்ணீரா? அவன் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது உண்மையேயாயினும், தன் அழகு மகனைத் தான் பார்க்க முடியாதே என்ற ஏக்கமும் அவன் இதயத்தைப் பிய்க்கவே செய்தது.

– தொடரும்…

– இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ தொடராக வெளிவந்த நாவலிது. 

– மனக்கண் (தொடர் நாவல்), தினகரனில் வெளிவந்தது.

அ.ந.கந்தசாமி (8 ஆகத்து 1924 – 14 பெப்ரவரி 1968) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார்.சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டு இயங்கினார். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். ​​​​பதிவுகள்.காம் அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *