மண்ணு வேணும்டா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 8,320 
 

“கால் கிரௌண்டா இருந்தாலும் நமக்குன்னு சொந்தமா மண்ணு வேணும்டா… அத விட்டுட்டு என்னமோ தீப்பெட்டி அடுக்குனமாதி, பிளாட்டு வாங்குறானுங்களாம் பிளாட்டு… எவனாச்சு பிளாட்டு வாங்கிருக்கேன், அது வாங்கிருக்கேன்னுட்டு என்ன வந்து தங்கச் சொன்னிங்க, நல்லா கேப்பேன்…

தாத்தா அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான் என்று அப்பா சொல்வார்.

தாத்தா ஒரு காலத்தில் நல்ல சொத்துக்களோடு வாழ்ந்தவராம்.

அவருடைய அப்பா எப்போது சொத்துக்களையெல்லாம் விற்று குதிரைப் பந்தயத்தில் தோற்று, ஊர்க்காரர்களின் கிண்டலுக்கு ஆளானாரோ, அப்போதிருந்தே தானும் அந்த அளவுக்கு சொத்து வாங்கிய பிறகே இந்த ஊரில் காலெடுத்து வைப்பேன் என்று தன் உறவுக்காரர்கள் முன்னால் சத்தியம் செய்துவிட்டு வந்தாராம்.

அதே போலவே தன் இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் ஆளுக்கொரு இடம் வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் அந்த அடுத்த தலைமுறைகள் வாங்கிக் கொடுத்த நிலத்தையெல்லாம் விற்றுவிட்டு ஆளுக்கொரு பிளாட் வாங்கி மூலை மூலைக்கு தங்கிவிட, அதுவே தாத்தாவுக்கு பெரிய ஆத்திரம்.

மனிதர் இன்றுவரைக்கும் பிடிவாதமாக யார் வீட்டிலும் வந்து தங்கவே இல்லை. அதற்காக தன் சொந்த ஊருக்கும் போகாமல் இங்கேயே ஒரு கட்சி ஆபீஸில் வாட்ச்மேனாக தங்கி தன் காலத்தை போக்குவதை அப்பா எப்படித்தான் இத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை.

ஒரு வழியாக அப்பாவுக்கு இப்போதுதான் ஒரு மனமாற்றம் வந்தது. கொஞ்சமாக இருந்தாலும் சொந்தமாக மண் வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருந்த தாத்தாவுக்காக ஒரு இடத்தை வாங்கினார்.

இப்போது அந்த இடத்தில்தான் நின்று கொண்டிருக்கிறோம்.

“ஏம்பா… வாங்குனதுக்கப்பும் வேற யாரும் வந்து என்னுது, உன்னுதுன்னு வந்து தகராறு பண்ண மாட்டாங்கள்ல?…”

என்றார் அப்பா.

“அதெப்படி சார்? ஒரே இடத்த வேற வேற ஆளுங்களுக்குப் போயி குடுப்பாங்களா?… அப்படியெல்லாம் ஆகாது சார்…”

என்றார் அவர்.

“அப்புறம்… கட்றதுல்லாம் எப்படி? நீங்களே கட்டிக் குடுத்துருவீங்களா?…”

“அதெல்லாம் பக்காவா பண்ணிடுவோம் சார்… உங்களுக்கு என்ன மாடல்ல வேணுமோ, அந்த மாடல்ல…”

“வேற யாரும் வந்துராம பாத்துக்கப்பா…”

“ஒன்னியும் பிரச்சனை இல்ல சார்… சும்மா புதைச்சு மண்ணப் போட்டம்னாதான், பாடியை எடுத்துப் போட்டுட்டு இன்னொரு பாடிய புதைச்சிருவானுங்க… கல்லறை கட்டிட்டோம்னா அப்படி ஆவாது சார்…”

கல்லறையில் புதைத்திருந்த சிலுவையில் இருக்கும் தாத்தாவின் பெயரையே சில நொடிகள் உற்றுப் பார்த்த அப்பா, ஒரு பெருமூச்சோடு மௌனமாக நடக்க ஆரம்பித்தார்.

“அவர் உயிரோட இருக்கும்போதுதான் ஒரு மகனா அவர் நெனச்சதை செய்ய முடியாம போச்சு… “

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *