கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 1,643 
 
 

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

19-ம் அத்தியாயம்: குருடன் ஸ்ரீதர்!

“உலகம் என்ன நிறம்” என்று யாராவது இன்னொருவரைக் கேட்டால் அது ஒரு விசித்திரமான கேள்வியாகவே இருக்கும். அது வானவில்லின் ஏழு வர்ணங்களையும், அவற்றின் எண்ணற்ற கலவைகளையும் கொண்டது என்று தான் யாரும் பதில் சொல்லியிருப்பர். பிறவிக் குருடனாயிருந்தால் “நிறமா? நிறமென்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்று பதிலளித்திருப்பான். ஆனால் ஸ்ரீதரின் நிலை வேறு. அவன் நல்ல பார்வையுடன் பிறந்து, நல்ல பார்வையுடன் வளர்ந்து, காட்சிப் புலனின் திறனால் சித்திரக் கலைஞனாகி இரவும் பகலும் வண்ணங்களைப் பற்றிய எண்ணங்களில் தன் மனதை முற்றிலும் பறி கொடுத்து வாழ்ந்தவன். அப்படிப்பட்டவனுக்குக் கட்புலன் போனதும் ஒரே ஒரு நிறத்தைத்தான் அவன் காணக்கூடியதாயிருந்தது. குருடனாலும் காணக் கூடிய அந்நிறம் கறுப்பு நிறம்தான். ஆனால் கறுப்பென்பது ஒரு நிறம்தானா? எல்லோரும் அதை நிறமென்றே நினைத்துக் கொண்டாலும், கறுப்பு உண்மையில் ஒரு நிறமல்ல; நிறமெதுவுமற்ற வர்ண வெறுமையே கறுப்பு என்பர் விஷயம் தெரிந்தவர்கள்.

ஓர் இருட்டுலகத்திலே புகுந்துவிட்டான். விடியாத நிரந்தர இரவொன்று அவனைச் சூழ்ந்தது. அந்தக் கரிய உலகத்திலே வாழ்க்கையின் சகலத்தையுமே இழந்துவிட்டது. போல் அவன் இருதயம் இரத்தக் கண்ணீர் பெருக்க ஆரம்பித்தது. பலமான ஓர் ஆயுதத்தினால் தலையில் மோதினால் மூளையில் ஒரு ஸ்தம்பித நிலைமை ஏற்படுமல்லவா? ஆரம்பத்தில் இருட்டின் மூட்டம் அப்படிப்பட்ட நிலையைத்தான் அவனுக்கு ஏற்படுத்தியது. பல தினங்களாக நீடித்த ஸ்தம்பித நிலைமை சிறிது சிறிதாகத் தளர்சியடைய ஏறக்குறையப் பத்து நாட்கள் வரை ஆகிவிட்டன. இப்பத்து நாட்களும் அவன் அதிகம் பேசக் கூட வில்லை. அம்மாவை எங்கும் அகலவிடாது அவள் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு கட்டிலிலோ ஒரு ஒரு சாய்மணை நாற்காலிலோ உட்கார்ந்திருப்பான். “அம்மா நீ எங்கும் போய்விடாதே. கண்ணற்ற நான் நீயும் போய்விட்டால் என்ன செய்வேன்? நீதான் என் கண், அம்மா, சில பெண்களுக்கும் அம்மாக்கண்ணு என்று பெயர் இருக்கிறதல்லவா? அப்பெயர் உனக்கு நல்ல பொருத்தம். நீ என் அம்மாக் கண்ணு” என்று தாயின் தோள்களைப் பற்றிக் கொண்டு குழந்தை போல் ஏதேதோ பேசினான். தாய்க்கோ பேய் பிடித்தது போன்ற நிலை, எந்நேரமும் அவனுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் சரியாகத் தலை வாரிக் கொள்வது கூட இல்லை. அவன் கேட்கும் கேள்விகள் சில அவள் அடிவயிற்றை எரிய வைத்தன. “அம்மா நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன்? நீ ஏன் என்னைப் பெற்றாய்? அப்பாவைத் திருபதிப்படுத்த என்னால் அமுதாவைக் கல்யாணம் கட்ட முடியவில்லை. நான் திருப்தியடையப் பத்மாவைக் கட்ட முடியவில்லை. யாருக்கும் திருப்தியற்ற வாழ்வு. எனக்கும் இன்பமில்லை, அப்பாவுக்கும் இன்பமில்லை. உனக்கும் கூடத்தான். இவற்றை எல்லாம் பார்த்து நீ எவ்வளவு வேதனைப் படுவாய் என்று எனக்குத் தெரியும். போதாததற்கு கண்ணும் போய்விட்டது. அம்மா என் கண்கள் மீளுமா?” என்று கேட்டான் அவன். பாக்கியம், “ஸ்ரீதர், உன் கண்ணுக்கொன்றுமில்லை. சீக்கிரமே சுகமாகிவிடும் என்று டாகடர் கூறுகிறார்” என்று பதிலளிப்பாள். மகனின் கேள்விகளுக்கு இப்படிப் பொய்யான பதில்களைக் கூறும் போதெல்லாம் அவள் கண்களில் நீர் வழியும். அழுவாள். ஆனால் அது அவன் காதுகளில் வீழ்ந்து விடக் கூடாதென்று சப்தம் போடாது பல்லைக் கடித்துக் கொண்டு மெளனமாக அழுவாள். இருந்தாலும் எப்பொழுதும் தாயோடு நெருங்கி உட்கார்ந்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதருக்கு அவள் அழுகை சில சமயங்களில் தெரியவே செய்தது. அப்படிப்பட்ட நேரங்களில் அவள் கண்களைத் தன் கைகளால் தடவிவிட்டு, “அம்மா, ஏன் அழுகிறாய். அழாதே.” என்று சொல்லிக் குழந்தையின் தலையைத் தடவுவது போல் அம்மாவின் தலையைத் தடவி, தேறுதல் கூறுவான் அவன். அந்த நேரங்களில் “ஐயோ மகனே” என்று தன்னை அறியாமலே கதறி விடுவாள் தாய்.

“அம்மா, நீ ஏன் என்னைப் பெற்றாய்” என்ற கேள்விக்குப் பாக்கியம் “எங்கள் குலம் விளக்கமடைய உன்னைப் பெற்றேன். உன்னை எந்த நேரமும் என் பக்கத்தில் வைத்து விளையாடப் பெற்றேன். நீ என்னோடேயே எந் நேரமும் இரு ஸ்ரீதர்.” என்ற உணர்ச்சிவசமாய் உரைப்பாள்.

“இல்லை, என்னைப் போன்றவர்கள் இவ்வுலகில் பிறந்திருக்கவே கூடாது” என்பான் ஸ்ரீதர்.

ஒரு நாள் “அம்மா, இவ்வுலகில் பணம் இன்பம் தரும் பொருள் என்று சொல்கிறார்களே, அது முழுப் பொய். எனக்குப் பணத்துக்கு ஒரு குறைவுமில்லையே. இருந்தும், வாழ்க்கையில் நான் கண்ட இன்பம் என்ன? அப்பாதானே இந்த இலங்கையிலேயே பெரிய பணக்காரராம் – அப்படியானால் அவரின் ஒரே வாரிசான நான் தானே இந்த நாட்டின் ஆளப் போகிற பெரிய பணக்காரப் பிள்ளை? இருந்தும் நான் விரும்பிய பெண்னை என்னால் மணம் முடிக்க முடியவில்லையே. இப்பொழுது கண்ணும் போய்விட்டது. எனது பணத்தால் இவற்றைத் தடுக்க முடியவில்லை. நான் இப்படிப் பெரிய பணக்கார வீட்டில் பிறக்காமல் பத்மாவைப் போல் ஓர் ஏழை வாத்தியார் வீட்டில் பிறந்திருந்தால் எப்போதோ அவளைக் கல்யாணம் செய்து சந்தோஷமாயிருந்திருப்பேன். இல்லையா அம்மா? மறு பிறப்புப் பற்றிச் சொல்லுகிறார்களல்லவா – அப்படி ஒன்றிருந்தால் நிச்சயம் நான் என் மறு பிறப்பில் ஓர் ஏழை வீட்டில்தான் பிறக்க விரும்புவேன். எங்கள் பெரிய மாளிகையை விட ஏழைகளின் குடிசைகளில்தான் இன்பம் அதிகம். அவர்கள் எங்களைப் போல் போலி அந்தஸ்துக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே நாசமாக்கிக் கொண்டு கஷ்டப்படுவதில்லை. ஆனால் ஒன்று அம்மா. நான் எங்கே பிறந்தாலும் நீதான் என் அம்மாவாக இருக்க வேண்டும். நீ இன்று கூட அப்பாவைப் போல அந்தஸ்து அந்தஸ்து என்று சாகவில்லை. ஆனால் அப்பா கூட பணக்காரராகப் பிறந்ததால் தான் இப்படி இருக்கிறார். ஏழையாகப் பிறந்தால் சரியாகப் போய்விடுவார். அவர் மீது கூட எனக்கு வெறுப்பில்லை. என் மீது அவருக்கு இருக்கும் அன்பைச் சொல்ல முடியாது. என்னம்மா, அப்பாவுக்கு என் மீது அன்புதானே” என்றான்.

பாக்கியம் “அதில் சந்தேகமா? உனக்காக அவர் தன் உயிரையும் கொடுப்பாரடா” என்றாள்.

ஸ்ரீதர் “அவர்தான் என்ன செய்வார்? பணக்காரன் ஏழை என்று பார்க்கும் உலகத்தில் இந்த அந்தஸ்து என்ற பிரச்சினை இருக்கத்தான் இருக்கும். ஆனால் இவ்வுலகில் எல்லோருமே பணக்காரராகவோ ஏழைகளாகவோ இருந்துவிட்டால் பிரச்சினை ஒழிந்துவிடும். பண விஷயத்தில் எல்லோருமே சமமாக இருக்க வேண்டுமென்று சுரேஷ் சொல்லுவான். அவன் அறிவாளி. அவன் சொல்வது சரி போலத்தான் தெரிகிறது” என்றான்.

சில சமயம் குருடனின் அந்தகார உலகைப் பற்றியும் அவன் பேசுவான். “அம்மா மோகனா அழகான கிளி. பளபளக்கும் பஞ்ச வர்ணங்களோடும் அது எவ்வளவு அழகாயிருக்கிறது. ஆனால் இப்பொழுது எனக்கு அதன் வர்ணங்களால் பயனேயில்லை. மோகனா இப்பொழுது எனக்கு ஓர் ஒலியாகிவிட்டது. ஏன், நீயும் கூட அப்படித்தான். உனது சிவந்த கன்னங்களில் ஒரு சுழி இருக்கிறதல்லவா? சுரேஷ் கூட அது மிகவும் அழகாயிருப்பதாகச் சொல்லியிருக்கிறான். ஆனால் அதனால் எனக்கு ஒரு பிரயோசனமுமேயில்லை. மோகனாவைப் போல நீயும் எனக்கு ஒலிதான். மனதுக்கு ஆறுதல் தரும் இன்ப ஒலி. ஆனால் நீ சமீபத்தில் வந்திருக்கும்போது உன்னுடலில் இருந்தும் உன் கூந்தல் தைலத்திலிருக்கும் மணமும் வீசுகிறது. அதனால் நீ ஒலியோடு மணமுமாகிவிட்டாய். ஆமம்மா எனக்கு உலகமே ஒலியாகவும் மணமாகவும்தான் தெரிகிறது.” என்பான்.

சில சமயம் அந்தகர்களைப் பற்றிய பெரும் கவிஞர்களின் கவிதைகள் அவன் நினவுக்கு வரும். அவற்றை அம்மாவுக்குச் சொல்லிக் காட்டுவான். முக்கியமாக இடையிலே குருடாகிய ஆங்கிலக் கவிஞர் மில்டனின் கவிதைகளை அவன் அடிக்கடி சொல்ல ஆரம்பித்தான்.

ஆண்டுதோறும் பருவங்கள்
அழையாதிங்கே ஓடி வரும்
ஈண்டிவ்விதமாம் மாற்றங்கள்

பகலுமில்லை இரவுமிலை
படுவான் எழுவான் காட்சியிலை
திகழும் மலரின் அழகில்லை
தெரியும் வசந்தக் காட்சியிலை

ஆடு மாடு மந்தைகளில்
அழகும் காணேன் – மனிதர்களின்
பீடு மிக்க முகங்காணேன்
பெருகும் இருளில்
வீற்றிருந்தேன்.

அறிவுப் புலனின் கதவொன்று
அடியோ டடைத்து முடிற்றே!
துருவிப் பார்க்கும் என் கண்கள்
தூர்ந்தே பார்வை மறந்தனவே.

சில சமயங்களில் அவன் அம்மாவிடம் இது பகலா இரவா? என்று கேட்பான். கேட்டுவிட்டு

“நண்பகலின் பேரொளியில்
நானிருட்டில் வாழுகிறேன்
சூரியனை ராகுவிங்கு
சூழ்ந்ததுவே ஆனால் அச்
சூரியர்க்கு மீட்சியுண்டு
சுடர் விழிக்கோ மீட்சியிலை
நித்தியமாம் கிரகணமென்
நேத்திரத்தைப் பிடித்ததுவே”

என்று பாடுவான்.

ஸ்ரீதர் கண்கள் மங்கிவிட்ட போதிலும் அதிலிருந்த நோவும் வலியும் டாக்டர் நெல்சனின் சிகிச்சையின் கீழ் இப்பொழுது முற்றாக மறைந்துவிட்டன. ஆகவே அவன் தான் ஒரு குருடன் என்பதை முற்றாகத் தன் மனதிலே ஏற்றுக் கொண்டு, தன்னை உலகின் பிரசித்தி பெற்ற குருடர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவானான். “துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன் ஒரு குருடன். மாளவ தேசத்துச் சத்தியவானின் தந்தை ஒரு குருடன். தேபேஸ் மன்னன் ஈடிப்பஸ் ஒரு குருடன். ஏன், எங்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாடிகூடக் குருடனென்றுதானே சொல்கிறார்கள். ஆங்கிலப் பெரும் கவிஞன் மிலடன் ஒரு குருடன். அசோக மன்னனின் ஒரு மைந்தன் கூடக் குருடனாம்.” இப்படி ஏதேதோ சொல்லிக் கொண்டே போனான் அவன். சில வேளைகளில் “அம்மா, இனி என்னைப் பார்ப்பவர்கள், ‘அதோ ஸ்ரீதர் போகிறான்’ என்று சொல்ல மாட்டார்கள். ‘குருடன் போகிறான்’ என்று தான் சொல்வார்கள்” என்று கூறிச் சிரித்தான். நோவுகள் மறையச் சிரிப்புச் சிறிது சிறிதாக மீண்டது. பகடிப் பேச்சுகளும் மீள ஆரம்பித்தன. ஆனால் நான் முழுவதும் சிரிக்கும் அவனது முன்னைய போக்கு மீளவில்லை. இடையிடையே வேதனையுடன் சேர்ந்து வெளிப்பட்டன இப்புதிய வேடிக்கைப் பேச்சுகள்.

பொழுது போவதற்குப் புத்தகங்கள் படிக்க முடியாத நிலை. சித்திரம் தீட்ட முடியாத நிலை. நாடகம் நடிக்க முடியாத நிலை. சினிமா பார்க்க முடியாத நிலை. கவலையின்றித் தனியே ஊர் சுற்ற முடியாத நிலை. இந்நிலையில் புதிய பொழுது போக்குடன் தேவைப்பட்டன. இசைத்தட்டுகளும் வானொலி நிகழ்ச்சிகளும் அதற்குதவின. சிவநேசர் பட்டணத்துக்குப் போகும் போதெல்லாம் புதிய இசைத்தட்டுகளைத் தேடி வாங்கி வருவார். அவன் அறைக்குள் போய் “ரேடியோகிராமில்” தாமே இசைத்தட்டைக் கழுவி, ஊசியையும் அதன் மீது வைத்துவிடுவார் அவர். “அப்பாவா, நல்ல பாட்டு” என்பான் அவன். சிவநேசர் ஒன்றும் பேசமாட்டார். கண்கள் கலங்க வெளியே போவார். அதிமனிதர் அவ்வேளைகளில் சாதாரண மனிதராகிவிடுவார்.

ஒரு நாள் தந்தை சிவநேசரிடம் ஸ்ரீதர் “அப்பா என் கண்களுக்குச் சந்திர சிகிச்சை செய்தாலென்னா? சில பேருக்குச் சந்திர சிகிச்சையால் பார்வை மீண்டதாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.”

சிவநேசர் அதற்கு “உனது கண்னில் ஏற்பட்டுள்ள நோய் நரம்புகளோடு சம்பந்தமானதாம். சந்திர சிகிச்சை உயிருக்கே ஆபத்து உண்டாக்கலாமென்று டாக்டர் நெல்சன் கூறுகிறார். இந்த நோய் மிகவும் அரிதாகவே ஏற்படுமாம். ஆகவே சந்திர சிகிச்சை செய்ய அவர் அஞ்சுகிறார் ஸ்ரீதர்” என்றார்.

“மேல் நாடுகளில் இதற்குச் சிகிச்சை இருக்கக் கூடுமல்லவா?” என்றான் ஸ்ரீதர்.

“அங்கும் இந்த நிலைதானாம். சந்திர சிகிச்சை பற்றி உத்தரவாதம் கொடுக்க முடியாதென்கிறார். சில சமயம் உயிருக்கே ஆபத்து விளையலாம் என்று அவர் தெளிவாகக் கூறும்போது நாம் எப்படி அதற்குச் சம்மதிக்க முடியும்?” என்றார் சிவநேசர்.

“அப்படியானால் குருடனாயிருக்க வேண்டுமென்பது தான் என் தலை விதி போலும்.” என்று பெருமூச்சு விட்டான் ஸ்ரீதர்.

ஒரு நாள் ஸ்ரீதர் அம்மாவிடம் குருடர் பாடசாலையில் குருடர்களுக்குப் புத்தகம் வாசிக்கச் சொல்லிக் கொடுப்பது பற்றிப் பேசினான். ” நானும் அதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். பிரெயில் முறை என்று அதற்குப் பெயராம். லூயி பிரெயில் என்ற பிரெஞ்சுக்காரர் கண்டுபிடித்த முறை. குருடர்களுக்கு அறிவுக் கண்ணைக் கொடுத்தவர் அவர். நானும் அதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.” என்றான் அவன்.

அவன் இவ்வாறு சொல்லி நாலைந்து நாட்களிலேயே கொழும்புக்குச் சென்று ஒரு பிரெயில் வாத்தியாரை அம்ர்த்திவிட்டார் சிவநேசர். சீக்கிரமே பிரெயிலைக் கற்றுப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினான் அவன். கொழும்பில் குருடர் செவிடர் பாடசாலை முகாமைக்காரரோடு, ஏற்பாடு செய்து பிரெயிலில் வெளியிடப்பட்ட பல நாவல்களையும் நாடகங்களையும் கவிதை நூல்களையும் கூட மகனுக்குப் பெற்றுத் தந்தார் சிவநேசர். அவர்கள் செய்த இவ்வுதவிக்குத் தமது பதிலாகக் குருடர் செவிடர் பாடசாலைக்கு ரூபா இருபத்தையாயிரம் நன்கொடை வழங்கவும் அவர் தவறவில்லை.

இவை இப்படிப் போய்க் கொண்டிருக்க, தன் காதலி பத்மா விஷயமாக ஸ்ரீதரின் மன நிலை எப்படியிருந்தது? சூரை மரத்தடியில் நாடகத்துக்கு மறுதினம் தந்தையாருடன் அவன் செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் பத்மாவைச் சிவநேசரே அனுமதித்தாலன்றித் தான் மணப்பதில்லை என்று அவன் ஒப்புக் கொண்டிருந்தானல்லவா? சிவநேசரையும் பாக்கியத்தையும் பொறுத்தவரையில் இது அவர்களின் அன்பு மகன் செய்த பெரும் தியாகமாகவே அவர்களுக்குப் பட்டது. ஆனால் ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் இத்தகைய ஒப்பந்தத்திற்குத் தான் வந்தமை உண்மையில் தான் பத்மாவுக்குச் செய்த மன்னிக்க முடியாத துரோகமாகவே பட்டது. “என்னுடைய இன்பத்தைத் துறப்பதற்கு எனக்கு உரிமை இருக்கலாம். அவ்வாறு என் இன்பத்தை நானே துறப்பதைத் தியாகம் என்று கூடக் கொண்டாடலாம்தான். ஆனால் இன்னொருவர் இன்பத்தை, பத்மாவின் இன்பத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? நம்பியிருந்தவளை நட்டாற்றில் விட்டுவிட்டேனே. தந்தை மீது கொண்ட அன்பாலும் என் உள்ளத்தின் மிருதுத் தன்மையாலுமல்லவா நான் அவ்வாறு நடந்து கொண்டேன். மிருதுத்தன்மை. இல்லவே இல்லை. இதுதான் கோழைத்தனமென்பது, ஐயோ, நான் எவ்வளவு கொடியவன். பொறுப்பற்றவன். ஒரு பெண்னைக் காதலித்து இல்லாத நம்பிக்கை எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்துப் பின்னர் மெல்ல நழுவி விட்டேனே! பெரிய மோசமல்லவா இது. அப்பாவை விட்டு என்னால் வாழ முடியாது. அம்மாவின் அன்பில்லாமல் என்னால் இவ்வுலகில் இருக்க முடியாது, என்பதால் அந்தோ பத்மாவைப் பரிதவிக்க விட்டுவிட்டேன். நான் பொய்ப்பெயர் கூறி ஆள்மாறாட்டம் செய்து பத்மாவிடம் அகப்பட்டுக் கொண்டபோது, “என்னை மோசம் செய்யத் தானே இந்த நாடகம்” என்று அவள் என் மீது குற்றஞ் சாட்ட நான் எவ்வளவு யோக்கியன் போல அதிக ஆத்திரத்துடன் அதற்குப் பதிலளித்தேன். ஆனால் நான் யோக்கியன்தானா? என் போல் பரம அயோக்கியன் யாரிருக்கிறான்?” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான் அவன்.

இந்த எண்ணங்கள் அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்த போதுதான் அவன் கண் நோய் கடுமையாக ஆரம்பித்தது. ஒரு நாள் பத்மாவுக்குக் கடிதம் எழுதலாமா என்று கூட அவன் யோசித்தான். காகிதத்தையும் பேனாவையும் கூட எடுத்து வைத்துக் கொண்டான். ஆனால் என்ன எழுதுவது? தன் துரோகத்தை எவ்வாறு அவளிடம் சொல்லுவது? இவ்வாறு நினைத்துக் கொண்டதும் காகிதம் எழுதும் யோசனையைக் கை விட்டான். கட்டிலில் படுத்துக் கொண்டழுதான். அழுவதை விட என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் பத்மாவின் நினைவென்னவோ அவன் உள்ளத்திலிருந்து மறைவதாயில்லை. அது தினந்தோறும் உள்ளத்தில் வளர்ந்து கொண்டே போவது போல் தோன்றியது. பத்மா பத்மா என்று ஸ்மரித்துக் கொண்டே அவன் காலம் கழிந்தது. மோகனாவை ஒரு நாள் கூட்டுக்கு வெளியே எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அதற்கு “பத்மா பத்மா” என்று கூப்பிடக் கற்றுக் கொடுத்தான். அதுவும் சீக்கிரமே பத்மா என்று கூவப் பழகிவிட்டது.

இவ்வாறு காலம் போய்க் கொண்டிருந்த போது தான் அவன் கருவிழிகளை இருட்படலம் முற்றாகக் கெளவி அவனைக் குருடனாக்கியது. குருடாகிய ஆரம்பத்தில் மனம் சிறிது காலத்துக்கு வேறு திசைகளில் சஞ்சரித்ததாயினும் குருட்டு வாழ்க்கை நிரந்தரமாகிவிட்டது என்றதும், இனி என்ன செய்வது என்ற நினைப்பில் மனதில் ஓர் அமைதி பிறக்கவே செய்தது. அந்த அமைதியிலே மீண்டும் பத்மாவின் நினைவலைகள் கடல் அலை போல் தோன்றி மோத ஆரம்பித்தன.

ஸ்ரீதருக்குக் கண் குருடான செய்தி நன்னித்தம்பிக் கிளாக்கர் மூலமும், பண்டிதர் சின்னைய பாரதி மூலமும், வேலைக்காரர்கள் டிரைவர் மூலமும் அக்கம் பக்கங்களில் ஓரளவு பாவவே செய்திருந்தது. இது விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த பல்கலைக்கழக மாணவி தங்கமணியின் காதுக்கும் எட்டியது.

நன்னித்தம்பியின் மகள் சுசீலா தங்கமணியோடு உள்ளூர் அரசாங்கப் பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவள். நன்னித்தம்பிவீட்டு வாசல் வழியாகத் தங்கமணி போய்க் கொண்டிருந்த போது தற்செயலாகச் சுசீலாவைப் பார்த்தாள். இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். அப்பொழுது சிநேகிதிகள் நாவில் நடமாடிய ஊர் வம்பில் ஸ்ரீதரும் இடம் பெற்றான்.

“பாவம், அந்தச் சிவநேசரின் மகன் ஸ்ரீதர் இருக்கிறார்களல்லவா? அவருக்கு இரண்டு கண்களும் பொட்டையாகிவிட்டன.” என்றாள் சுசீலா.

தங்கமணி “என்ன உண்மையாகவா?” என்று கேட்டு விவரங்கள் யாவையும் தெரிந்து கொண்டாள். அடுத்த வாரம் விடுமுறை முடிந்ததும் இச்செய்தி பல்கலைக்கழகத்து மூலை முடுக்கெல்லாம் பாவியது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், மாணவிகள் எல்லோரும் அது பற்றிப் பேசிக்கொண்டார்கள். “அவன் குருட்டு மன்னன் ஈடிப்பஸ் பாகத்தில் நடித்துக் கடைசியில் தானே குருடாகி விட்டான்.” என்றான் ஒரு மாணவன்.

தங்கமணி இச்செய்தியைப் பத்மாவுக்குக் கூறிவிட வேண்டுமென்று துடிதுடித்தாள். ஆனால் என்ன காரணமோ விடுமுறை முடிந்து வகுப்புகள் தொடங்கி இரண்டு மூன்று தினங்களாகியும் பத்மா, தங்கமணி கண்னில் பட வில்லை. கடைசியில் அவள் சற்றும் எதிர்பாராத சூழலில் பத்மாவைப் பிடித்தாள் தங்கமணி. ரெஜினாவும் அவளும் கொழும்பு மெயின் வீதியில் துணி வாங்கப் போன சமயத்தில் அவர்கள் முன்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதில் கமலநாதன் இருந்தான். அதன் பின் சீட்டில் பத்மா ஷிப்ட் என்னும் நாகரிகக் கவுன் அணிந்து கறுப்புக் கண்ணாடியுடன் பறங்கிப் பெண் போல் காட்சியளித்தாள். அவள் தலையில் வண்ணப் பூக்களிட்ட ஒரு “ஸ்கார்ப்.” கமலநாதனிடம் ஏதோ கூறிச் சிரித்துக் கொண்டு இறங்கிய அவளைத் தங்கமணி வழி மறித்தாள்.

“பத்மா! ஆளை அடையாளமே காணவில்லை. இந்த உடை உனக்குப் பிரமாதம்.” என்றாள் தங்கமணி.

“அப்படியா” என்று புன்னகை செய்தாள் பத்மா.

தங்கமணி “உன்னிடம் நான் ஒரு விஷயம் தனியே பேச வேண்டும். இங்கே வா” என்று பத்மாவை நடைபாதையின் ஓர் ஓரத்துக்கு அழைத்துச் சென்றாள்.

“நான் ஊரிலிருந்து இவ்வாரம் தான் வந்தேன். ஸ்ரீதருக்குப் பயங்கரமான கண் நோய். இரண்டு கண்களும் பொட்டையாகிவிட்டன. ஒன்றுமே தெரியாதாம். முழுக் குருடனாகிவிட்டார். என்ன வைத்தியம் செய்தாலும் சுகப்படாதென்று டாக்டர் சொல்லிவிட்டாராம்.”

“என்ன?” என்று திடுக்கிட்டாள் பத்மா. தங்கமணி “அதற்கென்ன பத்மா? நீதான் புது ஆள் பிடித்து விட்டாயே. யார் இந்த புதிய மச்சான்?” என்று கேலியாகப் பேசினாள் தங்கமணி.

பத்மா பதிலளிக்கவில்லை. “அப்படியானால் அதுதான் அவர் எனக்குக் கடிதம் எழுதவில்லை போலும்” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள்.

பின்னர் கமலநாதனுடன் அவள் சில சாமான்கள் வாங்க ஒரு கடைக்குள் புகுந்தாள். தங்கமணியும் ரெஜினாவை அழைத்துக் கொண்டு துணி வாங்கப் போனாள்.

வழியில் ரெஜினா “உன் தோழி பத்மாவைப் போன முறை பார்த்தபோது சேலை அணிந்திருந்தாள். இப்பொழுது உடையை மாற்றிக் கொண்டு விடாள். அவள் அணிந்திருக்கும் ஷிப்ட் அவளுக்கு அழகாயிருக்கிறது.” என்றாள்.

தங்கமணி வெடுக்கென்று “ஆமாம். ஆனால் ஆவள் உடையை மட்டுமா மாற்றியிருக்கிறாள்? மாப்பிள்ளையையும் அல்லவா மாற்றி விட்டாள்” என்றாள்.

கடையிற் சாமான்களை வாங்கியபின் கமலநாதனின் பின்னே மோட்டர் சைக்கிளில் உட்கார்ந்து போய்க் கொண்டிருந்த பத்மா சிந்தனையில் முழ்கியிருந்தாள். “நல்ல வேளை! எத்தகைய பெரிய விபத்தில் நான் சிக்குதற்கிருந்தேன். ஸ்ரீதர் என்னை ஏற்கனவே மணம் முடித்திருந்தானானால் நான் இப்பொழுது ஒரு குருடனில் மனைவியாகி இருப்பேனல்லவா? அந்தச் சுந்தரேஸ்வரர்தான் என்னைக் காப்பாற்றினார். எவ்வளவுதான் பணமும் நடிப்பும் அழகும் இருந்தாலும் குருடனின் மனைவியாகக் காலந்தள்ளுவது இலேசா என்ன?” என்று சிந்தித்த அவள் கமலநாதன் தனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டமே என்று தனக்குள் தானே கூறிக் கொண்டு அவனது முதுகைத் தன் கரங்களோல் அன்போடு தடவி விட்டுக் கொண்டாள்.

ஸ்ரீதரிடமிருந்து பத்மா தனது மனதைக் கமலநாதன் பால் மாற்றிக் கொண்டது தந்தை பரமானந்தருக்கு இன்னும் தெரியாது. அதை எவ்வாறு கூறுவதென்று தயங்கிக் கொண்டிருந்த அவளுக்கு ஸ்ரீதர் குருடனாகிவிட்டது ஒரு நல்ல செய்தி போலவே தோன்றியது. “ஸ்ரீதர் குருடனாகிவிட்டான். இந் நிலையில் பத்மா அவனை எப்படிக் கட்டுவது? கமலநாதன் அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். செய்து கொடுத்து விட்டால் என்ன? என்று அன்னம்மாக்காவை அப்பாவிடம் பேசும்படி தூண்டிக் காரியத்தைச் சாதித்துவிடலாம். எல்லாம் நல்லதுக்குத்தான்.” என்றது பத்மாவின் உள்ளம்.

பத்மாவும் கமலநாதனும் பரமானந்தருக்குத் தெரியாமல் தான் நெருங்கிப் பழகி வந்தனர். பத்மா பல்கலைக்கழகத்துக்குப் போகும் வழியில் அல்லது வரும் வழியில் தான் அவர்கள் சந்தித்துக் கொள்வது வழக்கம். அன்றும் அவ்வாறுதான் அவர்கள் சந்தித்துக் கொண்டனர். மோட்டார் சைக்கிள் சவாரி பத்மாவுக்கு இப்பொழுது சர்வ சகஜமாகிவிட்டது. அதற்குச் செளகரியமாகவே வெளியில் போகும் போது கூட அவள் கவுன் அணியும் வழக்கத்தை மேற்கொண்டாள். முதலில் சற்று தயக்கத்தோடுதான் அவள் இப்பழக்கத்தை மேற்கொண்டாள். பரமானந்தரைப் பொறுத்த வரையில் தம் மகள் நீச்சலுடைப் போட்டியில் கூடப் பங்குபற்றி விட்டதால், இப்பொழுது அவள் என்ன உடையை அணிந்தாலும், அவர் அதைப் பற்றி இலட்சியம் செய்வதில்லை. மேலும் இந்த உடைகள் எல்லாமே நீச்சல் ராணிக்கு இலவசமாகக் கிடைத்த பரிசுகள். எனவே பத்மா தன்னிஷ்டம் போல் அவற்றை அணிந்து மகிழட்டும் என்று அவர் விட்டு விட்டார். இன்னும் அக்கம்பக்கத்திலுள்ள பெரிய இடத்துப் பெண்கள் பலரும் இவற்றை அணிந்து கொள்வதைத் தமது மூக்குக் கண்ணாடிக் கூடாக அவர் பல தடவை பார்த்திருக்கிறார். இந் நிலையில் அவற்றை அணியக் கூடாதென்று கூறுவது சுத்தக் கர்நாடகம் என்பது அவர் நினைப்பு. பத்மா இவ்வாறு புது மோஸ்தர் உடைகளை அணிவதைப் பற்றி அடுத்த வீட்டு அன்னம்மாக்க மட்டும் ஒரு நாள் ஏதோ கூறினாள். அதற்கு “போங்க அன்னமாக்கா. இன்று எல்லாப் பெண்களும் தான் இப்படி உடுத்துகிறார்கள். நான் மட்டும் இப்படி உடுத்தினால் என்னவாம். நீஙக கூட என் வயசாயிருந்தால் கட்டாயம் இப்படி உடுத்த விரும்புவீர்கள். ஏன் இந்த உடை எனக்கு அழகாயில்லையா?” என்றாள். “அழகுக்குக் குறைச்சலில்லை. அடக்கம் தான் குறைவாயிருக்கிறது.” என்றாள் அன்னம்மாக்கா. “அது பரவாயில்லை” என்றாள் பத்மா.

பத்மாவும் கமலநாதனும் வழியில் பலதையும் பேசிக் கொண்டார்கள். கமலநாதன் “பத்மா, எப்போது எங்கள் கல்யாணம்?” என்று கேட்டான். “சீக்கிரமே ஏற்பாடு செய்கிறேன். பாருங்கள்” என்றாள் பத்மா.

ஸ்ரீதர் கண்கள் குருடானது பற்றி சுழிபுரம் கந்தப்பசேகரர் பங்களாவிலும் பேச்சடிப்பட்டது. யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற புற்றுநோய்ச் சங்க ஆண்டு விழாவுக்குப் போயிருந்த போது அங்கு வந்திருந்த டாக்டர் நெல்சன் இச்செய்தியை அதிகார் அம்பலவாணரிடம் கூறியிருந்தார். அவரே இச்செய்தியைக் கந்தப்பசேகரர் பங்களாவுக்கு எடுத்து வந்தவர். இப்படிப்பட்ட செய்திகளைத் தாங்கிச் செல்வதில் அதிகார் அம்பலவாணருக்கு எப்பொழுதுமே மிகவும் மகிழ்ச்சி.

“மிஸ்டர் கந்தப்பசேகரர்! உங்கள் மகள் அதிர்ஷ்டசாலி. தப்பி விட்டாள்.” என்றார் அவர்.

“என்ன விஷயம்? தெளிவாக சொல்லுங்கள்.” என்றார் கந்தப்பசேகரர்.

“அதாவது ஸ்ரீதருக்கு இரண்டு கண்களும் சந்திர சிகிச்சை முடியாத அளவுக்குப் பொட்டையாகிவிட்டனவாம். நல்ல வேளை! நீங்கள் விரும்பியபடி திருமணம் சிறிது நாட்களுக்கு முன்னர் நடந்திருக்குமானால் உங்கள் மகள் இப்பொழுது குருடன் மனைவியாகியிருப்பாளல்லவா? உங்கள் நல்ல மனது காரணமாகவே கடவுள் அப்படிப்பட்ட சோதனையை உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.” என்றார் அதிகார் அம்பலவாணர்.

கந்தப்பசேகரர் அதை அப்படியே ஒப்புக் கொண்டார். டாக்டர் அமுதா கூட தன்னை ஸ்ரீதருக்கு வாழ்க்கைப்படாது காப்பாற்றியது நல்லூர்க் கந்தன் தான் என்று நம்பினாள். “இல்லாவிட்டால் நான் குருடன் மனைவியாகியிருப்பேனே” என்று கூறிக் கொண்டாள் அவள்.

ஸ்ரீதரின் கண்களைப் பற்றிப் பேசப்பட்ட மற்றோரிடம் கிளாக்கர் நன்னித்தம்பி வீடு. தினசரி வீடு போய்க் கை கால் அலம்பிச் சாப்பிட்டு முடித்ததும் மனைவி செல்லம்மாவிடமும் மகள் சுசீலாவிடமும் சிறிது நேரம் வெற்றிலை போட்டுப் பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். ஸ்ரீதர் தன் பார்வையை முற்றாக இழந்து விட்ட அன்று இரவு நன்னித்தம்பி அத்துக்கச் செய்தியை மனைவிக்கும் மகளுக்கும் மிக உணர்ச்சியோடு சொன்னார்.

“பாவம் சிவநேசர் மகன். மிகவும் நல்லவன். தகப்பனை விட மேலான குணம். அவரிடம் அகங்காரமும் மிடுக்கும் உண்டு. ஸ்ரீதரிடம் அவையுமில்லை. குழந்தை உள்ளம் படைத்த அவனுக்கு இப்படி நேர்ந்ததே” என்று சோகத்தோடு சொன்னார் அவர். சுசீலா தந்தை கூறிய விவரங்களைக் கேட்டுத் திகைத்தாள். “யாருக்கு கண் போய் விட்டதென்று சொன்னீர்கள்? ஸ்ரீதருக்கா? பாவம், அன்று உங்கள் கந்தோரில் என்னோடு பேசியபோது அவர் கண்கள் நன்றாகத்தானே இருந்தன? மிகவும் அழகான கண்கள் என்று கூட நினத்தேன். பாவம், நல்ல குணம். வேடிக்கையாய்ப் பேசினாரல்லவா அப்பா? அவருக்கா கண்கள் போய்விட்டன?” என்று கேட்டாள் அவள்.

அதற்கு நன்னித்தம்பியர் “ஆம் சுசீலா அவனுக்குத்தான் கண்கள் போய்விட்டன. எல்லாம் அவரவர் தலைவிதி. அதை யாரால் அழித்தெழுத முடியும்.” என்றார்.

நன்னித்தம்பியர் மனைவி செல்லம்மாவோ, ஸ்ரீதர் சிறு குழந்தையாயிருக்கும் போது அவனைத் தன் மடியில் தூக்கி வைத்து விளையாடியவள். அதை நினைவுப்படுத்திப் பேசினாள் அவள். “உங்களுடன் நான் அமராவதி வளவு விசேஷங்களுக்கு வரும்பொழுதெல்லாம் ஸ்ரீதரைத் தூக்கி வைத்து விளையாடியிருக்கிறேன். மிகவும் அழகாயிருப்பான். என்னை மாமி என்று கூப்பிடுவாள். பாவம் அவனுக்கு இப்படி வந்ததே” என்று வருந்தினாள்.

இவை நடந்து சற்றேறக் குறைய ஒரு மாதங் கழிந்த பின்னர் பாக்கியத்தின் வேண்டுகோளுக்கிணங்க சின்னைய பாரதியின் முயற்சியால் அமராவதி வளவுக் கோவிலில் ஸ்ரீதரின் பெயரில் விசேஷ பூசைகள் சில தொடங்கப்பட்டன. அவனது சாதகத்தைப் பார்த்த பிரபல சோதிடர் ஒருவர் சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கு ஒரு மாத காலம் பூசை செய்து நவக்கிரக சாந்தியும் செய்தால் ஸ்ரீதர் நாளடைவில் தன் கண் பார்வையைப் பெற இடமிருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்படி ஏராளமான பணச் செலவில் பூசைகள் ஆரம்பமாயின.

பூசையின் ஆரம்ப தினத்துக்குத் தந்தை சிவநேசர், தாய் பாக்கியம் ஆகியவர்களைத் தவிர சின்னைய பாரதியும் மனைவியும் கிளாக்கர் நன்னித்தம்பியர், அவர் மனைவி செல்லம்மா, மகள் சுசீலா ஆகியோரும் வந்திருந்தனர். நாதசுரம் வேணு தனது மேளக் கோஷ்டியுடன் வந்திருந்தான். இவர்களைத் தவிர அமராவதி வேலையாட்கள் எல்லோரும் கோவிலில் கூடியிருந்தார்கள். அர்ச்சகர் பஞ்சநாத ஐயர் பூசைகளை வழக்கம் போல் நடத்தி வைத்தார். பண்டிதர் சின்னைய பாரதியும் பிராமணராதலால் பூசைகளில் பஞ்சநாத ஐயருக்குத் துணை புரிந்தார்.

ஸ்ரீதர் பட்டுடுத்துப் பொட்டிட்டு மிகக் கம்பீரமாகவே விளங்கினானென்றாலும் தாய் பாக்கியம் அவனைத் தன் கரங்களால் வழிகாட்டி அழைத்து வந்த காட்சி மிகப் பரிதாபமாகவே இருந்தது. வழக்கத்தில் ஏறுபோல் நடக்கும் அவன் அன்று படிகளில் தட்டுத் தடுமாறி ஏறிய காட்சியைக் கண்டு எல்லோருமே கலங்கிவிட்டார்கள். சுசீலாவின் கண்களில் கண்ணீர் துளித்து விட்டது. சிவநேசரும் தன் கண்களைத் தன் சால்வையால் துடைத்துவிட்டுக் கொண்டார். பூசை செய்ய வந்த ஐயரின் கண்கள் கூடக் கலங்கின.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னோடு சிரித்து உரையாடிய ஸ்ரீதருக்கு இப்படித் திடீரெனக் கண் போய்விட்டதை நினைத்ததும் சுசீலா மனம் கலங்கி விட்டது. ஐயோ, பாவம், ஓர் இளைஞனுக்கு அவன் திருமணம் செய்ய வேண்டிய நேரத்தில் இப்படியும் நேரலாமா என்று வருத்தப்பட்டாள் அவள்.

அன்றிரவு பூசை முடியும் போது பத்து மணியாகிவிட்டது. மாரிகாலம், கடும் இருள். நன்னித்தம்பியரும் செல்லம்மாவும் சுசீலாவும் அமராவதி வளவிலிருந்து அரை மைல் தூரத்திலிருந்த தங்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். நன்னித்தம்பியர் டோர்ச் லைட்டை அடித்துக் கொண்டு முன்னால் போனார். மனைவியும் மகளும் பின்னால் சென்று கொண்டிருந்தனர். முழு அமைதியுடன் விளங்க வேண்டிய அவ்விரவை வயல்களிலிருந்த தவளைகள் தம் சுருதியால் விண் கூவ வைத்திருந்தன. நன்னித்தம்பியர் எப்போதுமே ஏதாவது பேசிக் கொண்டிருப்பவர். ஸ்ரீதரைப் பற்றியும் சிவநேசரைப் பற்றியும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். மனைவி செல்லம்மா அவரை ஆமோதித்துப் பேசிக் கொண்டு வந்தாள்.

நன்னித்தம்பியரின் ஒரு வழக்கம் என்னவென்றால் அவர் பேசுவதற்குப் போதிய எதிரொலி இருக்கிறதா என்று அவதானித்துக் கொள்வதாகும். கூட வருபவர்கள் போதிய ஆமோதிப்பு வசனங்கள் கூறாவிட்டால் அவரால் அதைச் சகிக்கவே முடியாது. இது விஷயத்தில் செல்லம்மா சாடிக்கேற்ற மூடி. அவர் ஒன்று பேசினால், அவள் ஒன்பது பேசி ஆமோதிக்கத் தவறுவதில்லை. இன்றும் அவள் பேசிக் கொண்டே வந்தாள். என்றாலும் சுசீலா ஒன்றுமே பேசாது மெளனமாயிருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே திடீரென “சுசீலா எங்கே? ஏன் பேசாமல் வருகிறாய்?” என்று கூறிக் கொண்டே தமது டோர்ச் லைட்டை அவளது முகத்துக்கு நேராகப் பிடித்தார் அவர். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அப்படியே திகைக்க வைத்துவிட்டது. சுசீலா தன் மேல் உதட்டைக் கீழ்ப் பற்களால் கடித்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் ரேகையிட்டு ஓடிக் கொண்டிருந்தது. “என்ன சுசீலா ஏன் அழுகிறாய்?” என்றார் நன்னித்தம்பியர். அவள் அதைக் கேட்டுத் திடுக்கிட்டுவிட்டாள் என்றாலும் சமாளித்துக் கொண்டு தலையை ஆட்டி “ஒன்றுமில்லை” என்றாள்.

செல்லம்மாவும் மகளின் முகத்தைப் பார்த்தாள். “பாவம் அந்த ஸ்ரீதரின் குருட்டுத் தோற்றத்தைக் கண்டு அதற்கு இரங்கி அழுகிறாள். வேறென்ன. சுசீலாவுக்கு மிகவும் இளகிய மனசு. அவள் எப்பொழுதும் இப்படித்தான் எடுத்ததற்கெல்லாம் அழுது விடுகிறாள். அவளை நாம் இங்கே அழைத்து வந்திருக்கக் கூடாது. எங்கள் வீட்டுக் கோழி செத்ததற்குக் கூட இரண்டு நாள் அழுதவளல்லவா அவள்?” என்றாள்.

நன்னித்தம்பியர் “ஆனால் கோழியின் மீது சுசீலாவுக்கு மட்டும் தான் பிரியம் என்று எண்ணி விடாதே செல்லம்மா. எனக்கும் கோழி என்றால் பிரியம்தான். அதுவும் சூப்பு வைச்சால் அதிகம் பிரியம்.” என்றார்.

சுசீலாவுக்கு இதைக் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது. தன் அழுகையையும் மீறிச் சிரித்துவிட்டாள் அவள். “அழுத பிள்ளை சிரிக்குது” என்றார் நன்னித்தம்பியர். வேடிக்கையாக, “பார் அப்பாவை. யார் அழுதது? நான் அழவில்லை” என்றாள் சுசீலா.

20-ம் அத்தியாயம்: மோகனாவின் ஓலம்!

வேதனையில் வீழ்ந்திருந்த ஒருவன் விகடப் பேச்சுப் பேசினால், பேசுபவனுக்கு அது விகடமாக இருந்தாலும் கேட்பவர்களுக்கு அது சாதாரண வேதனையிலும் பார்க்க அதிக வேதனையையே உண்டு பண்ணும். ஸ்ரீதரின் பகடிப் பேச்சுகள் யாவும் அத்தகைய உணர்ச்சிகளையே பாக்கியத்துக்கு உண்டு பண்னின. இன்னும் பிள்ளை அனுபவிக்கும் துன்பம் தாய்க்கும் தந்தைக்கும் கொடுக்கும் வேதனை, அப்பிள்ளை தான் அனுபவிக்கும் துன்பத்திலும் பார்க்க அதிகமாகவே இருக்கிறது. இயற்கையின் நெறியாலும் சமுதாயக் கூட்டுறவாலும் ஏற்படும் இப்பிள்ளைப் பாசத்தோடு ஒப்பிடக் கூடிய பேருணர்ச்சி இவ்வுலகில் வேறில்லை என்றே கூற வேண்டும். மக்கட் பேறு மதிக்கவொண்ணாத பேறாக இருப்பதினாலேயே தாய் தந்தையருக்குத் தம் பிள்ளைகள் மீது இத்தகைய பாசம் ஏற்படுகிறது. அதனால் தான் திருவள்ளுவர் கூட

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற”

என்றார். (அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுவது போன்ற வேறு பேறு இவ்வுலகில் இல்லை.) ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் அறிவறிந்த மகன் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமல்ல, சில வகைகளில் தந்தை சிவநேசரிலும் பார்க்கச் சிறந்தவன் என்றும் பெயரெடுத்து வந்து கொண்டிருந்தவன் அவன்.

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

என்றும் வள்ளுவர் கூறியிருக்கிறார். (தம்மிலும் பார்க்கத் தம் மக்கள் அறிவுடையவராய் விளங்குதல் எவர்க்கும் இனிக்கும் ஒன்றாம்.) சிவநேசரும் தம் மகன் தம்மிலும் பார்க்கப் போற்றப்படுபவனாக வளர்ந்து வருவதை அறிந்து ஆனந்தம் கொண்டிருந்தவர். அப்படிப்பட்ட செல்லப்பிள்ளை, அதுவும் குலம் விளக்க வந்த ஒரே குருத்து கண்ணற்ற கபோதியாகி விட்டால் பெற்றோர்களால் அதை எவ்வாறு தாங்க முடியும்?

ஸ்ரீதர் அன்று காலை பத்து மணியளவில் காலை ஆகாரமருந்தி விட்டுத் தாயாருடன் வீட்டின் முன்னாலிருந்த பெரிய வேப்பமரத்தின் கீழிருந்த சிமெந்து ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். கண் குருடாகிய பின் அவனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களில் ஒன்று “தன் கண்ணின் அழகு கெட்டுவிட்டதா?” என்பதாகும். ஸ்ரீதருக்குத் தன்னை எல்லோரும் கட்டழகன் என்றும், முக்கியமாகக் கண்ணழகன் என்றும் மெச்சுவது நன்கு தெரியும். அத்துடன், பத்மா முதல் முதலாக அவனோடு பம்பலபிட்டி “எஸ்கிமோ” ஐஸ்கிறீம் பார்லருக்குச் சென்று ஐஸ்கிறீம் அருந்திய அன்று ” நான் உங்களை உங்களது அழகிய கண்களுக்காகவே காதலிக்கிறேன்” என்று கூறிய வார்த்தைகள் இன்னும் அவன் காதில் வீணா கானம் போல் ஒலித்துக் கொண்டிருந்தன. “இப்படி பலராலும் போற்றப்பட்ட நீண்ட என் குறுகுறுத்த விழிகள் இன்று ஒளியிழந்து விளங்குகின்றனவோ?” என்று ஐயப்பட்ட அவன் அதற்காக விசனிக்கவும் செய்தான். இளமையும் கலையுணர்ச்சியும் அழகின்பால் அளவில்லாத ஆர்வமும் கொண்ட ஒரு யுவனுக்கு இயற்கையாக ஏற்படும் விசனம்தானே அது? உண்மையில் ஒளியிழந்த தன் கண்களை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்று கூட அவன் எண்ணினான். அதனால் முன்னர் பகலில் அதுவும் வெயில் நாளில் வெளியில் போகும் போது மட்டும் தான் அணியும் குளிர்ச்சிக் கண்ணாடியை இரவு பகல் என்று பாராது எந்நேரமும் அணியும் பழக்கத்தை அவன் மேற்கொண்டான். அது மட்டுமல்ல, அழகாக உடுத்திக் கொள்ளுவதையும் அவன் விடவில்லை. சிறுவயதிலிருந்தே அது அவனுக்கு இரண்டாவது இயற்கையாகிவிட்டது. ஆகவே, காலையில் அவன் குளித்த முடித்ததும் தாய் பாக்கியம் அவனுக்கு வேண்டிய காற்சட்டையையும் புஷ் ஷெர்ட்டையும் அவனுக்குக் கொண்டு வரச் செல்லும் போது “அம்மா, பெரிய நீலப் பூவிட்ட அந்த வெள்ளை புஷ் கோட்டையும் அந்தக் கறுப்புக் காற்சட்டையையும் கொண்டு வா” என்று திட்டவட்டமாகத் தனக்கு வேண்டிய உடைகளைப் பற்ரி விவரமாகக் கூறுவான்.

அவன் அணிந்து கொண்டு வந்ததும் “அம்மா நான் சொன்ன சட்டைகளைத்தானே கொண்டு வந்தாய்? குருடனென்றாலும் எனக்கு வண்ணச் சட்டைதான் வேண்டும்” என்பான் சிரித்துக் கொண்டு.

பின் “அம்மா, நீ நீலக் காற்சட்டை என்று சொல்லி சிவப்புச் சட்டையைக் கொண்டு வந்தாலும் நான் என்ன செய்வது அம்மா?” என்று கேட்பான்.

“சீ, ஸ்ரீதர் அப்படிச் செய்வேனா நான்? நீ சொல்லும் சட்டையை எப்படியும் தேடிக் கொண்டு வருவேன்” என்பாள் தாய்.

“அப்படி நீ வேறு நிறச் சட்டையைக் கொண்டு வந்தாலும் என்ன நட்டம்? எனக்குத்தான் கண் தெரியாதே. உனக்குத்தான் நட்டம். உன் பிள்ளை அழகில்லாமல் இருப்பான். பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். அவர்களுக்காகத் தான் நான் சட்டை உடுத்த வேண்டியிருக்கிறது.” என்பான் ஸ்ரீதர்.

“என் பிள்ளை அழகில்லாமலிருப்பானா? அவனைப் போல் அழகானவன் இவ்வுலகிலேயே இல்லை ஸ்ரீதர்” என்பாள் தாய்.

“அழகிருந்தென்ன? உன் பிள்ளை குருடன்தானே” என்பான் ஸ்ரீதர். அவன் அப்படிக் கூறும் வேளைகளிலே தன் கைகளால் அவன் வாயைப் பொத்துவாள் பாக்கியம். “இப்படி எல்லாம் பேசாதே” என்று மன்றாடுவாள்.

இன்று காலையும் ஸ்ரீதர் அழகான காற்சட்டையும் புஷ் ஷேர்ட்டுமணிந்து கம்பீரமாகவே விளங்கினான். வேப்ப மர நிழலில் கொட்டும் வேப்பம் பூக்களின் மணத்தையும் வீசு தென்றலின் குளுமையும் அனுபவித்துக் கொண்டு தாயோடு பேசிக் கொண்டிருந்தான் அவன். சற்றுத் தொலைவில் எங்கோ ஒரு மரத்தில் குயில் ஒன்று மறைந்திருந்து கூகூவென்று கூவிக் கொண்டிருந்தது. சண்பகப் பட்சி ஒன்றும் இடையிடையே தன் குரலை எழுப்பியது.

ஸ்ரீதர் பாக்கியத்திடம் “அம்மா, உன் மீது எனக்குக் கோபம். நான் குருடனாகி விட்டேனென்று எனக்கு நீ ஒரு கோல் வாங்கிக் கொடுக்கவில்லையே. எப்போது வாங்கிக் கொடுப்பாய்?” என்றான் விளையாட்டாக.

பாக்கியம் “உனக்குக் கோல் வேண்டியதில்லை. நான் பக்கத்திலிருக்கும்போது கோல் எதற்கு? நானே உன்னை விரும்பிய இடத்துக்கு அழைத்துச் செல்வேன்,” என்றாள்.

ஸ்ரீதர் “போ அம்மா. எனக்குக் கோல் வேண்டும். நீ கோல் வாங்கப் பணம் செலவாகும் என்று பார்க்கிறாய்! எனக்குப் பணம் கொடுக்காமலே கோல் வாங்கத் தெரியும் கொழும்பிலே ஒரு தர்ம ஸ்தாபனம் குருடர்களுக்கு இலவசமாக வெள்ளைக் கோல்களை வழங்குகிறது. அவர்களுக்குக் கடிதம் எழுதிப் போட்டால் இனாமாகவே கோலொன்றை அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுக்கும் புண்ணியம். எங்களுக்கும் பணம் மிச்சம்.” என்று கூறினான்.

பாக்கியம் ஸ்ரீதரிடம் “ஸ்ரீதர் நீ எந்த நேரமும் உன் கண்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. வேறு விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும்.” என்று கூறினாள்.

“ஆனால் நான் என்ன செய்ய, அம்மா? எனக்கென்னவோ என் கண்களைப் பற்றிய நினைவு தானே எந்த நேரமும் வந்து கொண்டிருக்கிறது” என்றான் ஸ்ரீதர்.

அதற்குத் தாய் “நீ பயப்பட வேண்டாம் ஸ்ரீதர். சின்னைய பாரதி உன் சாதகத்தைப் பார்த்து உன் கன்கள் நிச்சயம் உனக்கு மீண்டே தீரும் என்று சொல்லியிருகிறார். அத்துடன் கோவிலிலே பூசைகள், நவக்கிரக சாந்தி முதலியனவும் செய்து வருகிறோமல்லவா? என் குஞ்சுக்கு மாவிட்ட புரத்தான் கண்ணைத் தந்தே தீருவான். அஞ்சாமலிரு. எல்லாம் சரியாய் விடும்.” என்றாள்.

“எனக்கென்னவோ இவற்றில் நம்பிக்கையே இல்லை. இருந்தாலும் நீ ஏற்பாடு செய்யும் பூசைகளில் நான் கலந்து கொள்வது உனக்காகத்தான் அம்மா. நான் பூசைகளுக்கு வராவிட்டால் நீ கவலைப்படுவாய் அல்லவா அம்மா?” என்றான் ஸ்ரீதர்.

இவ்வாறு சிறிது நேரம் பேசியிருந்த பின்னர், ஸ்ரீதர் வானொலியில் இசைத்தட்டு சங்கீதம் கேட்கச் சென்றான். அவனை அவன் அறையில் தன் கைகளால் அணைத்துச் சென்று விட்டு விட்டு, சிவநேசர் அறைக்குள் சென்றாள் பாக்கியம்.

அறையும் புகும் பொழுதே “என்னால் இதைத் தாங்க முடியாது. நான் செத்துப் போகிறேன்” என்று கதறினாள் பாக்கியம்.

சிவநேசர் நிமிர்ந்து பார்த்து விட்டு, “என்னாலும் தாங்க முடியாதுதான். ஆனால் நாம் என்ன செய்வது? பொறுத்துக் கொள்ளப் பழக வேண்டியதுதான்.” என்றார்.

பாக்கியம் “பெற்ற மகன் கண்ணிமைக்காமல் பரிதவிக்க நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறேனே. எவ்வளவு கல் நெஞ்சு எனக்கு? இது அடுக்குமா? என் கண்ணிரண்டையும் பிய்த்தெறியப் போகிறேன். எனக்கு வேண்டாம் இக் கண்கள்.” என்று உணர்ச்சிகரமாய்க் கதறினாள். கண்களிரண்டையும் தன் இரு கரங்களால் பிடுங்கப் போனாள் அவள்.

சிவநேசர் எழுந்து அவள் கைகளைத் தன் இரு கரங்களால் தடுத்து “பாக்கியம், உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? நீயும் குருடாகிவிட்டால் அவனைப் பார்ப்பதார்? அவனுக்கு வழி காட்டுவதார்? அவனுக்காக நாங்களிருவரும் பல்லைக் கடித்துக் கொண்டாவது வாழத்தான் வேண்டும்?” என்றார். அதைக் கேட்ட பாக்கியம் கண்ணீர் சிந்தினாளென்றாலும் சிறிது நேரத்தில் அடங்கிவிட்டாள்.

அதன் பின் தம்பதிகளிருவரும் சிறிது பேசாதிருந்தனர். கொஞ்சம் கழித்து, பாக்கியம் பேசினாள்.

“பார்த்தீர்களா? கந்தப்பசேகரர் அமுதா விஷயத்தில் முன்னர் எவ்வளவு நாட்டமாக இருந்தார்? ஸ்ரீதர் கண்ணிழந்ததும் எல்லாவற்றையும் விட்டு விட்டார். குருட்டுப் பிள்ளைக்கு என்ன கல்யாணம் என்பது அவர்கள் எண்ணம் போலும். இவற்றை நினைத்தால் வயிறெரிகிறது.” என்றாள்.

சிவநேசர் எப்பதிலும் பேசவில்லை. அவர் உள்ளம் பதில் கூற முடியாத அளவுக்கு நொந்து போயிருந்தது. ஸ்ரீதரின் கண்ணிழப்பு அவன் எதிர்காலத்தையே முற்றாக நாசமாக்கிவிட்டதே என்று கவலை அடைந்தார் அவர்.

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்க, கொழும்பு ‘கிஷ்கிந்தா’வுக்கு ஸ்ரீதர் பெயருக்கு வந்திருந்த கடிதமொன்றை கிளாக்கர் நன்னித்தம்பி சிவநேசர் அறைக்கு எடுத்து வந்தார். “தம்பிக்கு வந்துள்ள கடிதம். யாராவது அவருக்கு வாசித்துக் காட்ட வேண்டும். அதுதான் அவரிடம் கொடுக்காமல் இங்கு கொண்டு வந்தேன்” என்றார் அவர்.

சிவநேசர் அதற்கு “பாக்கியம் அவனுக்கு வரும் கடிதங்களை நாங்கள் வாசிப்பது நல்லதல்ல. அவற்றில் எழுதப்பட்டுள்ள விஷயங்களில் சில சம்பவங்களை நாங்கள் அறிவது அவனுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். நன்னித்தம்பியே அவற்றை வாசித்துக் காட்டட்டும். இவ்விஷயங்களில் அப்பா அம்மாவுக்கு முன் வெட்கப்படுவது போல் பிள்ளைகள் மற்றவர்கள் முன் வெட்கப்படுவதில்லை” என்றார்.

பாக்கியம் “கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது?” என்று கேட்டான். “இங்கிலாந்திலிருந்து டாக்டர் சுரேஷ் எழுதியிருக்கிறார்” என்றார் நன்னித்தம்பி.

“ஓ! சுரேஷா? ஸ்ரீதர் மிகவும் சந்தோஷப்படுவான். நேற்றுக் கூட சுரேஷைப் பற்றி ஞாபகமூட்டினான். நன்னித்தம்பி உடனே போய் வாசித்துக் காட்டு” என்றாள் பாக்கியம்.

யாழ்ப்பாணம் வந்து பிறகு ஒரு நாளாவது ஸ்ரீதர் சுரேஷைப் பற்றிச் சிந்திக்காமல் கழிந்ததில்லை. சுரேஷ் சீமை சேர்ந்து இரண்டு மூன்று தினங்களின் பின்னர் தான் சுகமே அங்கு சேர்ந்ததாக ஒரு கடிதம் “அமராவதி” விலாசத்துக்கு அனுப்பியிருந்தான். தனக்குப் படிப்பு வேலை அதிகமாயிருப்பதால் அடிக்கடி கடிதம் எழுத முடியாதென்றும் எதிர்காலத்தில் ‘கிஷ்கிந்தா’ விலாசத்துக்கே தான் கடிதங்களை எழுத எண்ணியிருப்பதாகவும் அதில் அவன் கூறியிருந்தான். அதன் பின் எழுதிய முதலாவது கடிதம் தான் இன்று வந்திருந்த கடிதம்.

நன்னித்தம்பி ஸ்ரீதர் அறைக்குச் சென்று கடிதத்தை வாசித்துக் காட்டினார். சுகஷேமங்களைப் பற்றியும், தனது படிப்பைப் பற்றியும், தன்கேற்பட்ட சில வேடிக்கையான அனுபவங்களைப் பற்றியும் எழுதியிருந்த சுரேஷ் “ஸ்ரீதர், எப்பொழுது உன் திருமணம். வர முடியாவிட்டாலும். வாழ்த்தனுப்புவதற்கு எதிர்நோக்கியிருக்கிறேன். அம்மாவுக்கு, அப்பாவுக்கு, பத்மாவுக்கு எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லு” என்று முடித்திருந்தான்.

கடிதத்தைக் கேட்டு முடிந்ததும் ஸ்ரீதர் பெருமூச்சு விட்டான். “நான் கண் நோயுற்றிருக்கும் இந்நேரத்தில் சுரேஷ் பக்கத்திலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? நன்னித்தம்பி காகிதம் கொண்டு வருகிறாயா. நான் என் கைப்பட சுரேசுக்குப் பதிலெழுத வேண்டும். நீ பக்கத்திலிருந்து உதவினால் என்னால் எழுத முடியும்.” என்றான் ஸ்ரீதர்.

பெரிய எழுத்துகளில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் ஏறக்குறைய அரை அங்குல இடைவெளிவிட்டு அவன் எழுதிய கடிதத்தில், தன் கண்கள் பார்வை இழந்தவை, டாக்டர் நெல்சன் அது பற்றிக் கூறிய குறிப்புகள், தந்தையாரும் தானும் தனது திருமணம் பற்றிச் செய்து கொண்ட ஒப்பந்தம், தான் பிரெயில் கற்று வருவது முதலியவற்றைப் பற்றி விரிவாக எழுதினான் ஸ்ரீதர். முடிவில் “சுரேஷ், கண்ணற்றவன் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது எவராலும் அறிந்து கொள்ள முடியாது. ஒரு நாள் முழுவதும் உன்னை முற்றாக ஒரு துணியால் கட்டி விட்டு வாழ்ந்து பார். இருளிலே பயங்கரமான இருள் கண்ணில்லாதவன் இருள். சிறையில் கொடியது இருட் சிறை. அழகின் அனுபவம் குருடனுக்கில்லை. நேரம் போகாது நடந்து திரிதல் முடியாது. ஒரு கருஞ் சுவருக்கு முன்னர் எப்பொழுதும் உட்கார்ந்திருத்தல் போன்ற நிலை. அதுவும் மூடிய கண் இனி எப்போதும் ஒளியில் திறக்காது என்று தெரிந்தபின் ஏற்படும் மன ஏக்கத்தை எப்படிச் சொல்வது? சில சமயங்களில் எல்லாவற்றையும் பிய்த்தெறிய வேண்டும் போன்ற சினம் ஏற்படுகிறது. இந்நிலையில் சங்கீதம் எனக்குத் துணை புரிகிறது. இசைத் தட்டுகளைக் கேட்டு மகிழ்கிறேன். அவைகள் எனக்குச் சிறிது சாந்தியைத் தருகின்றன. சுரேஷ், நான் ஏன் இவ்வுலகில் பிறந்தேன்? பணக்காரனாகப் பிறந்ததால் அவனுக்கென்ன குறை என்பார்கள். நான் கண்ட இன்பமென்ன சுரேஷ்? உன் நட்பு வேண்டுமானால் ஓர் இன்பமென்று சொல்லலாம். அம்மாவின் அன்பையும், என்னதான் இருந்தாலும் அப்பாவும் என்னை நேசிக்கவே செய்கிறார் – அவர் அன்பையும் இன்பமென்று சொல்லலாம். பத்மாவின் அன்பு? அதுதான் இப்பொழுது எட்டாததாகிவிட்டதே. என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. இது உனக்கு எவ்வளவு கவலையைத் தருமென்று எனக்குத் தெரியும். கவலைப்படாதே. கவலைப்படுவதால் பலனில்லை” என்று எழுதி “உன் உயிருக்குயிரான நண்பன் ஸ்ரீதர்” என்று கை ஒப்பமிட்டான் அவன்.

ஸ்ரீதரின் இக் கடிதத்திற்கு ஒரு வாரத்திலேயே சுரேஷின் விமானத் தபால் மூலம் வந்துவிட்டது. அதில் அவன் ஸ்ரீதரின் கண்ணிழப்பால் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைக் கூறினாள். “ஸ்ரீதர், கவலைப்படாதே, நான் டாக்டர் நெல்சனுக்கு உன் கண் நோய் பற்றிய விவரங்களை எழுதும்படி கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறேன். சுரேஷ் டாக்டராகியிருப்பது உனக்கு நல்லதென்று நினைத்துக் கொள். நான் கண் டாக்டரல்லாவிட்டாலும் இங்கு பெரிய வைத்தியப் பேராசிரியர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடையே சிறந்த கண் டாக்டர்களும் இருக்கிறார்கள். உன் நோய் பற்றி அவர்களுடன் கலந்து பேசுவேன். உனது கண் பார்வையை நீ மீண்டும் பெறுவதற்கு என்னாலான முயற்சிகளை எப்பொழுதும் செய்து கொண்டேயிருப்பேன்.” என்று எழுதியிருந்தான் அவன். முடிவில், “ஸ்ரீதர், நீ நாடகப் பிரியனல்லவா? நீ கேட்டு மகிழ்வதற்காக பெர்னாட் ஷா போன்ற நல்ல நாடகாசிரியர்களின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சில நாடகங்களை உனக்கு வாங்கி அனுப்பியுள்ளேன். இவை இலங்கையில் கிடையா. ரேடியோ கிராமில் இவற்றைப் போட்டுக் கேட்கும்போது சுரேஷை நினைப்பாயல்லவா? ஸ்ரீதரின் அன்பை மதிப்பது போல் சுரேஷ் வேறெதையும் இவ்வுலகில் மதிப்பதில்லை. உன் அன்புதான் எனக்கு உலகிலேயே மிகச் சிறந்தது. வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள். கண் பார்வையைப் பொறுத்தவரையில் கலங்காதே. இன்றுள்ள நிலையில் வைத்திய சாஸ்திரம் உன் கண் பார்வை மீள்வது கடினமென்று தீர்ப்பளிக்கலாம். ஆனால் தினசரி விஞ்ஞானம் முன்னேறி வரும் உலகில் நாளையோ, நாளை மறு தினமோ உன் கண் பார்வை மீள்வது இலகுவான காரியம் ஆகிவிடலாம். முன்னர் பயங்கரமான சத்திர சிகிச்சைகள் என்றூ கருதப்பட்ட பல இன்று மிக இலகுவானவை ஆகிவிட்டன. நீ இன்னும் இளைஞன். பொறுமை பலனைத் தரும். பொறு அஞ்சாதே. வெறி நிச்சயம்” என்று எழுதியிருந்தான் சுரேஷ்.

இவற்றை நன்னித் தம்பி வாசித்துக் காட்டிய போது ஸ்ரீதர் “நன்னித்தம்பி, சுரேஷைப் பற்றி என்ன நினைக்கிறாய்? நான் இவ்வீட்டின் தனிப்பிள்ளையாகப் பிறந்துவிட்டேன். எனக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவன் கூட இப்படி எனக்காகத் துடிதுடித்திருப்பானோ என்னவோ?” என்றான்.

நன்னித்தம்பி “உண்மைதான். சுரேஷின் கடிதம் தேறுதளிப்பதாகவே இருக்கிறது. அவர் சொல்வது போலத் தம்பிக்கும் கண் பார்வை மீண்டே தீரும். பயப்பட வேண்டாம்.” என்றார்.

இவை இங்கே நடந்து கொண்டிருக்க, கொழும்பிலே பத்மா தனது வாழ்க்கைப் பாதையில் மேலும் ஓர் அடி எடுத்து கலந்து விட்டாள். இவ் விஷயத்தில் அடுத்த வீட்டு அன்னம்மாக்கா அவளுக்குப் பேருதவி செய்தாள்.

வழக்கம் போல, வாசம் வீசும் சூடான தோசைகளைச் சாப்பிட்டுக் கொண்டே அன்னம்மாவிடம் விஷயங்களை எடுத்து விளக்கினாள் பத்மா. ஸ்ரீதரின் கண்கள் குருடாகிவிட்டதை விவரமாகக் கூறி “நான், அவரைக் கட்டத்தான் வேண்டுமா?” என்று கேட்டாள் அவள்.

அதைக் கேட்ட அன்னம்மாக்கா “உனக்கென்ன பைத்தியமா? இரண்டு கண்ணும் குருடான கபோதியை யாராவது கல்யாணம் செய்வார்களா? விடு கதையை.” என்றான் வெடுக்கென்று.

பத்மா அதற்கு “என்றாலும் அக்கா எனக்கு ஸ்ரீதரை நினைத்தால் பாவமாயிருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை.” என்றாள்.

அன்னம்மாக்கா “குருடனைக் கல்யாணம் கட்டினால் ஒரு நன்மை மட்டும் ஏற்படும்.” என்று கூறினாள்.

“அது என்ன?”

“அவன் உன்னை அடிக்க வந்தால் இலகுவில் தப்பித்துக் கொள்ளலாம். நீ கேள்விப்பட்டதில்லையா? “குருடன் பெண்டாட்டியை அடித்த மாதிரி” என்று தமிழில் ஓர் வசனமிருக்கிறது. அதைத் தவிரக் குருடனைக் கல்யாணம் செய்வதால் வேறு நன்மை ஒன்றுமே இல்லை.”

பத்மா அதைக் கேட்டுச் சிறிது நேரம் ஒன்றும் பேசாமலிருந்தாள்.

தோசைக் கல்லில் தோசை மாவைச் ‘சொய்’ என்று வார்த்துக் கொண்டே அன்னம்மா சிறிது நேரம் செல்ல மீண்டும் பேசினாள்.

“அத்துடன் நீயோ துடிதுடிப்பான பெண். வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுபவள். ஆனால் யாருக்குத் தான் அந்த ஆசையில்லை? அப்படிப்பட்ட நீ குருடனைக் கட்டிக் கொண்டு என்ன இன்பம் காண்பாய்” என்றாள்.

“அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும் அக்கா!”

“பத்மா, நீ என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? எனக்கெல்லாம் தெரியும். சிங்காரவேலு சொன்னான். நீ தினசரி மோட்டார் சைக்கில் ஊர் சுற்றுகிறாயாமே, அந்த மீசைக்கார மாப்பிள்ளையைக் கட்ட வேண்டியதுதானே.”

பத்மா நாணத்தால் சிறிது தலை குனிந்ததாளென்றாலும் விஷயத்தைத் தான் தன் வாயால் கூறாமல் அன்னம்மாவே கூறிவிட்டது அவளுக்குத் திருப்தியையே தந்தது. காரியத்தை இலகுவில் சாதிக்க வழி பிறந்து விட்தாக அவளுக்குத் தோன்றியது.

“அது சரி அக்கா, ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் ?”

” நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பேசாமலிரு. நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு கேள்வி – புது மாப்பிள்ளையின் பெயரென்ன? கமலநாதன் தானே?”

“ஆமக்கா, கமலநாதன் தான். விமலா-லோகாவின் அண்ணன்.”

இவ்வாறு சொல்லிக் கொண்டே பத்மா அன்னம்மாவைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். “அன்னம்மாக்கா, எனக்கு ஓர் அம்மாவைப் போல” என்று கூறினாள் அவள்.

அன்னம்மா சிரித்துக் கொண்டு “காரியம் முடியும் வரை எல்லோரும் இப்படித் தான் பேசுவார்கள். காரியம் முடிந்ததும் நீ யாரோ நான் யாரோ?” என்றாள்.

“சத்தியமாய் நான் அப்படிச் செய்ய மாட்டேன்.” என்றாள் பத்மா.

பத்மா சொல்வதை “ஆம்” என்று ஆமோதிப்பது போல தோசைக் கல்லில் அன்னம்மாக்கா வார்த்த தோசை ‘சொய்’ என்று சப்தித்தது. இதற்கிடையில் குசுமா அங்கே வர, பேச்சு வேறு திசைக்குத் திரும்பியது.

அன்று பிற்பகல் அன்னம்மா ஸ்ரீதருக்குக் கண் குருடான செய்தியைக் கூறியதும் பத்மாவின் தந்தை பரமானந்தர் திடுக்கிட்டு விட்டார். “பாவம், நல்ல பையன். இப்படி நேர்ந்ததே” என்று பதைபதைத்த அவர் தொடர்ந்து, “ஆரம்பத்திலேயே இந்தக் கல்யாணம் நடக்குமா என்று சந்தேகிக்கவே செய்தேன். கோடீஸ்வரருக்கும் குச்சு வீட்டுக்கும் சரி வருமா என்று யோசித்தேன். நான் நினத்தது போலவே ஆகிவிட்டது.” என்றார். கமலநாதனைப் பற்றிக் கூறியதும் “பத்மாவுக்கும் இஷ்டமென்றால் எனக்கும் இஷ்டம்தான். அவள் இஷ்டம் போலவே செய்துவிடலாம். ஆனால் கமலநாதன் வீட்டார் என்ன சொல்வார்களோ?” என்றார் பரமானந்தர். “அதெல்லாம் என் பொறுப்பு” என்றாள் அன்னம்மா.

இது நடந்த மறு தினம் கொழும்பு சவோய் தியேட்டரில் பல்கனி சீட்டில் தன் காதலன் கமலநாதன் தோளில் சாய்ந்து பிற்பகல் மாட்டினிக் காட்சி பார்த்துக் கொண்டிருந்த பத்மா அவன் காதில் இரகசியமாக “எங்கள் கல்யாணம் முடிந்ததும் என்னை எங்கே தேன் நிலவுக்கு அழைத்துச் செல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“தேன் நிலவா? அதுதான் கொள்ளுப்பிட்டியில் முடிந்து விட்டதே?” என்று புன்னகையோடு கூறிய கமலநாதன் “இருந்தாலும் உத்தியோக பூர்வமான தேன் நிலவு வேண்டுமானால் நூரளைக்குப் போவோம்” என்றான்.

“அது நல்லதுதான். நான் நூரளைக்கு முன் ஒரு போதும் பொனதில்லை” என்றாள் பத்மா.

திரையில் காதலர்கள் தம்மை மறந்த பரவச நிலையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து பத்மாவும் கமலநாதனும் தம்மை மறந்தார்கள். வார நாட்களில் மாட்டினிக் காட்சிக்கு பல்கனியில் பொதுவாக ஆட்கள் குறைவுதான். அப்படி வந்திருந்தவர்களிலும் பலர் பத்மா-கமலநாதன் போன்ற காதல் ஜோடிகளே. அவர்களும் தம்மவர்களுக்குத் தெரியாமல் இருளையும் தனிமையையும் நாடியே அங்கு வந்திருந்தனர். சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனால் ஏச்சுமில்லை பேச்சுமில்லை அல்லவா? இந்தச் சூழ்நிலை பத்மாவுக்கும் கமலநாதனுக்கும் பெருந்துணையாய் அமைந்தது. இருளிலே ஒருவருக்கொருவர் இடையூறு செய்யாமல் சல்லாபம் செய்து கொண்டிருந்த பல காதல் ஜோடிகளில் தாமும் ஒரு ஜோடியாகக் கலந்து கொண்டார்கள் அவர்கள்.

பகல் வேளைகளில் ஸ்ரீதர் ‘அமராவதி’ வளவின் பெரிய தோட்டத்தில், தாமரைத் தடாகத்துக்குப் பக்கத்தில் நிழல் மரங்களின் கீழே தன் நேரத்தைக் கழிக்கும் பழக்கத்தைச் சமீப காலமாக மேற்கொண்டிருந்தான். பாக்கியமோ ஒரு வேலைக்காரனோ அவனுக்குப் பக்கத்தில் எப்பொழுதும் இருப்பார்கள். அவள் செளகரியமாக உட்கார நாற்காலிகள், நிலத்தில் சிரிக்க ஜமுக்காளம், உண்ணுவதற்குச் சிற்றுண்டிகள். குடிப்பதற்குச் சர்பத், கோப்பி போன்ற பான வகைகள் எல்லாம் அவனுக்கங்கே தினசரி காலையில் கொண்டு போய் வைக்கப்படும். சிறிய “ரெக்கோர்ட் பிளேயர்” ஒன்றும், இசைத் தட்டுகளும் கூட அங்கே கொண்டு போய் வைக்கப்படும். ஓரொரு சமயங்களில் ஸ்ரீதர் அம்மாவைக் கொண்டு கதைப் புஸ்தகங்களை வாசிக்கச் செய்வான். அவன் சமீப காலமாக ஸ்ரீதரின் விருபத்திற்கிணங்க மகாபாரதத்தை வாசிக்க ஆரம்பித்திருந்தான்.

அம்மாவைத் தவிர இன்னொரு தோழியும் அவனுடன் அங்கு கூட இருந்து அவனுக்கு இன்பமளிப்பது வழக்கம். மோகனாதான் அது.

`ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் தன் காதலி பத்மாவை ஒரு சிறிதும் மறக்க வில்லை. தந்தையாரே மண முடிக்கச் சொன்னாலன்றித் தான் பத்மாவை மண முடிக்க மாட்டான் என்பது தானே அவன் செய்து கொண்ட ஒப்பந்தம்? யாருக்குத் தெரியும்? ஒரு வேளை தந்தையின் மனமே மாறக் கூடலாம் என்றும் அவன் சில சமயங்களில் எண்ணுவதுண்டு. அதற்காகக் காத்திருப்பது என்றும் முடிவு செய்தான் அவன். ஆனால் இப் பிரச்சினைக்குச் சுமூகமான முடிவு ஏற்பட்டாலன்றிப் பத்மாவுடன் கடிதத் தொடர்போ வேறெந்தத் தொடர்போ கொள்ளுவதில் பொருளில்லை என்றது அவனுள்ளம். ஆகவே அவன் இது விஷயத்தில் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும், அவன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ‘பத்மா பத்மா’ என்றெழும்பிய நினைவலைகளை அவனால் எதிர்த்து நிற்க முடியவில்லை.

ஒரு நாள் சிவநேசர் தாமரைத் தடாகத்துக்கு அருகே ஸ்ரீதர் வழக்கமாக இருக்கும் இடத்துக்கு வந்த போது, அவன் அங்கே புற்றரையில் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு மோகனாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார். பளபளக்கும் சிறகுகளுடன் விளங்கிய பஞ்சவர்ணக் கிளி அவன் திரண்ட கைகளில் வீற்றிருந்த காட்சி பார்ப்பதற்கு அழகாயிருந்தது. கறுப்புக் கண்ணாடியுடனும் பூக்களிட்ட புஷ் கோட்டுடனும் விளங்கிய ஸ்ரீதரை அப்பொழுது பார்த்த எவருமே ஒரு கண்ணற்ற கபோதி என்று எண்ணியிருக்க முடியாது. அத்தகைய கம்பீரத் தோற்றத்துடன் விளங்கினான் அவன்.

அரச குமாரன் போல் விளங்கிய அவனை ஆசையோடு பார்த்த சிவநேசரை மோகனாவின் பேச்சு நிலை குலைய வைத்தது. அது ‘பத்மா பத்மா’ என்று கூவியது. அக் கூவல் வெறும் மூன்றெழுத்து வார்த்தைகளாகத் தொனிக்கவில்லை அவருக்கு. ஏக்கத்திலும் தாபத்திலும் தோய்ந்தெடுத்த சொற்களாக, ஒரு காதலனின் இதயக் குமுறலிலே பொங்கி எழுந்த வார்த்தைகளாக வெளி வந்தன அவை.

“சொல்லிக் கொடுத்தவன் தன் உணர்ச்சி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி உச்சரித்திருக்கிறான் அவ்வார்த்தையை. கிளியும் அவ்வாறே கற்றுவிட்டது’” என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அந்த நினைவு வந்ததும் அவர் மனதில் இனந் தெரியாத ஒரு கலவரம் ஏற்பட்டது. அங்குமிங்கும் அசையாது மகனையும் கிளியையுமே பார்த்து நின்றார் அவர்.

கிளி ‘பத்மா பத்மா’ என்ற சோகக் குரல் எழுப்பியது. இடது கையில் இருந்த அதன் முதுகைத் தன் வலது கரத்தால் தடவிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

21-ம் அத்தியாயம்: குருடனுக்குத் திருமணமா?

சிவநேசர் ஆங்கில நூல்களை வாசித்தறிவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வந்தாரோ, அவ்வளவு ஆர்வம் தமிழ் நூல்களையும் வட மொழி நூல்களையும் கற்பதிலும் காட்டி வந்தார். சிறு வயதில் அவரது தந்தையார், அன்று வாழ்ந்த பெரிய இடத்து மனிதரின் வழக்கப்படி தமது வாழ்க்கையையே முற்றிலும் ஆங்கிலமயமாக்கி இருந்தார். அதன் பயனாக வீட்டில் ஆங்கிலத்திலேயே எல்லோரும் பேசினார்கள். பிள்ளைகளின் படிப்பிலும் ஆங்கிலத்துக்கே இடம் தரப்பட்டது. தமிழ்க் கலாசாரத்தின் சின்னங்களான தலைப்பாகை போன்றவற்றுக்கு ‘அமராவதி’யில் என்றும் முக்கிய இடமிருந்த போதிலும் தமிழ் மொழிக்கு இரண்டாவது இடமே தரப்பட்டது. தலைப்பாகை அந்தஸ்தைத் தருவதாகவும், தமிழ் மொழி அந்தஸ்தைக் குறைப்பதாகவும் கருதப்பட்டதே இதற்குக் காரணம். தலையில் தலைப்பாகையும் வாயில் ஆங்கிலமுமே ‘ஒண்ணாந்தர’ அந்தஸ்து என்று எண்ணப்பட்டது. இந்நிலையை மாற்ற அவர்கள் குடும்பத்தில் முதல் நடவடிக்கை எடுத்துக் கொண்டவர் சிவநேசரே.

சிவநேசர் என்றும் அறிவிலே அளவில்லாத தாகங் கொண்டவர். பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க ஞானிகளின் கருத்துகள் தொடக்கம் திருக்குறள், பகவத் கீதை வரைக்கும் அறிவுலகின் சிறந்த சிருஷ்டிகளிலெல்லாம் புகுந்து வெளி வந்தவர் அவர். ஆரம்பத்தில் கீழை நாட்டு நூல்களைக் கூட, ஏன் திருமூலரின் திருமந்திரத்தைக் கூட ஆங்கில மொழி பெயர்ப்பில் தான் கற்றார். ஆனால் நாளடைவில் இவ்வித படிப்பு அவருக்குத் திருப்தியளிக்காது போகவே, ஒரு சமயம் தென்னாட்டில் சிதம்பரத்துக்குப் போயிருந்த போது, அங்கே தாம் சந்தித்த ஒரு சிறந்த செந்தமிழ் வட மொழிப் பண்டிதரைத் தமக்கு இந்த மொழிகளைப் புகட்டுவதற்காகத் தம்முடன் கூடவே அழைத்து வந்துவிட்டார் அவர். இவ்வாறு இலங்கை வந்து சேர்ந்தவரே சின்னைய பாரதி அவர்கள்.

சின்னைய பாரதியிடம் அவர் வட மொழியையும், தமிழையும் ஒழுங்காகக் கற்றதோடு தமது குடும்ப முகாமையில் நடைபெற்ற ஒரு பாடசாலையில் அவரைத் தமிழ்ப் பண்டிதராகவும் நியமித்து விட்டார். சின்னைய பாரதியார் இலங்கை வரும் போது அவருக்கு வயது இருபத்தேழு. சிவநேசருக்கோ முப்பது வயதிருக்கும். இப்பொழுதோ இருவரும் ஐம்பத்தைந்தைத் தாண்டி விட்டார்கள். சின்னைய பாரதியார் பிள்ளை குட்டிகளுடன் ஒரு பெரிய குடும்பஸ்தராகியும் விட்டார். பாடசாலையில் கிடைக்கும் சம்பளம் போக, பாரதிக்கு சிவநேசரும் தாராளமாகப் பண உதவி செய்து வந்தார். அத்துடன் அவர் வசிப்பதற்குப் பெரிய வீடும் வளவும் கூடக் கொடுத்திருந்தார்.

சின்னைய பாரதியார் ஒவ்வொரு நாளும் இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை சிவநேசரைக் காண வருவது வழக்கம். அப்பொழுது இருவரும் நூல்களைப் பற்றியும் அறிவுப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட பிரச்சினைகள் இல்லாத நேரங்களில் இருவரும் சிவநேசரின் பெரிய நூல் நிலைய அறையில் வெவ்வேறு இடங்களில் இருந்து நூல்களை வாசிப்பார்கள். குறிப்பெழுதுவார்கள். கட்டுரைகள் கூட எழுதுவார்கள். சின்னைய பாரதியார் சமீபகாலமாகத் திருக்குறள், பகவத் கீதை பற்றி ஓர் ஒப்பியல் ஆராய்ச்சி நூலை எழுதிக் கொண்டிருந்தார். சிவநேசரின் எண்ணத்தில், கருத்துகளைப் பொறுத்தவரையில் பாரதியர் ஒரு கர்நாடகப் பேர்வழி. இதன் காரணமாக சில சமயம் அவரது கருத்துகளை வாசித்துவிட்டு, சிவநேசர் சிரித்துவிடுவார். நமது கருத்துகளை எடுத்துரைத்துத் திருத்தங்கள் செய்ய ஆலோசனைகளைக் கூறுவார்.

ஸ்ரீதரின் கண்கள் குருடான பிறகு அவர்களின் இவ்விரவுச் சந்திப்பு சில காலம் நின்று போயிருந்தது. சிவநேசரின் மனம் ஒரு நிலையில் இல்லாததே இதற்குக் காரணம். ஆனால் காலம் செல்லச் செல்ல நிலைமை மாறியது. சிறிது சிறிதாக மீண்டும் புத்தக உலகில் மூழ்கலானார் சிவநேசர். பாரதிக்கும் அவருக்குமிடையில் பழைமை போல் உரையாடல்களும் ஆரம்பித்தன.

சிவநேசரும் பாரதியும் ஓரிரவு இவ்வாறு “அமராவதி”யின் சலவைக்கல் தளமிட்ட விறாந்தையில் உட்கார்ந்து திருமூலர் திருமந்திரத்தின் சில செய்யுட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, மாடியில் ஸ்ரீதரின் அறையிலிருந்து மோகனாவின் தத்தை மொழி கேட்டது. இரண்டு மூன்று தினங்களின் முன்னர் காலை வேளையில் தோட்டத்தில் கேட்ட அதே காதலின் ஏக்க மொழிகளே அவை. “பத்மா பத்மா” என்ற உள்ளத்தை உருக்கும் ஓலம்.

சிவநேசர் அதைக் கேட்டதும் நிலை குலைந்து போனார். “திருமந்திரத்தை” ஒரு பக்கம் மூடி வைத்து விட்டுச் சிறிது நேரம் கிளியின் கூவலை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். எங்கும் பேரமைதி சூழ்திருந்த இரவிலே “பத்மா பத்மா” என்று கிளியோசை பலமாக ஒலித்தது. சின்னைய பாரதியும் கையில் வைத்திருந்த புத்தகத்தை மடியில் குப்புற வைத்துவிட்டு சிவநேசரின் கலவரமடைந்த முகத்தை நோக்கினார்.

“பாரதி. மோகனாவின் ஓலத்தைக் கேட்டாயா? அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றார் சிவநேசர்.

“நினைப்பதற்கு என்ன இருக்கிறது? பத்மா என்ற வார்த்தையை மிகவும் தெளிவகவும் உரமாகவும் கிளி மிழற்றுகிறது” என்றார் பாரதி.

“அவ்வளவுதானா நீ கவனித்தது? அதில் தோய்ந்துள்ள உணர்ச்சி உன் உள்ளத்தைத் தொடவில்லையா?” என்றார் சிவநேசர்.

இதற்கிடையில் மீண்டும் மோகனா “பத்மா பத்மா” என்று கதறியது.

பாரதி திடுக்கிட்டுப் போனார். ஆம். சிவநேசர் கூறியது உண்மைதான். இருளையும் அமைதியையும் பீறிவந்த அந்த ஒளியிலே கிளி தன் உள்ளத்தின் சோகத்தையும் ஏக்கத்தையும் பத்மா மீது தான் கொண்ட பரிவையும் கலந்து விட்டிருந்தது போன்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அது சாதாரண கிளிப் பேச்சாகத் தோன்றவில்லை. ஓர் மனித இதயத்தின் காதற் குமுறலிலே பிறந்த ஏக்கப் பாட்டாகக் கேட்டது பத்மா என்ற அச்சொல்.

“ஆம் ஐயா. நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. உள்ளத்தை ஈர்க்கும் உணர்ச்சிக் குமுறலாக ஒலிக்கிறது மோகனாவின் குரல். அது பிரிவு நோயினால் வாடும் ஒரு தலைவனின் குரல் போல் ஒலிக்கிறது எனக்கு. சங்க காலத்துப் புலவர் ஒருவர் இதைக் கேட்டிருந்தால் இதை வைத்து ஓர் அகத்துறைச் செய்யுளையே பாடி விட்டிருப்பார்.”

“பாரதி, கிளி செய்யும் ஓசையானாலும் இது கிளியின் குரலல்ல. ஒரு காதலனின் குரல்தான் அது. என் மகன் ஸ்ரீதரின் குரல்” என்றார் சிவநேசர்.

“ஸ்ரீதரின் குரலா? ஓ! இப்பொழுது ஞாபகம் வருகிறது. அம்மா ஒரு சமயம் சொன்னார். ஸ்ரீதர் கொழும்பில் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும் நீங்கள் அதைத் தடுத்துவிட்டதாகவும் அந்தப் பெண்தான் பத்மாவா?”

“ஆம். அவளை நினைத்து ஸ்ரீதர் தனிமையில் எழுப்பும் குரலைக் கிளி அப்படியே பயின்று ஒப்புவிக்கிறது. அதனால் தான் அதனைக் கிளியோசை என்னாது காதலனின் குரல் என்று நான் குறிப்பிட்டேன். பாரதி, இந்தக் குரலை நான் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் ஒரு தடவை கேட்டேன். இப்பொழுது இரண்டாம் முறையாகக் கேட்கிறேன். இக்கிளியோசை ஸ்ரீதரின் நெஞ்சைத் திறந்து காட்டுவது போல் வேறு எதுவும் காட்ட வில்லை. மோகனா தன் ஆசை எஜமானனுக்காகப் பரிந்து பேசுவதற்கு இந்த உபாயத்தை அனுஷ்டிக்கிறது. ஆம், நான் தீர்மானித்து விட்டேன். ஸ்ரீதர் இஷ்டம் போல் பத்மாவை மணக்க நான் அனுமதிக்கப் போகிறேன். ஸ்ரீதரின் உள்ளம் இப்படி ஏங்கிக் கொண்டிருப்பதை என்னால் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.”

“ஐயாவின் முடிவை நான் வரவேற்கிறேன். மனம் போல் மாங்கல்யம் அமைய வேண்டுமென்பார்கள். காதலுக்கு எதிரான நாம் ஒரு போதும் தடை விதிக்கக் கூடாது. ஆனால் இவை உங்களுக்கு எடுத்துரைக்க நான் அஞ்சினேன். உங்களைப் போன்ற எல்லாம் தெரிந்தவருக்குப் புது ஆலோசனைகள் அவசியமில்லை. நீங்களே சரியான முடிவுக்கு வந்துவிட்டீர்கள்”

சிவநேசர் சின்னைய பாரதியிடம் பத்மா விஷயமாகக் கொழும்பு போவதற்கு ஒரு நல்ல நாள் பார்க்கும்படி உத்தரவிட்டார். அடுத்த நாட் காலை நல்ல நேரம் பார்த்துக் கொண்டு வருவதாகக் கூறி விடை பெற்றுச் சென்றார் பாரதி.

இதன் பின் விஷயங்கள் மிக விரைவாக முன்னேறின. பாக்கியத்திடம் தமது புதிய முடிவைப் பற்றிக் கூறிய சிவநேசர் “ஸ்ரீதர் எங்கள் குடும்பத்தின் ஒரே குருத்து. அவன் எப்படியும் திருமணம் செய்தேயாக வேண்டும். ஸ்ரீதரின் கண் பார்வை கெட்டதும் கந்தப்பசேகரர் அவனைக் கை விட்டுவிட்டார். ஆகவே எங்களுக்கும் வேறு வழியில்லை. அத்துடன் அவனுக்கும் இஷ்டமான இடமிது. பேசிப் பார்ப்போம்.” என்றார்.

பாக்கியத்துக்கு ஒரே ஆனந்தம். இது விஷயம் நிறைவேறினால் ஸ்ரீதரின் சிரித்த முகத்தைப் பார்க்க முடியுமே என்பது அவளது எண்ணம். “அப்படியானால் இன்னும் இரண்டு மூன்று நாட்களிலேயே கொழும்பு போய்க் காரியங்களை முடிப்போம்” என்றாள் அவள்.

ஆனால் சிவநேசர் திடீரென்று “பத்மா என்ற அந்தப் பெண் ஸ்ரீதர் கண் பார்வை இழந்தவள் என்றறிந்த பிறகும் அவனை மணமுடிக்கச் சம்மதிப்பாளா? எங்கள் முயற்சி வீண் முயற்சி ஆகுமோ தெரியவில்லையே” என்றார்.

பாக்கியம் “ஸ்ரீதர் கூறுவதன் படி பத்மா அற்புதமான பெண். அவனை உண்மையாக நேசிப்பவள். அப்படிப்பட்ட பெண் தன் காதலன் கண் பார்வையை இழந்ததற்காக அவனை வெறுத்தொதுக்க மாட்டாள். உண்மையில் இப்படிப்பட்ட துர் அதிர்ஷ்டம் அவனுக்கு நேர்ந்ததே என்று அனுதாபமும் சேர்ந்து முன்னிலும் பார்க்க அதிக அன்பு காடுவாள்” என்றாள்.

முதலில் பாக்கியத்தால் சிவநேசரின் மன மாற்றத்தை நம்பவே முடியவில்லை. மலையை அசைத்தாலும் அசைக்கலாம், தன் கணவனின் மனதை ஒரு போதும் அசைக்க முடியாது என்பதே அவள் சிவநேசருடன் நடத்தி வந்த நீண்ட கால இல்லற வாழ்க்கையின் அனுபவம். ஆனால் அசையாத மலை கூட பூகம்பத்தால் நிலம் கொந்தளிக்கும் போது தன் இடம் பெயரத் தானே செய்கிறது? சிவநேசர் மனமும் மோகனாவின் ஓலம் ஏற்படுத்திய புயலிலே அசையத் தொடங்கிவிட்டது. அதை அவரே பாக்கியத்துக்கு விளக்கியும் விட்டார்.

“பாக்கியம், நீ மோகனா “பத்மா” என்று கூச்சலிட்டதைக் கேட்டிருக்கிறாயா? ஸ்ரீதர் கிளிக்கு அந்த வார்த்தையைப் பேசப் பழக்கி வைத்திருக்கிறான். அதைக் கேட்க, என்னால் சகிக்க முடியவில்லை. இதற்கு ஒரு முடிவு வேண்டும். அந்தக் கிளிப் பேச்சுத்தான் என் மனத்தை மாற்றி விட்டது” என்றார் அவர்.

பாக்கியம் இந்தச் சுப செய்தியை ஸ்ரீதரிடம் சொல்ல அவன் படுக்கை அறைக்கு ஓடோடிச் சென்றாள். ஆனால் அங்கே அவள் கண்ட காட்சி அவளைத் திகைக்க வைத்தது. ஸ்ரீதர் கட்டிலிலே தலையணைக்கு மேல் தலையணையாக அடுக்கி வைத்து, அதில் சாய்ந்து கொண்டிருந்தாள். சோகத்தின் உருவாய்க் காணப்பட்ட அவன் படுக்கப் போவதற்காகக் கறுப்புக் கண்னாடியைக் கழற்றி விட்டிருந்ததால் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகிக் கொண்டிருப்பதைக் கண்டு துடி துடித்தாள் அவள்.

“ஸ்ரீதர், என்ன இது? எதற்காக அழுகிறாய்?” என்றாள் பாக்கியம்.

“எதற்காகவா? எனக்கா அழுவதற்குக் காரணமில்லை. கண்ணிழந்ததற்காக அழலாம். இப்பொழுது பத்மாவுக்காக அழுது கொண்டிருக்கிறேன். அம்மா, குருட்டுக் கண்களால் பார்க்க முடியாதிருக்கலாம். ஆனால் அவற்றால் அழ முடியும். என் கண்களால் அந்த உபயோகமாவது எனக்கிருக்கிறதே. அது போதும்.” என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் கண் கலங்கி நின்றாள். “ஸ்ரீதர், இனி மேல் நீ அழ வேண்டியதில்லை. உன் பத்மா உனக்குக் கிடைக்கப் போகிறாள். அப்பா மனம் மாறிவிட்டார். அதைச் சொல்லத்தான் இங்கே ஓடோடி வந்தேன்” என்றாள்.

ஸ்ரீதர் “உண்மையாகவா?” என்றான்.

“ஆம். எல்லாம் உன் மோகனா செய்த வேலை. அது பத்மா பத்மா என்று கூவுவதைக் கேட்ட அவரது அசையாத மனம் கூட அசைந்துவிட்டது. நாளை அல்லது மறு தினம் பத்மாவைப் பெண் பார்க்க நாங்கள் இருவரும் கொழும்பு போகிறோம் ஸ்ரீதர்,” என்றாள் பாக்கியம்.

“இல்லை அம்மா, அது மோகனாவின் வேலையல்ல. மோகனாவின் பேச்சு அவரது மனதைத் தொட்டிருக்கலாம். ஆனால் கொட்டாஞ்சேனை மாரியம்மனுக்கு என்னுள்ளத்தில் இரகசியமாக நான் நேர்த்திக் கடன் வைத்திருக்கிறேன். அப்பா மனம் மாற வேண்டும். பத்மாவை நான் அடைய வேண்டுமென்று கேட்டிருந்தேன். அது பலித்து விட்டது. அம்மா, பத்மாவின் வீடும் கொட்டாஞ்சேனையில் தான். அங்கு போகும் வழியில் மாரியம்மனுக்கு என் பெயரால் தேங்காய் உடைக்க மறக்காதே.” என்றான்.

பின் தாயும் மகனும் வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். மோகனாவைக் கூண்டுக்கு வெளியே எடுத்துக் கட்டிலில் வைத்துக் கொஞ்சி விளையாடினான் ஸ்ரீதர். அதற்குத் தன் கையாலேயே பாலும் பழமும் ஊட்டி மகிழ்ந்தான் அவள். “பத்மா வரட்டும். மோகனாவுகுப் புதிய கூடொன்று செய்விக்க வேண்டும். வெள்ளிக் கூடு. அதில் மோகனா உட்கார்ந்து ஊஞ்சலாட வெள்ளி வளையமொன்றும் தொங்க விட வேண்டும்,” என்று கூறினான் அவன்.

பாக்கியம், “ஸ்ரீதர், பத்மாவுக்கு உன் கண் பார்வை போனது தெரியுமோ என்னவோ? அது தெரிந்தாள் என்ன சொல்வாளோ?” என்றாள்.

அதற்கு ஸ்ரீதர், “என்னம்மா நீ அப்படிச் சொல்கிறாய்? உனக்குப் பத்மாவைப் பற்றித் தெரியாததால் இப்படிப் பேசுகிறாய். அவள் என்னை உண்மையாக நேசிப்பவள். ஒரு போதும் அவள் என்னை நிராகரிக்க மாட்டள். தன் கணவன் நோயாளி என்பதற்காக நளாயினி அவனை நிராகரித்தாளா?? பத்மாவும் அப்படிப்பட்டவள் தான்” என்றான்.

அவன் நம்பிக்கை வீண் போவது நூற்றுக்கு நூறு நிறைவேறித் தன் குலம் தழைக்க வேண்டுமென்று மாவிட்டபுரம் முருகனை வேண்டிக் கொண்டாள் பாக்கியம்.

ஸ்ரீதர், “அம்மா, எனக்குக் கண் தெரியாவிட்டாலும், இருளிலே கூட, உன் உருவம் அப்படியே தெரிகிறது. அப்பாவின் உருவம், பத்மாவின் உருவம் யாவும் தெரிகின்றன. பிறவிக் குருடனுக்கு இவை கூடத் தெரியாதல்லவா? நான் இப்படிப்பட்ட காட்சிகளை மனதிலே இடையிடையே கற்பனை செய்து கொள்ளுகிறேன். அது எனக்கு நல்ல பொழுது போக்காயிருக்கிறது.” என்றான்.

பாக்கியம் ஸ்ரீதரின் காலம் மாறி வருகிறதென்றும், பத்மாவுடன் அவள் பார்வையும் சீக்கிரம் திரும்பிவிடும் என்றும் ஆறுதல் கூறினான். “ஆம் அம்மா, காலம் மாறி வருகிறதென்று தான் எனக்கும் தெரிகிறது. இல்லாவிட்டால் அப்பாவின் மனம் மாறியிருக்குமா?” என்றான்.

அதன் பின் பாக்கியத்தைத் தன்னுடனே இருந்து பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான் ஸ்ரீதர். “முடியாது. அப்பாவிடம் போய்க் கொழும்புப் பிரயாணத்தைப் பற்றிப் பேசவேண்டும். நீ படுத்துத் தூங்கடா. பெண்டாட்டியைப் பற்றி நினைத்துக் கொண்டு தூங்கு.” என்றாள் பாக்கியம், அவனை உற்சாகப்படுத்துவதற்காக.

ஸ்ரீதர் “போம்மா, நீ என்னைப் பரிகாசம் செய்கிறாய். நான் உன்னுடன் கோபம்” என்றான்.

அதன் பின் பாக்கியம் அறையை விட்டுப் போய்விட, ஸ்ரீதர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு ஆடினான், பாடினான், குதூகலித்தான். சிறிது நேரம் வானொலியில் இசை கேட்டான். அதன் பின் பத்மாவும் தானுமாகக் கொழும்பிலே மிருக வனத்திலும், கல்கிசைக் கடற்கரையிலும், கால்பேசிலும், ஐஸ்கிறீம் பார்லரிலும் சேர்ந்து கழித்த நேரத்தை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டான். “தனக்கு நல்ல காலம் வந்துவிட்டது. அதனால் தான் பத்மா கிடைக்கிறாள்” என்றெண்ணிய அவள் “தானாகவே மங்கிய கண் மீண்டும் தானாகவே ஒளி பெற்று விடலாம்.” என்று கூட எண்ணினான். அந்த எண்ணத்தில் தன் விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்தான் அவன். கண் இமைகளை மூடிக் கொண்டு “ஒளியே வா, ஒளியே வா” என்று சொல்லியவண்ணம் தன் கண்களைத் தன் விரல்களால் தடவி விட்டான் அவன். உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடப்பதாகக் கூறிக் கொள்ளுகிறார்கள். மாரியம்மா, என் கண்களென்னும் கதவைச் சற்றே திறந்துவிட மாட்டாயா? பத்மாவைப் பார்க்க எனக்கு என் கண்களைத் தர மாட்டாயா?” என்றெல்லாம் தனக்குள்ளே ஏதேதோ பேசிக் கொண்டான் அவன்.

“ஆண்டவனே, நான் காலையில் நித்திரை விட்டெழுந்து என் கண்களை விரிக்கும் போது அங்கே இருள் திரை தோன்றக் கூடாது. சூரியனின் ஒளியும் வீட்டின் சுவர்களும் மோகனாவின் வர்ணச் சிறகுகளின் அழகும் என் கண்களுக்குத் தெரிய வேண்டும். எனக்கு அருள் புரிவாய் கடவுளே” என்றூ சொல்லிக் கொண்டே படுக்கையில் படுத்தான் அவன்.

இவை நடந்து மூன்று தினங்கள் கழித்து கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’விலிருந்து சிவநேசரும் பாக்கியமும் கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் 48/12ம் இலக்க வீட்டை நோகித் தமது பிளிமத் காரில் புறப்பட்டார்கள். சின்னையபாரதி குறித்துக் கொடுத்திருந்த நல்ல நேரத்தில் கார் கொட்டாஞ்சேனையை நோக்கிப் புறப்பட்டது. கார்¢ல் சிவநேசரையும் பாக்கியத்தையும் டிரைவரையும் தவிர, கிளாக்கர் நன்னித்தம்பியும் இருந்தார். அவர் டிரைவருக்குப் பக்கத்திலிருக்க, சிவநேசரும் பாக்கியமும் பின்னாசனத்திலிருந்தார்கள். சிவநேசர் வெள்ளை தலைப்பாகையணிந்து மிகக் கம்பீரமாக விளங்கினார். பாக்கியம் வைர நகையும், தங்க நகையும் பட்டும் பீதாம்பரமுமாகக் காட்சியளித்தாள்.

கொலீஜ் ரோட்டுக்குத் திரும்பும் இடத்துக்குச் சமீபமாக மாரியம்மன் கோவில் வந்ததும், பாக்கியம் காரை நிறுத்தும்படி செய்து ஸ்ரீதர் கேட்டுக் கொண்ட பிரகாரம் தேங்காய் உடைத்தாள். “அம்மனே, மாரியம்மா, ஸ்ரீதரின் எண்ணமெல்லாம் வெற்றிகரமாக நிறைவேற வேண்டும்” என்று அவள் மாரியம்மனை வேண்டிக் கொண்டாள். அத்துடன் உண்டியலில் பத்து ரூபா நோட்டொன்றை இட்டாள்.

சிவநேசர் தம் வருகை பற்றி பத்மாவுக்கோ பரமானந்தருக்கோ முன்னறிவிப்பு கொடுக்கவில்லை. திடீரெனப் போயிறங்கி எல்லாவற்றையும் விரைவில் பேசி முடிவெடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு மீண்டு ஸ்ரீதரின் திருமணத்தைத் தாமதமின்றி முடித்துவிட வேண்டுமென்பது அவரது எண்னம். அதன்படி அவரது பிளிமத் கார் பத்மா வீட்டுக்கு முன்னால் போய் நின்றதும் வீட்டினுள்ளேயிருந்து அவரை பார்த்த பத்மா திகைத்துவிட்டாள். முதலில் ஸ்ரீதர் தான் வந்த்¢ருக்க வேண்டுமென்று எண்ணினாள் அவள். கமலநாதன் விஷயமாக அவள் வெகு தூரம் போய்விட்டதால் ஸ்ரீதரைச் சந்திருப்பதற்கு அவள் விரும்பவில்லை. இதனால் அவள் மனம் அதிக குழப்பமும் கலவரமுமடைந்தது. ஆனால் அந்தக் குழப்ப நேரத்தில் அவளுக்குக் கை கொடுத்துதவ நல்ல வேளையாக அடுத்த வீட்டு அன்னமாக்கா சமீபத்திலேயே இருந்தாள். அன்னமாக்கா காலையில் பலகார விற்பனையை முடித்துக் கொண்டு பத்மாவுடன் அரட்டையடிப்பதற்கு அங்கு வந்திருந்தாள்.

அன்னமாவின் அரட்டையெல்லாம் எப்பொழுதும் பத்மாவின் கல்யாண விஷயம் பற்றியதுதான். விதவையான அவளுக்குப் பத்மாவின் காதல் விவகாரங்களைப் பற்றிப் பேசுவதில் ஒரு திருப்தி. காலையில் அவள் பத்மாவிடம் கேட்ட முதற் கேள்வி “கல்யாணத்துக்கு இன்னும் நாள் குறிக்கவில்லையா?” என்பதுதான். இரண்டு மூன்று தினங்களின் முன்னர் அவள் கமலநாதனின் தாயாரைச் சந்தித்திருந்தாள். அப்பொழுது கமலநாதனின் தாயார் அன்னமாவிடம் தன் மகன் பத்மாவைத் திருமணம் செய்வதில் தனக்குத் திருப்தியே என்று கூறியிருந்தாள். அதை எடுத்துக் கூறி, “மாமிக்கு மருமகளை நன்கு பிடித்துப் போயிருக்கிறது.” என்று சொன்னாள் அன்னம்மா.

இப்படி அவர்கள் பல கதையும் பேசிக் கொண்டிருந்த போது தான் சிவநேசரும் பாக்கியமும் அங்கு வந்து இறங்கினார்கள். தந்தை பரமானந்தர் வெளிப்புறத்தில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். கார் சத்தத்தைக் கேட்டதும் அவர் பத்திரிகை வாசிப்பதை நிறுத்தி இத்தகைய பென்னம் பெரிய காரில் தம் வீட்டுக்கு வந்திருப்பது யார் என்று தமது மூக்குக் கன்னாடிக் கூடாகப் பார்த்தார்.

பத்மாவோ அன்னம்மாக்காவைக் கிள்ளி, “அன்னம்மாக்கா, இது ஸ்ரீதரின் கார். நான் உள்ளேயிருக்கிறேன். நீ போய் என்ன விஷயம் என்று பார்த்து வா. கமலநாதனோடு இவ்வளவு தூரம் போன பிறகு ஸ்ரீதரைக் காண நான் விரும்பவில்லை. எனக்கென்னவோ போலிருக்கிறது” என்றாள்.

அன்னம்மாவும் “சரி பார்த்து வருகிறேன்.” என்று வெளியே வந்தாள். பத்மாவோ வசதியான ஓர் இடத்தைத் தெரிந்தெடுத்து வந்தவர்களை யாருமறியாமல் கவனித்துக் கொண்டிருந்தாள்.

சிவநேசர் காரை விட்டிறங்கி கதவண்டை வந்து “பரமானந்தர் வீடு இது தானா” என்று கேட்டார். “ஆம்” என்று கூறிக் கொண்டே தம் இருக்கையை விட்டெழுந்து பரமானந்தர் கிளாக்கர் நன்னித்தம்பி “அமராவதி வளவு ஸ்ரீதர் தம்பியின் அப்பா சிவநேசப் பிரபு உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்” என்றார்.

“ஓ வாருங்கள்” என்று அவரை வரவேற்ற பரமானந்தர் சிவநேசரும் பக்கியமும் அமர்வதற்கு நாற்காலிகளைக் காட்டினார். அதன்பின் உபசாரப் பேச்சுகள் பரிமாறி முடித்ததும் சிவ நேசர் விஷயத்துக்கு நேரே வந்துவிட்டார்.

“என் மகன் ஸ்ரீதருக்கு உங்கள் மகள் பத்மாவைத் திருமணம் செய்து தரும்படி கேட்பதற்காகவே வந்திருக்கிறோம்.” என்றார் சிவநேசர்.

பரமானந்தருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. “அந்த எண்ணம் எனக்கும் இருக்கத்தான் இருந்தது. ஆனால் ஸ்ரீதர் மூன்று நான்கு மாதமாக இங்கு வரவுமில்லை. கடிதம் எழுதவுமில்லை. அதனால் நிலைமையில் குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது?” என்றார் அவர்.

சிவநேசர் “என்ன குழப்பம்?” என்றார்.

“ஸ்ரீதரை எதிர்பார்க்க முடியாது என்று போனதும், பத்மாவுக்கு வேறு திருமணத்துக்கு இங்கு ஒழுக்கு செய்து விட்டோம்,” என்றார் பரமானந்தர்.

“ஆனால் திருமணம் இன்னும் நடக்கவில்லையே?”

“இல்லை.”

“அப்படியானால் அந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு ஸ்ரீதர் – பத்மா திருமணத்தை நடத்த முடியாதா?”

“அது மிகவும் சிரமமான காரியமல்லவா? வாக்குறுதிகளை எப்படி மீறுவது?”

சிவநேசருக்கு இவ்வார்த்தைகள் ஏமாற்றத்தை அளித்தனவென்றாலும் சமாளித்துக் கொண்டு, “என் ஒரே மகன் ஸ்ரீதர். அவன் பத்மாவைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்வதில்லை என்று பிடிவாதமாயிருக்கிறான். ஆகவே கட்டாயம் நீங்கள் என் கோரிக்கையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.

“எனக்குச் சம்மதம்தான். ஆனால் பத்மா என்ன சொல்லுகிறாளோ?” என்றார் பரமானந்தர்.

“கூப்பிட்டுக் கேளுங்கள். கட்டாயம் அவள் ஒப்புக் கொள்வாள். ஸ்ரீதரை அவள் ஒருபோதும் நிராகரிக்க மாட்டாள் என்றாள் பாக்கியம்.

“சரி கூப்பிட்டுக் கேட்போம். அன்னம்மா, பத்மாவைக் கொஞ்சம் வரச் சொல்.” என்றார் பரமானந்தர். அன்னம்மா பத்மாவை அழைக்க உள்ளே சென்றாள்.

அன்னம்மா “என்ன விஷயம்?” என்றாள் பத்மா.

அன்னம்மா விஷயத்தை விளக்கினாள்.

“நான் என்ன செய்ய? எனக்கொன்றும் விளங்கவில்லை”

“விளங்குவதற்கு என்ன இருக்கிறது? குருடனைக் கட்டப் போகிறாயா? உன்னைப் போல் சகல வகையிலும் சிறந்த ஒரு பெண்ணை யாராவது ஒரு குருடனுக்குக் கொடுப்பார்களா? பணமிருக்கிறது என்ற திமிரிலே பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்.”

“அப்போது நான் என்ன சொல்ல?”

“என்ன சொல்வதா? முடியாது என்று சொல்லிவிடு.”

சிறிது நேரத்தின் பின்னால் பத்மா வெளியே வந்த போது பாக்கியம் அவளைக் கண்டு அப்படியே அசந்து போனாள். “அழகான பெண். வீட்டுக்கு அலங்காரமாயிருப்பாள். அவள் நிச்சயம் சம்மதிப்பாள்” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலுடன் அவளது முகத்தைப் பார்த்தாள் அவள்.

பரமானந்தர் பத்மாவைப் பார்த்து “உன்னை ஸ்ரீதருக்குக் கல்யாணம் பேசி வந்திருக்கிறார்கள். உன் விருப்பமென்ன?” என்று கேட்டார்.

பத்மா சிறிது நேரம் பேசாதிருந்துவிட்டு, பின்னர் பாக்கியத்தைப் பார்த்து “அவருக்கு இரு கண்களும் பொட்டையாகி விட்டன என்கிறார்களே. அது உண்மையா?” என்று கேட்டாள்.

இந்தக் கேள்வி சிவநேசரையும் பாக்கியத்தையும் திடுக்கிட வைத்துவிட்டது. பாக்கியம் அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “ஆம் உண்மை தான்” என்றாள். அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

“அப்படியானால் நீங்கள் குருட்டுப் பிள்ளைக்குப் பெண் கேட்க வந்திருக்கிறீர்கள். கண்ணில்லாதவரைக் கட்டிக் கொண்டு கஷ்டப்பட என்னால் முடியாது” என்றாள் பத்மா.

பத்மா கூறிய இவ்வார்த்தைகள் சிவநேசரையும் பாக்கியத்தையும் மட்டுமல்ல, பரமானந்தரைக் கூடத் திகைக்க வைத்து விட்டது.

“பத்மா, நீ அப்படிப் பேசக் கூடாது. ஸ்ரீதர் முன்னர் நல்ல கண்களோடு தானே இருந்தான்? அந்த நேரத்தில் நீ அவளைக் கல்யாணம் செய்திருந்து பின்னர் அவன் கண்கள் பொட்டையாயிருந்தால் நீ என்ன செய்திருப்பாய்?” என்றார் பரமானந்தர்.

“அவ்விதம் நடவாமல் கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார். அப்படிக் காப்பாற்றப்பட்ட பின்னரும் நாமாகவே போய்க் கஷ்டத்தில் மாட்டுவதா?” என்றாள் பத்மா.

இதற்கிடையில் அங்கு நின்று கொண்டிருந்த அன்னம்மாவும் பேசினாள். “தங்கச்சி சொல்வது சரிதானே? கண் தெரியாத மாப்பிள்ளையோடு காலம் கழிப்பது இலேசான காரியமா? இக் கல்யாணம் சரி வராது. இந்தப் பேச்சை இவ்வளவோடு விட்டுவிடுவதே நல்லது” என்றாள்.

சிவநேசருக்கு அதன்மேலும் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. “சரி வருகிறோம்.” என்று கிளம்பிவிட்டார் அவர். பாக்கியமும் எழுந்தாள். கிளாக்கர் நன்னித்தம்பியும் எழுந்து விட்டார்.

கார் ‘கிஷ்கிந்தா’வை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிவநேசர் முகத்தில் என்றுமில்லாத கவலை மட்டுமல்ல. கோபமும் பொங்கிக் கொண்டிருந்தது. பாக்கியமோ கலங்கிப் போயிருந்த தன் கண்களைத் தன் சேலையால் துடைத்துக் கொண்டிருந்தாள்.

பொங்கி வரும் அழுகைக்கிடையே “நான் என்ன செய்வேன்? ஸ்ரீதருக்கு என்ன சொல்லப் போகிறேன்?” என்றாள் அவள்.

கிளாக்கர் நன்னித்தம்பியோ, “தம்பிக்கு இந்தச் செய்தியைச் சொல்லக் கூடாது. இதை அவரால் தாங்க முடியாது” என்றார்.

அன்று ‘கிஷ்கிந்தா’வைச் சூழ்ந்த இருள் மிகவும் பயங்கரமாயிருந்தது. “அடுத்து என்ன செய்வது?” என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது சிவநேசரும் பாக்கியமும் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

– தொடரும்…

– இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ தொடராக வெளிவந்த நாவலிது. 

– மனக்கண் (தொடர் நாவல்), தினகரனில் வெளிவந்தது.

அ.ந.கந்தசாமி (8 ஆகத்து 1924 – 14 பெப்ரவரி 1968) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார்.சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டு இயங்கினார். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். ​​​​பதிவுகள்.காம் அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *