திடுதிப்புன்னு காரில் வந்திறங்கிய தன் மகளின் மொட்டைக் கழுத்தைப் பார்த்ததும் பார்வதிக்கு நெஞ்சு திக்கென்றது…அங்கே உஷாவை இறக்கிவிட்டுவிட்டு மாப்பிள்ளை சுரேஷின் கார் விர்ரென்று கிளம்பிச் சென்றது.
உள்ளே நுழையும் மகளை…வா…வா..என்ன திடீர் விஜயம்..? என்றழைத்த பார்வதியின் மனசு “வந்ததும் வராததுமா…இப்போவே கேட்காதே…ன்னு தடுத்தது…” .
” ம்மா….இன்னைக்கு நேக்கு ஒரே…தலைவலி…அதான்…ஆஃபீஸுக்கு லீவைப் போட்டுட்டு சுரேஷை இங்கே இறக்கி விடச் சொன்னேன்…ஈவினிங் வந்து பிக்அப் பண்ணிப்பான். சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு செருப்பை ஓரமாக கழட்டி விட்டு உள்ளே நுழைந்தவள் கைப்பையில் இருந்து தான் கொண்டு வந்த டப்பர்வேர் டப்பாக்களை எடுக்க… அதோடு கூடவே மாட்டிக் கொண்டு வந்த தாலிக் கொடியை….இதுவேற…என்று பிரித்து தனியாக கைப்பையில் போட்டுவிட்டு…டப்பாவை டைனிங் டேபிள் மேலே தொப்பென வைத்தபடி….”நீ எப்டிம்மா இருக்கே…?” என்று பார்வதியைப் பார்த்து கேட்கும்போது…
அம்மாவின் முகம் ஏனோ…சரியில்லையே… என்று சட்டென்று உள் மனதில் தோன்ற…தனது ஜீன்ஸ் பாண்டை மேலே இழுத்து விட்டபடியே…..புருவத்தை மேலே தூக்கி அம்மாவைப் பார்த்தாள்…கோபமா? என்று கண்களால் கேட்டாள்…
இது என்ன கோலம்….அலங்கோலம்.? இப்படி..மொட்டைக் கழுத்தா… வந்து நின்னா கோபம் வராமல் என்ன வரும்? எத்தனை கஷ்டப் பட்டு உனக்கு இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணினேன்னு நோக்குத் தெரியுமா..? ஏன்..?.கண் நிறைய மாங்கல்யமும் கழுத்துமா உன்னைப் பார்க்கணும்னு நேக்குக் கொள்ளை ஆசை. ஒரு நல்ல நாளில்லை… கிழமையில்லைன்னு நீ இப்படி வெறுங்கழுத்தோட மூளியா….வந்து நிக்காதேன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் …இது மூணாவது தடவை…!
நீயும் கல்யாணமாகி புக்காத்துக்குப் போய் இந்த ஆறுமாசத்தில் அட்லீஸ்ட் என்னைப் பார்க்க வரும்போதாவது கழுத்தில் தாலிக்கொடியை போட்டுண்டு வரக் கூடாதா? அது என்ன அவ்வளவு பெரிய சுமையா…? இல்லை உன்னோட அழகு கெடறதா..?…இதெல்லாம் உங்க மாமியார் கேட்க மாட்டாளோ….? என்ன பொண்ணோ.. போ… எனக்குத் தான் அவமானமா இருக்கு…நீ இப்படி நிக்கறது… நேக்கு சுத்தமாப் பிடிக்கலை…ஆமாம்…கல்யாணம் ஆகும் வரைக்கும் நீ பொட்டே வெச்சுக்க மாட்டேன்னு வெளில போனா கூட நான் பிடிவாதமா பொட்டு வெச்சு அனுப்புவேன்..இப்போ நீ தாலிக் கொடியையும் கழட்டி வெச்சுட்டு வந்தா யார் சும்மா இருப்பா..?
ஆரம்பிச்சுட்டியா உன் பிலாக்கணத்தை….இப்போ என்னாச்சு….என்னோட இந்த டிரஸ் க்கு அதெல்லாம் சூட் ஆகாதுன்னு சொன்னா நீயும் எங்கே புரிஞ்சுக்கறே…? என் மாமியாரே.. தேவலாம்….வாயே திறக்க மாட்டா….நான் எப்படி இருந்தாலும் ஒண்ணும் கேட்கமாட்டா..கண்டுக்க மாட்டா…..நீயும் இருக்கியே…வந்ததும் வராததுமா…? அது ஆஃப்ட்ரால் ஒரு மஞ்சள் கயிறு…தானேம்மா…அதைக் கழட்டி சங்கிலில மாட்டிக்கச் சொன்னே….. இப்போ..சங்கிலியை ஏன் போடலைன்னு கேட்கறே….? அது ரொம்ப கனம்… நேக்குப் பிடிக்கலை.. புரிஞ்சுக்கோ…..போயும் போயும் ஒரு சங்கிலிக்குக் கொடுக்கற மரியாதை கூட என் மனசுக்குத் தர மாட்டேங்கற நீ….அவனே ஒண்ணும் சொல்ல மாட்டான். எதுக்கு இந்த லைசென்சை சுமக்கறேன்னு…அது இல்லாட்டாலும் நீ என்னவள் தானே…ன்னு சரிய்யா….. சொல்வான்…இதெல்லாம் வேற ஒண்ணுமில்லை….தலைமுறை இடைவெளி…..ஏற்கனவே எனக்குத் தலைவலின்னு லீவப் போட்டுட்டு வந்திருக்கேன்……என் மூட… ஆஃப் பண்ணாதே…
நன்னாச் சொன்னே போ…..என்ன தலைமுறை இடைவெளியோ….பார்வதிக்குப் பத்திண்டு வந்தது…
” சரி..சரி..இந்தா…இந்தக் காஃபியைக் ..குடி…சாப்டியோ…இல்லையோ..? எப்போபாரு டயட்..டயட்டுன்னு…அது வேற.. என்னாச்சு உடம்புக்கு….இன்னும் தலைவலியா..? எல்லாம் அந்த கம்ப்யூட்டர் பண்ணும் வேலை….ஒண்ணு கண்ணுக்கு கண்ணாடியை மாத்து இல்லைனா,,,,வேலையை மாத்து,,,,,எனக்கென்னமோ நீ…இந்த வேலைக்குப் போக ஆரம்பிச்சதிலிருந்து தான் ரொம்ப மாறிட்டியோன்னு தோண்றது. யாரையும் மதிக்க மாட்டேங்கற…கணவரை அவன்…இவன்…என்று சொல்லுமளவுக்கு…..! குரலில் ஒரு தயக்கத்தோடு….உஷா எப்போ சீறுவாள் தெரியாதே….!
உஷா… ரிமோட்டால் டிவி க்கு உயிர் கொடுக்க அதில் பாடகி கல்பனா இன்னிசை மழையில் உருகிக் கொண்டிருந்தாள்……
“ஆனந்த நீரோடையில்
ஓட நினைத்தேன்……நான்…
நான் பார்த்த கோதாவரி…
கானல்வரியா…?
தாய்மனை….அகன்றதும்….
தலைவனை….அடைந்ததும்….
நான் செய்த தீர்மானந் தான்….
அதற்கிந்த சன்மானந் தான்…
அவமானந் தான்…..!
நல்லதோர் வீணை செய்தே…அதை
நலம் கெடப் புழுதியில்…..
எறிவதுண்டோ
சொல்லடி….சிவசக்தி…..
சுடர்விடும் அறிவுடன்
எனைப் படைத்தாய்……..நீ…..!
கல்நெஞ்சங்களையும் கட்டி இழுக்கும் கல்பனாவின் குரலில் அமைதியான பாட்டு ….பார்வதியை சமயலறையில் இருந்து கட்டி இழுத்தது…..உஷா…இது எவ்வளவு நல்ல பாட்டு …..கேட்டு எத்தனை வருஷமாச்சு…? இது மாதிரி பாட்டைக் கேக்கும்போது தான் நேக்குப் பழைய ஞாபகமே… வரும்….அந்தப் பழைய காலங்கள் சந்தோஷமா இல்லாட்டாலும்…..சில நல்ல பாடல்கள் மனப் புண்ணுக்கு மருந்தா இருக்கும்….
உஷா தன்னை நைட்டியில் மாற்றிக் கொண்டபடியே….. ஆமாம்மா… ரொம்ப நன்னாருக்கு இந்த பாரதியார் பாட்டு…..கல்பனாவுக்கு அற்புதமான குரல்….சொல்லிக் கொண்டே அம்மாவைப் பார்த்தாள்….மங்களகரமான முகம்….குங்குமம் இட்டு…மஞ்சள் சரடு கழுத்தை அலங்கரித்து அம்மா அம்பாள் மாதிரி தெரிந்தாள்.
இதற்குள் நிகழ்ச்சியும் முடிந்து விட…..உஷாவும் டீவீயை அணைத்து விட்டு…..அம்மா….உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்…என்று பீடிகையோட ஆரம்பிக்க….
ஒண்ணு என்ன ஒண்ணு….நிறைய கேளு…..எந்தப் பீடிகையும் வேண்டாம்…என்கிட்டே இருந்தால்…அதெல்லாமே…. உனக்குத் தான்…!
அதில்லைம்மா…நான் கேட்கணும்னு சொல்றது வேற…..ஏன்…? எப்படி..? எதற்காக….?
அப்பா…இந்த அம்மாவை விட்டுக் கொடுத்தார்….இருவரும் ஏன் பிரிந்து வாழணும் ?
எதற்கு அம்மாவுக்கு இந்தத் தனிமை…? என்னால் ஏதாவது செய்ய முடியுமா இவர்களை மறுபடியும் சேர்த்து வைக்க….? மனதின் கேள்விக்கு இன்னைக்காவது பதில் கிடைக்குமா…? அம்மாட்ட கேக்கலாமா…..என்ன சொல்வாளோ… என்றிருந்தது ….உஷாவுக்கு.
இன்னைக்கு நமாத்துக்கு வந்தது எனக்கு ரொம்ப ரிலாக்ஸ்டா…. இருக்கும்மா…..என்று பேச்சை மாற்றினாள்.
ஆமாம்….நல்ல வேளையா நீ உள்ளூரில் கல்யாணம் பண்ணீண்டதால சரியாப் போச்சு…இல்லன்னா….கஷ்டம் தான்…அதுவுமில்லாமல் சுரேஷ் ரொம்ப தங்கமான பையன்…உனக்கு எந்தக் கஷ்டமும் வந்துடக் கூடாதுன்னு நான் கவலைப் பட்டதற்கு….கடவுள் எந்தக் குறையும் உனக்கு வைக்கலை.
அதான்…. சொல்றேன்..நல்ல வாழ்க்கை அமைவது ரொம்ப அபூர்வம். அமைந்த வாழ்கையை கவனமா….நல்லபடியா காப்பாத்திண்டு வாழறது நம்ம கையில் தான் இருக்குன்னு….புரியறதா? மகளுக்கு நேரம் பார்த்து வாழைப் பழத்தில் ஊசி ஏத்துவதில் சமர்த்து அம்மா.
ஏதேதோ பேசிக் கொண்டே….மதிய சமையலை முடித்து விட்டு…நீ என்னமோ கொண்டு வந்தியே…..நீ பண்ணியதா…என்று டப்பாவைத் திறக்க,,,,நான் எங்கே சமையல் பண்ண…எல்லாம் என் மாமியார் தான்…சரி உனக்கு எடுத்துண்டு போலாம்னு கொண்டு வந்தேன்…நான் எடுத்தது பிடிக்கலை..அவங்களுக்கு….கொஞ்சம் தான் பண்ணிருக்கேன்னு சொன்னா….நான் காதிலயே போட்டுக்கலை…இதுக்கெல்லாம் கூட கேட்கணுமா என்ன…? நீயே சொல்லேன்…அடிப் பாவி…நீ செய்யறது இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை..ரொம்ப அதிகப் பிரசங்கித் தனமா இருக்கே…உன் மாமியார்ட எதுக்கு இப்படியெல்லாம் வம்புக்கு நிக்கறே….இந்த வத்தக் குழம்ப எடுத்துண்டு வராட்டா என்ன போறது,,? நான் பண்ணிக்க மாட்டேனா…? அவாளோட அம்மா…அம்மா…சொல்லிண்டு மரியாதையா இருக்கணும் நீ..! இப்படி எல்லாம் நினைக்கக் கூடாது.
அம்மா நீ சித்த சும்மா இரேன்….அவாளே தரணும்…இந்தா அம்மா ஆத்துக்கு போறியே…எடுத்துண்டு போய் குடுன்னு…தரமாட்டா….தரலைன்னா நானே எடுத்துக்க வேண்டியது தானே….என் வீட்டில் இருந்து நான் கொண்டு வரேன்….ஆஸ் சிம்பிள் ஆஸ் தட்….உஷாவுக்கு எல்லாமே சிம்பிள் தான். தோளை உலுக்கியபடி…சொல்லிவிட்டு சென்றுவிடுவாள். உஷா அந்தக் குழம்பை அப்படியே எடுத்து பிரிட்ஜில் வைத்துவிட்டாள்…பிறகு சுரேஷுக்கு கொடுத்து விடலாம் என்று.
உஷா மனதுக்குள் அம்மாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தாள்.
தனக்கு இரண்டு வயதாகும் போதே அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பது வரை தான் தெரியும்…அதற்கு மேல் எந்த விபரமும் நானும் கேட்டதில்லை அம்மாவும் சொன்னதில்லை….என்னை உருவாக்குவதில் தன் இளமையை உழைப்பில் சிதைத்துக் கொண்டவள்….தன் மகளுக்கு பட்டப் படிப்பு, வேலை, பிறகு தான் கல்யாணம் என்று தாரக மந்திரமாகச் சொல்லிச் சொல்லி இன்று அனைத்தையும் நினைத்தபடி முடித்து நிமிர்ந்து நிற்கும்போது கூட தனக்காக தான் அம்மா எதை இழந்திருக்கிறாள் என்றெல்லாம் யோசிக்க அவகாசமில்லை உஷாவுக்கு .ஆனால் இன்று என்னமோ…தனது அம்மாவிடம் மனம் விட்டு பேச வேண்டும் போல் இருந்தது….
அம்மா…நீ ரொம்ப அழகாயிருக்கே…..இந்த வயசிலும்…. ஏன்மா அப்பா உன்னை விவாகரத்துப் பண்ணினார்…? இதுவரை உஷா கேட்காத கேள்வி அது…முதன் முதலாக மகள் கேட்ட கேள்விக்கு தன்னை சுதாரித்துக் கொண்டு….
நீ ரொம்ப அழகாயிருக்கேன்னு….சொல்லி என் தலைல ஐஸை வைத்து என் கதையை கேட்கறியா நீ…..இத்தனை வருஷம் இல்லாமல் இப்போ எதற்கு…சுரேஷ் ஏதும் கேட்டாரா? இல்ல… உங்க புக்காத்தில் யாராவது..? என்று இழுக்க….
அதெல்லாம் யாரும் உன்னைப் பத்தி ஒண்ணும் கேட்கலை….நான் தான் இன்று யோசித்தேன்…இத்தனை வருஷம் இதை பத்தியெல்லாம் சிந்திக்க நமக்கேது நேரம்….நீயே… சொல்லியிருக்கணும்…..அதான்..அப்பாதான் விலகிப் போய்ட்டாரே…அப்பறமும் உன்னோட மஞ்சள் கயிறு ஏன் கழுத்தில் தொங்குது ? …இப்போ கேட்கிறேன்…சொல்லேன்….உன்னோட மஞ்சள் கயிற்றின் மகிமையை…என்று கேலியாகக் கேட்டாள் உஷா…
உனக்கு இப்போ கேலி…..அது தான் ஒருகாலத்தில் எனது வாழ்க்கை…என்னத்த சொல்ல…எதை விட….? சொல்லிக் கொண்டே பிரிட்ஜிலிருந்து தண்ணீரை எடுத்து மடக் மடக்கென குடித்து விட்டு…இந்தா…என்று மகளுக்கும் தந்து…உஷா…உன் அப்பா விலகிப் போனாலும் இன்னும் உயிரோடு இருக்கார்ன்னு என் தாலி சொல்றது…ஒரு பெண்ணுக்கு ஒரு வயதுக்குப் பிறகு தாலி தான் ஒரு பாதுகாப்புத் தடுப்புச்சுவர் மாதிரி…..உன் அப்பா என்னை விவாகரத்து செய்யலை…..நானே…. தான் இருக்கும் இடம் சொல்லாமல் இந்த ஊருக்கு உன்னைத் தூக்கிண்டு ஓடி வந்துட்டேன்….என்னை தேடும் எந்த பிரயத்தனமும் அவா செய்திருக்க மாட்டா….சனியன் தொலைஞ்சதுன்னு…தலை முழுகியிருப்பா….அவாளுக்கு உன்னைப் பத்திக் கூட கவலை இருந்திருக்காது…ஏன்னா….நீ..பொண்ணாப் பொறந்துட்டே…அதுவும் என்னைப் போலவே….கருப்பா….! என்று நிறுத்தினாள்.
என்னம்மா சொல்றே… நீ…புதுக் கதை….நீ கருப்பா…? நான் கருப்பா..? அப்ப அவாள்லாம் கருப்பையேப் பார்த்ததில்லை போலிருக்கு…அப்படியே இருந்தால் தான் என்னவாம்…உன்னைப் பார்த்து தானே கல்யாணம் செய்துண்டார்…. மனசுக்குள் எழுந்த அத்தனை கேள்வியும் ஒன்றன் பின் ஒன்றாக…..வந்து விழ….!
ஆமாம்….உஷா …நான் சாதாரண குடும்பத்தில் ஒரே பொண்ணு ..என் குடும்பத்தில் ஏழ்மை….என்னோட அப்பா என்னோட சின்ன வயதில் ஒரு விபத்தில் செத்துட்டாராம்….அம்மா தான் ரொம்ப சிரமப்பட்டு வளர்த்தா.என்னை மேல படிக்க வைக்க வசதி போதாதுன்னு சொல்லி பெங்களூர்ல வேலை பார்க்கும் இவருக்கு எப்படியோ….எங்கேர்ந்தோ சம்பந்தம் பேசி….ரெண்டாந்தாரமா….என்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்தா. வரதட்சிணை இல்லாமல் கல்யாணம் நடக்கணும்னா அந்தக் காலத்தில் அதற்கென்று இருக்கும் மாப்பிளைகள் இப்படித் தான்….இப்போ தான் அதெல்லாம் மாறிப் போச்சு…ஆனால் ஒரு இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னால்….ஒரு ஏழை பிராமணப்பெண்ணுக்கு நல்ல வரன் வந்திருக்குன்னா அது இப்படியெல்லாம் தான் வரும்…நான் என் அம்மாவைத் தப்பு சொல்லலை…அப்போ நாங்க இருந்த நிலைமைக்கு என் கல்யாணம் நடந்ததேப் பெரிய விஷயம். தோள் மேலிருந்த பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியையாவது இந்தக் கல்யாணம் அம்மாவுக்குத் தந்ததேன்னு …நான் சந்தோஷத்தில் இருந்தேன். மற்றபடி உலகம், வாழ்க்கை எதைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது…
இப்போ இருக்கறது போல…..டிவி..வித விதமான சேனல்கள், மொபைல்,.இன்டர்நெட், கால்சென்ட்டர்….இதெல்லாமா…..அப்போ…. இருந்தது…..அது ஒரு வறட்சியான காலம் தான். பெண்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது..என்னவோ பெண்கள் வெறும் கல்யாணத்திற்கும் , பிள்ளை பெற்றெடுக்கவும். சமைத்துப் போடவும் மட்டுமே பிறந்த….மாதிரி தான் வளர்த்தா.
ம்ம்…மேலே சொல்லு…வெரி இன்ட்ரெஸ்ட்டிங்…உஷா வசதியாக உட்கார்ந்து கொண்டாள்…
இந்தா…. இந்த மாத்திரையைப் போட்டுக்கோ..பாவம்…உனக்கே உடம்பு சரியில்லைன்னு வந்திருக்கே….நான் வேற…என் கதையைச் சொல்லி….உன்னைப் படுத்தறேன்..!
பார்வதி எடுத்துக் கொடுத்த க்ரோசினை போட்டு தண்ணீர் விட்டு முழுங்கியவள்….
அப்புறம்…சீக்கிரம் .சொல்லும்மா…..நீ பாவம்ம்மா……என்று ஒரு தலகாணியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு கைகளுக்கு கன்னத்தை முட்டுக் கொடுத்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள் உஷா.
எத்தனை வருடம் நினைவு சுருள்கள் பின்நோக்கி நகர……உஷாவின் மெமரி சிப்புகள்……ஒவ்வொரு பைலாக எடுத்து பரப்பிக் கொண்டிருந்தது அவள் மனதில்.
எத்தனையோ கல்யாணக் கனவுகள் அப்போது எனக்குள்ளும் இருந்தது…எனக்கும் இருபத்தி இரண்டு வயது உன்னோட இதே வயசு தான்…என்று நிறுத்தினாள் பார்வதி..
அதைத் தொடர்ந்து ஒரு மௌனம்…..மேற்கொண்டு சொல்வதா வேண்டாமா…என்ற தயக்கமும் குழப்பமும் கூடவே….
கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறினது தான்…முதலும், கடைசியுமா ரெண்டு நாள் தனியா இருங்கோன்னு ஊட்டி வரைக்கும் அனுப்பி வெச்சா…தேனிலவாம்….அங்கேயே… அந்த நிலவு தேய்ஞ்சு அன்னிக்கே அமாவாசையாப் போச்சு என் வாழ்க்கைன்னு தெரிஞ்சாச்சு.அதை இப்போ நினைச்சாலும் நெஞ்சு பதை பதைக்கும். தேனிலவெல்லாம் வெறும் சினிமாக் காரங்களுக்குத்தான்….சரிப்பட்டு வரும்…நம்மள மாதிரி சாதாரண பெண்களுக்கு அது சாதாரண வானத்து நிலவு தான்…! மீண்டும் மௌனம்…!
அப்படி என்னாச்சும்மா….?
நான் யார்..? இவளோட ஆசாபாசங்கள் எதுவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ளும் எந்த அக்கறையும் இன்றி… ஒண்ணுமே பேசாமல் …எடுத்த உடனே….ஏதோ தனியா ரூமில் தானே இருக்கோம்னு ஒரு தைரியத்தோட விஸ்கியும்… கிளாஸுமா உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்து திடுக்கிட்டேன்…எனக்கு….இப்படி .ஒரு குடிகாரக் கணவரா.? ன்னு என் மனசில் முதல் சாட்டையடி….அடுத்து அவர் சொன்ன…இதெல்லாம்… தப்பே இல்லை…இந்தா நீயும்..வாங்கிக்கோ என்று கிளாசை என் உதட்டை நோக்கி நீட்டும் போது…முகத்தை விருட்டெனத் திருப்பிக் கொண்டு கட்டிலை விட்டு எழுந்து விட்டேன்….என்னால் இதை எப்படி ஏத்துக்க முடியும்.?நீயே சொல்லு….!
ஒரு அந்நியன் ஒரு மஞ்சள் கயிறைக் கழுத்தில் கட்டிவிட்டு இது போல் என்ன வேணாச் செய்யலாமா? எனக்குள் இருந்த ஆக்ரோஷப் பெண் போர்க்கொடி தூக்கினாள். என் கனவுகள் சிதைந்து போகட்டும்….ஆனால் வந்தவர் இப்படியா? இப்படி ஒரு கல்யாணத்தைச் செஞ்சுண்டு தப்புப் பண்ணிட்டேனோ..? உடைந்து போய் அழுதேன்…என் அழுகை…அவருக்கு…” பிடிக்கலன்னா வேண்டாம்…அதுக்குன்னு அழுவானேன்…இதெல்லாம் சகஜம் ” ன்னு எதையும் வீட்ல போய் சொல்லித் தொலைக்காதே…ன்னு அவர் சொன்ன தோரணை..”மீறிச் சொன்னால் உன்னைத் தொலைச்சுடுவேன்..”.என்று எதிரொலியாகக் கேட்டது….அதன் பின்பு நன்றாகக் குடித்துவிட்டு குறட்டை விட்டார். நான் உறக்கத்தை விட்டேன்.
தன் மேல் ஒண்ணும் தவறே இல்லாத மாதிரி லேசா எடுத்துண்டார். இப்படி மோதலோட ஆரம்பித்த இல்வாழ்க்கை எந்த இடத்திலும் புரிதல் என்னும் வார்த்தை நுழையக் கூட துளி இடம் தராமல்… அவரோட ஒரு இன்னொரு முகத்தைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளாமலே ஊர் வந்து சேர்ந்தோம். ரெண்டு பெரும் ஒண்ணுமே…பேசிக்கலை.
வாயே திறக்காத சாது மாப்பிள்ளைன்னு அம்மா ரொம்பப் பெருமையா சொன்னதெல்லாம் இப்போ அவர் சாதுவும் இல்லை…போதி மரத்தடி புத்த பிட்சுவும் இல்லை….இவரெல்லாம் கபோதி மரத்தடி கபோதி..! ரொம்ப ..அழுத்தக் காரர் என்று அம்மாவிடம் சொல்லணும்னு தோணித்து…ஒருத்தர் ரொம்ப மெளனமாக அதிகம் பேசாமல் இருந்து விட்டால் அவர் ரொம்ப சாதுன்னோ… ரொம்ப அறிவாளின்னோ இனிமேல் நம்பக் கூடாதுன்னு மனசு சொல்லித்து..நமக்குத் தான் எல்லா ஞானமும் காலம் கடந்து தானே வரும். அன்னைக்கும் இந்த ஞானம் வரலை….பட்டுப் பட்டு இப்போ தான் யோசனையே வந்திருக்கு. அதான்…வாழ்க்கைன்னா என்னன்னு புரியும் போது பாதி வாழ்நாளும் முக்கால் வசந்தமும் நம்மை விட்டே போயிடுமாம். நீயும்…தெரிஞ்சுக்கோ…
ம்ம்ம்…ம்ம்…..அதுக்கப்பறம்…என்னாச்சு…? உன் காலத்தில் எப்படியோ…தெரியாது ..ஆனால் .இப்போல்லாம் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை…இதுக்காகவெல்லாம் நான் அப்பாவை கோச்சுக்க மாட்டேன்….இப்போதான் எல்லாரும் குடிக்கிறாளே. என் ஆஃபீஸ்ல என் வயசுப் பொண்கள் கூட சிகரெட்டே ஊதித் தள்ளுவா…நீ அவாளைப் பார்க்கணும்.. !
ம்ம்..ம்ம்..போதும்…போதும்….எல்லாம் பணமும், அதீத சுதந்திரமும் படுத்தும் பாடு…! எதுவுமே அளவோடு இருந்தால் பிரச்சனையை இல்லை…அளவில் குறைந்தாலும் பிரச்சனை…..அதிகமானாலும் பிரச்சனை..! இல்லையா…?
ஆமாம்மா…!
அதுக்கப்பறம் என்னை கூட்டிண்டு புக்காம் போனவர் போனவர் தான்…எனக்குன்னு இங்கே அம்மா… ஒருத்தி இருக்காங்கற நினைவே அவாளுக்கு இல்லாமல் , அங்கேர்ந்து எனக்குக் கடிதாசி வந்தாக் கூட யாரோ படித்து விட்டு கிழிக்கப் பட்டு குப்பை தொட்டில கிடக்கும். ஒரு நாள் எதேச்சையாப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் …எடுத்து சேர்த்து வெச்சு படிச்சாத் தான் தெரிந்தது… லெட்டர் வந்ததே…! கிழித்தது யார் வேலைன்னு….கேட்டதுக்கு அடிக்கடி லெட்டர் இங்கு உனக்கு வர்றது சரி கிடையாது…மாசத்துக்கு ஒண்ணு போடலாம்…..வாரா வாரம் என்ன வேண்டியிருக்கு…பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தால் எப்படி இருக்கணும்னு உங்கம்மாக்குத் தெரியாதா? ன்னு கேட்பார்…யார் எனக்கு வந்த லெட்டரைக் கிழித்துப் போட்டதுன்னு கேட்டதும்…மாமனார் தான் சொன்னார்…”நான் தான்…ஏன்..?. டெய்லி நீ போஸ்ட் வருதான்னு வாசலை எட்டி எட்டி பார்கிறது நேக்கு சரியாப் படலை…இந்த கடிதாசிக்குத் தானே…..அப்படி நிக்கறே…இனிமேல் எழுதாதேன்னு உன் அம்மாக்கு நீ லெட்டர் போடு…மாசத்துக்கு ஒண்ணு..ன்னு அழுத்தமாச் சொன்னார். எப்படி இருக்கும் பார்த்துக்கோ. இப்போ நீயெல்லாம் எவ்வளவு கொடுத்து வெச்சுருக்கேன்னு புரியும். புக்காத்திலே அந்தக் கால மனுஷா அப்படிக் கடூரமா இருந்தா..என்னிடம் !
முதலில் அந்த வீட்டில் பெரியவாளுக்கு மரியாதை தரணும்னு அமைதியா இருந்தேனா…அதுவே நாளடைவில் மரியாதையே பயமா… மாறி…அப்பறம் அடிமை மாதிரி ஒரு நிலைமை.க்கு கொண்டு வந்துட்டா….வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசக் கூட சுதந்திரம் இல்லை..எனக்கு என்ன வேண்டும் எது பிடிக்கும்.? குறைந்த பட்ச தேவைகள் தான் என்னது..?.இப்படி எதையுமே கண்டுக்க மாட்டார்….ஒரு சானிடரி பாட் வாங்கக் கூட சுயமா வாங்க கையில் காசு இருக்காது…எழுதிக் கொடுத்து விட்டா அவர் வரும்போது எதோ பட்டுப் புடவை வாங்கித் தரும் மிதப்பில் தூக்கிப் போடுவார்….!
அப்போ நினைப்பேன்…நான் ஒழுங்காப் படிச்சிருக்கலாம்னு…..ஒரு பெண்ணுக்கு படிப்பும், பதவியும் தான் கணவனை விட கூட இருந்து காப்பாத்துவது….அதனாலத் தான் உன்னை படிக்க வைக்க நான் படாத பாடு பட்டேன்.. தெரிஞ்சுக்கோ. என்னோட அம்மா…சின்னப் பெண்ணான என்னையும் வெச்சுண்டு என் அப்பா இறந்த பின்னே….யாரோ…. சீதாலக்ஷ்மின்னு ஒரு புண்ணியவதி ஆரம்பித்த தாம்பரம் சேவை இல்லத்தில் சேர்ந்து தையலில் டிப்ளோமா படிப்பு முடிச்சு தான் என்னையும் தன்னையும் காப்பாத்திண்டு ஒரு நிலைக்கு வந்தாள். என்னமோ என் தலைவிதி எனக்கும் கல்யாண வாழ்க்கை சரியா…. அமையலை..என்ன பண்றது…?
தெரியும்மா…..அது எதுக்கு இப்போ? நான் நன்னாத் தானே இருக்கேன்…? நீ உன் சோகக் கதைய சொல்லு…!
நான் எப்படி எல்லாம் இருக்கணும்னு நினைச்சேன் தெரியுமா? இதெல்லாமே மண்ணோட புதைஞ்சு போயிடுத்து. சதா சர்வகாலமும் அந்த வீட்டைக் கட்டிண்டு ஒண்ணு மாத்தி ஒண்ணு வேலை செஞ்சுண்டு ஜடமாட்டமா இருந்திருக்கேன். இப்போ நினைச்சால் எனக்கே என் மேல கோபம் தான் வரும். இப்படி புத்தி இல்லாமல் இருந்திருக்கேனே என்று..பார்வதி நிறுத்த…
ஏன்மா பாட்டி தான் நீ கல்யாணம் ஆகும் முன்னாடியே இல்லைன்னு சொல்லிருக்கியே….? பொதுவா மாமியார்…நாத்தனார் இதெல்லாம் தானே படுத்தல் கேஸுகள்னு ….கேள்விபட்ருககேன்..?
மாமியாரே… இருந்திருக்கலாம்….ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குப் புரியும்….ஆனா இந்த மாமனார் பத்து கொடுமை படுத்தும் மாமியாருக்குச் சமம்….அவரோட ராஜ்ஜியத்தில் அவரைத் தவிர யாரும் குரல் எழும்பக் கூடாது…பெரிய உத்தியோகம்….ஆஃபீஸ் மாதிரி வீட்டிலும் சட்ட திட்டம் எல்லாம் உண்டு..சர்க்கஸ் கூடாரத்தில் சிங்கத்தை அடக்கும் ரிங் மாஸ்டர் மாதிரி சாட்டையால் தட்டி தட்டி அடக்கி வைக்கிறா மாதிரி தான். கணவன் என்ற பெயரில் ஆறரை அடியில் ஒரு மனுஷன் சதா அப்பா முகத்தைப் பார்த்து பார்த்து மனைவியை வெளியில் அழைச்சுண்டு போகக் கூட பெர்மிசன் கேட்டு….இதெல்லாம் பழகவே மாசக் கணக்கில் போச்சு. மெல்ல மெல்லத் தான் புரிஞ்சுது இங்க இவருக்கு ஒரு வாய்ஸும் இல்லைன்னு…அப்பா சொன்னதை மீறி ஒரு விஷயம் நடக்காதுன்னும்….உரிமையோடு இருக்க வேண்டியவரே அடிமை மாதிரி இருக்கும்போது மரியாதை என்கிற பெயரில் அங்கே தனி மனிதனின் கொடுங்கோலாட்சி தான் ….டம்மி பீஸா நீ…ன்னு ..இந்தக் காலத்து பெண்கள் மாதிரி ஒரு வார்த்தை …ஏதாவது பேசிட முடியுமா..? கூடக் கொஞ்சம் நடுங்கத்தான் தெரியும்.
இந்த நேரத்தில் இவரோட பாட்டி, வந்து கூட இருந்தாள் கொஞ்ச மாசம்…அவருக்கு …வயசாச்சே தவிர கொஞ்சம் கூட விவேகம் இருக்காது……கும்பகோண குசும்பெல்லாம் வார்த்தையில் வெச்சுண்டு…..என்னைக் குத்தி குத்திப் பேசுவா…..கார்த்தால சாதம் வடித்ததும்….காக்கைக்கு சாதம் வைக்கப் போவேனா….” அப்போ பார்த்து ஒரு வார்த்தை சொல்லுவா பாரேன்….”
என்ன வார்த்தைம்மா…?
” காக்காயே சாதம் வடிச்சு காக்கைக்கு போடப் போயிருக்குன்னு….” வாய் கூசாமல் கேலி பேசுவா….ஏன்..? நான் அவ்ளோ கறுப்பாம்….அவாள்லாம் சிவப்பாம்…..அந்த கர்வத்தை எங்க போயி சொல்றது….இத்தனைக்கும் சொல்றவாளுக்கு என்ன வயசு தெரியுமா…? எண்பத்தி அஞ்சு…!.என்னமோ தான் இந்த உலகத்தில் சாஸ்வதமா இருக்க பாஸ் வாங்கி வெச்சுண்டு இருக்கறா மாதிரி…தான் இருக்கும் பேச்செல்லாம் ஒரு தோரணையா…! இவன் என்னத்தக் கண்டு மயங்கினான்……? நாய் குட்டி போட்டா நாய் மாதிரி போடும்னு தெரியாதோ….? இந்த மாதிரி பேசறா பாருங்கோ ன்னு அவரண்ட போய் சொன்னால்…
“உனக்கு வேற வேலை இல்லை…அவாள்லாம் வயசானவா…எதோ அந்தக் காலத்து மனுசா…சொன்னால் சொல்லிட்டு போட்டுமேன்னு விடணும்..அவா என்ன பொய்யா சொல்றா…..நிஜத்தைத் தானே சொல்றா”ன்னு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சத் தான் தெரியுமே தவிர ஆதரவா ஒரு வார்த்தை சொல்லத் தெரியாது. இப்படியே என் வாயை அடக்கி வெச்சிருந்தார்.
எங்கேயாவது வெளிய போகும் படியா இருந்தால் பத்தடி அவர் முன்னால நடக்கணும்…நான் அவர் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி நடக்கணும்…சரி ஏதாவது கேட்கலாம்னு போனா…..எனக்கு ஒண்ணு வேணும்…..கேட்கவா… வாங்கித் தருவேளா….ன்னு கேட்டால் …”ஒண்ணும் கேட்காதே….ஒண்ணும் வாங்கித் தர மாட்டேன்…” என்று நொட்டுன்னு வாயில் போடுவார்….அதுக்கப்பறமா அவர்ட்ட எந்த உரிமையில் நான் எதைக் கேட்பேன்….?
தீபாவளிக்குப் புடவை வாங்கணும்னா கூட கூட்டமா போய் அவரோட அப்பா விலைப் பட்டியலைப் புரட்டிப் பார்த்து எதை எடுத்து கையில் தருகிறாரோ அதைத் தான் பில் போட்டு கொண்டு வரணும்….இவளுக்குப் பிடிச்சுதா? பிடிக்கலையா இதெல்லாம் யோசிக்கவே மாட்டா….எனக்குப் பிடித்த கலர் என்னன்னு எனக்கே இப்போ மறந்து போச்சு….
பொழுது விடிந்தால் ஏன் விடியறதுன்னு இருக்கும்.?….எப்போவாவது ஊருக்குப் போகணும்னு கேட்டா..அவ்ளோதான் என்னமோ நான் அமெரிக்கா போக ஏரோபிளேன் டிக்கெட் கேட்கறது போல ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிப்பா…..உன் அம்மாவை வந்து ஒரு நாள் பார்த்துட்டு போகச் சொல்லு…நீ இங்கேர்ந்து போயிட்டா இங்க நாங்க பூவாக்கு என்ன பண்றதுன்னு …? ன்னு ஒரு கேள்விக் கொக்கி போடுவார்.
பதிலே பேச முடியாது….என்னமோ இவாளுக்கு சமைச்சுப் போட லைசென்சாக மஞ்சள் கயிற்றைக் கட்டிண்டு வந்தா மாதிரி என் நிலைமை ஆயிடுத்து. கழுத்தில தூக்குக் கயிறாய் மாட்டிண்டு தற்கொலை பண்ணிக்காமல் தினம் தினம் செத்துண்டு …..ஒரு வாழ்க்கை வாழறா மாதிரி தோணும். அவாளுக்கு ஒண்ணும் பிடிக்காது….ஒரு சினிமா,டிராமா.பாட்டு.புத்தகங்கள், இப்படி எதுவும் வீட்டுக்குள் நுழைவது பிடிக்காது.அவாளுக்குப் பிடித்ததை ரசிக்கும் மனசு எனக்கும் இல்லை. ஆபீஸ் போகும்போது….”வீட்டில் திருட்டு பயம் ஜாஸ்தி…இந்த ஏரியாவில் ன்னு சொல்லிட்டு…..என்ன பண்ணுவா தெரியுமா…?”
என்ன பண்ணுவார்…?.தன் அன்பு அம்மா பட்ட துன்பங்களைக் கேட்க கேட்க….சப்த நாடியும் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டு வந்த உஷா…….தன் தாயைப் பரிவுடன் பார்க்கிறாள்…..” இவ்ளோ கஷ்டம் எல்லாம் கூட உலகில் இருக்கா” என்பது போல அவள் மனம் கேள்விக் குறியானது.
இரண்டு பேரும் போகும்போது…வீட்டை பூட்டிட்டு சாவியை எடுத்துண்டு போய்டுவார்…..அவா வரும்வரை நான் ஜெயில் கைதி தான்…ஜன்னல்வழியாக் கம்பியை எண்ணீண்டு நிக்கணும். வேற வழி…எதுத்து கேட்க திராணியில்லை. திருட்டு பயம் ஜாஸ்தி…நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்லிடுவார். இப்படியே கழிந்த நாட்களில்…..நான் வேண்டாத தெய்வமில்லை….!
என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று. சில சமயங்களில் தெய்வம் எத்தனையோ சோதனைகளைத் தந்தாலும் சில நேரங்களில் கண் திறந்து பார்க்கும்.
அப்படித் திறந்து பார்த்த நேரம்….”குந்தி தேவிக்கு கர்ணன் கிடைத்ததைப் போல” நம்ம வாழ்விலும் கடவுளின் கருணை கிடைச்சிடும். இதைச் சொல்லும்போது பார்வதியின் குரல் கம்மியது.
அம்மா…..நீ ரொம்பப் பாவம்மா…நீ பொறுமையின் சிகரம்மா…எனக்கு இதுபோல் ஒன்று நடந்திருந்தால் நான் இதையெல்லாம் டாலரேட் ….பண்ணிக்கவே மாட்டேன்…யு ஆர் ரியலி கிரேட்…! அப்பா…அவ்ளோ கஷ்டப் படுத்தினாரா?
குழந்தை பிறக்கப் போறதுன்னதும்….குழந்தை சிகப்பாப் பொறந்தாத் தான் தேவலை….அதும் பொண்ணாப் பொறந்துடக் கூடாது…..அப்படி…இப்படின்னு….ஆயிரம் கண்டிஷன்….அதென்னவோ நான் கடவுள் கிட்ட ஆர்டர் கொடுத்து நமக்குப் பிடிச்சா மாதிரி செஞ்சு தான்னு சொல்ல முடியற மாதிரி ..பேச ஆரம்பிச்சா…எனக்கு எப்படி இருக்கும்..? ஆசையாப் பேசத்தான் தெரியாது ஆறுதலாகவுமாப் பேசத் தெரியாது…அன்றிலிருந்தே குழந்தை பிறக்கும் நாள் வரைக்கும் எனக்குள் ஒரே மனக் கவலை… மனப் போராட்டம் !
பிறப்பது பெண்ணாகப் பிறந்து விட்டால் என்ன செய்வது?அதுவும் என்னைப் போல் கறுப்பாகப் பிறந்து இன்னல் படக் கூடாதே கடவுளே…! என்றெல்லாம்…..மனம் நிம்மதியின்றியே இருக்கும். இவரைப் பார்த்தல் முதல் மனைவி இறந்த சோகமும் தெரியாது. இரண்டாவதா வந்தவளையாவது நன்றாக பார்த்துக்கணும்னு தெரியாது. காரணமே இல்லாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதை என்னால் ஜீரணிக்க முடியலை…பெண் என்பவள் புகுந்த வீட்டில் அடிமை தானா..? எனக்கென்று ஒரு வாழ்வு இல்லையா…என்றெல்லாம் யோசிக்க யோசிக்க…இந்தக் கொடுமையிலிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தீர்மானம் மனதளவில் செய்ய ஆரம்பித்தேன்.
பிரசவம் அம்மாதான் பண்ணினா…நல்லபடியா முடிந்தது..நடக்கக் கூடாதது, நான் பயந்ததுதான் நடந்தது. விதிக்கு என்மேல் என்ன பூர்வீக வெறுப்போ ? தெரியலை. பெண் குழந்தை கருப்பாக…அதான் நீ…! பிறந்து விட்டாய்….விஷயம் அறிந்து வந்து பார்த்ததும் முகம் சுளிக்க, கொடுமைப் படுத்த அவர்களுக்கு நல்ல காரணம் இப்போ கிடைத்துவிட்டது..கருப்பா உன்னைப் பார்த்ததும் அவா கண்கள் கோபத்துல சிவந்தது.
ஒருநாள்…. ! அந்த பயங்கர நிகழ்ச்சி நடந்தது .காலையில் எழுந்து பார்த்தால் கழுத்தில் இருந்த என்னோட பவித்தரமான மாங்கல்ய சங்கிலியைக் காணோம்…. நெஞ்சில் பகீரென்றது …. துடியாய் துடித்துப் போனேன், தேடித் தேடிப் பார்த்தேன் தலையணை, படுக்கை எல்லாம் !… என் தலை சுற்றியது ! தூங்கும் போது யார் என் கழுத்திலிருந்து உருவியது ? வந்த கள்வன் அதை மட்டும் ஏன் திருடினான் ? என் மற்ற நகைகள் எல்லாம் டிரஸ்ஸிங் டேபிளில் இருக்குதே ? எங்கே போச்சு என் மாங்கல்யம்… பார்த்தேளா? என்று கேட்க, எனக்குத் தெரியாதே.. என்ற பதிலே எதிரொலித்தது ..நீ எங்கே தொலைச்சே என்று என்னையே கேள்வி கேட்டு மடக்க…நானும் வீடு பூராத் தேடி தேடி…களைத்துப் போய், கடைசில… மனமுடைந்து வெறும் மஞ்சளை வைத்த ஒரு மஞ்சள் கயிறைக் கட்டிகொண்டேன்…..ஐந்து பவுன் தங்கம் …அது கூட பெரிசாகப் படவில்லை…திருமாங்கல்யம் மொத்தமாக திருட்டுப் போய்விட்டதே என்ற வருத்தம்..நெஞ்சைப் பிளந்தது. தான் ஏதோ பெரிய கஷ்டகாலம் வரப் போறது போல மனசுக்குள் ஒரு பயம்…அப்போ…” மாமனாரிடம் போய் கேட்டேன்…”மாமா…என்னோட திருமாங்கல்ய சங்கிலியை காணோம்…எல்லா இடத்திலும் தேடித் பார்த்துட்டேன்… இந்த வீட்டுக்குள் எப்படிக் கள்ளன் வந்தான் நீங்க இருக்கும் போது ?
நேற்று ராத்திரி கூட இருந்தது என்று….அவரும் ஒன்றும் சொல்லவில்லை…கழுத்தில் கிடப்பது எங்கே போகும்..? நன்னாத் தேடித் பாரு…ஒரு சமத்தும் போதாது நோக்கு….என்று எனக்கே அர்ச்சனை செய்தார்கள். பூமியைத் தோண்டித்தான் பார்க்க வேண்டும். எல்லா இடமும் தேடியாச்சு !
நானும் தேடித் தேடி பத்து நாட்கள் ஓடியே போச்சு…..அழுகை அழுகையா வரும்.. புருஷன் உயிரோடு உள்ள போது தாலியை இழப்பதா ? இன்னையோட பத்து நாட்கள் ஆச்சு….தாலிக்கொடி காணாமற்போயி…..மனசே சரியில்லை….என்று நான் அழுது கொண்டே சொன்னது மாமா என்றஅந்தப் பாறை மனதில் கேட்க…. அவன்ட்ட போய் கேளு…இந்த மாதிரி வேலை உன் ஆம்படையான் தான் செய்வான்…என்று தணிந்த தொனியில் என்னை நேராக நோக்காமல் மேலே பார்த்து சொல்லறார்….எனக்கு எப்படி இருக்கும்.. ? இதயம் அப்பளம் போல் நொறுங்கியது .உடனே ஓடிப் போய்…”மாமா சொன்னார், நீங்க தான் தாலிக் கொடியை” எங்கேயோ எடுத்து ஒளிச்சு வெச்சுருப்பேள்னு..
இதைக் கேட்டதும் ஏனோ அவரின் வெள்ளை முகம் கறுத்துப் போனது, திருடனைத் தேள் கொட்டியது போல் ! (இதற்கு முன்னாலும் இது போல் ஏதாவது நடந்திருக்குமோ….எனக்குள் சந்தேகம்…?)..அங்கிருந்த ஸ்டூலை எடுத்துப் போட்டு பரண் மீது இருக்கும் ஒரு பெட்டியை இறக்கி வெச்சு…அதில் இருந்து தாலிக் கொடியை எடுத்துக்கோ என்று சொல்லிட்டு வேகமா..வெளில கிளம்பிட்டார். கடவுளே இப்படியும் ஒரு கள்வனா ? ஒரு வழியாக் கிடைத்தது…நேக்கு எப்படி இருக்கும்..? இத்தனை நாட்கள் எங்கேயோ தொலைஞ்சு போச்சுன்னு கவலைப் பட்டுண்டு இருந்தவள் கடைசீல அதற்குச் சொந்த மானவரே. அதை நல்ல நேரம் பார்த்துக் கட்டியவரே..அதைத் திருடி ஒளித்து வைக்கணும்னா எவ்வளவு வன்மம் இருக்கணும் மனதில்….நேக்கு ஏன்னே…. புரியலை….!
ஒரு வழியாக் கிடைத்தது..என்ற சந்தோஷம்….இருந்தாலும்…இப்படியா பண்ணுவார் ஒரு கணவர்…? .நேக்கு எப்படி இருக்கும்..இத்தனை நாட்கள் எங்கோ தொலைந்து போயடுத்துன்னு கவலைப் பட்டுண்டு இருந்தவள் கடைசீல அதற்கு சொந்தமானவரே…அதைத் திருடி ஒளித்துவைக்கணும்னா எவ்வளவு வன்மம் இருக்கணும் மனதில்….நேக்கு ஒன்னும் புரியலை….ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டு மனசுக்கு மரத்துப் போச்சு.மொத்தத்தில் ஸ்வீட் கோட்டட் பாய்சன் மாதிரி…..இவரோட வக்கிரமான மனதுக்கு அழகான உருவம்.. பார்த்தால் யாருக்கும் சந்தேகம் கூட வராது. பார்க்க சாது மாதிரி ரொம்பவும் மென்மையானவராத் தான் இருப்பார்…ஆனால இதயம் கருங்கல் பாறை….அதில் முட்டிண்டா என்னாகும்…? என் தலை தான் சிதறும்…
ஒருநாள் இப்படித்தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள்…..விலைவாசி அது இதுன்னு பேசிட்டு கடைசில….கறுப்புப் பெண்ணுக்கு வரதட்சணை …நகை… சீர் வகைகள் எல்லாம் இரண்டு மடங்காகும்னு என் முன்னாலயே சொல்ல ஆரம்பித்தார்கள். இதில் படிப்பு செலவு வேற…..அப்போது தான் ஒரு வார்த்தை வெளியில் வந்தது…பெண்ணுக்கெல்லாம் எதுக்கு படிப்பும் கிடிப்பும்…? இதையெல்லாம் படிக்க செலவு பண்ணிக் கொண்டு இருக்காதே…வயசுக்கு வந்தா யாரையாவது பார்த்து தாரைவார்த்துக் கொடுத்துடு…இல்லன்னாக் கூட அதுவே எவனையாவது கூட்டிண்டு வந்து நிற்குமோ.என்னமோ..? இல்லாட்டா சொல்லாமக் கொள்ளாம கல்யாணம் பண்ணிண்டு ஓடிப் போயிடுமோ…? யார் கண்டா..? இரண்டு வயதுப் பெண் குழந்தையைப் பார்த்து ஒரு தாத்தா குழந்தையின் தகப்பனிடம் பேசும் பேச்சா….அதுவும் என் முன்னாலயே….!
நாக்கு இருந்தால் என்ன வேணாப் பேசத் தோன்றுமா? வெறும் பணம் மட்டும் தான் வாழ்வா?
பணம் இருந்தால் மட்டும் தான் கல்யாணமா? இந்த மனோபாவத்தில் தான் என்னையும் கல்யாணம் பண்ணிக் கொண்டாயா? உனக்கெல்லாம் எதுக்குக் குடும்பம்…மனைவி…ஊரை ஏமாத்தவா? அதான் பணம் நிறைய இருக்கே…எப்படி வேணா நீங்க இருந்துக்கலாமே….யார் உங்களை எதிர்த்துக் கேட்கப் போறா? இனிமேல் இந்தாத்தில் இருந்தும் இல்லாமல் இருக்க எனக்கு என்ன பைத்தியமா….
தீவிரமா யோசிச்சேன்….என் மனசெல்லாம் உன்னை எப்படியாவது இங்கேர்ந்து காப்பாத்தணும்னு மட்டும் இருந்தது.ஆனா அதில் இருந்து நேக்கு ஒரு வார்த்தை…எடுத்துக் கொடுத்தா மாதிரி இருந்தது…..அது தான்…ஓடிப் போயிடுமா?…ன்னு அவர் சொன்னது…! நானும் ஓடிப் போயிடலாமேன்னு உள்ளுக்குள்ளே யோசிக்க ஆரம்பித்தேன்.
யோசித்தேன்…யோசித்தேன்…யோசித்தேன்…!
இந்தப் பாதாள நரகத்தில் குடும்பக் கைதியாய் நோவதைக் காட்டிலும், தனிப் பிறவியாய் என் அம்மா மாதிரி தையல் கத்துண்டு உழைத்து வாழலாம்னு தோணித்து. முடிவா…பகவான் பேரில் பாரத்தைப் போட்டுட்டு உன்னைத் அழைச்சுண்டு வீட்டை விட்டு ஓடிப் போய்டலாம்னு தோணித்து ..முதல்ல கஷ்டமா இருக்கும்..பொறுத்துக்குவேன் பிறகு பழகிடும்…..சாப்பாட்டுக்கும் தங்கும் இடத்துக்கும் கஷ்டம் இல்லாத இடம் ஒண்ணுன்னா… அதுஏற்கனவே எனக்கு நன்கு பழக்கப் பட்ட இடம் தான் தாம்பரம் சேவை இல்லம்.நேரா… அங்கேயே போகலாம்னு தீர்மானமா தைரியமாக் கிளம்பி வந்துட்டேன்.
நல்லது, கெட்டது இரண்டிலுமே..ஒரு .உச்சம் இருக்கு….நான் வந்து மாட்டிக் கொண்டது நரகத்தின் உச்சம்…அப்போ…என் மகளுக்கும் இதே போன்ற ஒரு உச்சத்தில் கொண்டு விட எந்தத் தாயின் மனம் ஒப்புக் கொள்ளும்.? திருத்தவே முடியாத இரண்டு மனிதர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு நான் என்னையே இழந்து சிதைந்து போனது போல உன்னையும் எப்படி பலி கொடுப்பது…? இதே நரகம் எனக்குப் பழகியது போல உனக்கும் பழக்கமாயிடக்கூடாது !..
அதுக்கு நானும் உடந்தையா இருக்க மாட்டேன். உன்னையாவது சுதந்திரக் காற்றில் ஆரோக்கியமாக வாழ வைக்க வேண்டியது ஒரு தாயாக என் கடமை. அவர்கள் என்னை அழித்தது போதும்…ஒரு வம்சமே அழியக் கூடாது.
அன்று எடுத்த முடிவு தான்….நான் உன்னைத் தூக்கி கொண்டு எனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு…உன்னோட வெறும் பிறந்த சான்றிதழ் மட்டும் எடுத்துக் கொண்டு…அங்கிருக்கும் எந்த ஞாபகச் சின்னத்தையும் சுமக்காமல்…யாருக்கும் சொல்லாமல் தாம்பரம் வந்து இறங்கி சேவை இல்லத்தில் சேர்ந்துண்டேன். நீ பெரியவளான பிறகு அங்கேர்ந்து இங்க வந்துட்டேன். அந்த பத்து வருஷத்தில் என்னை யாரும் தேடலை….இனிமேலும் தேட மாட்டா….!
இதோ…திரும்பிப் பார்க்கும்போதே….இருபது வருஷம் ஓடிப் போச்சு..என்னைப் பத்தி கவலைப் பட்டே பாட்டியும் செத்துப் போய்ட்டா…!.நீயும் என் மனசு போல எஞ்ஜினீர் ஆயிட்டே…உனக்கு கல்யாணமும் பண்ணிட்டேன்….இப்போ தான் நான் நினைத்தது முடிந்த நிம்மதி எனக்குள்ளே மூச்சு விட்டுண்டு இருக்கு. நான் உனக்குப் போட்டது…தான் அந்தத் தாலிச் சங்கிலி.. …என்னோட சீதனச் சங்கிலி….அதோட மதிப்பு பணத்தால சொல்ல முடியாது…ஏன் தெரியுமா? அது என் அம்மா எனக்கு என் கல்யாணத்தில் போட்ட பாட்டியோட சங்கிலி..!
இது வழி வழியா வரும் பவித்தர பொக்கிஷம் உஷா !….அதை நாம் எப்படி மதிக்கிறோம் என்றும் இருக்கு..தாலிக் கொடி வெறும் மஞ்சள் கயிறோ அல்லது…..தங்கச் சங்கிலியோ இல்லை…அது சுமங்கலிப் பெண்ணின் உயிர்நாடி. அதற்கும் ஆம்படையான் அன்புக்கும்,புறக்கணிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால்….ஒரு பெண்ணின் மன ஓட்டத்துக்கும் அதுக்கும் ரொம்ப சம்பந்தம் இருக்கு. திருமாங்கல்யத்தின் மகிமை என்ன வென்று கேட்டியே…
கல்யாணமே ஆகாதவாளுக்கும், கல்யாணம் ஆகி என்னை மாதிரிபேதைகளுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும், கல்யாணம் ஆக வேண்டிய பெண்களையும்…கேட்கப் போனால் …மஞ்சள் கயிறின் மகிமையை நெற்றியில் அடிக்கிறா மாதிரி சொல்லிடுவா..அதோட அருமையை…..எல்லாமே…. கஷ்டப் படாமல் சுலபமாக் கிடைக்கும் போது மட்டும் தான் இது வெறும் மஞ்சள் கயிறாகக் கண்ணுக்குத் தெரியும். நம்ம கலாச்சாரத்தையே இந்தக் கயிறு தான் ஆணிவேர் மாதிரி காலம் காலமாய்த் தூக்கிப் பிடிச்சு நிறுத்தியிருக்கு…..தெரிஞ்சுக்கோ. சில விஷயங்களை எந்தக் காலமும் மாற்றி விட முடியாது……..!
இத்தனை நேரம் அம்மாவின் வாழ்க்கையைக் கதையாய் கேட்டுக் கொண்டிருந்த உஷா….அம்மா இதைச் சொன்னதும்….அழாத குறையாக…உன்னோட தைரியம்…நேர்மை….பாசம் இதெல்லாம் நான் உன்னோட கூட இருந்து முழுசா உணர்ந்தவள் ம்மா….கிணற்றுத் தவளை கூட வாளியைப் பிடித்து வெளியே வந்து ஆற்றைத் தாண்டி விட்டது போல….உணர்கிறேன் என்றாள் உஷா !.
சொன்னவள் தன் ஹான்ட்பாக்கில் இருந்த தாலிக்கொடியை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு….என்னை நீ ஆசீர்வாதம் பண்ணு….என்று காலில் விழுகிறாள்….”தீர்க்கசுமங்கலியா..எப்பவும் சந்தோஷமா ரெண்டு பேரும்… இருக்கணும்” பார்வதி மனம் நெகிழ மகளை வாழ்த்தும்போது….வாசலில்…ஹாரன் சத்தத்துடன் கார் வந்து நிற்கவும் உஷா மான் குட்டி மாதிரி துள்ளிக் கொண்டு வாசலுக்கு ஓடுகிறாள்.
மகளின் சந்தோஷத்தைப் பார்த்த பார்வதியின் முகம் பொங்கி வரும் மஞ்சள் நிலவானது..!
– 25 ஜூன், 2012