மகாவின் ஆசை பொம்மை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 7,289 
 
 

பொரி,பொரி,காரப்பொரி என்று பொரிக்கார் சுப்பையா உரத்த குரலுடன் பொரியை மகாவின் தெருவில் விற்றுக்கொண்டிருந்தார்.

பொரிக்காரர் குரலை கேட்டவுடன் மகா தனது உண்டியலில் இருந்து பத்து ரூபாயை சில்லரையாக எடுத்துக்கொண்டு பொரிக்காரரை நோக்கி ஓடினாள். பொரியை வாங்கி வாயில் போட்டுக்கொண்டே வீடு திரும்பினாள்….

மகாவின் முழுப்பெயர் மகாலட்சுமி. ஐந்து வயது சிறு குழந்தை. தன் ஒரு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் வளர்ப்பில் வளர்கிறாள். தாய் செல்வி வீட்டுவேலை செய்து மகாவை வளர்த்து வருகிறாள்.

தினமும் மகா அவள் அம்மாவுடன் காலை வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவாள். தன் அம்மா வீட்டு வேலை செய்யும் போது அங்கும் இங்கும் அம்மாவுடன் ஓடிக்கொண்டிருப்பாள்.

சிலசமயம் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு பொழுதை கழிப்பாள்.

அம்மா வேலை பார்க்கும் வீட்டில் அழகான பார்பி பொம்மை தொலைக்காட்சியின் மேல் வைக்கப்பட்டிருக்கும். அப்பொம்மையை பார்க்கும் பொழுதெல்லாம் மகா அதனை ஒருமுறையாவது கையில் எடுத்து விளையாட வேண்டும் என்று மனதில் நினைப்பாள். ஒருநாள் அம்மா செல்வி வீட்டை சுத்தம் செய்யும்போது பொம்மையை நாற்காலியின் மீது வைத்தாள். அப்போது மகா யாருக்கும் தெரியாமல் அந்த பொம்மையை கைகளுக்கு பின்னால் ஒளித்துக்கொண்டு அருகிலுள்ள பக்கத்து அறைக்கு சென்று அதனுடன் பேச தொடங்கினாள்.

“ஹே, பொம்மகுட்டி…

நீ மட்டும் எப்படி இவ்வளவு அழகா இருக்க!

பேசு என்கூட, ஏ அமைதியா இருக்க நீ…..

உனக்கு என்ன பிடிக்கலையா?”

என்று ரசிக்கும் முகபாவனையுடனும், கொஞ்சும் மழலையுடனும் மகா பொம்மையுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

அதை பார்த்த வீட்டுக்காரர்,

“ஏ, பொம்மைய குடு

என்ன பண்ற இங்க?

என்ன பழக்கமோ தெரியல,

அடியே செல்வி! இங்க வா, வந்து உன் பொண்ண கூட்டிட்டு போ…”

என்று வீட்டுக்காரர் கோபத்துடன் கூறியதும் மகாவின் முகம் சுருங்கியது.

சிறுகுழந்தை கண்ணீருடன் தாய் செல்வியை பார்த்து அழுதது. குழந்தையின் கண்ணீரை தன் புடவையால் துடைத்து, நெற்றியில் முத்தமிட்டு குழந்தையை தன் இடுப்பில் தூக்கி வைத்தபடி செல்வி வீட்டிற்கு புறப்பட்டாள்.

சில நாட்கள் மகாவை வீட்டிலேயே செல்வி விட்டுச்சென்றாள்….

தினமும் மாலை தாயின் வருகைக்காக தெருவில் சாலை ஓரத்தில் மகா காத்திருப்பாள். தாய் வீடு திரும்பியதும் ஒன்றாக உணவு உண்டும், தாயை கட்டிபிடித்தும், விரலை சூப்பியும் உறங்குவாள்.

வழக்கம் போல் தாயின் வருகைக்காக மகா தெருவோரத்தில் உள்ள சாலையில் காத்துக்கொண்டிருந்தாள். அப்போது மஞ்சள் நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும், கையில் ஒரு பையும் வைத்துக்கொண்டு சாலையில் முதியவர் ஒருவர் மகாவின் அருகில் நின்றுகொண்டிருந்தார்.

மகா முதியவரை பார்த்து “தாத்தா! யாருக்காக காத்திருக்கீங்க”

தாத்தா மகாவை திரும்பி பார்த்து கூறினார் “ நா என்னோட மகனுக்காக காத்திருக்கேன் மா…”

“சரி தாத்தா, நானும் என்னோட அம்மாக்காக தான் காத்திருக்கேன், நாளைக்கு எனக்கு பிறந்த நாள், அம்மா எனக்கு புது துணி வாங்கிட்டு வருவாங்களே” என்று சிரித்தபடி கூறினாள்.

“நல்ல பொண்ணுமா நீ, சரி என் மகன் வந்துட்டான், நா வர….

நீ பாத்து ஓரமா நில்லு மா”

என்று முதியவர் கூறி செல்ல, அவர் கையில் வைத்திருந்த பையிலிருந்து சிறு காகிதம் ஒன்று பறந்து வந்து மகாவின் காலில் விழுந்தது.

அதை எடுத்துக்கொண்டு மகா முதியவர் பின்னே ஓடினாள். முதியவரின் மகன் காரில் சாலையின் மறுபுறம் ஓரமாக நின்றுகொண்டிருந்தார். சரியாக மகா சாலையை கடக்கும் வேலையில் செல்வியும் வந்து விட்டாள். இருவரும் முதியவரை கூச்சலிட்டு அழைத்தனர். இறுதியாக அவர்களின் குரல் முதியவர் செவிக்கு எட்டியது.

“என்னம்மா, ஏன் கூப்பிட்ட”

“தாத்தா இந்த காகிதம் கீழ விழுந்திருச்சு”

என்று பிஞ்சு குரலில் கூறினாள்.

“அடடா! நல்ல வேல மா…. இது “பேங்க் செக்” ஐம்பதாயிரம் பணம் மதிப்புள்ள செக். இது மட்டும் நான் தொலச்சுருந்தா என்னோட மகன் என்ன வீட்டுக்குள்ளையே சேர்த்திருக்க மாட்டான்.

மகன், காரை விட்டு வெளியே வந்து நடந்தவையெல்லாம் கேட்டறிந்தான்.

“அப்பா! உங்களிடம் ஒரு வேலையை சொன்னால் இப்படித்தான் கவனக்குறைவாக இருப்பீங்களா” என்று தந்தையை திட்டியபின் மகாவிடம் சென்றான்.

“நீ இன்றைக்கு செய்த உதவி மிகப்பெரியது கண்ணா! கஷ்டப்பட்டு என் முதலாளிக்கிட்ட கையெழுத்து வாங்கினேன், அத அப்பாகிட்ட கொடுத்துட்டு சின்ன வேலையா வெளிய போன, இந்த செக் எனக்கு இப்போ ரொம்ப முக்கியம்மா”

“ஒரு நிமிஷம் கண்ணா!” என்று கூறிக்கொண்டு காரை திறந்து ஒரு அழகான “பார்பி பொம்மையை” கையில் எடுத்துக்கொண்டு மகாவிடம் வந்தார்.

“இது உனக்கான ஒரு சின்ன பரிசு, இது என்னோட பொண்ணுக்காக வாங்கினம்மா, நீயும் என் பொண்ணுமாறி தான் வாங்கிகோ” என்று மகாவின் கையில் அழகான பார்பி பொம்மையை கொடுத்தார்.

மகா நடப்பவையெல்லாம் ஒன்றும் புரியாமல் அம்மாவை பார்த்தாள். தாய் செல்வி சிரித்தபடியே தலையை அசைத்தாள். மகா அந்த பொம்மையை வாங்கிக்கொண்டு அம்மாவிடம் ஓடி வந்து, “அம்மா! இது என்னோட ஆசை பொம்மகுட்டி” என்று சிரித்த முகத்துடன் கூறினாள். தாய் செல்வி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு, குழந்தையை தன் இடுப்பில் தூக்கிக்கொண்டு வீடு திரும்பினாள்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “மகாவின் ஆசை பொம்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *