கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 2,181 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4-ம் அத்தியாயம்: தங்கமணி

“வழமையான இடம்” என்று கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடம் பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சமீபமாக அமைந்திருந்த ஒரு நடை சாலையாகும். உயர்ந்து, தூண்களுடனும் சிமெந்துத் தரையுடனும் விளங்கிய அந்நடைசாலை மாணவர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பான இடமாயிருந்தது. அந்நடைசாலையின் ஒரு புறத்தில் மேல் வீட்டுக்குச் செல்லும் அகலமான படிக்கட்டுக்கு அருகாமையில் இரண்டு தூண்களுக்கு இடையிலிருந்த இடைவெளியே பத்மாவும் ஸ்ரீதரும் சந்திக்கும் “வழமையான இடம்.” இந்த இடத்தைத் தெரிந்தெடுத்துப் பழக்கப்படுத்தியதில் ஸ்ரீதரைவிட பத்மாவுக்கே முக்கிய பங்குண்டு. எவரும் அதிகம் சந்தேகிக்காதபடி “ஏதோ தற்செயலாகச் சந்தித்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று எண்ணக்கூடிய முறையில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதற்கு இது போன்ற நல்ல இடம் கிடையாதென்பதே பத்மாவின் எண்ணம். ஒரு நாள் இக் கருத்தைப் பத்மா கூற, ஸ்ரீதரும் அறை ஏற்றுக் கொண்டு விட்டதால், அதுவே இப்பொழுது ஸ்ரீதரின் எண்ணமுமாகிவிட்டது. பார்க்கப் போனால், நல்ல விஷயத்தைக் கூட இருளில் மூலையில் தனித்திருந்து பேசினால் காண்பவர்களுக்குச் சந்தேகமேற்படுகிறது. ஆனால் அதே விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் – சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் – காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!

பத்மாவைக் காண்பதற்காக “வழமையான இடத்”தை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீதரின் உள்ளத்தில் அன்று, எதிரும் புதிருமாக இரு குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவன் காதலர்கள் செய்யும் “களவை” விடச் சிறிது அதிகமாகவே “களவு” செய்திருந்தான். பொதுவாகக் காதலர்கள் தங்கள் காதலைப் பற்றி வெளியாருக்குத்தான் பொய்யுரைப்பது வழக்கம். அதாவது தாய் தந்தையர் ஊரார் உறவினருக்குத் தான், உதாரணமாக, “மகளே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்ட தாய்க்கு “நான் கட்டிய மணல் வீட்டை கடல் அலைகள் அழித்துவிட்டன. அதுவே என் துக்கம்!” என்றாளாம் காதலன் பிரிவால் மனம் வாடிய மகள். ஆனால் ஸ்ரீதர் செய்த “களவோ” இப்படிப்பட்டதல்ல. தனது காதலி பத்மாவுக்கே அதாவது களவின் கூட்டாளிக்கே, அவன் பொய்யுரைத்து விட்டான். இந்தச் சிக்கலிலிருந்து இப்பொழுது எப்படித் தப்புவது? “நான் யார்?” என்பதைப் பத்மாவுக்கு இன்றே கூறிவிடுவோமா? நான் வாத்தியார் மகனல்ல, சிவநேசரின் மகன் என்பதை அவளுக்குச் சொல்லிவிடுவோமா?” என்று கேட்டது ஒரு குரல். “வேண்டாம். இன்னும் சில நாள் செல்லட்டும். ஆறுதலாகச் சொல்வோமே!” என்றது மறு குரல். “ஏன் அதைப் பின் போடவேண்டும்? என்றோ ஒரு நாள் சொல்ல வேண்டியதுதானே? ஆகவே அதை இன்றே சொல்லி விட்டாலென்ன?” என்று முதற் குரல் அதற்குப் பதிலளித்தது. “ஏன் அவ்வளவு அவசரம்? நிலைமையை நன்கு பரிசீலித்து ஆறுதலாகச் சொன்னாலென்ன? முள்ளிலே போட்ட சால்வையை மெல்ல மெல்லத் தான் எடுக்க வேண்டுமென்பார்கள். பத்மாவுடன் எனக்கேற்பட்டுள்ள காதல் தொடர்பு என்னும் சால்வை எனது பொய்கள் என்னும் முள் தைத்துக் கிடக்கிறது. அவற்றைப் பிரித்தெடுப்பதை மிகவும் சாவதானமாகத்தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நம்முடைய காதலில் கிழிசல்ஏற்பட்டுவிடலாமல்லவா” என்றது இரண்டாம் குரல்.

இவ்விரு குரல்களின் மோதலுக்கு முன்னால் ஸ்ரீதரால் அவ்வித முடிவுக்கும் வர முடியவில்லை . சிந்திக்கச் சிந்திக்க மூளை குழம்பியதேயல்லாமல், முடிவெதுவும் தோன்றுவதாயில்லை. ஆகவே “சரிதான், அப்புறம் பார்த்துக்கொள்வோம்” என்று விஷயத்தைச் சலிப்போடு ஒத்தி போட்டான் அவன். இவ்வுலகில் சிக்கலான விஷயங்கள் தம் முன்னே எதிர்ப்படும்பொழுது அவற்றை நேர காலத்திலேயே ஆராய்ந்து முடிவுக்கு வருபவர்கள் பத்துப் பேரென்றால், அவை தாமாகவே தீரட்டும் என்று விட்டு விடுபவர்கள் நூறு பேருக்கும் அதிகமென்றே சொல்ல வேண்டும். ஸ்ரீதர் இந்த நூறு பேருக்கு அதிகமான குழுவைச் சேர்ந்தவன் தான்.

பத்மாவின் மனதிலோ இவ்வித கவலைகள் எதுவுமே இருக்கவில்லை. அவள் உள்ளம் சிட்டுக் குருவி போல் வெட்ட வெளியில் பறந்து கொண்டிருந்தது. “நானே அதிர்ஷ்டசாலி. என் அழகுக் காதலனை மண முடிக்கலாமென்று தந்தையே கூறிவிட்டார். இனி எனக்கென்ன குறை? அவரைக் கைப்பிடித்துக் கொண்டு அகிலமெல்லாம் சுற்றி வருவேன், ஆடுவேன். பாடுவேன். ஒரு போதும் பிரிய விடேன். என் ராஜா எனக்குக் கிடைத்துவிட்டான். இனி நான் அவனை விடுவேனோ?” என்றவாறு சிந்தித்துக் கொண்டே “வழமையான இடத்துக்குப் புள்ளிமான் போல் துள்ளித் துள்ளி வந்த அவள் தன்னையறியாமலே வாய்விட்டுச் சிரித்தும் கொண்டாள். சிரிக்கச் சிரிக்க இன்பமாய் இருந்தது. யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதைக் கவனித்துக் கொண்டு தன் மனம் பூரண திருப்தி பெறும் வரை மீண்டும் மீண்டும் சிரித்தாள். ஆனால் துள்ளும் கால்களை மட்டும் பார்த்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மெல்ல அடக்கிக் கொண்டாள்.

“வழமையான இடத்”தில் பத்மாவும் ஸ்ரீதரும் எதிர்ப்பட்டபொழுது, ஸ்ரீதரின் முகத்தையும் கண்களையும் ஆவலுடன் பார்த்தாள் பத்மா. மெளன மொழியில் அவள் உள்ளம் அவனுடன் பேசியது.

“திருப்திதானே!” என்றன அவள் நயனங்கள்.

“ஆம் திருப்திதான்” என்று பதிலளித்தன அவன் கண்கள்.

நான்கு கண்களை வாயாக்கி இரண்டு உள்ளங்கள் அங்கு பேசிக்கொண்டன.

இந் நிலையால் ஏற்பட்ட போதையை ஒரு கண மெளனத்துக்கு மேல் தாங்க முடியாது போலிருந்தது பத்மாவுக்கு. அதனை மெளனமாக மேலும் மேலும் அனுபவித்துக்கொண்டு நிற்க அவளுக்கு ஆசைதான். ஆனால் வாழ்க்கையை அவ்வாறு ஒரே போதி மயமாக்கிவிட முடியுமா என்ன? எனவே அந்தரத்திலிருந்து கீழே வர நினைத்த பத்மா “பார், அவருடைய ஆனந்தத்தை!” என்றாள் கேலியாக.

ஸ்ரீதர் பதிலுக்குப் புன்னகை செய்தான். என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. வெறுமனே “பத்மா, வா ஐஸ்கிறீம் சாப்பிடுவோமா?” என்றான். பத்மாவுக்கு ஒரே மகிழ்ச்சி. “ஆம்” என்று புறப்பட்டாள். தந்தையே அங்கீகரித்துவிட்ட காதலனுடன் எங்கு போவதற்கும் எதற்கு அஞ்ச வேண்டும்?

பல்கலைக் கழகத்துக்கு முன்னாலிருந்த மரமடர்ந்த சாலைக்குச் சென்றார்கள் இருவரும். வீதியின் இருமருங்கும் செழித்து வளர்ந்திருந்த மரங்கள் வீதிக்கு இலைக் கூரையிட்டிருந்தன. பச்சப் பசேலென்ற அவ்விலை முகட்டின் இடைவெளிகளுக்கூடாக கதிரவனின் வெங்கதிர்கள் ஒளிக் கோலமிட்டிருந்தாலும் வெப்பம் உடலைத் தாக்கவில்லை. இயற்கையின் பவளக் கட்டுப்பாட்டு (ஏயர் கண்டிஷன்) அமைப்புப் போல் அமைந்திருந்த மர நிழல் வீதியைக் குளு குளு என்று வைத்திருந்தது. குளிர்ந்த உள்ளத்துடன் காதலர்கள் அங்கு நடந்து சென்றார்கள். ஸ்ரீதருக்கு அப்போது ஏற்பட்டிருந்த மன நிறைவில் பத்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு நடக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் யாராவது பார்த்து விட்டால் என்ற அச்சம் அவளை அவ்வாறு செய்யாது தடுத்தது.

“பத்மா! உனது அப்பாவை எப்படி இந்த விஷயத்தைப் பேசும்படி செய்தாய்?” என்று கேட்டான் ஸ்ரீதர்.

“நீங்கள் இனிமேல் அப்பாவை “உனது அப்பா உனது அப்பா” என்று சொல்லக் கூடாது. மாமா என்று சொன்னால் என்னவாம்? வாய் புளித்து விடுமோ?” என்றாள் பத்மா பொய்க் கோபத்துடன்.

“எனக்கு அப்படிச் சொல்ல வெட்கமாயிருக்கிறது, பத்மா” என்றான் ஸ்ரீதர். தனது தலை மயிரைச் சரி செய்தவாறே.

“மகளைக் கல்யாணம் கட்ட ஆசை. ஆனால் தகப்பனாரை மாமா என்று சொல்ல வெட்கமா மிஸ்டர்!” என்றாள் பத்மா, புன்னகையுடன், தன் பின்னலைப் பிரித்துப் பிரித்துச் சீர் செய்தவாறே.

இதற்கிடையில் வீதியில் வந்த டாக்சி ஒன்றைக் கை காட்டி நிறுத்தினான் ஸ்ரீதர். “எதற்கு டாக்சி!” என்றாள் பத்மா. “ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குப் போக” என்றான் ஸ்ரீதர். “என்ன, இந்த கால் மைல் தூரத்துக்கு டாக்சியா?” என்று பத்மா சொல்லி முடிப்பதற்குள் டாக்சியின் கதவைத் திறந்து விட்டான் டிரைவர். இருவரும் ஏறியுட்கார்ந்தார்கள். டாக்சி பறந்து போய், பம்பலப்பிடிச் சந்தியிலிருந்த எஸ்கிமோ ஐஸ்கிறீம் ‘பார்லர்’ முன்னால் நின்றது.

பத்மாவும் ஸ்ரீதரும் ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குள் புகுந்த போது பத்மா திடுக்கிட்டுவிட்டாள். ஏனெனில், அவளது தோழி தங்கமணியும் வேறிரு மாணவிகளும் அப்போதுதான் ஐஸ்கிறீம் அருந்திவிட்டு உல்லாசமாகச் சிரித்துப் பேசியவண்ணம் முகத்துக்கு நேரே வந்து கொண்டிருந்தார்கள். பத்மா அதற்கு முன்னர் ஓரிரு தடவை ஸ்ரீதருடன் பல்கலைக் கழகச் சிற்றுண்டிச் சாலையில் தேநீர் அருந்தியிருந்தபோதிலும் ஓர் ஆடவனுடன் ஐஸ்கிறீம் அருந்த பகிரங்கமான, ஒரு ஹோட்டலுக்கோ, ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்கோ பத்மா தனித்து போனது இதுவே முதல் தடவையாகும். அவ்விதம் முதல் தடவை சென்ற பொழுதே சக மாணவிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விட்டால் யாருக்குத்தான் அதிர்ச்சி ஏற்படாது? பத்மாவின் முகம் நாணத்தால் குப்பென்று சிவந்ததாயினும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு இலேசான புன்னகை ஒன்றை உதிர்ந்துவிட்டு ஸ்ரீதரின் பின்னால் நாணிக்கோணி உள்ளே சென்றாள்.

தங்கமணி ஒரு தடவைக்கு இரண்டு தடவை தன் முகத்தைத் திருப்பி வேறெதையோ பார்ப்பது போல் ஸ்ரீதரையும் பத்மாவையும் திரும்ப திரும்பப் பார்த்துக்கொண்டாள்.

ஐஸ்கிறீம் சாலையில் பெண்களும், ஜோடிகளும் குடும்பங்களும் உட்கார்ந்து சாப்பிடுவதற்கென்று சிறிய அழகான அடைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் “வேகன்ட்” (இடம் காலி) என்று அட்டை தொங்கிய ஒரு சிறிய கதவைத் தள்ளிக்கொண்டு ஓர் அடைப்புக்குள் புகுந்தான் ஸ்ரீதர். பத்மாவும் பின் தொடர்ந்தாள்.

அவர்களைத் தொடர்ந்து உள்ளே வந்த வெயிட்டரிடம் ஐஸ்கிறீம் “மெனு”க் கார்டை வாசித்து விலை உயர்ந்த *ஐஸ்கிறீம் வகைகளில் இரண்டு கிண்ணங்கள் கொண்டு வரும்படி உத்தரவிட்டு, ஸ்ரீதர் பத்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு மேசையில் கொடி போல் துவண்டு கிடந்த அவளது வளைக் கரங்களைப் பற்றினான். அவளது மலரிதழ் போன்ற குளிர்ந்த கரங்களில் அவள் அணிந்திருந்த கறுப்பு நிறக் கண்ணாடி வளையங்களைத் தன் விரல்களால் நீக்கி நீக்கிப் பார்ப்பது அவனுக்கு ஒரு வகை இன்பத்தைக் கொடுத்தது. பத்மாவும் ஒன்றும் பேசவில்லை. அவளுக்கும் அதில் ஒரு சுகமேற்படவே செய்தது. ஆனாலும் அவள் அதை முற்றிலும் அனுபவித்துக் கொண்டிருந்தாள் என்பதற்கில்லை. ஏதோ சிந்தனையிலிருந்தாள். அவள் முகத்தில் கவலை கூடாரமிட்டிருந்தது!

ஸ்ரீதருக்கு அவள் மெளனம் பிடிக்கவில்லை. “என்ன பத்மா, என்ன யோசனை!” என்று கேட்டான். ஸ்ரீதரின் அக்கேள்விக்குப் பின்னர்தான் பத்மா இவ்வுலகிற்கு வந்தாள். “இல்லை எனது வகுப்பு மாணவிகள் சிலர் எங்களைப் பார்த்துவிட்டார்கள் அல்லவா? அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றாள் அவள்.

ஸ்ரீதர் அதைக் கேட்டதும் அழுத்தம் திருத்தமாக “இதிலென்ன யோசிக்க இருக்கிறது? அவர்கள் ஏதாவது பேசினால் ஸ்ரீதர் என் காதலன். அவனை தான் கட்டிக்கொள்ளப் போகிறேன். கல்யாணத்துக்குக் கட்டாயம் கார்டு அனுப்புவேன். வரத் தயங்கக் கூடாது என்று சொல்லிவிட்டால் போகிறது. விஷயம் அப்படியே தீர்ந்து விடும்” என்றான்.

ஸ்ரீதரின் தமாஷான இப் பேச்சைக் கேட்டு, பத்மா முக மலர்ச்சியோடு சிரித்தாள். என்றாலும், அப்படிப் பேசுவது அவ்வளவு இலேசா என்ன? “ஆண் பிள்ளைகள் அப்படிப் பேசக் கூடும். பெண்கள் வாயடக்கமாகப் பேசாவிட்டால் ஊரெல்லாம் தூற்றும். வெட்கங் கெட்டவள் என்று சொல்லுவார்கள்” என்றாள்.

இதற்கிடையில் வெயிட்டர் பள பளவென்று ஒளி வீசிய வெள்ளி முலாம் பூசிய கிண்ணங்களில் ஐஸ்கிறீமைக் கொண்டு வந்து வைத்தான்.

இருவரும் அருந்த ஆரம்பித்தனர். நன்கு தயாரிக்கப்பட்ட ஐஸ்கிறீமீன் இனிய சுவையை நா அனுபவிக்கத் தொடங்கியதும் பத்மா கலகலப்பாகப் பேச ஆரம்பித்தாள். தந்தை பரமானந்தர் தன்னிடம் தனது திருமணத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்ததையும், தான் அவர் கேட்ட கேள்விகளுக்கு வெட்கத்தோடு அளித்த பதில்களையும் விவரமாகச் சொன்னாள் பத்மா. ஸ்ரீதர் பத்மாவின் கெட்டித்தனத்தைப் பாராட்டினான் என்றாலும், அவன் மனதை ஒரு கேள்வி, புழு அரிப்பது போல் குடைந்து கொண்டேயிருந்தது. “நான் யார்” என்பதை இப்பொழுதே சொல்லி விடுவோமா?” என்பதே அது. முடிவில் அப்பொழுது சொல்வது உசிதமல்ல. வேறொரு நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டான் அவன்.

பத்மா பேசிக் கொண்டே போனாள். “எங்கப்பா திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டார். உங்களப்பா விஷயமென்ன? ஒரு வாத்தியார் சம்மதித்துவிட்டால் போதுமா? மற்ற வாத்தியார் சம்மதமும் வேண்டாமா? அதையும் சீக்கிரமாகத் தீர்த்துக் கொண்டால்தான் எனக்கு நிம்மதி ஏற்படும்” என்றாள் அவள்.

ஸ்ரீதர் “நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. நான் இம்மாத முடிவில் வீட்டுக்குப் போய் வரும்போது நல்ல செய்தியுடன் தான் வருவேன். எல்லாம் வெற்றியாகவே முடியும். நீ உனது தந்தைக்கு எப்படி ஒரே செல்ல மகளோ அப்படியே நானும் என் பெற்றோருக்கு ஒரே செல்லப்பிள்ளை. என் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க அப்பா நினைத்தாலும், அம்மா அதற்கு ஒரு போதும் விடமாட்டாள் பத்மா” என்றான்.

அதற்குப் பிறகு இளங் காதலர்கள் காதற் பேச்சுகள் பேசிக் கொண்டார்கள். சில சமயம் சிருங்காரமாகப் பேசினார்கள். சில சமயம் நகைச்சுவையாகப் பேசினார்கள். சில சமயம் ஊடுவது போலவும் பேசினார்கள்.

“நீ என்னை உண்மையாகக் காதலிக்கிறாயா?” என்றான் ஸ்ரீதர்.

“அதில் கூடச் சந்தேகம் கொள்கிறீர்களா? அப்படியானால் என்னுடன் பேச வேண்டாம்” என்று கோபித்தாள் பத்மா.

“கோபிக்காதே என் கோபி! அதிகமாகக் கோபித்தாயானால் உன் கிருஷ்ணன் வீதியில் ஒரு மாட்டு வண்டிக்கு முன்னர் பாய்ந்து உயிரை விட்டு விடுவான். ஜாக்கிரதை.” என்று தமாஷாகக் கூறினான் ஸ்ரீதர்.

காதலர்களின் பேச்சு பற்பல திசைகளில் திரும்பித் திரும்பிச் சென்றது.

“உங்களம்மா யாரைப் போலிருப்பாள்? உங்களப்பா யாரைப் போலிருப்பார்? உங்களைப் போலா? என்னை அவர்களுக்குப் பிடிக்குமா? அவர்களுக்கு என் மீது பிடித்தம் ஏற்பட நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நான் கொழும்பு மோஸ்தரில் உடுத்துவது அவர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ?” என்ற கேள்விக்கு மேல் கேள்வியை அடுக்கினாள் பத்மா. ஒரு பெண்ணின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது உண்மையில் பரீட்சைக்குப் பதிலளிப்பதை விட எவ்வளவோ கடினமானது என்பது அப்பொழுதுதான் ஸ்ரீதருக்குத் தான் தெரிந்தது. திடீரென “ நான் இம்முறை பரீட்சையில் முதலாம் வெகுப்பில் சித்தி என்பது நிச்சயம்” என்று கூறினான் ஸ்ரீதர். “அதென்ன, திடீரென அவ்வளவு நிச்சயம் ஏற்பட்டுவிட்டது?: என்று கேட்டாள் பத்மா ஆச்சரியத்துடன். “இல்லை, உன் கேள்விகளுக்கு டக் டக் என்று பதிலளித்த நான் எப்படி பரீசையில் தோற்க முடியும்? நிச்சயம் முதல் வகுப்புக் கிடைக்கவே செய்யும்” என்றான் ஸ்ரீதர். ஆனால் கேள்விக் கணைகளை பத்மா மட்டும்தான் தொடுத்தாள் என்பதில்லை. ஸ்ரீதரும் கேள்விகள் கேட்கவே செய்தான். “ நீ என்னைக் காதலிப்பது எதற்காக?” என்று அவன் கேட்டதும் பத்மா அவனது அழகிய விழிகளை நோக்கியவாறு, “உங்கள் அழகிய கண்கள்தாம் என்னை முதல் முதலில் கவர்ந்தன. உண்மையில் அவை போன்ற கண்களை நான் வேறெங்கும் கண்டதேயில்லை” என்று கூறினாள். ஸ்ரீதர் “அப்படியா? அப்படியானால் நிச்சயம் இன்று என் கண்களை நான் கண்ணாடியில் பார்க்க வேண்டும்” என்று தன் கண்களைத் தன் கண்களால் தடவிக் கொண்டு வேடிக்கையாகக் கண்களை வெட்டினான். பத்மா தன்னை மறந்து கல கலவென்று சிரித்துவிட்டாள். “உஷ்” என்று வாயில் விரலை வைத்து மெளன அடையாளங் காட்டினான் ஸ்ரீதர். பத்மா மதுவுண்ட வண்டு போல் ஸ்ரீதரின் கன்களயே பார்த்துக் கொண்டு வீற்றிருந்தாள்.

ஸ்ரீதர் திடீரென்று “அப்படியானால் நீ என்னை மூளைக்காகக் காதலிக்க வில்லையா?” என்று கேட்டான். பத்மா பளிச்சென்று “அது எப்படி முடியும்? ஒருவரிடம் உள்ள ஒன்றைப் பார்த்துதானே இன்னொருவர் அவர் விரும்ப முடியும்” என்று பதிலளித்தாள். ஸ்ரீதர் அவளது சாதுரியத்தை உண்மையில் மெச்சினானாயினும், “பத்மா! நீ சரியான வாயாடி!” என்று சும்மா சொல்லி வைத்தான். ஸ்ரீதரின் கேள்விக்குப் பதில் கேள்வியாக, பத்மா ஸ்ரீதரிடம் “நீங்கள் ஏன் என்னைக் காதலிக்கிறீர்கள்!” என்று கேட்டாள். “உன் அழகுக்காக, உன் நிலா முகத்துக்காக, உன் முல்லைச் சிரிப்புக்காக, உன் விழிகளுக்காக, ஏன், உன் வாய்க்காகவும்தான்!” என்றான் ஸ்ரீதர்.

காதலர்கள் குறும்பாகவும் அன்பாகவும் போட்டியாகவும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க வெள்ளைக் கோட்டு போட்ட வெயிட்டர் ‘பில்’லுடன் வந்து விட்டான். ஸ்ரீதர் தன் காற்சட்டைப் பையிலிருந்து இரண்டு புத்தம் புதிய நூறு ரூபாத் தாள்களை எடுத்து அதிலொன்றை வெயிட்டரிடம் கொடுத்தான். வெயிட்டர் அதை எடுத்துச் சென்றதும் பத்மா ஸ்ரீதரிடம் “என்ன, பணப் புழக்கம் அதிகமாயிருக்கிறது! அப்பா தன் பென்ஷன் பணத்திலிருந்தா உங்களுக்கு இவ்வளவு தாராளமாகப் பணம் அனுப்புகிறார்! நீங்கள் அவர் பணத்தை டாக்சிக்கென்றும் அதற்கென்றும் இதற்கென்றும் வீணாக்குவது தவறு” என்று கடிந்து கொண்டாள்.

ஸ்ரீதர் பத்மாவின் எதிர்பாராத இவ்வார்த்தைகளால் அசந்து போய் விட்டான். என்றாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு “இல்லை. இந்தக் காசு நான் சம்பாதித்தது. நான் பின்னேரங்களில் சில பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிறேன்,” என்றான்.

பத்மா, “அப்படியா விஷயம்! அதனால் அந்தக் காசைக் கரியாக்கலாம் போலும்! நீங்கள் பெரிய செலவாளி. இந்த ஷெர்ட்டின் விலை என்ன? இருபத்தைந்து ரூபா இருக்குமா?” என்றாள்.

“இல்லை, இதன் விலை அறுபது அல்லது எழுபது ரூபாவென்று நினைக்கிறேன். ஞாபகமில்லை” என்றான் ஸ்ரீதர்.

“பார்க்கப் போனால் நீங்களும் என்னைப் போல் வாத்தியார் பிள்ளை. ஆனால் பேச்சோ ராஜா மகன் மாதிரி. விலைக்கு வாங்கிய ஷேர்ட்டின் விலை கூடத் தெரியவில்லை. ஆளைப் பார் ஆளை” என்றாள் பத்மா கிண்டலாக.

வெயிட்டர் மிச்சக் காசை ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தான். அதில் ரூபா ஒன்றை விட்டுவிட்டு, சொச்சத்தை எடுத்துக் கொண்டான் ஸ்ரீதர். வெயிட்டர் நாய்க்குட்டி குழைவது போல் நின்று, நன்றியறிதலோடு சலாம் செய்து விட்டு வெளியேறினான்.

“ஆமாம். உங்களுக்குப் பணம் அதிகரித்துத்தான் விட்டது. இல்லாவிட்டால் ஒரு ரூபாவை அவனுக்குக் கொடுப்பீர்களா?” என்றாள் பத்மா.

அப்பொழுது ஐஸ்கிறீம் சாலையிலிருந்த மணிக்கூடு டணால் டணால் என்று பன்னிரண்டடித்து ஓய்ந்தது. பத்மா கனவிலிருந்து விழித்தவள் போல “நேரமாகிறது. போவோமா?” என்றாள்.

பத்மாவும் ஸ்ரீதரும் மேசையை விட்டு எழுந்தார்கள். உல்லாசப் பேச்சாலும், காதல் என்ற மெல்லுணர்வின் இனிய அரவணைப்பாலும், வாய்க்கு உருசியான உணவாலும் பத்மாவின் மனதில் தங்கமணியும் தோழியர்களும் ஏற்படுத்திய சலசலப்பு இப்போது அடங்கியிருந்தது.

உண்மையில் அவள் உள்ளத்தில் அதிகாலை தேர்ந்தத் தடாகம் போன்ற ஒரு பேரமைதி குடி கொண்டிருந்தது. தனது வாழ்க்கையிலேயே ஒரு காலமும் அனுபவித்திராத ஒருவித பூரணத்துவத்தை அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள். தான் இவ்வுலக வாழ்வில் விரும்பியதெல்லாம் ஒவ்வொன்றாகக் கிட்டுவது போன்ற ஓருணர்ச்சி அவள் உள்ளத்தைத் தாலாட்டியது. ஆனால் ஸ்ரீதரின் மனதின் நிலையோ வேறு விதமாக இருந்தது. தான் யார் என்பதை எப்படிப் பத்மாவுக்கு எடுத்துக் கூறுவது என்பது அவனுக்கு விளங்கவில்லை. பத்மாவின் காதல் தோழமையையும் கண்ணுக்கு முன்னால் இன்பமூட்டிக் கொண்டிருந்த அவள் எல்லையற்ற அழகையும் பூப்போன்ற அவள் கன்னங்களில் நேரத்துக்கு நேரம் இடம் மாறி உயிர்த்துடிப்போடு தவழ்ந்து கொண்டிருந்த சங்கின் சுழி போன்ற அவளது கன்னச் சுழியையும், சுருண்ட கேசத்தையும், தந்தத்தில் கடைந்தெடுத்தது போன்று சொகுசோடு காட்சியளித்த அவள் மெல்லிடையையும், எல்லாவற்றுக்கும் மேலாக வீணா கானம் போன்ற தன் இனிய குரலில் அன்பையும் குறும்பையும் சொரிந்து அவள் பேசிய வார்த்தைகளையும் அவன் உண்மையில் இரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தான் எனினும், அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் தான் கூறிய பொய்யினால் ஏற்பட்ட கவலை பனி மூட்டம் போல் திசையிட்டிருந்தது. அவள் விரல்களையோ, கரங்களையோ அவன் தொட்ட போது, அவன் உள்ளம் மேகங்களிடையே சஞ்சரித்தது உண்மையேயாயினும் அந்த மேகத் தொகுதி மின்னற் கொடிகளின் துடி துடிப்பிலே நடுங்கிக் கொண்டிருந்தது போலவும் அந்த நடுக்கம் தன்னையும் பாதிப்பது போலவும் ஸ்ரீதருக்கு ஓருணர்வு ஏற்பட்டது. இருந்தாலும் என்ன செய்வது? ஏதோ பொய் சொன்னது சொல்லிவிட்டோம். எப்படியோ பிரச்சினை ஒன்று தோன்றிவிட்டது. அதைச் சந்தர்ப்ப சூழலை அனுசரித்துத் தீர்த்துக்கொள்ள வேண்டியது தான். அதற்காக இவ்வளவு கலங்கக் கூடாது. மேலும் இதனால் என்ன தலையா போய்விடப் போகிறது? ஆண் பிள்ளை ஆண்மையோடு நடந்து கொள்ள வேண்டாமா? – என்பது போன்ற எண்ணங்கல் குறுக்கும் மறுக்குமாக அவனது மனதில் நடமாடிக் கொண்டிருந்தாலும், அதரங்களில் என்னவோ ஒப்புக்கு ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டேயிருந்தது.

பத்மாவும் ஸ்ரீதரும் ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்கு வெளியே வந்ததும் தத்தம் பாதைகளில் பிரிந்தார்கள். “நாளை வழமையான இடம்” என்றாள் பத்மா. “ஆகட்டும் கண்ணே” என்றான் ஸ்ரீதர் போலிக் குறும்போடு.

பத்மா ஐஸ்கிறீம் ‘பார்லரி’லிருந்து நேரே பல்கலைக் கழகத்துக்குப் போய் அங்கிருந்து கொட்டாஞ்சேனை பஸ் தரிப்புக்குச் சென்றாள். ஸ்ரீதர் எவ்வளவு சொல்லியும் டாக்சியில் செல்ல மறுத்து ‘புல்லர்ஸ்’ வீதிவழியாக நடையிலேயே சென்றாள் பத்மா. அவள் கண்ணுக்கு முற்றாக மறைந்ததும் ஸ்ரீதர் “சுரேஷை உடனே கண்டு பேச வேண்டும்” என்று எண்ணிக் கொண்டே ஒரு டாக்சியை மறித்து, அதில் ஏறிக்கொண்டான்.

பஸ்தரிப்பில் பத்மா சற்றும் எதிர்பாராத வகையில் அவளது சிநேகிதி தங்கமணியும் பஸ்சுக்காகக் காத்துக் கொண்டு நின்றாள். பத்மாவைக் கண்டதும் அர்த்தபுஷ்டியுள்ள புன்சிரிப்புடன் சுட்டு விரலை விறைப்பாக உயர்த்தி “எல்லாம் எனக்குத் தெரியும், மச்சாள்” என்பது போன்ற ஒரு சைகையைச் செய்தாள் தங்கமணி. பத்மா நாணத்தால் குன்றிவிட்டாள். எனினும், பெண்களுக்கே இயல்பாயுள்ள முறையில் எப்படியோ சிரித்துச் சமாளித்துக் கொண்டாள். ஆனால் அந்தப் பஸ் தரிப்பிலே அவள் உள்ளம் வெதும்பும் சம்பவம் ஒன்று சீக்கிரமே நடக்கப் போகிறது என்பது அப்பொழுது அவளுக்குத் தெரியாது. காலை நேரம், எவ்வளவு இன்பமாய் இருந்ததோ, அவ்வளவுதுன்பமயமான மாலை நேரம் ஒன்று அவளுக்காகக் காத்திருந்தது என்பதை அவள் அறியாள்.

தங்கமணியும் பத்மாவும் ஓரளவு சிநேகிதிகளே என்றாலும், அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்டவர்கள் என்று சொல்ல முடியாது. உண்மையில் பத்மாவுடன் சிநேகிதியாக இருப்பது எந்தப் பெண்ணுக்குமே கஷ்டமாகத்தானிருக்கும். பல்கலைக்கழகத்திலேயே ஐந்து அழகிய பெண்களைப் பொறுக்கினால், நிச்சயம் பத்மாவும் அதில் ஒருத்தியாக இருப்பாள் என்பதில் சந்தேகமிலை. படிப்பிலும் பத்மாகெட்டிக்காரிதான். அத்துடன் நாடக மன்றத்தின் இணைக் காரியதரிசி. இவையெல்லாம் அவளைச் சாதாரண மாணவிகளிடையே செல்வாக்குடையவளாகச் செய்திருந்தாலும், தாமும் வாழ்க்கையின் முன்னணியில் நிகழ வேண்டும் என்ற எண்ணம் படைத்த மாணவிகளிடயே அவள் மீது தாங்கொனாத பொறாமையைத்தான் தூண்டியிருந்தன. தங்கமணியும் அப்படிப்பட்ட ஒரு மாணவியே. இயற்கை அவளுக்கு அழகைத் தாராளமாக வாரி வழங்காவிட்டாலும் நல்ல உடற்கட்டை அளித்திருந்தது. நல்ல உயரம். பொது நிறமென்று சொல்ல முடியாத கரிய நிறமென்றாலும் அவள் முகத்தில் எவ்வித குறைபாடுகளுமில்லை. அளவான மூக்கு, சிறிது நீளமான முகம். அமைப்பான கன்னங்கள், மேலேறிய புருவம், அப்புருவத்துக்கு நடுவே ஆச்சரியக் குறி போன்ற சிவந்த பொட்டு, உயர்ந்த இடை — இவைதாம் தங்கமணி. எந்தக் கூட்டத்திலும் தனித்துத் தெரியும் இத்தோற்றத்துடன் தயக்கமில்லாத கலகலப்பான பேச்சும் எங்கும் முன்னே சென்று தலைமை தாங்கும் பண்பும் அவளிடம் இருந்தன.

தங்கமணிக்குப் பத்மாவின் இரகசியத்தைத் தான் தெரிந்து கொண்டதில் பரம திருப்தி. ஏற்கனவே பத்மா மீது காரணமின்றியே இலேசான பொறாமை கொண்டிருந்த தங்கமணிக்குக் காலையில் அவளைப் பல்கலைக்கழகத்திலேயே கண் நிறைந்த அழகான ஸ்ரீதருடன் பார்த்தது தொடக்கம் மேலும் பொறாமை அதிகரித்தது. போதாதற்கு ஸ்ரீதர் இலங்கையின் மிகப் பெரிய பணக்காரரான சிவநேசர் மகன் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

“பத்மா, நீ கெட்டிக்காரி! ஸ்ரீதர் உன் காதலனா?” என்று கேட்டாள் தங்கமணி.

காலை நிகழ்ச்சிகளால் இன்பத்தில் மிதந்து கொண்டிருந்த பத்மாவின் உள்ளம் வீதியின் ஓரத்தில் ஓங்கி வளர்ந்திருந்த நிழல் மரங்களின் உச்சியில் ஏறி நின்று “ஸ்ரீதர் என் காதலன்” என்று முழு உலகுக்கும் முழங்க வேண்டுமென்று விரும்பியிருந்து நேரமல்லாவா அது? ஆகவே துடிதுடிப்பாக, “ஆம் தங்கமணி! ஸ்ரீதர் என் காதலன். அவனை நான் கட்டிக் கொள்ளப் போகிறேன். அப்பாவும் சம்மதித்துவிட்டார். கல்யாணத்துக்குக் கட்டாயம் கார்டு அனுப்புவேன். வரத் தயங்கக் கூடாது” என்றாள் பத்மா ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்த பிரகாரம்.

தங்கமணி, பத்மாவின் துணிவான பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போய் விட்டாள். வழக்கமாகக் கூச்சத்துடன் பேசும் பத்மா காதல் தந்த தெம்பாலல்லவா இப்படிப் பேசுகிறாள் என்று தன்னுள் தானே எண்ணிக் கொண்டு “உண்மையாகவா? அப்படியானால் எனது நல்வாழ்த்துக்கள். ஆனால் நீ பெரிய அதிர்ஷ்டக்காரி. ஸ்ரீதர் மாதிரி பணக்கார வீட்டுப் பிள்ளை யாருக்கும் இலகுவில் கிடைப்பானா?” என்றாள் அவள்.

பத்மா ஆச்சரியத்துடன். “என்ன பணக்கார வீட்டுப் பிள்ளையா? யார் சொன்னது? அவர் அப்பாவும் என் அப்பா போல் ஓர் இளைப்பாறிய வாத்தியார்தான். பணக்கார வீட்டுப் பிள்ளை பெண்ணில்லாமல் என்னைத் தேடி வருகிறானா?” என்றாள்.

தங்கமணி “ஏன் வரமாட்டான்? உன்னிடமிருக்கும் அழகும் தளுக்கும் போதாவா?” என்று சொல்லி உடலைக் குலுக்கிக் காட்டிச் சிரித்தாள், வஞ்சனையற்றுப் பேசுபவள் போல. பின் திடீரென “நீ என்ன சொன்னாய்? சிவநேசர் இளைப்பாறிய வாத்தியார்? யாரை ஏமாற்றுகிறாய்?” என்றாள்.

“சிவநேசரா ? யாரது? ஸ்ரீதரின் தகப்பனாரின் பெயர் சின்னப்பா பிள்ளை. ஊர் உடுவில்”

தங்கமணி சிரித்தாள்.

“உனக்குப் பைத்தியமா? அல்லது என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? ஸ்ரீதர் எங்களூரைச் சேர்ந்தவன். அவன் தகப்பனார் சிவநேசர் பெரிய பணக்காரர். இந்த இலங்கையிலேயே அவர் போன்ற பணக்காரரும் சாதிக்காரரும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள்.”

சிவநேசர்! பத்மாவும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா. அவள் வசித்த கொலீஜ் ரோடு 48ம் நம்பர்த் தோட்டத்தில் வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்த வேலாயுதக் கிழவன் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை யாழ்ப்பாணத்தில் சிவநேசர் பங்களாவில் வேலை செய்தவன். அவரைப் பற்றித் தந்தை பரமானந்தரோடு வேலாயுதம் கதை கதையாய்ப் பேசிக் கொண்டிருப்பதை அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆம். வேலாயுதம் கூட அவரைப் பற்றிக் கோடீஸ்வரர் என்று பல முறை வர்ணித்திருக்கிறாள். சிவநேசப் பிரபு என்று தான் வேலாயுதம் அவரைப் பற்றிப் பேசும்போது குறிப்பிடுவது வழக்கம். அந்தப் பெரும் பணக்காரரின் மகனா ஸ்ரீதர்?

பத்மாவால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் தங்கமணி அறுதியிட்டுக் கூறுகிறாள்! என்றாலும் பத்மாவின் உள்ளம் விட்டுக் கொடுக்க மறுத்தது. தோள் வழியாக நெஞ்சில் புரண்டு கொண்டிருந்த கருநாகம் போன்ற தன் பின்னலை விரல்களால் சுற்றிக் கொண்டே “தங்கமணி! பொய் சொல்லாதே! அவர் உடுவிலுள்ள வாத்தியார் சின்னப்பா பிள்ளையின் மகன் தான். ஒரு வேளை நீ சொல்லும் சிவநேசர் மகனும் பார்ப்பதற்கு ஸ்ரீதர் போல் இருப்பானாக்கும்!” என்றாள்.

தங்கமணிக்கு இப்பொழுது ஒரு சந்தேகமேற்பட்டது. அவள் அறிந்தவரையில் பத்மா பொய் பேசுபவளல்ல. ஒரு வேளை உண்மையாகவே பத்மா ஸ்ரீதரால் ஏமாற்றப்பட்டிருக்கிறாளோ? இந்த எண்ணத்துடன் அவள் பத்மாவின் தோள்களைப் பற்றியவண்ணம், “பத்மா! நீ சொல்வது உண்மையானால், நீ ஏமாற்றப்பட்டிருக்கிறாய். ஸ்ரீதர் உண்மையில் சிவநேசரின் மகளே. அவர்கள் வீட்டுக்கு அரை மைல் தூரத்தில்தான் எங்கள் வீடு. அவர்களைப் பற்றி எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். நான் ஏன் உனக்குப் பொய் சொல்ல வேண்டும்?” என்றாள். பேச்சுத்தான் அன்பாக இருந்ததே ஒழிய, பத்மாவின் இக்கட்டு தங்கமணிக்கு ஒருவித இன்பத்தையே தந்தது. பத்மாவின் பிடிவாதம் தளர ஆரம்பித்தது, என்றாலும் விட்டுக் கொடுக்காமல் “நீ என்ன சொன்னாலும் எனக்கு அவற்றை நம்பக் கஷ்டமாகத் தானிருக்கிறது. நான் சொன்ன விவரங்கள் ஸ்ரீதர் கூறிய விவரங்களே. அப்படியானால் அவர் எனக்குப் பொய் கூறியிருக்கிறார். அவர் ஏன் அப்படி எனக்குப் பொய் சொல்ல வேண்டும், தங்கம்!” என்றாள்.

தங்கமணி, “ஒருவன் ஏன் பொய் சொல்கிறான் என்பது அவனுக்குத்தான் தெரியும். ஏதாவது சூழ்ச்சிகரமான திட்டங்கள் அவன் மனதில் இருக்கும். உன்னை ஏமாற்றித் தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொண்டு ‘டிமிக்கி’ கொடுக்கிற எண்ணமோ என்னவோ! உனக்குத் தெரியாதா ஆண்களைப் பற்றி? எதற்கும் நீ கவனமாய் நட. நல்ல வேளை, உன் அதிர்ஷ்டம் நான் இன்று உங்கள் இருவரையும் ஜோடியாகக் கண்ட்து. ஆனால் எனக்கு ஆச்சரியமென்னவென்றால், ஸ்ரீதரை காண்பவர்கள் எல்லாம் ஏதோ பிரின்ஸ் ஓவ் வேல்ஸைக் கண்ட மாதிரி “ அது யார் தெரியுமா? சிவநேசர் மகன்” என்று சுட்டிக் காட்டிப் பேசுபவர்கள் நிறைந்த பல்கலைக் கழகத்தில் உனக்கு அவனைத் தெரியாமலிருந்ததே என்பதுதான்” என்றாள்.

பத்மாவுக்கு இன்னும் தங்கமணியின் பேச்சில் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் உண்மை போல் தோன்றிய அவற்றை மறுத்துரைக்கும் சக்தியும் அவளிடமிருக்குவில்லை. ஆகவே சிறிது நேரம் வாய் மூடி மெளனியாய் இருந்தாள் அவள்.

அப்பொழுது பெரிய பிளிமத் கார் ஒன்று பஸ் தரிப்பைக் கடந்து சென்றது. கார் டிரைவர் முன்னாசனத்திலிருந்து காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.

தங்கமணி அந்தக் காரைக் கண்டதும் உணர்ச்சியோடு “பத்மா! இதுதான் ஸ்ரீதரின் கார், பார், இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீதருடன் வரும்.” என்றாள்.

பத்மா, “இல்லை அவர் இதில் வர மாட்டார். அவர் “எஸ்கிமோவி”லிருந்து நேரே வீடு போய்விட்டார்” என்றாள்.

தங்கமணி “அப்படியானால் மிகவும் நல்லது. கார் ஸ்ரீதர் இல்லாது வந்தால் நான் மறித்து நிறுத்தி டிரைவரிடம் பேச்சு கொடுத்து இந்தக் கார் ஸ்ரீதருடையது என்பதை நிரூபிக்கிறேன். பார்க்கிறாயா?” என்றாள்.

முதலில் அதற்கு வேண்டாம் எனப் பதிலளித்த பத்மா பின்னால் “சரி, ஆகட்டும்” என்று அரை மனதோடு பதிலளித்தாள்.

தங்கமணி எதிர்பார்த்தது போலவே சுமார் இரண்டு மூன்று நிமிடங்களில் கழக வளவிலிருந்து கார் மீண்டும் வெளியே வந்தது. அதைக் கண்டதும் தங்கமணி வீதியில் இறங்கிக் காரை மறித்தாள். டிரைவர் காரை ‘பிரேக்’ போட்டு நிறுத்திக் கொண்டே “என்ன காரியம்” என்ற பாவனையில் இரு பெண்களின் முகங்களையும் ஏற இறங்கப் பார்த்தான்.

“இது ஸ்ரீதரின் கார் தானே! ஆள் எங்கே” என்று கேட்டாள்.

“ஆம். இது ஸ்ரீதர் ஐயாவுடைய கார்தான். அவரைக் கண்டீனில் காணோம். செல்லப் பிள்ளை. நினைத்தவுடன் நினைத்த மாதிரி நடப்பார். டாக்சியில் போயிருப்பார்” என்றான் டிரைவர்.

“சரி. நீ போ” என்றாள் தங்கமணி.

கார் சிறிது தூரம் போனதும் தங்கமணி அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியே விட்ட வண்ணமே பத்மாவைப் பார்த்துச் சிரித்தாள்.

“எனக்கு டிரைவரிடம் பேசும்போது நெஞ்சு டக் டக் என்றடித்துக் கொண்டது. அப்பாடா, அவன் அநாவசியமான கேள்விகள் கேட்காமல் போனானே, அது போதும்.” என்றாள் அவள், பெருமூச்சால் தன் நெஞ்சில் கையை வைத்த வண்ணமே.

பத்மாவுக்கோ பதிற் சிரிப்புச் சிரிக்க முடியவில்லை. தங்கமணிக்கு அதைக் கண்டு திருப்தி. பத்து நிமிஷங்களுக்கு முன் பத்மா முகத்தில் படர்ந்திருந்த கர்வம் எங்கே போயொழிந்தது என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். ஆனாலும் வெளிக்குத் தானும் விசனப்படுவது போலவே காட்டிக்கொண்டாள்.

‘கடைசியில், தங்கமணி தன் கட்சியை நிரூபித்துவிட்டாள். அவர் பொய்தான் சொல்லியிருக்கிறார். என் காதலன் ஸ்ரீதர். அவரை நான் கட்டப் போகிறேன் என்று பெருமையுடன் பேசி ஒரு சில நிமிஷங்கள் கழிவதற்குள் அவர் ஒரு பொய்யன் என்று நிரூபித்துவிட்டாள் அவள்’ என்று தன்னுள் கறுவினாள் பத்மா. ஆனால் அடுத்த கணமே “அவளைக் கோபித்து என்ன பயன்? குற்றம் அவர் மேலல்லவா? ஏன் அவர் அப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்லி, என்னை இப்படித் தலை குனிய வைத்தார்?” என்று சிந்தித்தவண்ணமே முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டாள் அவள். அவளால் தங்கமணியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் முத்துகள் வெடித்துக் கன்னத்தைக் கழுவிச் சென்று கொண்டிருந்தன. உதட்டைப் பிதுக்கிக் கொண்டு செய்வதறியாது நின்றான் அவள்.

தங்கமணி, “பத்மா! ஏன் அழுகிறாய்? பெரிய இடத்து உறவெல்லாம் இப்படித்தான். விட்டது சனியன் என்று உன்னுடைய அலுவல்களைப் பார். போ. நான் என்றால் அப்படித் தான் செய்வேன். ஆனால் முதலில் உன் போல் ஏமாந்திருக்க மாட்டேன்.” என்று புண்ணில் வேல் கொண்டு போல் பேசினாள் பத்மாவின் மனதில் நன்கு பட வேண்டுமென்று.

அவள் இவ்வாறு பேசுவதற்கும், கொட்டாஞ்சேனை பஸ் வருவதற்கும் சரியாய் இருந்தது. பத்மா அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு, பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து, தங்கமணியைப் பார்த்துக் கைகளை அசைத்தாள். வழக்கமாக அக் கை அசைப்போடு சேர்ந்து வரும் ‘செரியோ’ என்ற வார்த்தை அன்று ஏனோ அவள் வாயில் வர மறுத்துவிட்டது!

தங்கமணி பஸ் தரிப்பில் வத்தளை செல்லும் பஸ்சுக்காகக் காத்து நின்றாள் அன்று தனக்குக் கல்யாணம் நடந்தது போன்ற பெருமகிழ்ச்சி அவளுக்கு!

5-ம் அத்தியாயம்: சலனம்

பார்க்கப் போனால் மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? பத்மாவின் வாழ்க்கையிலே, பஸ் தரிப்பில் அவள் கொட்டாஞ்சேனை பஸ்ஸிற்காகக் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்துவிட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வீதியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு சம்பவம், சில போது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பிவிட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும்போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிடவில்லையா? ஆள்வோனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது!

சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் — ஆனால் அதன் பலனோ மிக பெரியது. பஸ் தரிப்பில் எல்லோரையும் போல், பஸ்சுக்காகக் காத்துக்கிடக்கும் சலிப்பைப் போக்குவதற்காகப் பத்மாவும் தங்கமணியும் ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு தனது உள்ளத்தையே பிழிந்தெடுத்து வெம்ப வைக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவமாக முடிவுறும் என்று பத்மாவால் எண்ணியிருக்க முடியுமா? தங்கமணி ஸ்ரீதரின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கூறிய தகவல்கள், அதைத் தொடர்ந்து அங்கே வந்த ஸ்ரீதரின் கார் டிரைவர் கூறிய விவரம் – எல்லாம் சேர்ந்து பத்மாவின் உள்ளத்தை ஒரே கலக்காகக் கலக்கிவிட்டன.

பஸ்ஸில் ஏறி வசதியாக ஒரு ஜன்னலண்டை உட்கார்ந்து நண்பகலின் சூரிய வெளிச்சத்தில் வெண் புறாவின் ஒளி வீசும் சிறகுகளைப் போன்ற பளபளப்போடு வானத்தில் ஓடிக்கொண்டிருந்த முகில்களைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளத்தில் “ஸ்ரீதர் ஏன் இப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்ல வேண்டும்? ஏன் என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டும்? இதில் ஏதோ பெரிய மோசடி இருக்கிறது. இவ்விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால், அவர் என்ன நினைப்பார்?” என்பது ஒன்றன்பின்னொன்றாக வந்துக்கொண்டிருந்தன.

ஒருவனுக்குக் கவலை ஏற்பட்டால் அந்தக் கவலையின் அமுக்கத்திலிருந்து தனது மனதை விடுவித்துக்கொள்ள, அவன் எங்காவது ஒரு மூளையில் ஆறுதலாக உட்கார்ந்து கண்ணீர் கொட்டி அழுவதற்கு விரும்புகிறான். ஆனால் அதற்குக் கூட வசதியான இடம் கிடைக்க வேண்டுமே! அவ்வித வசதியான இடம் கிடைத்ததும் அவன் சந்தோஷத்துடன் அங்கே உட்கார்ந்துகொண்டு தன் துயரம் முற்றிலும் போகும் வரை கண்ணீர் விட்டு அமைதி காண்கிறான்.

பத்மாவுக்கு அன்று பஸ்ஸிலே கிடைத்த ஆசனம் இதற்கு மிக வசதியாக இருந்தது. அந்த வகையில், அந்த்ச் சோக நேரத்தில் கூட அவள் அதிர்ஷ்டசாலிதான். பஸ்ஸில் அடியோடு ஜனக் கூட்டம் இல்லாத நேரம். பஸ்ஸின் பிற்பகுதியில் தனிமையாக விளங்கிய அவ்வாசனத்தில் அமைதியாக உட்கார்ந்துகொண்டு, அன்றைய நிகழ்ச்சிகளை ஆராய ஆரம்பித்தாள் அவள். அவளது பொன் முகம் ஜன்னலோடு ஒன்றிக் கிடக்க, தனது நீண்ட விழிகளால் கண்ணீரை மனத்திருப்தியோடு ஓட விட்டவண்ணமே “காலையில் ஸ்ரீதரோடு ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குப் போன போது ‘நானே மகாராணி!’ என்று என்னுள்ளம் பாடிக் கொண்டிருந்தது. ஆனால் பின்னேரம் இப்படி ஆகிவிட்டதே” என்று ஏங்கினாள் அவள்.

உண்மையில் அன்றைய காலையைப் போல் அவள் உலக இன்பத்தை மட்டின்றி அனுபவித்த நாள் அவள் வாழ்க்கையிலேயே வேறு இல்லை. தந்தையாரின் கல்யாண அனுமதியினால் களிப்பில் திளைத்த மனதோடு அதிகாலையிலேயே படுக்கை விட்டெழுந்து பைப்பிலே நீராடிப் பெளடரிட்டுப் பொட்டிட்டுப் பட்டணிந்து கொண்டு தன் காதலனைக் காண உல்லாசமாகப் பல்கலைக் கழகம் வந்ததும், அங்கே அழகொழுகும் தனது மனதிற்குகந்த காதலனைச் சந்தித்து, இன்ப மொழிகள் பேசி, டாக்ஸியில் தோளோடு தோள் உராய – ஐஸ்கிறீம் பார்லருக்குச் சென்றதும், அங்கே வாய்க்கினிய ஐஸ்கிறீமைப் போதிய அளவு அருந்தி மனம் மகிழ்ந்ததும், எல்லாவற்றுக்கும் மேலாக அவளது அன்புக் காதலன் அவள் வளைக் கரங்களைத் தடவிக் கொடுத்த உடற் சுகமும் அவள் மனதில் திரைப்படம் போல் வந்துகொண்டிருந்தன. “ஆனால் சுவர்க்கமாக ஆரம்பித்த காலை பிற்பகல் நரகமாக மாறிவிட்டதே! தங்கமணிக்கு முன்னே என் கர்வமெல்லாம் அடங்கி இப்படி ஆகிவிட்டேனே. எப்படி நானென் தந்தைக்கு முன்னே போவேன்? எப்படித் தங்கமணிக்கு முன்னே தலை நிமிர்ந்து நடப்பேன்?” என்று யோசித்த வண்ணம் கண்களில் துளிர்த்த கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள், பத்மா.

இதற்கிடையில் அங்கு பஸ் டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர் சிங்களத்தில் “நோனா, ஏன் அழுகிறீர்கள்?” என்றான். ஒப்புக்கொரு புன்னகை செய்து கொண்டு கண்ணைத் துடைந்த வண்ணம் கைக்குட்டையில் முடிந்து வைத்திருந்த 25 சதத்தை அவனிடம் கொடுத்து “கொட்டாஞ்சேனைக்கு ஒரு டிக்கெட்” என்றாள் பத்மா.

பஸ் இப்பொழுது கொழும்பு நகர மண்டபத்துக்கு அண்மையாக வந்து கொண்டிருந்தது. அதன் ஜன்னல் வழியாக நகர மண்டபத்தின் உயர்ந்த கோபுரத்தைப் பார்த்து அதன் பளிச்சென்ற வெண்மையான தோற்றத்தைப் பத்மாவின் மனதில் ஒருபுறம் வியந்து கொண்டிருக்க, அதன் மறுபுறம் சிவநேசர் மீது சென்றது.

சிவநேசர் பெயர் நாட்டிலுள்ள மற்ற எல்லோருக்கும் எவ்வளவு பழக்கமோ அவ்வளவுக்கு அவளுக்கும் பழக்கம்தான். உண்மையில் அவரை நேரில் அவள் காணா விட்டாலும், நேரில் கண்டால் நிச்சயம் அடையாளம் கண்டு கொள்வாள். கம்பீரமான தோற்றம், வெள்ளைத் தலைப்பாகை, கழுத்து வரை பூட்டப்பட்டிருக்கும் வெள்ளைக் குளோஸ் கோட்டு, உத்தரீயம் ஆகியவற்றுடன் கூடிய அவரது படத்தை அவர் தர்மகர்த்தாவாக இருந்த கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலில் அவள் பல முறை பார்த்திருக்கிறாள். எப்போதோ ஒரு நாள் அவர் படத்தைத் “தினகரன்” பத்திரிகையிலும் பார்த்ததுண்டு. ஆம், உண்மைதான். ஸ்ரீதர் அவர் மகனாகத்தான் இருக்க வேண்டும். அவர் முகம் தான் அவனுக்கு. அதே பெரிய அகன்ற கண்கள். அதே கம்பீரத் தோற்றம். இருந்தும் இவ்விஷயத்தை ஏன் இதுவரை தான் கவனிக்கவில்லை என்று ஆச்சரியப்பட்டாள் பத்மா. “ நான் ஒரு மட்டி” என்று தன்னைத் தானே ஏசியும் கொண்டாள் அவள்.

பத்மா இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க “இப்பன்வலை” என்னும் ஹைட்பார்க் கோர்னரை அடைந்து, அங்குள்ள பஸ்தரிப்பில் நின்றது. அங்கே ஒரு கிழவியுடன், உடம்போடொட்ட உடை அணிந்து ஒய்யாரமாக நிமிர்ந்து நடை பயின்று வந்த ஓர் உயரமான யுவதியும், அவர்களுக்குப் பின்னால் மீசை வைத்த ஒரு வாலிபனும் ஏறினார்கள். இவர்களில் அந்த மீசையுள்ள வாலிபன் பத்மாவுக்கு நன்கு பழக்கமானவன். கமலநாதன் என்ற அவன் கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் 30ம் இலக்கத் தோட்டத்தைச் சேர்ந்தவன். அவனது இரு தங்கைகளுக்குப் பத்மா ஆங்கில பாடஞ் சொல்லிக் கொடுப்பது வழக்கம். பரமானந்தர் தமிழ் சொல்லிக் கொடுப்பார். ஐந்தாறு தடவைகள் கமலநாதன் அவர்கள் வீட்டுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணத்தைச் செலுத்துவதற்காக வந்து போயிருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் அவன் ஒரு மோட்டார் சைக்கிளில் தான் வருவான். இன்று தான் அவனை முதன்முதலாக பஸ்ஸில் சந்தித்தாள் பத்மா.

மனதில் பெருங் கவலையோடிருந்த பத்மாவுக்கு அவனைப் பார்த்துச் சிரிப்பதா கூடாதா என்ற பதற்றம் ஏற்பட்டது. ஆனால், செத்த வீட்டில் கூட வருபவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தானே வேண்டியிருக்கிறது! இன்றைய உலகில் சிரிப்பு சந்தோஷத்தின் சின்னம் மட்டுமல்ல, அறிமுகத்தின் சின்னமுமாகவல்லவா மாறிவிட்டது! இன்னும் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதோடு தனக்குப் பணம் தந்து தங்கையைப் படிக்க அனுப்பும் ஒருவனை அவள் எப்படி அலட்சியம் செய்ய முடியும்? ஆகவே வேறு வழியின்றி இருவர் கண்களும் சந்தித்ததும் உப்புச் சப்பில்லாத அறிமுகச் சிரிப்பொன்றை உதிர்ந்தாள் அவள். அவள் அவ்வாறு சிரித்திருக்காவிட்டால் கர்வம் பிடித்தவள் என்று அவன் கணித்திருக்கலாமல்லவா?

ஆனால் கமலநாதன் நிலைமையோ வேறு. தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பானாலும் ஏதோ எதிர்பர்த்தது கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அவனது முகத்திற் பொங்கப் பதிற் புன்னகை செய்தான் அவன். அது வெறுமனே முகத்தின் புன்னகையாக மட்டும் தோன்றவில்லை. உள்ளமும் சேர்ந்து சிரித்தது போன்ற மென்மையான புன்னகை அவன் அதரங்களில் தவழ்ந்து அவனது சிவந்த கன்னங்களையும் மலர வைத்தது.

இப்பொழுது பஸ்ஸில் சுமாரான கூட்டம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு ஆசனங்களே காலியாக இருந்தன. ஆகவே வேறு வழியில்லாமல் பத்மாவுக்குப் பக்கத்திலிருந்த வெற்று ஆசனத்தில் கமலநாதன் உட்கார்ந்து கொண்டான். பத்மா அவனுக்கு ஒதுங்கி இடம் கொடுத்ததோடு இரண்டாம் முறையும் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

பத்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்த கமலநாதன் திடீரென அவள் முகத்தைத் திரும்பிப் பார்த்தபோது, கைக்குட்டையால் பலமுறை துடைக்கப்பட்ட பின்னரும் கண்களின் ஓரத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கண்ணீர்த் துளியைக் கண்டு கொண்டான். அதைப் பார்த்ததும், பத்மா அழுதிருக்கிறாள் — அதன் காரணம் யாதாக இருக்கலாம் என்பதை அறிய வேண்டும் என்ற ஒரு துடிப்பு அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் தனிப்பட்டவர்களின் இப்படிப்பட்ட சொந்த விவகாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் தமக்கு ஏற்படும் போது பண்புள்ள மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதையே கமலநாதனும் செய்தான். அதாவது தனது ஆவலை அப்படியே அடக்கிக்கொண்டான்.

இதற்கிடையில் தன் கண் தன்னைக் காட்டிக் கொடுக்கிறது என்பதை உணராத பத்மா, அவனுடன் பேச்சுக் கொடுக்க எண்ணி “ஏன் இன்று பஸ்ஸில் பிரயாணம் செய்கிறீர்கள்? உங்கள் மோட்டார் சைக்கிள் எங்கே?” என்று கேட்டு வைத்தாள்.

கமலநாதன் இப்படியொரு கேள்விக்காகவே தவங்கிடந்தவனைப் போன்று உற்சாகமாகப் பதிலளித்தான்: “சென்ற வாரம் நான் ஒரு மோட்டார் விபத்தில் மாட்டிக்கொண்டேன். அதனால் எனது சைக்கிளில் சிறிது பழுது ஏற்பட்டது. கராஜில் திருத்தப் போட்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் கிடைத்துவிடும்” என்று கொண்டே தனது உருண்டு திரண்ட வலது கை மணிக்கட்டில் பிளாஸ்டரால் போடப்பட்டிருந்த பெரிய கட்டைக் காண்பித்தான்.

பத்மா, “அப்படியா? ஆனால் உங்கள் தங்கை விமலாவோ, லோகாவோ இதைப் பற்றி வீட்டில் ஒன்றும் சொல்லவில்லையே? காயம் பலமோ?” என்று கேட்டாள்.

கமலநாதனுக்கு அவளது அக்கறையான பேச்சு ஒருவகைத் திருப்தியைத் தந்திருக்க வேண்டும். ஆகவே, புன்னகையுடன் “உங்களுக்கு எத்தனையோ கவலைகள் இருக்கும். அவற்றுக்கிடையே இந்த அர்த்தமற்ற செய்தியை ஏன் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற அவர்கள் எண்ணியிருக்கலாம்” என்றான் குறும்புப் பார்வையோடு.

பத்மா அவனது கறுத்தடர்ந்த மீசையைப் பார்த்த வண்ணமே பருவத்துக்கேற்ற பரிகாசப் பேச்சுக்கள் பேசுகிறான் என்று எண்ணிக்கொண்டு, “எனக்கா கவலைகள்? யார் சொன்னது?” என்று கேட்டாள்.

“யாரும் சொல்ல வேண்டியதில்லையே? உங்கள் கண்களில் இப்பொழுது கூட ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணீர்த் துளிகள் உங்கள் மனதை அப்படியே காட்டுகின்றன. கண்களைத் துடையுங்கள்” என்றான் கமலநாதன்.

பத்மா திடுக்கிட்டுக் கைக் குட்டையை எடுத்துக் கண்கள் இரண்டையும் அவற்றால் நன்றாகத் தேய்த்துத் துடைத்துக் கொண்டாள்.

“பார்த்தீர்களா, நீங்கள் நன்றாக அழுதிருக்கிறீகள். உங்கள் காதலனைப் பற்றிய பிரச்சினை ஏதாவது உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்க வேண்டும்” என்றான் கமலநாதன்.

“என் காதலனா? நீங்கள் சரியான ஆள். அப்படி ஒன்றும் இல்லை” என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன் கமலநாதன் “உங்கள் காதலனைப் பற்றி எனக்கெல்லாம் தெரியும். அவர் பெயர் ஸ்ரீதர் என்றும், வாட்டசாட்டமான ஆள் என்றும் விமலாவும் லோகாவும் வீட்டில் பேசிக் கொண்டார்கள். ஏன் இந்த விஷயம் கொலீஜ் ரோட்டில் பலருக்கும் தெரிந்ததுதான்” என்றான்.

பத்மா இதைக் கேட்டு மெளனமானாள். ஸ்ரீதரின் ஆள் மாறாட்ட மோசடி உடனே முற்றாக ஞாபகத்துக்கு வர, மீண்டும் கண்ணோரத்தில் வெளி வருவதற்குத் திமிறிய கண்ணீர்த் துளிகளை அவ்வாறு வெளிவராது கட்டுப் படுத்துவதற்குப் படாத பாடு பட்டாள் அவள். ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பி வீதிக் காட்சிகளில் மனதைச் செலுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்த அவளின் நிலையைக் கமலநாதன் ஓரளவு யூகித்துக் கொண்டு “உங்கள் மனதைப் பெரிய கவலை ஒன்று வருத்துகிறது என்று தெரிகிறது. என்ன விஷயம்?” என்று கேட்டான் அனுதாபத்துடன்.

பத்மா, அவன் மிகவும் சகஜமாக உரையாடும் முறையைக் கண்டு திடுக்கிட்டாள் என்றாலும் வீட்டுக்கு வந்து போகும் ஒருவன், தந்தையாரையும் தனது நிலையையும் நன்கு தெரிந்த ஒருவன் அவ்வாறு பேசும்போது அதனைக் குற்றமாக எண்ண முடியவில்லை.

இன்னும் கமலநாதன் மரியாதையாகவும் பண்போடுமே உரையாடினான். மேலும் அப்போது அவளிருந்த மனநிலையில் யாருடனாவது பேச வேண்டும் போன்ற ஓர் உணர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டது. உண்மையில் தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் அவனிடம் பூரணமாகக் கொட்டிவிடுவோமா, அவனது ஆலோசனைகளைக் கேட்போமா என்ற எண்ணம் கூட அவளுக்கு உண்டாகியது. ஆனால் அதற்கு அவள் மனம் நாணியது என்பது ஒரு புறமிருக்க, பஸ்சும், சீக்கிரமே கொட்டாஞ்சேனையை அடைந்துவிடும்; அதற்கிடையில் தான் விரும்பிய எல்லாவற்றையும் கூற நேரம் போதாது என்ற மற்றோர் எண்ணமும் அவள் பேச்சைக் கட்டுப்படுத்தியது. ஆகவே அவள், “என் கவலையை உங்களுக்குக் கூறி என்ன பிரயோசனம்? உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றாள்.

அதற்குக் கமலநாதன் “அப்படிச் சொல்வது தப்பு. இவ்வுலகில் ஒருவர் கவலையை இன்னொருவருக்குச் சொல்வதால் கவலையில் பாதிக் கனம் குறைகிறது. அது மட்டுமல்ல உங்கள் கவலை தீர எனக்குத் தெரிந்த ஆலோசனைகளையும் நான் கூற முடியுமல்லவா?” என்றான்.

அதற்கு பத்மா “உங்களை எனக்குப் போதிய அளவு தெரியாத நிலையில் நான் உங்களிடம் என் கவலைகளைச் சொல்வது எப்படி?” என்றாள்.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியாவிட்டாலும், எனக்கு உங்களைத் தெரியும். உங்கள் அப்பா சில சமயங்களில் உங்களைப் பற்றி என்னுடன் பேசியிருக்கிறார். இன்னும் விமலாவும் லோகாவும் வீட்டில் உங்களைப் பற்றி அடிக்கடி அரட்டையடிப்பது வழக்கம். நீங்கள் கொலீசுக்குப் போகும்போது எதை எப்படி உடுத்துவீர்கள். தலையை எப்படி எப்படியெல்லாம் அழகாகப் பின்னிக் கட்டுவீர்கள் என்பது பற்றிக் கூட அவர்கள் பேசிக்கொள்வார்கள். அம்மா கூட உங்களைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இன்றுதான் இவ்வளவு தூரம் உங்களுடன் பேச்சு கிடைத்தது என்றாலும், நான் உங்களை ஓர் அந்நியனாகக் கருதவில்லை. ஆகவே உங்கள் பிரச்சினையைக் கூறினால், என்னால் சில ஆலோசனைகளைக் கூற முடியுமென்றே எண்ணுகிறேன். இன்னும் எனக்கு அன்றாட மனோதத்துவதில் நல்ல ஈடுபாடு. உண்மையில் மனோதத்துவ நூல்களைத் தான் நான் அதிகமாக வாசிப்பது வழக்கம். சொல்லுங்கள் உங்கள் பிரச்சினையை. நான் நல்ல தீர்ப்பும் கூறுகிறேனா இல்லையா என்று பாருங்கள்” என்று கூறினான் கமலநாதன்.

பத்மா, “அப்படியா? உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியுமென்று எனக்குத் தெரியாமற் போனதே, பரவாயில்லை. எனது கவலையைப் பற்றி வேறொரு சமயத்தில் உங்களோடு பேசுவேன். இப்பொழுது பேசுவதற்கு நேரமும் போதாது. இதோ, பஸ் வண்டியும் மசங்கமாச் சந்திக்கு வந்துவிட்டது. அடுத்த பஸ் தரிப்பில் நாங்கள் இறங்க வேண்டுமல்லவா?” என்றான்.

கமலநாதன் “ஆம். நாங்கள் வேறு சமயத்தில் பேசிக்கொள்வோம். ஆனால் என்றும் எப்பொழுதும் என்னாலியன்று உதவிகளை நான் உங்களுக்குச் செய்யச் சித்தமாயிருக்கிறேன்” என்றான்.

சிறிது நேரத்தில் கொட்டாஞ்சேனையில் பஸ் நின்றதும் இருவரும் கீழே இறங்கித் தத்தம் பாதைகளில் பிரிந்து சென்றார்கள். நாங்கள் இருக்கும் வட்டாரத்தில் ஜோடியாகப் போனால் பலரும் பலவிதமாகக் கதைத்துக்கொள்வார்கள் என்ற அச்சமே அவர்களை அவ்வாறு செய்யும்படி தூண்டியது. இல்லாவிட்டால் கொலிஜ் ரோட்டுக்குப் போகும் இருவரும் ஜோடியாகவே பேசிக்கொண்டு சென்றிருக்கலாம்.

வீதியில் நடந்த பத்மாவின் மனம் அன்று காலையிலிருந்து ஒன்றன்பின்னொன்றால் நடைபெற்ற அனுபவங்களை இசை மீட்டுக் கொண்டிருந்தது. ஒரே நாளில் எத்தனை சம்பவங்கள்! ஸ்ரீதருடன் முதன்முறையாக ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குப் போய்க் கைகோத்துக் காதல் மொழி பேசிய இன்ப அனுபவம், பஸ் தரிப்பில் தங்கமணியின் சந்திப்பும் அதனால் ஏற்பட்ட விளைவும், பஸ்ஸிலே இப்பொழுது கமலநாதனுடன் உரையாடக் கிடைத்து சந்தர்ப்பம்.. அப்பாடா வாழ்க்கை என்பது பஞ்சகல்யாணிக் குதிரை வேகத்தில் அல்லவா போகிறது! சாதாரணமாக நத்தை வேகத்தில் கூடப் போகாத அவளது வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என்று அதிசயித்தாள் அவள். முன்மெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக, எவ்வித சம்பவமுமற்ற நாளாக, சுவையற்ற முறையில் கழியும். அதனால் ஏற்படும் சலிப்பைப் போக்க, தோட்டத்துப் பிள்ளைகளைக் கூட்டி வைத்து விளையாட்டுச் சொல்லிக் கொடுப்பது, அவர்களில் பெண் குழந்தைகளுக்குத் தலைவாரிப் பின்னி விடுவது, விடுதலை நாட்களில் கோயிலுக்குப் போவது போன்ற எதையாவது செய்வாள் அவள், இந்நிலைமை. அவள் நாடக மன்ற இணைக் காரியதரிசியாகிய பின்னர்தான் ஓரளவு மாறியது. ஸ்ரீதரின் காதலிணைப்பு ஏற்பட்ட பின்னர் அவனை அடிக்கடி காண்பதும், அவன் வீட்டுக்கு வருகையில் அவனோடு தந்தைக்குத் தெரியாது கண்ணாலும், வாயாலும் கைகளாலும் பேசிக் கொள்வதும், அவனைப் பற்றி நினைத்து நினைத்துப் புத்தக நிகழ்ச்சிகள் போல் அவளுக்குத் தோன்றின. அந்நிகழ்ச்சிகளில் சில அவளது உள்ளத்திற்கு வேதனையையும் விழிகளுக்குக் கண்ணீரையும் கொண்டு வந்த போதிலும் “வாழ்க்கையை வாழுகிறேன்” என்ற ஜீவ உணர்வு முன்னெப்போதிலும் பார்க்க இன்று அவளுக்கு மிக அதிகமாக ஏற்பட்டது. மனித இதயத்துக்குத் துன்பத்தை அனுபவிப்பதில் கூட இன்பம் இருக்கிறது. பலருக்கு வெறும் உப்புச் சப்பற்ற வாழ்க்கை வாழ்வதைவிட துன்பகரமான வாழ்க்கைகூட அதிக திருப்தியைத் தருகிறது. உண்மையில் வெறுமனே சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், மீண்டும் சாப்பிடுகிறோம் என்ற வாழ்க்கையை யார்தான் விரும்புவார்கள்!

ஸ்ரீதர் பொய்காரன் – அழகன் தான். கலைஞனும் கூடத்தான். பண்புள்ளவன் தான். ஒரு பெண்ணின் இதயத்தை மகிழ வைக்கும் அத்தனை சிறப்பம்சங்களும் பொருந்தியவன் தான். இருந்தாலும் என்ன பயன்? அவன் ஏன் பொய் சொன்னான்? என்னை ஏமாற்றிக் கைவிட்டு ஓடுவதற்காகத்தான் இருக்க வேண்டும். பணக்காரரின் போக்கு இதுதான் போலும்! பொய் விலாசம் கூறிப் பொல்லாங்கு செய்ய நினைத்த அவனுடன் மேலும் சிநேகமாய் இருப்பதும், அவனைக் காதலனாய் மதித்து உறவாடுவதும் ஆபத்தைக் கொண்டு வராவா? என்பன போன்ற கேள்விகள் பத்மாவின் உள்ளத்தில் எழுந்தன. இக்கேள்விகளைத் தொடர்ந்து அவர்களது தோட்டத்தில் 21ம் இலக்க வீட்டில் வசித்த குசுமா என்ற சிங்களப் பெண்ணின் பரிதாப நினைவும் அவளுக்கு ஏற்பட்டது. கட்டழகியான குசுமா தனது காதலனால் ஏமாற்றப்பட்டு இப்பொழுது ஒரு பிள்ளைக்குத் தாயாகிவிட்டாள். அவள் காதலனோ அவளைக் கைவிட்டுவிட்டு எங்கோ ஓடிப் போய்விட்டான். முழுத் தோட்டத்தாலும் ஒழுக்கங் கெட்டவள் என்று வர்ணிக்கப்பட்ட அவள் நினைவு வந்ததும் குசுமாவின் காதலன் போலவே ஸ்ரீதரும் வஞ்சனைத் திட்டம் ஒன்றை நிறைவேற்றி விட்டு, மெல்ல மறைவதற்குத் தான் தன் ஆள்மாறாட்ட நாடகத்தை ஆடியிருக்கிறான் என்று எண்ணினாள் பத்மா.

“உண்மையில் நான் தங்கமணியைக் கோபிப்பது பிசகு. அவளில்லா விட்டால் ஸ்ரீதரின் களவு வெளிப்பட்டிருக்காதல்லவா?” என்று கூடத் தனக்குள் தானே கூறிக்கொண்டாள் அவள்.

வீதியில் நடந்துகொண்டிருந்த பத்மாவின் எண்ணத்தில் கமலநாதனும் அடிக்கடி காட்சி தந்தான். அவளை அறியாமலே ஸ்ரீதருடன் கமலநாதனை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது அவள் மனம். கமலநாதன் எனக்குத் தெரிந்தவன். அருகில் வசிப்பவன். அவனால் என்னிடம் இப்படிப்பட்ட பொய் சொல்லியிருக்க முடியாது. மேலும், அவனும் அழகன்தான். ஸ்ரீதரின் செருக்கான ஆடம்பரத் தோற்றம் இல்லாவிட்டாலும் அவனும் ஒரு சினிமா நடிகன் போன்ற கவர்ச்சி கொண்ட காளை தான். இன்னும் அவன் பல்கலைக் கழகப் பட்டதாரியல்ல என்றாலும் யோக்கியமான உத்தியோகம் செய்பவன் தான். முனிசிப்பல் சுகாதாரப் பரிசோதகன். தங்கைகள் மீதும் தாயின் மீதும் பிரியம் கொண்டவன். என் மீதும் அன்புள்ளம் கொண்டவன். ஸ்ரீதருக்கு மீசை இல்லை. எல்லோரும் மீசை வைக்க வேண்டியது அவசியமில்லை என்றாலும் கமலநாதனின் கறுத்தடர்ந்த அரும்பு மீசை அவனுடைய சிவந்த முகத்துக்கு ஓர் அழகைக் கொடுக்கத்தான் செய்கிறது. இவ்வாறு பத்மாவின் மனம் எதை எதையோ எல்லாம் சிந்தித்தது. “கமலநாதனுக்கு என் மீது ஆசை. என்னதான் உலகத்துக்குப் பயந்து பண்பாக நடந்து கொண்டாலும் அவன் என்னைப் பார்த்தப் பார்வையும் என்னுடன் பேசுவதில் காட்டிய ஆர்வமும் அதை எனக்கு வெளிக் காட்டவே செய்தன” என்று பலவாறு எண்ணினாள் அவள். “ஸ்ரீதர் தனது பொய் வெளியாகியதும் எனது வாழ்க்கையை விட்டு அகன்றுவிட்டால் நான் என்ன செய்வது?” என்ற பீதியும் பத்மாவுக்கேற்பட்டது. அப்பா என்ன சொல்லுவார்? தனது மகளின் திருமணப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நினைத்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவர் திடுக்கிட்டுவிட மாட்டாரா? மேலும், தோட்டத்திலுள்ள பலருக்கும் ஸ்ரீதர் வருவதும் போவதும் தெரிந்திருந்தன. அவர்கள் வேறு பரிகாசம் செய்வார்கள். ஐயையோ! இதை எல்லாம் எப்படிச் சமாளிப்பது? கட்டிய கோட்டைகள் எல்லாம் இடிந்து விட்டனவே! – என்று கவலையில் மூழ்கினாள் அவள்.

ஓர் இள வாலிபனோடு சிநேகமாய் இருப்பதால் ஒரு யுவதிக்கு ஏற்படும் கர்வம், இன்பம், மனப்பூரிப்பு ஆகியவற்றை அன்று தான் பத்மா பரிபூரணமாக அனுபவித்திருந்தாள். காலையில் அந்த உணர்ச்சிகளில் மூழ்கி, வாழ்க்கையை மனதார அனுபவித்துக் கொண்டிருந்த போது, அதை ஒரு நாளோடு திடீரென முடிவுறும் சிறுகதையாக அவள் எண்ணவில்லை. பல காலம் நீடிக்கும் ஒரு தொடர் கதையாக அது வளர்ந்து வரும் என்றே அவள் எதிர்பார்த்தாள். ஆனால் என்ன செய்வது? எல்லாம் வேறு விதமாகப் போய்விட்டன. ஸ்ரீதர் என்னை ஏமாற்றிவிட்டாள். நாளை நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அவன் திணறுவான். அதன் பின் தன் களவு வெளிப்பட்டுவிட்டதே என்றெண்ணி ஓடி ஒளிந்து கொள்வான். பின்னர் அவன் என்னைத் தேடி வரமாட்டான். இன்னும், அவன் என்னை மனதார மணம் முடிக்க விரும்பினால் கூட, கோடீஸ்வரரான சிவநேசர் அதை அனுமதிப்பாரா? ஆகவே, சீக்கிரமே நான் தனித்துவிடுவேன். பிறகு, புது மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதான். ஆனால் ஸ்ரீதரைப் போல் அற்புதமான, மனங் கவரும் மாப்பிள்ளை எங்கே கிடைப்பான்? கடந்த இரண்டு மாதங்களாக அவனுடைய உறவால் ஏற்பட்டிருந்த காதல் மலர்ச்சிக்கு முடிவு வந்துவிடும். அதை என்னால் தாங்க முடியுமா? காதல் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத கறிபோல் மீண்டும் சப்பென்று ஆகிவிடுமோ, என்ன செய்வது?

பொழுது போவது எப்படி? புத்தகமும் கையுமாக இருக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் அப்பாவுடன் தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இல்லை, அப்பாவுடன் நீண்ட நேரங்கள் பேசி அவளுக்குப் பழக்கமில்லை. அடுத்த வீட்டு அன்னம்மாவுடன் அரட்டை அடிக்கலாம். ஆனால் அவளுக்குத் தோசையைப் பற்றியும், உழுந்தைப் பற்றியும் இறந்து போன அவளது கணவனைப் பற்றியும் தான் பேசத் தெரியும்? இன்னும் மனதைக் கவர்ந்த ஓர் ஆணழகனுடன் பேசும் கொஞ்சு மொழிகளுக்கு அவை ஈடாகுமா, என்ன? பருவத்தின் தாகத்தை அவை தணிக்குமா? ஸ்ரீதருக்குப் பதிலாகக் காதலர்களைச் சம்பாதிப்பது கஷ்டமல்ல. பத்மாவின் பொன்னிற உடலும் தளுக்கு நடையுமே போதும் அதற்கு. ஆனால் கல்யாணம் என்ற முடிவு வரை நின்று பிடித்து, வாழ்க்கைத் துணையாக அவளுடன் வரத் தயாராக இருக்கும் நல்ல காதலன் எங்கே கிடைப்பான் என்று கவலையடைந்த பத்மா மனதில் கறுத்தடர்ந்த மீசை கொண்ட கமலநாதன் மீண்டும் காட்சியளித்தான்.

ஆனால் அவளுக்கு அதனால் மீண்டும் இன்பம் ஏற்படவில்லை. தான் இதுவரை தீட்டியிருந்த காதற் கனவும் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று முரணான இரு துருவங்கள் போல் அவளுக்குக் காட்சியளித்தன. உண்மையில் பத்மா தனது காதலை ரோமியோ – சூலியட், லைலா – மஜ்னு காதலுக்குச் சமமான ஒரு காதலாகவே இது வரை எண்ணியிருந்தாள். அத்தகைய காதலில் கமலநாதன் போல் ஓர் இரண்டாம் காதலனுக்கு இடமேது? ஆகவே கமலநாதனின் நினைவு வரக் கூடாதென்றே அவளது மனதின் ஒரு பகுதி விரும்பியது. ஆனால் ஸ்ரீதருக்கும் ரோமியோ – மஜ்னுவுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அழகிலும் கவர்ச்சியிலும் ஒரு வேளை ஸ்ரீதர் ரோமியோவையும் மஜ்னுவையும் மிஞ்சியவனாகக் கூட இருக்கலாம். ஆனால் காதலில்…? ரோமியோவோ, மஜ்னுவோ ஸ்ரீதரைப் போல் பொய்யர்களல்ல. குசுமாவின் காதலனைப் போல் தங்கள் காதலியரைக் கற்பழித்துவிட்டுக் கம்பி நீட்டியவர்களல்ல. அவர்கள் தங்கள் காதலிமாருக்குப் பொய் விலாசம் கொடுத்துக் காதல் புரிந்துவிட்டு ஓடிப் போனவர்களல்லவே! ரோமியோ சரியாக நடந்தால் சூலியட்டும் சரியாக நடந்து கொள்வாள். ஆனால் இன்றைய கள்ள ரோமியோக்களுக்கு நல்ல சூலியட்டுகள் எங்கே கிடைப்பார்கள்? ஸ்ரீதரும் ஒரு கள்ள ரோமியோ தானே? அவனுக்காக என் வாழ்க்கையை நான் நாசமாக்கிக் கொள்ளக் கூடாது. மேலும் உயிர் துறக்கும் காதல் எல்லாம் நாடகத்துக்கும் காவியத்துக்கும் தான் சரி. இன்றைய உலகுக்குச் சரிப்படாது. மேலும் அக்காலத்துக்கு லைலா – மஜ்னு காதல் ஆதர்சம் என்றால், இன்றைய உலகிற்கு ஹொலிவூட் நடிகர்களின் காதல்தான் ஆதர்சம். இளவரசர் அலிகான் – ரீட்டா ஹேவொர்த் காதல்தான் இன்றைய உலகிற்கு முன்மாதிரி. உலகம் அவர்களைப் புறக்கணித்துவிட்டதா என்ன? உயர்த்தித்தானே பேசுகிறது? அன்று சூலியட் புகழை ஷேக்ஸ்பியர் பாடினார். இன்று அலிகான் – ரீட்டா காதலைப் பத்திரிகையாளர்கள் பாடுகிறார்கள். ஆகவே ஸ்ரீதர் போனால் புதிய மாப்பிள்ளை வேண்டும் என்று எண்ணுவதில் என்ன தவறிருக்கிறது? இன்றைய நாகரிகப் பெண்கள் உலகெல்லாம் செய்வதைத்தானே நானும் செய்ய நினைக்கிறேன்? ஆனால் காதலனைத் தேடும் படலத்தில் மறுபடியும் இன்னொரு பொய்யனைத் தேடிக்கொண்டுவிடக் கூடாது. கமலநாதன் பற்றிய விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். அவனால் என்னிடம் பொய் கூற முடியாது. அவனையே என் காதலனாக ஏற்றுக் கொண்டாலென்ன? அழகும் பண்பும் கொண்ட அவன் பஸ்ஸில் எவ்வளவு அருமையாக என்னுடன் பழகினான்? என்னுடன் நெருங்கிப் பழக அவனுக்குச் சிறிது இடம் கொடுத்தாலென்ன? ஸ்ரீதர் மீது எனக்கு ஆசை ஏற்பட்டதும் அவன் செய்தது அதுதானே? நான் இப்பொழுது இந்தத் துறையில் அனுபவசாலி. ஒன்றும் தெரியாத நிலையிலேயே சிறிதும் அனுபவம் இல்லாமலே ஸ்ரீதர் விஷயத்தில் நான் வெற்றி பெற்றேன். எனவே கமலநாதன் விஷயத்தில் வெற்றி பெறுவது மிக மிகச் சுலபம்! இன்னும் கமலநாதனுக்கோ என்னை ஏற்கனவே பிடித்திருக்கிறது. லோகாவும் விமலாவும், என் பின்னலைப் பற்றிப் பேசுவார்களாம்! சாமர்த்தியமாகத் தனக்கு என் மீதுள்ள ஆசையை எவ்வளவு தளுக்காக வெளிப்படுத்திவிட்டான் அவன்? அவளது அம்மாவுக்கும் என்னைப் பிடிக்கிறதாம்!

கமலநாதனுக்கு என் மீது காதல்தான். ஐயமில்லை. பத்மா இவ்வாறு யோசித்து முடிவதற்கும் வீட்டுக்குள் புகுவதற்கும் சரியாய் இருந்தது. அப்பா பரமானந்தர் சாய்மனை நாற்காலியில் பத்திரிகை வாசித்தபடியே தூங்கிப் போயிருந்தார். ஓசைப்படாது உள்ளே புகுந்த பத்மா, கண்களை நிமிர்த்திச் சுவரிலிருந்த பழைய கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. வழக்கம் போல் அடுத்த வீட்டு அன்னம்மா மத்தியான உணவை மேசை மீது பரப்பியிருந்தாள். கருவாட்டு மணம் மூக்கைத் துளைத்தது. அதைச் சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் கட்டிலில் படுத்திருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், “ஹாண்ட் பாக்”கையும் படிக்கும் மேசை மீது அலுப்போடு வீசிவிட்டுத் தனது அறைக்குள் புகுந்தால் பத்மா. அப்பொழுது “இன்னும் ஒரு மணி நேரத்தில் கமலநாதனின் தங்கையர் இருவரும் வருவார்கள். அவர்களின் வாயைக் கிண்டி அவர்கள் அண்ணனைப் பற்றிப் பேச வேண்டும்” என்றும் தீர்மானித்தாள்.

அதே நேரத்தில் கொலீஜ் ரோடு 30ம் இலக்கத் தோட்டத்திலிருந்த கமலநாதன் வீட்டில் ஒரு சம்பவம்.

விமலாவும் லோகாவும் அவர்கள் புத்தகங்களை அழகாக அடுக்குவதில் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“பார்த்தாயா, எனது புத்தகங்கள் தான் அழகு!” என்றாள் விமலா.

“போ, என் புத்தகங்கள் தான் அழகு. இதோ பார். உன் புத்தகத்தின் மட்டையில் எவ்வாறு மையைக் கொட்டி வைத்திருக்கிறாய்!” என்றாள் லோகா.

“அந்த மை நீ கொட்டியதுதானே!” என்று சீறினாள் விமலா.

கமலநாதன் “என்ன சண்டை?” என்று கொண்டே உள்ளே நுழைந்தவன் “உங்கள் டீச்சர், வாசிப்பதற்குப் புத்தகம் கேட்டதாகச் சொன்னாயல்லவா? நான் ஒரு புத்தகத்தைத் தருகிறேன். கொண்டு போய்க் கொடுங்கள்’ என்றான்.

“என்னிடம் கொடு, அண்ணா.” என்றாள் விமலா.

“என்னிடம் கொடு, அண்ணா. நான் தானே டீச்சருக்குப் புத்தகம் வேண்டுமென்று உன்னிடம் சொன்னேன்?” என்றாள் லோகா.

“சரி. இரண்டு புத்தகம் கொடுக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கொண்டு போங்கள். ஆனால் பத்திரமாகத் திருப்பி வாங்கித் தந்துவிட வேண்டும்.” என்றான் அண்ணன்.

அதன் பிறகு தன் புத்தக அலமாரியிலிருந்து இரு புத்தகங்களை எடுத்துக் கொடுத்தான் கமலநாதன். ஒன்று “கவலைகளைத் தீர்ப்பதெப்படி?” என்ற ஆங்கில மனோதத்துவ நூல். மற்றது தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட காதல் நவீனம்.

விமலாவும் லோகாவும் மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டார்கள். “எனது புத்தகம் தான் அழகானது” என்றாள் ஆங்கில புத்தகத்தைப் பெற்றா விமலா. “கதைப் புத்தகம் தான் டீச்சருக்குப் பிடிக்கும். பார்ப்போமா?” என்றாள் லோகா துள்ளிக்கொண்டு.

கமலநாதன் தங்கையின் பேச்சைக் கேட்டுத் தனக்குள்ளே சிரித்துக் கொண்டானாயினும் பஸ்ஸில் பத்மாவின் சந்திப்பால் ஏற்பட்ட மனச்சலனம் அவன் மனதில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியிருந்தது. “ பிறனொருவனால் நேசிக்கப்படும் ஒரு பெண் மீது நான் என் புலனைச் செலுத்துவது சரியா?” என்பதே அது.

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்

ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீரெனக் கோட்டைக்குப் போய் ஓவியம் வரைவதற்கு வேண்டிய சில பொருள்களை வாங்க வேண்டுமென்ற நினைவு வர, டாக்ஸி டிரைவரிடம் கோட்டைக்குப் போகும் படி உத்தரவிட்டான். ஏற்கனவே அவன் கொண்டு வந்திருந்த வண்ண மைகளும், ஓவியத் தாள்களும் தீர்ந்து போயிருந்ததால் அவன் அவற்றை இன்று சற்று அதிகமாகவே வாங்க வேண்டியிருந்தது. பொதுவாக ஸ்ரீதரின் பொழுதுபோக்குக் கலைகளில் சித்திரம் எழுதுவது முக்கியமான ஒன்றேயாயினும் இன்று அவன் அதில் இவ்வளவு நினைவாயிருந்ததற்குப் புதிய காரணம் ஒன்றும் இருக்கிறது. தன் காதலி பத்மாவின் படமொன்றைத் தன் கையால் எழுத வேண்டுமென்று அவன் “ஐஸ்கிறீம் பார்லரி”ல் தனக்குள் முடிவு செய்திருந்ததே அது.

பத்மாவின் மது விழிகளும், அவற்றுக்கு மேலெல்லையாகக் கோதண்டம் போல் விளங்கிய அவளது வளைந்த புருவங்களும், அப்புருவங்களுக்கும் அவளது வண்டு விழிகளுக்குமிடையே துடிதுடித்துக் கொண்டிருந்த மயிரடர்ந்த பூவிதழ் போன்ற இமை மடல்களும் அன்று அவனை முன்னெப்போதுமில்லாத அளவுக்குக் கவர்ந்திருந்தன. காதல் வயபட்ட ஓர் ஆணின் கண்களிலே, ஒரு பெண்ணின் அழகு பார்க்குந்தோறும், புத்தெழில் பெற்றுப் பொலிகிறது. நல்ல கவிதையை வாசிக்க வாசிக்க, அதில் புதிய நயங்கள் தோன்றுவது போலக் காதற் கன்னியையும் பார்க்கப் பார்க்கப் புதிய அழகுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. “அவள் புறங்கை எவ்வளவு அழகாயிருக்கிறது! அவள் விரல்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன! அவள் நெற்றியில் காணப்படும் பூனை மயிர் கூட எவ்வளவு அழகு! நேற்று நான் அவற்றைக் காணாமல் கண்ணிருந்தும் குருடனாயிருந்ததற்குக் காரணம் என்ன? அவள் பால் எனக்குள்ள காதல் போதிய அளவு வளர்ச்சி பெறாததா? அப்படியானால், நான் குற்றமுடையவனல்லவா?” என்று கூடக் காதலர்கள் தாபமடைவதுண்டு. பத்மாவைப் பொறுத்த அளவில் ஸ்ரீதரும் அவளிடத்துத் தினந்தோறும் ஒரு புதிய அழகைக் காணக் கூடிய காதற் பரவச நிலையிலேயே இருந்தான். “ஐஸ்கிறீம் பார்ல”ரில் வெகு அருகில் அமர்ந்து அவளது அழகைப் பல கோணங்களிலிருந்தும் அள்ளிப் பருகிய அவன், அவளைத் தெவிட்டாத பேரழகை ஓவியமாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். அந்த ஆசை தான் அதற்கு வேண்டிய பொருள்கள் யாவற்றையும் உடனே சித்தம் செய்யும்படி அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது. கோட்டைக்குப் போய் ஒன்றுக்குப் பதில் நாலு கடைகளில் ஏறி இறங்கி, அவற்றை வாங்கிக் கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்த பொழுது சரியாக மணி இரண்டாகி விட்டது. வேலைக்கார சுப்பையா கேட்டைத் திறந்து டாக்ஸியை பங்களா வளவுக்குள் அனுமதித்து, அதிலுள்ள சாமான்களை எடுக்க, ஸ்ரீதர் டாக்சிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, பங்களாவுக்குள் நுழைந்த பொழுது, அங்கே அவனை வரவேற்க, இன்பமான செய்தி ஒன்று காத்திருந்தது.

விறாந்தையில் நின்று கொண்டிருந்த சுரேஷ் “ஸ்ரீதர்! நான் பரீட்சையில் சித்தியடைந்துவிட்டேன். அதுவும் முதலாம் பிரிவில்!” என்றான் எக்களிப்போடு.

ஸ்ரீதருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தன் நண்பனின் வெற்றியைத் தனது வெற்றி போல் நினைத்து மகிழ்ந்த அவன் “அடி சக்கை! அப்படியானால் இந்த வெற்றியைக் கொண்டாட நாமிருவரும் இன்று படம் பார்க்கப் போக வேண்டும்” என்றான்.

“ஆகட்டும்” என்று தலை அசைத்தான் சுரேஷ். சுரேஷின் இப்பதில் ஸ்ரீதருக்கும் மிகுந்த களிப்பைத் தந்தது. படம் பார்க்கப் போகும் வழியிலும், திரும்பும் போதும் பத்மா சம்பந்தமான யாவற்றையும் சுரேஷிடம் பேசித் தீர்ந்துக் கொள்ளலாம் என்று அவன் நினைத்ததே அதற்குக் காரணம். ஸ்ரீதர் “சுரேஷ்! நீ பரீட்சையில் சித்தியடைந்து விட்டாய். ஆகவே இனி மேல் நான் உன்னைச் சும்மா சுரேஷ் என்று அழைக்கக்கூடாது. டாக்டர் சுரேஷ் என்று அழைக்க வேண்டும். கனம் டாக்டர் அவர்களே! இந்தச் சுப செய்தியைத் தாங்கள் தங்கள் அன்னையாருக்கும் அத்தை மகளுக்கும் அறிவித்துவிட்டீர்களா!” என்றான் கேலியாக.

“அதெல்லாம் காலையிலேயே தந்தி அடித்து விட்டேன். முதலில் மாமாவுக்கும் அத்தை மகளுக்குந்தான் தந்தி கொடுத்தேன். அவர்கள் என் விஷயத்தில் போட்ட முதலீடு நல்ல பங்குப் பணத்தைத் தந்துள்ளது என்பதை அறிவிக்க வேண்டியது என் கடனல்லவா? அம்மாவைப் பொறுத்தவரையில் நான் பாஸென்றாலும் பெயிலென்றாலும் நான் அவள் பிள்ளை. மாமாவுக்கோ நான் பாஸ் பண்ணினால் தானே டாக்டர் மாப்பிள்ளை! உண்மையில் நான் பரீட்சையில் தோற்றிருந்தேனானால் மாமாவின் பணத்தை மோசடி செய்தது போன்ற பெரிய குற்ற உணர்ச்சி எனக்கேற்பட்டிருக்கும்.” என்றான் சுரேஷ்.

“ஆனால் நிச்சயம் அவர் அப்படி எண்ணியிருக்க மாட்டார்.” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷ், “அதை எப்படி நாம் அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியும்? ஆனால் அந்தப் பிரச்சனைக்கே இப்போது இடமில்லை. நான் தான் முதலாம் பிரிவில் வெற்றி பெற்று விட்டேனே!” என்று கூறிவிட்டு, காதற் கதை கேட்கும் ருசியில் “ஸ்ரீதர்! பத்மாவை இன்று கண்டாயா? என்ன சொன்னாள்?”

ஸ்ரீதர், “அதெல்லாம் பெரிய கதை. இன்று நான் அவனைப் பம்பலப்பிட்டி ‘எஸ்கிமோ’வுக்குக் கூட அழைத்துச் சென்றேன். எல்லா விவரங்களும் பின்னர் சொல்லுகிறேன். நீயோ மூக்கு முட்டச் சாப்பிட்டிருக்கிறாய். எனக்கோ கடும் பசி என்று சொல்லிச் சாப்பாட்டு மேசைக்குத் தாவிச் சென்றுவிட்டான். காலையில் பத்மாவுடன் ஐஸ்கிறீம் அருந்திய பிறகு வேறொன்றும் உண்ணாததால் வயிற்றைக் காந்தும் கடும்பசி அவனுக்கு!

சாப்பாட்டிற்குப் பிறகு நண்பர் இருவரும் விறாந்தையிலே மின்விசிறியின் கீழ் உண்ட களைப்புத் தீர இளைப்பாறினார்கள்.

“சுரேஷ்! நீ இங்கிலாந்துக்குப் போவதற்கு உனக்கு நல்ல “சூட்”டொன்றைப் பரிசளிக்க விரும்புகிறேன். எப்படிப்பட்ட சூட் வேண்டும்?” என்றான் ஸ்ரீதர்.

“பரிசு எப்படி இருக்க வேண்டுமென்பது பரிசளிப்பவரின் மனதைப் பொறுத்தது. நானே எனக்கு இது வேண்டுமென்று கூறி, அதைத் தரும்படி உன்னிடம் கேட்டால், அது பரிசல்ல, பிச்சையாகும்.” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர், “அதுவும் சரிதான். அப்படியானால் நானாகவே உனது தோற்றத்துக்கு ஏற்ற சூட்டொன்றைத் தெரிந்தெடுத்துவிடுகிறேன். ரூபா எழுநூற்றைம்பது பெறுமதியான “டெர்லீன்” சூட்டொன்றையும் உயர்தரமான கைக் கடிகாரம் ஒன்றையும் வாங்கித் தருகிறேன்.” என்றான்.

சுரேஷ் திகைத்துவிட்டான். “எழுநூற்றைம்பது ரூபாவா? பணத்திற்கு எங்கே போவாய்? அப்பாவிடம் கேட்டு வாங்கப் போகிறாயா? எனக்குப் பரிசளிப்பதற்காக நீ அப்பாவிடம் பணம் கேட்கக்கூடாது” என்றான் அவன்.

ஸ்ரீதர், “அதற்கு அவசியமே இல்லை. என்னிடம் எனது சொந்தப் பணம் ஏராளமிருக்கிறது. உனக்குச் செலவுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேள். தருகிறேன்.” என்றான்.

“சொந்தப் பணமா!” என்றான் சுரேஷ் ஆச்சரியத்துடன்.

“ஆம். எங்களுக்குச் சொந்தமான தேயிலை, ரப்பர்த் தோட்டங்கள் கண்டியிலும் காலியிலும் இருக்கின்றனவல்லவா? அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை அப்பா ஹரிசன் கம்பெனியின் பொறுப்பில் விட்டிருக்கிறார். நிர்வாக வேலைகளுக்காக அவர்கள் வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கிறார்கள். எஞ்சிய பணத்தில் மாதம் ஆயிரம் ரூபாவை எனது வங்கிக் கணக்குக்கும், இன்னோர் ஆயிரம் ரூபாவை அம்மாவின் கணக்குக்கும் எங்கள் கைச் செலவுக்காக அனுப்புகிறார்கள். அப்பாவின் உத்தரவு அது. மிச்சப் பணம் அப்பா கணக்குக்குப் போகிறது.” என்றான் ஸ்ரீதர்.

“அப்படியா விஷயம்? இது எனக்கு முன்னர் தெரியாது. நீ அப்பணத்தை என்ன செய்கிறாய்?” என்று கேட்டான் சுரேஷ்.

“என்ன செய்வது? அது தன் பாட்டில் கிடக்கிறது – இடையிடையே நான் எடுக்கும் இருநூறு முந்நூறு ரூபாய்களைத் தவிர்த்து, வேலைக்காரன் சம்பளம், டிரைவர் சம்பளம் தொடக்கம், வீட்டுச் செலவு, மின்சாரச் செலவு, பெட்ரோல் செலவு வரை அப்பா கட்டி விடுகிறார். ஆகவே எனது வங்கிக் கணக்கில் இப்பொழுது பல ஆயிரக் கணக்கான ரூபா இருக்க வேண்டும்.” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷ் சிரித்துக் கொண்டு “நீ செல்லப்பிள்ளை. ஆனால் ஒன்று நீ சிகரெட் குடிப்பதில்லை. மதுபானம் அருந்துவதில்லை. மற்றப் பணக்காரப் பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது நீ உயர்தரமானவன்” என்றான்.

ஸ்ரீதர், “என்ன, ஒருவன் மதுபானம் அருந்தாவிட்டால், சிகரெட் குடிக்காவிட்டால், உயர்ந்தவனாகி விடுவானா? நான் ஒரு மனிதன் உயர்ந்தவனாக வேண்டுமென்றால், சாக்ரட்டீஸ் போல் அல்லது மகாத்மா காந்தி போல ஏதாவது பெரிய காரியம், செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தேன்.” என்றான்.

சுரேஷ், “அதுவும் சரிதான். ஆனால் நீ மற்றவர்கள் போல் மதுபானம் அருந்த நினையாததற்குக் காரணம் என்ன?” என்றான்.

“அதுவா? எந்த மதுபானமும் வாய்க்கு ருசியாக இல்லாதிருப்பதே அவற்றை நான் அருந்தாததற்குக் காரணம். சாராயம் தொடக்கம் விஸ்கி வரை எல்லாமே ஒரே கசப்பாகத்தானே இருக்கின்றன. சர்பத், பழரச பானங்கள், ஐஸ்கிறீம், பால் இவற்றின் சுவைதான் எனக்குப் பிடிக்கிறது. அதுதான் வேண்டிய நேரமெல்லாம் அவற்றைத் தாராளமாக அருந்துகிறேன்” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷிற்கு ஸ்ரீதரின் விளக்கம் பொருத்தமாகப் பட்ட போதிலும், விநோதமாக இருந்தது. அறிஞர் பெர்னாட்ஷா எங்கோ கூறியிருப்பது போல, இவ்வுலகில் உண்மையைப் போல விநோதமானதும் புதுமையானதும் வேறு இல்லை. பொய்மையின் நடுவே உண்மை விநோதப் பொருளாகத் தோன்றுவதில் என்ன ஆச்சரியம்?

“ஸ்ரீதர்! மதுபானம் அருந்தாததற்கு நீ சொன்ன விளக்கம் சரி. ஆனால் சிகரெட் குடிக்காததற்கு என்ன காரணம்?” என்றான் சுரேஷ்.

“மற்றவர்களின் சிகரெட் குடிப்பதற்கு என்ன காரணமோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் சிகரெட் குடிக்காததற்குக் காரணம், அது என் கையைச் சுட்டு விடுவதாகும். சில சமயம் சட்டையையும் சுட்டு விடுகிறது. இன்னும் அதன் சாம்பல் சட்டைகளைப் போட்ட உடனேயே அழுக்கடையச் செய்துவிடுகிறது. அதற்காக உடனே புதுச் சட்டையைப் போட்டுக் கொள்ளலாமென்றால் ஒரு நாளுக்கு எத்தனை தாம் சட்டையை மாற்றுவது? என் சோம்பல் அதற்கு இடமளிக்க வில்லை” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷிற்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. “ஏன் சிரிக்கிறாய்? நான் சொல்வது உண்மையில்லையா?” என்றான் ஸ்ரீதர்.

“உண்மைதான். ஆனால் பொய் நிறைந்த உலகத்தில் உண்மையைப் போல் பெரிய ஹாஸ்யம் வேறில்லை. அதுதான் சிரிக்கிறேன்” என்று மேலும் சிரித்தான் சுரேஷ்.

ஸ்ரீதர், “நான் சிகரெட் குடிக்காததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சிகரெட் பிடித்தால் புற்றுநோய் உண்டாகுமென்று பல நிபுணர்கள் கூறியிருப்பதாகப் பத்திரிகைகளில் வாசித்தேன்” என்றான்.

“அவை எல்லாம் சுத்தப் பொய். ஒரு சில டாக்டர்கள் அப்படிச் சொன்னால், இன்னும் பலர் புற்றுநோய்க்கும் சிகரெட்டுக்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள். உண்மையில் சிகரெட்டை ஒரு போதும் உபயோகியாத பல பெண்களுக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர், “இருக்கலாம். ஆனால் நீ கூறும் டாக்டர்களின் யார் சரி? அந்தப் பிரச்சினையைத் தீர்க்க எனக்குச் சக்தி போதாது. ஆகவே ஏன் ஆபத்தான வழியில் செல்ல வேண்டுமென்று சிகரெட் பிடிப்பதையே தவிர்த்துக் கொண்டேன். எனக்கு வாழ்வதில் ஆசை. அதனுடன் என் கைகளைச் சுட்டுக் கொள்ளவும் நான் விரும்பவில்லை.” என்றான்.

சுரேஷ், “ஸ்ரீதர்! ஆயிரம் ரூபா வருமானமுள்ள நீ சிகரெட் பிடிக்காமலும், மதுபானம் அருந்தாமலுமிருக்க, ஐம்பது அறுபது ரூபா வருமானமுள்ளவன் அவற்றை எவ்வளவு அவாவுடன் உபயோகிக்கிறான், பார்த்தாயா?” என்றான்.

ஸ்ரீதருக்குச் சுரேஷின் இவ்வார்த்தைகள் ஆச்சரியத்தை ஊட்டின.

“சுரேஷ்! நீ சொல்வது எனக்கொன்றுமே விளங்கவில்லை. பணமிருக்கிறதென்பதால் தனக்குப் பிடித்தமில்லாத பானங்களையும் சட்டையை அழுக்காக்கும் சிகரெட்டுகளையும் ஒருவன் உபயோகிக்க வேண்டுமா? பணத்துக்கும் இவற்றுக்கும் எதுவும் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஒருவனது மூளைக்கும் இவற்றுக்கும் சம்பந்தமிருப்பதாகக் கூறினால் ஒரு வேளை ஒத்துக் கொள்வேன். முறையாக வேலை செய்யும் மூளை உள்ளவன் எவனும் இவற்றை உபயோகிக்கமாட்டான்” என்றான் ஸ்ரீதர்.

அதற்குச் சுரேஷ், “ஒருவனிடம் பணம் குறைவாயிருந்தால், மூளையும் குறைவாகத் தான் வேலை செய்யுமோ, என்னவோ? நீ பரம்பரைப் பணக்காரனாய்ப் பிறந்து பணத்திலே புரள்வதால் பணத்தின் நன்மைகள் உனக்குத் தெரியவில்லை. அதை உனக்கு எடுத்துச் சொல்வதும் கடினம்தான்.” என்று பதிலளித்தான்.

ஸ்ரீதர், “சிகரெட் பிடிப்பது பற்றிய இந்தத் தத்துவ ஆராய்ச்சியை வேறொரு நேரத்துக்கு வைத்துக் கொள்ளுவோம். இப்பொழுது கை மேலிருக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவோமோ? பரீட்சையில் சித்தி அடைந்ததற்காக நான் உனக்களிக்கும் பரிசு போக, நீ இங்கிலாந்துக்குப் போவதற்கு உனக்கேதாவது பணம் வேண்டுமா? எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்” என்றான்.

சுரேஷ், “ஸ்ரீதர்! பணம் என்பது இவ்வுலகில் ஒருவரிடமிருந்து ஒருவர் இனாமாகப் பெறும் பொருளல்ல. அதனால் கொடுப்பவனை விட வாங்குபவன் தன் கணிப்பிலேயே இழிந்த மனிதனாகி விடுகிறான். இவ்வுலகில் ஒருவனுக்கு அதை விடப் பெரிய நஷ்டம் வேறென்ன? பணத்தை ஒவ்வொருவனும் தானே முயன்று சம்பாதிக்க வேண்டுமென்பதே உலக நியதி. சங்க நூலொன்றில் கூட இது பற்றி ஒரு பாட்டிருக்கிறது. நீ கேள்விப்பட்டதுண்டா?” என்று கேட்டான்.

ஸ்ரீதர் “இல்லை” என்று தலையாட்டினான்.

சுரேஷ் பாட்டை ஓதிக் காட்டினான்.

“ஈ என இரத்தல்
இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல்
அதனினும் இழிந்தன்று
கொள் எனக் கொடுத்தல்
உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல்
அதனினும் உயர்ந்தன்று”

“புறநானூற்”றில் வரும் இப்பாட்டின் பொருள் என்ன தெரியுமா? தருவாய் என்று கேட்டல் இழிந்தது. அதற்குத் தர மாட்டேன் என்று பதில் கூறுதல் அதனினும் இழிந்தது. இதனைப் பெற்றுக்கொள் என்று வாரிக் கொடுத்தல் உயர்ந்தது. ஆனால் அதை வேண்டாமென்று மறுத்தல் அதனினும் உயர்ந்தது. அதாவது ஈ என்று இரத்தல் கூடாது. கொள் என்று தந்தாலும் வாங்கக் கூடாது. தனக்கு வேண்டிய பொருளைத் தானே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே பொருள்” என்று பாட்டை ஓதிப் பயனும் கூறினான் சுரேஷ்.

ஸ்ரீதர், “சுரேஷ்! நீ ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். அரசியல் தொடக்கம் இலக்கியம் வரை இந்த உலகத்தையே கரைத்துக் குடித்திருக்கிறாய். இவை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள உனக்கு எப்படித்தான் அவகாசம் கிடைக்கிறதோ?” என்று ஆச்சரியத்தோடு கூறிவிட்டு, “படம் பார்க்கப் புறப்படுவோமா? பத்மாவதி புராணத்தை வழியிலே அவிழ்க்கிறேன்” என்று சொல்லி உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்துக் கொண்டே தன்னாசனத்தை விட்டெழும்பினான்.

சிறிது நேரத்தில் ஸ்ரீதரின் “பிளிமத்” கார் சுரேஷையும் ஏற்றிக் கொண்டு ரீகல் தியேட்டரை நோக்கிப் பறந்தது. டிரைவரின் ஆசனத்தில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்த ஸ்ரீதர் சுரேஷிடம் பத்மாவதி புராணத்தை அவிழ்த்துக்கொண்டிருந்தான்.

இது இங்கே நடந்து கொண்டிருக்க, கொட்டஞ்சேனை கொலீஜ் ரோட்டில் விமலாவுக்கும் லோகாவுக்கும் ஆங்கிலப் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தாள் பத்மா. ஆனால் குழம்பிப்போயிருந்த அவள் மன நிலையில் பாடம் சொல்லிக் கொடுப்பது அவ்வளவு இலேசாக இருக்கவிலை. எனவே மிக விரைவாகவே அதை முடித்துக்கொண்டு விமலாவையும் லோகாவையும் வீட்டுக்கனுப்பி விட்டு, மீண்டும் ஸ்ரீதரின் மோசடியைப் பற்றிக் கவலைப்படுவதற்காக ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தாள் அவள். ஸ்ரீதரின் மீது அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அழுகை பீறிட்டது! விமலாவும் லோகாவும் கொண்டு வந்து கொடுத்திருந்த கமலநாதனின் புத்தகங்களை அப்படியே மடியில் வைத்துக் கொண்டு மெல்ல அழத் தொடங்கினாள் அவள்.

இடையிலே மனம் அப்புத்தகங்களைப் பரிசீலிக்கும்படியும் தூண்டியது. “கவலைகள் தீர வழி” என்ற புத்தகத்தை முதலில் புரட்டினாள் அவள். இதை அவன் அனுப்பியதற்குக் காரணம் பஸ்ஸில் தான் கண்ணீர் உகுத்ததை அவன் கண்டது தான் என்பதை அவள் இலகுவாக உணர்ந்து கொண்டாள். “கமலநாதனுக்கு எனது கவலைகளைப் போக்க ஆசை. ஆனால் அவனுக்கு அந்த உரிமை ஏது? அவன் என்ன எனது காதலனா?” என்று சிந்தித்த பத்மா, “காலத்தின் சுழற்சியிலே அவன் என் காதலனாக முடியாது. என்று யார்தான் கூற முடியும்?” என்று அதற்குப் பதிலளித்தும் கொண்டாள். பின் “இப்படிப்பட்ட நினைவுகள் என் மனத்தில் வருவது தப்பல்லவா?” என்று தன்னைத் தானே கடிந்து கொண்ட அவள், “ஸ்ரீதர் செய்த ஆள்மாறாட்ட மோசடிதானே இந்த நினைவுகளுக்குக் காரணம்” என்று குற்றத்தை அவன் தலையில் போட்டுவிட்டு, மீண்டும் கண்ணீர் உகுத்து அழ ஆரம்பித்தாள்.

இதற்கிடையில் தந்தை பரமானந்தர் தன் பிற்பகல் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து வந்தவர் பத்மா அழுது கொண்டிருப்பதைக் கண்டு பதைபதைத்து, “என்னம்மா, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார். அவள் திடுக்கிட்டெழுந்து முந்தானையால் கண்களைத் துடைத்த வண்ணம் “ஒன்றுமில்லை” என்று சொல்லிக் கொண்டே வீட்டின் பிற்புற வாசலை நோக்கி நடந்தாள்.

“என்ன, ஒன்றுமில்லையா? யாராவது ஒன்றுமில்லாமல் அழுவார்களா? பைத்தியக்காரி, என்ன விஷயமென்று சொல்லு” என்று வற்புறுத்தினார் தந்தை.

பத்மா முதலின் ஸ்ரீதரின் ஆள்மாறாட்ட மோசடி பற்றிப் பேசுவதற்குத் தயங்கினாள் என்றாலும், முடிவில் எப்பொழுதோ ஒரு நாள் இதை அப்பாவுக்குச் சொல்லித்தானே ஆக வேண்டும் என்று நினைவு வர, பஸ்தரிப்பில் தங்கமணி ஸ்ரீதரைப் பற்றித் தனக்குச் சொன்ன விவரங்கள் யாவற்றையும் தந்தையிடம் எடுத்துக் கூறினாள். சொல்லும் பொழுது நாத் தழுதழுத்தது என்றாலும், நிலைமையை ஒருவாறு சமாளித்துக் கொண்டு எல்லா விஷயங்களையும் கூறி விட்டாள் பத்மா. பரமானந்தர் மகள் சொன்ன விவரங்களைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டாரானாலும், அதை வெளிக்குக் காட்டவில்லை.

“சுந்தரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா சிவநேசர் இருக்கிறாரே, அவரது மகன் தான் ஸ்ரீதர். எங்களை உடுவில் சின்னப்பா வாத்தியார் மகன் தான் என்று ஏமாற்றியிருக்கிறார். தங்கமணியும் ஸ்ரீதரும் ஒரே ஊர். அவளுக்கெல்லா விஷயமும் தெரியும்” என்றாள் பத்மா.

“அவன் ஏன் இப்படிப் பொய் சொன்னான்? சரி, நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. நான் எல்லாவற்றையும் விசாரிக்கிறேன். நீ சும்மா அழுது கொண்டிராதே. முகத்தைக் கழுவிக் கொண்டு அன்னம்மா வீட்டுக்குப் போய் வா. பார் சேலையை! ஒரே கசங்கலாயிருக்கிறது. புதிய சட்டையோ சேலையோ உடுத்திக் கொண்டு சிறிது வெளியே போய் வந்தால் மனக்கவலை தீரும். போய் வா, அம்மா” என்றார் பரமானந்தர் அனுதாபத்துடன்.

பத்மா அப்பா கூறிய பிரகாரமே முகத்தைக் கழுவிப் பொட்டிட்டுப் பூப்போட்ட கவுன் ஒன்றை அணிந்து கொண்டு வெளியே புறப்பட்டாள்.

சாதாரணமாக, பல்கலைக்கழகம் போகும் நேரம் தவிர, வீட்டில் இருக்கும் போது கவுன் அணிவதுதான் வழக்கம். வெளியே புறப்படு முன்னர் கண்ணாடியில் தனைப் பார்த்த பத்மா தனது அழகைத் தானே மெச்சிக் கொள்ளத் தவறவில்லை. “கட்டான உடம்புள்ள பெண்ணுக்குச் சேலை ஒருவகை அழகைக் கொடுக்கிறது. கவுன் இன்னொரு வகை அழகைக் கொடுக்கிறது” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டு வெளியே புறப்பட்ட அவள் அன்னம்மாவைக் காணச் செல்லவில்லை. தோட்டத்து மூலையிலே வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்த வேலாயுதக் கிழவனைப் பார்க்கச் சென்றாள்.

கரும்பச்சை வர்ணம் பூசப்பட்ட கள்ளிப் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்த அவனது கடையில் அப்பொழுது வேறு யாரும் இல்லை. வேலாயுதக் கிழவன் ஒட்ட நறுக்கிவிடப்பட்டு, ஏறக்குறைய மொட்டைத் தலை போல் விளங்கிய தனது தலையைத் தடவிக் கொண்டு, தனியாக நின்றான். கிழவனுக்குக் கன்னங்கரேலென்ற ஒட்டல் உடம்பு. அப்பொழுதும் அகலச் சிரித்த முகம். சுத்தமாக இருப்பான். அவனது வெள்ளை மயிர் பணக்காரர் வீட்டுப் பங்களாக்களில் நன்றாகக் கத்தரித்து விடப்பட்ட மைதானத்துப் புல் போல் தலையோடு தலையாக ஒட்டிக் கொண்டிருந்தது. தோட்டத்து ஆட்களிலேயே பரமானந்தர் மீதும், பத்மா மீதும் அவனுக்கு விசேஷ மதிப்பு. ஆகவே, பத்மாவைக் கண்டதும் “என்ன தங்கச்சி! என்ன வேண்டும்? அப்பா புகையிலை வாங்கி வரச் சொன்னாரா?” என்று அன்போடு கேட்டான்.

பத்மாவுக்கு வேலாயுதத்தைத் தனியாகக் கண்டதில் திருப்தி. தான் வந்த விஷயத்தைத் தடங்கலில்லாமல் பேசி விரைவாகச் சென்றுவிடலாமல்லவா?

வேலாயுதத்தின் கேள்விக்குப் பத்மா “இல்லை” என்ற பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டு, “தாத்தா! உன்னிடம் நல்ல, ‘பெப்பர்மின்ட்’ இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“இதோ போத்தலில் இருப்பதுதான், எடுத்துக்கொள்” என்றான் வேலாயுதம்.

பத்மா பத்துச் சதத்துக்குப் ‘பெப்பர்மின்டை’ வாங்கி, வாயிலிட்டுக் கொண்டே, “தாத்தா! நாளைக்குப் பின்னேரம் ஐந்து மணிக்கு எங்கள் வீட்டுக்கு வருகிறாயா? எங்கே ராமன்? அவனைக் கடையில் வைத்து விட்டு வா. எங்கள் வீட்டிலேயே நாளை சாப்பாடு. வர வேண்டும், கட்டாயம்.” என்றாள்.

ராமன் வேலாயுதக் கிழவனுக்கு ஒத்தாசையாயிருக்கும் பதின்மூன்று வயது. பையன். மலைநாட்டுப் பகுதியில் பிறந்தவனாம். கிழவனுக்கு வாரிசாக வளர்ந்து கொண்டிருந்தான்.

வேலாயுதம் “நாளைக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டாள்.

“விசேஷமொன்றுமில்லை. ஆனால் முக்கியமான விஷயமொன்று உன்னிடம் பேச வேண்டும். நாளை வீட்டுக்கு வந்ததும் சொல்கிறேன்.” என்றாள் பத்மா.

“ஆகட்டும்” என்றான் வேலாயுதம்.

“வரும்பொழுது அப்பாவுக்கு ஒரு கட்டுச் சுருட்டு கொண்டு வர வேண்டும். மறந்து விடாதே!” என்று சொல்லிக் கொண்டே பத்மா புறப்பட்டாள்.

பத்மா கடையை விட்டுப் புறப்படும்போது, வேலாயுதக் கிழவன் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டுப் போனாள். குடும்ப நண்பனாக நெருங்கிப் பழகிய கிழவனைக் கண்டால் அவளால் ஏதாவது சேஷ்டை செய்யாதிருக்க முடியாது. பத்மாவுக்கு அது வேடிக்கை. பத்மா மட்டுமல்ல, தோட்டத்திலுள்ள, ஆண், பெண் எல்லாருமே வேலாயுதக் கிழவனுடன் அப்படித் தான் கேலியாக நடந்து கொண்டனர். முக்கியமாகப் பெண்களே அவனுடன் அவ்வாறு தமாஷாக நடந்து கொண்டனர். கிழவனுக்கு அது மிக்க மகிழ்ச்சி. யார் தன் தலையில் குட்டினாலும் தலையைத் தடவிக் கொள்வானேயல்லாமல், வேறொன்றும் பேச மாட்டான். அதனால் அவனைப் போல் நல்ல மனிதன் இவ்வுலகில் இல்லை என்பதே தோட்டத்திலுள்ள சகலரது அபிப்பிராயமும்.

பத்மா கண்ணுக்கு மறையும் வரையில் சிரித்துக் கொண்டும், அவள் குட்டிய தலையைக் கைகளால் தடவிக்கொண்டும் நின்றான் கிழவன்!

ஸ்ரீதர் சிவநேசரின் மகன் என்பதை மறுக்க முடியாத அத்தாட்சியுடன் தங்கமணி கோட்டில் ஒரு வழக்கறிஞன் நிரூபிப்பது போல நிரூபித்திருந்த போதிலும், பத்மா அவ்விஷயத்தை மேலும் ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காகவே வேலாயுதத்தை அடுத்த நாள் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். வேலாயுதம் சிவநேசர் பங்களாவில் வேலை செய்தவன். இப்பொழுதும் ஆண்டுக்கொரு தடவையோ இரு தடவையோ நல்ல நாள் பெரிய நாட்களில் கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலிலிருந்த பங்களாவில் சிவநேசர் வந்திருக்கும் சமயம் பார்த்து அவரைப் போய்க் கண்டு, பத்தோ ஐம்பதோ பரிசு பெற்று வருபவன். நிச்சயம் ஸ்ரீதரை அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வயதைக் கொண்டு பார்த்தால் ஒரு வேளை அவன் பங்களா வேலைக்காரனாயிருந்த போது ஸ்ரீதரைத் தன் கைகளால் தூக்கி வளர்த்தவனாயுமிருக்கக் கூடும். நாளை அவர்கள் இருவரையும் தனக்குள் வீட்டில் சந்திக்க வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் கண்டு கொள்ளுகிறார்களா என்று பார்த்தால் விஷயம் முற்றிலும் தெளிவாகிவிடும். பின் ஐயத்துக்கே இடமிருக்காது. ஸ்ரீதர் சம்பந்தமக ஏற்பட்டிருந்த பிரச்சினை போன்ற பிரச்சினகளில், என்னதான் மற்றவர்கள் தகுந்த நிரூபணங்களைக் காட்டினாலும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தானே விஷயங்களை நேரில் பரீட்சித்துக் கொள்ள விரும்புவதே உலக இயல்பு. மனித இதயம் தோல்விகளை இலகுவில் ஏற்றுக் கொள்ள மறுப்பதே இதற்குக் காரணம்.

மேலும் தங்கமணி சொன்னவை ஏன் பொய்யாக இருக்கக் கூடாது? டிரைவரைக் கூட அவளே ஏற்பாடு செய்திருக்கலாம். ஸ்ரீதர் மீது எனக்கிருக்கும் அன்பைக் குலைத்து எங்கள் காதலை முறியடித்த பின்னர் அவனைத் தான் கொத்திக் கொண்டு போவதற்குத் தங்கமணி திட்டம் தீட்டியிருக்கிறாளோ, என்னவோ, யார் கண்டது? இந்தக் காலத்தில் யாரை நம்புவது? அதுவும் தங்கமணி போன்ற படாடோபப் பெண்களை நம்பவே கூடாது. ஸ்ரீதர் போன்ற கட்டழகனும் கெட்டிக்காரனும் கணவனாகக் கிடைத்தால் யாருக்குத்தான் கசக்கும்? இவ்வுலகில் ஒருவர் மீது நமக்கு அழுத்தமான பிடிப்பு ஏற்பட்டு விட்டால், அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் உள்ளம் நம்ப மறுக்கிறது. அவர் மீது சாட்டப்படும் குற்றங்களிலிருந்து அவரை விடுவிக்கவே மனம் எப்பொழுதும் முயல்கிறது. ஸ்ரீதர் விஷயமாகப் பத்மா அந்த நிலையிலேயே இருந்தாள்.

பத்மா தீட்டிய திட்டத்தின் பிரகாரம் அடுத்த நாட் காலை ஸ்ரீதரைப் பல்கலைக்கழகத்தில் வழமையான இடத்தில் சந்தித்து மாலை வீட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டும்; அப்பொழுது அவனிடம் வேறொன்றும் பேசக் கூடாது. மாலையில் வேலாயுதத்தையும் அப்பாவையும் வைத்துத் தான் விஷயங்களைப் பேசித் தீர்க்க வேண்டும். அப்பொழுது தங்கமணி கூறியவை பொய்யென்று நிரூபிக்கப்படுமானால் — கவலை விட்டது! எங்கள் காதல் என்னும் சந்திரனைக் கெளவிய கரு நாகம் கழன்றதென்று சந்தோஷிக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக ஸ்ரீதர் மோசக்காரன் தான் என்பது ஊர்ஜிதப்படுமானால்…? பத்மாவின் உள்ளம் குழம்பியது. உண்மையிலேயே அவன் என்னைக் கைவிட்டு அகன்று விட்டால்…?

நாடகங்களில் நடிக்கும் நடிகர் நடிகையர்களுக்குக் கடைசி நேரத்தில் நடிக்க முடியாது போய்விட்டால், அவர்கள் பாகத்தை உடனடியாக ஏற்று நடிக்க வேண்டுமென்பதற்காகப் பதில் நடிகர் நடிகையர்களைப் பயிற்றி வைத்திருத்தல் நாடக மன்றங்களின் வழக்கமாகும். இந்த ஏற்பாடில்லாவிட்டால் நாடகத்தையே இரத்துச் செய்ய வேண்டுமல்லவா? இது போன்ற ஏற்பாடு வேலைத் தளங்களிலும் உண்டு. வழமையான தொழிலாளர்கள் வேலைக்கு வராவிட்டால், உடனடியாக அவ்வேலைகளை ஏற்றுச் செய்ய “ஸ்டான்ட் பை” தொழிலாளர்கள் இருக்கிறார்கள். உதை பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுக்களிலும் “ரிஸர்வ்” விளையாட்டுக்காரர்களை இதற்காகவே வைத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் இது போன்ற ஏற்பாட்டை நாம் செய்து கொள்ள முடியுமா? கலைகளிலும் விளையாட்டிலும் தொழிலிலும் செய்யும் இவ்வேற்பாடு அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்துமா?

பத்மா மனதில் இக்கேள்விக்குப் பளிச்சென்ற பதில் இருக்கத்தான் செய்தது. “எல்லாவற்றுக்கும் ஒரு “ஸ்டான்ட் பை” இருக்க முடியுமானால், காதலுக்கும் ஏன் ஒரு “ஸ்டான்ட் பை” இருக்கக் கூடாது? இன்றைய உலகின் காதல் அரசிகள் என்று போற்றப்படும் ஹோலிவூட் நடிகையர் பலர் ஒன்றுக்குப் பதில் பல காதல் “ஸ்டான்ட் பை”களை எப்பொழுதும் வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? கணவனை இழந்த விதவை புதிதாக ஒரு கணவனைத் தேடிக் கொள்வதும், விவகாரத்துச் செய்த பெண் புதிய கணவனைத் திருமணம் செய்வதும் இன்றைய உலகில் சகஜம். ஆகவே நானும் ஒரு காதலனை “ஸ்டான்ட் பை”யாக வைத்துக் கொண்டாலென்ன? கமலநாதன்தான் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறானே! இன்று நண்பகல் பஸ்ஸிலே என் மீது தன் காதற் பார்வையைப் படரவிட்ட அவன் பின்னேரமே என்னுடைய கவலையைப் போக்கப் புத்தகமும் அனுப்பிவிட்டானே! எனது வாழ்க்கை வாடி வதங்கிப் போகாதிருக்க அவன் உதவுவான் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் அவன் மீசையும் அவன் முகத்துக்கு அழகாய்த்தானே இருக்கிறது! காயமடைந்த அவன் கையை எனக்குக் காட்டினானே, அது எவ்வளவு பலங்கொண்டதாயும் திரட்சியாயும் காட்சியளித்தது!

அன்றிரவு பத்மா படுக்கைக்குப் போன போது, கமலநாதன் அனுப்பிய புத்தகத்தின் சில பக்கங்களை வாசிக்க மறக்கவில்லை. பல மணி நேரம் தூக்கம் வராது படுக்கையில் புரண்ட அவள் ஆயிரம் விதமான பகற் கனவுகளைக் கண்டு கொண்டிருந்தாள். அக் கனவுகளில் ஸ்ரீதரும் கமலநாதனும் மாறி மாறி வந்து கொண்டிருந்தார்கள்.


ஸ்ரீதரும் சுரேசும் படம் பார்த்த பின்னர் வீட்டுக்கு வந்து நீண்ட நேரம் பத்மா பற்றிப் பேசிக் கொண்டிருந்த பின்னர் சாப்பிட்டு விட்டுத் தங்கள் அறைக்குச் சென்றார்கள். தன் ஆள் மாறாட்ட நாடகத்துக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது, தான் ஒரு பொய்யன் என்பதை எப்படி நேரில் வெட்கமின்றிப் பத்மாவுக்கும் அவள் தந்தைக்கும் எடுத்துச் சொல்வது என்று ஸ்ரீதருக்குத் தெரியவில்லை.

“சுரேஷ்! நீ தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை மேலும் நீடிக்கக் கூடாது.” என்றான் ஸ்ரீதர்.

“நீ சொல்வது உண்மைதான். இப்படிப்பட்ட விஷயங்களை நேரில் பேச யாருக்கும் பதற்றமாகத்தானிருக்கும். அதனைத் தவிர்க்க ஒரே வழி எல்லாவற்றையும் விரிவாகக் கடிதத்தில் எழுதிவிடுவதுதான். நேரில் சொல்ல வெட்கப்படுவற்றையும் அஞ்சுபவற்றையும் எடுத்துக் கூறுதற்குக் கடிதம் போல் உற்ற துணை வேறில்லை” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதருக்குச் சுரேஷின் ஆலோசனை சரியாகவே பட்டது.

“சுரேஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் இவ்வுலகில் கண்டதேயில்லை. நீ சொன்ன இந்த ஆலோசனை, விஷயத்தை எவ்வளவு இலகுவாக்கிவிட்டது! உண்மையில் நீ இங்கிலாந்து போனால் அதனால் பெரிய நஷ்டம் எனக்குத்தான். நீ சொன்ன படி இப்பொழுதே கடிதம் எழுதுகிறேன். நாளைக்கே அதைப் பத்மாவுக்கும் பரமானந்தருக்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவிடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே மேசையண்டை போய் உட்கார்ந்தான்.

விடிந்தாலும் சரி. எப்படியும் கடிதத்தை எழுதிவிட்டுத் தான் படுப்பது என்று முடிவு செய்து விட்டான் அவன். அந்தத் தீர்மானத்துடன் அவன் சுவரில் மாட்டியிருந்த மணிக் கூட்டை நிமிர்ந்து பார்த்தான். நேரம் 12.10 ஆகியிருந்தது. ‘திக் திக்’ என்ற மணிக்கூட்டின் சப்தம் அவன் நெஞ்சில் ‘திக் திக்’ என்ற சப்தத்தை எதிரொலிப்பது போலிருந்தது அவனுக்கு! என்னதான் இருந்தாலும் வாத்தியார் மகன் வேஷத்தை முற்றாகக் கலைந்து, பத்மா பரமானந்தரின் அங்கீகாரத்தைத் தனது சுய உருவத்துக்கு – சிவநேசர் மகன் ஸ்ரீதருக்குப் பெறும் வரையில் அவன் நெஞ்சில் பதற்றம் இருக்கத்தானே செய்யும்?

– தொடரும்…

– இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ தொடராக வெளிவந்த நாவலிது. 

– மனக்கண் (தொடர் நாவல்), தினகரனில் வெளிவந்தது.

அ.ந.கந்தசாமி (8 ஆகத்து 1924 – 14 பெப்ரவரி 1968) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார்.சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டு இயங்கினார். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். ​​​​பதிவுகள்.காம் அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *