கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 1,822 
 
 

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

16-ம் அத்தியாயம்: யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இரண்டாவது முறையாக அரங்கேறவிருந்த “ஈடிப்பஸ் மன்னன்” நாடகத்திற்காகவும் தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ஸ்ரீதர் இரண்டு மூன்று தினம் கழித்து டிரைவர் சுப்பிரமணியத்துடன் தனது காரில் யாழ்ப்பாணம் புறப்பட்டான். புறப்படும் முன் வழக்கம் போல் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பரிசுகள் வாங்கத் தவறவில்லை. தாயைப் பொறுத்த வரையில் அவளுக்கு எது பிடித்தமென்பது அவனுக்குத் தெரியும். தென்னிலங்கையில் கிடைக்கும் பொருள்களில் அவளுக்குப் பிடித்தமானது முந்திரிக் கொட்டையும், கித்துள் கருப்பட்டியுமே. அவற்றை வேலைக்காரனை அனுப்பி வாங்காது, தானே புறக்கோட்டைச் சந்தைக்குச் சென்று வாங்கிக் கொண்டான். தந்தையைப் பொறுத்த வரையில் தத்துவ சாத்திரத்தில் அதிக ஈடுபாடுடைய அவர் சில காலமாக நீட்சே என்ற ஜெர்மானிய தத்துவ தரிசகரின் நூல்களையும் கட்டுரைகளையும் தேடித் தேடிச் சேகரிப்பது, அவனுக்குத் தெரியுமாதலால் லேக் ஹவுஸ் புத்தகசாலைக்குச் சென்று அங்கு புதிதாக வந்திருந்த நீட்சே எழுதிய நூல்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டான்.

பெரும் பணவசதியுள்ள சிவநேசரரால் இப் புத்தகங்கள் எதையும் நினைத்தவுடன் வாங்கிவிட முடியுமென்றாலும், அன்பு மகன் அவற்றை அக்கறையுடன் விலைக்கு வாங்கிப் பரிசாகக் கொண்டு வரும்போது, அவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஒரு தனி இன்பம் அவருக்கு ஏற்படும் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்திருந்ததே அவன் அவற்றை வாங்கிச் சென்றதற்குக் காரணம். அது போலவே தாய் பாக்கியமும் நினைத்தவுடன் எவ்வளவு முந்திரிக் கொட்டைகளையும் கருப்பட்டியையும் வாங்கிக் கொள்ளக் கூடியவளே என்றாலும் தமது கையிலிருந்து அவற்றைப் பெறும்போது அவற்றின் உருசி அவளுக்கு இரட்டிப்பாய் இருக்கும் என்பது ஸ்ரீதருக்குத் தெரியும். அன்பெனும் பாகில் தோய்த்தெடுத்த முந்திரிக் கொட்டைகள் சுவையில் விருந்தாயிருக்கும் என்பது அவள் அனுபவத்தில் கண்ட உண்மை. வேறெந்தத் தேன் பாகும் அந்தச் சுவையை அவற்றுக்கு அளித்துவிட முடியாது.

ஸ்ரீதர் இவ்வாறு கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்க, ‘அமராவதி’ தனது அருமை வாரிசை வரவேற்பதற்காகத் தடல் புடலாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. மாதத்திற்கு இரண்டு மூன்று தடவை வந்தால் கூட ஒவ்வொரு தடவையும் சிவநேசரும் பாக்கியமும் அவனுக்கு இராஜ வரவேற்பளிக்கத் தவறுவதில்லை. இம்முறையோ அவன் மூன்று மாதம் கழித்து வீட்டுக்கு வருகிறான். ஆகவே வரவேற்பு ஏற்பாடுகள் மிகவும் அமர்க்க்களமாயிருந்தன.

அவன் வருவதற்கு முதல் நாளே தாய் பாக்கியம் அவனது மாடி அறையை வேலைக்காரரைக் கொண்டு அப்பழுக்கில்லாமல் சுத்தம் செய்வித்து வைத்தாள். அவனது படுக்கைக்குப் புதிய விரிப்புகள் விரிக்கப்பட்டன. தலையணைகளுக்கு அழகான உறைகள் இடப்பட்டன். வெளியே இருந்த ரேடியோ கிராமும், புதிதாக வாங்கப்பட்ட பல இசைத்தட்டுகளும் அவன் படுக்கைக்கு அருகே கொண்டு போய் வைக்கப்பட்டன. இன்னும் படுக்கைக்கு அருகே முக்காலியில் இருந்த டெலிபோன் கிருமி நாசினியால் சுத்திகரிக்கப்பட்டு அத்தரால் வாசனையூட்டி வைக்கப்பட்டது. அறையில் நடுவே அழகான இரத்தினக் கம்பளம் ஒன்றும் விரிக்கப்பட்டது. ஸ்ரீதர் இவற்றை எல்லாம் விரும்பி அனுபவிப்பவன் என்பது அவன் தாய்க்கு நன்கு தெரிந்திருந்ததே அவன் இவ் விஷயங்களில் இவ்வளவு கவனமெடுத்ததற்குக் காரணம். சாதாரணமாக அவன் படுக்கையில் படுத்திருக்கத் தாய் பாக்கியம் கம்பளத்தில் உட்கார்ந்து வெற்றிலையை மென்று கொண்டு அவனோடு உரையாடுவது வழக்கம். அவ்வாறு உட்கார்ந்து பேசுவது அவளுக்கு எல்லையில்லாத ஒரு மன நிறைவைக் கொடுத்தது. ஆகவே இரத்தினக் கம்பளத்தை அவள் விரித்தது ஸ்ரீதருக்காக மட்டுமல்ல. தன் வசதிக்காகவும் தான், இன்னும் ஸ்ரீதர் சித்திரம் வரையும் ‘ஸ்டான்’டையும் ஜன்னலுக்கு அருகே வெளிச்சம் நன்கு விழும் ஓரிடத்தில் வைக்கும் படி ஏற்பாடு செய்தாள். அந்த ‘ஸ்டான்டில்’ அவன் அரை குறையாக எழுதி நிறுத்திய ‘மோகனா’ என்னும் அமராவதி இல்லத்தின் பஞ்சவர்ணக் கிளியின் படத்தையும் அவள் எடுத்து வைத்தாள். ஸ்ரீதர் வந்ததும் அவனிடம் அந்தப் படத்தை எழுதி முடித்துவிடும்படி கூற வேண்டுமென்றும், அதற்குத் தக்க முலாமிட்ட ‘பிரேம்’ போட்டு விறாந்தைகளில் மாட்டி வைக்க வேண்டுமென்பதும் அவள் அவா.

“ஸ்ரீதர் எவ்வளவு கெட்டிக்காரன். என்ன அழகாகப் படமெழுதுகிறான் பார்த்தாயா? அவனைப் போல் தத்ரூபமாகப் படமெழுத யாராலும் முடியாது” என்று வேலைக்காரி தெய்வானையிடம் கூறிய வண்ணமே படத்தில் பட்டிருந்த தூசைத் தன் சேலையின் முன்றானையால் தட்டிவிட்டாள் பாக்கியம்.

வேலைக்காரி தெய்வானை அதைக் கேட்டு “ஆம் அம்மா. நீங்கள் சொல்வது முற்றிலும் மெய். அவர் படமெழுதியதை தான் நேரில் பார்த்திருக்காவிட்டால், இப்படம் மனிதர் கையால் எழுதப்பட்டதென்று யாராவது எனக்குச் சொல்லியிருந்தால் நான் அதை நம்பி இருக்கவே மாட்டேன்.” என்று கூறினான்.

“மோகனா”வின் படத்தைப் பார்த்ததும் பாக்கியம் தெய்வானையிடம் “வீட்டின் பின் புறத்திலிருக்கும் மோகனாவைக் கூட்டோடு தூக்கி வா. இங்கே படுக்கை அறையிலேயே தூக்கி வைத்து விடுவோம். ஸ்ரீதர் அறையுள் நுழைந்ததுமே அது அவனை “ஸ்ரீதர்” என்று அழைக்கட்டும். அவனுக்கு அது சந்தோஷமாயிருக்கும்” என்றாள்.

தெய்வானை “அம்மா சரியான வேடிக்கைக்காரி. அத்துடன் மகன் மீது எவ்வளவு அன்பு. அவரை மகிழ்விப்பதற்காக எவ்வளவு ஏற்பாடுகள்” என்று மெச்சினாள்.

“அவனைப் போல் மகனிருந்தால் யாருக்குத்தான் அன்பேற்படாது. அவன் என் மகனாகப் பிறக்க நான் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.” என்றாள் பாக்கியம். “ஆம் அம்மா, அவரைப் போல் அழகானவரையும் திறமையுள்ளவரையும், அன்புள்ளவரையும் நான் பார்த்ததில்லை. கதையில் வரும் அர்ச்சுனராசா அப்படியிருந்திருப்பாரோ என்னவோ” என்றான்.

ஆனால் பாக்கியம் அறை விஷயத்தை மட்டும் நான் கவனித்தாள் என்பதில்லை. அவனுக்கு வேண்டிய உணவு வகைகளையும் ஏற்பாடு செய்து வைத்தால். கோழி சூப், கருணைக் கிழங்குக் கறி, பொரி விளங்காய் போன்ற அவனுக்குப் பிரியமான உணவு வகைகளைத் தயாரிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வைத்தாள். வேப்பம் பூ வடகம், எலுமிச்சங்காய் ஊறுகாய் என்பதையும் போதிய அளவு இருக்கின்றனவா என்று கவனித்துக் கொண்டாள். இன்னும் சீமைச் சொக்கிளேட் வகைகளும், பிஸ்கட்டுகளும், கொக்கோ போன்ற பான வகைகளும் அவளால் அலுமாரியிலிருந்து மேசை மீது எடுத்து வைக்கப்பட்டன. அத்துடன், அடுத்த நாட் காலையிலிருந்து ஸ்ரீதர் வரும் வரைக்கும் அமராவதி வளவின் பெரிய இரும்பு கேட்டுகள் திறந்து வைக்கப்பட வேண்டுமென்றும் வாயிற் காப்பாளனுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாக, அடுத்த நாட் காலையில் வீதியில் சென்றவர்கள் யாவரும் அமராவதி மாளிகைக்கு யாரோ ஒரு முக்கிய விருந்தினர் வருவதாக அறிந்து கொண்டனர். கொழும்பிலிருந்து இலங்கையின் பிரதம நிதியரசர், சிவநேசரின் விருந்தினராக வருவதாகப் பொய்க் கதையொன்றும் வீதியோரத்திலிருந்த தேநீர்க் கடையில் பிறந்து பாவி விட்டது.

பாக்கியத்தின் பரபரப்பைப் பார்த்து சிவநேசரும் ஒரு வகைப் பரபரப்பை அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். பாக்கியத்திடம் ஒரு விஸ்கி போத்தலையும் கிளாஸ்களையும் நல்ல தட்டொன்ற்¢ல் ஸ்ரீதரின் அறையில் வைக்கும்படி கூறினார் அவர்.

“எதற்கு? அவன் தான் குடிக்க மாட்டானே?” என்றாள் பாக்கியம்.

“உண்மைதான். ஆனால் ஆண் பிள்ளை என்றால் இப்படிப்பட்ட விஷயங்களிலும் ஓரளவு பயின்றல்லவா இருக்க வேண்டும்? சிறிது குடிப்பது உடம்புக்கும் நல்லது. நானும் அவனைப் போலவே குடிகாரனல்லாவிட்டாலும், அவன் வயதில் ஒரு நாளுக்கு அரை போத்தல் விஸ்கி குடித்து விடுவேனே” என்றார் சிவநேசர்.

“ஆமாம். குடிக்காதவர் தான் நீங்கள். அது தான் அரைப் போத்தல் குடித்தீர்களா. என் மகன் குடிக்கவே மாட்டான்” என்று பாக்கியம் சிவ நேசரைக் கிண்டல் பண்ணிக் கொண்டே விஸ்கி போத்தலைத் தேடிக் கிளம்பிவிட்டாள். இந்த உலகில் சிவநேசரைக் கிண்டல் பண்ணும் துணிவு பாக்கியத்துக்கு மட்டும் தான் இருந்தது. அவளது கிண்டலை அவர் சில சமயம் விரும்பி இரசிப்பதுமுன்று.

பாக்கியம் விஸ்கித் தட்டை ஸ்ரீதர் அறையில் வைத்தது அவன் குடிப்பான் என்ற எதிர்பார்ப்பில் அல்ல, அவன் விரும்பினால் அந்தக் குறைக் கூட அவனுக்கு இருக்கக் கூடாது என்றது அவளது அன்னை உள்ளம்.

ஸ்ரீதர் பகல் பத்து மணியளவில் காரில் வீடு வந்து சேர்ந்தான். மோகனா “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று ஒரே ரகளைப் படுத்திவிட்டது. வேலைக்காரி தெய்வானை கூட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு அதைப் பேசும்படி தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீதர் மோகனாவுக்குப் பக்கத்தில் சென்று “ஏ! மோகனா என்ன ஒரே கூச்சல்” என்று கூறிக் கொண்டே தான் கொறித்துக் கொண்டிருந்த முந்திரிக் கொட்டையிலொன்றை அதன் வாயில் திணித்தான். மோகனா நிசப்தமாகியது.

தாய் பாக்கியம் ” நீ போன முறை மோகனாவின் படத்தைப் பூர்த்தி செய்யாமல் போனாயல்லவா? அதுதான் அதைப் பூர்த்தி செய்யும்படி சப்தம் போடுகிறது அது” என்றாள்.

ஸ்ரீதர், “ஆமாம் அதைப் பூர்த்தி செய்து, அடுத்த மாதம் நடக்கும் கலைக் கழகப் போட்டிக்கு அனுப்ப வேண்டும். எனக்கு முதலாம் பரிசு கிடைக்கும் அம்மா” என்றான் உற்சாகமாக. அத்துடன் “அம்மா உனக்கு நிறைய முந்திரிக்கொட்டையும் கருப்பட்டியும் வாங்கி வந்திருக்கிறேன். தெய்வானை அவை எல்லாவற்றையும் அம்மாவுக்கு எடுத்துக் கொடு” என்று உத்தரவிட்டான் அவன்.

பாக்கியத்துக்கு ஒரே ஆனந்தம். ஸ்ரீதருக்குச் சமீபமாகச் சென்று “அப்பாவுக்கு என்ன கொண்டு வந்தாய்” என்றாள் மெல்லிய குரலில்.

“புத்தகங்கள். அவர் அறிஞர். உன்னைப் போல் சாப்பாட்டு ராமரல்லவே அவர்” என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் செல்லமாக அவனை அடித்து விடுவது போல் கையை ஓங்கினாள். ஸ்ரீதர் சிரித்து விட்டு, “அம்மா அடிக்காதே. நான் விளையாட்டுக்குச் சொன்னேன்.” என்று சொல்லிக் கொண்டே புத்தகங்களை எடுத்துத் தெய்வானை மூலம் சிவநேசர் அறைக்கு அனுப்புவித்தான்.

சிவநேசர் புத்தகங்களின் தலைப்புகளை மட்டும் வாசித்து விட்டு, ஸ்ரீதரைப் பார்க்க வெளியே வந்தார். புத்தகங்கள் எல்லாமே அவர் தேடிக் கொண்டிருந்த நீட்சேயின் புத்தகங்கள். அவர் எழுதத் திட்டமிட்டுக் கொண்டிருந்த நூலொன்றுக்கு அவருக்கு மிகவும் பயன்படக் கூடிய துணை நூல்கள் அவை. ஆகவே அவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

சிவநேசர் ஸ்ரீதரைப் பார்க்க வெளியே வந்தது. அவனுடன் உரையாடி அளவளாவுதற்கல்ல. அவ்வித கலகலப்பான பழக்கம் தான் அவரிடம் எப்பொழுதுமே இல்லையே. அவன் கொழுத்திருக்கிறானா மெலிந்திருக்கிறானா என்பதை நேரில் பார்க்க வெண்டும். அவ்வளவுதான் அவர் எண்ணம். அவர் அதற்காக வெளியே வந்து பார்த்தபோது ஸ்ரீதர் மொளு மொளு என்று காட்சியளித்தது அவருக்கு இன்பத்தையே அளித்தது. நவீன மோஸ்தரில் அமைந்த டீ ஷேர்ட்டும், காற்சட்டையும் அணிந்து ஸ்ரீதர் பாக்கியத்துடன் சிரித்துப் பேசி கொண்டிருந்ததைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்தார்.

தந்தையைக் கண்டதும் மகன் அவரை நோக்கித் திரும்பினான். சிவநேசர் மகனைப் பார்த்து “என்ன வீடு மறந்து போய் விட்டதா? மூன்று மாதமாக வீட்டுக்கே வரவில்லையே” என்றார்.

ஸ்ரீதர் பதிலளிக்கவில்லை. புன்னகை செய்து கொண்டு நின்றான்.

சிவநேசர் தொடர்ந்து “சுரேஷ் சீமை போன பிறகு தான் வீடு ஞாபகம் வந்தது போலிருக்கிறது. ஏன் ‘கிஷ்கிந்தா’வில் தனியாய் இருக்கப் பயமாயிருக்கிறதா? பழையபடி பேய் நடமாட்டம் உண்டாகி விட்டதா?” என்றார். கொழும்புக்குப் போய்த் தனியாக வாழத் தொடங்கிய புதிதில் ஸ்ரீதர் தனியாய் இருக்கப் பயமாய் இருக்கிறது என்று தபால் எழுதி டெலிபோனிலும் பேசியதை அவ்வாறு ஞாபகமூட்டினார் அவர்.

“நான் இப்போது பெரியவனாகி விட்டேன். எனக்குப் பேய்க்குப் பயமில்லை” என்று சிறிது அடக்கமாகவே முனகிய ஸ்ரீதர். வாயில் வந்த ஒரு நகைச்சுவை வார்த்தையை அடக்க முடியாதவனாக “இப்போது நான் பேயைக் கண்டு பயப்படுவதில்லை. பேய்க்குத்தான் என்னைக் கண்டு பயம், அப்பா.” என்று மெதுவாகக் கூறிவிட்டான். சிவநேசர் சிரித்தார். “சுரேஷ் உனக்கு நன்றாகப் பேசப் பழக்கி விட்டிருக்கிறான். அவன் எவ்வளவு காலம் இங்கிலாந்திலிருப்பான். அவன் மிகவும் நல்ல பையன். அவன் பிரயாணத்தின் போது நீ அவனுக்கு ஏதாவது பரிசளிக்க வில்லையா?” என்றார்.

“பரிசளித்தேன். ஒரு ஜோடி உடுப்பு” என்றான் ஸ்ரீதர்.

“என்ன விலை?” என்றார் சிவநேசர். எங்கே தங்கள் அந்தஸ்துக்கு ஒவ்வாத முறையில் மலிந்த செலவில் ஏதாவது பரிசைக் கொடுத்து விட்டானோ என்று அவர் அஞ்சினார்.

“ரூபா எழுநூற்றைம்பது. வைட்டவேய்ஸில் வாங்கினேன்.” என்றான் ஸ்ரீதர்.

“எங்கே மலிந்த பரிசு ஏதாவது கொடுத்துவிட்டாயோ என்று நான் நினைத்தேன். இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் பணத்தைப் பார்க்கக் கூடாது. எங்கள் அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றார் சிவநேசர் திருப்தியுடன்.

பாக்கியம் “ஸ்ரீதர் சின்னப் பையனல்ல. அவனுக்கு இப்பொழுது இவை எல்லாம் நன்கு தெரியும்” என்று சிபாரிசு செய்தாள் . அவ் வார்த்தைகளுக்காக அன்னையை நன்றியோடு பார்த்து புன்னகை செய்தான் ஸ்ரீதர்.

“பரிசளிக்கப் பணத்திற்கு எங்கே போனாய்? என்னைக் கேட்டிருக்கலாமே” என்றார் சிவநேசர்.

“ஏன்? என்னிடம் பணம் நிறைய இருக்கிறது.” என்றான் ஸ்ரீதர்.

“எப்படி?”

“ஏன் என்னுடைய அலவன்ஸ் முழுவதும் பாங்கில் மிஞ்சியிருக்கிறது”

“எவ்வளவு?”

“50 அல்லது 60 ஆயிரம் இருக்கலாம்”

“அப்படியானால் நீ பணத்தைச் செலவழிப்பது இல்லையா?”

“எனக்கு என்ன செலவு? சாப்பாடு, பெட்ரோல் எல்லாம் தான் சும்மா கிடைக்கின்றன. புத்தகங்கள் வர்ணங்கள், வெளியே போனால் கைச் செலவு, உடைகள் அவ்வளவு தானே என் செலவு” என்றான் ஸ்ரீதர்.

சிவநேசர் புன்னகை பூத்தார். “நீ எங்கள் குடும்பத்திலேயே பெரிய கருமியாய் வருவாய் போலிருக்கிறது. என்னுடைய இறந்து போன மாமனார் ஒருவர் இப்படித்தானாம். சாகும் போது அவர் தலையணையுள் ஐயாயிரம் தங்கப் பவுன்களை வைத்திருந்தார். ஆனால் ஒன்று. ஒருவன் எவ்வளவுதான் கருமியாயிருந்தாலும் கருமி என்று பெயரெடுக்கக் கூடாது. அதைப் போன்ற அபவாதம் உலகிலேயே வேறு இல்லை. எவனாவது ஒருவன் ஊதாரியாக வாழ்ந்தான் என்று உலகம் ஏசும் போது, அந்த எச்சில் கூட ஒருவித அன்பு தொனிக்கும். ஆனால் கருமியை ஏசும்போது ஒரு புழுவை ஏசுவது போல் ஏசுவார்கள்.” என்றார்.

பாக்கியம் “ஸ்ரீதர் கருமியல்ல” என்று இடை மறித்தாள். சிவநேசரும் தம் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

வெளிப்படையாக, சிவநேசர், ஸ்ரீதர், பாக்கியம் ஆகிய மூவரும் இவ்வாறு உல்லாசமாகப் பேசிக் கொண்டாலும் நீரு பூத்த நெருப்புப் போல அவர்கள் எல்லோர் உள்ளத்திலும் ஸ்ரீதரின் திருமணப் பிரச்சினை ஒரு பெரிய பாரமாகவே கிடந்தது. பாக்கியம் சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதிலும் அதனை மறப்பதற்கு முயன்றாள். ஸ்ரீதரோ படுக்கையில் சாய்ந்து கொண்டு அடுத்த நாள் நாடக வசனங்களை மனனம் செய்ய ஆரம்பித்தான். ஏற்கனவே அவன் அவற்றைத் தலை கீழாக மனனம் செய்திருந்தது உண்மையேயாயினும், சிறு தவறுமின்றி மிக நேர்த்தியாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முன்னிலையில் நடிக்க வேண்டுமென்ற பேரார்வத்திலேயே அவன் அவ்வாறு அதில் அதிக கவனம் செலுத்தலானான். பாக்கியத்தின் உத்தரவின் படி ஐஸ் போட்டுக் குளிரச் செய்யப்பட்டிருந்த செவ்விளநீரைத் தெய்வானை உயர்ந்த பெரிய ‘கிளாசில்’ ஊற்றி ஸ்ரீதரின் படுக்கைக்கு அருகே வைத்திருந்தாள். அதை இடையிடையே அருந்தியவாறு ஸ்ரீதர் நாடக வசனங்களை உரக்கப் பேசிப் பழகிக் கொண்டிருந்தான். இடையிடையே கூண்டிலிருந்த மோகனா அவனைப் பார்த்து “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று அழைத்தது. “சப்தம் போடாதே. எனக்கு வேலையிருக்கிறது.” என்று விரலை வாயில் வைத்து அதற்குச் சைகை காட்டிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் அவள்.

சிவநேசர் சிறிது நேரம் நீட்சேயின் கருத்துகளோடு மல்லாடிவிட்டு விஸ்கி அருந்தினார். தோட்டத்தில் உலாவினார். இயற்கை மர நிழலுக்குச் சென்று புள்ளி மன்களுக்கும் மயில்களுக்கும் தம் கையால் உணவு கொடுத்தார். பின்னர் காரியாலய அறைக்குள் சென்று கிளாக்கர் நன்னித்தம்பிக்கு வேலைகள் சொல்ல ஆரம்பித்தார். அப்பொழுதும் ஸ்ரீதரைப் பற்றி மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டிருந்த விஷயங்களும் அதிகார் அம்பலவாணர் கூறிய விஷயங்களும் அவருக்கு ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் நாளை நாடகம் முடித்து வேலைப் பரபரப்புகள் அடங்கிய பிறகு – அதாவது நாளை மறு தினம் இவ்விஷயங்களைக் கவனிக்கலாம் என்றிருந்து விட்டார் அவர்.

ஆனால் அவர் அவ்வாறு நினைக்கச் சுழிபுரம் கந்தப்பர் வேறு விதமாக நினைத்தார். சுழிபுரத்திலிருந்து ‘ட்ரங் கோல்’ போட்டுப் பேசினார் அவர்.

“நாளைக்கு உங்கள் மகன் ஸ்ரீதர் இந்துக் கல்லூரி நாடகத்தில் நடிக்கிறாராமே உண்மைதானா?”

“ஆமாம். நீங்களும் வாருங்கள். நன்றாக நடிக்கிறானாம்”

“நான் வராமலிருப்பேனா. டாக்டரையும் கூட்டி வருகிறேன்.”

“டாக்டரா? யாரது?… ஓகோ உங்கள் மகளைக் கூறுகிறீர்களா? சரி. அழைத்து வாருங்கள்… இல்லை… இன்னும் நான் ஸ்ரீதரிடம் பேச வில்லை. எதற்கும் நாளைக்கு நாடகத்தில் சந்திப்போம்.”

டெலிபோன் பேசி முடித்த பின்னர் சிவநேசர் எழுந்து சென்று விட்டார்.

அவர் போய்ச் சிறிது நேரத்தில் காரியாலய அறைக்கு ஸ்ரீதர் வந்தான். கிளாக்கர் நன்னித்தம்பி எழுந்து நின்று “தம்பி ஸ்ரீதரா, வாருங்கள்” என்று விநயமாக வரவேற்றார்.

ஸ்ரீதர் தந்தையின் சுழல் நாற்காலியில் உல்லாசமாக உட்கார்ந்து சுழன்று கொண்டே “நன்னித்தம்பி என்ன புதினம்?” என்று கேட்டான்.

நன்னித்தம்பி சிரித்துக் கொண்டு “புதினமா? ஒரு புதினமுமில்லை. என் மகள் சுசீலா பீ.ஏ பாஸ் பண்ணிவிட்டாள். அப்பாவிடம் அவளுக்கு எங்காவது ஒரு வாத்தியார் வேலை பார்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் அவளை நாளை மறு தினம் இங்கே அழைத்து வரும்படி சொல்லியிருக்கிறார். மற்றப்படி உங்கள் புதினம் தான் பெரிய புதினம்?”

“எனது புதினமா? இது என்ன புதுக் குழப்பம்? எனக்கொன்றும் விளங்கவில்லையே. விவரமாய்ச் சொல்லு” என்றான் ஸ்ரீதர்.

நன்னித்தம்பி, “இல்லை, உங்கள் திருமண விஷயமாகச் சொன்னேன். கந்தப்பசேகரர் மகள் டாக்டர் அமுதாவை உங்களுக்குக் கல்யாணம் பேசி இருக்கிறார் அப்பா. நான் சொன்னேன் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம். நாளை இந்துக் கல்லூரி நாடகத்துக்கு உங்களைப் பார்க்க டாக்டர் வருகிறாளாம். இப்பொழுதுதான் அது பற்றிச் சுழிபுரத்திலிருந்து கந்தப்பர் டெலிபோனில் பேசினார்” என்றார் விநயமாக.

“அப்படியா? ஆனால் டாக்டர் பார்ப்பதற்கு எனக்கொன்றும் சுகவீனம் இல்லை…அல்ல.. மறந்து விட்டேன். இரு நாட்களாக கண்ணில் தண்ணீர் வருகிறது. சில சமயங்களில் எரிச்சல் கூட எடுக்கிறது. அதை வேண்டுமானால் டாக்டருக்குக் காட்டலாம்” என்றான் சிரித்துக் கொண்டு.

“நீங்கள் குறும்பாகப் பேசுகிறீர்கள். ஆனால் கண்ணில் சுகவீனமென்பது உண்மைதானா தம்பி? அப்படியானால் நல்ல டாக்டரிடம் காட்ட வேண்டும். எனது இறந்து போன மைத்துனர் சிவலிங்கத்துக்கு இப்படித்தான் கண்ணில் சுகவீனமாகிப் பின்னர் பார்வையே பழுதாயிற்று. அதற்காகச் சந்திர சிகிச்சை செய்தோம். ஆனால் அச் சந்திர சிக்கிச்சை அவர் உயிரையே கொண்டு போய் விட்டது” என்றார் நன்னித்தம்பி.

“என்ன கண்ணில் சந்திர சிகிச்சை செய்ததால் உயிர் போயிற்றா? நான் அப்படிப்பட்ட கண் நோயைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதேயில்லை” என்று ஆச்சரியத்தோடு கூறினான் ஸ்ரீதர்.

அதற்கு நன்னித்தம்பி, “எனக்கும் அப்படிப்பட்ட கண் நோயைப் பற்றியோ சந்திர சிகிச்சையைப் பற்றியோ முன்னர் தெரியாதுதான். அவருக்கு நோய் ஏற்பட்ட பிறகு தான் இது விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன். எதற்கும் முன் ஜாக்கிரதையாக டாக்டருக்குக் காட்டுவது நல்லதல்லவா?” என்றார்.

ஸ்ரீதர் “காட்டத்தான் வேண்டும். ஆனால் இந்த லேடி டாக்டருக்கல்ல.” என்று கூறிக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டான்.

கிளாக்கர் அவனது பேச்சைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே வேலையில் மூழ்கினார்.

அன்று மாலை நாலரை மணியளவில் தாயாருடன் சேர்த்து அமராவதி வளவு முழுவதும் சுற்றித் திரிந்தான் ஸ்ரீதர். மான்கள், மாடுகள், மயில்கள் ஆகியவற்றோடு விளையாடினான். தடாகத்திலிருந்த தாமரைப் பூக்களையும் அல்லியையும் கொய்தான். வளவிலிருந்த கோயிலுக்குப் போய் அங்கிருந்த சந்தனக் கல்லில் தன் கையாலேயே சந்தனத்தை அரைத்துத் தன் நெற்றியில் அழகாகப் பொட்டிட்டுக் கொண்டு அம்மாவின் நெற்றியிலும் பொட்டு வைத்தான்.

தாயார் கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலைப் பற்றி விசாரித்தாள். கோவிலின் தெற்குக் கோபுரத் திருப்பணியைத் தந்தையார் சீக்கிரம் தொடங்கவிருக்கிறாரென்றும் தானும் அப்போது அங்கே வந்து ‘கிஷ்கிந்தா’வில் ஒரு வாரம் தங்கியிருக்கப் போவதாகவும் கூறினாள் அவள். “அந்தக் கோவில் உனது பரம்பரைக் கோவில். அதுதான் இந்த அமராவதி வளவையே எப்பொழுதும் பாதுகாத்து வருகிறது. மணவாள சுந்தரேஸ்வரர் தான் எங்களுக்கு இந்த இலங்கை முழுவதுமே இவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே நீ கோவில் நிர்வாகத்தில் அப்பொழுதும் அக்கறையாயிருப்பதோடு நேரடியாக அதைக் கவனிக்கவும் வேண்டும்.” என்றாள் பாக்கியம்.

“ஆம். அப்படியே செய்வேன்” என்று வாக்களித்தான் ஸ்ரீதர்.

பின் தாயும் மகனும் வேலைக்காரி தெய்வானையுடன் ஸ்ரீதர், சுரேஷ் என்ற ஈர் ஆமைகளையும் பார்க்கச் சென்றனர். அவற்றுக்கும் அவற்றோடு வாழ்ந்த மீன்களுக்கும் உணவளித்தான் ஸ்ரீதர். “மிருகங்களுக்கு உணவளித்தல் பெரிய புண்ணியம். கடவுள் எங்களுக்குச் செல்வம் அளித்திருப்பது மனிதருக்கும் மிருகங்களுக்கும் உதவுவதற்காகத்தான்.” என்று கூறிய பாக்கியம் ஸ்ரீதரிடம் “கிஷ்கிந்தா”வில் கண்னாடி நீர்ப் பெட்டிகளை வைத்துச் சில மீன்களை வளர்க்கலாமே என்றும் ஆலோசனை கூறினாள். அத்துடன் ” நீ கொழும்புக்குப் போகும் போது மோகனாவையும் எடுத்துச் செல். அது “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று உன்னை அழைத்துக் கொண்டே இருப்பது உன் நண்பர்களுக்கு வேடிக்கையாயிருக்கும்” என்றும் சொன்னாள் அவள்.

பின்னர் இருவரும் குளத்தின் கட்டில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். ஸ்ரீதர் குழந்தை போல் அம்மாவின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான். “அம்மா என் தலையில் பேனிருக்கிறதா பார்” என்று குறும்பாகச் சொன்னான் அவன். பாக்கியத்துக்கு அவன் தலையில் பேனில்லை என்பது தெரிந்தாலும் பொய்க்குப் பேன் பார்த்தாள். தெய்வானை அதைப் பார்த்துச் சிரித்தாள்.

திடீரென ஸ்ரீதர் “அம்மா, நான் அப்பாவைப் படம் எழுதியிருக்கிறேன். உன்னை எழுதவில்லையல்லவா? இன்றைக்கு எழுதப் போகிறேன்” என்றான்.

பாக்கியத்துக்கும் அது பிடித்தது. “சரி எழுது. நான் எப்படியிருக்கிறேன் என்று படத்தில் பார்க்க எனக்கும் ஆசைதான்” என்றாள் அவள்.

” நான் உன்னை உனது மான்களுடன் ரவிவர்மாவின் சகுந்தலை படம் போல் எழுதப் போகிறேன்.” என்றான் ஸ்ரீதர்.

“சகுந்தலை இளம் பெண். என்னை அப்படி எழுத முடியுமா? அது நல்லாயிருக்காது” என்றாள் பாக்கியம்.

“யார் சொன்னது? சகுந்தலை இளம் பெண்ணென்று? அவளும் அவள் மகன் பரதனுக்கு இருபத்து முன்று வயதாயிருக்கும்போது உன் வயசை அடைந்திருப்பாள் தானே? அநேகமாக, அவளும் உன்னைப் போல் உருண்டு திரண்ட, பூசணிக்காயாகத்தான் இருந்திருப்பாள். அப்படி நினைத்துக் கொண்டு நானுன்னைச் சகுந்தலை போலவே எழுதப் போகிறேன்.” என்றான் ஸ்ரீதர்.

“ஆனால் பரதனுக்கு இருபத்துமூன்று வயதான பொழுது சகுந்தலை காட்டில் இல்லையல்லவா? ஆகவே மான்களை எழுதக் கூடாது” என்றாள் பாக்கியம்.

“ஏன்? மான்களோடு வனத்தில் வளர்ந்த சகுந்தலை நிச்சயம் அரண்மனையிலும் மான்களை வளர்த்துத்தான் இருப்பாள். துஷ்யந்தன் என்ன எங்க அப்பாவைவிடக் குறைந்தவனா? தன் மனைவிக்கு மான்களைக் கொண்டு வந்து கொடுத்திருக்க மாட்டானா?” என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் சிரித்தாள். “உன்னோடு என்னால் வாதிட முடியாது. சரி. படத்தை எழுது. எப்படி விருப்பமோ, அது போல் எழுது. ஆனால் ஒன்று. என்னை அதிகம் கிழவியாக எழுதிவிடாதே. வயசைச் சிறிது குறைத்தெழுது” என்றாள் பாக்கியம்.

“ஆ! அப்படியா? எவ்வளவு தூரம் வயசைக் குறைக்க வேண்டும். இருபத்தைந்து வயதுப் பெண்னாக எழுதிவிடட்டுமா?” என்று கேலி செய்தான் ஸ்ரீதர்.

பாக்கியம் “இப்படி நீ என்னைப் பரிகாசம் செய்வதாயிருந்தால் படம் எழுதவே வேண்டாம். நீ அப்பாவின் படத்தை எழுதி விட்டாயல்லவா? நீ அப்பாவின் மகன் தானே? என்னை எழுத வேண்டாம்.” என்று கோபித்துக் கொண்டாள்.

ஸ்ரீதர் அதற்கு “இல்லையம்மா. உன்னை எழுதித்தான் தீருவேன். ஆனால் உன் வயசை ஐந்து வயதுக்கு மேல் குறைக்க முடியாது. என்ன சொல்கிறாய்?” என்றான்.

“அது போதும். ஐந்து வயதுக்கு முன் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? நானும் அப்பாவும் அப்பொழுது கவர்னர் மாளிகை விருந்துக்குப் போன போது, அங்கிருந்த வெள்ளைக்கார ஆண்களும் பெண்களும் அப்பாவிடம் என் அழகை மிகவும் புகழ்ந்தார்களாம். என் படம் பத்திரிகைகளில் கூட வெளி வந்தது. நான் அப்பொழுது இன்று போல் கிழவியல்ல” என்றாள் பாக்கியம்.

“என்ன என் அம்மா கிழவியா? யார் சொன்னது? இதோ படத்தை எழுத ஆரம்பிக்கிறேன்” என்று கூறிக் கொண்டே படம் எழுதுவதற்கு வேண்டிய பொருள்களைத் தெய்வானையை அனுப்பி எடுத்து வரச் செய்து, படம் வரைய ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

படம் எழுத அரம்பித்த சிறிது நேரத்தில் பாக்கியம் வேலைக்காரி தெய்வானையை ஸ்ரீதருக்குத் தேநீரும் தனக்கு வெற்றிலையும் எடுத்து வர அனுப்பி வைத்தாள். இதனால் ஏற்பட்ட தனிமையை உபயோகித்து அம்மாவிடம் பத்மாவைப் பற்றிப் பேசுவதற்குத் தீர்மானித்தான் ஸ்ரீதர்.

“அம்மா, உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். ஆனால் பேச வெட்கமாயிருக்கிறது. என்றாலும் பேச வேண்டிய விஷயந்தான்..” என்று பீடிகை போட்டான் ஸ்ரீதர்.

“எதென்றாலும் பேசு. என்ன விஷயம்? சொல்லு” என்று வினவினாள் பாக்கியம்.

ஸ்ரீதர் தட்டுத் தடுமாறிக் கொண்டு முடிவில் எப்படியோ விஷயத்துக்கு வந்து சேர்ந்தான். ‘அப்பா எனக்குக் கல்யாணம் பேசியிருக்கிறாராமே. அது உண்மையா?” என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான் ஸ்ரீதர்.

“ஆம். அது உனக்கு எப்படித் தெரியும்” என்றாள் பாக்கியம்.

“கொழும்பில் நாதசுரம் வேணுவைச் சந்தித்தேன். வேணு சொன்னான்”

“இதைக் கேட்கத்தானா நீ இவ்வளவு வெட்கப்பட்டாய்? நீ இன்னும் சின்னப் பையன் அல்லவே? கல்யாணம் செய்யும் வயதுதானே? அதுதான் அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.” என்றாள் பாக்கியம்..

“மணப்பெண் யார்?”

“வேணு சொல்லவில்லையா?”

“சொன்னான். கந்தப்பருடைய மகள் அமுதா என்று.”

“ஆமாம். அவள்தான். படித்தவள். அழகி. நீயும் அவளும் நல்ல ஜோடி. அவள் அமெரிக்காவுக்குப் படிக்கப் போகு முன் இங்கு பல தடவை வந்திருக்கிறாள். நீ பார்த்திருக்கிறாயல்லவா? இன்னும் அவள் ஒரு லேடி டாக்டர். எல்லா வகையிலும் அவள் உனக்கேற்றவள்.”

“அம்மா. எனக்கு லேடி டாக்டர்களைப் பிடிக்காது.”

“அப்படியானால் அவளை டாக்டர் வேலை செய்ய வேண்டாமென்று சொல்லிவிட்டால் போகிறது. அவள் சம்பாதித்தா நீ சீவிக்க வேண்டும்? சுந்தரேஸ்வரர் அந்த நிலையில் எங்களை வைக்கவில்லை.

“இல்லை அம்மா. எனக்கு அமுதாவைப் பிடிக்காது. எனக்கு இந்தத் திருமணம் வேண்டவே வேண்டாம் அம்மா”

” நீ அமுதாவிடம் பேசிப் பழகாததால் அப்படிச் சொல்கிறாய். போன மாதம் கீரிமலையில் நான் அவளைச் சந்தித்தேன். மிகவும் இனிமையான குணம். நிச்சயம் அவளை உனக்குப் பிடிக்கும். அது மட்டுமால்ல. அவளுக்கு உன் மீது மிகவும் பிரியம். உன்னுடைய நாடகப் படம் ‘தினகரனி’ல் வெளிவந்ததல்லவா? அதை அவள் வெட்டி ஒட்டி வைத்திருப்பதாக அவளது தாயார் எனக்கு இரகசியமாகச் சொன்னாள். அப்பாவும் அவர்களும் ஏன் நானும் கூடத்தான் இந்தத் திருமணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்ப்பர்த்திருக்கிறோம்.”

ஸ்ரீதருக்கு விஷயம் தலிக்கு மேல் போய்விட்டது போல் தோன்றியது. திடீரென அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து திகிற் கோலம் தோன்றியது. இருந்த போதிலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “அம்மா, அமுதாவிலும் பார்க்க நல்ல மருமகளை நான் உனக்குக் கொழும்பிலே பார்த்து வைத்திருக்கிறேன் . அமுதா எனன அமுதா? அவளை விட எத்தனயோ மடங்கு நல்ல பெண்ணை நான் பார்த்து வைத்திருக்கிறேன்” என்றான் ஸ்ரீதர்.

“என்ன? கொழும்பிலே உனக்கேற்ற பெண்னா? அமராவதி வளவின் அந்தஸ்துக்கேற்ற பெண் கொழும்பில் எங்கே இருக்கிறாள்? இந்த இலங்கை முழுக்கப் பார்த்தாலும் கந்தப்ப்சேகரர் குடும்பத்தை விட எஙகளுக்கு சமமான அந்தஸ்துள்ள குடும்பம் வேறு இல்லை. அவர்கள் கூடப் பணத்தைப் பொறுத்த வரையில் எங்களுக்குக் குறைவு தான். இருந்தாலும் அவர்கள் மட்டும்தான் இந்த நாட்டிலேயே எங்களுடன் சம்பந்தம் செய்யத்தக்கவர்கள்.”

“அம்மா, நீ கூறும் அந்த அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.”

“அதற்கென்ன செய்வது? அப்பாவுக்கு அதில் முழு நம்பிக்கை. அதை மாற்ற யாராலும் முடியாது.”

“அப்படியானால் நான் பத்மாவைக் கட்ட முடியாதா?”

ஏக்கம் நிறைந்த ஸ்ரீதரின் இவ்வசனத்தைக் கேட்டதும் தாயுள்ளம் ஸ்தம்பித்துவிட்டது. நம்பிக்கை இழப்பதனால் ஏற்பட்ட சோகத்தில் எல்லைக் கோட்டில் நின்று ஒலித்த திகிலும் பயமும் நிறைந்த அந்தப் பரிதாப வார்த்தைகளை அவளால் சிறிதும் தாங்க முடியவில்லை. ஆம், ஸ்ரீதர் பத்மாவின் மீது கொண்ட முழுக் காதலும் அக்கேள்வியில் அப்படியே எதிரொலித்தது. பத்மா இல்லாத வாழ்வு வாழ்வல்ல, சாவே என்ற முடிவான தீர்மானத்தில் எழுந்த வார்த்தைகள் போல் தோன்றின அவை. சற்றும் எதிர்பாராத வகையில் நம்பிக்கைக் கோட்டைகள் யாவும் இடிக்கப்பட்டவனின் வாயிலிருந்து வெளி வந்த சக்தியற்ற சொற்களாகத் தோன்றின அவை.

பாக்கியம் ஸ்ரீதரின் முகத்தைப் பார்த்தாள். வெளிறிப் போலிருந்த அவன் முகத்தை வேதனை நிறைந்த அந்த நிலையில் அவள் அதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை. அவனை அப்படியே அணைத்துக் கொண்டு தேறுதல் கூற வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இருந்தாலும் மனதைக் கெட்டிப்படுத்திக் கொண்டு “பத்மாவா அது யார்?” என்று ஒன்றுமறியாதவள் போல் கேட்டாள் அவள்.

ஸ்ரீதர் “பத்மா என்னுடன் படிக்கும் ஒரு மாணவி. ஒரு வாத்தியாரின் மகள். அவள் என்னை நேசிக்கிறாள். நானும் அவனை நேசிக்கிறேன். அம்மா, அவளை விட்டு வேறு ஒருவரையும் ஒரு போதும் நான் கல்யாணம் செய்ய மாட்டேன். என்னால் அமுதாவைக் கட்ட முடியாதம்மா?” என்றான்.

பாக்கியம், “அப்பா உனது பத்மாவை ஒருபோதும் ஏற்க மாட்டார், ஸ்ரீதர். நீ அமுதாவைக் கட்டுவதுதான் சரி” என்றாள்.

ஸ்ரீதர் “இல்லையம்மா. நீ அப்பாவிடம் பேசு. விஷயங்களை எடுத்துச் சொன்னால் அவர் நிச்சயம் ஒப்புக் கொள்ளுவார். பத்மா மிகவும் நல்லவன். நீ கொழும்புக்கு வந்தால் பத்மாவை ‘கிஷ்கிந்தா’வுக்கு அழைத்து வந்து உனக்குக் காண்பிப்பேன். உனக்கு அவளை நன்றாய்ப் பிடிக்கும். அப்பாவுக்கும் பிடிக்கும். அம்மா, நீ அப்பாவிடம் பேசுவாயா?” என்றான்.

பாக்கியத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கலங்கியிருந்த அவன் கண்களைக் கண்டு அவள் கண்களும் கலங்கிவிட்டன.

“சரி. பேசிப் பார்க்கிறேன். ஆனால் எனக்கென்னவோ இவ்விஷயங்களில் அப்பா விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை.” என்றாள்.

இமயமலையை அசைத்தாலும் அசைக்கலாம். ஆனால் சிவநேசர் மனதை மட்டும் இப்படிப்பட்ட விஷயங்களில் அசைக்க முடியாது என்பது பாக்கியத்துக்கு நன்கு தெரியும். எனவே ஸ்ரீதரின் எதிர்காலத்தையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

இன்னும் ஸ்ரீதரின் பேச்சிலே அவனது காதலின் வலிமையும் அவளுக்குத் தெரிந்துவிட்டது. அதுவும் அசைக்க முடியாததாகவே அவளுக்கு பட்டது. சிறிய விஷயங்களில் எல்லாம் அவன் விருப்பபட்டதை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்துப் பழகிய அவள் கல்யாணம் போன்ற பெரிய விஷயத்தில் அவன் மனதுக்கு மாறாக எப்படி நடிப்பது என்றறியாது திக்குமுக்காடினாள்.

நிச்சயம் சிவநேசர் இதில் விட்டுக் கொடுக்க மாட்டார். என்னதான் மென்மை நிறைந்தவனாகக் காட்சியளித்தாலும் ஸ்ரீதரும் அவர் வளர்ப்பில் வளர்ந்தவன்தான். அவனும் இக்காதலை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இந்த நிலையில் என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ என்று அஞ்சினாள் பாக்கியம். காதலுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தவர்களைப் பற்றி அவள் கேள்விப்பட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் ஸ்ரீதரின் உயிருக்காக அவள் அஞ்ச ஆரம்பித்தாள் அவள். தாய் உள்ளம் நடுங்கியது.

அதன் பின் தாயும் மகனும் சிறிது நேரம் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீதர் குளக்கட்டில் உட்கார்ந்து ஆமைகளைப் பார்த்தான். அங்கே சுரேசும் ஸ்ரீதரும் ஒன்றுக்கொன்று அருகருகாகக் காணப்பட்டன. இப்பொழுது எனது சுரேசும் அந்தச் சுரேஷைப் போல என் பக்கத்திலிருந்தால் அவனிடம் நான் இது சம்பந்தமாக ஆலோசனை கேட்டிருக்கலாமே என்றெண்ணிப் பெருமூச்சு விட்டான்.அவன்.

இதற்கிடையில் நேரம் ஆறு மணியாகி இருந்தது. இரணியனைக் கொன்ற நேரம். இது வரை இயற்கை மர நிழலை மட்டும் நிலவிய இருள் இப்பொழுது நாலாதிசைகளிலும் பார்த்து தாயையும் மகனையும் விழுங்கிக் கொண்டிருந்தது.

17-ம் அத்தியாயம்: ஸ்ரீதரின் தியாகம்

மனத்தில் எம்மை எவ்வளவு தான் கவலை பீடித்தாலும் அவ்வப்போது நாம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டுதானே போக வேண்டியிருக்கிறது? ஸ்ரீதரை, அவன் “அமராவதி”க்கு வந்த அன்று மாலை கப்பிய சோகம் தாங்கவொண்ணாத சோகம்தான். இருந்த போதிலும் அது அடுத்த நாள் மாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஈடிப்பஸ் மன்னன்” நாடகத்தை எவ்விதத்திலும் பாதிக்க விடுவதிலலை, என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிவிட்டு, அதன் பின் “அமராவதி” வளவில் எங்காவது ஒரு மூலையில் கவலைப்பட உட்காரலாம் என்பது அவன் எண்ணம். கவலையைக் கூட ஒழுங்காக, வேறு நினைவின்றி அனுபவித்தால்தான் அதனால் நிவாரணமோ இன்பமோ ஏற்படுகிறது. அதறகு இந்த நாடகச் சந்தடி தீர வேண்டும் எனபது அவன் நினைவு.

மேலும் கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே… என்று யாரோ ஒரு சினிமாப் பாடகன் எங்கோ பாடியிருக்கிறான். நாட்டியக் கலை மட்டுமல்ல சகலக் கலைகளுமே இப்பணியைத்தான் செய்கின்றன. உண்மையில் இவ்வித கலைகள் என்பன மட்டும் இல்லாவிட்டால் மானிடன் தன்னை எதிர் நோக்கும் துன்பங்களையெல்லாம் அச்சங்களையும் எவ்வாறு தாக்குப்பிடித்துச் சமாளிப்பான் என்று எண்ணிப் பார்க்கப்பட முடியாமல் இருக்கிறது. துன்பத்தின் பிடியில் அகப்பட்ட இதயம், இசையால், நாடகத்தால், கவிதையால், சித்திரத்தால் எத்தகையை சாந்தியைப் பெறுகிறது. ஸ்ரீதருக்கும், அவனுக்குக் கலைகளில் இருந்த ஈடுபாடுதான் அவனது துயருக்கு மாற்றாக அமைந்தது. உண்மையில் கலைகளில் ஈடுபாடு இருப்பவர்கள், அவ்வித ஈடுபாடுள்ளவர்கள் அதிர்ஷடசாலிகள், அவ்வித ஈடுபாடு வாய்க்கப் பெறாதவர்கள் தான் தம் கவலைகளைப் போக்கச் சாராயத் தவறணைகளையும், கள்ளுக் கொட்டில்களையும் தஞ்சமடைய வேண்டியிருக்கிறது.

ஸ்ரீதர் அன்றிரவும் அடுத்த நாட் பகலும் நாடக வசனங்களைப் பேசிப் பார்ப்பதிலும், “ஈடிப்பஸ்” பாத்திரத்தை நடித்துப் பார்ப்பதிலும், இடையிடையே மோகனாவின் பூர்த்தி பெறாத ஓவியத்திற்கு வர்ணம் தீட்டுவதிலும் காலத்தைச் செலவிட்டான். இவற்றில் மூலம் மனத்தை மனத்தைத் தன்னாலியன்ற அளவு கலகலப்பாக வைத்துக் கொண்டதால் ‘ஈடிப்பஸ்’ நாடகம் அடுத்த நாள் எவ்விதத்திலும் சோடை போகாது சோபித்தது. உண்மையில், அவன் அரங்குள் நுழைந்த போது ஸ்ரீதர் மறைந்து விட்டான். தெபேஸ் நகரத்தின் மாமன்னான ஈடிப்பஸ் கிரேக்க நாடகாசிரியன் சொபோக்கிளியின் கற்பனையில் இருந்து அங்கரங்கில் நேரே வந்து, குதித்து வந்துவிட்டான்!

நாடகத்துக்கு யாழ்ப்பாண நகரத்திலிருந்தும், சுற்று வட்டார கிராமங்களிருந்தும் ஏராளமான கலா ரசிகர்கள் வந்திருந்தனர். சிவநேசர் தம் தலைப்பாகையுடன் ஆடம்பரமாக உடையணிந்து முன் வரிசையில் வீற்றிருந்தார். அவருக்குப் பக்கத்தில் பாக்கியம். அவர்களுக்கு ஒரு புறம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் மறுபுறம் கல்லூரித் தலைமை ஆசிரியரும் வீற்றிருந்தார்கள். அரசாங்க அதிபருக்கு அடுத்த ஆசனத்தில் சுழிபுரம் கந்தப்பசேகரரும் டாக்டர் அமுதாவும் அமர்ந்திருந்தனர்.

அரசாங்க அதிபர் கூறிய ஒரு குறிப்புக்குப் பதிலாக, சிவநேசர் கிரேக்க நாடகத்தில் சொபோக்கிளின், “ஈடிப்ப”சுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை எடுத்து விளக்கினார். பறங்கியரான அரசாங்க அதிபர் சிவநேசரது அறிவின் பரப்பைக் கண்டு வியப்படைந்தார்.

ஸ்ரீதர் நாடகத்தில் தன் முழுத் திறமையையும் காட்டி நடித்தான். திரை நீக்கியதும் சிவநேசரும் பாக்கியமும் மிகுந்த வேஷப் பொருத்தத்தோடு விளங்கிய தமது மகனை முதலில் அடையாளம் காண முடியாது திக்குமுக்காடி விட்டார்கள். பாக்கியம் சிவநேசரை நோக்கிச் சிறிது வளைந்து “உங்களைத்தானே, இராசா வேஷத்தில் இருப்பது ஸ்ரீதர் தானே? பார்த்தீர்களா? நல்ல வேஷப் பொருத்தம்.” என்று கூறினாள். கந்தப்பசேகரர் அமுதாவிடம் “பார்த்தாயா ஸ்ரீதரை? வேஷப் பொருத்தம் மிக நன்றாயிருக்கிறாரல்லவா” என்றார். “இதோ ஈடிப்பஸ் வேஷத்தில் இருக்கிறானே, அவன் தான் நமது சிவநேசரின் மகன். ஸ்ரீதர் என்று பெயர்.” என்று சிவநேசர் காதில் நன்கு கேட்கும்படியாக அரசாங்க அதிபரிடம் சொல்லி வைத்தார். சிவநேசருக்கு அதைக் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி.

கொழும்பில் போலவே ஸ்ரீதர் ஈடிப்பஸ் மன்னன் தன் கண்களைத் தானே பறிக்கும் காட்சியில் மிகவும் அற்புதமாக நடித்தான். மேடை மீது மின்சார ஒளி வட்டத்தில் நின்று கொண்டு, கூரிய ஒரு கருவியைக் கையிலேந்திப் பொருத்தமான வசனங்களைப் பேசிக் கொண்டு ஈடிப்பஸ் மன்னன் கண்களைக் குத்திக் கபோதியாகும் அக்காட்சி சபையோரை உணர்ச்சிக் கடலில் ஆழ்ந்திவிட்டது. ஒரு சிலர் “ஐயோ பாவி” என்று கதறி விட்டார்கள். பாக்கியம் நடுங்கிப் போய்விட்டாள். டாக்டர் அமுதா திக்பிரமை பிடித்து வீற்றிருந்தாள். சிவநேசரோ, “உண்மையில் ஸ்ரீதர் உயர்ந்த நடிகன் தான். சென்ற தடவை இந் நாடகம் கொழும்பில் அரங்கேறிய போது அது பற்றிப் பத்திரிகைகள் எழுதியவை உண்மைதான்.” என்று தனக்குள் தானே மெச்சிக் கொண்டார். கண்களிலிருந்து கொட கொடவென்று செவ்விரத்தம் பீறிப் பாய ஸ்ரீதர் மேடையில் தோன்றிய காட்சியைக் கண்டு பாக்கியம் அவன் உண்மையாகவே கண்களைக் குத்திக் கொண்டு விட்டானோ என்று அஞ்சிவிட்டாள். தாயுள்ளத்தில் தவிப்போடு, சிவநேசரின் கோட்டை இருட்டிலே பற்றிக் கொண்டாள் அவள்.

நாடகம் முடிந்ததும் அரசாங்க அதிபர் உட்பட நகரப் பிரமுகர்கள் பலரும் திரைக்குப் பின்னால் சென்று ஸ்ரீதரைப் பாராட்டினார்கள். கந்தப்பசேகரரும் டாக்டர் அமுதாவும் ஸ்ரீதரைப் போய்க் கண்டார்கள். டாக்டர் அமுதாவோ நாணத்தால் அதிக வசனங்கள் பேசவில்லை. அவன் முகத்தின் அழகைத் தன் கண்களால் விழுங்கிய வண்ணம் “உங்கள் நடிப்பு அற்புதம்” என்று மட்டும் கூறி வைத்தாள். கல்லூரித் தலைமை ஆசிரியர், ஸ்ரீதருக்குக் கல்லூரியின் சார்பில் ஒரு மலர் மாலையைச் சூட்டி விட்டு, சிவநேசரிடம் “உங்கள் மகனைப் பற்றி நீங்கள் பெருமைப்படலாம். இப்படிப்பட்ட மகனைப் பெற நீங்கள் என்ன தவம் செய்தீர்களோ” என்று கூறினார். சிவநேசர் இலேசாகப் புன்னகை செய்தார். பாக்கியமோ ஸ்ரீதரைத் தனியே கண்டு “உன் கண்ணுக்கொன்றும் கெடுதியில்லையே? நான் பயந்து போய்விட்டேன். இனிமேல் நீ இப்படிப்பட்ட பயங்கரமான நாடகங்களில் நடிக்கக் கூடாது” என்றாள். ஸ்ரீதர் “உனக்குப் பயங் காட்டத்தான் அப்படி நடித்தேன். பயப்பட மாட்டேன் என்று சொன்னாயே. பார்த்தாயா, தோற்றுவிட்டாய்.” என்று கூறினான். பாக்கியம் அவன் முதுகை வாஞ்சையோடு தடவி இரகசியமாக, “அமுதாவைப் பார்த்தாயா, அழகாயிருக்கிறாளல்லவா? உன் நாடகத்தை அவள் மிகவும் இரசித்தாள்” என்று சொன்னாள். ஸ்ரீதர் “போ அம்மா அதைப் பற்றி இப்பொழுது பேசாதே. என் மனம் குழம்பிப் போய்விடும்.” என்று கூறினான். இவ்வாறு சொல்லும் போதே திடீரெனச் சந்திரனை மறைக்கும் மேகங்கள் போல அவன் முகத்தைக் கவலை மேகங்கள் மறைத்தன. பாக்கியத்துக்கு அதைப் பார்த்ததும் “ஏன் அதைப் பேசினேன்” என்று எண்ணத் தோன்றிவிட்டது. “சரி வருகிறேன் ஸ்ரீதர். நீ உன் வேலைகளை முடித்துக் கொண்டு அப்புறம் தானே வருவாய்? அதிக நேரம் செல்லாது வந்து விடு” என்று கூறிப் புறப்பட்டாள்.

காரின் பின்னாசனத்தில் சுங்கானைப் பிடித்துக் கொண்டு பாக்கியத்துக்குப் பக்கத்தில் சாய்ந்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சிவநேசரின் மனதில் ஸ்ரீதரின் எதிர்காலம் பற்றிய சித்திரங்கள் ஒன்றன் பின்னொன்றாக வந்து கொண்டிருந்தன. “ஸ்ரீதரைப் போல் ஒரு மகனைப் பெற நீங்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?” என்று தலைமை ஆசிரியரின் சொற்கள் அவர் மனதிற்கு ஓர் இன்பப் போதையைக் கொடுத்திருந்தது உண்மைதான். “மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொள் என்னும் சொல்” என்ற வள்ளுவர் வாக்கு என் விஷயத்தில் அனுபவ வார்த்தையே. நாடகத்தில் நன்றாய் நடித்தான் என்பதால் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலும் ஸ்ரீதர் சிறந்தவன்தான். ஆனால் அவன் திருமண விஷயம்? அது எப்படி முடியப் போகிறதோ?” என்று எண்ணிக் கொண்டே பாக்கியத்திடம், “பாக்கியம், ஸ்ரீதரிடம் அமுதாவை பற்றிப் பேசினாயா நீ?” என்று கேட்டார்.

“பேசினேன். அவனுக்கு அது பிடித்தமே இல்லை” என்றாள் அவள்.

“அப்படியானால் மொட்டைக் கடிதத்தில் சொன்ன பத்மாவைத்தான் உள்ளம் நாடுகிறது போலும்?”

“ஆமாம். அவன் இன்பமாக வாழ வேண்டுமென்றால், அதுதான் அவனுக்கேற்ற திருமணம்.”

“என்ன? பைத்தியக்காரி மாதிரிப் பேசுகிறாய்? எங்கள் அந்தஸ்தென்ன? அந்த வாத்தியார் அந்தஸ்தென்ன? அதிகார் அம்பலவாணன் போன்றவர்கள் சிரிப்பார்கள். உலகமே சிரிக்கும். நடக்கிற காரியமாகப் பேசு. மடத்தனமாகப் பேசாதே.”

பாக்கியம் தான் பத்மாவுக்குப் பரிந்து பேசினால் என்ன பதில் கிடைக்குமென்று எதிர்பார்த்தாளோ அதே பதில் தான். எதிர்பார்த்ததை விட இன்னும் சற்றுக் காரசாரமாகவே கிடைத்தைக் கண்டு மேலே பேச அறியாது அடங்கிவிட்டாள்.

“ஸ்ரீதரின் மனதை நாம் மாற்ற வேண்டும். என் தவத்தால் பிறந்த மகனென்று இன்று இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் அவனைப் பாராட்டினார். அப்படிப்பட்ட மகனை நான் குப்பைமேட்டில் வீசிவிட முடியுமா? ஒரு போதும் நான் அவனை அந்தஸ்தற்ற இடத்தில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மாட்டேன். சிங்கம் சிங்கத்தோடுதான் தொடர்பு கொள்ள வேண்டும். நரியோடு தொடர்பு கொள்ள விட மாட்டேன். அமராவதி வளவு சீரழிய நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்.”

“ஆனால் அவன் அதைக் கேட்காவிட்டால்…”

“கேட்க வைக்க வேண்டும்”

“அவன் தனக்கு டாக்டர் பெண்ணை பிடிக்காது என்றான். அப்படியானால் அமுதா டாக்டர் வேலையிலிருந்து விலகி விட்டால் போகிறதென்றேன். அதற்குத் தனக்கு அமுதாவைப் பிடிக்கவில்லை என்கிறான். பத்மாவைப் பற்றிச் சொல்லி “அவள் மிகவும் நல்லவள். நீ அவளை ஒரு தரம் சந்தித்துப் பேசினல் நிச்சயம் உனக்கு அவளைப் பிடிக்கும்’ என்று கூறுகிறான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாளைக்கு அவனிடம் நீங்களே இது பற்றிப் பேசினால் என்ன?”

“பேசத்தான் போகிறேன்.”

அன்றிரவு ஸ்ரீதர் வீட்டுக்கு வந்தபோது இரவு ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. தாய் பாக்கியம் கண் விழித்திருந்து அவனுக்கு உணவு பரிமாறினாள். இன்னும் கலங்கிப் போயிருந்த அவனுக்கு உற்சாகமளிப்பதற்காக நாடகத்தை மிகவும் சிலாகித்துப் பேசினாள். தந்தை சிவநேசரும் நாடகத்தை பெரிதும் இரசித்ததாகக் கூறினாள் அவள். என்னதான் கவலை இருந்தாலும் அம்மாவின் பாராட்டுரைகள் அவனுக்கு இன்பத்தை அளிக்கவே செய்தன.

அடுத்த நாள் அவன் நித்திரை விட்டெழுந்த போது காலை ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. தாய் அவனுக்குப் பிரியமான முறையில் தோசை செய்து வைத்திருந்தாள். அதனை உண்டு கொண்டே தாயிடம் “அம்மா, என் கண்களில் அடிக்கடி கண்ணீர் வருகிறது. இன்னும் பார்வை கூட முன்போல் தெளிவாக இல்லை.” என்று கூறினான். பாக்கியம் அவன் முகத்தைக் கைகளால் நிமிர்த்திக் கண்களைப் பார்த்து விட்டு “அப்படியானால் நல்ல டாக்டரிடம் காட்ட வேண்டும். அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்.” என்றாள்.

சாப்பிட்டு முடித்ததும் மோகனாவின் படத்தைப் பூர்த்தி செய்வதற்காகத் தன் அறைக்குப் போய்விட்டான் ஸ்ரீதர். அங்கே ஜன்னலடியில் ஓவியமெழுதும் ஸ்டான்டுக்கு முன்னால் ஒரு முக்காலியில் உட்கார்ந்துகொண்டு படமெழுத ஆரம்பித்தான். மோகனாவோ கூண்டுக்குள்ளிருந்தபடி “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று சப்தமிட்டுக் கொண்டுருந்தது

சிறிது நேரம் செல்ல அவன் விறாந்தைக்கு வந்தபோது காரியாலய அறைக்குள்ளிருந்து ஒரு பெண் குரல் அவன் காதுகளில் வீழ்ந்தது. என்ன இது? அவனால் நம்பவே முடியவில்லை. பத்மா எப்படி இங்கே வந்தாள்? என்னிடம் ஒன்றும் சொல்லாமல் அவள் இப்படி வந்திருக்கக் கூடாதே. இதனால் என்ன தொல்லைகள் ஏற்படுமோ என்று எண்ணிக் கொண்டே காரியாலய அறையை நோக்கி நடந்தான். அவன் நெஞ்சு திக்திக்கென்றது.

ஆனால் காரியாலய அறைக்குள் அவன் எதிர்பார்த்தது போலப் பத்மாவைக் காணவில்லை. வேறு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். பத்மாவைப் போல் அவளும் ஓர் அழகிதான். அவளது குரலைத்தான் அவன் கேட்டான். ஆம் பத்மாவின் குரலுக்கும் சிறிது வித்தியாசம். இல்லை. என்ன ஆச்சரியமான குரலொற்றுமை என்று அதிசயித்தான் அவன்.

காரியாலயத்துள் அவன் கண்ட பெண் கிளாக்கர் நன்னித்தம்பியோடு உரையாடிக் கொண்டிருந்தாள். “வேண்டாமப்பா, எனக்கு வாத்தியார் வேலை பிடித்தமே இல்லை. வேறு வேலை ஏதாவது பார்த்தாலென்ன?” என்றாள் அவள்.

“பெண்களுக்கு இதர உத்தியோகங்களிலும் பார்க்க வாத்தியார் வேலைதான் நல்லது. அதுவும் கிடைக்கிறதோ என்னவோ? எதற்கும் ஐயா உன்னைக் கூட்டி வரச் சொன்னார். உனக்கு வேண்டியதை அவரோடு பேசிக் கொள். பயப்படாதே. பார்ப்பதற்குத்தான் கர்வி மாதிரித் தெரியுமே ஒழிய, அவரைப் போல நல்லவர் கிடைக்க மாட்டார்கள் சுசீலா” என்றார் நன்னித்தம்பி.

ஓ! இதுதான் நேற்று முன்தினம் நன்னித்தம்பி கூறிய அவரது மகள் சுசீலாவோ? சரி தான். குரலைக் கேட்டு எவ்வளவு பதறிவிட்டேன்? பத்மாவின் குரல் போலவே இவள் குரலிருக்கிறதே – என்று எண்ணிக் கொண்டே ஸ்ரீதர் “இது தான் உன் மகள் சுசீலாவோ? பீ.எ.பாஸ் பண்ணி விட்டாள் என்றாயே, அவள்தானா இது?” என்றான் நன்னித்தம்பியைப் பார்த்து.

நன்னித்தம்பி “ஆம் தம்பி” என்று கூறியதும் ஸ்ரீதர் அவனைப் பார்த்துப் சுமூகமாகப் புன்னகை பூத்து விட்டு நான் வருகிறேன். உன் மகள் பீ.ஏ. பாஸ் பண்ணி விட்டாள். நான் அடுத்த வருஷம் பாஸ் பண்ணி விடுவேன் பார். என்றாலும் உன் மகள் கெட்டிக்காரி. என்னிலும் பார்க்க வயது குறைந்தவள் போல் தெரிகிறது. இருந்தாலும் எனக்கு முன்னரே பீ. ஏ. பாஸ் பண்ணி விட்டானே” என்றான்.

அதற்கு நன்னித்தம்பி சிரித்துக் கொண்டு, “ஆம் தம்பி, சுசீலா உன்னிலும் பார்க்க இரண்டு வயது குறைந்தவள் தான்” என்று கூறினார். “பரவாயில்லை. என் வயதை ஈடு செய்யத்தான் அடுத்த வருடம் முதலாம் வகுப்பில் பாஸ் செய்கிறேன் பார். சுசீலா சாதாரண பாஸ் தானே பெற்றிருக்கிறாள்?” என்றான் ஸ்ரீதர்.

அதற்குச் சுசீலா “யார் சொன்னது நான் சாதாரண பாஸ் பெற்றேனென்று? நானும் முதலாம் வகுப்பில்தான் பாஸ் பண்ணியிருக்கிறேன்” என்றாள். நன்னித்தம்பி சிரித்தார்.

ஸ்ரீதர் “ஓ அப்படியா? அப்படியானால் நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்” என்றான்.

நன்னித்தம்பி ஸ்ரீதரைப் பார்த்து “சுசீலா என்னதான் பாஸ் பண்ணினாலென்ன? உங்களுக்கிருக்கும் அறிவில் பாதி அவளுக்கு இல்லை” என்றார். சுசீலா அதனை இடைமறித்து “நீங்கள் அப்பாவை நம்பாதீர்கள். அவர் பெண்களைப் பற்றி எப்பொழுதும் குறைவாகத்தான் பேசுவார். என்னை பொறுத்தவரையில் என் படிப்புக்கு ஏற்ற அறிவு இருக்கத்தான் இருக்கிறது” என்றாள்.

ஸ்ரீதருக்கு அவளது சாதுரியமான பேச்சு இன்பத்தை அளித்தது. “நன்னித்தம்பி. உன் மகள் நன்றாக வாதிடுகிறாள். அவள் அட்வகேட்டாவகப் படிக்க வை” என்று கூறி அங்கிருந்து கிளம்பி விட்டான். தந்தை சிவநேசர் காரியாலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்ததே அவள் அவ்வாறு நழுவுவதற்குக் காரணம்.

சிவநேசர் சுசீலாவை மெச்சிப் பாராட்டினார். அவள் பீ.ஏ. பாஸ் பண்ணியதில் தமக்கேற்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க ரூபா முந்நூறைக் காரியாலயத்திலிருந்த இரும்புப் பெட்டியைத் திறந்து தாமே தம் கையால் எடுத்து அவளுக்குப் பரிசாக அளித்தார் அவர். “இந்தப் பணம் உனக்கு. அப்பாவுக்குக்கொடுத்து விடாதே. உனக்கு விருப்பமான விதத்தில் செலவழி.” என்று வாஞ்சையோடு கூறினார் அவர்.

அன்று பிற்பகல் ஐந்து மணியளவில் சிவநேசர் ஸ்ரீதரை விறாந்தையில் தம் அருகே உட்கார வைத்துப் பேசினார்.

“நாளை நீ பெண் பார்க்கப் போக வேண்டும். மாலை நாலு மணிக்கு இங்கிருந்து சுழிபுரம் போகத் தயாராயிரு. அம்மாவும் நீயும் நானும் சின்னையா பாரதியும் போகிறோம். பாரதி நேரமெல்லாம் பார்த்துவிட்டார். நாளை மிகவும் உத்தமமான நாளாம்” என்றார் சிவநேசர்.

ஸ்ரீதர் திடுக்கிட்டு விட்டான். என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் வெள்ளம் தலைக்கு மேலே போய் விடும் என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் எல்லாவற்றையும் வெளியாகப் பேசித் தீர்த்துவிடுவதென்று தீர்மானித்துவிட்டான் அவன்.

“எனக்கு அமுதாவைக் கல்யாணம் செய்ய இஷ்டமில்லை.”

“ஏன்?”

“நான் கொழும்பில் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்யத் தீர்மானித்து விட்டேன்.”

“அம்மா சொன்னாள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.”

“ஏன் அப்பா, அவள் மிகவும் நல்லவள். நீங்கள் கொழும்புக்கு வந்தால் அவளை நான் கிஷ்கிந்தாவுக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். உங்களுக்கு மிகவும் பிடிக்குமப்பா.”

“கல்யாணப் பெண் நல்லவளா அல்லவா என்பதல்ல முக்கியம் ஸ்ரீதர். உனது நிலைக்கு ஏற்ப பெண்ணை நீ கட்ட வேண்டும். அமுதாவும் நல்லவள்தான். அத்துடன் சகல விதத்திலும் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவள் அவள்.”

“எனக்கு இந்த அந்தஸ்து என்பதில் நம்பிக்கையே இல்லை. ஏன், நீங்கள் கூட “எமது சமுதாயப் பிரச்சினைகள்” என்ற நூலில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்களல்லவா?” பத்மாவின் தகப்பனார் பரமானந்தர் கூட அந்த நூலின் பிரதி ஒன்றை வைத்திருக்கிறார். அந்த நூலைப் படித்ததன் காரணமாக அவர் இந்தத் திருமணத்திற்குக் கட்டாயம் உங்கள் ஆசி கிடைக்குமென்று நம்புகிறார், அப்பா.”

சிவநேசர் ஒரு கணம் மெளனமானார். எதிர்பாராத இவ்வார்த்தைகள் அவரை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டன. இருந்தும் சமாளித்துக் கொண்டு, உண்மைதான். ஒரு காலத்தில் அக்கொள்கைகளை நான் நம்பியதுண்டுதான். ஆனால் அவை கூடச் சாதாரண பொதுமக்கள் தம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் கூறிய ஆலோசனைகளேயல்லாமல் என்னையோ உன்னையோ போன்றவர்களுக்குக் கூறப்பட்ட ஆலோசனைகளேயல்ல. பரம்பரைச் செல்வாக்குடன் உள்ள நாம் உண்மையில் ஆட்சி செய்யப் பிறந்தவர்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு நீ சொல்லும் வாத்தியார் போன்றவர்களுடன் எந்தவிதமான உறவும் இவ்வுலகில் சாத்தியமில்லை” என்றார்.

“இதை நீங்கள் மனதார நம்பிக் கூறுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரையில் நான் மனித சமத்துவத்தை நம்புகிறேன். மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள். இதில் அந்தஸ்துக் கூடியவர் குறைத்தவர் என்று யாருமே இல்லை.”

“நீ எனக்குப் பரிசாகக் கொண்டு வந்தாயே நீட்சேயின் நூல்கள்? – அந்த நீட்சே மனிதர்கள் சமமென்ற கொள்கையை அங்கீகரிக்கவில்லை. உலகில் ஒருவர் ஆளவும் மற்றும் சிலர் அவர்களுக்குப் பணி செய்யவும் பிறந்திருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் இதுவரை நான் கண்டவர்களெல்லாம் ஆளப் பிறந்தவர்கள் தான். நீயும் ஆளப் பிறந்தவன் தான். உன்னைப் பார்த்தவர்கள் உன் தோற்றத்தைக் கொண்டே அதைப் பளிச்சென்று சொல்லிவிடுவார்கள். நீ ஆள வேண்டுமென்ற விருப்பத்தில் நான் தான் உன் ஆசைக்குத் தடையாய் நிற்கிறேன். நீட்சே கருத்துகள் மட்டுமல்ல, இந்துக்களின் மனுதர்மம் கூட அந்த அடிப்படையில் தான் எழுந்தது. ஆளப்பிறந்தவனை அன்று ஷைத்திரியன் என்றார்கள். இன்று அவனுக்கு அவ்விதம் பெயரளிக்கப்படாவிட்டாலும், ஆளப் பிறந்தவன் தன் நடவடிக்கைகள் மூலம் தான் யார் எனபதைக் காட்டி விடுகிறான். என்னைப் பொறுத்தவரையில் உலகில் சமத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது இயற்கைக்கு விநோதமான கொள்கை.”

“எப்படி?”

“இயற்கையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சமத்துவமாயிருப்பதை நீ எப்போதாவது கண்டிருக்கிறாயா? ஒரு மனிதன் குட்டை, மற்றவன் நெட்டை, ஒரு மனிதன் நூற்றைம்பது இறாத்தல், மற்றவன் நூற்றைம்பத்தைந்து இறாத்தல், ஒருவன் சிவப்பு, மற்றவன் கறுப்பு, ஒருவன் புத்திசாலி, மற்றவன் மடையன். உலகில் ஒருவருக்கொருவர் சமமான மனிதர் இல்லவே இல்லை. சமத்துவம் பேசுவபர்கள் உண்மையில் பொய் பேசுகிறார்கள்.”

சிவநேசர் தமது அந்தஸ்து வெறிக்கு ஒரு தத்துவ உருவமே கொடுத்து விட்டதைக் கண்டு ஸ்ரீதர் திகைத்தான். “நீட்சேயின் புத்தகங்களை நீங்கள் வாசிப்பது இதற்குத் தானா” என்றான் அவன்.

“தத்துவ தரிசர்களில் நீட்சே ஒருவன் தான் உண்மையை அப்படியே எடுத்துக் கூறியவன்.”

ஸ்ரீதருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நிறையக் கற்ற தந்தயாருடன், தத்துவ விசாரணை நூல்களை எழுதும் படிப்பாளியான தந்தையாருடன் தன்னால் வாதாடி வெற்றி பெற முடியாது என்றே அவனுக்குப் பட்டது. ஆகவே ஒன்றும் பேசாது மெளனமாகினான்.

பாக்கியம் தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருபதைத் தூரத்திலிருந்து பார்துவிட்டு இப்பேச்சுகளின் முடிவு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு நேர்த்திக் கடன் வைத்தாள். ஸ்ரீதர் மகிழும்படி விஷயங்கள் முடிந்தால் அவனைக் கொண்டு கந்தனுக்குக் காவடி எடுப்பேன் என்று கூறிக் கொண்டாள் அவள்.

சிவநேசர் திடீரெனத் தம் ஆசனத்தை விட்டெழுந்தார். பின் தமது அறைக்குள் சென்று சில விநாடி நேரத்தில் வெளியே வந்தார் அவர்.

“ஸ்ரீதர், என்னுடன் வா. யாருக்கும் தெரியாத ஒரு குடும்ப இரகசியத்தை உனக்குக் காண்பிக்கப் போகிறேன். உன் அம்மாவுக்கும் தெரியாத இரகசியம். அந்த இரகசியத்தைப் பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னாலும் தாங்கா முடியுமோ என்னவோ? அதை நான் இவ்வளவு விரைவில் உனக்குச் சொல்ல வேண்டி வரும் என்று ஒரு போதும் நினைத்ததேயில்லை. இப்பொழுது அதைச் சொல்லியாவது உன்னை மாற்றமுடியுமா என்ற எண்ணத்தில் அதைச் சொல்ல முற்படுகிறேன். வா என்னோடு.”

சிவநேசர் அமராவது வளவின் காடாய்க் கிடந்த பகுதியை நோக்கி நடந்தார். அங்கே இலந்தை மரம், விளாமரங்களுக்கு அப்பால ஒரு நாவல் மரமும், சூரை மரமும் இருந்தன. முள்ளும் செத்தையுமாய்க் கிடந்த அப்பிரதேசத்தில் ஓணான்கள் சரசரவென்று ஒலி கிளப்பி ஓடிக்கொண்டிருந்தன. அணில்கள் சில நாவல் மரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாயிருந்தன. ‘அப்பா எங்கே போகிறார்?’ என்று எண்ணிக்கொண்டே ஸ்ரீதர் அவர் பின்னால் மெளனமாகச் சென்றான்.

பாக்கியம் ஒன்றும் விளங்காது அவர்கள் போன திசையைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

சிவநேசர் சூரை மரத்துக்குச் சிறிது தொலைவில் வளவைச் சூழ இருந்த மதிலுக்கு அருகாமையில் செத்தைகளுள் மறைந்து கிடந்த ஒரு சிறிய நடுக்கல்லை ஸ்ரீதருக்குச் சுட்டிக் காட்டினார்.

“ஸ்ரீதர், இக்கல் எதற்காக அங்கே நடப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?” என்று கேட்டார் அவர்.

“அது ஒரு பழைய எல்லைக் கல்லு. அப்படித்தான் அம்மாவும் வேலைக்காரி தெய்வானையும் எனக்குக் கூறியிருக்கிறார்கள்.”

“இல்லை. அது எல்லைக் கல்லல்ல. அவர்களுக்குக் கூட அது ஏன் அங்கு நடப்பட்டதென்று தெரியாது.”

“அப்படியானால்?”

“நீ பிறப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவத்தின் ஞாபகக் கல் அது. ஆம் அது எனது தங்கை விசாலாட்சியின் நடுக்கல். உனது மாமியின் நடுக்கல். அவள் மட்டும் புத்திசாலியாயிருந்திருந்தால் நீ இன்று கந்தப்பசேகரர் மகள் அமுதாவைக் கல்யாணம் செய்யும் பேச்சே ஏற்பட்டிருக்காது. அவள் மகளை, உன் மைத்துனியை நீ கல்யாணம் செய்திருக்கலாம்.”

ஸ்ரீதர் இச் செய்தியை கேட்டு நடு நடுங்கிவிட்டான்.

“இந்நடுக்கல்லுக்குக் கீழே விசாலாட்சியின் சடலம் இப்பொழுது எலும்புக் கூடாகக் கிடக்கிறது. அவளும் உன்னைப் போலத்தான். அழகாயிருப்பாள். குணமானவள். திறமையானவள். எல்லோரும் அவளை மனதார விரும்பினார்கள். ஆனால் பிடிவாதக்காரி. தனது அந்தஸ்தைப்பற்றி எண்ணாதவள். உள்ளூர் வைத்தியர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்வேனென்று பிடிவாதம் பிடித்தாள் அவள். அப்பா அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சி எடுத்தார். வேறு கல்யாணம் பேசினார். ஒன்றையும் அவள் ஏற்கவில்லை. கடைசியில் ஒரு நாள் வைத்தியர் மகனோடு ஓடி விட்டாள் அவள். இதனால் ஆத்திரமடைந்த அப்பா அவளை எப்படியோ பிடித்து வந்து விட்டார். கொதிப்படைந்த அவர் அவளை இங்கே தன் கையாலேயே கொன்று புதைத்தார். அவள் நினைவுதான் இந்த நடுக் கல். சாகும் வரைக்கும் எங்கள் அப்பா தினசரி இவ்விடத்துக்கு வரத் தவறியதில்லை. தனது சொல்லைக் கேட்காத அன்பு மகளுக்காக அவர் ஒரு நாளாவது இங்கே கண்ணீர் விடத் தவறியதில்லை.”

கதையைக் கேட்டு வந்த ஸ்ரீதர் “பொலீசார் அவரை ஒன்றும் செய்யவில்லையா?” என்று கேட்டான்.

சிவநேசர் “போலீசார்! சக்தி வாய்ந்த மனிதர்கள் அப்படிப்பட்ட சிறிய பிரச்சினைகளை இலகுவாகச் சமாளித்துக் கொள்வார்கள். ஓடியவள் ஓடியவள் தான். திரும்பி வரவில்லை என்று உலகத்தை நம்ப வைத்துவிட்டார் உன் பாட்டனார்.” என்றார்.

ஸ்ரீதர் “இந்த கதையை இப்பொழுது நீங்கள் எனக்குக் கூறுவதற்கு என்ன காரணம் அப்பா? எனது பிரச்சினைக்கும் அதே முடிவைக் காண்பது உங்கள் நோக்கமா? என்னைப் பொறுத்த வரையில் அவ்வித முடிவை நான் வரவேற்கிறேன். மாமியை அப்பா கொன்றது போல் என்னையும் நீங்கள் உங்கள் கையால் கொன்று பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.” என்றான்.

சிவநேசர், “ ஆம். அது இலகுவான ஒரு முடிவுதான். ஆனால் எனது அப்பாவுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம். விசாலாட்சி இறந்த பின்னரும் நான் அவருக்கு மிஞ்சினேன். ஆனாலெனக்கு இருப்பது ஒரேயோர் அன்பு மகன். அவன் போனால் “அமராவதி” வளவே அழிந்து விடும். அதற்கு நான் இடமளிக்க மாட்டேன். இன்னும் அப்பா விசாலாட்சி மீது செலுத்திய அன்பை விட நான் உன் மீது செலுத்தும் அன்பு மிக மிக அதிகம். ஸ்ரீதர்! நீ இறந்த பின் நான் இவ்வுலகில் இருக்க மாட்டேன். உன்னைப் பிரிந்து, என்னால் வாழ முடியாது. நானும் தற்கொலை செய்து கொள்ளுவேன். அவ்விதம் நேரிட்டால் பாக்கியமும் என்ன செய்வாளோ? அதனால்தான் நீ சொல்லும் அந்த இலகுவான முடிவை என்னால் அமுல் நடத்த முடியாதிருக்கிறது ஸ்ரீதர்.” என்றார்.

ஸ்ரீதர் சிவநேசர் கூறியதைத் திக்பிரமை பிடித்தவள் போல் கேட்டுக் கொண்டிருந்தான். இரு விநாடிகளின் மெளனத்துக்குப் பிறகு, சிவநேசர் மீண்டும் பேசினார். பேசிக்கொண்டே தம் சட்டைப் பையிலிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை வெளியே எடுத்தார் அவர்.

“ஸ்ரீதர், ஆனால் இப்பிரச்சினையை வேறு விதமாகவும் தீர்த்துக் கொள்ளலாம். நீ விரும்பிய அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நீ வாழ வேண்டுமானால் இதோ இந்தத் துப்பாக்கியை உன் கையில் எடுத்துக் கொள். என்னைச் சுடு. அதன் பின் உன் இஷ்டப் படி நீ நடந்து கொள்ளலாம். எங்கள் பிரச்சினைக்கு அதுதான் நல்ல முடிவு. இதோ துப்பாக்கியைப் பிடி.”

ஸ்ரீதர் கலங்கிப் போய்விட்டான். “அப்பா என்ன சொல்கிறீர்கள்?” என்று கூறும் போதே அவன் கண்கள் கலங்கிக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தன. நிலத்தை நோக்கிய வண்ணம் தன் உதடுகளைத் தன் பற்களால் கடித்துக் கொண்டான் அவன்.

“ஆம். என்னால் உன்னைச் சுட முடியாது. ஆனால் உன்னால் என்னைச் சுட முடியுமென்றே நினைக்கிறேன். இதோ தைரியமாக முயன்று பார். துப்பாக்கியைப் பிடி.”

சிவநேசர் அவனை வற்புறுத்தினார்.

“அப்பா இதென்ன பயங்கரமான பேச்சு? வாருங்கள் நாங்கள் வீட்டுக்குப் போவோம்”

“போவோம். ஆனால் போவதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது வரை நீ வாழ்வில் விரும்பியதெல்லாவற்றையும் நான் மறுக்காது கொடுத்திருக்கிறேன். இனியும் அவ்வாறு நடக்க வேண்டுமென்பதே என் எண்ணம். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும், குடும்ப அந்தஸ்து என்ற ஒரு விஷயத்தில் மட்டும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாமல் இருக்கிறது. அது என் உயிரோடு சேர்ந்த கொள்கையாகி விடுகிறது. நான் என்ன செய்வேன்? குடும்ப அந்தஸ்துக்குக் கெடுதி ஏற்படும் வகையில் நடப்பதில்லை என்று உறுதி கூறு. நாங்கள் போய் விடலாம்.”

“அப்பா நான் உறுதி கூறுகிறேன். குடும்ப அந்தஸ்துக்குக் கேடு தரும் வகையில் நான் நடக்கவே மாட்டேன்.”

“அப்போது நீ அந்த வாத்தியார் மகளைக் கட்டப் போவதில்லையா?”

“நீங்களே சம்மதித்தாலொழிய நான் பத்மாவைக் கல்யாணம் செய்ய மாட்டேன்.”

“ஸ்ரீதர் நீ நல்லவன்! உன்னைப் போல் பிள்ளை எல்லோருக்கும் கிடைக்க மாட்டார்கள். நீ என் உயிருக்குச் சமானம். ஆனால் பத்மாவை நீ கட்ட நான் சம்மதிப்பதா? அவ்வாறு மட்டும் என் மனதிற்கிருந்தால் நான் நிச்சயம் அதற்கு உடனே சம்மதிப்பேன். ஆனால் அதை நினைத்தாலே எனக்கு அருவருப்பேற்படும்போது, நான் எப்படி அதற்குச் சம்மதிப்பது? இந்த “அமராவதி” வளவு என்னை அப்படி வளர்த்துவிட்டதே”

“ஆனால் ஒன்று….” ஸ்ரீதர் தாழ்ந்த குரலில் ஏதோ சொல்வதற்கு முயன்றான்.

“சொல்லு, என்ன வேண்டுமோ சொல்லு ஸ்ரீதர்.” என்றார் சிவநேசர்.

“நான் உங்கள் எண்னத்துக்குச் சம்மதித்து விட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை…”

“என்ன நிபந்தனை?” எதை வேண்டுமானாலும் கேள்”

“பத்மாவை நான் உண்மையிலேயே நான் நேசிக்கிறேன். சாவித்திரியைச் சத்தியவான் நேசித்தது போல, அமராவதியை அம்பிகாபதி நேசித்தது போல நான் அவளை நேசிக்கிறேன். அவளைத் தவிர வேறொருத்திக்கு என் மனதில் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். அது மட்டும் நிச்சயம். ஆகவே என்னால் ஒருபோதும் அமுதாவைத் திருமனம் செய்ய முடியாது. என்னை என் போக்கில் விட்டுவிட வேண்டும். நான் கலியாணம் செய்யாமலே வாழ்வேன், அப்பா.”

“ஸ்ரீதர் நீ போடுவது பயங்கரமான நிபந்தனை. எங்கள் வம்சத்துக்கே முற்றுப்புள்ளி போடும் நிபந்தனை…”

“உங்கள் மனதை மகிழவிக்க நான் அதையும் விட்டுக் கொடுப்பேன் அப்பா. ஆனால் என் செய்வேன், அது என்னால் முடியாத விஷயமாயிருக்கிறதே…”

சிவநேசரின் உள்ளம் துணுக்குற்றது. ஸ்ரீதர் எதற்காகத் தன் உயிரினும் உயிராகப் பேணும் பத்மாவைத் தியாகம் செய்கிறான்? எனக்கு மகிழ்ச்சி தருவதற்காக என்றல்லவா அவன் கூறுகிறான்? ஆனால் நான் அதனால் இப்பொழுது அடைந்து கொண்டிருக்கும் உணர்ச்சி மகிழ்ச்சிதானா? தன்னை அதி மனிதனாகக் கணித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தை நிலை நாட்டி விட எதையும் செய்யத் தயாராயிருக்கிறான். அவன் அதனால் அடையும் திருப்தி அவனது அகம்பாவத்தினால் பிறக்கிறது. எனது செயல்களும் அகம்பாவத்தில் பிறந்தவைதான். ஆனால் இலட்சிய மனிதனின் அடிப்படைப் பண்பே கர்வம் அல்லது அகம்பாவம் என்னும் அப்பண்புதானே!

சிவநேசருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு “காலம் செல்ல இதிலும் உன் மனம் மாறுதல் அடையலாம். இப்பொழுது நீ போ. இங்கு நடந்ததை அம்மாவிடம் கூடச் சொல்லாதே. முக்கியமாக விசாலாட்சியைப் பற்றிய விஷயத்தைச் சொல்லிவிடாதே. இன்று விசாலாட்சியுமில்லை. அவளைக் கொன்ற என் அப்பாவுமில்லை. அதனால் விஷயம் பொலீசாருக்குத் தெரிந்து எவருக்காவது கஷ்டங்கள் விளையுமென்ற நிலை இல்லாவிட்டாலும், பாக்கியம் இதை அறிந்தால் பயந்துவிடுவாள் என்ற அச்சம் எனக்குண்டு. நீயோ ஆண் பிள்ளை எதையும் தாங்கிக் கொள்ள நீ பயின்று கொள்ள வேண்டும்.”

அன்றிரவு சிவநேசர் தூங்கவே இல்லை. தம் அறையுள் நீண்ட நேரம் குறுக்கும் மறுக்குமாக நடந்துக் கொண்டிருந்த அவர், ஸ்ரீதர் தூங்கி விட்டானா என்று பார்க்க விரும்பினார். மெல்ல அவன் படுக்கை அறையை நோக்கி நடந்தார்.

வளர்பிறையின் வண்ண நிலா அறையின் ஜன்னலூடாக, படுக்கைக்குச் சமீபமாகப் பிரவகித்துக் கொண்டிருக்க, ஸ்ரீதர் ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்திருந்தான். ஆம், தூக்கம் என்பது விசித்திரமானது. துக்க நினைவுகளில் ஈடுபட்ட ஒருவரின் கண்களை அது சில சமயங்களில் முற்றாகத் தழுவ மறைந்து விடுகிறது. ஆனால் வேறு சமயங்களில் கவலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்குத் தூக்கமே சிலருக்கு உறு துனையாகவும் ஆகிவிடுகிறது.

சிவநேசர் சிறிது நேரம் ஸ்ரீதரையே பார்த்துக் கொண்டு நின்றார். தனக்காக அவன் செய்த தியாகத்தை நினைத்ததும் அவரது உளளம் வெதும்பியது. எந்த ஆண் பிள்ளையும் எந்தக் கஷ்டத்திலும் அழவே கூடாது, அழுகை பலவீனத்தின் அறிகுறி என்பதே அவரது சித்தாந்தமாயினும் இருளில் தனியே நின்று தன் மகனைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு தன் கண்களில் பீறிட்டு வந்த கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. “அவனை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறேன் நான்” என்று எண்ணிய அவர், கன்னத்தின் வழியே கோடிட்டுச் சென்ற கண்ணீர்த் தாரையைத் துடைப்பதற்குக் கூடக் கையை உயர்த்தவில்லை. அக்கண்ணீர் தான் அன்று மாலை ஸ்ரீதரின் ஆசைக் கோட்டைகள். எல்லாவற்றையும் அடியோடு தரை மட்டமாக்கிவிட்ட கொடிய பாவத்துக்குத் தான் செய்ய்யும் பிராயச் சித்தம் போலிருந்தது அவருக்கு.

18-ம் அத்தியாயம்: இருள் சூழ்ந்தது

அடுத்தநாட் காலை ஸ்ரீதர் படுக்கையை விட்டு எழுந்த போது பகல் பதினொரு மணியாகிவிட்டது. சிறிது கண்ணயர்வதும், மீண்டும் மறுபுறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுமாக நேரம் போய் விட்டது. பாக்கியம் அவனைப் பத்துப் பதினைந்து தடவை வந்து பார்த்துவிட்டுப் போய் விட்டாள். உடலும் மனமும் சேர்ந்து அவன் கட்டிலில் படுத்திருந்த காட்சி அவளுக்கு மிகவும் பரிதாபமாகத் தோன்றியது. பாவம், எவ்வளவு கலகலப்பாக இருக்க வேண்டியவன் இப்படிச் சோர்வுறும்படி ஏற்பட்டுவிட்டதே என்று வாடிப் போய்விட்டாள் அவள். காலையில் சிவநேசர் முதல் நாள் மாலை சூரை மரத்தடியில் தானும் மகனும் செய்து கொண்ட ஏற்பாடுகளைப் பாக்கியத்துக்குச் சுருக்கமாகக் கூறியிருந்தார். அத்துடன் “ஸ்ரீதர் உண்மையில் என் மகன் தான். எங்கள் குடும்ப அந்தஸ்தைத் தான் கெடுக்கப் போவதில்லை என்றும், பத்மாவை, நான் சம்மதித்தாலொழிய தான் திருமணம் செய்ய மாட்டான் என்றும் ஒப்புக் கொண்டுவிட்டான். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்திருக்கிறான். தன்னை யாரும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தக் கூடாது என்பது தான் அது. பத்மாவின் நினைவை மறக்கும் வரை அவனை நாம் இது விஷயத்தில் அவன் போக்கிலே தான் விட வேண்டும். ஆறு மாதமோ ஒரு வருடமோ போன பிறகு, அவன் மன நிலையை அறிந்து மீண்டும் அவன் திருமணப் பேச்சைத் தொடங்கலாம். இப்போதைக்கு நாம் மெளனமாகவே இருக்க வேண்டும். நாட் செல்ல அவன் எங்கள் வழிக்கு வந்தே தீருவான். மேலும் ஸ்ரீதருக்கு என்ன வயதா போய்விட்டது? இன்னும் இருபத்துமூன்று வயதுதானே நடக்கிறது?” என்று கூறினார் அவர்.

“அப்படி என்றால் இன்று பெண் பார்க்கச் சுழிபுரம் போவதாக இருந்த ஏற்பாடு பற்றி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றாள் பாக்கியம்.

“இப்பொழுதே டெலிபோன் பண்ணி ஸ்ரீதருக்கு உடம்பு சுகமில்லை. வேறொறு நாள் பார்க்கலாம் என்று கூறிவிட்டால் போகிறது.” என்றார் சிவநேசர்.

சொன்ன மாதிரி காலை எட்டு மணிக்கு முன்னரே சுழிபுரத்துக்கு ‘ட்ரங் கோல்’ போட்டு, பெண் பார்க்கும் ஏற்பாட்டை இரத்து செய்து விட்டார் அவர். கந்தப்பசேகரருக்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்ததாயினும் வேறு வழியில்லாததால் ஒப்புக் கொண்டார்.

பாக்கியத்துக்கு ஸ்ரீதர் காலையில் எழுந்து தேநீரோ கோப்பியோ அருந்தாதது அதிக கவலையைத் தந்தது. ஆகவே ஓரிரு தடவை தாயின் வாத்சல்யத்துடன் அவன் நெற்றியையும் தலை மயிரையும் தன் கைகளால் தடவிவிட்டு “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று மெல்ல அழைத்துப் பார்த்தாள். ஆனால் அவனோ நித்திரையிலிருந்து எழும்புவதாகக் காணோம். எனவே “சரி தூங்கட்டும். தூக்கத்தைக் கலைக்கக் கூடாது” என்று போய் விட்டாள். பின்னர் நேரம் பதினொரு மணியாவதைக் கண்டதும் இனியும் சாப்பிடாமல் பட்டினியாகத் தூங்கவிடக் கூடாதென்று எண்ணிய அவள் மோகனாவைத் துண்டிவிட்டு “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று அழைக்கும்படி செய்தாள்.

மோகனா “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று பல முறை தன் தத்தை மொழியில் அவனைக் கூப்பிட்டது. ஸ்ரீதர் விழித்துக் கொண்டு “சத்தம் போடாதே மோகனா பேசாமலிரு” என்று கூறினான். பாக்கியம் கட்டிலில் அவள் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டே “ஸ்ரீதர்! மோகனா உன்னைச் சாப்பிடக் கூப்பிடுகிறது. எழுந்து சாப்பிட்டுவிட்டுப் படு” என்று கூறினான். ஸ்ரீதர் பதிலுக்கு ஒன்றும் பேசாமல் தலையணையிலிருந்த தலையைத் தாயின் படிக்கு மாற்றிக் கொண்டான்.

“ஸ்ரீதர், உனக்குப் பிரியமான கருணைக்கிழங்குக் கறியும் கோழி இறைச்சியும் சமைத்து வைத்திருக்கிறேன். எழுந்து சாப்பிடுகிறாயா/” என்றாள் பாக்கியம்.

“சாப்பிடுகிறேன். அது இருக்கட்டும் அம்மா. இன்று நாங்கள் சுழிபுரம் போவதாக இருந்ததே, அது என்ன ஆச்சு?” என்று கேட்டான் ஸ்ரீதர்.

“அதை அப்பா ஒத்தி போட்டு விட்டார்” என்றாள் பாக்கியம், அவனுக்கு உற்சாகம் அளிக்கும் நோக்கத்துடன்.

“அப்படியா? அது நல்ல செய்திதான்” என்று சொல்லிக் கொண்டே அவன் படுக்கையிலிருந்து எழுந்து முகம் கழுவிச் சாப்பிடுவதற்குச் சென்றான்.

சாப்பாட்டு மேசையில் அவன் தாயாரிடம் “அம்மா என் கண் பார்வை சிறிது மங்கி வருகிறது. மேலும், கண்களில் அடிக்கடி எரிச்சல் உண்டாகி வருகிறது. என்னவென்றே தெரியவில்லை. டாக்டரிடம் காட்ட வேண்டும்.” என்றான்.

“அதற்கென்ன? டாக்டர் நெல்சனுக்கு உடனே டெலிபோன் பண்ணி வரவழைக்கிறேன். அவர் நல்ல கண் வைத்தியர், அப்பாவுக்கு நன்கு தெரிந்தவர். போன தடவை அவரிடம் காட்டித்தான் அப்பா கண்ணாடி வாங்கினார்.” என்றாள் பாக்கியம்.

அவ்வாறு சொல்லிவிட்டு, சிவநேசர் அறைக்குச் சென்று டாக்டருக்கு டெலிபோன் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, சாப்பாட்டு மேசைக்கு மீண்டும் வந்தாள். ஸ்ரீதருக்குப் பக்கத்திலிருந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து மகனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் அவள்.

” நேற்று தகப்பனும் மகனும் கல்யாணத்துக்கு ஒரு முற்று எடுத்து விட்டீர்களல்லவா? என்ன ஏற்பாடு” என்று ஒன்றுமறியாதவள் போல் ஆரம்பித்தாள்.

“ஏற்பாடா? அம்மா விசித்திரமான ஏற்பாடு. அப்பாவுக்கு அந்தஸ்துக் குறைந்த இடத்தில் திருமணம் செய்வதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறதாம். அவர் உண்மையைத்தான் சொல்கிறார். என்ன செய்வது? அவர் தம் மனதை அவ்வாறு பயிற்றி விட்டார். இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும். அந்தஸ்துக் குறைந்த இடத்தில் திருமணம் செய்வதில்லை – அப்பாவே தம் மனம் மாறிச் சம்மதித்தாலன்றி நான் பத்மாவைக் கல்யாணம் செய்யப்போவதில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டேன். ஆனால் அப்பாவைப் போன்ற ஓர் அருவருப்பு எனக்கும் இருக்கிறது. அதாவது பத்மாவைத் தவிர வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதை நினைத்தாலே எனக்கு ஒரே அருவருப்பாயிருக்கிறது. உண்மையில் உன்னையும் பத்மாவையும் தவிர வேறு எந்தப் பெண்ணும் எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தால் கூட எனக்கு எரிசல் ஏற்படுக்கிறது. அம்மா இந்த நிலையில் என்னை வேறெந்தப் பெண்ணையும் திருமணம் செய்யும்படி வற்புறுத்தக் கூடாது என்று நான் அப்பாவிடம் கூறிவிட்டேன். அவரும் ஒப்புக் கொண்டுவிட்டர்” என்றான்.

“உன்னையும் பத்மாவையும் தவிர வேறு எந்தப் பெண்ணும் எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தால் கூட எனக்கு எரிச்சல் ஏற்படுகிறது, அம்மா” என்ற அந்த வசனத்தில் ஸ்ரீதர் பத்மா மீது எத்தகைய அழுத்தமான அன்பு வைத்திருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டாள் பாக்கியம். இவ்வாறு கள்ளங்கபடற்ற தன் மகனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்ட பத்மா எப்படியிருப்பாள். அவளைப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் கூட அவளுக்கு ஏற்பட்டது. இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற உண்மைக் காதலை நானும் அவருமாக உடைத்தெறிந்து கொண்டிருக்கிறோமே, இது எவ்வளவு பாவம் என்று வருந்தினாள் அவள். இன்னும் பத்மாவையே சதா எண்ணிக் கொண்டு நித்திய பிரமச்சரியாகவே ஸ்ரீதர் காலத்தைக் கழித்துவிட்டால் “அமராவதி” வளவு தன் தொடர்ச்சியை இழந்து மறக்கபட்டுவிடுமோ என்றும் பயந்தாள் அவள். காலமும் மாவிட்டபுரம் கந்தசாமியும்தான் ஸ்ரீதரின் மனதை மாற்ற வேண்டும் என்று எண்ணிய அவள், ஒரு நல்ல சாஸ்திரியாரிடம் ஸ்ரீதரின் சாதகத்தைக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

“நேற்று நீயும் அப்பாவும் பேசச் சென்ற போது நான் மிகவும் பயந்து விட்டேன். அப்பா சிங்க லக்கினக்காரர். தான் பிடித்ததை ஒரு போதும் விட மாட்டார். அவரை எதிர்த்து வெல்ல இந்த உலகத்தில் யாராலும் முடியாதும். நீயும் அப்படித்தான். நீயும் சிங்க லக்கினக்காரன். ஆகவே சண்டை போட்டுக் கொள்வீர்களோ என்று பயந்தேன். ஆனால் ஆண்டவன் காப்பாற்றி விட்டான்” என்று ஸ்ரீதரிடம் கூறினாள் அவள். இடையிடையே “கோழிக் கறி ருசியாயிருக்கிறதா?” என்று கேட்டு வைத்தாள். “இன்றைக்கு ஒன்றுமே ருசிக்கவில்லையம்மா. இனிமேல் எனக்கு எந்தக் கறியுமே ருசிக்காது.” என்று கையை அலம்பிக் கிளம்பிச் சென்றான் அவன். அவன் முகத்தை இருள் கப்பியிருந்தது.

அதன் பின் பாக்கியம் சிவநேசரைத் தேடிப் புறப்பட்டாள். அவர் தமது நூல் நிலையத்தில் ஏராளமான புத்தகங்களை மேசையில் பரப்பி வத்துவிட்டு எதிலும் மனம் செல்லாதவராய் உட்கார்ந்திருந்தார். பாக்கியம் அங்கிருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டே ” நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அவனைக் கசக்கிப் பிழிந்துவிட்டீர்கள். அவ்வளவுதானே உங்களுக்குத் தேவையாயிருந்தது” என்றாள். பாக்கியத்தின் சொற்களிலே அவள் அடக்க முயன்று கொண்டிருந்த அவளது எல்லையற்ற கோபம் தெரிந்தது.

சிவநேசர் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு “பாக்கியம் நீ அநாவசியமான சொற்களைப் பேசி என் மனதைத் துன்புறுத்தாதே. என்னை என் பாட்டில் விட்டு விட்டுப் போய் விடு. என் மனதின் வேதனை உனக்குச் சிறிதும் தெரியவில்லையே” என்றார்.

‘அமராவதி’ வளவை இவ்வாறு அன்று காலையிலிருந்து சூழ்ந்து கொண்டிருந்த இருள் அன்று மாலை மேலும் மோசமாகியது. பிரபல கண் வைத்தியர் டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களைப் பரிசோதித்து விட்டு, சிவநேசரிடம் கூறிய வார்த்தைகளே அதற்கும் காரணம்.

டாக்டர் நெல்சன் இலங்கையில் மிகச் சிறந்த கண் வைத்தியர் என்று புகழ் பெற்றவர். கண் வைத்தியத் துறையில் அவருக்குச் சமமான பட்டமும் படிப்பும் பெற்றவர் இன்னொருவரே இலங்கையில் இருந்தார். கொழும்பு கண்ணாஸ்பத்திரியின் பிரதான வைத்தியரே அவர்.

டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களைப் பரிசோதித்துவிட்டு வேடிக்கையாக, ‘ஸ்ரீதர், கண்ணில் உனக்கு இப்படி நோய் வரக் காரணமென்ன? பெண்களைப் பார்த்து அதிகமாக கண்ணடிப்பதுண்டோ?” என்றார். மற்ற நேரங்களில் என்றால் ஸ்ரீதர் இதைக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்திருப்பான். ஆனால் அன்று அவன் சிரிக்கக் கூடிய மன நிலையில் இல்லை.

பரிசோதனையில் டாக்டர் நெல்சன் சிவநேசருடைய அறையில் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

“ஸ்ரீதருக்குக் கண்ணில் ஏற்பட்டிருக்கும் நோய் மிகவும் பயங்கரமான ஒரு நோய். இரண்டு கண்களிலும் ஒரே மாதிரி நோய் கண்டிருக்கிறது. மிகவும் அரிதாகவே ஏற்படும் இந்நோய்க்குச் சந்திர சிகிச்சை செயய வேண்டுமென்றாலும் அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இன்னொன்று, இந்நோய் அவன் கண்கள் இரண்டையும் குருடாக்குவதையும் தடுக்க முடியாது. அநேகமாக அவன் கண் பார்வை இன்னும் ஒரு மாதம் கூட நீடிக்குமோ என்பதே சந்தேகம்.” என்றார்.

சிவநேசர் திகைத்துவிட்டார். “என்ன, உண்மையாகவா மேல் நாடுகளுக்குக் கொண்டு சென்றாவது அவனுக்குச் சிகிச்சை செய்ய முடியாதா? நீங்கள் சொல்வது என்னைத் திகிலடைய வைக்கிறது, டாக்டர்” என்றார்.

அதற்கு டாக்டர் நெல்சன் தம் தலையை இலேசாக அசைத்தார். “ஸ்ரீதரை மேல் நாடுகளுக்குக் கொண்டு செல்வதால் நன்மை ஏற்படும் என்று நான் நம்பவில்லை. இதே நோயுற்ற இன்னோர் இளைஞனை நான் அறிவேன். இந்நோய் நரம்புகளோடு சம்பந்தமுடையது. சிகிச்சையை அதிகம் செய்யப் போவதால் நாம் அவனுக்கு இன்னும் அதிக கேட்டை உண்டாக்கிவிடலாம். அதனால் இது பற்றி ஒன்றும் செய்யாதிருப்பதே நல்லது. கண்ணில் ஏற்பட்டுள்ள எரிச்சல், நோவு முதலியற்றைக் குறைப்பதற்கு மட்டும் வேண்டுமானால் மருந்து கொடுக்கலாம். வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை.”

இவ்வாறு கூறிச் சில மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு டாக்டர் போய்விட்டார். சிவநேசர் பாக்கியத்திடம் விஷயத்தைக் கூறினார். அவள் பயந்து போய்விட்டாள். “ஸ்ரீதர் குருடாவதா? கடவுள்தான் அவனைக் காப்பாற்றவேண்டும்.” என்று தனக்குத் தெரிந்த தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் நேர்த்திக் கடன் வைத்தான் அவள்.


அமராவதி வளவில் இவை நடந்து கொண்டிருக்க கொழும்பு கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் 48/3 இலக்க வீட்டில் பத்மா என்ன நினைவில் இருந்தாள் என்பதைப் பார்ப்போம்.

ஸ்ரீதரும் பத்மாவும் கால்பேசில் மழை நீராடி இப்பொழுது பத்து நாட்களாகியிருந்தன. அவள் ஸ்ரீதரிடமிருந்து ஏதாவது செய்தி வருமென்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. “ஸ்ரீதர் என்னை மறந்து விட்டானா” என்று கூட அஞ்சினாள் அவள். “ஒரு வேளை நான் முதலில் அஞ்சியது போலவே அவன் என்னை மோசம் செய்து விடுவானா” என்று கூட எண்ணினாள் அவள்.

தினசரி பல்கலைக் கழகத்தில் அவனைச் சந்திக்கும் இடத்தைக் கடந்து செல்லும் போது அவள் உள்ளம் வேதனைப்பட ஆரம்பித்தது. தனிமை நோய் அவளைக் கொன்றது. ஸ்ரீதருடன் சிரித்துப் பேசி அவன் விரல்களைப் பற்றி விளையாடுவதும், வசதியான இடங்களில் இலேசாக அவனுடன் முத்தங்கள் பரிமாறிக் கொள்வதுமாகச் சென்று இரண்டு மூன்று மாதங்களாக அவள் அனுபவித்து வந்த காதல் வாழ்வு திடீரென நின்று போனதும் அவள் வாழ்க்கையே உப்புச் சப்பற்றதாகத் தோன்றியது அவளுக்கு. அழகனான ஸ்ரீதரின் அணைப்பிலே அவளுக்கு வழக்கத்தில் பொழுது போவதே தெரிவதில்லை. ஆனால் இப்போது அந்த அணைப்புகளும், வேடிக்கைப் பேச்சுகளும், காதல் மொழிகளும் நின்று போக, அவளுக்கு நேரம் போக மாட்டெனென்றது. நேரத்தைப் போக்குவதற்கு என்ன செய்வதென்றறியாது மயங்கினாள் அவள். தான் அனுபவித்து வந்த இன்பம் இப்படித் திடீரென நின்று போகும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. உண்மையில் ஸ்ரீதரின் சேர்க்கை அவளுக்கு ஓர் உள்ளத் தேவையாக மட்டுமல்ல ஓர் உடல் தேவையாகவே ஆகியிருந்ததால், அது இல்லாது போகவே “வயல் மீது தண்ணீர் வற்றி வாடுகின்ற நெற் பயிர் போல்” வாடி வதங்க ஆரம்பித்தாள் அவள். பல்கலைக் கழகத்துக்குப் போகும் வழியிலும் வரும் வழியிலும் காதல் ஜோடிகளை அவ்வப்பொழுது காணும் நேரங்களிலெல்லாம் தாங்கொணாத விரகதாபம் அவளைப் பீடிக்க ஆரம்பித்தது. காதற் கதைகளை வாசிக்கும்போதும், சினிமா விளம்பரங்களில் ஆடவர், அரிவையர் கட்டியணையும் காட்சிகளைக் காணும்போதும் அவளை அறியாமலே உள்ளத்தில் ஒரு தீ எரிவது போன்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட ஆரம்பித்தது. அந்தத் தீயை அணைக்க முடியாது தத்தளித்த அவள் மனதிலே கமலநாதன் அடிக்கடி தோன்றலானான்.

கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதருடன் சேற்றில் புரண்டு விளையாடிய நிகழ்ச்சியை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்ட அவள், ஸ்ரீதர் எவ்வளவுதான் நல்ல காதலனாயிருந்த போதிலும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்கத் தெரியாத ஓர் அப்பாவியாகவே அவளுக்குக் காட்சியளித்தான். பத்மாவைப் பொறுத்த வரையில் அவள் உலக வாழ்வின் மர்மங்களை இன்னும் முற்றாக அறிந்தவளல்ல. ஆனால் அவற்றை அறிவதற்கு உள்ளமும் உடலும் துடித்துக் கொண்டிருந்த ஒரு சாதாரணப் பெண்ணே அவள். அவளால் ஸ்ரீதரின் அமைதியான போக்கைச் சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்விதமான மன நிலையில் அவள் புழுங்கிக் கொண்டிருந்த போதுதான் கமலநாதனின் சகோதரிகளான விமலாவும் லோகாவும் அன்று காலை அவள் வீட்டுக்கு வந்தார்கள். தந்தை பரமானந்தர் வீட்டிலே இல்லாததால் விமலாவும் லோகாவும் ஒரே கும்மாளம் போட்டார்கள்.

விமலா பத்மாவிடம் “டீச்சர், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் முனிசிப்பல் விளையாட்டுச் சங்க ஆண்டு விழாவில் நடனமாடுவதற்காக நான் ரொக்-இன்-ரோல், டுவிஸ்ட் நடனமெல்லாம் பழகியிருக்கிறேன்.’ என்று ஜம்படித்துக் கொண்டாள். லோகாவோ விமலாவை விட நான் தான் நன்றாய் ஆடுவேன். “ஆடிப் பார்ப்போமா?” என்று அறை கூவல் கூட விடுத்துவிட்டாள்.

பின்னர் விமலாவும் லோகாவும் பத்மாவுக்குத் தமது நடனங்களை ஆடிக் காட்டினர். அவர்கள் துள்ளிக் குதித்துப் போட்டிப் போட்டு ரொக்-இன்-ரோல் நடனமாடியதையும், நெளிந்து நெளிந்து டுவிஸ்ட் நடனம் செய்ததையும் பத்மா மெச்சினாள். “டீச்சர், நீங்களும் ஆடுங்கள். ஆண்டு விழாவுக்கு நீங்களும் வருகிறீர்களல்லவா? அங்கே எல்லோரும் நடனமாடும் போது நீங்கள் மட்டும் பொம்மை போல் ஆடாமலிருந்தால் உங்களை அசல் பட்டிக்காடென்றல்லவா நினைப்பார்கள்?” என்றாள் விமலா. பத்மாவுக்கும் அது சரியாகவே பட்டது. இன்றைய சமுதாயத்தில் மதிப்போடு வாழ்வதற்கு இவற்றை எல்லாம் பயிலவே வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது. ஆகவே லோகா கூறியது போலவே கொட்டாஞ்சேனை தேவாலயத்துக்குப் பின்னாலிருந்த மிஸ் ரோஸ்மேரி டீ வுட்டென்னும் பறங்கிப் பெண்ணிடம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக நடனப் பாடங்கள் பெற ஆரம்பித்தாள் அவள்.

ரோஸ்மேரி டீ வுட்டின் இல்லம் ஓர் உல்லாசபுரியாகவே பத்மாவுக்குத் தோன்றியது. பகல் இரவு என்றில்லாமல் எப்பொழுதும் நடன வகுப்புகள் அங்கே நடந்து கொண்டிருந்தன. பால்ரூம் நடனம், ரொக்-இன்-ரோல், டுவிஸ்ட்,..என்று எத்தனையோ வித நடனங்கள் அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டன. பெரிய ரேடியோ கிராமொன்று இசைத்தட்டு சங்கீதத்தை இறைந்துக் கொண்டிருக்க ஆண்களும் பெண்களும் அங்கு நடனம் பயிலும் காட்சி அவ்வில்லத்தையே ஒரு கந்தர்வ லோகம் போல் ஆக்கியது. ரோஸ்மேரி நடனம் சொல்லிக் கொடுப்பதில் கெட்டிக்காரி. ஆடுவதற்கே ஜென்மெடுத்தவள் போல் தோன்றினாள் அவள். பத்மா சகல நடனங்களையும் மிக விரைவாகவே கற்று விட்டாள். ரோஸ்மேரி அவளத் தனது சிறந்த மாணவிகளில் ஒருத்தி என்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தாள்.

நடனப் பாடங்கள் பத்மாவுக்கு அவள் தனிமையைப் போக்கவும் உதவின. சில சமயங்களில் ரோஸ் மேரியிடம் நடனம் பயில வந்த வாலிப ஆண்களுடன் அவள் பால்ரூம் நடனம் பயின்றாள். இது அவளுடைய உள்ளத்திற்கும் உடலுக்கும் உல்லாசத்தைத் தந்தது. ஆனால் இதனால் அவளுக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் இல்லை. கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதர் அவள் உள்ளத்திலும் உடலிலும் தோற்றுவித்த தீ இன்னும் அணைக்கப்படாமலே இருந்தது. அத்தீ கட்டிளம் காளையர் பலருடன் உடலோடு உடல் உராய பால்ரூம் நடனம் ஆடி வந்ததால் மேலும் மேலும் அதிகமாக எரிய ஆரம்பித்தது. அதனால் அவளுக்கு ஏற்பட்ட மென்மையான போதை நாளடைவில் பெரும் வெறியாகவே ஆகிவிடும் போல் தோன்றியது. அவ்வெறியைத் தீர்த்துக் கொள்ளச் சில சமயங்களில் எதையும் செய்யலாம், எப்படியும் நடந்து கொள்ளாம் என்று கூட அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவள் உள்ளத்தில் ஒவ்வோர் அணுவும் ” இன்பம் இன்பம்” என்று கூவிக் கூவி அவளை உல்லாச வாழ்வுக்குத் தூண்ட அவள் மனம் கமலநாதனைச் சுற்றி அதிகமாகப் படரலாயிற்று. “ஸ்ரீதர் ஏமாற்றிவிட்டான் போலிருக்கிறது. ஒரு கடிதம் கூட அவன் எழுத வில்லையே. அவன் கொழும்பில் இருக்கும்வரை அதாவது ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்களாக அவன் என் வாழ்க்கைக்குத் தினசரி இன்பம் கிளுகிளுப்பை அளித்துக் கொண்டு வந்ததற்காக நான் அவனுக்கு நன்றி பாராட்டத்தான் வேண்டும். ஆனால் அவன் இப்படித் திடீரென என் வாழ்க்கையை விட்டு, மறைந்துவிட்டதும் பெரியதொரு மந்தமல்லவா வாழ்க்கையைச் சூழ்ந்துவிட்டது. இதை என்னால் சகிக்க முடியாது. கமலநாதனை என் காதலுக்கு ஒரு “ஸ்டான்ட்-பை”யாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்பே யோசித்தேனல்லவா? இனி அவன் தான் எனக்குத் துணை போலும். “ஸ்டான்ட் – பை” என்றாலும் அவன் ஸ்ரீதரை விட எவ்விதத்திலும் குறைந்தவனல்ல. அழகிலும், படிப்பிலும் பணத்திலும் வேண்டுமானால் அவன் ஸ்ரீதரை விடக் குறைவாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணைக் கவரும் ஆண்மையில் அவன் ஸ்ரீதரை விடச் சிறந்தவனாகவே விளங்குகிறான். அவன் கன்னங்கரிய மீசை ஒன்றே போதுமே.” என்று பலவாறாகச் சிந்தனை செய்தாள் பத்மா.

முனிசிப்பல் விளையாட்டுச் சங்க வருடாந்த விழாவுக்குக் கமல நாதன் தனக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியதைப் பத்மா உண்மையில் தனது அதிர்ஷ்டம் என்றே கருதினாள். கமலநாதனுடன் நெருங்கிப் பழக அது தனக்கு வாய்ப்பளிக்கும் என்று அவள் எண்ணியதே அதற்குக் காரணம். விமலாவும் லோகாவும் பத்மாவின் தந்தை பரமானந்தரிடம் வருடாந்த விழாவுக்குத் தாங்களும் பத்மாவும் ஒன்றாகப் போவதாகக் கூறி அதற்கு வேண்டிய அனுமதியையும் பெற்றுவிட்டார்கள்.

வருடாந்த விழாவன்று காலை பல்கலைக் கழகத்துக்குப் போவதற்காக பஸ்தரிப்பில் நின்ற பத்மாவின் முன்னால் பேரிரைச்சலுடன் கமலநாதனின் மோட்டர் சைக்கிள் வந்து நின்றது. “பத்மா இன்று விழாவுக்குக் கட்டாயம் வர வேண்டும். விமலாவுடனும் லோகாவுடனும் கூடிக் கொண்டு டாக்சியில் வந்துவிடு” என்று கூறினான் அவன். பத்மா ஆம் என்று பதிலளித்தாள்.

அன்றிரவு எட்டு மணியளவில் வருடாந்த விழாவுக்குக் கண்ணைப் பறிக்கும் பகட்டான உடையணிந்து கமலநாதனின் சகோதரிகளுடன் டாக்சியில் வந்திறங்கினாள் அழகு மோகினி பத்மா. கமலநாதன் அவளை வரவேற்றுத் தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். சிறிது நேரத்தில் விருந்தாளிகள் எல்லோரும் நீச்சல் ராணி பத்மாவைப் பற்றியே பேச ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் அவள் கண்கள்தான் மிக அழகு என்று கூறினார்கள். இல்லை அவள் உடலமைப்பின் அழகே அழகு என்றனர் மற்றும் சிலர்.

கறுப்புக் காற்சட்டையும் வெள்ளைக் கோட்டும், ‘போ’ டையும் அணிந்து கம்பீரமாக விளங்கிய கமலநாதன் பத்மாவின் மனதைப் பரவசத்திலாழ்த்திவிட்டான். அவனோடு ஜோடியாகக் காட்சியளிப்பதில் அவளுக்குத் தனித் திருப்தி ஏற்பட்டது. கமலநாதனின் களிப்பையோ சொல்ல வேண்டியதில்லை. தங்கப் பொட்டுகளிட்ட கரிய சேலையணிந்து அப்சரஸ் போல் தோன்றிய பத்மாவின் பேரழகிலே பெருமையும் பூரிப்பும் அடைந்தவன் “பத்மா மட்டும் ஸ்ரீதரைக் கை விட்டு என்னை மணக்கச் சம்மதிப்பாளானால்…” என்பது போன்ற எண்ணங்களில் மூழ்கலானான்.

கமலநாதன் பத்மாவைப் பலவாறு உபசரித்தான். இடையிலே கதையோடு கதையாக “விமலாவும் லோகாவும் நீ நன்றாக நடனமாடக் கற்றிருப்பதாகக் கூறினார்கள். இன்று நீ என்னுடன் நடனமாட வேண்டும்.” என்றான். பால்ரூம் நடனத்தில் அவனுக்கு எப்பொழுதுமே மிகவும் பிரியம். பத்மா அவனது கேள்விக்குப் பதிலாக “நான் ஒன்றும் பெரிய நடனக்காரியல்ல. என்றாலும் உங்களுடன் நடனமாடுவேன். நடனத்தில் குறைபாடிருந்தாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் அல்லவா?” என்றாள்.

விழாவின் முக்கியமான நிகழ்ச்சி நடனம்தான். பால்ரூம் நடனமும் இடையிடையே ரொக்-இன்-ரோல், டுவிஸ்ட் போன்ற நடனங்களும் நடைபெற்றன. ஆங்கில இசை மழையும், “கபரே” நடனங்களும் கூட இடம்பெற்றன. சுமார் நூறு நூற்றைம்பது பேர் வரை நடனங்களில் பங்கு பற்றினார்கள். பியர், விஸ்கி, உவைன் போன்ற குடி வகைகள் பிரவகிக்க, நடன விருந்து மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பாண்ட் வாத்திய கோஷ்டியினர் இன்னிசையை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.

பத்மா ஒரு நடன விருந்தில் கலந்து கொண்டது இதுவே முதல் தடவையானாலும் ரோஸ் மேரி வீட்டில் பலருடனும் ஆடிப்பாடிப் பழகியிருந்ததால் எவ்விதமான கூச்சமோ குழறுபடியோ இல்லாமல் மிகவும் சகஜமாக நடந்து கொண்டாள். அவளுக்கு உண்மையில் இவ்வனுபவம் அளவில்லாத இன்பத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது. போதாதற்குக் கமலநாதன் அவளுக்குச் சிறிது உவைனையும் பருகக் கொடுத்திருந்தான். இதனால் பத்மாவுக்கு இவ்வுலகம் மறந்து போக, கமலநாதனுடன் உல்லாசமாக ஆடினாள் அவள். விமலாவும் லோகாவும் சிறுமிகளானதால் பெரியவர்களாடும் ஜோடி நடனமான பாங்கு நடனத்தில் அவர்கள் பங்கு பற்றவில்லை. ரொக் இன் ரோல், டுவிஸ்ட் நடனங்களில் மட்டுமே கலந்து கொண்டார்கள். மற்ற நேரங்களில் அண்ணன் கமலநாதனுடன் தங்கள் டீச்சர் பத்மா நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

பத்மா சிறிது உவைனை உட்கொண்டிருந்த போதிலும், மதுப் பழக்கம் அதற்கு முன்னில்லாததால் அதன் போதை சற்று அதிகமாகவே அவளுக்கேறியிருந்தது. அதன் பயனாக அவள் பருவ உணர்ச்சிகள் கட்டுக் கடங்காது ஓங்க ஆரம்பித்துவிட்டன. போதாததற்கு, சுற்றிலும் கட்டிளங் காளையர்களும் கட்டழகுக் கன்னியரும் ஒருவரை ஒருவர் அணைத்து ஆடிக் கொண்டிருந்த காட்சியும் அவளுணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. இவை தவிர, அங்குமிங்கும் சில ஜோடிகள் ஒருவரையொருவர் தழுவியும் தழுவாமலும் காதல் மொழி பேசிக் கரங்களைப் பற்றி இன்பபுரியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தமையும் அவள் காதலுணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது. அவளுக்கு அப்பொழுது இவ்வுலகமே மறந்து போயிருந்தது. ஸ்ரீதரின் நினைவு கூட வரவில்லை. அவளுக்கு இப்பொழுது இவ்வுலகிலே வேண்டியிருந்தது ஒன்றேயொன்று தான் காதல், காதல், காதலொன்றே அது.

கமலநாதன் அவள் இடையைத் தன் கரங்களால் பற்றி ஆடிக் கொண்டிருந்தாள். பத்மா அவன் கண்களில் தன் கண்களை நாட்டி அவனை விழுங்குவது போல் பார்த்தாள். “உங்கள் மீசை உங்கள் முகத்துக்கு மிக அழகு.” என்று கூறி அவன் மீசையைத் தன் விரல்களால் பட்டும் படாமலும் தடவிவிட்டாள் அவள். கமலநாதனுக்கு அவள் வார்த்தைகள் தாங்கொணாத பெருமையையும் தன்னம்பிக்கையையும் கொடுத்துவிட்டன. அவன் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. “இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது. பத்மாவை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டான் அவன். நீச்சலழகியாகத் தெரியப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளி வந்த அன்று, தன் படுக்கை அறையில் அவன் அவள் படத்தை இரகசியமாக மோகித்துப் பார்த்தபோது, பத்மா தன் கரங்களில் இப்படி இலகுவில் சிக்கிக் கொள்வாள் என்று அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. இன்று உண்மையிலேயே அவள் அவன் கரங்களிலே சிக்கிக் கிடக்கிறாள். அவனது ஒரு கரம் அவள் காந்தள் விரல்களுடன் பின்னிக் கிடந்தது.

கமலநாதனுக்கு ஆடி ஆடி அலுத்துப் போயிருந்ததோடு சற்றுப் புழுக்கமாகவும் இருந்தது. அத்துடன், பத்மாவை எங்காவது தனியிடத்துக்குக் கொண்டு போய் அவளுடன் பேச வேண்டுமென்ற ஆர்வமும் அவனுக்கு ஏற்பட்டிருந்ததால், அவன் அவள் மீசையை மெச்சியதற்குப் பதிலாகத் தனது நன்றியைக் கூவி விட்டு “பத்மா இங்கே புழுக்கமாயிருக்கிறதல்லவா? சிறிது நேரம் வெளியே மோட்டார் சைக்கிளில் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வருவோமா?” என்றாள்.

மோட்டர் சைக்கிள் என்றதும் பத்மாவின் உள்ளம் துள்ளி எழுந்தது. காதலன் சைக்கிள் ஓட்டத் தான் பின்னே உட்கார்ந்து போக வேண்டுமென்ற மனத்தின் கனவு மலர்ச்சியுற்றது. ஆகவே அவனது வேண்டுகோளுக்கு “ஆம்” என்று பதிலளித்தாள் அவள். சீக்கிரமே மோட்டார் சைக்கிள் இருளைக் கிழித்துக் கொண்டு வீதியில் பறந்தது. பத்மா கமலநாதனின் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டு சைக்கிளின் பின்னாசனத்தில் உட்கார்ந்திருந்தாள். அமாவாசை இருளில் வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்த பத்மா, திடீரென கமலநாதனிடம் “கமல், நேரமென்ன டார்லிங்” என்றாள். பத்மாவின் மனம் துணுக்குற்றது. எத்தனையோ மாதங்கள் தொடர்ந்து பழகிய ஸ்ரீதருடன் கூட அவள் இப்படி நள்ளிரவு வரை ஊர் சுற்றியதில்லை. ஆனால் அது அவளுக்கு அச்சத்தையோ வெட்கத்தையோ தரவில்லை. உற்சாகத்தையே கொடுத்தது.

பத்மா உண்மையில் மோட்டார் சைக்கிள் சவாரியை மிகவும் இரசித்தாள். காற்றுக்கெதிராகப் போய்க் கொண்டிருந்ததால், காற்று முழு மூச்சோடு அவள் முகத்தில் வீசி அவள் மென்மையான கூந்தலைச் சிதறடித்துக் கொண்டிருந்தது. காற்றின் ஸ்பரிசம் அவள் முகத்தில் நரம்புகளில் புதிய உயிர்த் துடிப்பை ஏற்படுத்தியது. என்றாலும் கமலநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்டிய வேகத்தைக் கண்டு அவள் நடுங்கிப் போய்விட்டாள். ஆனால் அந்த நடுக்கத்திலும் பயத்திலும் கூட ஓர் இன்பம். இராட்டின ஊஞ்சல் நிலத்திலிருந்து மேலே எழும்பிக் கீழ் நோக்கிச் சுழலும் போது யாருக்கும் பயமேற்படவே செய்யும். ஆனால் அந்தப் பயம் தான் அந்த ஊஞ்சல் சுழற்சிக்கே சுவையை ஊட்டுகிறது. அது போலத்தான் மோட்டார் சைக்கிளின் அளவு மீறிய வேகமும் அவளுக்கு இன்பத்தையே ஊட்டிக் கொண்டிருந்தது. எந்நாளும் எந்நேரமும் இப்படியே எங்காவது வேகமாக மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

உண்மையில் பத்மாவின் உள்ளத்தில் அப்போது மூன்று போதைகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன. ஒன்று காதலின் போதை; மற்றது உவனும் பியரும் குடித்ததால் ஏற்பட்ட கள்ளின் போதை; மூன்றாவது போதையோ வேகமான வாகனத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்ற நீண்ட காலம் ஆசையின் பூர்த்தியால் ஏற்பட்ட மன மயக்கம், இவை போதாவென்று அமாவாசை இருள், குளிர்ந்த காற்று, கமலநாதனின் மீசை, நடன சல்லாபம், நள்ளிரவின் தனிமை என்ற பகைப் புலங்கள், பத்மா வாழ்க்கையின் மர்மங்களைத் துலக்கிவிட வேண்டுமென்று துடி துடித்தாள். கமலநாதனை ஆதரவாக அணைத்துக் கொண்டு “கண்ணாளா” என்று முனகினாள்.

கமலநாதன் மோட்டார் சைக்கிளைக் கொள்ளுப்பிட்டியில் கடற்கரையோரமாக இருந்த ஒரு யாழ்ப்பாண நண்பனின் பங்களாவுக்குச் செலுத்தினான். அவ்வீட்டில் அப்பொழுது அவனது நண்பன் மட்டும்தான் இருந்தான். மற்றவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணம் போயிருந்தார்கள். நண்பனோ நடன விருந்தின் குடியில் மூழ்கிக் கிடந்தான். அவன் நடன விருந்து முடியும் வரை வர மாட்டான்.

பங்களாவைச் சுற்றி நல்ல புற்றரை. ஒரு புறம் ஒரு சிறிய பிரதேசத்துக்கு வெண் மணல் பரப்பப்பட்டிருந்தது. காதலர்கள் தனிமையில் சல்லாபிப்பதற்கு அதைப் போன்ற தனியிடம் வேறு கிடைக்காது. பங்களா கேட் எப்பொழுதும் திறந்து கிடக்கும். வீடு மட்டும் தான் பூட்டப்பட்டிருக்கும் என்பது கமலநாதனுக்குத் தெரிந்ததே. அவன் நேராக அங்கு வந்தததற்குக் காரணம். இது விஷயத்தில் கமலநாதனிடம் மிகவும் அன்பும் மதிப்பும் கொண்ட அவனது நண்பன் “உனக்கு வேண்டிய எதையும் இங்கு செய்யலாம்” என்று பூரண அனுமதி வழங்கியிருந்தான். ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் விதிக்கப்பட்டிருந்தது. ஒரு கனவானாக நடந்து கொள்ள வேண்டுமென்பதே அது. கனவான் என்ற வார்த்தைக்கு இவ்விடத்தில் அக்கம் பக்கத்தார் கவனத்தை ஈர்க்காமல் இரகசியமாக காதும் காதும் வைத்தாற் போல் விஷயங்களைச் செய்து கொள்பவன் என்று பொருள். விசித்திரமான பொருள்தான். ஆனால் இன்றைய மத்தியதர மேலிட மக்கள் சிலரின் ஒழுக்கக் கோட்பாட்டுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. ஒழுக்கம் செயலில் இல்லை, அதை வெளிப்படுத்துவதிலும் மறைப்பதிலும் தான் இருக்கிறதென்பது இந்த ஒழுக்கத்தின் அடிப்படை நியதியாகும்.

பங்களாவின் புல் தரையில் புகுந்து கேட்டை நன்கு சாத்திவிட்டு, கடலை நோக்கிய வீட்டின் பின்புறத்தில் வெண் மணல் பரப்பிய ஜாம் மர நிழலுக்கு எவித சத்தமுமில்லாமல் பூனை போல் பத்மாவுடன் சென்றான் கமலநாதன். பத்மாவுக்கு இது புது அனுபவம். ஸ்ரீதர் எப்பொழுதுமே இப்படி நடந்து கொண்டதேயில்லை. பத்மா பக்கத்திலிருந்தால் அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டும் கலகலப்பாகவுமே இருப்பான். வேடிக்கையும் விளையாட்டும் அமர்க்களப்படும். அவள் பின்னலை இழுப்பான். விரல்களை வருடுவான். ஆனால் கமலநாதன் போக்கோ முற்றிலும் வேறு விதமாக இருந்தது. ஆனால் ஒரு காதலனிடமிருந்து சாதாரணப் பெண்ணொருத்தி எதிர்பார்ப்பது எதனை? கமலநாதனிடம் ஸ்ரீதரின் வேடிக்கைப் பேச்சில்லை. அவன் எப்பொழுதும் காரியமாகவே பேசினான். பத்மாவுக்கு என்றும் எந்த நேரமும் இப்போக்கு பிடித்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இன்று இந்த நேரத்தில் கமலநாதனின் போக்கு அவளுக்கு மிகவும் பிடிக்கவே செய்தது. ஸ்ரீதர் பொய்ப் பெயர் சொல்லித் தன்னுள்ளத்தில் காதல் அலைகளைத் தோற்றுவித்த துஷ்யந்தன் என்றால், கமலநாதன் கானகத்துச் சகுந்தலையைக் காந்தர்வத்துக்கு அழைத்துச் சென்ற துஷ்யந்தன் போல் தோன்றினான் அவளுக்கு.

மணலிலே “அப்பாடா” என்று உல்லாசமாகச் சாய்ந்தாள் பத்மா. அவள் சேலை அங்குமிங்கும் பரவிச் செல்ல, கமலநாதன் அவளோடு நெருங்கி உட்கார்ந்து கொண்டு “பத்மா, இந்த இடம் உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டான். “அழகான இடம். சுவர்க்க லோகம் போலிருக்கிறது,” என்று சொல்லிக் கொண்டே அவன் மீசையைத் தன் விரல்களால் பிய்த்தெடுப்பது போல் பாசாங்கு பண்ணிக் கலகலவென்று சிரித்தான் அவன்.

பங்களாவின் சுவருக்கப்பால், ரெயில் பாதைக்கு அந்தண்டை கொள்ளுப்பிட்டிக் கடல் குசுகுசுத்துக் கொண்டிருந்தது. ஸ்ரீதர் என்றால் “கடலும் வானமும் இரகசியம் பேசுகின்றன. கடலே பெண். வானம் காதலன்” என்று கூறியிருப்பானோ என்னவோ? போதையின் ஊடேயும் ஸ்ரீதரின் ஞாபகம் வந்ததும் பத்மாவின் நெஞ்சம் துணுக்குறவே செய்தது. என்றாலும், “எல்லாம் அவன் பிழைதானே. கடிதம் கூட எழுதவில்லை. நான் என்ன செய்வேன்? சும்மா இருந்த எனக்கு காதலுணர்ச்சியின் கிளுகிளுப்பைப் பழக்கி வைத்தவன் அவன். அதனால் இப்பொழுது என் மனம் பொழுது போகாத நேரமெல்லாம் அந்த அனுபவத்தைத் தானே தேடுகிறது. இதோ கமலநாதன் என் பக்கத்தில் என் காதலுக்காகக் காத்திருக்கிறான். ஸ்ரீதர் மிகப் பெரிய இடம். பார்க்கப் போனால் அவனுக்கும் எனக்கும் திருமணம் சாத்தியமில்லை தான்போலிருக்கிறது. அதனால் தன் போலும் மூன்று வாரங்களாகியும் இன்னும் ஸ்ரீதரின் கடிதத்தைக் காணோம். ஆனால் கமலநாதன் எனக்குச் சகல வகையிலும் ஏற்றவன். அவனையே திருமணம் செய்தால் என்ன? அந்தப் பிரச்சினையை இப்பொழுதே தீர்த்துக் கொண்டாலென்ன?” என்று சிந்தித்தாள் அவள்.

கமலநாதன் பத்மாவிடம், “பத்மா நீ ஸ்ரீதருடன் பழகுகிறாயல்லவா? இப்படி அவனுடனும் பல இடங்களுக்குப் போயிருக்கிறாயா?” என்றான்.

“இல்லை” என்றாள் பத்மா.

“நான் அதை நம்ப மாட்டேன். நீ எச்சிற்படுத்தப் பட்ட பழமே” என்றான் கமலநாதன்.

“இல்லை. என்னால் அதனை நிரூபிக்க முடியும்.”

கமலநாதனுக்கு இச்செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. “அப்படியானால் நான் உன்னை ஒன்று கேட்கப் போகிறேன். மறுக்க மாட்டாயே”

“கேளுங்கள்”

“பத்மா, நான் உன்னை நேசிக்கிறேன். உன் கொடி போன்ற அழகுக்காக மட்டுமல்ல, நீ படித்தவள், நாகரிகமானவள், பண்புடன் நடக்கத் தெரிந்தவள், வீட்டு வேலை தொடக்கம் பால் ரூம் நடனம் வரை எல்லாம் அறிந்தவள். உண்மையில் இன்றைய உலகில் குடும்ப வாழ்க்கை சிறப்பாக நடக்க ஒரு பெண்ணிடம் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அவை எல்லாம் உன்னிடம் இருக்கின்றன. இன்னும் உன்னை என் தங்கைகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் சொல்லிச் சொல்லி அம்மாவுக்குக் கூடப் பிடித்திருக்கிறது. நீ என் மனைவியாக வேண்டும். அது தான் நான் கேட்க விரும்பியது. உண்மையில் நான் உன்னை எண்ணி எண்ணி மனம் புண்படாத நாலே இல்லை. இதுவரை ஸ்ரீதருடன் நீ நெருங்கிப் பழகியதால் என் மனத்தை அடக்கிக் கொண்டிருந்தேன். இன்று பாதை திறந்ததால் கேட்டு விட்டேன். நீ எச்சிற்படுத்தப்படவில்லை என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. என் கேள்விக்கு என்ன பதில் சொல்லுகிறாய், பத்மா?” என்றாள் கமலநாதன்.

பத்மா அவன் கன்னங்களைத் தன் கரங்களால் தடவியவண்ணமே ” நான் உங்களைத்தான் கட்டுவேன். ஸ்ரீதரைக் கட்ட மாட்டேன்” என்றாள். இதைக் கேட்ட கமலநாதனுக்கு முழு உலகமுமே தன்னை வாழுத்துவது போன்ற, உணர்ச்சி ஏற்பட்டது. வானத்தில் மலர்ந்திருந்த நள்ளிரவு நட்சத்திரப் பூக்கள் எல்லாம் தன்னை வாழ்த்தித் தேவர்கள் அள்ளி வீசிய மல்லிகை மலர்கள் போல் தோன்றின அவனுக்கு. அந்த ஆனந்தத்தில் அவளை ஆசை தீர அணைத்துக் கொண்டான் அவன்.

அவர்கள் கொள்ளுப்பிட்டிலிருந்து மீண்டும் நடன விருந்துக்குப் போன பொது இரண்டு மணியாகிவிட்டது. நடனமோ இன்னும் முற்றுப் பெற வில்லை. விடியும் வரை ஆட முடிவு செய்து நடனக்காரர்கள் இன்னும் ஆடிக் கொண்டிருந்தார்கள். பத்மாவும் கமலநாதனும் அவர்களுடன் சேர்ந்து தாமும் ஆடினார்கள். விமலாவும் லோகாவும் தூக்கம் தாங்காமல் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

பத்மாவைப் பொறுத்த வரையில் அவள் பிரச்சினை முற்றாகத் தீர்ந்து விட்டது. மழை நீராட்டன்று ‘கால்பேசி’ல் ஸ்ரீதர் மூட்டிய தீ கொள்ளுப்பிட்டியில் ஜாம் மரத்தின் கீழே அவளது புதிய காதலன் கமலநாதனால் அணைக்கப்பட்டுவிட்டது. வாழ்க்கையை அவள் கண்டுவிட்டாள். அதன் கோணத்தை மட்டும் காட்டியவன் ஸ்ரீதர். இன்னும் அதன் முழுமையையும் காட்டி வாழ்க்கைக்குத் திருப்தி ஊட்டியவன் கமலநாதன். இனி அவன் தான் எல்லாம். வாழ்க்கைப் பிரயாணத்தில் அவனே அவள் துணைவன். இன்னும் ஸ்ரீதரின் மூன்று வார பிரிவால் ஏற்பட்ட அங்கலாய்ப்பும் தீர்ந்துவிட்டது. தான் கை விடப்பட்டு விடுவேனோ என்ற அச்சமும் பறந்து போயிற்று. எல்லாம் திட்ட வட்டமாக முடிவு செய்யப்பட்டுவிட்டன. திருமணத்துக்கு நாள் வைக்க வேண்டியதுதான் பாக்கி. இன்னும் நாளையிலிருந்து தனிமை நோயும் பறந்தது. கமல நாதனை ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது சந்தித்து உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் ஒரு சிலரால் தீர்க்கப்படாத பிரச்சினைகளை வைத்துக் கொண்டு மனச் சஞ்சலப்பட முடியாது “ஸ்ரீதர் இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாவிட்டால் அது போன்ற நன்மை வேறில்லை” என்றும் தீர்மானித்தாள் அவள்.

இச்சம்பவம் கொழும்பில் நடந்த அடுத்த நாட் காலை யாழ்ப்பாணத்தில் “அமராவதி” வளவில் ஸ்ரீதர் தன் அறையிலிருந்து தாயாரை உச்சக் குரலில் கூவி அழைத்துக் கொண்டிருந்தான். “அம்மா அம்மா எனக்கொன்றுமே தெரியவில்லை. கண் பார்வை அடியோடு மங்கிவிட்டது. நான் குருடாகி விட்டேன் அம்மா. என்ன செய்வேன்? எல்லாம் இருளாகத் தெரிகின்றதே” என்று அலறினான் அவன்.

அவனது கூக்குரலைக் கேட்டு, தாயார் பாக்கியம் மட்டும் அங்கு வரவில்லை. சிவநேசர், வேலைக்காரி தெய்வானை, கிளாக்கர் நன்னித்தம்பி, வீட்டைக் கூட்டிச் சுத்திகரித்துக் கொண்டிருந்த ஆள் வேலைகாரர் இருவர் ஆகிய எல்லோரும் ஓடி வந்தார்கள். பாக்கியம் தன் தலையைக் கைகளாலடித்துக் கொண்டு, “ஐயோ நான் என்ன செய்வேன்?” என்று கதறினாள். தெய்வானை அவளைத் தாங்கிப் பிடித்தாள்.

மோகனாவோ என்ன நடந்துக் கொண்டிருக்கிறதென்று தெரியாமல் “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று தன் அன்பு எஜமானனைக் கூவி அழைத்தது.

– தொடரும்…

– இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ தொடராக வெளிவந்த நாவலிது. 

– மனக்கண் (தொடர் நாவல்), தினகரனில் வெளிவந்தது.

அ.ந.கந்தசாமி (8 ஆகத்து 1924 – 14 பெப்ரவரி 1968) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார்.சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டு இயங்கினார். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். ​​​​பதிவுகள்.காம் அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *