மதிப்பிற்குரிய சித்தப்பா அவர்களுக்கு,
தங்கள் மகன் எழுதிக் கொண்டது. நலம். நலம் அறிய அவா. நிற்க.
நீண்ட யோசனைக்குப் பிறகுதான் எழுதி விடுவது என இக்கடிதம் எழுதுகிறேன். மனசுக்குள்ளேயே எனக்கான நியாயங்கள் இருப்பதைவிட, அவற்றைத் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதுதான் நல்லது என்பதும் ஒரு காரணம். அப்பாவுக்கும், உங்களுக்குமான உறவு சார்ந்த பிரச்னைகளை என் சிறுவயது முதலே உள்வாங்கி வந்திருக்கிறேன். அப்பா பேசும்போது அவர் பேசுவது இயல்பாகவே மிகவும் நியாயமானதாக எனக்குத் தெரியும். நீங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் பேசுவதிலிருந்து, நீங்கள் பேசுவது சரியா, தவறா என்று புரியாமல் இருந்தேன். எல்லாரும் அவரவர் மனநிலைக்கேற்பப் பேசிக்கொள்கிறார்கள் என நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.
ஒரே பையனான என் மீது என் அப்பாவுக்கு அளவு கடந்த பிரியம். மிக முக்கியமாக, அவர் பணத்துக்காக மிகக் கஷ்டப்பட்டது மாதிரி, வருங்காலத்தில் நான் கஷ்டப்படக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். தாத்தா உடல்நலமில்லாமல் வேலை செய்ய முடியாத நிலைமையில், சின்ன வயசாக இருந்தாலும், மூத்த மகன் என்ற முறையில், அப்பா தலையெடுத்துக் கடுமையான உடல் உழைப்பால் குடும்பத்தைக் காப்பாற்றி, உங்களையும் படிக்க வைத்தார். அந்தப் பட்டப்படிப்புகளின் உதவியுடன்தான் இன்று நீங்கள் ஒரு கல்லூரிப் பேராசிரியராகவும், அதன் காரணமாகவே ஒரு பள்ளி ஆசிரியையை மனைவியாகவும் வாய்க்கப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் இரண்டு பேரும் மாதச் சம்பளக்காரர்கள் என்பதால் உங்களது வசதி வாய்ப்புகள் மற்றும் பணப்புழக்கத்தை என் அப்பா அறிந்தே வைத்திருக்கிறார்.
அப்பா உங்களை மிகவும் நம்பினார். என்னை உங்கள் வீட்டில் தங்க வைத்து நல்ல பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பீர்கள் என்று. அந்த நம்பிக்கை பொய்த்து அவர் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானார். ஆனாலும் நீங்கள் அப்பாவை வார்த்தை ஜாலங்களால் சமாதானப்படுத்தியே வந்துள்ளீர்கள் என்பதை நான் இப்பொழுது அறிகிறேன். நீங்கள் தொடர்ந்து அப்பாவிடம் இப்படிச் சொல்லியே சமாளித்து வந்தீர்கள். “”எனக்கு நெறய செய்யணும்னு ஆசைதான்… ஆனா… நான் மட்டும் நெனச்சு என்ன செய்ய… அந்நியமான… வேலைக்குப் போற அவளும் நெனக்கணும்ல… அவ சரியா கவனிக்கலன்னா… பையன் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போவான்… அது சரிப்பட்டு வராது… +2க்குப் பெறகு காலேஜ்ல சேர்த்து ஆஸ்டல்ல நான் படிக்கப் போட்டுக்குறேன்…”. அதுவும் சரிதான் என்று தாத்தா, அவ்வா, அப்பா, அம்மா என்னை மாதிரியே நம்பினார்கள்.
வருடா வருடம் விவசாயம் நொடித்துத்தான் போகிறது என்பது மற்றவர்களைவிட உங்களுக்கு நன்கு தெரியும். என்னதான் விவசாயம் நொடித்துப் போனாலும், தினமும் கூலி வேலை செய்தும், கூடுதல் உழைப்பு செய்தும் சொந்தங்களைப் பேணுவதிலும், தாத்தா, அவ்வாவைக் கவனித்துக் கொள்வதிலும் விவசாயியான என் அப்பா ஒருநாளும் சோடை போனதில்லை. அந்த மாதிரியான விசயத்தில் என் அப்பாவும், அம்மாவும் உங்களைவிட எவ்வளவோ மிகச் சிறந்தவர்கள் என்பதை இப்பொழுது மனப்பூர்வமாக நான் புரிந்துகொண்டேன். விடுமுறைக் காலங்களில் அங்கிருந்து தங்கச்சியும், தம்பியும் இங்கு வந்து இருந்துவிட்டு மிகவும் சந்தோஷப்பட்டுப் போக மனசில்லாமல் அங்கு வருவார்கள். எனக்கும் அவர்கள் இங்கு வந்து என்னோடு விளையாடுவது மிகப் பேரானந்தமாக இருக்கும். அம்மா எனக்குச் செய்வது மாதிரியே தங்கச்சிக்கும், தம்பிக்கும் சுத்தமாகவும், சுவையாகவும் செய்து போடுவார்கள். அதனால் அவர்கள் சொந்த வீடுமாதிரி ஒன்றிப் போவார்கள்.
ஆனால், எந்த வருடத்திலும் விடுமுறையில் நான் அங்கு வந்ததில்லை. அப்படியே தப்பித் தவறி வந்தாலும் ஒரு நாள், இரண்டு நாள் இருந்துவிட்டு, புதுத் துணிகளோடும், கொஞ்சம் பணத்தோடும் திரும்பியிருக்கிறேன். தாத்தா இறந்த பிறகு அவ்வாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி வாக்கு வாதம் வரும். எவ்வளவுதான் செய்தாலும் ஏதாவது சின்ன மனவருத்தத்தில் சண்டைகள் நடந்து கொண்டேயிருக்கும். ஒரே வீட்டில் இருந்தால் சின்னச் சின்னக்குறைகள் தெரிந்து சண்டை வந்து விடுகிறது. பக்கத்தில் இல்லாமல் தூரத்தில் இருந்தால் அவர்களுக்குள் பிரியம் கூடிவிடுகிறது. அந்த மனவருத்த சமயத்தில் அவ்வா சொல்லுவாள்: ”செய்யாத நாச்சியார்தான் செய்யல… செய்யுறவ ஏன் செய்ய மாட்டேங்றா…” என்றும், “”என்னோட சின்ன மகன் சொக்கத் தங்கம்… அவன்கூட இருக்கக் கொடுப்பினை இல்ல… பொண்டாட்டி ராட்சசியா இருந்தா அவன் என்ன செய்வான்…” – என்றும், நானும் புரியாத வயதில் உங்களைப் பற்றி அவ்வா சொன்னதை நம்பினேன். இப்பொழுது அது சுத்தப் பொய் என்று புரிந்து கொண்டேன். படித்தவர்கள் நல்லவர்கள் என்று அவ்வா எண்ணுவது அவளின் ஏமாளித்தனம். நீங்கள் நிறைய நல்ல விசயங்களைப் படிக்காமல் பட்டப்படிப்புத் தேர்வுக்கு மட்டும் படித்ததினால்தான் இப்படி இருக்கிறீர்கள் என்று எனக்கு இப்பொழுது புரிகிறது. எங்கப்பா கஷ்டப்பட்டாலும் உங்களை மாதிரி படிக்காதது எனக்கு மிக்க சந்தோசமே.
நான் பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த சமயம்தான் எங்கப்பாவின் புலம்பல் அதிகரித்தது. முன்னாடி மாதிரி இல்லாமல் படிப்புச் செலவு இப்பொழுது கூடிவிட்டது அவருக்குப் பயத்தை உண்டாக்கி இருந்தது. அவருக்கு உங்கள் உதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடியது. வீட்டில் மூத்த பையன் என்ற முறையில் பொறுப்புக்கு வந்து உங்களைப் படிக்க வைத்தார் அப்பா. தாத்தா அவ்வாவை நாங்களே பார்த்துக் கொண்டோம். இப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தாத்தா அவ்வாவுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் அப்பாவே ஏற்றுக் கொண்டார். அப்படி ஏற்றுக்கொள்ளப் போய்த்தான் நீங்கள் சுதந்திரமாக உங்கள் குடும்ப முன்னேற்றம், உங்கள் பிள்ளைகள் படிப்பு என்று பார்க்க முடிகிறது. முதியவர்களை வைத்துப் பார்த்தால்தான் அதன் கஷ்டம் உங்களுக்குப் புரியும். அதற்கு உபகாரமாகத்தான் நீங்கள் என் படிப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் அப்பா. அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் பேசாததால் அப்பாவுக்கும் உறவுக்காரர்களிடம் தன் ஆற்றாமையைக் கொட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
நிற்க.
இப்பொழுது நான் +2விலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறேன். இன்னும் அப்பாவின் புலம்பலும் ஆற்றாமையும் கூடுகிறது. பிறகுதான் நீங்கள் ஊருக்கு வருகிறீர்கள். வந்து நீங்கள் அப்பாவிடம் பேசியது இப்பொழுதும் எனக்கு மனக்கஷ்டத்தை உண்டாக்குகிறது. ஊருக்கே வராத, அப்பாவை மதிக்காத சித்தியிடம் அப்பா வந்து, “”நீதாம்மா…. ஒங்க புள்ளகல நல்லா படிக்க வைக்கிற மாதிரி இவனையும் படிக்க வைக்கணும்”னு கேட்கச் சொன்னீர்கள். இந்தப் பேச்சு, நீ தாழ்ந்து போயிட்டே… எங்ககிட்டப் பிச்சை கேள், நாங்கள் போடுகிறோம் என்பது மாதிரி இருக்கிறது. எங்கப்பா உங்கள் நிலையில் இருந்து, நீங்கள் எங்கள் நிலையில் இருந்திருந்தால் என் அப்பா கண்டிப்பாக அப்படிப் பேசி இருக்க மாட்டார். கஷ்ட நேரத்தில் உதவி செய்ய வேண்டிய நீங்கள், தேவையிருந்தால் கேட்பதில் தப்பென்ன என்பது மாதிரி பேசியிருக்கிறீர்கள். நீங்கள் கேட்டு உங்களை அப்பா படிக்கப் போடவில்லையே? அவராகவே உங்கள் மீதும், குடும்பத்தின் மீதும் உள்ள பிரியத்தில் செய்தார். நீங்கள், “”என்னால் முடியாது, நீங்களே அப்பா அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று தாத்தா, அவ்வாவைப் பார்க்கச் சொல்லி என் அப்பா, அம்மாவிடம் கேட்காமலேயே, அவர்களே யோசித்து, “அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறவுங்க, அவங்களால முடியாது’ என்று நாங்களே தாத்தா அவ்வாவைப் பார்த்துக் கொள்ளவில்லையா?
அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கும் அளவுக்கு நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறேன். அப்பா என் எதிர்காலம் கருதி என்னை உங்களிடம் அழைத்து வந்து சித்தியிடம் நீங்கள் சொன்னது மாதிரி பேசினார். சித்தியிடம் அப்படிப் பேசுவதற்கு அப்பா பட்ட மனக்கஷ்டங்கள் எனக்குத்தான் தெரியும். எல்லாம் என் எதிர்காலத்திற்காக என்பதும் எனக்குத் தெரியும். கொஞ்சநாள் இவன் இங்கு இருந்து விட்டு வரட்டும் என்று நீங்கள் சொன்னதன் அடிப்படையில், அப்பா என்னை விட்டுவிட்டு ஊருக்குப் போனார். கல்லூரியில் சேர இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் இருப்பதால் நானும் இருந்துவிட்டு வரலாம் என இருந்தேன். அங்கிருந்த அந்த பத்து நாள்களில் நீங்கள் பேசிய பேச்சுக்கள், உங்கள் நடவடிக்கைகள்தான் என்னை இக்கடிதம் எழுதத் தூண்டின.
தங்கச்சியும், தம்பியும் எங்கள் வீட்டில் எப்படிச் சுதந்திரமாக இருப்பார்களோ அப்படி நான் அங்கு இருக்க முடியவில்லை. ஊரில் என் அம்மா எந்த எல்லைக்கோடும் இல்லாமல் தம்பியுடனும் தங்கச்சியுடனும் தன் பிள்ளைகள் மாதிரி ஒன்றிப் போனார்கள். அந்த மனசு படிக்காதவர்களுக்குத்தான் இருக்கும்போல. நான் உடலளவில் அங்கு இருந்தாலும் மனம் ஒன்றி இருக்க முடியவில்லை. எந்நேரமும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகிப் போனது. நான் அந்த பத்து நாள்களும் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆளாகவே இருந்தேன். ஒவ்வொரு நாளும் சர்க்கஸ் கயிற்றில் நடப்பது போலவே உணர்ந்தேன். நீங்கள் எல்லாம் தெரிந்தவர் போலவும், உங்களுக்குத்தான் எல்லா அதிகாரமும் இருப்பதுபோலவும், உங்களிடம் கற்றுக்கொள்ள வந்த அடிமை நான் போலவும் இருந்தன உங்களது நடவடிக்கைகள். இப்படியும் இருக்கிறார்களே, நம்மீதுதான் ஏதோ குறை இருக்கிறதோ என்றுதான் இத்தனை நாளும் குழப்பத்தில் இருந்தேன். அந்தக் குழப்பம் முழுதாகத் தீர்ந்த பிறகே என்னால் இந்தக் கடிதம் எழுத முடிகிறது. நிற்க.
நீங்கள் பேசிய பேச்சுக்கள் என்னை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தின. மனக்கஷ்டத்திலேயே இத்தனை நாளும் ஓடின. மனக்கஷ்டங்கள் விலகவே இக்கடிதம். நாம் பிறரிடத்தில் என்ன எதிர்பார்க்கிறோமோ, அப்படியே நாம் அவர்களிடத்தில் இருக்க வேண்டும் என்றீர்கள். அவ்வா தாத்தாவை சித்தி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. அவள் அந்நியம், அவளுடைய சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது என்றீர்கள். நான் உன்னைப் படிக்கப் போடுவது சாதாரண விஷயமல்ல, எப்பவும் நீ அதை மறக்கக் கூடாது என்றீர்கள். நான் உங்கள் வீட்டில் இருக்கும்போது சித்திக்குக் கூடமாட வேலை செய்யாதது தப்பு என்றீர்கள்.
நீங்கள் சொன்னவை அனைத்தும் உங்களை மையமாக வைத்தே பேசுவது போலிருக்கிறது. அடுத்தவர்களுக்கும் மனசு இருக்கும் என்றோ, பொதுவான நியாயம் பற்றியோ நீங்கள் கொஞ்சம்கூட யோசித்துப் பார்க்கவில்லை. உங்களுக்கான, நீங்களே கற்பித்துக்கொண்ட நியாயம் மட்டுமே உங்களிடம் இருக்கிறது. என் அப்பா, நாம் நல்லதே செய்வோம், நமக்கு நல்லதே நடக்கும் என்று நினைப்பவர். அப்பா, நம்ம தம்பி நல்லா இருக்கட்டும் என்று அவர் உழைத்து உங்களைப் படிக்க வைத்தார். அதுமாதிரிதான் நீங்களும் இருப்பீர்கள் என நம்பியிருப்பார். அப்பா, நான் மட்டும்தான் உழைக்க வேண்டுமா, நீயும் படிக்கப் போகாமல் கூலி வேலைக்குப் போ என்று உங்களை அன்று சொல்லியிருந்தால் உங்கள் நிலைமை இன்று எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
அவ்வா தாத்தாவை சித்தி ஏன் பார்க்க வேண்டும், அவளுக்கு அது கடமை இல்லையே… அவளை நீதான் செய்யணும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்றீர்கள். நீங்கள் உண்மையிலேயே படித்தவர் என்றால், அதேமாதிரி என் அம்மாவைப் பற்றியும் யோசித்திருக்க வேண்டும். அப்படி யோசிக்க மனமில்லையே. என் அம்மாவுக்கு மட்டும் என்ன கடமை வந்தது அவ்வா, தாத்தாவுக்குச் செய்ய? ஒன்று மட்டும் புரிகிறது. உங்களுக்கு இரக்கமே இல்லாமல் போயிருக்க வேண்டும் அல்லது என் அம்மா மாதிரி ஆட்களெல்லாம் உங்களுக்கு மனசுள்ள மனுசிகளாகத் தெரிந்திருக்க மாட்டார்கள். படிக்காமல் விவசாயம் செய்கிறவர்கள் எல்லாம் உங்களைப் பொறுத்தவரை எதுவுமற்ற ஜடப்பொருட்கள் போல.
என்னை நீங்கள் படிக்கப் போட்டால் நான் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். தேவைப்படும் நேரத்தில் செய்யும் உதவி எவ்வளவு மதிப்புமிக்கது என்று எனக்குத் தெரியும். ஒருநாளும் நன்றி மறக்கத் தெரியாது எங்களுக்கு. ஆனால் நீங்கள்?
நம்மூர் விவசாயம் பற்றி உங்களுக்குத் தெரியும். கரிசல்பட்டியில், சொந்த வேலை போக, கூலி வேலைக்கும் போய், ஆடு மாடுகள் வளர்த்து, பஸ் போகாத ஊரிலிருந்து உங்களை விடுதியில் தங்க வைத்துப் படிக்கப் போட்டது யார்? தாத்தாவால் முடியாத சூழலில் அப்பாதானே உங்களுக்கு எல்லாம் செய்தார். அதற்கு உங்களிடம் நன்றி இருக்கிறதா? அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். முடிந்தால் பதில் போடவும். அப்பா செய்தது உதவியா, மூடத்தனமா அல்லது கடமையா என்பதைத் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
சித்திக்குக் கூடமாட நான் வேலை செய்யவில்லை என்று சொன்னீர்கள். அது என்னை மிகவும் வேதனைப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. அங்கிருக்கும்போது பேசுவது, உட்கார்வது, சாப்பிடுவது போன்றவற்றில்கூட ஏதேனும் குறை கண்டுபிடித்து விடுவீர்களோ என்று பயந்து பயந்து செத்துக் கொண்டிருந்தேன். அந்த பத்து நாள்களும் மிகுந்த கண்காணிப்பில் உள்ளவனாகவே உணர்ந்தேன். வீட்டிற்குள்ளேயே சிறையில் இருப்பது மாதிரி. தம்பி சுதந்திரமாக இருக்கிறான். அவன் என்ன செய்தாலும் பாராட்டு கிடைக்கிறது. அவனுடைய சோம்பேறித்தனத்தைக்கூடப் பெருமை பேசும் நீங்கள் என்னிடம் அப்படி நடந்துகொள்ளவில்லையே. ஏதோ வேண்டா வெறுப்பாக என்னை நடத்தினீர்கள். சாப்பிடும்போதுகூட நான் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதால் குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவேன். தட்டில் சாதத்தின் அளவுகூட, தம்பி தட்டில் உள்ளதைவிடக் குறைவாகவே இருந்தது. எங்கள் வீட்டில் விருந்தாளிகளுக்கு ஒருநாளும் அப்படி நடந்ததில்லை. இந்தச் சூழலில் நான் எப்படி வீட்டு வேலைகளில் பங்கேற்க முடியும்? அப்படியும் நீங்கள் என்னிடம் வேலையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், என்னை ஒரு வேலைக்காரனாகத்தான் நீங்கள் மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் வீட்டுப் பையனாக இல்லையே.
என் அம்மா, அப்பா தங்கச்சியையும், தம்பியையும் தங்கள் பிள்ளைகளாக மனதில் வரித்துக்கொண்டவர்கள். அவர்களைப் பற்றிப் பக்கத்து வீடுகளில் எல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஒவ்வொரு பேச்சும், செயலும் அம்மா அப்பாவைப் பரவசப்படுத்தும். ஆனால் நான் +2வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தது பற்றி நீங்களோ, சித்தியோ பெருமைப்பட்டுப் பேசவில்லையே. அந்தச் சமயத்தில் முகத்தில் மலர்ச்சி தென்படவில்லையே.
இப்படி இருக்கும்போது நான் எப்படி வேலை செய்ய முடியும்? நான் ஓர் அடிமை என்றால் வேலை செய்திருக்க முடியும். நான் உங்கள் மகன் என்று மனதில் படிய வைத்திருக்கிறேன் சித்தப்பா. படித்த உங்களுக்கு இதுகூடப் புரியவில்லையா? அல்லது உங்களது பட்டப்படிப்பும், சம்பளமும் உங்களை அப்படி ஆக்கி வைத்திருக்கிறதா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் ஜனநாயகம் பேசுகிறீர்கள். நியாயங்கள் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால், நீங்கள் பேசுபவை அனைத்தும் உங்கள் சுயநலத்தைச் சுற்றியே இருக்கிறது. சுற்றி இருப்பவர்களும் நம்மை மாதிரி மனிதர்கள்தான் என்று சிறிதுகூட மனசில் எண்ணமில்லாமல் எல்லாம் உங்களை மையமாக வைத்தே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பேச்சுப்படி திருடன் திருடுவதுகூட தப்பில்லாததுதான். எங்கள் அம்மா அப்பா பக்கத்து வீட்டு மனிதர்களை நேசிப்பவர்கள். அடுத்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். அன்பாய் இருக்க முடிகிறது அவர்களால். உதவி என்று யார் வந்தாலும், முடிந்தால் அவர்களால் உதவி செய்ய முடிகிறது.
எனவே, மதிப்பிற்குரிய சித்தப்பா… எனது மதிப்பெண்களுக்கு அரசுக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். எங்கள் அப்பா மனசு மாதிரியான மனசோடு என்னைப் படிக்கப் போட முடிந்தால் பண உதவி செய்யுங்கள். இல்லையென்றால் வேண்டாம். எனக்கு அரசிடமிருந்து கல்வி உதவித் தொகை கிடைக்கும். எங்கள் அம்மா அப்பாவும் இன்னும் கொஞ்சம்கூட கூலி வேலைகள் செய்து என்னைப் படிக்கப் போடுவார்கள். நானும் மிகச் சிக்கனமாக இருந்து படித்துக் கொள்வேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லுகிறேன். நான் உங்களைவிட நன்கு படித்து, பட்டப் படிப்புகளோடு, வாசிப்புப் பழக்கத்தையும் உண்டாக்கிக் கொண்டு பெரிய பதவியில் இருப்பேன். பெரிய படிப்போடும், அறிவியல் மனப்பான்மையோடும், எங்கள் அப்பா, அம்மா மாதிரியான மனசோடும் வாழ்ந்து காட்டுவேன் என்று மிக உறுதியாக உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன். வீட்டில் தங்கச்சி, தம்பியை நான் மிகவும் கேட்டதாகச் சொல்லவும்.
இப்படிக்கு, தங்கள் மகன்.
– ஜி.காசிராஜன் (செப்டம்பர் 2014)