கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 1,876 
 
 

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

13-ம் அத்தியாயம்: சிவநேசர்

ஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது அவரை நேரில் ஒரு தடவையாவது சந்தித்ததில்லை. பல்கலைக் கழகத்து நாடகத்தன்று ஒரே ஒரு தடவை அவரை டெலிபோனில் சந்தித்து இருக்கிறோம். அன்று அவருக்குச் சிறிது சுகவீனம். இருந்தாலும் ஸ்ரீதரின் நாடகம் எப்படி நிறைவேறியது என்றறிவதற்காகவும், தன் அன்பு மகனுக்கு அவனது இஷ்டமான கலைத் துறையில் ஊக்கமளிக்க வேண்டுமென்பதற்காகவும் நள்ளிரவு வேளையில் அவனது நாடகத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் அவனுடன் பேசினார் அவர். சிவநேசரைப் பற்றி நாம் இதுவரை அறிந்த விவரங்களின் படி அவர் ஒரு கோடீஸ்வரர், படிப்பாளி, சாதிமான், தன் அந்தஸ்தில் பெரிது அக்கறைக் கொண்டவர் என்பன எங்களுக்குத் தெரியும். அந்தஸ்துதான் அவருக்கு உயிர். அது பெருமளவுக்கு ஒருவன் அணியும் ஆடைகளிலும் தங்கியிருக்கிறது என்பது அவரது எண்ணம். அதன் காரணமாக அவர் எப்பொழுதும் ஆடம்பரமாகவே உடுத்திக் கொள்வார், தமது மாளிகைக்கு வெளியே செல்லும் போது, அவர் ஒரு பொழுதும் தலைப்பாகை அணியாது செல்வதில்லை. எப்பொழுதும் வெள்ளைக் காற்சட்டையும் குளோஸ் கோட்டும் அணிந்திருப்பார். மேலும் தங்கச் சங்கிலியோடு கூடிய பைக் கடிகாரம் ஒன்று அவரது கோட்டை என்றும் அலங்கரித்துக் கொண்டே இருக்கும். கையில் தங்க மோதிரம் ஒன்றும் ஒளி வீசக் கொண்டிருக்கும். ஓரொருசமயங்களில் உள்ளூர்க் கோவிலுக்குப் போகும்போது மட்டும்தான் வேட்டி உடுத்திக் கொள்வார். அந்த வேட்டியும் சாதாரண வேட்டியாய் இராது. ஒன்றில் சரிகைக் கரையிட்ட வேட்டியாகவோ, பட்டு வேட்டியாகவோ தானிருக்கும். கோவிலுக்கு எப்பொழுதுமே அவர் வெறும் மேலுடன் தான் செல்பவரானதால் வடம் போன்ற பெரிய தங்கச் சங்கிலி ஒன்று அவர் பூரித்த நெஞ்சில் என்றும் புரண்டு கொண்டிருப்பதைக் காணலாம்.

ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவனுக்கு அந்தஸ்தில் நம்பிக்கையில்லாவிட்டலும் தந்தையாரை போல் ஆடை ஆபரணங்களில் அவனுக்கும் விருப்பமுண்டு. தந்தையார் பழைய மோஸ்தரில் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டாரென்றால் மகன் நவீன மோஸ்தரில் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டான்.

தனது ஆடம்பர உடையுடன் ஆறடி உயாமும், கம்பீரமான உருவமும் படைத்த சிவநேசரைப் பார்ப்பவர்கள் யாவருக்கும் அவர் முன்னால் தம்மை அறியாமலே ஒரு வித மரியாதையும் பயமும் ஏற்படும். போதாதற்கு வார்த்தைகளில் அவர் மிகச் செட்டானவர். அத்தியாவசியமிருந்தாலொழிய அவர் பேசுவதேயில்லை. காரில் போய்க் கொண்டிருக்கும் போதோ யாராவது அறிமுகமானவர்களைக் கண்டால் தலையை இலேசாக அசைத்துப் புன்னகை பூப்பார். அந்தப் புன்னகையைப் பெற்றுக் கொண்டவர்கள் “சிவநேசர் தம்மைப் பார்த்துப் புன்னகை செய்தார்” என்று தமது நண்பர்களிடமும் குடும்பத்தாருக்கும் சொல்லக் கூடிய அளவுக்கு அதற்கு என்றைக்குமே ஒரு தனி மதிப்பு இருந்து வந்ததுதனது ஆடம்பர உடையுடன் ஆறடி உயாமும், கம்பீரமான உருவமும் படைத்த சிவநேசரைப் பார்ப்பவர்கள் யாவருக்கும் அவர் முன்னால் தம்மை அறியாமலே ஒரு வித மரியாதையும் பயமும் ஏற்படும். போதாதற்கு வார்த்தைகளில் அவர் மிகச் செட்டானவர். அத்தியாவசியமிருந்தாலொழிய அவர் பேசுவதேயில்லை. காரில் போய்க் கொண்டிருக்கும் போதோ யாராவது அறிமுகமானவர்களைக் கண்டால் தலையை இலேசாக அசைத்துப் புன்னகை பூப்பார். அந்தப் புன்னகையைப் பெற்றுக் கொண்டவர்கள் “சிவநேசர் தம்மைப் பார்த்துப் புன்னகை செய்தார்” என்று தமது நண்பர்களிடமும் குடும்பத்தாருக்கும் சொல்லக் கூடிய அளவுக்கு அதற்கு என்றைக்குமே ஒரு தனி மதிப்பு இருந்து வந்தது. ஆனால் அவரது மனைவி பாக்கியமோ இதற்கு முற்றிலும் மாறானவள். செல்வத்தின் செழிப்போடு பொலிந்த தோற்றத்துடன் விளங்கிய, அவள் என்றும் கலகலப்பாகவே இருப்பாள். கணவனைப் போலவே அவளும் பொன்னிறமான தோற்றங் கொண்டவள். தந்தையும் தாயும் அப்படி இருந்ததால்தான் மகன் ஸ்ரீதரும் மனத்தை மயக்கும் மன்மதனாகக் காட்சியளித்தான். வயது நாற்பத்தெட்டாகிவிட்ட போதிலும் பாக்கியத்தின் முகத்திலே ஒரு சுருக்கங்கூட விழவில்லை. அப்பிள் போல் உப்பியிருந்த அவளது முகத்திலே ஒரு அழகு இன்னும் நர்த்தனம் புரிந்து கொண்டிருந்தது. சிவநேசர் முகமும் அப்படித்தான் சில காலத்துக்கு முன்னர் இருந்ததாயினும் இரண்டு மூன்று வருடங்களாக அவரைப் பீடித்திருந்த நீரிழிவு நோயும், அவரது வயது ஐம்பதைத் தாண்டி விட்டமையும் இப்பொழுது அவரது முகத்தில் ஓரளவு தளர்ச்சியைக் காட்டவே செய்தன. மேலும் அவரது மீசையும் இப்பொழுது நன்றாக நரைத்துப் போயிருந்தது. சிவநேசர் தன் ஒரே மகன் ஸ்ரீதருக்கு அடுத்தப்படியாகத் தன் மனைவி பாக்கியத்தின் மீது தான் தன் அன்பு முழுவதையும் சொரிந்து வந்தார் என்பது உண்மையேயாயினும், அவள் எல்லோருடனும் கலகலவென்று பேசுவது மட்டும் அவருக்குப் பிடிப்பதில்லை. அது தங்கள் குடும்பத்தின் உயர்ந்த அந்தஸ்திற்குப் பொருந்தாது என்பது அவரது எண்ணம், பல தடவைகளில் அவர் பாக்கியத்தை அதற்காகக் கடிந்து கொண்டது கூட உண்டு.

குடும்பத்தின் அந்தஸ்தைப் பேணுதல் என்ற விஷயத்தில் தனக்குப் பின்னால் தனது ஒரே வாரிசாக, சேர் நமசிவாயம் குடும்பத்தின் குலக் கொழுந்தாகத் தனது பெருஞ் சொத்துகள் எல்லாவற்றையும் அரசாளப் போகும் ஸ்ரீதர் எவ்வித பிழையும் அதில் விட்டு விட மாட்டான் என்பதே சிவநேசரின் எண்ணம். இந்த நம்பிக்கை அவருக்கு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ஸ்ரீதர் வெளித் தோற்றத்தில் முற்றிலும் தன்னை உரித்து வைத்தது போல் இருக்கிறான் என்று பலரும் கூற அவர் கேட்டிருந்ததே யாகும். சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் முழு நம்பிக்கை கொண்ட அவர் உருவத்தில் அவ்வித ஒற்றுமை இருக்குமானால பண்புகளிலும் அதே வித ஒற்றுமை இருக்கவே செய்யும் என்று பரிபூரணமாக நம்பினார்.

தன் மகனின் தோற்றம், தலையை நிமிர்த்திச் சிங்க ஏறு போல், அவன் கம்பீரமாக நடந்து செல்லும் முறை ஆகியவை அவரை மிகவும் கவர்ந்திருந்தன. உண்மையில், ஸ்ரீதரின் தனிப் பண்பு போல் விளங்கிய அவனது இராஜ நடை சிவநேசருக்கு அவரது தந்தையார் திரு. கனகசபைப் பிள்ளையின் நடையையும், பாட்டனார் சேர் நமசிவாயத்தின் நடையையுமே ஞாபகமூட்டியது. அதை அவர் மெச்சாத நாளில்லை என்றே கூற வேண்டும். தன் மனைவி பாக்கியத்திடம் கூட “ஸ்ரீதர் நடந்து செல்லும் போது பார்த்திருக்கிறாயா? எங்கள் தாத்தா சேர் நமசிவாயம் போலல்லவா அவன் நடக்கிறான்?” என்று அவர் பல தடவை கூறியிருக்கிறார். இவ்விதம் இயற்கையாகவே தோற்றப் பொலிவைப் பெற்றிருந்த ஸ்ரீதர், தன் அந்தஸ்தைத் தன் வெறும் தோற்றத்தினாலேயே பெற்று விடுவான் என்பது அவரது எண்ணம்.

சிவநேசரின் தோற்றமும் போக்குகளும் மட்டுமல்ல, அவரது பெரிய இல்லமும் பார்த்தவரை மலைக்க வைக்கும் கம்பீரத்துடனேயே விளங்கியது. யாழ்ப்பாணம் பட்டினத்திலிருந்த காங்கேயந்துறை செல்லும் நெடுஞ் சாலையில் பரந்த பெரும் காணியொன்றில் அவரது மாளிகை அமைத்திருந்தது. ஒரு காலத்தில் முதலியார் வளவு என்ற பெயருடன் விளங்கிய அவ்வரண்மனை போன்ற பேரில்லம் சேர் நமசிவாயத்தால் அமராவதி என்ற புதிதாகப் பெயரிடப்பட்டிருந்தது. மாளிகை வாசலில் அப்பெயரும், சேர் கனகசபை நமசிவாயம் நைட் (KNIGHT) என்ற பெயரும், அதன் கீழ் கனகசபை சிவநேசர்நோ.ஓ.பி.ஈ என்ற பெயரும் பித்தளைத் தகடுகளில் பொறிக்கப்பட்டிருந்தன. அத் தகடுகளின் கீழே தனது மகன் ஸ்ரீதரின் பெயரையும் சீக்கிரம் பொறித்துவிட வேண்டுமென்பது தந்தையின் திட்டமாகும்.

பல ஏக்கர் நிலத்தைக் கொண்ட அப்பெரிய வளவைச் சுற்றிப் பலம் வாய்ந்த மிக உயரமான மதில் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அம்மதிலுக்கு மேலே உடைக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள் கள்வர்களைத் தடுப்பதற்காக செங்குத்தாகக் குத்தி வைக்கப்பட்டிருந்தன. வளவு பூராவும் தென்னை மரங்களும், வேப்ப மரங்களும், மாமரங்களும் நிறைந்து இருள் நிழலைப் பரப்பிக் கொண்டிருந்தன. அவற்றுக்கிடையே மல்லிகை முல்லைப் பந்தர்களும் பெரிய பூக்கள் பூத்துக் கிடந்த பல ரோஜா செடிகளும் கூடக் காணப்பட்டன. யாழ்ப்பாணக் குடா நாட்டில் கிடையாத அந்நியப் பிரதேச மரங்கள் சிலவும் அங்கு நடப்பட்டிருந்தன. கித்துள் மரம், விசிறி வாழை போன்றவையும் வாசலுக்குச் சமீபமாகக் காட்சியளித்தன. அழகிய வேலைப்பாடுடன் இரும்பினால் செய்த அகன்ற உயரமான கேட்டுகள் வாசலை வழி மறைத்தன. எப்பொழுதும் பூட்டப்பட்டே இருக்கும் அந்தப் பெரிய கேட்டுகளுக்குப் பக்கத்தில் சிறியதொரு வாசல் ஒரு சிறு கேட்டுடன் காணப்பட்டது. அதற்கூடாகவே வேலைக்காரர்களும் மற்றவர்களும் போய் வந்தார்கள். அதற்குப் பக்கத்தில் மரத்தால் செய்த கூடு போன்ற ஒரு சிறு அறையில் காவலாளி இருந்தான். காக்கிக் கோட்டுடன் காணப்பட்ட அவன் முக்கியமானவர்களின் கார்கள் வரும் போது கேட்டைத் திறந்து அவர்களை உள்ளே அனுப்புவதும் பின்னே மூடுவதுமாக இருந்தான். ஆனால் சிவநேசரைக் காண்பதற்கு உள்ளே புகுந்து விடுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. முதலில் காவலாளி வந்தவரின் பெயரைத் தெரிந்து கொண்டு உள்ளில்ல டெலிபோன் மூலம் மாளிகைக்குப் பேசி, அங்கே இருந்து பதில் வந்த பின்னர் தான் கதவைத் திறப்பான்.

கேட்டிலிருந்து அகலமான வீதி ஒன்று உள்ளே மாளிகையை நோக்கிச் சென்றது. அதன் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்ற நெடுங் கமுக மரங்கள் வானை நோக்கி வளர்த்திருந்தன. அதன் வழி சென்றால் உயர்ந்த ‘போர்ட்டிக்கோ’வுடன் கூடிய அரன்மணை போன்ற பெரிய வீட்டை அடையலாம். எப்படி சிவநேசரின் ஆடம்பரமான தோற்றம் அவருடன் எடுத்த எடுப்பில் பேசுவதற்கும் கூட, மற்றவர்களைப் பின் நிற்க வைத்ததோ, அப்படியே அமராவதியின் தோற்றமும் அதற்குள் யாரும் அவசரப்பட்டுப் புகுந்து விட முடியாது தடுத்தது. நெடுஞ்சாலையில் சென்றவர்கள் மதிலையும் மரங்களையும் காண முடிந்ததே ஒழிய, அவற்றுக்குப் பின்னால் மறைந்த கிடந்த பெரிய வீட்டைக் காண முடியாதிருந்தது. ஒரு வித மர்மச் சூழல் அந்த வீட்டுக்கு ஒரு தனிக் கம்பீரத்தையும் தனி அந்தஸ்தையும் அளித்தது. “இது தான் சிவநேசர் பிரபுவின் வீடு” என்று அறியாதவர்களுக்கு அறிந்தவர்கள் அந்த வீட்டைப் பற்றி வீதியில் சொல்லிச் செல்வார்கள். அதனால் வீதியில் அவ்வீட்டிற்குச் சமீபத்தில் இருந்த பஸ்தரிப்புக்குக் கூட சிவநேசர் வீட்டடி என்று பெயர் வந்து விட்டது. பஸ் பிரயாணிகள் பிரயாணச் சீட்டைப் பெறுவதற்கு “சிவநேசர் வீட்டடிக்கு ஒரு டிக்கெட்” என்று கேட்பது அப்பகுதியிலே நீண்ட காலப் பழக்கமாகிவிட்டது.

சிவநேசர் அமராவதி வளவில் அவரது பெரிய இல்லத்தைத் தவிர, ஒரு சிறிய சிவன் கோவிலும், அதற்குப் பக்கத்தில் நீந்திக் குளிப்பதற்கேற்ற ஒரு தடாகமும் கூட இருந்தன. வளவில் பிற்பகுதி சிறிது காடடர்ந்து கிடந்தது. ஏராளமான வாழை மரங்களும் அங்கே நடப்பட்டிருந்தன. பாக்கியம் அன்புக்குப் பாத்திரமான இரு புள்ளிமான்களும், ஒரு ஜோடி மயில்களும் எப்பொழுதும் நடமாடிக் கொண்டிருக்கும். பெரிய சீமை மாடுகள் இரண்டைக் கொண்ட பாற் பண்ணையும் அங்கு காணப்பட்டது. பொதுவாக யாழ்ப்பாணக் குடா நாட்டை சூடானதொரு தேசமென்று சொல்வார்கள். ஆனால் அமராவதி வளவை ஒரு தரம் சுற்றி வந்தவர்கள் அதை நம்ப மாட்டார்கள். ஏனெனில் பாரிய வேப்ப மரங்களும் புளிய மரங்களும், மா மரங்களும் அவ்வளவில் தம் தண்ணிழலை இடையீடின்றிப் பரப்பிக் கொண்டு நின்றதால் அங்கு எப்பொழுதும் குளுமை ததும்பிக் கொண்டிருந்தது. ஒரு புறத்தில் ஒரு சிறிய தாமரைத் தடாகம் கூட காணப்பட்டது. அதில் செந்தாமரை, வெண்டாமரை மலர்களோடு நீலோற்பலமும் , அல்லியும் கூட மலர்ந்திருந்தன. சிறிய வாளை மீன்கள் துள்ளி விளையாடிய மாலை நேரங்களில் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ஏதாவது கதைப் புத்தகங்களை வாசிப்பது பாக்கியத்தின் வழக்கம். அப்பொழுது வேலைக்காரி தெய்வானை கொண்டு வந்து கொடுக்கும் உணவு வகைகளை மீன்களுக்கிட்டு அவை அவற்றை உண்பதற்குத் துள்ளி எழுவதைப் பார்த்து மகிழ்வது அவளுக்கு நல்ல பொழுது போக்காயிருந்தது. ஸ்ரீதர் விடுமுறைகளுக்கு வீட்டுக்கு வரும் பொழுது தாயோடு தானும் அங்கே உட்கார்ந்து மீன்களுடன் விளையாடுவான். நான்கு மாதங்களின் முன்னர் அவன் கொழும்பிலிருந்து வந்த போது ஒரு ஜோடி ஆமைகளை கொண்டு வந்து அக்குளத்தில் விட்டிருந்தான். பாக்கியம் அவற்றை நன்கு கவனித்து வந்தாள். இரண்டு மாதங்களின் முன்னர் ஒரு நாள், ஸ்ரீதர் டெலிபோனில் பேசியபோது அந்த ஆமைகளின் சுகஷேமத்தைப் பற்றியும் விசாரித்திருந்தான். அவற்றை முன்னிலும் பார்க்க மேலும் அதிக அக்கறையோடு இப்போது கவனித்து வந்தாள் பாக்கியம். சிவநேசர் அந்த ஆமைகளுக்கு, இரண்டும் ஆண் ஆமைகளாக இருந்ததால் இராம, இலட்சுமனர் என்று பெயரிட்டிருந்தார். இதை ஸ்ரீதருக்கு அவள் தாயார் டெலிபோனில் சொன்ன போது ஸ்ரீதர் தான் ‘கிஷ்கிந்தா’வாசியானதால் வாலி, சுக்கிரீவன் பெயர்களே தனக்குப் பிடித்தமானவை என்று சிரித்துக் கொண்டு சொன்னான். இதைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சுரேஷ் டெலிபோனைப் படக்கென்று பறித்து “வேண்டாம். ஸ்ரீதர் சுரேஷ் என்று பெயரிட்டு விடுங்கள். ஏனெனில் இப்பொழுது கிஷ்கிந்தாவில் இருக்கும் வானரங்களின் பெயர்கள் வாலி, சுக்கிரீவன் அல்ல. ஸ்ரீதர் சுரேஷ் என்பதே அவற்றின் பெயர்கள்.” என்று கூறிவிட்டான். அதற்குப் பதிலாக பாக்கியம் யாழ்ப்பாணக் குடா நாட்டில் சிரித்த சிரிப்பு டெலிபோனில் கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸ் வரை கேட்டது!

அமராவதி வளவில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தது சிவநேசரின் மாளிகை மாடி வீடாக விளங்கிய அம் மாளிகையில் மொத்தம் இருபது அறைகள் இருந்ததென்றால் அது எத்தகைய பெரிய மாளிகையாக இருக்க வேண்டுமென்று யூகித்துக் கொள்ளுங்கள். சலவைக் கற்களாலும், சித்திர ஓடுகளாலும் அழுகுற அமைந்த விறாந்தைத் தளமும், பெரிய கூடமும் மாளிகைக்கு விசேஷ கவர்ச்சியைத் தந்தன. கதவுகளும் ஜன்னல்களும் மாடிப்படிகளும் தேக்கு மரத்தில் பலவித வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. சேர் நமசிவாயம் காலத்தில் கட்டப்பட்ட அம்மாளிகை மிகவும் கவனமாகப் பரமரிக்கப்பட்டு வந்ததால் இன்றும் புதிது போலக் காட்சியளித்தது. உண்மையில் இது போன்ற அழகிய மாளிகை இலங்கையில் இன்னொன்று மட்டுமே இருந்ததென்றும், அது தென் இலங்கையில் ஒரு சிங்களப் பிரபுவினுடையதென்றும், பலர் பேசிக் கொண்டார்கள்.

சிவநேசரை நாம் சந்திக்கும் இன்று காலை, அவர் தமது மாளிகையில் விறாந்தையில் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தமது மனைவி பாக்கியத்துடன் உரையாடிக் கொண்டிருகிறார். பாக்கியம் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பக்கத்திலுள்ள சிறிய மேசையிலிருந்த வெற்றிலைத் தட்டிலிருந்த வெற்றிலையைக் காம்பு முறித்துச் சுண்ணாம்பு தடவி வாயிலிடுவதற்குத் தயாராக்கிக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு கட்டம் போட்ட கொர நாட்டுச் சேலையை யாழ்ப்பாணத்துக்கே உரிய பாணியில் பின் கொய்யகம் வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறாள். சிவநேசரோ வேட்டி கட்டி வெறும் மேலுடன் சாய்வு நாற்காலியில் சாயாது நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரது செக்கச் செவேலென்ற நெஞ்சிலே தங்கச் சங்கிலி புரண்டு கொண்டிருக்கிறது. நெற்றியிலே சிறிய திருநீற்றுக் கீற்று மின்னுகிறது.

சிவநேசர் பாக்கியத்திடம் “ஸ்ரீதர் விஷயத்தைச் சீக்கிரம் முடிக்க வேண்டும். இன்று அவனோடு டெலிபோனில் பேசி அடுத்த வாரம் இங்கு வரச் சொல்லிவிடு” என்று கூறினார்.

பாக்கியம் “சரி” என்று கூறிக் கொண்டே வெற்றிலையை வாயில் திணித்த வண்ணம் “உங்களுக்கு வெற்றிலை வேண்டுமா” என்றாள்.

சிவநேசர் வேண்டாமென்று தலையை அசைத்து விட்டு, “பாக்கியம், நீ கந்தப்பர் மகள் அமுதத்தைச் சமீபத்தில் பார்த்தாயா? எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டார்.

பாக்கியம் “அவள் டாக்டர் பரீட்சையில் சித்தியாகிச் சீமையிலிருந்து வந்த அடுத்தக் கிழமை நல்லூர்க் கோவிலில் கண்டேன். அவளுக்கென்ன? நல்ல அழகாய்த் தானிருக்கிறாள். ஸ்ரீதருக்கு நிச்சயம் அவளைப் பிடிக்கும்” என்று பதிலளித்தாள்.

சிவநேசர் அதற்கு “இந்த சம்பந்தம் எனக்கு மிகவும் திருப்தி. முதலாவதாகச் சுழிபுரம் சேர் பாலசிங்கம் குடும்பத்தார் சாதியைப் பொறுத்த அளவிலோ அந்தஸ்தைப் பொறுத்த அளவிலே எங்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். பணத்தைப் பொறுத்த வரையில் வேண்டுமானால் குறை சொல்லலாம். ஆனால் பணம் பெரிதல்ல. ஸ்ரீதருக்கிருக்கும் சொத்து பத்துத் தலைமுறைக்குப் போதும். ஆகவே இதை உடனே முடித்து விடுவதுதான் நல்லது” என்றார்.

அதற்குப் பாக்கியம் “ஆனால் எதற்கும் சாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாமா? மற்றப் பொருத்தங்களிலும் பார்க்க அதுதானே முக்கியம்” என்றாள்.

சிவநேசர் “அதை நான் பார்த்து விட்டேன். நேற்றிரவு பண்டிதர் பாரதியிடம் இரண்டு சாதகங்களையும் காட்டினேன். எல்லாம் நல்ல பொருத்தமென்று கூறிவிட்டார் அவர்” என்றார்.

“அப்படியானால் உடனே முகூர்த்தத்தை வைக்க வேண்டியதுதான். இன்று ஸ்ரீதருக்கு டெலிபோன் பண்ணுகிறேன். அவன் கலியாணம் என்றதும் திடுக்கிட்டு விடுவான். அமுதத்தை அவனும் ஒரு தடவை என்னோடு பார்த்திருக்கிறான். நான் அவள் பெயரைச் சொன்னதும் அவன் என்ன சொல்லுகிறான் பார்ப்போம்!” என்றாள் பாக்கியம்.

சிவநேசர் “இந்தக் கலியாணத்தை நான் விரும்புவதற்கு மிகவும் முக்கியமான ஒரு காரணமிருக்கிறது. அது என்ன தெரியுமா? என்று கேட்டார்.

“என்ன சொல்லுங்கள் கேட்போம்.” என்றாள் பாக்கியம்.

“எங்கள் குடும்பத்தின் பெரிய குறைதான் சந்ததிக் குறை. சேர் நமசிவாயம் தாத்தாவின் ஒரே பிள்ளைதான் என் அப்பா. அவரின் ஒரே பிள்ளை நான். எனது ஒரே பிள்ளை ஸ்ரீதர். இப்படி எங்கள் குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு மேல் பிறப்பது அரிதாகி வருகிறது, பாக்கியம். இதனால் நமது சந்ததி நாளடைவில் முற்றாக மறைந்து போய்விடுமோ என்று கூட நான் பயப்படுவதுண்டு. கந்தப்பர் குடும்பமோ இதற்கு முற்றிலும் மாறானது. அமுதத்துக்குக் கூட ஒன்பது சகோதரர்கள் இருக்கிறார்கள். இன்னும் கந்தப்பருக்குக் கூட ஏழு சகோதரர்கள். அவர்கள் குடுமம் சந்தான விருத்தி நிறைந்த குடும்பம். அப்படிப்பட்ட இடத்தில் சம்பந்தம் செய்தால் ஸ்ரீதருக்கும் நல்ல சந்தான விருத்தி ஏற்படலாம். எப்படியும் ஒரு குடும்பத்தில் ஐந்து குழந்தைகளாவது இருக்க வேண்டுமென்பது எனது எண்ணம்” என்று தன் எண்ணத்தை விளக்கினார் சிவநேசர்.

பாக்கியமோ “பிள்ளைகள் பிறப்பது எங்கள் கை வசமில்லை. அது கடவுளின் கையில்தான் இருக்கிறது” என்றாள்.

சிவநேசர் “மனிதன் தன் கடமையைச் சரியாகச் செய்யாவிட்டால் கடவுளால் கூடப் பிள்ளைகளைப் பிறப்பிக்க முடியாது” என்று கூறினார்.

இதற்கிடையில் கேட் காவலாளி அன்றைய கடிதங்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். மொத்தம் பதினைந்து கடிதங்கள் வந்திருந்தன. அவற்றில் ரெஜினாவின் குண்டு குண்டான எழுத்துகளில் எழுதப்பட்ட தங்கமணியின் மொட்டைக் கடிதமும் ஒன்று.

சிவநேசர் பேச்சை நிறுத்தி விட்டுக் கடிதங்களை வாசிக்க ஆரம்பித்தார். கடிதங்களில் ஒரு சில வங்கிகளிலிருந்தும், வர்த்தக ஸ்தாபனங்களிலிருந்தும் வந்தவை. ஒன்று ஒரு வாரப் பத்திரிகையின் ஆரம்ப இதழ். சிவநேசர் தமக்குத் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைப் பாக்கியத்திடம் கொடுத்தார். பாக்கியம் வேலைக்காரன் சைமனுக்குக் குரல் கொடுத்தாள். சைமன் அவற்றை சிவநேசரின் கிளார்க் நன்னித் தம்பியின் காரியாலாய அறைக்கு எடுத்துச் சென்றான்.

சிவநேசர் முதலில் கிளிநொச்சியில் தமது வயல்களை மேற்பார்வை செய்யும் செல்லையாவின் கடிதத்தை வாசித்து முடித்தார். தனது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடக்கவிருப்பதாகவும் கல்யாணச் செலவுகளுக்கு ரூபா ஐநூறு தனக்குக் கடனாகக் தந்துதவ வேண்டுமென்றும் அவன் கேட்டிருந்தான். அதை அவர் பாக்கியத்திடம் காட்டிவிட்டு “என்ன செய்யலாம்? சொல்லு” என்றார்.

பாக்கியம் “செல்லையாவின் மகளை உங்களுக்குத் தெரியும் தானே? போன தடவை நாங்கள் கிளிநொச்சிக்குப் போன போது எங்களுக்குத் தேன் போத்தலொன்று கொடுத்தாளே? – அவள். அவளுக்குக் கல்யாணமென்றால் அதற்கு நாம் ஏதாவது கொடுக்கத் தானே வேண்டும். ஆனால் கடனாகக் கொடுக்க வேண்டாம். ரூபா ஐநூறையும் பரிசாகவே அனுப்பி விடுங்கள்” என்றாள்.

சிவநேசர் “அப்படி நாம் பரிசளிப்பதென்றால் ரூபா ஐநூறு போதாது. பத்துப் பதினைந்து வருடங்களாகச் செல்லையா வயல்களைப் பார்த்து வருகிறான். சிறிது அதிகமாக ஆயிரம் ரூபாவாகவே அனுப்பி விடுவோம். அவனுக்கும் மகிழ்ச்சி. அத்துடன் கிளிநொச்சிப் பகுதியில் நமக்கும் நல்ல பெயரேற்படும். அது ஸ்ரீதர் சொத்துகளைப் பாரமெடுத்து நிர்வகிக்கும் பொழுது, அவனுக்கும் நல்ல உதவியாயிருக்கும். மேலும் இந்த மாதிரி விஷயங்களில் நாம் எப்பொழுதும் தாராளமாகவே இருக்க வேண்டும்.” என்று கூறிக் கொண்டு “நன்மை விரும்பி” எழுதிய மொட்டைக் கடிதத்தை உடைத்து வாசிக்கலானார்.

சிவநேசர் அதிலுள்ள நான்கு வசனங்களை வாசித்ததும் திடுக்கிட்டுப் போனார். “பாக்கியம், இதோ பார்”- என்று கூறிக் கொண்டு அக்கடிதத்தைத் தன் மனைவியின் கையில் திணித்தார் அவர்.

“நானிங்கே நல்ல இடத்தில் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்க ஸ்ரீதர் அங்கே வேறிடத்தில் மாட்டிக் கொள்ளவா பார்க்கிறான். இதை எப்படியும் நிறுத்தி விட வேண்டும். நானொன்று நினைக்க அவன் வேறொன்று நினைக்கிறான். ஆனால் இதில் அவன் பிழை இல்லை. நாங்கள் தான் அவன் திருமணத்தைத் தாமதித்துவிட்டோம். அமுதத்தை அவனுக்குச் சென்ற ஆண்டே கட்டி வைத்திருக்கலாம். படிப்பு முடியட்டும் என்றிருந்தேன். ஆனால் அது என் தவறுதான். என்றாலும் ஸ்ரீதர் ஒருபோதும் என் பேச்சைத் தட்ட மாட்டான். எதற்கும் விஷயத்தை உடனடியாகத் தீர்த்துவிட வேண்டும். இன்று டெலிபோனில் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசாமல் வேறு ஏதாவது காரணம் சொல்லி, அவனிடம் நாளையே புறப்பட்டு வரும்படி சொல்லி விடு. அதற்கு அவனால் முடியாவிட்டால் நாங்களிருவரும் நாளை கொழும்புக்குப் புறப்படுவோம்” என்றார் அவர்.

பாக்கியம் “சரி” என்று கூறினாள் என்றாலும் சிவநேசரிடம் “ஒரு கடிதத்தைக் கண்டதும் இவ்வளவு பதை பதைக்கலாமா? நீங்கள் சிறிது யோசித்துப் பார்த்துக் காரியங்கள் செய்ய வேண்டும். எதற்கும் இன்று அவனுடன் டெலிபோனில் பேசி வரச் சொல்லுகிறேன்” என்று கூறினாள்.

சிவநேசரோ மூளை குழம்பி ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டார். அச்சமயம் நன்னித்தம்பி தனது காரியாலய அறைக்குள் இருந்து வெளிப்பட்டு, “உங்களைப் பார்க்க அதிகார் அம்பலவாணரும் மனைவியும் வந்திருப்பதாகக் காவலாளி தெரிவிக்கிறான் ஐயா” என்றார்.

சிவநேசருக்கு அதைக் கேட்டதும் சினம் ஏற்பட்டது. “இப்பொழுது என்னால் எவரையும் சந்திக்க முடியாது. வேறு நாளுக்கு வரச் சொல்” என்றார்.

ஆனால் பாக்கியம் உடனே தலையிட்டு, “வேண்டாம் அந்த மனிதன் பதினைந்து மைல் தூரத்திலிருந்து வந்திருக்கிறார். ஒருவரையும் அப்படி அலைகழிக்கக் கூடாது. வரச் சொல்வோம். நீங்கள் உள்ளே போங்கள். நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் ஓர் அரை மணி நேரம் கழித்து வந்து அவர்களைச் சந்தியுங்கள்” என்றாள்.

சிவநேசர் “சரி” என்று கூறிக் கொண்டே விறாந்தையிலிருந்து உள்ளே செல்ல, நன்னித்தம்பி டெலிபோனில் வாசற் காவலாளியிடம் அதிகாரின் காரை உள்ளே அனுமதிக்கும்படி சிவநேசர் உத்தரவிட்டிருப்பதாக அறிவித்தான்.

அதைத் தொடர்ந்து ஒரு சில நிமிட நேரங்களில் அதிகார் அம்பலவாணரின் லொட லொட மோட்டார் கார் போர்ட்டிக்கோவில் வந்து நின்றது. அதிகாரும் வள்ளியாச்சியும் அதிலிருந்து இறங்கினார்கள். பாக்கியம் அவர்களை “வாருங்கள் அதிகார்” என்று வரவேற்றாள்.

விறாந்தையிலுள்ள நாற்காலிகளில் அதிகாரும் மனைவியும் அமர்ந்தார்கள். “எங்கே ஐயா? காணோ¡மே!” என்றார் அதிகார். “அவர் உள்ளே அலுவலில் இருக்கிறார். சிறிது நேரத்தில் வந்து விடுவார்!” என்று கூறிய பாக்கியம் வள்ளியாச்சியுடன் அடுத்து வரவிருந்த செல்வச் சந்நிதித் திருவிழா பற்றி ஏதோ பேச்சுக் கொடுத்தாள்.

அதிகார் ‘போர்ட்டிக்கோ’வுக்குச் சற்றுத் தள்ளி நிலத்தில் பூம்பாவாடை விரித்திருந்த வேப்ப மரத்தின் இலைகளைச் சலசலக்கச் செய்து விறாந்தையை நோக்கி வீசிய குளிர்ந்த தென்றல் காற்றில் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய மனம் சிவநேசரிடம் ஸ்ரீதர் விஷயத்தை எப்படிப் பேசுவது, பத்மாவுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு கூற வேண்டும் என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தது. எந்த விஷயத்தையும் எடுத்த எடுப்பில் படாரென்று பேசிவிடும் அம்பலவாணருக்குக் கூட சிவநேசர் முன் அப்படிப் பேசும் துணிவில்லை. வார்த்தைகளை எவ்வாறு அளந்து பேசுவது என்பது பற்றித் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தார் அவர்.

14-ம் அத்தியாயம் : சிவநேசர்!

சிவநேசர் பத்துப் பதினைந்து நிமிஷங்கள் கழித்து வெளியே வந்த போது, அவரது தலை மயிர் ஒழுங்காக வாரி விடப்பட்டிருந்ததோடு உடைகளும் சீர் செய்யப்பட்டிருந்தன. எப்பொழுதுமே தன்னைப் பார்க்க வருபவர்களை வரவேற்கும்போது அவர் இவற்றை அலட்சியம் செய்வதில்லை. அவரைக் கண்டதும் அதிகார் அம்பலவாணர் தம்மை அறியாமலே தம் ஆசனத்தை விட்டு எழுந்து விட்டார். சிவநேசரைப் பார்த்து “வணக்கம் ஐயா!” என்று கை கூப்பி வணங்கினார் அவர். சிவநேசரோ பதிலுக்கு வணங்கவில்லை. அவர் எப்பொழுதுமே யாரையும் வணங்குவதில்லை. வெறுமனே “அம்பலவாணரா, என்ன விசேஷம்? உட்காரும்” என்று மட்டும் சொன்னார். அம்பலவாணர் உட்கார்ந்தார். வள்ளியாச்சியோ சிவநேசரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவரது முகத்தில் தன் விழிகளைப் பதிய விட்டாள். ஆனால் அவரோ அதைச் சற்றும் இலட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. இதனால் ஏற்பட்ட ஏமாற்றம் வள்ளியாச்சிக்குச் சிறிது துன்பத்தை அளித்ததாயினும், பாக்கியத்தின் கல கலப்பான பேச்சு அதை மாற்றிவிட்டது.

சிவநேசர் அம்பலவாணரிடம் “சென்ற வாரம் பட்டணத்தில், உமது மகள் நீர், கொழும்புக்குப் போயிருந்ததாகச் சொன்னாளே, எப்பொழுது வந்தீர்?” என்று கேட்டார்.

“நேற்றுத்தான் வந்தேன். அங்கு பல முக்கியமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.”

“அப்படியா? அரசியல் விஷயங்களைப் பற்றித் தானே பேசுகிறீர்? எனக்கு அவற்றில் இப்பொழுது அக்கறை இல்லை. சுந்தரேஸ்வரர் கோயில் கோபுரத்தை இவ்வருடம் எப்படியும் கட்டி முடிக்க வேண்டும். அது ஒன்றில் தான் எனக்கு இப்பொழுது அக்கறை. அதற்காகக் கொழும்பில் இரண்டு மூன்று மாதங்கள் நான் தங்கும்படி கூட நேரிடலாம்.”

அம்பலவாணர் கூறிய முக்கிய விஷயம் அரசியல் விஷயமல்ல. உண்மையில் ஸ்ரீதர் விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டே அவர் அவ்வாறு பேசினார். எப்படி விஷயத்துக்கு வருவது என்று திக்கு முக்காடினார் அவர்.

இதற்கிடையில் சிவநேசர் சைமனிடம் அதிகாரை உபசரிப்பதற்காக மதுபான வகையறாக்கள் அடங்கிய தள்ளு வண்டியை அங்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

சிவநேசர் குடிகாரர் அல்லாவிட்டாலும் விருந்தினர்களை உபசரித்தற்கும் உணவருந்துவதற்கு முன்னர் தானே சிறிது குடித்துக் கொள்வதற்குமாக எப்பொழுது விஸ்கி போன்ற விலை உயர்ந்த குடி வகைகளைத் தமது மாளிகையில் வைத்திருப்பது வழக்கம். பளபளக்கும் வெள்ளித் தட்டுடன் கூடிய தள்ளு வண்டியில் அவை கண்ணாடிப் பாத்திரங்களுடன், வெண்ணெய்க் கட்டி, ‘பிஸ்கட்; போன்ற உணவு வகைகளுடனும் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விறாந்தையில் சலவைக் கல் தளத்தில் சைமன் அத்தள்ளு வண்டியைத் தள்ளி வந்ததைக் கண்ட அதிகார் அம்பலவானரோ ஒரு பரவச நிலையில் இருந்தார். அவர் வாயில் எச்சில் ஊறிக் கொண்டிருந்தது. பொதுவாகவே குடிப்பவர்களுக்குக் குடி வகைகளைக் கண்டதும் இவ்வித அனுபவம் ஏற்படுமாயினும், இலவசமாக வரையின்றிக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அவர்கள் அடையும் ஆனந்தம் கொஞ்சமல்ல. அதிலும் சாதாரண சாராயத்தையும் பியரையுமே தினசரி குடித்துப் பழகியவர்களுக்கு விலையுயர்ந்த விஸ்கியைக் கண்டதும் பிறக்கும் இன்பத்தை அளவிட முடியாது.

ஆனால் அதிகார் பரவச நிலையில் இருக்க, வள்ளியாச்சிக்கோ “எங்கே மனிதன் அளவு மீறிக் குடித்துவிட்டு வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்துவிடுகிறாரோ?”” என்ற அச்சம் ஏற்பட்டது. அந்த அச்சத்தை அவருக்குத் தெரிவித்துக் கொள்வதற்காகத் தன் கண்களை அவர் முகத்தில் நாட்டி ஓர் எச்சரிக்கைப் பார்வை பார்த்தாள் அவள். இவ்விதம் கண்களால் பேசிக் கொள்வதில் சிறு வயதிலிருந்தே வள்லியாச்சி நல்ல சாமர்த்தியசாலி.

ஆனால் பாலைக் கண்ட பூனை எச்சரிக்கைப் பார்வையையா கவனிக்கும்? வெள்ளி பிரேமிட்ட நமது மூக்குக் கண்ணாடியைத் தமது கைக்குட்டையால் ஒரு தடவை நன்கு துடைத்து மாட்டிக் கொண்டு விஸ்கியில் முழுகி எழத் தயாராகிக் கொண்டிருந்தார் அவர்.

முதல் கிளாஸ் வயிற்றை அடைந்ததுமே நாக்கின் கட்டவிழத் தொடங்கியது அதிகாருக்கு. எனவே கொழும்பு அனுபவங்களைப் பற்றித் தாராளமாகப் பேச ஆரம்பித்தார் அவர். ஆண்கள் இவ்வாறு குடிக்க ஆரம்பித்ததும் பாக்கியம் “நீங்கள் குடியுங்கள். நாங்கள் வெளியே போகிறோம்” என்று குறிக் கொண்டு தோட்டத்தில் வேப்ப மர நிழலில் இருந்த சிமெந்து ஆசனத்தில் வள்ளியாச்சியுடன் போய் உட்கார்ந்து கொண்டாள்.

அதிகார் கல்கிசைக் கடற்கரையில் நடைபெற்ற நிச்சலுடைப் போட்டியைப் பற்றியும் தான் அதில் நடுவர் நாயகமாகக் கடமையாற்றியதைப் பற்றியும் பெருமையுடன் கூறினார். குடி போதை ஏற ஏற அதிலிருந்து ஸ்ரீதர் விஷயத்துக்கு தழுவுவது அவருக்குச் சிரமமாயிருக்க வில்லை.

“ஐயாவுக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். இந்தப் போட்டியின் போது, உங்க மகன் ஸ்ரீதரை நான் அங்கு சந்தித்தேன். ஆள் நன்றாயிருக்கிறான். உண்மையில் அவனது சிநேகிதி ஒருத்தி தான் – பத்மா என்று பெயர் – நீச்சலழகியாகத் தெரியப்பட்டாள்.”

“அப்படியா…”

“ஆனால் ஒன்று. அவள் எவ்வளவு அழகியாயிருந்தாலும் ஸ்ரீதருக்கு ஏற்றவனல்ல ஐயா. யாரோ வாத்தியாரின் மகளாம். இந்தத் தொடர்பை முற்றாக வெட்டிவிட்டு, ஸ்ரீதருக்கு ஒரு கல்யாணத்தை உடனடியாக நீங்கள் செய்து வைக்க வேண்டும்”

அதிகார் சொன்ன இச்செய்தியைக் கேட்டுச் சிவநேசர் திடுக்கிட்டு விடவில்லை. “அப்படியானால் ‘நன்மை விரும்பி’ எழுதியுள்ளது உன்மைதான். பாக்கியம் கூறியது போல் நான் அநாவசியமாகப் பதைத்துவிட வில்லை. உடனடியாக இது விஷயமாக நடவடிக்கை எடுத்து ஸ்ரீதரின் கல்யாணத்தை முடித்து விட வேண்டியதுதான்” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டார் அவர்.

ஆனால் அந்த எண்ணத்துடனேயே சகிக்க முடியாத ஒரு வகை ஆத்திரமும் அவர் உள்ளத்தில் பொங்கி எழுந்தது. “ஸ்ரீதர் – நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன் – என்னுயிர் என்றல்லவா நான் அவனைக் கருதுகிறேன் – அவன் என் அந்தஸ்துக்கும் மரியாதைக்கும் ஒவ்வாத முறையில் இவ்வாறு நடந்து கொள்கிறானே! இதை எப்படி பொறுப்பது” என்ற கலக்கம் ஏற்பட்டது அவருக்கு.

ஆனால் உண்மையில் அவருக்கு ஸ்ரீதரை விட அதிகார் அம்பலவாணர் மீதுதான் ஆத்திரம் அதிகமாக வந்தது. “இவன் போன்ற அற்ப மனிதன் என்னிடம் தன்னைப் பற்றிப் பேசக் கூடிய வகையில் ஸ்ரீதர் நடந்து கொண்டிருக்கிறானே! குறை கூறும்போது கூட என்னிடம் ஸ்ரீதரைப் பற்றி மரியாதையாகவும் கண்ணியமாகவும்தான் பேசுகிறான். ஆனால் மற்றவர்களிடம் இதைப் பற்றிப் பேசும்போது எப்படிப் பேசுகிறானோ யார் கண்டது? “சிவநேசருக்கு ஒரு மகன். அவன் சாதி கெட்ட பெட்டையைப் பிடித்துக் கொண்டு அலைகிறான் என்று சொல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம்?” என்று சிந்தித்தார் அவர்.

அதன்பின் சிறிது நேரம் அவர் ஒன்றுமே பேசவில்லை. மெளனமாக இருந்தார். அம்பலவாணர் ஒரு மிடறு விஸ்கியை உள்ளே தள்ளிக் கொண்டு தன்னை மீறி வந்த ஏப்பத்தை வெளியேற்றிய வண்ணமே, “ஏன் பேசாதிருக்கிறீர்கள்? இதைப் பற்றி நீங்கள் ஏதாவது செய்தேயாக வேண்டும். நான் ஸ்ரீதருக்குக் கல்யாணம் ஒன்று பேசட்டுமா ஐயா?” என்றார்.

“ஸ்ரீதர் கல்யானத்தைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். அது எனக்குத் தெரியும். நீர் இப்போது போய் வரலாம்” என்றார் சிவநேசர். கர்வம் நிறைந்த அவரது உள்ளத்துக்கு, அதிகாரின் பேச்சு தன்னை இலேசாக மதித்து அவமானம் செய்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது.

“நீங்கள் என்னை பிழையாக விளக்குகிறீர்கள் போலிருக்கிறது. ஐயா, நான் பொய் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொன்னேன்” என்று விநயமாகப் பேசினார் அதிகார்.

சிவநேசர் அதிகார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அறிந்தவரேயாயினும் “ஏன் இவனுக்கு நான் விட்டுக் கொடுக்க வேண்டும்” என்ற எண்ணம் மனதில் தோன்றவே, “எனக்கு ஸ்ரீதரைப் பற்றி நன்றாகத் தெரியும். அவனைப் பற்றி நீர் ஒன்றும் எனக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. உம்முடைய மகன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ‘பார்’களில் குடித்து விட்டு விழுந்து கிடக்கிறான். அவன் விஷயத்தைக் கவனியும். ஒரு நாள் கொழும்பில் ஒரு ஹோட்டலில் குடி வெறியில் அவன் என்னிடம் வந்து தனக்குச் சிறிது பணம் வேண்டுமென்று கேட்டான். ரூபா நூறு கொடுத்து விட்டு வந்தேன். அவனைத் திருத்துவது பற்றி நீர் கவனியாமல் ஸ்ரீதர் விஷயத்தில் அக்கறை காட்டுகிறீர்? ஸ்ரீதர் என் மகன். அவனைச் சரியான முறையில் வளர்க்க எனக்குத் தெரியும். நீர் போய் வரலாம்.” என்று கடுமையாகக் கூறினார்.

சிவநேசரின் இக்கடும் முகத்தைக் கண்டு அதிகார் அம்பலவாணர் அப்படியே கலகலத்துப் போய்விட்டார். “என்னையோ, என் குடும்பத்தினரையோ என் மகனையோ குறை கூறுவது போற் பேசுவதற்கு, ஏ நாய்களே, உங்களுக்கு என்ன தகுதி?” என்று வினவுவது போன்ற ஒரு மனோபாவம் தொனித்தது. எப்பொழுதுமே சிவநேசர் அகம்பாவமும் கர்வமும் கொண்டவர் என்பது அதிகாருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அந்தஸ்தும் அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் உடைய அவர் தன் மீது கோபம் கொள்வதை அந்தக் குடிவெறி நேரத்தில் கூட அவர் விரும்பவில்லை. ஆகவே எப்படியாவது அவரது தப்பபிப்பிராயத்தை நீக்கிச் சமாதானம் செய்து கொள்ளவிரும்பிய அதிகார் “என் மகன் விஷயம் தெரிந்ததுதானே ஐயா? அவனுக்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். அவன் உங்களிடம் பெற்ற ரூபா நூறையும் திருப்பிச் செலுத்திவிடுவேன். ஆனால் உங்களுக்குப் பணம் கொடுக்க என்னும் அத்துணிவு எனக்கில்லை. உண்மையில், நான் உங்கள் மனதை எவ்வகையிலாவது புண்படுத்திவிட்டேன் என்றால் என்னை மன்னிக்கவும், ஐயா” என்றார்.

சிவநேசரோ வெடுக்கென்று “அதிகார்! உமது பேச்சு எனக்கு ஆத்திரத்தை ஊட்டுகிறது. நீர் என்னோடு பேச வேண்டாம். நான் உம் மகனுக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெறுவதற்கா கொடுத்தேன்? அதற்காகத்தான் அக்கதையை நான் இங்கு சொன்னேன் என்று நினைத்தீரா? மெலும் நீர் உம் மகனுக்காக வெடகப்படுவதாகக் கூறுகிறீர். நான் ஸ்ரீதருக்காக வெட்கப்படவில்லை. நீர் போய் வாரும்!” என்று கூறிக் கொண்டே தமது ஆசனத்திலிருந்து எழுந்து உள்ளே போய்விட்டார்.

அதிகார் அம்பலவாணர் தம் ஆசனத்தை விட்டெழுந்து திக்பிரமை பிடித்தவர் போல் நின்று கொண்டிருந்தார்.

சிவநேசர் மனதில் ஒரே கொந்தளிப்பு. தன் அன்பு மகனை யாரும் குறை கூறித் தம் வாழ்க்கையிலேயே அவர் ஒரு போதும் கேட்டதில்லை. இதுவரை அவர் கேட்டுள்ளதெல்லாம் ஸ்ரீதரைப் பற்றிய பாராட்டுரைகள். சென்ற வாரம் கூடப் பண்டிதர் சின்னப்ப பாரதி “பிள்ளை என்றால் ஸ்ரீதர் போலல்லவா இருக்க வேண்டும்? படிப்பில் புத்திசாலி. கலைகளில் பேரார்வம், பண்பில் இணையற்றவன். கொடைக்குக் கர்ணன். அழகில் அந்தச் சுப்பிரமணியக் கடவுளே தான்” என்று வர்ணித்திருந்தார். அந்த ஸ்ரீதரைப் பற்றித் தான் இன்று இந்த அற்பன் அவதூறுகள் கண்டுபிடித்துக் கூறுகிறான். இவனை என்ன செய்யலாம்? – உண்மையில் அவர் அறிவிழந்த நிலையில் இருந்தார். நாம் என்ன செய்கிறோம், பேசுகிறோம் என்பதே அவருக்கு விளங்கவில்லை.

வேப்பமர நிழலில் வள்ளியாச்சியுடன் சைமன் கொண்டு வந்து வைத்திருந்த ஒரேஞ் பார்லியை அருந்தி வெற்றிலை போட்டுப் பேசிக் கொண்டிருந்த பாக்கியம் மாளிகை விறாந்தையில் பரபரப்பான பேச்சும் சம்பவமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனப்தைக் கண்டு கொண்டதும் “வா வள்ளியாச்சி, வீட்டுக்குள் போவோம்” என்று எழுந்து வந்தாள்.

அங்கே அதிகார் நின்று கொண்டிருந்த தோரணையைக் கண்டதும் பாக்கியம் ” என்ன விஷயம்? ஆள் எங்கே” என்று கேட்டாள். “கோபித்துக் கொண்டு உள்ளே போய்விட்டார்” என்றார் அதிகார்.

“கோபமா? அவர் கோபிக்கும்படி நீர் என்ன பேசினீர்?” என்றாள் பாக்கியம்.

“இல்லை! ஸ்ரீதரைப் பற்றி..”

“ஸ்ரீதரைப் பற்றியா… ஓகோ.. வள்ளியாச்சியும் என்னிடம் சொன்னாள். அவரிடம் நீர் அதைப் பற்றிப் பேசியிருக்கக் கூடாது. என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஸ்ரீதரைப் பற்றி யாரும் குறைவாகப் பேசுவதை அவர் ஒரு போதும் பொறுக்க மாட்டார்.”

“நான் குறைவாகப் பேசவில்லை, அம்மா”

“கொழும்பிலே எவ்வித அந்தஸ்துமில்லாத ஒரு பெண்ணின் பின்னால் அவன் திரிகிறான் என்றால் அது குறையில்லாமல் வேறென்ன?”

“உங்களுக்கு யார் சொன்னார்கள்? வள்ளியாச்சி சொன்னாளா? அப்படியானால் வள்ளியாச்சி மீது உங்களுக்குக் கோபமா?”

“எனக்கு யாரிடமும் கோபமேற்படுவதில்லை. மேலும் வள்ளியாச்சி பொய் சொல்லவில்லையே! ஆனால் உனமையைக் கூட ஆளையும் இடத்தியும் அறிந்து சொல்ல வேண்டும். எதையும் கண்ணை மூடிக் கொண்டு பேசலாமா?”

“நீங்கள் சொல்வது சரி. அதற்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். ஐயாவிடமும் என்னுடைய தெரியாத்தனத்திற்க்காக என்னை மன்னிக்கும் படி நீங்கள் சொல்ல வேண்டும்.”

“அதை அப்புறம் பார்ப்போம். இப்பொழுது நீங்கள் போய் வாருங்கள். அது போக ஸ்ரீதரின் கல்யாணம் சீக்கிரம் நடக்கும். உங்களுக்கும் அழைப்பு வரும். கட்டாயம் நீங்கள் வள்ளியாச்சியுடன் வர வேண்டும். தெரிகிறதா?”

“கட்டாயம் வருவோம், அம்மா.”

அதிகார் அம்பலவாணரின் பழைய மொடல் எலும்பு குலுக்கி “லொட லொடக்” கார் சில நிமிஷ நேரத்தில் ‘போர்ட்டிக்கோ’விலிருந்து சீறிக் கொண்டு கிளம்பியது. வள்ளியாச்சி அதிகாரிடம் “பெரிய மனுஷருடன் உங்ளுக்குப் பேசத் தெரியாது. அநாவசியமான விஷயங்களைப் பேசிவிட்டு வேண்டிக் கட்டிக் கொண்டு வருகிறார்” என்றாள்.

“சீ வாயை முடு” என்றார் அதிகார்.

பாக்கியம் அன்றிரவு எட்டு மணிக்கு ஹோர்ட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’வுக்கு டெலிபோன் செய்தாள். ஆனால் ஸ்ரீதர் வீட்டில்லை. ஆகவே வேலைகாரச் சுப்பையாவிடம் வழக்கத்தில் பேசுவது போல் ஸ்ரீதரின் சாப்பாடு முதலிய விஷயங்களைப் பேசிவிட்டு, அவன் வீட்டுக்கு வந்ததும் “அமராவதி”க்கு டெலிபோன் செய்யும்படி அவனுக்குக் கூறும்படி உத்தரவிட்டாள்.

“ஆகட்டும் அம்மா” என்றான் சுப்பையா.

அன்று ஸ்ரீதரும் சுரேசும் வீட்டுக்கு வந்தபொழுது பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. ஸ்ரீதருக்குத் தெரிந்த சில நண்பர்கள் நடத்திய நாடகமொன்றுக்கு அவர்கள் போய் விட்டு வந்தார்கள். வரும் வழியில் நாதசுரம் வேணு கூறிய விஷயத்தைப் பற்றிச் சுரேஷிடம் விவரித்தான் ஸ்ரீதர். “எனக்கு வேணு கூறிய விஷயத்தைக் கேட்டது தொடக்கம் மனம் கலங்கிப் போயிருக்கிறது. நான் பத்மாவைத் திருமணம் செய்வது பற்றி அப்பாவிடம் பேச எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் கந்தப்பரின் மகள் அமுதா விஷயம் இப்படி முளைத்திருக்கிறது. நான் பத்மாவை விட்டு வேறு யாரையும் ஒரு போதும் திருமணம் செய்யப் போவதில்லை. அம்மாவிடம் சொல்லி எப்ப்டியும் அவளையே திருமணம் செய்வேன். மேலும் அப்பா என் மிது எவ்வªவு அன்பு வைத்திருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் விருப்பத்துக்கு மாறாக அவர் எதையும் செய்ய மட்டார். என்றாலும் இப்படி ஒரு சிறு சிக்கல் தோன்றிவிட்டதே என்ப்து எனக்குக் கவலையாகத்தானிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ் நிலையில் நன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் சுரேஷ்” என்று கேட்டான் ஸ்ரீதர்.

சுரேஷ் சிறிது நேரம் பேசாதிருந்து விட்டு, ஸ்ரீதர், நீ முதல் முதலாகப் பத்மாவைப் பற்றி என்னிடம் கூறிஅய் போது நான் உன் அப்பா நீ பத்மாவைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ள மாட்டார் என்று கூறியது ஞாபகமிருக்கிறதா? இன்றைய சமுதாய அமைப்பிலே இது போன்ற காதல் நிறைவேறுவது கடினம்,” என்றான்.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“ஏனா? இன்றைய உலகம் பணத்தைச் சுற்றிச் சுழலும் உலகம். நீ கோடீஸ்வரன். அதனால் ஓர் அந்தஸ்தும் இருக்கிறது. பத்மாவோ சர்வ சாதாரண மத்தியதர வர்க்கப் பென். நீ அவளைத் திருமணம் செய்ய உன் அப்பா மட்டுமல்ல, இன்றைய சமுதாயமே இடங் கொடாது. உன் அப்பா அதற்கு இடம் கொடுத்தால் இவ்வுலகமே அவரைப் பழிக்கும். என்னைப் போன்ற ஒரு சில இளைஞர்கள் வேண்டுமானால் அவரை மெச்சக் கூடும். அதனால் என்ன பயன்? “உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டு” என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய உலகில், உயர்ந்தவர் என்பதற்குக் கூடப் பணமும் அந்தஸ்தும் உல்ளவர்கள் என்று தான் பொருள்?” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் சுரேஷின் பேச்சை ‘உம்’ கொட்டிக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சுரேஷ் மேலும் தொடர்ந்தான். “ஆனால் இதில் ஒரு விசித்திரம்! கோடீஸ்வரர் சிவநேசரின் மகன் கொட்டாஞ்சேனைப் பத்மாவைத் திருமணம் செய்தான் என்று கேட்டதும் குறை கூறுபவர்கள் பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்து விடாதே. ஏழை, மத்தியதர வர்க்கத்தினர்தான் இன்னும் அதிகமாகக் கண்டிப்பார்கள். போயும் போயும் சிவநேசரின் மகன் இப்படிப் போய்க் குப்புற விழுந்தானே என்று பேசுவார்கள் அவர்கள். இன்னும் பத்மா உன்னை என்னதான் உண்மையாகக் காதலித்தாலும் பத்மாவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? பத்மா கெட்டிக்காரி. எப்ப்டியோ ஒரு பெரிய பணக்காரனை ஏமாற்றிப் பிடித்து விட்டாள் என்று தான் பேசுவார்கள்…”

ஸ்ரீதர் சுரேஷின் பேச்சைத் தடுத்து, “இவைகளல்ல இப்போதுள்ல பிரச்சினை. பத்மாவை நான் எப்படியும் திருமணம் செய்தேயாக வேண்டும்.“ அதற்கு வழி என்ன?” என்றான்.

சுரேஷ், “இது கடினமான விஷயம்தான். உனது அப்பா அதை எதிர்க்கவே செய்வார். போராடிப் பார். இதில் என்னைப் பொறுத்தவரையில் நீ கந்தப்பர் மகளைக் கட்டிக் கொண்டு சந்தோசமாயிருக்க முடியுமென்று நான் நம்பவில்லை. என் விஷயம் வேறு. நான் யாரையும் காதலித்ததில்லை. ஆகவே எல்லாப் பெண்களும் ஒன்றுதான். ஆனால் ஒரு பெண்ணை மனதாரக் காதலித்த ஒருவன், இன்னொரு பெண்ணுடன் வாழும்போது பழைய காதலியின் நினைவு அடிக்கடி தோன்றிக் கொண்டுதானிருக்கும். அது குடும்ப வாழ்க்கைக்கு இன்பத்தைத் தராது” என்றான்.

ஸ்ரீதர் “ஆனால் வேணு சொன்ன விஷயம் எவ்வளவு தூரம் உண்மை என்பது யாருக்குத் தெரியும்? இதைப் பற்றி அமமவிடம் கேட்கலாமென்றிருக்கிறேன். நாளை நிச்சயம் வீட்டுக்கு டெலிபோனில் பேச வேண்டும்.” என்றான்.

இவ்வாறு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வீடு வந்துவிட்டது. வேலைக்கார சுப்பையா ‘அமராவதி’யிலிருந்து வந்த செய்தியை ஸ்ரீதருக்குக் குறிப்பிட்டான். ஸ்ரீதர் டெலிபோனை எடுத்து ‘ட்ரங்க் கோல்’ போட்டு வீட்டுக்குப் பேசினான்.

என்னதான் மனக் குழப்பங்களிருந்தாலும் ஸ்ரீதர் தாயாரோடு மிகவும் உற்சாகமாகவும் வேடிக்கையாகவுமே பேசினான். பரிகாசமாகப் பேசுவதில் அவனுக்கு எப்பொழுதும் இஷ்டம். சிறு வயதிலிருந்தே தாயாரோடு விளையாட்டுப் பேச்சுப் பேசி அவனுக்குப் பழக்கம். வீட்டில் தனியாக வளர்ந்த ஒரே பிள்ளையாக இருந்ததால், பாக்கியம் அவனுக்குத் தாயாக மட்டுமிருக்கவில்லை. அவனோடு சேர்ந்து விளையாடும் சகோதரி அல்லது விளையாட்டுத் தோழி போலவும் விளங்கினாள் அவள்.

டெலிபோனில் தாய் வந்ததும் குரலை மாற்றிக் கொண்டு, “அது திரு. சிவநேசர் வீடா? திருமதி சிவநேசருடன் நான் பேசலாமா?” என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் “யாரது? நான் தான் திருமதி சிவநேசர். என்ன வேண்டும்?” என்றாள்.

“நான் யாழ்ப்பாணம் பொலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறேன். சிவநேசருடன் பேச வேண்டும்.”

“என்ன, பொலீஸ் ஸ்டேஷனிலிருந்தா? என்ன விஷயம்?”

“பாரதூரமான விஷயம். பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் சிவநேசர்.”

பாக்கியம் பதைபதைத்துப் போனாள். பதற்றத்தில் “ஆ” என்று சப்தமிட்டுவிட்டாள். ஸ்ரீதருக்கு அம்மா ஏமாந்து போனாளே என்ற அனுதாபம் ஏற்பட்டது. ஆகவே அதற்கு மேலும் நாடகத்தை நடித்துக் கொண்டு போகாமல் தன்னுடைய சொந்தக் குரலில் “அம்மா என்னைத் தெரியவில்லையா? நான் தான்.. சொல்லு பார்ப்போம்?” என்று கொஞ்சினான்.

பாக்கியம் பெருமூச்சு விட்டாள். ஒரு புறம் ஸ்ரீதரின் விளையாட்டு அவளுக்குச் சிரிப்பை மூட்ட, மறுபுறம் போலிக் கோபட்த்துடன் “ஓ ஸ்ரீதரா? ஆளைப் பார். நல்ல விளையாட்டு. இப்படி எல்லாம் விளையாடக் கூடாது. அப்பாவுக்கு நீ இப்படி விளையாடுவது தெரிந்தால் கோபம் வரும்.” என்றாள்.

“உனக்குத் தெரியாது அம்மா, அப்பா சும்மா கோபிப்பது போல் காட்டுவாரேயல்லாமல் கோபிக்கவே மாட்டார். நீ அவரிடம் சொல்லிப்பார். நிச்சயம் அவர் சிரிப்பார்”

“நீயே அவரிடம் சொல்லு. நான் சொல்ல மாட்டேன்.”

“ நான் சொல்லுவதா? என்னால் முடியாது. எனக்குப் பயம்?”

“அப்படியானால் அவர் கோபிப்பார் என்று தானே சொல்லுகிறாய்?”

“நான் சொன்னால் கோபிப்பார். நீ சொன்னால் கோபிக்கமாட்டார்.”?

“அது கிடக்கட்டும் ஸ்ரீதர். நீ நன்றாக உன் உடம்பைக் கவனித்து வருகிறாயா? சுப்பையா நன்றாய்ச் சமைக்கிறானா? உன்னுடைய சுரேஷ் எப்போது சீமைக்குப் போகிறான்?”

“என் உடம்பைக் கவனிக்கிறேனா என்று கேட்கிறாயா? அடுத்த வாரம் நான் யாழ்ப்பாணத்துக்கு வரும்போது நீ என்னைப் பார்த்தால் நிச்சயம் அடையாளம் கண்டு கொள்ள மாட்டாய் அம்மா. அதற்காக “நான் தான் ஸ்ரீதர்” என்று கொட்டை எழுத்தில் என் பெயரை என் நெஞ்சில் எழுதி ஒட்டிக் கொண்டு வரப் போகிறேன்.”

“என்ன? அடையாளம் தெரியாத அளவுக்கு அவ்வளவு மெலிந்து போய் விட்டாயா ஸ்ரீதர்?”

“இல்லை. கொழுத்துப்போய் விட்டேன் அம்மா. நீயே பார். ஆனால் ஒன்று நீ அனுப்பிய எலுமிச்சை ஊறுகாய் முடிந்து விட்டது. நேற்று சுப்பையா கடையிலிருந்து ஒரு போத்தல் ஊறுகாய் வாங்கி வந்தான். எனக்கு ஊறுகாய் இல்லாவிட்டால் சாப்பாடு செல்லாது.”

“என்ன? கடையிலிருந்து வாங்கினாயா? அது உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா? ஏன் நீ எனக்கு அறிவிக்கவில்லை? இது எல்லாம் சுப்பையாவின் பிழை. அவனுக்கு இப்பொழுது வேலையில் கவனமேயில்லை. இல்லாவிட்டால் எனக்கு அறிவித்திருக்க மாட்டானா? ஆளை நான் என்ன செய்கிறேன் பார்? எல்லாம் நீ கொடுக்கும் இடம். நீ என்னோடு விளையாடுவது போல் தான் அவனோடும் விளையாடுவாய். அதனால் அவன் அப்படிச் செய்கிறான்.”

“சரி அம்மா. ஊறுகாய்க் கதையை விட்டு விடு. சுரேஷைப் பற்றி நீ கேட்டாயல்லவா? சுரேஷ் அடுத்த வெள்ளிக்கிழமை சீமை போகிறான். அவனை அனுப்பியதும் உடனே யாழ்ப்பாணம் வருவேன். அம்மாவைப் பார்த்து இரண்டு மாதத்துக்கு மேலாகிறது. பார்க்க ஆசையாயிருக்கிறது/”

“அப்பாவும் உன்னைக் காணாமல் கவலையாயிருக்கிறார். உடம்பு சரியில்லாததால் அவர் முன்னர் போல் அடிக்கடி கொழும்புக்கு வர விரும்பவில்லை. இன்னும் அவர் வருவதென்றால் நானுமல்லவா வர வேண்டும்? இங்கு வீட்டைப் பார்ப்பதார்? அப்படியானால் நீ இங்கு சனிக்கிழமை வந்து விடுவாய். அப்படித்தானே!”

“அப்படித்தான்”

“சரி அப்படியானால் அப்பாவிடமும் நீ வருவதாகச் சொல்லி விடுகிறேன், ஸ்ரீதர்.”

“ம் – வேறென்ன விஷயம்?”

“ஒன்றுமில்லை. உன்னை உடனே வரச் சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் டெலிபொன் பண்ணினேன். ஊறுகாயை நாளைக்கே ரெயிலில் அனுப்பி வைக்கிறேன்.”

“வேண்டாம் அம்மா. இன்னும் ஐந்தாறு நாள் தானே கொழும்பில் இருக்கப் போகிறேன்.’

“அதனால் என்ன? நீ கடை ஊறுகாயைச் சாப்பிடக் கூடாது. உடனே அதை விட்டு விடச் சொல்லு.

ஸ்ரீதர் அதன் பின் பேச்சை வேறொரு முக்கிய விஷயத்துக்கு மாற்றினான்.

“அம்மா ஒரு விஷயம்.”

“என்ன அது?”

“நீயும் சரி. அப்பாவும் சரி என்னுடைய நாடகத்தைப் பார்க்கக் கொழும்புக்கு வர வில்லையல்லவா?”

“ஆமாம். உனக்கு அது மிகவும் மனவருத்தம். அப்படித்தானே?”

“இல்லை அம்மா. அடுத்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அதே நாடகத்தைப் போடுவதற்கு எங்கள் பேராசிரியர் ஏற்பாடு செய்திருக்கிறார். கல்லூரி நிதிக்காகப் போடுகிறோம். அங்கே வந்து பார் என்னுடைய நடிப்பை. நிச்சயமாக நீ வர வேண்டும். அப்பா வரவிட்டால் பரவாயில்லை. அவர் முன்னால் நடிக்க எனக்கு வெட்கமாயிருக்கிறது.”

“நல்ல நடிகன் நீ! வெட்கப்பட்டால் நடிக்க முடியுமா? அவருக்கும் உன் நடிப்பைப் பார்க்க ஆவல். கொழும்புக்கு உன் நாடகத்தைப் பார்க்க வராதது அப்பாவுக்கு எவ்வளவு மன வருத்தம் தெரியுமா? எத்தனையோதரம் அவர் அதனை எனக்குச் சொல்லிவிட்டார்.”

“சரி அம்மா. அப்படியானால் இரண்டு பேரும் வந்து பாருங்கள். நான் அந்த நாடகத்தில் தேபேஸ் மன்னனாக வந்து என் கண்களைக் குத்திக் கொள்வேன். பார்க்கப் பயங்கரமாயிருக்கும். நீ அழுது விடுவாய்.”

“அப்படி அழ மாட்டேன் நான். நான் என்ன குழந்தைப் பிள்ளையா?”

“சரி, இருந்து பார்ப்போமே”

தாயும் மகனும் இப்படிப் பலவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டாலும் இருவரும் தங்கள் மனதை அலைத்துக் கொண்டிருந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஸ்ரீதரின் திருமணத்தைப் பற்றிய விஷயமே அது. வேணு தன்னிடம் கூறிய தகவல்களைப் பற்றிப் பேச ஸ்ரீதர் துடித்தானென்றாலும் எப்படியோ மனதை அடக்கிக் கொண்டான். யாழ்ப்பாணம் போகும்பொது அங்கே அதைப் பேசிக் கொள்லலாம் என்பது அவனது திட்டம். பாக்கியத்தின் எண்ணமும் அதேதான். மேலும், சிவநேசரும் அதைப் பற்றிப் பேச வேண்டாமென்று அவளிடம் சொல்லியிருந்தாரல்லவா? சும்மா இருக்கிற சங்கை அவசரப்பட்டு ஊதினால், விஷயம் கெட்டுப் போய்விடலாம் என்ற அச்சம் இருவர் உள்ளத்திலும் இருந்தது. ஆகவே முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றையும் பேசினார்கள் அவர்கள்.

அன்றிரவு வானம் மப்பும் மந்தாரமாயிருந்தது. சிவநேசர் அமராவதி மாளிகையின் மேல் மாடியில் நித்திரையின்றி நடந்து கொண்டிருந்தார். அவர் மனது இலகுவில் குழம்புவதில்லை. எபோதாவது அவ்விதம் குழப்பமேற்பட்டால், மாடியிலுள்ள சேர் நமசிவாயத்தின் பெரிய படம் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் மேலும் கீழுமாக நடந்து கொண்டே சிந்திப்பது அவரது வழக்கமாகும். பல வருடங்களின் பின் அந்த மண்டபத்தில் அன்றிரவுதான் மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தார் அவர். நன்கு புகையிலை திணிக்கப்பட்ட சுங்கானை வாயிலே பிடித்துக் கொண்டு சிவநேசர் நடந்து கொண்டிருந்த காட்சியைக் கண்ட அவர் மனைவி பாக்கியம் அவர் இப்போது படுக்கை அறைக்கு வர மாட்டார் என்பதைத் தெரிந்து கொண்டு, தான் படுப்பதற்குப் போய் விட்டாள். வேலைக்கார சைமன் கதவுகளைப் பூட்டி விட்டான். எங்கும் பேரமைதி சூழ்ந்த அந்த இரவிலே மாரி காலமானதால் தாமரைத் தடாகத்திலும் நீச்சற் குளத்திலும் கிடந்த தவளைகளின் கூச்சல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

மணி பன்னிரண்டாகியும் அவர் இன்னும் நடந்து கொண்டேயிருந்தார். திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவர் போல பாட்டனார் சேர் நமசிவாயத்தின் படத்துக்கு முன்னால் சென்று அதனைப் பார்த்துக் கொண்டு நின்றார் அவர். முழு ஆள் அளவில் வர்ணங்களில் தீட்டப்பட்ட அந்தப் படத்துக்குப் பக்கத்தில் அவரது தந்தையார் கனகசபையின் பெரிய படமும் காணப்பட்டது. அதற்குச் சற்றுத் தொலைவில் ஸ்ரீதர் தீட்டிய சிவநேசர் படமிருந்தது. மூன்றையும் நன்கு பார்த்துவிட்டு அங்கு மாட்டப்பட்டிருந்த ஸ்ரீதரின் புகைப்படங்களையும் பார்த்தார் அவர். சேர் நமசிவாயம் தொடக்கம் ஸ்ரீதர் வரை எல்லோர் முகத்திலும் காணப்பட்ட தோற்ற ஒற்றுமை என்றும் போல் அப்பொழுதும் அவரைக் கவர்ந்தது.

ஸ்ரீதரின் படத்தைப் பார்த்த வண்ணம் “ஸ்ரீதர்! நீதான் எங்கள் குடும்பத்தின் குலக் கொழுந்து. நீ என்னை ஏமாற்றி விடுவாயா? கந்தப்பர் மகளை நீ கட்டாவிட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் நிச்சயம் நீ அந்தஸ்துக் குறைந்த இடத்தில் திருமணம் செய்யக் கூடாது. வேண்டுமானால் சேர் நமசிவாயத்தின் தம்பி சேர் தம்பையா செய்தது போல ஒரு வெள்ளைக்காரியைக் கட்டிக் கொள். அதைக் கூட நான் அனுமதிப்பேன். ஆனால் நிச்சயம் மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டது போன்ற பெண்ணை நீ கட்ட முடியாது” என்று ஸ்ரீதருடன் பேசுவது போல் தன்னுள் தானே பேசிக் கொண்டார் அவர்.

அதன் பின் மண்டபத்தின் இன்னொரு புறத்தில் மாட்டப்பட்டிருந்த சேர் தம்பையா தம்பதிகளின் புகைப்படத்தைப் பார்க்கச் சென்றார் அவர்.

இவ்வாறு அவர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க வானம் பிளந்தது போல் இடி முழக்கத்துடன் பெருமழை கொட்ட ஆரம்பித்தது. மின்னல் சீறியது; காற்று குமுறியது. திறந்து வைத்திருந்த ஜன்னல்கள் படார் படார் என்று மோத ஆரம்பித்தன. சைமன் படுக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தான். அவன் ஜன்னல்களை மூடிக் கொண்டிருக்க, சிவநேசர் திறந்திருந்த ஓரிரு ஜன்னல்களுக்கூடாக வெளியே மழையின் நர்த்தனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். ‘அமராவதி’ வளவின் மரங்கள் காற்றில் ஹோவென்று அலறி ஆடிய காட்சி பயங்கரமாயிருந்தது. “புயலின் ஆரம்பமா இது?” என்று பயந்து போனார் அவர்.

பாக்கியம் படுக்கையறையிலிருந்து வெளியே வந்து “வாருங்கள். ஏன் நித்திரை விழிக்கிறீர்கள்?” என்று கேட்டது, முதலில் அவருக்குக் கேட்கவில்லை. இரண்டாவது முறையும் கூப்பிட்ட பின்னர் படுக்கை அறையை நோக்கிச் சென்றார் அவர்.

15-ம் அத்தியாயம் : மழை நீராட்டு!

அடுத்த வாரம் டாக்டர் சுரேஷ் சீமைக்குப் பயணமானான். ஸ்ரீதர் அவனுக்குத் தான் வாக்களித்த பிரகாரம் விலை உயர்ந்த உடைகளைப் பரிசளித்தான். கொழும்புத் துறைமுகத்தில் அவனை வழியனுப்பப் பத்மாவுடன் அவன் போயிருந்தான். அவர்களைத் தவிர சுரேஷின் சொந்தக்காரரான வெள்ளவத்தைக் கடைகாரர், அவனது மாமனார், மற்றும் நண்பர்கள் பலரும் துறைமுகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் அவனை வாழ்த்தி வழியனுப்பினார்கள். ஆனால் சுரேஷைப் பிரிவதற்கு மற்றவர்கள் எல்லோரிலும் பார்க்க ஸ்ரீதரே கஷ்டப்பட்டான். சுமார் ஐந்து வருடங்களாக அவனது வாழ்க்கையில் முற்றாக ஒட்டிக் கொண்டு இரவும் பகலும் கூடி வாழ்ந்த அறிவு நிறைந்த அருமை நண்பனல்லவா? ஆகவே அவனது பிரிவு ஸ்ரீதரை அப்படியே ஆட்டிவிடும் போலிருந்தது. இனித் தொட்டதற்கெல்லாம் ஆலோசனைகள் கேட்பதற்கும், மனதிலுள்ளவற்றையெல்லாம் கொட்டிப் பேசுவதற்கும் எங்கு போவது? அதை நினைத்ததும் கப்பல் புறப்படும் நேரம் வந்த போது ஸ்ரீதரின் கண்கள் கலங்கிவிட்டன. சுரேஷ் சிரித்துக் கொண்டு அவன் கலங்கிய கண்களைத் துடைத்து விட்டான். “ஸ்ரீதர்! நான் இங்கிலாந்திலிருந்து மீள இரண்டு வருடங்களாகும். அதற்கிடையில் உன்னுடைய கல்யாணம் நடந்து முடிந்து விடுமல்லவா? நான் மீண்டு வரும்பொழுது ஒரு சின்ன ஸ்ரீதர் உன் கையைப் பற்றிக் கொண்டு ஓடித் திரிவான்! நான் இலங்கை வந்ததும் முதலில் உன்னைத்தான் சந்திப்பேன். அதன் பின் எனது திருமணமும் நடைபெறும். நீ அதற்குக் கட்டாயம் வர வேண்டும். அது தவிர உனது சுகம் பற்றி எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுத மறக்காதே. நானும் உடனுக்குடன் பதில் போடுவேன்.” என்று கூறினான் சுரேஷ்.

பின்னர், பத்மாவிடம் “ஸ்ரீதரைக் கவனமாகப் பார்த்துக் கொள். நீங்கள் இருவரும் இன்பமாக வாழ வேண்டுமாறு இப்பொழுதே எனது திருமண வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.” என்றான். பத்மா நாணத்தோடு “உங்கள் அன்புக்கு எனது நன்றி” என்று பதிலளித்தாள்.

சுரேஷை வழியனுப்பி விட்டுப் பத்மாவுடன் துறைமுகத்துக்கு வெளியே வந்த ஸ்ரீதர் “பத்மா! சிறிது நேரம் கால்பேஸ் கடற்கரைக்குப் போய் விட்டு வரலாமா?” என்றாள். பத்மாவும் “ஆம்” என்று பதிலளிக்கவே கார் கால்பேஸ் மைதானத்தை நோக்கிச் சென்றது.

நேரம் இரவு எட்டு மணியாயிருந்தது. கால்பேஸ் கடற்கரையில் மின்சார விளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருந்தன. ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தார்கள். ஒரு சில காதலர்கள் இருள் மண்டிய இடங்களில் மோனத்தில் மூழ்கி ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இன்ப மோகத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். காற்றோடு போராடிக் கொண்டிருந்த பெரிய திரிகளுடன் கூடிய மண்ணென்ணெய் விளக்குகள் பொருத்திய தட்டுகளில் கடலை விற்றுக் கொண்டிருந்த கடலைக்காரர்களிடம் கடலை வாங்கி உண்டு கொண்டு இக்காதல் ஜோடிகளில் சிருங்கார சேஷ்டைகளைக் கடைக் கண்ணாற் பார்த்துக் கொண்டிருந்தனர் ஒரு சிலர். காதல் விஷயங்களில் அனுபவமில்லாத இளம் வாலிபர்கள்தான் இதில் ஈடுபட்டனர் எனபதற்கில்லை. நன்கு வழுக்கையாகிவிட்ட நடுத்தர வயதினர் பலரும் தமது பளபளக்கும் மண்டையோடுகளைத் தடவிக் கொண்டு இவற்றைக் கள்ளத் தனமாகப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரச் சுற்றுப் பயணிகள் சிலர் இலங்கையின் வெள்ளிப் பூவிட்ட கரு நீல இரவை அண்ணாந்து பார்த்து இரசித்த வண்ணம் கடலோர நடைபாதையில் சென்று கொண்டிருந்தார்கள். ஐஸ்கிறீம் வான்கள் குழல்களை முறுக்கிக் கொண்டு ஐஸ்கிறீம் விற்றுக் கொண்டிருந்தன. சிறுவர் சிறுமியர் அவற்றை மொய்த்துக் கொண்டு அட்டகாசம் செய்தார்கள். எத்தகைய கஷ்டங்களுக்கிடையேயும் வாழ்க்கை வாழத் தக்கது என்ற நம்பிக்கை மனிதனின் இதயத்தில் எவ்வளவு தூரம் ஊறியிருக்கிறது என்பதற்கு இக் கடற்கரைக் காட்சிகள் சான்று பகர்ந்தன. இருந்தாலும், கடற்கரைக்கு வந்திருந்த எல்லோருமே இன்பப் பொழுது போக்குகளிலேயே ஈடுபட்டிருந்தனர் என்பதற்கில்லை. நீலக் கடலின் பூப்பொன்ற வெள்ளலைகளில் ஏறி வந்த குளிர் காற்று உடலைத் தழுவ, தம் எதிர்காலத்துக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தவர்களும், நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு முடிவு காண முயன்று கொண்டிருந்தவர்களும் பலர் துன்பத்தால் அலைந்து தனித்த மனதிற்கு அமைதியைக் கொணர்வதற்கு “இராம ஜெயம்” என்றும் ” நமசிவாய” என்றும் மந்திரங்கள் சொல்லி மனதை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள் சிலர். வேறு சிலர் தேகாப்பியாசம் செய்தார்கள். சிலர் பிராணாயாமம் செய்தார்கள். முஸ்லிம்கள் சிலர் மெக்காவை நோக்கி வணக்கம் செலுத்தினார்கள். இன்னும் சிலர் புல்லிலே படுத்துக் கொண்டு வானத்தின் அழகை வியந்துக் கொண்டிருக்க, வேறு சிலர் கண்களை மூடிக் காட்சிப் புலனை வெட்டி விட்டு, கால்பேஸ் கடல் எவருடனோ “உஸ்” என்று பேசிய இரகசிய வார்த்தைகளைத் தாமும் மெல்லச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒலிகளுக்கெல்லாம் மூல ஒலி என்று சொல்லப்படும் ஓங்கார நாதம் இது தானோ என்ற எண்ணத்துடன் இயற்கையன்னையின் நாப் போல இரவு பகலாகத் தூங்காது ஒலித்த அலைகயோசையில் மந்திரத்தில் கட்டுண்டவர் போல மயங்கிக் கிடந்தனர் சிலர். பலர் பாட்டிசைத்தனர். கடற் காற்றில் சப்தத்தில் தம் குரல் கேட்காதென்ற துணிவில் மனதிலுள்ள ஆசா பாசங்களைப் பைத்தியகாரர் போல் சப்தமிட்டே பேசித் தீர்த்தவர்கள் சிலர். இவ்வாறு பேசியவர்களில் சிலர், நல்ல வார்த்தைகள் பேச, மற்றும் சிலர் அருவருக்கும் ஆபாச வார்த்தைகளைக் கூடப் பேசினர்.

இரவில் இருளிலே வானத்திலே கார் முகில்கள் திரண்டு கொண்டிருந்ததை இவர்களில் பலர் கவனிக்கவில்லை. ஆனால் மழை நீரால் நிறைந்த மேகப் பொதிகள் ஆகாயத்தில் கட்டவிழத் தயாராகிக் கொண்டிருந்தன.

ஸ்ரீதர் இச் சூழ் நிலைகளில் தனது காரை முடிந்த அளவில் இருள் படிந்த ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். பத்மாவோடு நெருங்கி உட்கார்ந்து கொண்டு “கண்ணே! என் கருமணியே!” என்றான் அவன். பத்மா அவன் நெஞ்சில் சாய்ந்த வண்ணமே “உங்கள் சுரேஷ் போய் விட்டார். இனி எங்கள் விஷயத்தைப் பற்றிப் பேசுவோமா?” என்று கூறிக் கொண்டே, அவனது கன்னங்களை இலேசாக முத்தமிட்டு விட்டுச் சிரித்தாள்.

ஸ்ரீதர் அவளது மென்மையான தோள்களைத் தன் கரங்களால் தடவிய வண்ணமே “பத்மா நாளை நான் வீட்டுக்குப் புறப்படுகிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எங்கள் நாடகம். அது முடிந்த பிறகு அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் பேசி முடித்துக் கொண்டு இன்பமான செய்தியுடன் இன்னும் இரு வாரங்களுக்குள் கொழும்பு வந்து விடுவேன். சரிதானே?” என்றான்.

ஸ்ரீதர் வாய் தான் அப்படிப் பேசியதே ஒழிய, உள்ளத்தில் அவனுக்குத் தன் திருமண விஷயமாகச் சிறிது அச்சம் இருக்கவே செய்தது. கந்தப்பர் மகள் அமுதா நினைவால் வந்த அச்சமே அது. அமுதாவின் நினைவு வந்ததும் பத்மாவிடம் உடனே அது பற்றிக் கூறி விடலாமா என்ற எண்ணம் அவனுக்கேற்பட்டதாயினும், அது அவளுக்கு அநாவசியமான கவலையையும் திகிலையும் தரக் கூடும் என்பதைக் கருதி, அந்த எண்ணத்தை அவன் மெள்ளக் கை விட்டான். இன்னும் அமுதா விஷயம் வெறும் சலசலப்பாக முடியுமேயல்லாமல் அதனால் பாரதூரமான விளைவுகள் வந்தே தீரும் என்ற திட்டவட்டமான எண்னமும் அவனுக்கில்லை. ஆகவே அதைப் பற்றிச் சிந்திப்பதையோ பேசுவதையோ விட்டு, பத்மாவிடம் வேறு விஷயங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

“பத்மா! யாழ்ப்பாணம் போகும் போது கல்கிசையில் நான் வரைந்த உன் படத்தையும் எடுத்துக் கொண்டு போகப் போகிறேன். அதை நான் இன்னும் பூர்த்தியாக்கவில்லை அல்லவா? யாழ்ப்பாணத்திலிருக்கும் போது அதை நான் பூர்த்தியாக்க உத்தேசித்திருக்கிறேன். அன்று நீச்சலுடையில் நீ அந்தப் படத்துக்குப் ‘போஸ்’ கொடுத்த போது, உன்னை எறும்பு கடித்ததல்லவா? அந்த எறும்புகளில் ஒன்றிரண்டு உன் காலில் ஊர்வதையும் நான் படத்தில் வரையப் போகிறேன் பார்” என்று சிரித்தான் ஸ்ரீதர்.

பத்மா பதிலுக்கு “உங்கள் படம் மிகப் பெரியது. எறும்பு மிகச் சிறியது. ஆகவே அதை நீங்கள் வரைந்தாலும் அது பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியப் போவதில்லை.” என்றாள்.

ஸ்ரீதர் சிறிது யோசித்து விட்டு, ” நீ சொல்வது உண்மைதான். ஆனால் எனக்கு வேறொரு யோசனை வருகிறது. ஒரு நண்டு உன் தொடையில் ஏறுவது போல் எழுதி விடப் போகிறேன். பார்ப்பதற்கு மிக வேடிக்கையாயிருக்கும்! படத்துக்கு ” நண்டும் நங்கையும்” என்று பேரும் போட்டு விடப் போகிறேன். எறும்பைப் போலன்றி வர்ணங்களில் எழுதப்படும் பல கால்களையுடைய நண்டு மிக விழிப்பாகத் தெரியுமல்லவா? அது உன் காலுக்கு ஓர் அணிகலன் போல் விளங்கும்” என்றான்.

பத்மா சிரித்துவிட்டு, “ஆனால் படத்தில் அந்த நண்டை விட ஒரு கழுகின் படத்தையும் நீங்கள் வரைய வேண்டும்.” என்றாள்.

“கழுகா? இது என்ன புதுக் குழப்பம்?” என்றான் ஸ்ரீதர். ஓரிரு மாதங்களின் முன்னர் வெளியாகிச் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த ஒரு சினிமா படத்தில் அடிக்கடி உபயோகிக்கப்பட்ட “புதுக் குழப்பம்” என்ற சொற்றொடர் ஊரெல்லாம் பரவியிருந்ததாலேயே ஸ்ரீதரும் அச்சொற்றொடரை உபயோகித்தான். பத்மா கழுகென்று எதைப் பற்றிக் குறிப்பிடுகிறாளென்று முதலில் ஸ்ரீதருக்குக் குழப்பமாகத் தானிருந்தது. ஆனால் அவள் சீக்கிரமே ஐயத்தைத் தீர்த்து வைத்தாள்.

“அந்தத் தலைப்பாகைக்கார அதிகாரைத் தான் நான் குறிப்பிடுகிறேன். அவர் என்னை முன்னும் பின்னும் பக்கமுமாகப் பார்த்த வார்வை அசல் கழுகுப் பார்வையேதான். ஒரு டாக்டர் கூடத் தனது நோயாளியை அவ்வாறு உற்றுப் பார்க்க மாட்டார். என்னைப் பின்னாலிருந்து பார்ப்பதைப் போல் படம் போட்டு விடுங்கள். வேண்டுமானால் அவரது வால் முளைத்த மனைவியையும் வரைந்து விடுங்கள்.”

ஸ்ரீதர் விழுந்து விழுந்து சிரித்தான். “அப்படி எல்லாம் வரையக் கூடாது. அவ்வாறு வரைந்தால் படத்தின் மதிப்பே போய் விடும். ஒரு ஹாஸ்யச் சித்திரம் போலாகிவிடும்” என்றாள்.

பத்மா “நண்டை வரைந்தாலும் அப்படித்தானே? என்றாள்.

ஸ்ரீதர் அதற்கு “இல்லை. நண்டு ஹாஸ்யத்தை உண்டாக்காது, பயங்கரத்தை உண்டாக்கும். இப் பேரழகியை நண்டு கடித்து விடுமோ என்று அச்சத்தை உண்டாக்கும்.” என்றான். பத்மாவுக்கும் அது சரி போலவே பட்டது. என்றாலும் விட்டுக் கொடுக்காமல், “சீ, நீஙகள் சொல்லுவது பிழை.” என்று கூறிக் கொண்டு மேலும் ஸ்ரீதருடன் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்.

இவ்வாறு காதலர்கள் பொழுது போக்கிக் கொண்டிருக்க, வானத்தில் திரண்டிருந்த கரு மேகங்கள் முதலில் மெல்லிய நீர்த் திவலைகளைப் பன்னீர் தெளிப்பது போல் நெளிந்து, பின்னர், பெருந் தாக்குதலைத் தொடங்கிவிட்டன. ஹோவென்று மழை கொட்ட ஆரம்பிக்க, மைதானத்து மக்கள் மந்தைகள் போல் சிதறியோட ஆரம்பிட்ததார்கள். கடலைக்காரர்கள் கடலையை மூடிக் கொண்டு கிளம்ப, ஐஸ்கிறீம் வான்களும் இதர மோட்டார் வாகனங்களும் கூட மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் மைதானமே வெறிச்சென்று விட்டது. கடலின் ஓசையும் காற்றோசையும் மழையோசையுமே எஞ்சின. மின்சாரக் கம்பங்களுக்குச் சமீபமாக ஒளிக் கதிர்களில் சிக்கிய மழைத் தாரைகள் வெள்ளி விறீசுகள் போல நிலத்தை நோக்கி விழுந்து கொண்டிருந்தன. சாம்பல் வர்ணமாயிருந்த இரவின் இருள், மேகக் குப்பாயம் கவிந்ததால் இருண்ட கரிய வெல்வெட் போன்ற கடும் இருளாகியிருந்ததால் மழைத் தாரை என்னும், வெள்ளி விறீசுகள் அங்கு வீழ்ந்து கொண்டிருந்த காட்சி, பகைப்புலத்தின் எதிர் நிலையின் காரணமாக மனதை மயக்கும் மோகனக் காட்சியாக இருந்தது.

அதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் திடீரென மைதானத்தில் மழையின் தாக்குதலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கும்போது கூட ஒருவரை ஒருவர் இறுக அணைத்த வண்ணமே போய்க் கொண்டிருந்த ஒரு காதற் ஜோடியைப் பத்மாவுக்குச் சுட்டிக் காட்டினான்.

“பார்த்தாயா அவர்களை? அதைப் பார்த்ததும் எனக்குத் திருக்குறளில் ஒரு செய்தி ஞாபகம் வருகிறது” என்றான் ஸ்ரீதர்.

“ஓகோ, சுரேஷின் வியாதி உங்களையும் தொற்றி விட்டதா? அல்லது சீமை செல்லும்போது கொழும்பில் தனது வியாதியை அவன் விட்டு விட்டுச் சென்று விட்டானா? அது எப்படி என்றாலும் பரவாயில்லை. எடுத்ததெற்கெல்லாம் மேற்கோள் காட்டுவதும், கதைகளும் சொல்வதும் குட்டிப் பிரசங்கங்கள் அடிப்பதும் அவன் வழக்கம். ஐயாவுக்கோ இது புதுக் குழப்பம். என்றாலும் பரவாயில்லை. கால்பேஸ் கடற்கரையில் மழையிலே கட்டிப் பிடித்துக் கொண்டு ஓடும் இக்காதலர்களைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்? சொல்லுங்களேன்” என்றாள்.

ஸ்ரீதர் விளக்க ஆரம்பித்தான். “காதலர் இருவர் இறுக அணைத்து கொண்டிருக்கும் போது இடையிலே காற்றுப் புகுந்தாலும் அவ்வணைப்பின் இறுக்கம் குறைந்து இன்பம் குன்றிவிடுமாம். நம் இருவருக்குமிடையே காற்றுக் கூட வரக் கூடாது என்பது காதலர் எண்ணம். அப்படிக் காற்றாலும் பிரிக்கப்படாத தழுவலன்றோ தழுவல் என்கிறார் வள்ளுவர்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைப்
போழப் படாஅ முயக்கு.

(ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதல்ர்களுக்கு இன்பளிப்பது காற்று இடயே புகுந்து ஊடறுக்காத தழுவலாகும்.)

அதோ மழையில் ஓடுகிற அத்தலைவனும் தலைவியும் அப்படிப்பட்டவர்கள் தாம். மழையால் கூடப் பிரிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேதான் ஒட்டிக் கொண்டு ஓடுகிறார்கள் அவர்கள். அவர்களை இனிப் பிரிப்பதென்றால் கத்தியால் வெட்டித்தான் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது”

“அப்படியானால் நீங்கள் ஏன் அப்படித் தள்ளியிருக்கிறீர்கள்? மழைக் குளிருக்கும் நல்லது. இன்னும் நெருங்கி உட்காருங்கள்” என்று கூறிக் கொண்டு ஸ்ரீதருடன் மேலும் நெருங்கி உட்கார்ந்தாள் பத்மா.

மைதானத்தில் இப்பொழுது யாருமே இல்லை. காரில் காற்று வாங்கியவர்கள் கூடப் போய் விட்டார்கள். ஸ்ரீதர் மட்டும் தான் பத்மாவுடன் அங்கே காரில் இன்னும் உட்கார்ந்து கொண்டிருந்தான். பத்மா பேச்சுக்குக் குளிரைப் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தாலும் உண்மையில் கார் கண்ணாடி ஜன்னல்கள் நன்கு பூட்டப்பட்டிருந்ததால் வெளியே குளிர் மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் காரின் உள்ளே மிகவும் வெதுவெதுப்பாகத்தான் இருந்தது.

மழையால் வீதிப் பார்வை மறைவதைத் தடுப்பதற்காகக் காரின் முன் கண்ணாடியை மேலும் கீழுமிறங்கித் துடைத்துக் கொண்டிருந்த மின் துடைப்பம் தங்களுடைய பேச்சுக்குத் தடையாயிருப்பதைக் கண்ட ஸ்ரீதர் அதை நிறுத்தி விட்டான். அதனால் கடலோடு சேர்ந்தொலித்த மழையின் மெத்தென்ற ஓசையை தவிர வேறு எவ்வித ஓசையுமே அங்கிருக்கவில்லை. ஆனாலும் அங்கியிருந்தாலும் காலி வீதியில் இடையிடையேனும் ஒரு கார் தனது முன் லைட்டுகளால் ஒளிக் கதிர்களைக் கொட்டி இருளைப் பிளந்து சென்று கொண்டிருந்தது.

பத்மா சிறிது நேரம் ஒன்றும் பேசாதிருந்துவிட்டு, “மழை கொட்டுகிறது. நேரமும் போய்க் கொண்டிருக்கிறது. வீட்டுக்குப் போவோமா?” என்றாள். ஸ்ரீதர் “மழை கடுமையாகக் கொட்டுவது எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா? மைதானத்தில் யாருமில்லை. நாங்கள் புல்லில் போயுட்கார்ந்து மழையை அனுபவிப்போமா? என்றான். பத்மா “உங்களுக்கென்ன பைத்தியமா? யாராவது அப்படிச் செய்வதுண்டா?” என்று கேட்டாள்.

ஸ்ரீதர் “எனக்குச் சின்ன வயதிலிருந்தே மழையில் கும்மாளம் போட ஆசை. எங்களூரில் இருந்த ஏழைச் சிறுவர்கள் மழை காலத்தில் வாய்க்கால்களிலும் வெள்ளத்திலும் குதித்துக் குதித்துக் கும்மாளமடிப்பார்கள். எனக்கும் அவர்க்ளோடு சேர்ந்து சேறில் புரண்டு குதூகலிக்க ஆசை. ஆனால் அப்பா விட மாட்டார். பணக்காரப் பிள்ளை ஏழைகளோடு சேர முடியுமா? இன்னும் சேறில் விளையாடுவது அசுத்தமான பழக்கமென்றும் அப்பா கூறிவிட்டார். ஆகவே அது நிறைவேறாத ஓர் ஆசையாக இன்றும் என் மனதில் மூலையில் இருந்து வருகிறது. கடந்த வாரங் கூட கும்பனித் தெருப் பகுதியில் ஏழைச் சிறுவர் சிலர் மழையில் குதித்து விளையாடுவதைப் பார்த்தேன். எனக்கு மட்டும் அப்படி விளையாடக் கொடுத்து வைக்க வில்லையே என்று நான் கவலைப்பட்டேன் பத்மா! நீயும் என்னோடு சேர்ந்து கொள்வதாயிருந்தால் இப்பொழுது இம்மழையில் நாம் ஆசை தீர விளையாடலாமல்லவா?” என்றான் ஸ்ரீதர்.

தண்ணீரில் விளையாட அழைத்த ஸ்ரீதரின் ஆலோசனை பத்மாவுக்கும் பிடிக்கவே செய்தது. ஆனால் சேலை சட்டை பழுதாகிவிடுமே என்ற எண்னத்தினால் முதலில் மழையில் விளையாட அவள் மறுத்தாள். “சேலையைப் பற்றிக் கவலைப்படாதே. ‘கிஷ்கிந்தா’வில் அம்மாவின் நல்ல சேலைகள் சில இருக்கின்றன. இங்கிருந்த நேரே அங்கு போய் அந்தச் சேலையிலொன்றை அணிந்து கொண்டு நீ வீடு போய் விடலாம்.” என்றான் ஸ்ரீதர். அவ்வாறு சொல்லிக் கொண்டே ஸ்ரீதர் கார்க் கதவைத் திறந்து வெளியே இறங்கி விட்டான். பத்மாவும் வெளியே குதித்தாள்.

வெதுவெதுப்பான சூழ் நிலையிலிருந்து கொட்டும் மழைக்கு வந்ததும் பத்மாவுக்கு குளிரினால் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஆனல் சில விநாடிகளில் அது குறைந்து போய் விட்டது. ஒரு வித உயிர்த்துடிப்பு அங்கங்களெல்லாம் பரவ, இருவரும் கொட்டும் மழையில் இறங்கிப் புல் தரையில் ஓடினார்கள். பெரியவர்களாகி விட்டவர்களுக்குக் கூடக் குழந்தைகள் போல் நடப்பதில் எவ்வளவு ஆசை. சமுதாய வழக்கங்களும், மற்றவர்கள் பரிகசிப்பார்கள் என்ற எண்ணமுமே பலரை அவ்வாறு செய்யமல் தடுக்கின்றன. ஸ்ரீதர் – பத்மாவைப் பொறுத்த வரையில் இன்னும் அவர்களைப் பெரியவர்கள் என்றும் சொல்ல முடியாதல்லவா? விளையாட்டுக்களில் ஆசையுள்ள வாலிபக் காதலர்களான அவர்கள் ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்தார்கள். சிரித்தார்கள். பத்மா கீச்சிட்டாள். யாருக்கும் தங்கள் சப்தம் கேட்காதென்பதும் தாங்கள் புரியும் அட்டகாசங்கள் தெரியாதென்பதும் அவர்களை அவர்கள் மனதின் இச்சைக்கு ஏற்றவாறு ஓடவும் ஆடவும் கூச்சலிடவும் செய்தன. இரு சிறு பூனைக்குட்டிகளோ, நாய்க் குட்டிகளோ சேர்ந்து விளையாடுவது போல் தம்மை மறந்து மழை நீராடினார்கள் அவர்கள். கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு மனிதனே காணப்படாததால் அவர்கள் இம்முழு உலகமுமே தம்முடையது என்று எண்ணியவர்கள் போல் இறுமாந்து குதித்தார்கள். சிறிது துரம் சென்றதும் ஸ்ரீதர் நிலத்தில் உட்கார்ந்தான். பத்மாவும் உட்கார்ந்தாள். இருவரும் புல்லிலே சாய்ந்து படுத்தார்கள். உடம்பும் உடையும் சேறாகச் சேறாக ஒருவித இன்ப வெறி தலைக்கேறியது. ஸ்ரீதருக்குத்தான் சின்ன வயதில் கண்ட தனது கிராமத்து வாய்க்கால்களில் குதித்துக் குதித்துக் கூத்தாடிய சிறுவர்களின் நினைவு வந்தது. குழந்தைப் பருவ ஆசை இன்றுதான் இரவின் இருட்டிலே கொழும்பில் தன் கிராமத்துக்கு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் நிறைவேறிக் கொண்டிருந்தது. நிறைவேறாத ஆசைகளே மனக் கிலேசங்கங்ளுக்கும், ஏன் சில சமயங்களில் மனக் கோளாறுக்கும் கூடக் காரணம் என்று உளவியலாளர் கூறுவார்கள். அதனால் தான் போலும் ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் சின்ன வயதில் இப்பெரிய ஆசையின் நிறைவேற்றம் மனதிற்கு ஒருவித சாந்தி நிலையைக் கொண்டு வந்திருந்தது. அதில் இலயித்துச் சிறிது நேரம் புல்லில் எவ்வித ஆட்டமும் அசைவுமின்றி பத்மாவை அணைத்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவன்.

பத்மாவுக்கு ஏற்பட்ட அனுபவமோ இது போன்றதல்ல. அவளுக்கு மழையில் ஆடியதும், சேற்றில் புரண்டதும் நிறைவேறாத ஆசைகளின் நிறைவேற்றமல்ல; அதனால் பிறந்தது ஸ்ரீதருக்கு ஏற்பட்டது போன்ற மனச்சாந்தியுமல்ல. இவை எல்லாம் ஒரு வகைக் காதல் லீலைகள் போலவே அவளுக்குத் தோன்றின. சினிமாக்களில் காதலர் தண்ணீரில் கும்மாளமடிக்கும் காட்சிகளை அவள் கண்டிருக்கிறாள். அவைதான் அப்பொழுது அவளுக்கு நினைவு வந்து கொண்டிருந்தன. இப்படிப்பட்ட காட்சிகளைச் சினிமாக்களில் சினிமா மண்டபத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட அவளது உடலுணர்ச்சிகள் ஓரளவு தூண்டப்படுவது வழக்கம். இன்றோ அவை அதிகமாகத் தூண்டப்பட்டிருந்தன. அவள் மனதில் ஒரு புயல் தோன்றியிருந்தது. ஸ்ரீதரையும் அப்புயலில் மாட்டிவிட நினைத்தாள் அவள். ஆனால் ஸ்ரீதரோ அதில் அற்ப ஈடுபாடு கூடக் காட்டவில்லை. அவன் உலகு வேறாக இருந்தது.

ஆனால் பத்மாவுக்கோ உலகே மறந்து போயிருந்தது. தந்தையார் நினைவும் மறந்து போயிற்று. சமுதாயக் கட்டுப்பாடுகளும் மறந்து போயின. எங்கோ ஓரிடத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தது அவள் மனம். ஸ்ரீதரும் அதே இடத்தை நோக்கி வர மாட்டானா என்று ஏங்கியது நெஞ்சம். கவிஞரும் கதாசிரியரும் வர்ணித்த அந்த உலகுள் விரைந்து இப்பொழுதே புக வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஓர் ஆணும் பெண்ணும் சிநேகிப்பது அதற்காகத்தானே என்று கூட எண்ணினாள் அவள். சகுந்தலையை வனத்தில் சந்தித்து, துஷ்யந்தன் எவ்வளவு விரைவாகவும் இலகுவாகவும் அவளை அவ்வுலகுக்கு அழைத்துச் சென்று விட்டான். அவனது ஆண்மையல்லவோ ஆண்மை என்று கூட நினைத்தாள் அவள். ஆனால் துஷயந்தனின் அந்த அவசர ஆண்மையால் சகுந்தலை பின்னல் பட்ட துன்பமும் துயரும் கொட்டிய கண்ணீரும் அடைந்த இன்னல்களும் அவளுக்கு ஞாபகம் வரவில்லை. கணநேர இன்பத்துக்கு யுகத்தையே பரிசளிக்கும் நிலையில் அவள் இருந்தாள். இன்னும் “ஸ்ரீதர் என்னைத் திருமணம் செய்யப் போவது நிசமென்றால் – இவற்றில் எல்லாம் இனிக் கட்டுப்பாடு என்ற பெயரில் எம் மனதோடு நாமே போராடிக் கொண்டிருப்பது ஏன்? களவொழுக்கம் என்று முன்னோர் சொன்ன பிரகாரம் நடந்துகொள்ள வேண்டியதுதானே?” என்று சிந்தித்த அவள் பெண்மைக்கு இயற்கையாயிருக்கும் நாணத்தால் மட்டுமே தன் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறாதிருந்தாள். இன்னும் வெளிப்படையான செயலாலோ சொல்லாலோ ஒரு பெண் தன் உள்ளத்தின் இத்தகைய அந்தரங்க ஆசைகளை ஓர் ஆணிடம் வெளியிட்டால், அவ்வாண் கூட அவளை மதிக்க மாட்டான் என்பது அவள் அறியாததல்ல. இவ்விவகாரங்களில் ஆணே முன் கை எடுக்க வேண்டுமென்ற உலக நியதியே அவள் செயல்களை அன்று கட்டுப்படுத்தின. உண்மையில் ஸ்ரீதர் போக்கு அவளுக்கு அடியோடு பிடிக்கவில்லை. என்றாலும் அவளால் என்ன செய்ய முடியும்? அவள் இதுவரை அடுத்த வீட்டு அன்னம்மா அக்காவிடமிருந்தும், கெட்டுப்போன குசுமாவிடமிருந்தும் ஆண்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்த விவரங்களின் படி அவர்கள் பெரிய அவசரக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்புவது தான் கஷ்டமென்று நினத்திருந்தாள். உண்மையும் அதுவாகத்தானிருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீதரோ எவ்வளவு வேடிக்கையாகப் பேசினாலும் என்னதான் தன்னோடு உராய்ந்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் ஓர் எல்லைக்கு அப்பால் போகாதவனாக அல்லவா இருக்கிறான்? – இது பத்மாவுக்குப் பெரியதோர் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் ஒரு பெண் நினைத்தால், ஆணைக் கொண்டு எதையுமே செய்வித்து விடலாம். ஆனால் அதற்கு அப்பெண் தன் பெண்மையின் கர்வத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். பத்மாவோ அதற்குத் தயாராகவில்லை. ஆகவே ஸ்ரீதரிடம் சலிப்போடு “போதும் மழை விளையாட்டு. குளிரும் அதிகமாயிருக்கிறது. தடிமன் பிடித்தாலும் பிடித்து விடும். போவோமா?” என்றாள்.

இவ்வாறு அவள் சொல்வதற்கும் வானம் மின்னச் சிரிப்பொன்று சிரிப்பதற்கும் சரியாயிருந்தது. மின்னைலைத் தொடர்ந்து இடி நகை கேட்டது. காற்றும் கடுமையாக வீச ஆரம்பித்தது. ஆம், இயற்கை புயற் கோலம் காட்டத் தொடங்கியது. மழையும் அடித்தோங்கிப் பொழிய ஆரம்பித்தது. ஸ்ரீதரும் எழுந்தான். “சரி போவோம்.” என்று காரை நோக்கி நடந்தான். திருப்தியற்ற உள்ளத்தோடு அவனைப் பின் தொடர்ந்தாள் பத்மா.

ஸ்ரீதர் பத்மாவை கொலீஜ் ரோட்டில் கொண்டு போய் விட்ட பொழுது, இரவு 9 மணியாகி விட்டது. “கிஷ்கிந்தா’விலிருந்து அன்னை பாக்கியத்தின் அழகான பெங்களூர்ச் சேலையொன்றைப் பத்மாவுக்கு அணியக் கொடுத்திருந்தான். இருவரும் மழையில் நீராடி வந்திருந்தமை அவர்களுக்கு ஒரு பரிசுத்தமான அழகுத் தோற்றத்தைக் கொடுத்தது. பத்மாவின் தந்தை பரமானந்தர் ஸ்ரீதரை வீட்டுள் வரச் செய்து சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் “ஈடிப்பஸ் நாடகத்தைத்தான் அடுத்த வாரம் இரண்டாம் முறையும். அரங்கேற்றம் செய்யவிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டான் ஸ்ரீதர். அனுபவஸ்தரான பரமானந்தர் நாடகத்தை முன்னிலும் பார்க்கச் சிறப்பாக அரங்கேற்றம் செய்வதற்கேற்ற சில நல்ல ஆலோசனைகளைக் கூறினார்.

அங்கிருந்து அவன் வீட்டுக்குக் கிளம்பும் போது பத்து மணியாகிவிட்டது. ஸ்ரீதர் பரமானந்தரிடம் “நான் யாழ்ப்பாணத்திலிருந்து வரும்போது கல்யாணத்துக்கு நாள் குறித்துக் கொண்டு தான் வருவேன். கல்யாணத்துக்கு முன் நீங்கள் அப்பாவைக் கண்டு பேசுவதற்கும் ஏற்பாடு செய்வேன்.” என்று கூறினான். பரமானந்தர் “எல்லாம் சுபமாக நடக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இதற்கிடையில் கூரையில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு பல்லி ‘டிக் டிக்’ என்று ஓசை கிளப்பியது. “பல்லி சொல்லுகிறது” என்றான் ஸ்ரீதர். “உனக்கு பல்லி சொல்வதில் நம்பிக்கை உண்டா?” என்றார் பரமானந்தர். “ஆம்” என்றான் ஸ்ரீதர். பரமானந்தர் தன்னிடமிருந்த ஒரு பழைய பஞ்சாங்கத்தை எடுத்துத் தமது மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தார். “சுப செய்தி -வெற்றி நிச்சயம்” என்று மகிழ்ச்சியோடு கூறினார் அவர்.

ஸ்ரீதர் சந்தோஷத்தோடு புறப்பட்டாள். பத்மா வாசலுக்கு வந்து தனது கையை உயர்த்தி வளைக்கரம் குலுங்க “செரியோ” கூறினாள்.

ஸ்ரீதர் கண்ணுக்கு மறைந்ததும் பரமானந்தர் பத்மாவை நோக்கி “இன்று கமலநாதன் வந்திருந்தான். அவர்கள் விளையாட்டுச் சங்கத்தின் ஆண்டு விழா இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெறுகிறதென்று கூறி, ஓர் அழைப்புக் கடிதத்தையும் உனக்குக் கொடுத்து விட்டுப் போனான். உள்ளே மேசையில் வைத்திருக்கிறேன். எடுத்துப் பார்” என்றார்.

பத்மா அறையுள் சென்று கடிதத்தை எடுத்த பொழுது, “இன்று கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதருக்குக் கிடைத்த வாய்ப்பு போல் கமலநாதனுக்குக் கிடைத்திருக்குமானால் அவன் எவ்வாறு நடந்திருப்பான்? மீசைக்காரனான அவன் ஆண்மையுடன் நடந்திருக்கலாமல்லவா?” என்ற எண்ணம் தன்னை அறியாமலே அவளுக்கேற்பட்டது.

“ஆனால் அதை எப்படிச் சொல்ல முடியும்? அங்கே வாய்ப்பை அளித்தல்லவோ பார்க்க வேண்டும்?” என்ற பதிலும் உடனடியாகவே அவள் மனதில் எழுந்தது.

அன்றிரவு பத்மா நீண்ட நேரம் நித்திரை கொள்ளவில்லை. கட்டிலிலே வெறுமனே புரண்டு கொண்டிருந்தாள் அவள். யெளவனத்தின் துடிதுடிப்பு அவள் நெஞ்சையும் உடலையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. காதலென்பது உள்ளத்தின் உணர்ச்சி மட்டுமல்ல. உடலுணர்ச்சியும்தானே?” என்று தனக்குத் தானே வினவிக் கொண்டவள் தன் உடம்பெல்லாம் ஒரு நெருப்புப் பாவி வருவது போன்று உணர்ச்சியைப் பெற்றாள். “இதைத் தான் பண்டைக்காலத்துப் புலவர்கள் விரக தாபம் என்று வர்ணித்தார்கள் போலும்” என்றும் நினைத்துக் கொண்டாள் அவள்.

நித்திரையின்றி படுக்கையில் புரண்ட அவள் ஜன்னலூடாக வானைப் பார்த்த போது, பாதி மதி ஒன்று அங்கே தன்னையே நட்சத்திரப் பரிவாரங்களுடன் உற்றுப் பார்த்துக் கொண்டு நிறபது தெரிந்தது. “நட்சத்திரங்கள் எனபன விரக தாபத்தால் வானத்தேவியின் உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள்’ என்று தான் எங்கோ ஒரு பழைய கவிதை படித்தது அவளுக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. ஆம். நளவெண்பாவில் புகழேந்தி பாடிய பாட்டில் அப்படி வருகிறது – என்ற நினைவு கூர்ந்த அவள், தனது உடலிலும் அப்படிக் கொப்புளங்கள் குமிழியிட்டிருக்கின்றனவா என்று தடவிப் பார்த்தாள். “இல்லை, கவியின் கற்பனை நடைமுறைக்கு ஒத்து வராது. என்றாலும் என்னுடலில் அனல் வீசுவது மட்டும் என்னவோ உண்மைதான்” என்ற எண்ணிய அவள் மனதிலே கமலநாதன் மீண்டும் மீண்டும் காட்சியளித்தான்.

வீடு சென்ற ஸ்ரீதருக்கோ இவ்வித அனுபவங்கள் ஏற்படவில்லை. சேற்றில் விளையாடியதால் ஏற்பட்ட ஆயாசத்துடன் சுப்பையா தயாரித்திருந்த சாப்பாட்டை ஊறுகாயுடன் இரசித்துச் சாப்பிட்ட அவனுக்கு நல்ல நித்திரை கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. படுக்கையில் படுத்து ஒரு வார சஞ்சிகையை எடுத்து இரண்டு மூன்று பக்கங்களைத் தட்டியதும், துயில் அவன் கண்களைத் தழுவிக் கொண்டது.

இப்படிப்பட்ட நேரங்களில் வழக்கத்தில் அவன் நண்பன் சுரேஷ் ‘லைட்’டை நிறுத்துவான். அன்று சுரேஷில்லாததால், வேலைக்காரச் சுப்பையா ‘லைட்’டை நிறுத்தினான். சுரேஷோ நடுக் கடலில் ஸ்ரீதர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பானோ என்ற சிந்தனையில் இலயித்திருந்தான்.

– தொடரும்…

– இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ தொடராக வெளிவந்த நாவலிது. 

– மனக்கண் (தொடர் நாவல்), தினகரனில் வெளிவந்தது.

அ.ந.கந்தசாமி (8 ஆகத்து 1924 – 14 பெப்ரவரி 1968) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார்.சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டு இயங்கினார். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். ​​​​பதிவுகள்.காம் அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *