மணிமேகலையின் அமுத சுரபி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 1,197 
 
 

பிற்பகல் வேளை. எம்கேஎம் கல்லூரியின் மூன்றாம் மாடியில் இருந்த பயிலரங்கு அரங்கில் உரை நிகழ்த்தி விட்டு வெளியே வந்தாள் அழகான, ஒடிசலான இளம்பெண் – உதவிப் பேராசிரியை மணிமேகலை. கல்லூரியின் செக்யுரிட்டி பெரியவர் ஞானசேகரன் எதிரில் வந்தார்.

‘மேடம் உங்களைத் தான் ஒவ்வொரு இடமா தேடிகிட்டு வரேன்’ என்றார். ‘என்னப்பா ஏன்  தேடினீங்க..‘ என்றாள் மணிமேகலை. பெரியவர் சொன்னார் – ‘ஒங்க வீட்டுக்கார் வந்திருக்காரு..ஒங்க மொபைல் ஆப்ல இருக்காம் நான் அவங்க காலேஜ் உள்ள ஆப் பண்ணி வெச்சிருப்பாங்கன்னு சொல்லி அழைச்சிகிட்டு வரேன்னு வந்தேன்… ‘

‘சரிப்பா நான் போய்ப் பார்க்கறேன். தாங்க்ஸ் ‘ என்ற மணிமேகலை, அவருக்கு முன்பாக,  விடுவிடுவென படிகளில் இறங்கினாள். கல்லூரி வளாகத்தில் பெரிய வாகனத்துடனும் தன்னுடைய ஆட்களுடனும் நின்றிருந்த அவளது கணவன் கட்டுடல் இளைஞன் பார்த்திபன் அருகில் சென்றாள்.

‘என்ன என்னைப் பார்க்க ஆள் அம்பு சேனையோட தான் வரணுமா’ சிடுசிடுத்தாள் மணிமேகலை. ‘என்ன  மணி..பார்க்க வந்தா மூஞ்சிய காட்றே’

‘இப்படி படையோட காலேஜுக்கு வந்தா நிர்வாகம் என்னைய வேலைய விட்டுத் தூக்கிடுவாங்க நான் வேற வழி இல்லாம ஒங்களோட வந்து குடித்தனம் நடத்துவேன் இதானே ஒங்க திட்டம்’ என்றாள் மணிமேகலை.

‘ஏன்  இவ்ளோ கோபம்? நீ சொல்றா மாதிரி ஸ்கெட்ச் எல்லாம் இல்ல. கோபத்துலயும் நீ அழகாத்தான் இருக்கே’ என்றான் பார்த்திபன்.

‘காதலிச்ச காலத்திலேந்து இதே வசனத்தை தான் சொல்லிகிட்டு இருக்கீங்க இப்ப எதுக்கு வந்தீங்க’

‘போன் பண்ணா எடுக்க மாட்டேங்கற..இல்ல ஸ்விட்ச் ஆப் ன்னு வருது  ஒன் கிட்ட அஞ்சு நிமிஷம் பேசணும்’

‘சரி பக்கத்துல ஜேகே காபி ஷாப்ன்னு இருக்கு அங்க போய் வெயிட் பண்ணுங்க வரேன். முதல்ல ஒங்க ஆளுங்களோட கேம்பஸ்லேந்து கிளம்புங்க’

‘மணி எப்ப வருவே…‘

‘எனக்கு இன்னும் ட்யுட்டி முடியல பர்மிஷன் சொல்லிட்டு என் கைப்பையை எடுத்துகிட்டு வரேன் அங்க போய் இருங்க வரேன்’ என்ற மணிமேகலை கல்லூரிக்குள் சென்றாள்.

மைய சாலையில் மாடியில் இருந்த காபி ஷாப்பில் பார்த்திபனும் மணிமேகலையும் ஒரு மூலையில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து இருந்தார்கள். மேசையில் இருந்த கோல்டு காபி அப்படியே இருந்தது. இருவரும் பேசாமல் இருந்தார்கள். சற்று நேரத்தில் மணிமேகலை பேசத் தொடங்கினாள் – ‘ஏன் கோல்டு காபி பிடிக்கலையா கூல் பீர் தான் பிடிக்குமா?‘

‘ஆரம்பிச்சிட்டியா’

‘என்ன பேசணும் அதை சொல்லுங்க’

‘அப்பா ஒன்ன பார்க்க வந்தாரா?‘

‘அண்ணன் வீட்டுக்கு போனா என்னோட அண்ணி இங்க ஏன் வந்து இருக்கேன்றாங்க . பசங்களும் அண்ணனும் ஆசையா இருந்தாலும் அண்ணி தேள் மாதிரி கொட்றாங்க.. லேடீஸ் ஹாஸ்ட்டல்ல போய் தங்கினா ஒங்களோட ஆளுங்க அண்ணி வீட்டுக்கு வாங்க இங்க எல்லாம்  ஏன் இருக்கீங்க ன்னு ரோட்ல  என்னைப் பார்த்து நச்சரிக்கறாங்க.. எங்க சித்தியை அவங்க  பிள்ளைங்க  தனியா விட்டுட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்.  அவங்களோட போய் இருக்கேன். அவங்களும் அக்கா பொண்ணு தன் பொண்ணுன்னு இங்கேயே இருன்னு சொன்னாங்க. நான் அங்க இருக்கறது தெரிஞ்சுகிட்டு, போன ஞாயிற்றுக் கிழமை, மாமா, படையோட அங்க வந்தாரு.. சித்தி பயப்படாமல் உள்ளே கூப்பிட்டு உட்கார வெச்சாங்க உன்கிட்ட  கிட்ட பேச வந்திருக்காரு பேசுன்னு என்கிட்ட சொன்னாங்க’ என்று நிறுத்தினாள்.

‘தன்னந்தனியா ஒங்களால ஒரு பொது இடத்துக்குப் போயிட முடியுமா ன்னு  நீ சவால் விட்டேன்னு… ‘

‘ஒங்க கோஷ்டி ஆளுங்க சொன்னாங்களா? நீங்க காதலிக்கற காலத்துல என்ன சொன்னீங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் என்ன சொன்னீங்க.. எங்க அப்பா கஜபதி மாதிரி நான் கட்டப்பஞ்சாயத்துல  எல்லாம் ஈடுபட மாட்டேன். ஒழுங்கா வேலைக்கு போறேன் இல்ல  நேர்மையான பிசினஸ் பண்றேன்னு சொன்னீங்க. ஒங்க வாக்கை காப்பாத்தாம ஒங்க அப்பா வழியில் தான் போவேன்னு போறீங்க.. மாமா கிட்ட இதைத்தான் நான் சொன்னேன். இது வரைக்கும் சட்டத்தின் பார்வை ஒங்க ரெண்டு  பேர்லயும் விழாமல் இருக்குன்னா வலுவான கேஸ் இல்ல. ஆனா, மாமா எதிரிகளை சம்பாதிச்சு வெச்சிருக்காரு.. பகையை சம்பாதிச்சுகிட்டாரு..அதனால தனியா ஒரு சின்ன சந்துல கூட நடந்து போக முடியலயேன்னு சொன்னேன். ஏன் அவர் கூடயே இருக்கற நல்லதம்பி மாமா ரெண்டு பேரும் சேர்ந்து கூட தனியா எங்கேயும் போக முடியாதேன்னு சொன்னேன். இதே நிலைமையை ஒங்க பிள்ளைக்கும் உருவாக்கி வெச்சு இருக்கீங்கன்னு சொன்னேன்..‘

‘கோர்ட் படி ஏறாத மனுசனை  குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பேசிட்டே..‘

‘உண்மை சுடும்..அவர், புகுந்த வீட்ல புருசனோட சேர்ந்து வாழாம ஏன் இப்படி சின்னம்மா வீட்ல வீம்பா வம்படியா வந்து உட்கார்ந்து அல்லாடறேன்னு கேட்டாரு. நான் அதுக்கு பதில் சொல்ல வேண்டியதாச்சு. என்னாச்சு இப்ப… ‘

‘அப்பாவையும் நல்லதம்பி சித்தப்பாவையும் நாலு நாட்களாக காணோம்..‘

‘காணாமல் போறதுக்கு அவங்க ரெண்டு பேரும் சின்னப் பிள்ளைங்களா என் சொல்லு பொறுக்காம எங்கேயோ போய்ட்டாருன்னு சொல்ல தான் என்ன பார்க்க வந்தீங்களா … அவங்க காணாமல் போனதுக்கு என் மேல பழியா?‘ 

‘இல்ல மணி..‘

‘மாமா , பாட்ஷா படத்துல வர்ற மாதிரி பாண்டிச்சேரியில் ஆட்டோ ஓட்டப் போயிருக்க மாட்டாரு பாபா படத்துல வர்ற மாதிரி மார்க்கெட் வேலைக்கு போயிருக்க மாட்டாரு. ஒங்க மேல அவருக்கு கொள்ளைப் பாசம் வந்திடுவாரு. அவர் வந்ததும்  அவரைப் பார்த்தால் இனிமேல் குத்திக் காமிச்சு எல்லாம் பேசாம இருக்கேன் போதுமா?  மனசு நோகற மாதிரி பேசாம இருக்கேன்.. வாயைக் கட்டிகிட்டு இருக்கேன்..  நான் ஒங்க கிட்டேந்து விலகி இருக்கறதுக்கு காரணம் அதனாலயாவது நீங்க மாறுவீங்களாங்கற நப்பாசையில தான். நான் இன்னிக்கும்  என்னிக்கும் ஒங்க மனைவி தான். கஜபதியோட மருமகள்தான்..நீங்க காதல் கல்யாணம் பண்ணிகிட்டு ஒங்க தங்கை சுகுணாவோட காதல் கல்யாணத்தை நடத்தி வைக்கல அவ அவளா நடத்திகிட்டா. அப்பாவும் பிள்ளையும் போனவ என்ன ஆனான்னு யோசிக்கல யோசிக்க நேரமில்ல. அப்பாவுக்கும் அண்ணனுக்கும். ஒங்க வீட்டு மருமகளா அவளோட சீமந்தம் வளைகாப்பை நான் நடத்தி வைக்கறேன். எங்க சித்தி வீட்டுக்கு கிட்ட இருக்கற பார்ட்டி ஹால்ல..பங்க்‌ஷன்  நாளைக்கு. பாசக்கார அண்ண ணா வந்து நின்னு ஆசீர்வாதம் பண்ணுங்க. ‘

மணிமேகலை  காபியைப் பருகினாள். பார்த்திபன் அவளை வியந்து பார்த்தான். ‘பில் பே பண்ணிடுங்க நான் வரேன்’ என்று கூறி எழுந்து சென்றாள் மணிமேகலை.

மணிமேகலையின் ஏற்பாட்டில் சுகுணாவின் சீமந்தம் வளைகாப்பு விசேஷம் சீரும் சிறப்புமாக கலகலப்பாக  நடந்து முடிந்தது. விருந்து பந்தியில் சுகுணாவும் அவளது கணவன் சுந்தரும் நண்பர்கள் உடன்  அமர்ந்து இருந்தனர். மணிமேகலை, அவர்கள் அருகில் போய் நின்றாள்.

‘சந்தோஷமா’ என்று சுகுணாவிடம் கேட்டுக் கொண்டிருந்த போது பார்த்திபன் அங்கு வந்து நின்றான்.

சுகுணா குரல் தழுதழுக்கப் பேசினாள் – ‘தாங்க்ஸ் அண்ணி. அண்ணி, இன்னொரு அன்னை ங்கறதை செயல்ல காட்டிட்டிங்க..‘

சுந்தர் இடை மறித்தான் – ‘அக்கா இவளுக்கு அவங்க அப்பா வரலைன்னு குறையா இருக்கு..‘

மணிமேகலை கூறினாள் – ‘வரலைன்னு யார் சொன்னா..அங்க பாரு.. வாட்ட சாட்டமா ரெண்டு பேரு  டிஷர்ட்  வேட்டி காஸ்ட்யூம்ல  கேட்டரிங் ஆளுங்களோட ஓடியாடி உணவு பரிமாறிக்கிட்டு இருக்காங்களே அவங்க ஒங்க அப்பாவும் அவர் தோஸ்த் நல்லதம்பியும்  தலை முடியை கருப்பாக்கிட்டா யாருக்கும் அடையாளம் தெரியாது ன்னு நெனப்பு..‘

சுகுணா அப்பா என்று கூப்பிட முற்பட்ட போது மணிமேகலை சொன்னாள் – ‘வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கியா..அவங்க ரெண்டு பேரும் காலம் போன காலத்துல வேற விதமான வாழ்க்கைக்குள்ளே போக முடியுமா ன்னு பரிசோதனை பண்ணிப் பார்க்கறாங்க. பார்க்கட்டும் விடு உன்  குழந்தையை பார்க்க  அவரு தனியா வரும் போது பேசிக்க.  இன்னும் அவங்களுக்கு த்ரெட் இருக்கு..ஒங்க அண்ணன் கூட வந்தவங்கள்ல்ல எதிரியோட ஆளுங்க ஊடுறுவி இருக்கலாம். நீ உணர்ச்சி வசப்பட்டு அவங்க ரெண்டு பேரையும் காட்டிக் கொடுத்துடாதே..‘

சுகுணாவின் அப்பா கஜபதி, சுடுசோறு உள்ள தட்டுடன் மகள் – மாப்பிள்ளை அருகில் வந்தார்.

அண்ணனையும் அப்பாவையும் பார்த்துக் கொண்டே சுகுணா பேசினாள்.

‘அண்ணி அந்த மணிமேகலை அமுதசுரபியிலிருந்து உணவை  எல்லாருக்கும் அள்ளிக் கொடுத்தா ன்னு படிச்சிருக்கேன். இந்த மணிமேகலை அன்பு என்னும் அமுதசுரபியிலிருந்து அள்ளித் தந்து திக்குமுக்காட வைக்கறீங்க’

‘உனக்கு மட்டும் தான் புரியுது வேற யாருக்கும் புரியலையே நல்லா சாப்பிடுங்க மூணு பேரும் வயித்துல இருக்கிற ஜீவனையும் சேர்த்து சொன்னேன்’ என்று கூறிக் கொண்டே அங்கிருந்து  நகர்ந்து சென்றாள் மணிமேகலை .

குறிப்பு – சவால் என்பதை  அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

Print Friendly, PDF & Email
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *