“மொத்தத்துக்கும் சேர்த்து 230 ரூபா தரேன்.”
வீட்டிற்கும், ரோட்டிற்கும் இடையிலிருந்த சிறிய இடத்தில் அந்த முருங்கை மரம் யாருடைய உதவியுமின்றி தானாக வளர்ந்திருந்தது.
நீண்டு கொண்டிருந்த 10 ரூபாய் பேரப் போராட்டத்தில் வீட்டின் உரிமையாளரே வெற்றிபெற்று 240 ரூபாய்க்கு மரத்தை விற்றாகிவிட்டது.
லல்லி ஐந்தை-பத்தாக்கி, பத்தை-இருவதாக்கி அரும்பாடுபட்டு பல வியாபாரங்கள் செய்து சேர்த்த காசு. லல்லி கையை உயர்த்தி “வா” என்பது போல ஆட்டினாள். லொட்டை “ஆ.. இரு… இரு…” என்று மச்சானைப் பார்த்தான். பிளாட்பாரத்தில் குந்தியிருந்தவன் பீடியை இரண்டு பற்களால் கடித்துக்கொண்டு நிதானமாக எழுந்து சோம்பல் முறித்தான். வேட்டியை மடித்துக்கட்டி, தோலில் இருந்த துண்டை உதறி தலையில் கட்டினான். லொட்டை கையில் வைத்திருந்த கொரட்டுக் கொம்பை மச்சானிடம் கொடுத்தான். அதைக் கையில்கொண்டு மச்சான் நடக்கும் அழகே அழகு. அது அவனுக்குக் கண் நிறைவான காட்சியாயிருந்தது. மச்சான் எது செய்தாலும் லொட்டை பூரித்துப்போவான். மச்சான் எப்போதும் அவனுக்கு ஒரு கதாநாயகன் தான்.
அகலத் திறந்த வாயில் இரண்டு சொடுக்கு இட்டு கொட்டாவியை முடித்துக்கொள்ள மறந்து வாயைத் திறந்தபடி மச்சானைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
லொட்டைக்கு எப்படி அவன் மீது இப்படி ஒரு அன்பும், உயர்ந்த எண்ணமும் என்று தெரியவில்லை. அவனைப் பெயர் சொல்லி அழைப்பதே மரியாதைக் குறைவாக நினைத்தான். யாரேனும் மச்சான் பெயர் கேட்டால்கூட அவர் காதருகில் சென்று வாயையும் – கேட்பவர் காதையும் கையால் மறைத்தபடி, நந்தியின் காதில் ரகசியம் சொல்வதுபோல் சொல்வான்.
லல்லியிடம் “எவ்வளவுக்கு முடிச்ச” என்றான் மச்சான். “எவ்வுளவா இருந்தா என்ன சீக்கிரம் உடைக்க ஆரம்பியு வெயிலுக்கு முன்ன மார்கெட்க்கு போவனும்” என்றாள் லல்லி.
“நீ சொல்லலனா?… எனக்குத் தெரியவராதா?”
“சார், எவ்ளோக்கு குடுத்தீங்க?”
“240”
“என்ன சார், ஒரு ரீசனே இல்லாம இவ்வளோ சொல்றிங்க?”
“நான் பேசிட்டேன்… நீ எதுவும் குட்டயக் கொலப்பாத…” என்றாள் லல்லி.
“உன்னால நா ஒரு 50 ரூபா கேட்டா தர முடியாது. 180 ரூபா பெறாத மரத்துக்கு 240 ரூபா…”
“சார், எதுவா இருந்தாலும் ஒரு ரீசன் வேணாமா சார். அவர் தான் ரீசன் இல்லாம கேக்குறாருன்னா உனக்கு அறிவு எங்க போச்சு” என்று லல்லியை திட்டத் தொடங்கினான். அவன் கேள்வி கேட்ட ஒரே ரீசனுக்காக வீட்டின் உரிமையாளர் மரத்தை தர மறுத்துவிட்டார். அவன் காதில் அடுத்த ஆங்கில வார்த்தை விழும்வரை எல்லாமே இந்த ரீசன் தான்.
கடந்த வாரம் வரை ரீசன் – சம்திங்காக இருந்தது… லல்லி காலைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி மார்போடு வைத்து, கீரையை மூட்டை கட்ட வைத்திருந்த துணியால் கட்டினாள். குழந்தையைக் குனிந்து தூக்கியதால் கண்களில் மீன்-மீனாக ஓடியது. அடி வயிற்றை இழுத்துப் பிடிப்பது போன்ற வலி எப்பொழுதும் இருந்தது.
குழந்தை நடக்கும் வயது ஆன போதும் கால்களில் வலுவின்றி ஏதோ ஒன்றைப் பிடித்தபடி ஒரு கால் வைத்த இடத்தில் மறுகால் வைத்தே நடந்தான். குழந்தையின் வயிறு உப்பி கண்கள் குழி விழுந்து கை கால் உடலுக்குச் சம்மந்தமற்று இருந்தது. முழங்கால்களில் தோல் வரண்டு செதில்-செதிலாக உரிந்தது.
அவளிடம், அடுத்து வியாபாரத்திற்கு என்ன செய்வது என்ற முகவாட்டம்.
மச்சான் “அத விடு. இது இல்லனா என்ன… வேற பொழப்பா இல்ல?” என்று 240 ரூபாயைப் பிடுங்கிக் கொண்டு “மத்தியமா வரேன்” என்றான். குழந்தையிடம் “உப்புநக்கி இந்தாடா தங்கக்காசு” என்று கையில் கொடுத்து விட்டுச் சென்றான்.
முதுகில் சாய்ந்துகொண்டு கழுத்தை நக்குவதாலும், போட்டிருக்கும் சட்டையின் காலர் மற்றும் முடி கயிற்றின் முடிச்சை மெல்லுவதால் அந்தப்பெயர்.
மச்சான் கொடுத்து விட்டுச் சென்றது புதிதாய் வெளியான தங்க நிற 5 ரூபாய் நாணயம். குழந்தை அதை அப்படித்தான் சொல்வான். அந்த காசை தன் சிறிய சட்டைப்பையில் போட்டு நெஞ்சோடு இறுகப் பிடித்துக்கொண்டான்.
குழந்தையுடன் அவன் உயரமே உள்ள ஒரு நசுங்கிப்போன பழைய பிளாஸ்டிக் பெண் பொம்மை இருந்தது. அது இல்லாமல் அவன் எங்கும் செல்லமாட்டான். அவனே அதை மறந்து விட்டாலும், அனைவரும் “உப்புநக்கி… எங்கடா உன் பொண்டாட்டிய காணும்“ என்பார்கள். அவனும் அதைப் பொண்டாட்டி பொம்மை என்று தான் சொல்லுவான். லொட்டை அதை எங்கிருந்து எடுத்துவந்து குழந்தையிடம் கொடுத்தான் என்று தெரியாது. லல்லி பழைய பிளாஸ்டிக் பொருட்களோடு அந்த பொம்மையும் போட்டு பணம் பெற்ற பிறகு, குழந்தை அதைத் தேடாத இடம் இல்லை. சில நாட்களில் தங்கக்காசு சேர்க்கத் தொடங்கிவிட்டான். யார் தலையை மொட்டையடித்தாவது பொண்டாட்டி பொம்மையை அடைய முடிவு செய்து விட்டான். லல்லி தலை வாரி சீப்பில் சிக்கியிருக்கும் முடியை விரலில் சுற்றிக் கீழே போடுவாள். குழந்தை ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு அடி-மேல்-அடி வைத்து அதை எடுத்து டப்பாவில் போட்டு சேகரிப்பான். அவனை நடக்கச் செய்ய லல்லி தெரிந்தே முடியைத் தூர எரிவாள்.
சேகரித்ததை வாங்கிக்கொள்ள ஏதோ ஒரு நாள் சிக்கு முடிக்காரன் வருவான். அவன் சைக்கிளில் ஒலித்துக்கொண்டிருக்கும் “10 கிராம் சிக்குமுடிக்கு 10 ரூபா… 20 கிராம் சிக்குமுடிக்கு 20 ரூபா… 30 கிராம் சிக்குமுடிக்கு 30 ரூபா… 40 கிராம் சிக்குமுடிக்கு 45 ரூபா….” என்ற வசனமே அவன் அடையாளம்.
லல்லி இடத்தை அடைந்து தார்ப்பாய் திரையை விலகியதும் குழந்தை விறு-விறு வென நகர்ந்து காசை உண்டியலில் போட்டான். லல்லி வெளியே அமர்ந்துகொண்டு, அவரவரின் இந்நாள் வேலையை விசாரித்தபடி நடந்த கொடுமையைச் சொன்னாள். “நா யார்பொழப்பையாவுது கெடுக்குறனா… என் பொழப்பக் கெடுக்கறதுக்குன்னே வந்துச்சுங்க காலைல… இப்ப எதத் திங்குறது.” என்று கத்திக்கொண்டே முந்தானையால் விசிறினாள். “இதே நா ஏதாவது வியாபாரத்த சொன்னா அத மயிராக் கூட மதிக்கறது இல்ல.. போன வாரம்கூட இங்க விக்கிற பலூண பீச்சுல வித்தா வியாபாரமும் ஆவும். ஒருவாட்டி பீச்சப் பாத்த மாறியும் இருக்கும்னு சொன்னேன். அதுக்கு, யார பீச்சுல பலூன் விக்க சொல்றன்னு அடிச்சான். கடைசில இந்த குட்டிதான் எல்லாத்தையும் விளையாடி ஒடச்சிப்போட்டுது”. என்று முறையிடுவதுபோல கத்தினாள். அப்பொழுதுதான் அதைக் கேட்டு பக்கத்துக்கு அடுப்பு காரர்கள் ஏதோ ஒன்று குழந்தையின் வயிற்றில் போடத் தருவார்கள். ஆனால் லல்லிக்கு சிரமம்தான். குழந்தை கடைசி இரண்டு வாய் போதும் என்று சொல்லும் என்றே ஊட்டுவாள். ஆனால் அடுத்து எப்பொழுது என்று தெரியாத அதிசயத்தை யார் தான் தவறவிடுவார்கள்.
அன்று அவள் குழந்தைக்கு மட்டுமே அதிர்ஷ்டம் அவளுக்கு இல்லை. கடைசியாக நேற்றுமதியம் சாப்பிட்டது. குழந்தையைத் தோலில் சாய்த்தபடி தூங்கவைக்க முயன்றாள். பொழுது சாய்ந்த பிறகும் பிளாஸ்டிக் தார்பாய் திரை வழியே அனல்க்காற்று உள்ளே வந்தது. தலைக்கு மேலே ஓடும் வண்டியின் சத்தமும் அதிர்வும் எரிச்சலூட்டியது. ஏனென்று தெரியாத வயிற்று வலி அவளை ஒன்றரை வருடங்களாகப் பிழிந்து கொண்டிருந்தது. வயிற்றைப் பிடித்தபடி “வயிறு வலி மெல்லுது. இத வேற இன்னும் காணும்” என்று குழந்தையோடு பேசிக்கொண்டிருந்தாள்.
மச்சான் என்னென்னவோ முயற்சி செய்து அலைந்தும் முடியவில்லை. முடிவாக 105 ரூபாய் குவாட்டர் இரண்டு வாங்கிக் குடித்து நிதானமடைந்தான். அங்கு கட்டிங்குக்கு வழி இல்லாமல் ஏங்கி நிற்பவர்களுக்கு ஏற்பாடு செய்யாமல் ஒரு நாளும் திரும்ப மாட்டான். அன்று லொட்டையின் நண்பன் இருந்ததால் வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. குடிப்பது என்னவோ மச்சான், ஆனால் லொட்டை உளரத்தொடங்கிவிடுவான். யாரேனும் மச்சானிடம் பேசினாலல்ல, பார்த்தாலே போதும் மச்சானின் பெருமைகளைப் பேசத் தொடங்கிவிடுவான்.
அப்படித்தான் அவன் நண்பனிடம் “என்னடா ஆளு – சட்ட… எல்லாம் சோக்கா மாறிப்போச்சு…“ என்று தொடங்கியவன். பதில் சொல்லும் முன்னே.. “மச்சான் காசப் பெரிசா நினைச்சதேயில்ல. கையில இருக்கறத வாரி இறைப்பான். குடிக்கறதுல மரியாதை செய்றதுல மச்சான மிஞ்ச முடியாது. குடிலயும் – வேலைலயும் மச்சான் பக்கத்துல யாராலயும் வர முடியுமா. பல வேல தெரிஞ்ச வித்தக்காரன். ஊருக்கே தெரியும் உனக்கு புதுசா சொல்ற மாதிரி சொல்றேன் பாரேன்…” என்றான். லொட்டையின் நண்பன் மச்சானைப் பார்த்து சிரித்தான். மச்சான் பதிலுக்கு சிரிக்க நேரம் இல்லாதவனைப் போல பீடியைத் தேடினான். லொட்டையின் நண்பன் அவன் வைத்திருந்த பீடிக்கட்டையும், தீப்பெட்டியையும் லொட்டையிடம் நீட்டினான். லொட்டை சிரித்துக்கொண்டே வாங்கி மச்சானிடம் கொடுத்துவிட்டு. “மச்சான் இப்ப இதாலதான் பாதியா பொய்ட்டானு சொல்றாங்க. கூடவே இருக்கறதால எனக்கு அப்படி ஒன்னும் தெரியல… உனக்கு ஏதாவது தெரியுது?… என்ன குத்துகால்ல குந்தும் போது மட்டும் வளைஞ்ச முதுகு நடுவ கோலியுருண்ட கீழ பாத்து போற மாதிரி எலும்பு தெரியும். சப்ப சுத்தமா ஒட்டிப் போச்சு. கால்ல வர நடுக்கம் லேசா உடம்பையே அசைக்குது. ஆனா இதெல்லாம் அவன் பௌச கொறச்சிடுமா… இன்னைக்கும் அவன் குரலுக்கு மறுப்பு ஏது… சிங்கம் சிங்கம்தான். என்ன சொல்ற…” என்று நண்பனின் தொடையில் சுருக் என்று அடித்தான். அவன் தெளிந்து ஆமாம் என்று தலையை ஆட்டினான்.
“மச்சான், லல்லிய ஒரு தடவ தான் ரோட்ல பாத்தான். லல்லிய தூக்கி தாலி கட்டிட்டான். இந்தத் தேதிவர எவனுக்கும் அந்த தகிரியம் இல்லையே… லல்லிகூட மொதல்ல ரொம்ப மொரண்டு பிடிச்சுது. அப்புறம் எல்லாம் சரியாப் போச்சு. அந்த சம்பவத்த இன்னைக்கும் பேசாத நம்ம ஆளுங்க உண்டா?”
“சும்மாவா… அப்போவே எட்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சு ஏட்டத் தூக்கிப் போட்டவனாச்சே, இன்னைக்கு வர எவனாவது அதப் படிச்சிருக்கானா?.”
“முன்ன வந்த தண்ணி பஞ்சத்து அப்போ வேல செஞ்ச காசக் கட்டி கவர்மெண்ட் தண்ணி லாரி இட்டாந்து நமக்கு போக மிச்சத்த குடத்துக்கு 1 ரூபானு இந்தத் தெருவுக்கே விட்டது யாரு? இன்னைக்கு எவனாவது முன்ன நிப்பானா?”
அன்னைக்கு, இன்னைக்கு… இன்னைக்கு, அன்னைக்கு… இப்படியே பேசியபடி இறுதியில் இதைச் சொல்லி முடித்தான். “அவ்வளவு ஏன், நானே பொண்ணாப் பிறந்திருந்தா இரண்டாந்தாரமா மச்சானக் கல்யாணம் பண்ணிருப்பேன்…”
குழந்தைகள் எல்லாம் அவன் சொன்ன கதையாலே அந்த பிரிட்ஜ் கட்டியது காமராஜர் இல்லை மச்சான்தான் என்று நம்பின. ஒருமுறை ஏற்பட்ட கடும் மழையில் அந்த பிரிட்ஜ் இடிந்து விழாமல் தாங்கிப் பிடித்தது மச்சான்தான் என்றும் பேச்சு.
அவர்களுக்கு அன்று நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் லல்லிக்கு அப்படியில்லை. குழந்தையை மடியில் போட்டு தெருவிளக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். நிமிடத்திற்கு ஒருமுறை அவள் கண்கள் அவன் வரும் திசையில் தேடின. குழந்தை அவள் ஏற்றிக் கட்டிய கொண்டையின் தப்பிய முடியை காதின் பின்புறம் விரல்விட்டு சுற்றிக் கொண்டிருந்தது. விறுவிறுவென வந்தவன் குழந்தையைப் பிடுங்கி லொட்டையிடம் கொடுத்தான். லொட்டை “வா டா பராக்காப் போய் வரலாம்” என்று தூக்கிச் சென்றான்.
அவள் தேடுவது போல் தான் அவனும். எப்போது குடித்தாலும் அவளைத் தேடுவான். எந்த விதக் காரணமும் அவனிடம் எடுபடாது. அவனும் எப்போதும் ஒரு ஒழுக்கமான உடலுறவை வைத்துக்கொள்ளத் தான் நினைப்பான். ஆனால் முடிவு ஒரு நாளும் அப்படி இருந்ததில்லை. அன்றிரவு அவள் முகத்தையும் கால்களையும் நனைத்துக் கொண்டு வந்து படுத்து விட்டாள். அந்த ஈரம் காற்றில் காயக்-காய இதத்தில் தூங்குவாள். இது வலியுடன் இருக்கும் போது தூங்கும் யுக்தி.
மறுநாள் காலை இருள் முடியும் முன்னே எழுந்து பக்கத்தில் இருக்கும் போர் பம்புக்கு பாவாடையை மார்பலவு கட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள். காலிப் பெயிண்ட் பக்கெட்டை பம்ப்பின் வாயில் வைத்து அவள் அடிக்க, அது தண்ணீரைக் கொப்பளித்துக் கொப்பளித்துத் துப்பியது. ஓரத்திலிருக்கும் சிறு ஓட்டை வழியே நீர் போகும் வாக்கில் மனையிட்டு அமர்ந்து குளித்து விட்டு எருக்கம் பூ பரிக்க அருகில் இருக்கும் ரயில் நிலையத்திற்குக் கிளம்பினாள். இன்னும் சற்று நேரத்தில் தண்டவாளங்களைக் கடந்து அதைப் பறிக்க மற்றவர்கள் வந்து விடுவார்கள் என்று அவளுக்குத் தெரியும். பறித்த பூக்களை சிறு-சிறு மாலையாகக் கோர்த்து மீதத்தை மடியில் கட்டிக்கொண்டு தொட்டிலில் இருந்த குழந்தையை தூக்கி, மார்கெட்டிற்கு நடந்தாள்.
மின்சாரப் பெட்டிக்குப் பின்புறம் வைத்திருந்த பலகையை எடுத்துப் போட்டு மாலையை மூன்று மூன்றாக வரிசைப் படுத்தினாள். 12 ரூபாய் சொல்லி பத்து ரூபாய்க்கு விற்பது அவளுடைய நோக்கம். வெளிச்சம் படர்ந்து இளவெயில் தொடங்கியது. மடியில் முடிந்து வைத்திருந்த மீதமுள்ள பூக்களையும் பலகையில் கொட்டி ஊசியால் கோர்க்கத் தொடங்கினாள்.
ஒவ்வொரு கடை வாசலிலும் கூட்டம் நிற்க இடமின்றி நெருடியது. மற்ற நாட்களில் எப்படியோ, ஆனால் இன்று அத்தனையும் வாங்கிக் கொண்டு இவளிடமும் கட்டாயம் வர வேண்டும் என்று கோர்ப்பதில் வேகமெடுத்தாள். அவள் நினைத்தது போலவே ஜனம் அவளிடம் திரும்பிக்கொண்டிருந்தது. அவள் கண்கள் எதிர்க்கடையின் மாடியிலிருக்கும் ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தன.
அங்கு தான் கோன்பா இருக்கிறாள். அவளது பெயர் காரணம் யாருக்கும் தெரியாது. மார்க்கெட்டில் இருக்கும் அணைத்துக் கடைகளுக்கும் மின்சாதனப் பொருட்கள் அவள் தான் தவணைமுறையில் வாங்கித்தருவாள். கோன்பா அங்கு தனியே தான் இருக்கிறாள். அடர்ந்த கருப்பு நிறம். கண்களைப் பெரிது படுத்திக் காட்டும் கண்ணாடி. முழுக்கை சுடிதார். ஆகியிருந்தால் கல்யாணம் எப்போதோ ஆகியிருக்க வேண்டும். கோன்பாவுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். லல்லி எப்போது கடை போட்டாலும் குழந்தையை வாங்கிக் கொண்டு போக வந்துவிடுவாள். வாங்கிக்கொண்டு செல்பவள் வெறும் வயிற்றோடு திருப்பித் தரமாட்டாள். குழந்தையோடு விளையாடியபடியே சுட்ட ஒரு பக்கம் தீயவிட்ட தோசையை சர்க்கரை வைத்து ஊட்டிவிடுவாள்.
மச்சான் கண்விழித்து “எங்க ஆறயும் காணும்” என்றவாறு எழுந்தான். “வெறும் தொட்டில தொங்கவிடுவாளா பொம்பள…” என்று முனகிய படியே புடவையை முடிந்தான். “லொட்ட…” என்றான்.
லொட்டை லல்லியைத் தேடி மார்கெட்டிற்கு வந்தான். “லல்லி கொயந்த எங்க கோன்பா தூக்கினு போச்சா?… சரி… மச்சான் துட்டு வாங்கியாரச் சொல்லிச்சு” என்றான்.
“இன்னும் போனி ஆவல பசி அடக்கினு உக்காந்திருக்கேன்”
“அட அதான் எல்லாம் வித்துப் போச்சே… இருக்கும் பாரு… நல்ல பொழப்பு சிக்கிருக்கு. தடங்கல் பண்ணாம காசக் குடு. செய்ங்காலம் மச்சான் உன்னக் கொண்டாடிடுவான்…“ என்று பேசிய படியே ஓசி நூலை வாங்கி லொட்டை கோர்த்து முடித்தான்…
“இல்லாத காசு எங்கயிருந்து வரும்?” என்று லல்லி சொல்லிக்கொண்டிருக்கும் போதே கடைசி 3 மாலையும் விற்றது. லொட்டை அதை எடுத்து கொடுத்து காசை வாங்கி லல்லியிடம் கொடுத்துவிட்டு. மொத்தத்தையும் பேச்சால் பிடுங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான். தொழிலுக்கு என்றால் அவள் இல்லை என்று சொல்லமாட்டாள்.
வண்டிக்கும், ட்ரமுக்கும் முன்வாடகை கொடுக்க மொத்த காசையும் மச்சான் முதலீடு செய்தான். அன்று அருகில் இருக்கும் தெருவில் மோட்டரில் தண்ணீர் குறைந்து போனதால் ஆழத்தை அதிகரித்தனர். அதில் வெளியேறும் சேற்றை பொதுவாக தெருவில் தான் விடுவார்கள். ஆனால் அந்த அழகான தெருவில் விட பிடிக்காமல் கூவத்தில் கொட்ட ஆட்களை அழைத்திருந்தனர். இந்த வேலை கட்டிங் குடித்த லொட்டையின் நண்பனின் சிபாரிசில் கிடைத்தது. மச்சானும், லொட்டையும் ஒரு மீன்பாடி வண்டியில் இரண்டு ட்ரம்களை எடுத்துக்கொண்டு சென்றனர். மச்சான் வேறு இடங்களில் நடைக்கு இவ்வளவு என்று கூலி பேசுவான். ஆனால் இங்கே ஒரு ட்ரம்க்கு இவ்வளவு என்று சாமர்த்தியமாகப் பேசினான். மச்சான் முன்னே மிதித்துச் செல்ல லொட்டை பின்னே தள்ளியபடி சென்று கூவத்தில் ஊற்றினார்கள்.
ஆரம்பித்த சற்றுநேரத்தில் உடல் எது, ஆடை எது என்று தெரியாதபடி சேறானது. கொளுத்தும் வெயிலில் அது காய்ந்து தோலை இறுக்கிப்பிடிப்பது எரிச்சலூட்டியது. மச்சானுக்கு சில நடைக்குமேல் மிதிக்கமுடியாமல் நாக்கு தள்ளியது. கண்ணை இருட்டிக்கொண்டு வந்ததால் மூடி-மூடி திறந்தான். மூச்சுத்திணறியதால் அவ்வபோது நிழலில் ஒதுங்கிக்கொண்டேயிருந்தான்.
ஒருகட்டத்தில் அதே தெருவிலிருக்கும் லொட்டையின் நண்பனையும் மச்சான் வேலைக்கு இணைத்துக் கொண்டான்.
“மச்சான் ஒரே ஆளா தேரே இழுப்பான். அவனுக்கு ஏனோ உன்ன புடிச்சுப்போச்சு, அதான் கூப்டான். முடிஞ்சதும் நல்லா கவனிப்பான்.” என்றான் லொட்டை.
வேலை கொன்றது, ஆனால் வருமானமோ இரண்டு மடங்கு அதிகம். அது மீண்டுமொருமுறை மச்சானை இலக்கை நோக்கி முயற்சிக்க வைக்கும். அது 3520 ரூபாய் அன்றைக்கு தேதிக்கு மதிப்புள்ள விஸ்கி. அதன் பெயரை மச்சான் தான் சரியாக உச்சரிப்பான். அந்த ஆங்கிலத் திறன் அவனிடம்தான் உள்ளது.
ஆனால் வேலையை முடித்துவிட்டு பணத்தைப் பெற்றதும் இந்தமுறையும் அதை வாங்க மனமின்றி மொத்தத்துக்கும் 105 ரூபாய் குவாட்டர்களாக வாங்கினான். இது ஆறாவது முறை இப்படி நடப்பது. அத்தனையையும் கோணியில் போட்டு முதுகில் தூக்கிக் கொண்டு லொட்டை பின்னே நடந்தான். கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி மதுவாகப் பகிரப்பட்டது. சில நேரங்களில் தண்ணீர் கலக்கக்கூட நிதானம் இல்லை. அப்படியே குடித்துக் கொண்டிருந்தான்.
இது போன்ற இடங்களில் நிலைமை எப்படி மாறும் என்று தெரியாது. பிரச்சனைகளைத் தடுக்க லொட்டை தயாராக இருப்பது அவசியம். குடித்திருக்கும்போது மச்சானைப் பிடிப்பது முடியாத காரியம். ஆள் என்னவோ எடை குறைந்து போய் 48 கிலோ தான் இருக்கிறான். ஆனால் எப்படியும் பிடிக்க முடியாது. வழக்கமாக லொட்டை மச்சானைத் தாங்கிக் கொண்டு போவான். அன்று தூக்கிக் கொண்டு போவதுபோல் உணர்ந்தான்.
சென்று கொண்டிருக்கும்போது வீதியில் சடையுடன், கந்தல் அணிந்து படுத்திருந்தவனை எழுப்பி ஒரு பாட்டில் கொடுத்தான். அவ்வளவு பிரகாசமும் சந்தோஷமும் அந்த முகத்தில். அவன் மச்சானை மேலும் கீழும் பார்த்தான். மச்சான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தெரிந்தது போல் முகபாவனை. அந்தக் கஷ்டத்தில் கிடைத்த பலனை தன்னிடம் பகிர்ந்து கொண்டதை நினைத்து பூரித்துப் போனான். அந்த மகிழ்ச்சியைக் கண்டு மச்சானும் ஒரு பாட்டிலை ஏக்-டம்மாக குடித்து காலி பாட்டிலைத் தூக்கிப் போட்டான். லொட்டை அதைப் பொறுக்கிப் பையில் போட்டுக் கொண்டான்.
மச்சான் “ஏஏப்ப்ப்…“ என்ற ஏப்பத்தோடு சுவற்றில் சாய்ந்தான். இரத்தம் இரத்தமாகக் கக்கினான். தடுக்க நினைத்து வாயை மூட, மூக்கின் வழியே வந்தன. இது முதல்முறையல்ல என்றதால் லொட்டைக்கு அதிர்ச்சி தரவில்லை. வாயில் குழகுழப்பான இரத்தம் எச்சிலோடு சேர்ந்து ஒழுக. பீடியைப் பற்ற வைத்தான். அந்தத் தெருவிளக்கின் ஒளியில் அது லொட்டைக்கு அப்படியாப்பட்ட காட்சியாக இருந்தது.
மச்சானின் கண்கள் மேலே சொருகியது. அது மகிழ்ச்சியின் எல்லைகளைக் கடந்து காணாத இன்பம் ஏது என்ற கர்வத்தோடு நிற்பதைப் போலிருந்தது. லொட்டை மச்சானை சுமந்து நடக்க தொடங்கினான், வழக்கத்திற்கு மாறாக எடை கூடியது போல் இருந்தது. லொட்டையால் அவனை ஒற்றை ஆளாக சமாளிக்க முடியவில்லை. எனவே அந்த வழியே வந்த ஒரு பெண், ஆமாம் அது பெண் தான். லொட்டை ஒரு கணம் ஆண் என்று நினைத்துவிட்டான். யார் என்று தெரியவில்லை. வெளியூராக இருக்கவேண்டும். அவள் ஒரு பக்கம் பிடித்துக் கொண்டதால் சிரமமில்லாமல் சென்றடைந்தான். அந்த பெண் லல்லி காதில் ஏதோ சொல்லிச் சென்றாள். மச்சான் நிதானம் இல்லாமல் லல்லியின் மேல் பாய்ந்தான்.
“ஊட்டுல எதுவும் இல்ல. நீ ஏதாவது வாங்கியருவ.. ஊட்லாம்னு இருந்தேன்” என்று லல்லி மச்சானை கத்தும் குரல் திரைக்கு வெளியே கேட்டது. லொட்டை குழந்தையைத் தூக்கிக்கொண்டு, பேனரை இழுத்துவிட்டு கடைதெருவிற்கு நடந்தான். கோணியில் இருந்த மாம்பழத்தில் ஒன்றை எடுத்து குழந்தை கையில் கொடுத்து “மாதா ஊட்டாதத மாம்பழம் ஊட்டம்… நா போய் ஏதாவது வாங்கியாறன்” என்றான். தின்று கொண்டிருந்த மாம்பழத்தை இரண்டு பக்கமும் குதறி வைத்து முழங்கை வரை சாறு ஒழக கொட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தான். லொட்டை “முழுசா துன்னுட்டு தூக்கி போடா வேண்டிதான” என்றான். குழந்தை “இது அம்மாக்கு அது எப்போவும் நடு பக்கததான் துண்ணும்” என்றான். அவள் சதைப்பகுதியை ஒரு நாளும் தின்றதில்லை.
குழந்தை எந்தத் தின்பண்டங்களையும் வாங்குவதாயில்லை மாறாக லொட்டையிடம் “தங்க காசு தா…” என்று சட்டைப்பையில் போட்டுப் பிடித்துக் கொண்டான். லொட்டை “என்னடா உப்புநக்கி… மச்சான மாதிரி உனக்கும் பொண்டாட்டி நியாபகம் வந்துருச்சா…” என்றான். லொட்டை திரும்பி வந்த போது லல்லி விரித்த கைகளோடு கண்களில் அசைவின்றி வெளியே நின்று கொண்டிருந்தாள். அவள் அந்த சூழ்நிலையை ஏற்கத் தயாராக இல்லை. லொட்டை உள்ளே சென்று பார்த்தான். எதைப்பற்றியும் யோசிக்காமல், அந்த நொடியே மச்சானுடன் போய்விடவேண்டும்போலிருந்தது. ஆனால் அவனின் அன்பையும் பாசத்தையும் காட்ட, மரியாதை செலுத்த, கட்டி அணைத்துக்கொள்ள, கைபிடித்து ஊர்வலம் போக எஞ்சியிருக்கும் சில மணி நேரங்களை விட்டுச்செல்ல அவனுக்கு மனமில்லை.
வழக்கமாக இது போன்ற காரியங்களை மச்சான் தான் முன்னின்று நடத்துவான். இப்பொழுது அவனுக்கு லொட்டை நிற்கிறான். மச்சான் துக்கவீட்டில் அழமாட்டான். லொட்டையும் அழுகையை போராடி அடக்கினான். மச்சான் அனைத்தையும் முடித்தபின் சேர்த்துவைத்த சோகத்தை எந்நேரமும் இறந்தவரை பற்றி புலம்பியே மனதை ஆற்றி கொள்வான்.
விஷயம் தெரிந்ததும் நம்ப முடியாத ஜனத்திரல். பல பெரிய சாவில் கூட இப்படி ஒரு கூட்டத்தைக் கண்டதில்லை. சிலர் அழுது உருண்டு மண்ணில் பிரண்டு அமைதியடைந்திருந்தனர். சிலர் “அப்படி என்ன அவசரம் எஞ்சி வா…. கட்டிங் போட…” என்று மச்சான் சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்தனர். ஒரு கிழவன் அவன் பிறந்து ஆடி சட்டென்று அடங்கிய கதையை அவன் குழந்தைக்கு வீரசாகசங்களோடு கலந்து சொல்லிக் கொண்டிருந்தான். சிலர் தானாக முன்வந்து பல பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். மேளமும், ஆட்டமும், அலங்காரமும், பட்டாசுமாய் ஒரு சிறு திருவிழா போல அந்த நிகழ்வு நிறைவாக இருந்தது. ஆனாலும் மச்சான் ஏதோ ஒரு குறையோடு செல்வது போல லொட்டைக்கு உறுத்தியது. “மச்சான் ராஜ போதக்காரன். சரக்கு இல்லாம அவன் போறதா? இந்த நேரத்திலயாவது அவன் வாங்க நெனச்ச விஸ்கிய கொடுக்கலனா அவன் நிறைவேறாத ஆசையோடு போய்டுவான்.” என்றான்.
லொட்டை எழுப்பிய குரல் அனைவரின் காதிலும் விழுந்தது. அனைவரின் கண்ணிலும் மச்சானை பிரிந்த ஏக்கம். சுவற்றைப் பிடித்தே நடந்த குழந்தை எந்த உதவியும் இன்றி உண்டியலையும், சிக்கு முடி டப்பாவையும் எடுத்து நாலடி வைத்து நீட்டினான். அனைவரும் அவர்களால் இயன்றதை போட்டி போட்டுக்கொடுத்தனர். லொட்டை லல்லியைப் பார்த்தான் அவள் எதுவும் கொடுக்கவில்லை. அவளிடம் கொடுப்பதற்கும் எதுவும் இல்லை. வானத்தைப் பார்த்தபடி தலையை தெருவிளக்குக் கம்பத்தில் சாற்றி இறுகிய முகத்துடன் குந்தியிருந்தாள். அது மலையென துக்கங்கள் தேங்கி எந்நேரமும் வெடித்து அழவிருக்கும் லொட்டையின் முகத்திற்கே சவால்விடுவது போலிருந்தது. லொட்டை “இதோபாரு… உன்ன காட்டிலும் எனக்குத்தான் இழப்பு அதிகம்…” என்று சொல்ல நினைத்தான்.
மச்சான் கிளம்புமுன் வாங்கிவரப்பட்டது விஸ்கி. அந்த அட்டைப் பெட்டியை மட்டுமே நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அட்டையைப் பிரித்தவுடன் பாட்டிலைக் கையில் வாங்கிப் பார்க்காத ஆளே இல்லை. லொட்டை, மச்சானைத் தூக்கி அமர்த்தி, பாட்டிலை வாயில் நாட்டினான். அதை மச்சான் வாயில் ஊற்றியவுடன் தான் பிறவி பயனை அடைந்ததாக உணர்ந்தான். கடைசிச் சொட்டுவரை மொடமொடவென உள்ளே இறங்கியது. மச்சான் உயிரோடு இருந்திருந்தாலும் இதைச் செய்திருப்பான். மச்சான் எப்போதும் ஒரு கதாநாயகன் தான். இதைப் பார்த்த சிலர் மச்சானை இறுகக் கட்டிக்கொண்டு எடுக்கவிடாமல் கதறினர்.
இந்தச் சலசலப்பில் எங்கிருந்தோ ஒரு 5 ரூபாய் உருண்டு லல்லியிடம் சென்றது. மடியில் இருந்த குழந்தையின் மூக்கை பிழிந்து எறிவதுபோல் வேறு பக்கம் திருப்பினாள். பாதத்தில் கைவிரலைத் தேய்த்தபடி, மறு கையால் குழந்தையின் கண்ணில் படும்முன் தங்கக்காசை எடுத்து முடிந்து கொண்டாள் லல்லி.