பாதிரியார் மாதா கோவிலின் பின்புறமிருந்த தோட்டத்தில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நடந்துக் கொண்டிருந்தார். அவர் முகம் வாட்டமாயிருந்தது.
அவர் சாதாரணமாய் எந்த விஷயத்தையும் பெரிதாய் எடுத்துக் கொள்கிறடைப் இல்லை. எப்போர்ப்பட்ட பிரச்னை வந்தாலும எளிதாய் சமாளித்து விடுவார். வரது வரட்டும் என்று ஏற்றுக் கொள்வார்.
அப்படிப்பட்டவரையே இப்போது கலங்க வைத்துவிட்டது அந்த சர்ச்சின் மணி.
அந்த ஊர் சின்னதுதான். ஆனால் கிறிஸ்துவர்கள் அதிகம் என்பதால் சர்ச் பிருமாண்டமாய் கட்டப்பட்டிருந்து. அதன் கோபுரம் சுமார் 300 அடி உயரம் வரை எழும்பியிருக்கும். கோபுரத்தின் உச்சியில் ஒரு ராட்சஷ மணி!
அந்த மணிதான் ஊரை எழுப்புகிற கோழி. காலையில் ஐந்து மணிக்கும் ஐந்தரைக்கும் மணி அடித்தது என்றால் ஊரே விழித்துக் கொள்ளும். டிங்-டாங்கென்று கர்ணக் கொடூரமாய் ஒலிக்கும் அதன் ஒசையை கேட்டாட்ல ஜனங்களுக்கு சுறுசுறுப்பு வந்து ஒட்டிக் கொள்ளும்.
சர்ச்சை ஒட்டினாற்போல் ஸ்கூல் ஒன்று இருந்தது. மணி சப்த்தைக் கேட்டதும். பிள்ளைகள் குளிரையும் பொருட்படுத்தாமல் குளிக்கக் கிளம்பிவிடும். ஊரில் சங்கு இல்லாத குறையையும் அந்துமணி தீர்த்துக் கொண்டிருந்தது.
பகல் பனிரெண்டு மணிக்கு, ஒரு மணிக்கு, மாலை ஐந்திற்கு. இரவு எட்டு மணிக்கு என்று குறிப்பிட்ட நேரங்களில் மணியடிக்கப்படும். யாராவது இறந்து விட்டால் அதை அறிவிப்பதிற்கும் அஞ்சலி செலுத்துவதிற்கும் கூட மணி முழங்கும்.
ஒவ்வொரு காரியத்திற்கம் ஒவ்வொரு வித மணி! மணி சப்தம் கேட்டால் அது எதற்காக அடிக்கப்படுகிறதென்று ஊர் ஜனங்கள் பளிச்சென சொல்லி விடுவார்கள். அத்தனைக்கு எல்லோருக்கும் அத்துபடி.
இந்த மணியை அடிப்பது அந்தோணி.
மணியடித்தல், கோவிலைச் சுத்தம் செய்தல், பூஜை சமயத்தில் உதவுதல் போன்றவைகள் அவனுடைய வேலைகள்.
கடந்த ஒரு வாரமாய் அந்த மணி செயலிழந்து இருக்கிறது. ரிப்பேர். என்று கோளாறு என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
அந்தோணி, சங்கிலியோ முறுக்கிக் கொண்டிருக்கும் என்று தன் பலத்தை பிரயோகித்துப் பார்த்தான். பலனில்லை. மாறாக அது கான்கிரீட்டை பியர்த்துக் கொண்டு அந்தரத்தில் நிற்கிறது.
மணி எப்போது யார் தலையில் விழும் என்று சொல்ல முடியாத நிலை. ஸ்கூல் பிள்ளைகள் அந்தப் பக்கம் எப்போதும் சஞ்சரிப்பார்கள். விளையாடுவார்கள்,
பூஜைக்காகவும் பாதிரியாரைக் காணவும் ஊர் ஜனங்களும் வருவார்கள். அப்படியிருக்கும் போது மணி அந்தரங்கத்தில் இருப்பது ஆபத்தல்லவா…?
பாதரியாரும் அதை சரிபண்ண பெரிதும் முயற்சி எடுத்துப் பார்த்தார். முடியவில்லை. அத்தனை உயரத்தில் மணியை எப்படிக் கட்டினார்கள் தெரியாது. இப்போது ஏறி சரிபண்ணுவதிற்கு ஆள் இல்லை.
அதைச் சரிபண்ண வேண்டும் என்றால் கீழேயிருந்தே சாரம் கட்ட வேண்டும். முந்நூறு அடி உயரத்திற்கு சாரம் கட்டவேண்டும் என்றால் ஆயிரக்கணக்கில் கேட்கிறார்கள்.
ஆயிரமாயிரமாய் கொடுப்பதிற்கு சர்ச்சில் நிதி வசதியில்லை. கடந்த இரண்டு மூன்று வருடங்களாய் பருவமழை தவறியாதால் ஊரிலும் பஞ்சம் எவரிடமும் போய் கேட்கவும் முடியாது.
ஆனாலும் அதைச் சரி பண்ணியேயோக வேண்டும். அதுதான் அவருடைய வருத்தத்திற்குக் காரணம்.
அந்தோணி பாதிரியாருக்காக அலுவலகத்தில் காத்துக கொண்டிருந்தான். அவனுடைய சகோதரிக்கு இது பிரசவ நேரம் ஆஸ்பத்திரியில் அட்மின் பண்ணியிருந்தான். அவளுக்கு ஆபரேஷன் நடந்து வேண்டி வரும் என்று டாக்டர் சொல்லிவிட்டா. அதற்கு குறைந்தது ஐநூறு ரூபாயாவது வேண்டி வரும்.
ஐநூறுக்கு எங்கேப் போவது.? சம்பளமே இருநூறு தான்! இது இன்னும் இரண்டு தங்கைகள். சீக்கான அம்மா! சாப்பாடு, துணி மணிகள். பாதிரியார் புண்ணியத்தில் எப்படியோ வண்டி ஓடுகிறது.
பாதிரியார் நல்லவர். பிறர்துன்பம் பொறுக்காதவர். கையில் காசிருந்தால் உடனே உதவி பண்ணி விடுவார்.
உதவி பண்ணுவார் என்பதற்காக திரும்பத் திரும்ப அவரிடம் போய் எப்படி கேட்க முடியும்…?
அவன் யோசனையுடன் நின்றிருந்தான்.
பாதிரியார் உள்ளே நுழைந்தார். “அந்தோணி நீ இன்னும் போகலே…?”
“இல்லை சாமி” என்று தலை சொறிந்தான். தங்கையின் நிலையை மெல்ல எடுத்துச் சொன்னான்.
“கர்த்தர் ஆசிர்வாதம் உனக்கு என்றைக்கும் உண்டு. உன் சகோதரிக்கு எந்த ஆபத்தும் வராது. நீ போய்ட்டு வா”.
“அதுக்கில்லை சாமி. ஆபரேஷனுக்கு 500 ரூபாய் ஆகுமாம்.”
“இதோ பாருப்பா எங்கிட்ட காசில்லை. என் அக்கௌண்ட் நிலமைதான் உனக்கு தெரியுமே”.
அவர் சொல்லிவிட்டு உள்ளே போனார். மனது கேட்காமல் திரும்பி விந்து சர்ச்சோட மணியை சரிபண்றதுக்கு பிஷப் 500 ரூபாய் ஒதுக்கியிருக்கார். கான்ட்ராக்ட்காரனோ ரெண்டாயிரம் கேட்கிறான். நான் அதுக்கே என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுகிட்டிருக்கேன்.”
பதிரியார் சர்ச்சுக்கு கிளம்பினார். அங்கு போய் மண்டியிட்டு பிரார்த்தனையி மூழ்கிப் போனார்.
அந்தோணிக்கு ஏமாற்றம். இருந்த ஒரே நம்பிக்கையும் போயிற்று. இனி யாரிடம் சென்று கையேந்துவது? சோகத்துடன் தோட்டத்தில் புல்வெட்டினான். தண்ணீர் தெளித்தான்.
வேலை முடிந்து முகம் கழுவின போது அவன் மூளையில் ஒரு மின்னல். கோவில் மணியைச் சரி பண்ணுவதற்கு ஐநூறு ரூபாய்!
ஐநூறு! அதை நாமே சரிபண்ணினால் என்ன? பணத்திற்கப் பணம்! மணியின் ஆபத்தையும் போக்கின மாதிரி இருக்குமே!
பாதிரியார் பிரார்த்தனை முடிந்து வெளியே வந்ததும் சொன்னான்.
“அந்தோணி நீயா? உன்னால் முடியுமா?”
“முடியும் சாமி…
“எப்படிப்பா…மணி என்ன கொஞ்ச உயரத்திலா இருக்கு.”
“இது எப்படி சாத்யம்?”
“அதெல்லாம் நான் ஏறுவேன் சாமி. சின்ன பிள்ளையில் ஏறியிருக்கேன்.”
“அது அப்போ விளையாட்டா ஏறியிருப்பே. இப்போ முடியுமா…?” தடுத்தார்.
“சொன்னா கேள் தப்பித் தவறி விழுந்தா எலும்பு கூட மிஞ்சாது.”
“நான் விழுமாட்டேன் சாமி..”
“ம்கூம். நான் அனுமதிக்க மாட்டேன். காசு போனாலும் பரவாயில்லை. நீ வேண்டும்.” அவர் உறுதியாய் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அந்தோணியின் மனதில் வைராக்கியம் தோன்றியது. அவன் முதன் முதலில் பாதிரியாரின் பேச்சை மீறினான். மணியை அண்ணந்து பார்த்தான். கட்ணகள் சூரிய ஒளியில் கூசின. தங்கை கண்முன் தோன்றினாள். அவள் படும் வேதனை அவளையே, நம்பியிருக்கும் குழந்தைகள், அவள் கணவன், “அண்ணா என் குழந்தைகளை காப்பத்துண்ணா!“
“சாமி! நீங்க பணம் தரவேண்டா” என்று முணுமுணுத்தான்.
“எது எப்படியானாலும சரி, அந்த மணியை நான் சரி பண்ணத்தான் போகிறேன். அந்தப் புண்ணியத் திற்காகவாவது மாதா எம்மேல் கருணை வச்சு என் தங்கையை காப்பாத்தட்டும்.”
மளமளவென ஏற ஆரம்பித்தான். அதற்குள் யாரோ பார்த்து பாதிரியாருக்குத் தகவல் போயிற்று. அவர் ஓடி வந்து “ஏய்! அந்தோணி சொன்னாக் கேள். வேண்டாம் வேண்டாம்.”
அவர் கத்த கத்த அவன் மேலே ஏறினான். அவனிடம் ஒரு ஆவேசம் வந்திருந்தது. அவன்தனைமீறிப் போவதைக் கண்டு பாதிரியார் கைகளைப் பிசைந்தார்.
“முரட்டு பயலே… ! ஏண்டா உனக்கு இந்த விபரீதம்…?”
அவர் அங்கேயே முழுங்காலிட்டுப் பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தார். விபரம் அறிந்து ஊர் திரள ஆரம்பித்தது. அண்ணாந்து பார்த்து வியந்தது, பயந்தது.
அவனுக்கு மூச்சு வாங்கிற்று. கை கால்கள் நடுங்கின. அசந்துப் போய் வந்து. அப்படியே கட்டி அணைத்தபடி நின்றான். கீழே பார்த்தான்.
ஜனங்கள் பூச்சியாய்த் தெரிந்தார்கள். ஸ்கூல் பிள்ளைகள் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடிவருவது தெரிந்தது. அவனுக்கு வியர்த்தது. தங்கையின் வேதனை அவனை உசுப்பிற்று. அப்படியே நின்றால் மலைப்பாய் இருக்கும் போலிருந்தது.
இன்னும் கொஞ்சம்தான் இதோ உச்சிக்குப் போய் விட்டான். மணிக்கூண்டு பக்கத்தில் விசாலமாய் இடமிருந்தது. அங்கு அமர்ந்து மூச்சு வாங்கினான். கீழே பிள்ளைகள் கரகோஷிப்பது கேட்டது. அதுவே அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது.
அந்தோணி மணியை ஆராய்ந்தான். அது கொக்கியில்லிருந்து விடுபட்டிருக்க ‘தம்‘ கட்டி தூக்கிச் செருகினான். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டிப் பார்த்தான். சரியாய் செயல்பட்டது. ஒருமணிநேரம் கழித்து இறங்க ஆரம்பித்தான. பாதிரியாருக்கு சந்தோஷமாயிருந்தது. திருப்தியாகவும்.
அவனுக்கும் மனதிற்குள் இனம்புரியாத ஒரு சுகம் தங்கைக்கு பிரசவம் நல்ல படியாக நடக்கும் என்று தோன்றியது. அவளுடைய வேதனையை இவன் சுமந்து விட்டதாய் பிரமை.
பதி இறங்கும் போது ஜனங்களும் பிள்ளைகளும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். அவனுடைய கஷ்டமெல்லாம் பறந்து போன மாதிரி இருந்தது.
அப்படியே சந்தோஷத்துடன் இறங்கினவன் கால் இடறி பேலன்ஸ் தவறினான். கன்ட்ரோல் பண்ண முடியாமல் சறுக்கிக் கொண்டே வந்து, எகிறி அத்தனை உயரத்திலிருந்து “அம்மா” என்று மணியின் சங்கிலியை பிடித்துக் கொண்டு விழுந்தான்.
விழுந்த வேகத்தில் அவன் தலை அடிபட்டு அந்தோணி அங்கேயே…
அவன் சரி பண்ணின மணி –
அவன் பற்றிக்கொண்டு விழுந்த வேகத்தில் ‘டிங்டாங்’ என்று அடித்து அவனுடைய சாவை ஊருக்கு அறிவித்தது.
– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)