என் எட்டு வயதின் ஆச்சர்யத்தால் அகன்ற கண்களுடன் பார்க்கும் பொழுது இருபது வயது கடந்த என் மைத்துனியைப் போல அழகான பெண் இந்த வையகத்தில் இருக்கமுடியாது என்றே தோன்றிற்று.
ஹெலன், சீதை, கிளியோப்பாற்றா முதலிய உலகப் பிரசித்தி பெற்ற அழகி களைப் பற்றியெல்லாம் அந்த வயதிலேயே கேள்வியுற்றிருந்தேன். அவர்கள் எல்லாம் என் மைத்துனியிடம் பிச்சை வாங்க வேண்டும்; அல்லது அவர்கள் எல்லா ருடைய அழகையும் வேடிக்கை பார்க்கும் ஒரு விதி சேர்த்து சமைத்துவிட்ட ரூபமோ அவள்! பளிங்குக் கன்னங்களின் மேல் பதறிச் சிறகடிக்கும் கருங்கண் இமைகள். அவைகளின் மேல் குவளையின் கருமையைச் சாறாக்கி வடித்து யாரோ ஒரு அழகுக் கலைஞன் மெல்லியதாக வளைந்து வரைந்துவிட்டது போன்ற புருவங்கள். அவைகளின் மேல் வெண் பிறைநுதல்…
நான் மெய்ம்மறந்து அவளையே கண் கொட்டாமல் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன். அவள் தன் நீண்ட கருங் கூந்தலை வாரிக் கொண்டிருந்தாள். சீப்பின் பற்கள் சிதறிவிடும்படி அத்தனை அடர்த்தி யாகவும் இருந்தது அவளுடைய கூந்தல்.
“என்னடா, அப்படிப் பார்க்கிறாய்?”
நான் மாங்காய் திருடுகையில் கையுங்களவுமாய்ப் பிடிபட்ட சிறுவன்போல் அலறி அடித்துக்கொண்டு எழுந்து நின்றேன். என் சேப்பில் இருந்த கண்ணாடி ‘மாபிள்’கள் அலங்கோலமாகச் சிமெண்ட் நிலத்தில் விழுந்து சிதறின. அத்துடன் என் கனவும் கலக்கமும் கலைந்தன.
“ஒண்டும் இல்லை.”
“பின்னே ஏன் அப்படி என்னை விழுங்கிற மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தாய்?”
“உம்மை எப்ப நான் பார்த்தனான்? அந்தச் சுவரிலே இருக்கிற பல்லியை அல்லவோ நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.”
“இல்லை, என்னைத்தான் நீ பார்த்தாய்!”.
“உம்மிலை என்ன கிடக்குது பார்க்கிறதுக்கு! ஓகோ, அப்பிடியோ உமக்கு யோசனை?”
“ஏன்டா, நான் வடிவில்லையே?”
சிறுவனாகிய என்னுடன் எதுவும் பேசலாம் என்ற எண்ணம் போலும். அவளுக்கு தான் அழகானவள் என்று அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. அத்துடன் அதைக் குறித்து இறுமாப்பும்…
“சொல்லேண்டா; நான் வடிவில்லையே?”
“எனக்கு அதெல்லாம் தெரியுமே?”
“இந்த வயதிலே சினிமாப்படம் எல்லாம் பார்க்கிறாய். நாவல்ஸ் புத்தகம் எல்லாம் படிக்கிறாய். இது மட்டும் தெரியாமல் கிடக்கே உனக்கு? சொல்லு மச்சான்” என்று குழைந்தாள்.
அவள் என்னைத் திடுக்கிட வைத்ததற்காக. அவள்மேல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைந்தேன்.
“அதெல்லாம் என்னை ஏன் கேட்கிறீர்? மச்சாள், என்ரை பெரியண்ணன் இண்டைக்குப் பின்னேரம் வந்திடுவார்; அவரைக் கேளும், நீர் வடிவோ வடிவில்லையோ எண்டு. அவர் நல்லாய்ச் சொல்லுவார்!”
“போடா! குரங்கு சனியன்! இனி அடிதான் வாங்கப் போறாய் என்னட்டை!”
அவள் கன்னங்கள் சிவந்தன – நாணம், கோபம், மகிழ்ச்சி எதுவோ நான் அறிந்தேனோ? அவள் தலைசீவிக் கொண்டை போட்டுவிட்டபடியால், கண்ணாடியை நகர்த்திவிட்டு மான் போல் துடித்தெழுந்து நின்றாள். அவள் கையிலே நீளமான தடித்த சீப்பு இருந்தது. நான் சிறிது தூரத்தில் போய் விலகி நின்றுகொண்டேன். சிறுவர்களுக்கு இயல்பாக உள்ள சுபாவத்தின்படி அவள் மனத்தை மேலும் கிளறிவிட முனைந்தேன்.
“சும்மா கணக்கு விடாதையும், மச்சாள்! அண்ணன் இஞ்சை வந்தால் அறைக்கை போய் ஒளிச்சுக்கொண்டு யன்னற் சீலையை நீக்கிப் பார்க்கிறது எனக்குத் தெரியாதோ?”
அவள் திடீரென்று சிரித்து விட்டாள்.
“அட குரங்குக் குட்டி! உனக்கு இதெல்லாம் எப்பிடியடா தெரியும்? சரி வா, இவ்வளவு நேரமும் மாபிள் அடிச்சுக் களைச்சுப் போனாய். இனி கால் முகம் கழுவிப்போட்டு வந்து சோத்தைத்தின்!”
அவள் பேச்சை மாற்ற முயன்றாலும் நான் விடவில்லை.
“அதுகும் தெரியும். இன்னும் ஒரு மாதத்தையால், என்ரை அண்ணன் உம்மைக் கலியாணம் முடிக்கப் போறார் எண்டதும் தெரியும்!”
“அட குரங்கே ….!”
அவருடைய குரலில் கோபம் இல்லை. எல்லை இல்லாத ஒரு குதூகலம்தான் தொனித்தது. தனிக் கறுப்புவளையல் அணிந்த தன் வெண்ணிறக் கை ஒன்றை மணிக்கட்டுடன் மடித்து தன் துடி இடையில் வைத்துக்கொண்டு என்னைத் தன் அகன்ற கருவிழி களால் உற்று நெடு நோக்கு நோக்கினாள்.
உண்மையில் என்னைத்தாள் நோக்கினாளோ அல்லது தன் மனக்கண்களால் என் முகச்சாயல் கொண்டிருந்த…?
அவள் நோக்கு எனக்குச் சங்கடமாக இருந்தது. என் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.
“மச்சாள், எனக்குப் பசிக்குது. இப்ப சோறு தாறீரா அல்லது…”
அவள் மோனம் கலைந்தது.
“வா” என்றாள் அன்புகனிய, “முட்டைப் பெரியலும் சோறும் தாறன்…”
அவள் பெயர் கர்ணகை; என் பெயர்….? அது இந்தக் கதைக்குத் தேவையில்லை.
என் அண்ணாவின் பெயர் சண்முகதாஸன். சுருக்கமாக எஸ்.தாஸன் என்று வைத்துக்கொண்டிருந்தார். அவர் பீ.ஏ. பாஸ் பண்ணிவிட்டு அடுத்த ஊரில் ஒரு கலாசாலையில் உபாத்திமைத் தொழில் செய்து கொண்டிருந்தார்.
கர்ணகை சிறு வயதிலேயே தாயை இழந்து விட்ட கன்னி. தந்தையின் கண்ணுட் கருமணி. அவளுக்காக அவர் மறு விவாகமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் என்னுடைய அம்மாவின் ஒரே தமையன். அவர் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். அதிற் கிடைத்த வேதனம் அவர்கள் இருவருக்கும் போதுமானது. தன் மகளுக்கென அதில் மீதம் செய்து பத்தாயிரம் ரூபாய் பணமாக வங்கியில் போட்டு வைத்திருந்தார். அத்துடன் வீடும் வளவும் சிறிது வயல் நிலமும் அவருக்குச் சொந்தம்.
எல்லாம் தன் மகளுக்கு என்றே வைத்திருந்தார். எங்கள் வீட்டில் என் அம்மா வைத்ததுதான் சட்டம். என் தந்தை காசு தேடும் யந்திரம்… அவ்வளவுதான். என் தாய் எங்கள் வீட்டை ஒரு சிற்றரசி போல ஆட்சி செய்தபடியால் சிறுவயதில் எனக்கு என் தந்தையின் அன்பு கிடைக்கவில்லை.
அவர் எனக்கு என்றும் தூரத்துப் பச்சை… ஏதோ காற் சட்டை, கோட், டை, சப்பாத்து, தொப்பி முதலியன காலையில் அணிவார். பிறகு மாலையில் வந்து அவைகளைக் களைந்து வைத்துவிட்டு ஒரு மலிந்த எட்டுமுழ வேஷ்டியை இரண்டாக மடித்து இடுப்பில் கட்டிக்கொண்டு பத்திரிகை பார்ப்பார். சம்பள நாளன்று தம் கையிற் கிடைத்த பணத்தை என் தாய் கையில் வைத்துவிட்டு, வீட்டு விவகாரம் எதிலும் சிரத்தை இல்லாமலே இருந்துவிடுவார்.
எங்களில் எல்லாமாக எட்டுச் சகோதரர்கள். பெண்கள் அறுவர்; ஆண்கள் இருவர். அண்ணன்தான் எல்லாரிலும் மூத்தவர். நான் கடைக்குட்டி. இடையில் ஆறு பெண்கள். என் அக்காமார் என் காதுகளைப் பிய்த்து எடுத்து என்னைத் தங்களுடைய சேவகனாக நடத்தினார்கள். நூற்பந்து வாங்கி வா, ஊசி வாங்கி வா, சட்டைத்துணி வாங்கி வா, அது வாங்கி வா, இது வாங்கி வா என்று எல்லாம் ஏவி என்னை ஒரு அடிமைபோல் நடத்தினார்கள்…
அதனால்தான் நான் என் கர்ணகை மச்சாளிடம் போய் அண்டுவேன்…
என்னுடைய அண்ணனுக்கும் கர்ணகை மச்சாளுக்கும் கலியாணம் நடக்கப்போகிறதே, அதன்பிறகு அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிடப் போகிறாளே என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப் பட்டதும் என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் துள்ளி, என் அக்காமாருக்கு இதனால் ஒரு பாடம் படிப்பிக்கலாம் என்று எத்தனையோ குழந்தைக் கனவுகள் எல்லாம் கண்டுவிட்டேன்.
அதற்கிடையில் என்னுடைய அண்ணன் உபாத்திமைத் தொழிலில் இருந்து ஏதோ ஒரு சோதனை பாஸ் பண்ணி ஓர் அதிகாரப் பதவிக்குப் போய்விட்டார்.
அன்றும் கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் அன்று அலுத்துப்போய் வந்த மாமாவுக்குத் தேநீர் தயாரித்துக் கொண்டி ருந்தாள். நான் அவளருகிற் போய் அமர்ந்துகொண்டேன்.
“குடிடா மச்சான், தேத்தண்ணி!”
“மச்சாள், உமக்கு ஒரு புதினம் தெரியுமா?”
“அட குடிச்சுப் போட்டு கதையன். இன்னொரு ரஷ்யாக் காரன் சந்திர மண்டலத்திற் போய் சேர்ந்திட்டானோ அல்லது, அல்லது…. என்ன இவ்வளவு அவதிப்படுகிறாய்! குடியடா தேத்தண்ணியை!”
“மச்சாள், இந்தப் புதினம் கேள்விப்பட்டீரோ? தெரியாது போலக் கதைக்கிறீர். என்ரை அண்ணன் பெரிய சோதனை பாஸ் பண்ணிப் போட்டார். அவருக்கு இனிமேல் மாமாவைப் போல வாத்தி வேலை இல்லை; இனிப் பெரிய கவுண்மேந்து உத்தியோகம்.”
“என்னடா சொல்லுகிறாய், குரங்கா!”
“இனிமேல் உம்மடை தேத்தண்ணி குடிக்கமாட்டேன். பெரியண்ணன் வந்து உம்மைக் கலியாணம் முடிச்சு எங்கடை வீட்டை கொண்டுவந்த அதன் பிறகு உம்மடை கையாலே ஒரு தேத்தண்ணி தந்தால் குடிப்பன். இப்ப அதெல்லாம் ஏலாது.”
“போடா சனி, போடா குரங்கு, போடா மூதேவி! இதிலே நிண்டியோ ஏப்பைக் காம்பாலே வாங்கப்போறாய் என்னட்டை!”
“என்ன மச்சாள், உமக்குச் சந்தோஷமில்லையா?”
“போடா?”
அவளுடைய மென்மையான கன்னங்கள் மறுபடி திடீரென்று சிவந்தன. அவள் குங்குமம் அணிந்திராவிட்டாலும் பிறைமதி யொத்த அந்த நெற்றி குங்குமம் போலச் சிவந்துவிட்டது. அவள் உடனே எழுந்து என் மாமாவான தன் தந்தைக்குத் தேநீரும் பலகாரமும் கொண்டு சென்றாள்.
வெட்கம் என்னையும் பிய்த்துத் தின்றது. நான் ஓடி விட்டேன்.
ஆனால் அந்த மணம் நடக்கவில்லை. என் தந்தைக்கு வாய் இல்லை. என் தாய்க்குப் பணமோகம். என் அண்ணாவுக்கு ஆங்கில மோகம். இரக்கமற்ற என் ஆறு அக்காமாருக்கும் அண்ணனுடைய பதவிக்கு ஏற்ற பெண் வேண்டும் என்ற ஒரு மூட எண்ணம். ஆங்கிலப் படிப்பு, பவிசு…
ஒரு நாள் என்னுடைய அப்பா என்னுடைய அம்மாவிடம் வாதாடினார். பேசினார். எல்லாம் முதன்முறையாகத்தான், நான் அறிந்தமட்டில்! அவர் அழுதார். என் குடும்பத்தவர் எல்லோரு மாகச் சேர்ந்து அவர் வாயை அடக்கிவிட்டனர். ஏழு பெண்கள் சேர்ந்து பேசும்பொழுது வயோதிபராகிய ஒரு ஆண் எம்மாத்திரம்?
அன்று நான் என் தந்தைக்காக இரங்கினேன். உடனே கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் அன்று குங்குமம் அணிந் திருந்தாள். தன் நீண்ட கூந்தலை வாரி முடிந்து அதிலே மணம் கமழும் மல்லிகையும் அணிந்திருந்தான். அது ஒரு தனி அழகு. எட்டு வயதுச் சிறுவனாகிய எனக்குக் கூட அந்த அழகு புலப்பட்டது. நான் ஒரு கணம் பிரமித்து நின்றுவிட்டேன்.
யானைத் தந்தத்தால் படைக்கப்பட்ட பதுமைபோல் அவள் வீட்டு வாசலிலே நின்றாள்; அந்த வீட்டை ஆளும் திருமகள் போல் நின்றாள்.
ஏதோ கூறவென்று ஓடிப்போன நான் மலைத்து நின்று விட்டேன்.
அவள் அதிகாரமாகவே பேசினாள்.
“என்னடா!”
“ஒண்டுமில்லை மச்சாள்.”
“என்ன என்னவோ கிளிச்சுக் கொட்டுகிறதுபோல ஓடி வாறாய்! மாமி மச்சாள்மார் எல்லாரும் நல்லாயிருக்கினமோ?”
“ஓம் மச்சாள்!”
“என்னடா என்னவோ செத்த வீட்டுக்குச் சொல்ல வந்தவன் போலே ஒரு மாதிரிக் கதைக்கிறாய். பொறு மச்சான்; இப்ப ஐயா வந்திடுவர். நீயும் அவரோடை இருந்து கொழுக்கட்டையும் வடையும் தின்னன்.”
“ஓம் மச்சாள்!”
ஆனால் நான் சொல்லவந்ததை எப்படிச் சொல்லுவேன்? என் நா எழவில்லை. என் குழந்தை மனம் இடிந்துவிட்டது.
“எனக்கு வீட்டிலே வேலை கிடக்குது மச்சாள்” என்று அழாக்குறையாகச் சொல்லிவிட்டு எடுத்தேன் ஓட்டம்.
என்னுடைய அண்ணனுக்கு எங்கோ ஓரிடத்தில் கலியாணம் பேசி முடித்து வைத்துவிட்டாள் அம்மா.
என்னுடைய பிறவூர் மச்சாள் வந்தாள். என்னுடைய குழந்தை மனத்திற்கு அசிங்கத்தின் சின்னமாகவே அவள் தோன்றி னாள். கன்னம் கரேலென்று கொழுத்திருந்த முகத்திலே கறுத்த – தோலை வெள்ளைத் தோலாக்க முயலும் பவுடர்ப்பூச்சு, கையிலே விலை உயர்ந்த ஒரு கைக்கடிகாரம், கழுத்திலே ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி, அதிலேதான் தாலியும் கோத்துக் கிடந்தது: பின்னி முடிந்த கூந்தலிலே வைத்துத் தொடுத்த முடிமயிர் புறம்பாகத் தெரிந்தது. அவளுடைய இடையிலே மெலிவோ மென்மையோ இல்லை. உடலிலே அழகில்லை. குரலிலே இனிமை இல்லை. மனத்திலே அன்பில்லை…
எனக்கு உடனே வீட்டைவிட்டு ஓடிவிடவேண்டும் போலத் தோன்றியது.
எங்கே ஓடுவேன் நான்?
என் கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் என்றும் போலச் சந்தோஷமாகவே இருந்தாள்.
யாரோ ஒரு தெய்வச் சிற்பி தன் வல்லமை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து நன்றாக அடுக்கிவிட்ட முத்து வரிசையை வளைத்து மாணிக்கக்கரை கட்டிவிட்டது போன்று இருந்தது
அவள் புன்னகை.
எதற்கும் கலங்காத வீரத்தமிழ் மகள் போல் என்னைக் கண்டவுடன் அவள் கண்கள் சிரித்தன.
“வாடா மச்சான், இஞ்சை வந்து கொஞ்சம் கலியாண வீட்டுப் பலகாரம் சாப்பிடேன்!”
“என்ன மச்சாள், எனக்கெண்டே வச்சிருக்கிறீர் எங்கடை கலியாண வீட்டுப் பலகாரம் எல்லாம்…” என் குரல் தடைபட்டு விம்மி நின்றது.
எனக்கு அழுகை.
“அதிலே என்னடா மச்சான்? நீ எண்டாலும் என்னைக் கலியாணம் முடிக்கமாட்டியோ?”
பகலெல்லாம் தண்ணொளியை நல்கிவிட்டு மேல்வானில் அஸ்தமிக்கும் சூரியன் போல் அவள் முகம் செக்கர் படிந்து மங்கியது. மாவலியாறு திடீரென்று பசிய கானகமெல்லாம் பெயர்த்துப் பெருவெள்ளம் கொண்டு பாய்வதுபோல் அவளுடைய அழகிய கருங்கண்ணிமைகள் அறுந்து சிதறும்படி கண்ணீர் ஊற்றுப் பாய்ந்து புரண்டு வழிந்தது… ஆ! அவள் மறுபுறம் திரும்பிவிட்டாள்!
எடுத்தேன் ஓட்டம்! என் கண்களிலும் கண்ணீராறு! ரத்த ஆறு; நெருப்பாறு!
என்னுடைய தாய் ஒரு நாள் என்னிடம் பேசினாள். அப்பொழுது எனக்குப் பத்து வயதாகிவிட்டது.
“ஏன் மேனே, நீ உன்ரை மச்சாளிடம் பேசிறாயில்லையாம்?”
“ஆர் சொன்னது?”
“உன்ரை கொண்ணன்தான் சொல்லுறான்.”
“எந்த மச்சாள்?”
“அதென்ன கேள்வி? ஏன், கொண்ணன்ரை பெண்சாதி தான். அல்லது வேறெயும் உமக்கொரு மச்சாள் இருக்கோ? உம்முடை மூஞ்சை எனக்குப் பிடிக்கேல்லை!”
“ஓ! அதுவோ! அவவோடை நான் என்னத்தைப் பேசிறது? அவ தன் பாட்டுக்கு மூத்தக்காவோடை இங்கிலீசையும் பேசிக் கொண்டு திரியிறா. இல்லை, கேக்கிறன். நீங்கள் எண்டாலும் யோசிச்சியளோ அம்மா, எனக்குக் கொஞ்ச இங்கிலீசு படிப்பிச்சு வைக்கவேணும் எண்டு. அது எல்லாம் உங்களுக்குக் கவலை இல்லை. நான் எப்படித் தெருவழிய திரிஞ்சாலும் உங்களுக்கு என்ன? அக்காமாருக்கு என்ன? நான் என்ரை அண்ணன்ரை பெண்சாதியோடை பேசேல்லே எண்டதுதான் உங்களுக்குக் குறையாய்ப் போச்சு!” –
“ஏன் அவ என்ன உம்மடை மவிசுக்குக் குறைஞ்சு போச்சோ, அல்லது கொப்பற்றை பவிசுக்குக் குறைஞ்சு போச்சோ! அதுதான் நீங்கள் இரண்டு பேரும் அவவோடை பேசிறயில்லை!”
“அம்மா, எனக்கு அப்படி இங்கிலீசு பேசத் தெரியாது. சும்மா ஏன் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி என்னட்டை கதைக்கிறியள்? என்னை என்பாட்டிற்கு விட்டிட்டால் படிச்சுச் கிடிச்சு ஒரு மாதிரி ஆளாய் வந்திடுவன். அதுவும் விரும்பவில்லை யெண்டால் இப்ப சொல்லிவிடுங்கோ நான் போறன்.”
“எங்கே போகப் போறாராம்!”
அதற்குள் என் தாய்க்குக் கோபம் வந்துவிட்டது. அவள் அலறினாள். குளறினாள். என் தந்தையைக்கூட ஏசினாள். இப்படி என்னை ஒரு தாய் சொல்லை மதிக்காத மகனாக வளர்த்து விட்டார் என்று!
என்னுடைய தாய் மீண்டும் பேசினாள்.
“டேய்! பார்த்தியா, உன்ரை மச்சாள் கொண்டு வந்த சீதனத்தை! அவளின்ரை நகைப்பெட்டியை நீ எப்பவெண்டாலும் பாத்தியோ? அதுமட்டும் பெறும் ஒரு லட்சம் ரூபாய்!”
“இதெல்லாம் என்னத்துக்கு எனக்கு சொல்லுறியள், அம்மா ?”
“நீயும் அப்படி ஒரு பொம்பிளையை முடிக்க வேணு மெண்டதுதான் – உன்ரை காலத்திலை.”
“அம்மா நான் சொல்லுறன் எண்டு கோபிக்கவேண்டாம். உங்களுக்குக் காசுதானே தேவை? ஆனால் என்ரை மச்சாளின்ரை முகத்திலே இருக்கிற வயிரங்களை – வைடூரியங்களை – மாணிக்கங்களை எந்த நகைப்பெட்டியிலே காணலாம்? அல்லது அவவின்ரை கையிலே இருக்கிற கறுத்த வளையலுக்குப் போதுமோ இந்த நகையெல்லாம்….?”
“என்னடா உளறுகிறாய்?”
“அம்மா, நான் உளறவில்லை, நீங்கள் எங்கடை அண்ணன் கர்ணகை மச்சாளை முடிக்கிறது எண்ட சம்மதத்தோடை இருந்து போட்டு, கடைசியாய்ப் போய்க் காசுக்கும் காணிக்கும் நகைக்கும் ஆசைப்பட்டு வடிவும் அன்பும் இல்லாத ஒரு பொம்பிளையை வீட்டிலே கொண்டு வந்து சேர்த்தியளே!”
எனக்கு மறுபடி அழுகை!
விம்மி விம்மி அழுதேன். என் கர்ணகை மச்சாளின் இயற்கை லக்ஷ்மிகரமும் அழகும் என் அண்ணனுக்கும் இந்த வீட்டிற்கும் கிட்டாமல் செய்துவிட்டாளே என் தாய் என்று!
அதன்பிறகு என் தாய் இரக்கமற்ற ஒரு தாடகையாகி விட்டாள்.
“ஓகோ! அப்படியா விஷயம்? நீரும் உம்மடை அப்பரோடை சேர்த்தியோ? அப்படி எண்டால் அந்த கர்ணகிப் பத்தினியை ஒண்டில் நீர், அல்லது உம்மடை அப்பர் போய்க் கலியாணம் முடிச்சிக் கொண்டு வந்து இந்த வீட்டிலே வைச்சுக் கும்பிடுங்கோ! அவள் என்ரை அண்ணற்றை மேள்! ஆனால் விஷயம் இவ்வளவு தூரம் வரும் எண்டு நான் கனவிலேயும் எண்ணயில்லை!”
அரக்கி!
எனக்குக் கண்ணீ ர் மாலைகள்…
“என்ன அழுகிறீர்? ஹு! உம்முடைய மூக்கிலே சளி வடியது! அதைப் போய் துடைய்டா! அதன்பிறகு முகத்தைக் கழுவிப் போட்டு இன்னும் பாக்காத சினிமாப் படம் இருந்தால் அதையும் போய்ப் பார்!”
அப்பொழுது வெளியே ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அது அண்ணனுடையது.
அம்மா தன் மார்புச் சேலையைச் சரிசெய்துகொண்டு அவசரமாகத் தன் தலைமயிரையும் சரி செய்துகொண்டாள்…
அதன்பிறகு என் அண்ணன் உள்ளே வந்து, “என்ன கூட்டாளி அழுகிறியோ?” என்றார்.
“ஒண்டுமில்லை .”
“என்ன மாபிள் வாங்கக் காசு வேணுமோ?”
“வேண்டாம்.”
“இனி, நீ கிறிக்கற் விளையாடிப் பழகவேணும். ‘காரு’க் குள்ளே இருக்குது ‘பாட்’, ‘விக்கட்’, ‘பந்து’ எல்லாம்!” –
அதற்குள் என் அண்ணனின் மனைவியே வந்துவிட்டாள். அம்மா அவளை வினயமாகப் பற்களைக் காட்டி வரவேற்றாள். அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் பற்களை மட்டும் காட்டத் தெரியும்….
அண்ணன் என் தலையைத் தடவினார் அன்பாக!
அண்ணனின் மனைவி தமிழ் பேசுவதில்லை.
தமிழ் தெரிந்திருந்தால்தானே, அந்த இழுமென்மொழியைப் பேசுவதற்கு!
அண்ணனுடன் ஏதோ ஆங்கிலத்திற் பேசினாள்… எனக்கும் அந்த மொழி கொஞ்சம் தெரிந்துதான் இருந்தது.
“யார், மூக்குச் சிந்தி அசிங்கமாக நிற்கும் இந்தப் பையன்?”
அண்ணன் மௌனம்!
“யார்? உங்கள் வீட்டு வேலைக்காரப் பையனா? ஏய் போய்!”
அதற்குள் என் மூத்த அக்கா குறுக்கிட்டுவிட்டாள் – ஆங்கிலத்தில்!
“அது எங்கள் தம்பி! ஆக இளையவன். மச்சாள், வாருங்கோ உள்ளே.”
அம்மா தன் பற்களைக் காட்டிக் கொண்டு பின்தொடர எல்லாரும் உள்ளே போய்விட்டார்கள்.
அண்ணனுடைய கார்ச் சாரதி ஏதோ ஒரு பார்சலைக் கொண்டுவந்து என் கையில் வைத்தான்! “இது ஐயாவின் தம்பிக்கு! உடனே அவரிடம் கொடுக்கவேண்டும்!”
நான் உடனே அதை மூலைக்குள் எறிந்துவிட்டேன். என் மனம் வேதனைப்பட்டது.
உடனே என் கர்ணகை மச்சாளிடம் ஓடவேண்டும் போல் எனக்குத் தோன்றியது; ஓடினேன்.
அவள் ஏதோ கண்ணீருக்குள் மூழ்கித் தலைவிரி கோல மாகக் கிடந்து புலம்பிக் கொண்டிருப்பாள் என்ற மனப் பதற்றத் துடன் ஓடினேன் – என் கற்பனையினால் என் கண்களில் மல்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு…
ஆனால் – ஆனால்….!
அரசகுமாரிகள் அழுவதில்லை . அது அவர்கள் அழகிற்கும் மேன்மைக்கும் மன வைராக்கியத்திற்கும் ஒரு இழுக்குப் போலும்!
அவளுடைய கண்ணுக்கு மை, கன்னத்திற்கு றூஜ், உதடு களுக்கு லிப்ஸ்டிக் எல்லாம் தேவை இல்லை. ஏதோ இறுமாப்பில் இவை எல்லாம் அணிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து விட்டாளோ என்று முதலில் யோசித்தேன்.
அருகில் சென்று பார்த்தேன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் அவள் முன்னால் பதறி நின்றேன்.
அவள் சிரித்தாள்.
அத்துடன் அமையாது என் உள்ளம் எல்லாம் கூனிக்குறுகி நாணும்படி என்ன சேட்டைப் பிடித்து இழுத்துவிட்டாள்.
“என்னடா மச்சான், அழுகிறாய்?”
“ஒண்டும் இல்லை!”
“இஞ்சை வா! கொஞ்சம் ‘சொக்கிலேட்டு’ தின்; வாடா!”
என்னை அணைத்துக்கொண்டு உள்ளே சென்று என் கைகள் நிறைய இனிய பண்டங்கள் தந்தாள்.
இப்பவே எல்லாம் திண்டு முடிக்கவேணும் என்று பணித்தாள்.
தின்றேன்….
இவ்வளவு அன்பும் அழகும் உள்ளவளை என் அண்ணனும் எங்கள் வீடும் இழந்துவிட நேரிட்டுவிட்டதே என்று எண்ணினேன்.
சுவைத்து விழுங்கிய ‘சொக்கலேட்டு’ தொண்டையில் சிக்கிக் கொண்டது. அவள் என் தலையில் தட்டினாள். நெஞ்சையும் முதுகையும் தடவினாள்… அவள் அன்பு….
மீண்டும் என் கண்களில் முத்துமாலை…
“என்னடா மச்சான், இப்ப மாபிள் அடிக்கிறதை விட்டுக் கிறிக்கட் அடிக்கத் துவங்கிவிட்டியாம்?”
அதற்குள் என் கண்ணீரைச் சமாளித்துவிட்டேன்.
“உமக்கு ஆர் இதெல்லாம் சொன்னது?”
தனிக் கருவளைக்கவின் தந்த தன் வெள்ளை மணிக்கட்டை இடையில் மடக்கி வைத்துக்கொண்டு அவள் என்னைப் பார்த்தாள்.
“ஒருதரும் இல்லை !”
ஆனால் பெண்கள் எதையும் கணத்தில் கேட்டறிந்து கொண்டு விடுவார்கள் என்ற உலக அனுபவம் அந்தச் சிறுவயதில் எனக் கில்லை …
என் அம்மாவுக்கு என்ன எண்ணம் வந்ததோ ஒரு நாள் மாலை நான் புத்தகங்களோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது என்னிடம் தனியே வந்து பேசினாள்.
“என்ன பெரிய படிப்புக் கவலைபோல இருக்குப் பிரபுவுக்கு?”
“என்ன அம்மா ?”
“மச்சாளுக்குக் கலியாணமாம்.”
“எந்த மச்சாள்?”
“ஏன் உன்ரை மச்சாளுக்குத்தான்!”
“எனக்கு எத்தனை மச்சாள்மார் இருக்கினம்; முதலில் அண்ணன் பெண்சாதி-”
“வாயைப் பார், வாயை! என்னட்டை அடி வாங்கப் போறாய், கண்டியோ?”
“எனக்கு ஒண்டுக்கும் பயமில்லை அம்மா! நான்தான் எப்பவோ வீட்டை விட்டுப் போறன் எண்டு சொல்லிப்போட் டேனே. அற நனைஞ்சவனுக்குக் கூதல் என்ன குளிர் என்ன?”
என் கண்களில் கண்ணீர் உப்பாகிக் கரிந்து நின்றது. நான் வேகமாக என் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டினேன்.
அம்மா என்னுடைய மேசைமேல் சாய்ந்து நின்று என் தோள் மேல் தன் கையை வைத்தாள். விளக்கின் ஒளியில் அவளுடைய தலையிலுள்ள இடை நரை மயிர்கள் மின்னின. அவள் ஏதோ கலக்கமடைந்தவள் போல மெதுவாகக் கண்ணீர் கலந்த குரலுடன் பேசினாள்.
“நீ கோவிக்கிறது சரியடா மேனே! உன்ரை கர்ணகை மச்சாள் இந்த வீட்டுக்கு வந்திருக்கவேணும்; அந்த நேரம் என்ரை புத்தி மத்திமமாய்ப் போச்சு! அவள் வந்திருந்தால் இந்த வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி…”
நான் பொங்கித் துளித்த கண்ணீரை அடக்க முயன்றபடி புத்தகத்தின் பக்கங்களை ஒரு பைத்தியக்காரன் போலப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
சிறிது அன்பு எத்தனை கண்ணீரை வருவித்துவிடும் என்று வியந்தேன்…
“இப்பொழுது அவளுக்கு வேறை ஒரு கலியாணம் பேசி இன்னும் இரண்டு கிழமையில் கலியாணமாம்!”
எனக்குச் சிரிக்கவேண்டும் போலத் தோன்றியது. ஆனால், அழுகைதான் வந்தது. புத்தகங்களைத் தள்ளிவிட்டு வெளியே ஓடினேன்.
மங்கிய வானத்திலே மதி மங்கித் தவழ்ந்தது. தென்னை மரங்களின் தலைகளிலே காற்றின் ஓலம்!
தொலைவிலே இரட்டைக் கூகைகளின் குரல்… மேள வாத்யம் “ஜாம் ஜாம்” என்று ஒலிக்க எங்களுடைய மாமா கூட எழுந்து நடமாடித் திரிகிறார், தன் பொங்கும் வயிற்றுக்கு மேல் ஒரு பட்டுச் சால்வையைக் கட்டிக்கொண்டு! என்னுடைய அண்ணனும் அவருடைய மனைவியும் அவருடைய புது மோட்டார் வண்டியிலே வந்தார்கள்.
என் கர்ணகை மச்சாள் மணவறையிலே வந்து இருந்தாள். அந்த நடுத்தர வயதுள்ள மணவாளனும் அவள் அருகில் உட்கார்ந்து இருந்தான். புண்ணியத்தின் அருகில் பாவம் இருப்பதுபோல். அத்துடன் என்னுடைய அண்ணன் மனைவி தன் கையில் அணிந்திருந்த ஆயிரம் ரூபாய் மணிக்கூடு மின் வெளிச்சத்தில் பளபளக்கும்படியாக என் மச்சாளின் பின்புறமாக நின்றிருந்தாள். உதயசூரியனின் புறத்தே கார்முகில் நிற்பதுபோல். அம்மாவும் நின்றிருந்தாள் தன் நரிப்பார்வையாடு…
எனக்கு எங்காவது சென்று அழவேண்டும்போல இருந்தது…
மறுநாள் மணப்பெண்ணாகிய என் மச்சாள் ஒரு அறையில் தனியே இருந்தாள். இணைக்கூறையும் அணிந்துகொண்டு….! அவள் அழுதுகொண்டிருப்பாள் என்று அஞ்சி நான் வெளியே நின்றேன். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. என்னைக் கண்டவுடன், “ஏய் மச்சான்” என்று ஏதோ காணாததைக் கண்டுவிட்டதுபோலக் குரல் கொடுத்தாள். நான் தயங்கித் தயங்கி உள்ளே சென்றேன்.
அவள் என் வயிறு நிறையும் மட்டும் இனிய பண்டங்கள் உண்ணத் தந்தாள். என்னோடு எத்தனையோ காலம் பழகிய மச்சாளாக இருந்தும் அந்த நேரத்தில் அவளுடன் தனியே இருக்க என் மனம் சிறிது துணுக்குற்றது. ஓடிவிடலாம் என்று எழுந்தேன்.
அவள் விடவில்லை. என்னுடைய கையைப் பிடித்து இழுத்து அப்படியே தன் முன்னால் அமர்த்திக் கொண்டாள்.
“ஒரு இடமும் போகயில்லை மச்சாள்! சும்மா வெளியாலை போய் விளையாடப் போறன்!”
“இரடா மச்சான்! நல்லாய் வயிறு முட்டத் தின்னன்ரா!” அவளைக் கேலி செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.
“என்ன மச்சாள், ராத்திரி மணவறையிலே கூறைச்சீலையும் உடுத்து நகை எல்லாம் போட்டுத் தலையைக் குனிஞ்சுகொண்டு இருந்தீரே! அப்ப இந்த வாய் எல்லாம் எங்கை போச்சுது?”
“போடா குரங்கே, சனியன், மூதேசி!”
அவள் கண்கள் பளபளக்கும் வைரத்தில் பதித்துவிட்ட மரகதங்கள் போல் மின்னின… கண்ணீர்…?
ஆனால் அரசிகள் அழுவதில்லையே!
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.