மகளைப் பெற்ற மகராசன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 4,875 
 

ஊர் மெச்சும் அளவில் தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரம்மாதமாக கல்யாண ஏற்பாடுகள் செய்திருந்தார் மாணிக்கம். கனத்த இதயத்துடன் கண்களில் கண்ணீர் திவலையுடன் கன்னிகாதானம் செய்து வைத்து புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வேளையில், மகளின் பிரிவு மூச்சையும் பேச்சையும் திணறடித்தது. வேதனை தாளமையால் அழுகின்ற தந்தைக்கும் மகளுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது.

கன்னிப் பருவம் வரையில் மாசு மரு இல்லாமல் கஷ்டம் எதுவும் படாமல், ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’, என்று வளர்ந்த குணவதியை பிரிவதென்றால் பெற்ற தந்தைக்கு தீராத்துயரமாக இருந்தது. இதற்கு தீர்வு இல்லாததை நினைக்கும் போது நெஞ்சம் பதறியது.

ஐஸ்வர்யா சிறுமியாக இருக்கையில் தேன் கலந்த பாலை வெள்ளி டம்பளரில் அருந்தும் போது, பாலின் சுவையை அவள் ருசிக்கும் முன் உதட்டோரம் வழிந்த பால்துளி ரசிக்கக்கூடிய தாக இருந்தது. பருப்பும் நெய்யும் கலந்து பளப்பளக்கும் தங்கக் கிண்ணத்தில் வைத்து அவள் உணவு அருந்த வில்லை, ஆயினும் வயிறாற சாப்பிடுவதைக் கண்டு கவலையற்றார். செவிலித்தாயால் வளர்க்கப்பட்டால் வளரும் விதம் வேறுபடும், அன்பும் பாசமும் கிட்டாமல் ஏங்கிப்போவாள் என்று, பெற்ற இருவரின் கவனிப்பில் வளர்ந்தாள். அவளது வாழ்விலும், வளர்ச்சியிலும் எதுவும் இல்லை என்ற நிலை இருந்ததில்லை. தேவையில் ஆடம்பரம் இல்லையாயினும் அத்தியாவசியம் இருந்தது.

அவளின் குழந்தை தனத்தையும், சுட்டித்தனத்தையும் பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து குதூகலம் கொண்டார் மாணிக்கம். கவனிக்கும் போஷாக்கு அளபெரியது ஆயினும் அது அவளுக்கு திகட்டும் போது, வேண்டாம் என்று கொலுசு சதங்கை ஒலியுடன் குதித்து ஓடும் போதும், போக்குக்காட்டித் தூணைப் பிடித்து விளையாடும் போதும் மனம் தொய்வடைந்தாலும், மகள் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.

விலையுயர்ந்த வித விதமான வண்ண உடைகளில் உலா வந்ததைக்காட்டிலும், பள்ளி சீருடை எளிமையிற் தேவதையாகத் தெரிந்தாள். புத்தக பொதி மூட்டையை சுமக்கின்றப் போது நெஞ்சு வலித்தாலும், படித்தக் களைப்பில் புத்தக பாரத்துடன் வேர்க்க விறுவிறுக்க ஓடிவரும் உற்சாகம் அவருக்கு உவகை ஊட்டியது.

வேர்வையுடன், மாலை மஞ்சள் நிற வெய்யலில் முகம் கறுத்து மினுமினுக்கும் போது காலையிற் வெள்ளறிப் பழம் போல பளிச்சென்று போனவள், மாலையில் அத்திப்பழ நிறத்துக்கு மாறிவிட்டாளே என்று கவலைக் கொள்வார். பள்ளிப் பருவம் அவளுக்கு அறிவை தந்ததோ இல்லையோ தந்தைக்கு ஆனந்தத்தை அள்ளித்தந்தது.

பருவம் எய்திப் பூப்படைந்த போது, அவளின் வனப்பு ஆச்சரியப்படும் வகையில் இருந்தாலும் வரன் தேடும் விஷயம் அச்சுறுத்தியது. ‘அறியாப் பிள்ளையை அரியணை ஏற்றி வைத்தால் அது எவ்வாறு அரசாட்சி செய்யும்’,? அது போலத்தானே மகளும், விபரமறியாமல் தோட்டம் விளையாட்டு என்று இருந்தவள், பள்ளிக்கூடம் வீடு என்று இருந்தவள், எங்ஙனம் புருஷன் வீட்டில் வக்கனை செய்வாள் என்று ஆதங்கப்பட்டார்.

‘பெண்ணென்று பிறந்த போதே புருஷன் பிறந்திருப்பான்’, என்று இருந்தாலும் நல்ல குணவானாக, ஒழுக்க சீலனாக அமைய வேண்டுமே என்கிற கவலை அவருக்குள்ளும் ஆட்கொண்டது.

வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் மகளும் தம்மை விட்டு பிரியாமல் இருப்பாள் என்ற சுயநலம் மேலோங்கி இருந்தது.

பெண்ணை லட்சம் விலையுள்ள பிரத்யேக தயாரிப்பில் நெய்த பட்டு புடவை உடுக்கச் செய்து, அவள் விரும்பி ஆசை ஆசையாக வாங்கிய அத்தனை நகைகளையும் போட்டு குறைவில்லா சீர்செனத்தியுடன் கல்யாணம் செய்து வைத்தார்.

மாப்பிள்ளை கிருஷ்ணகுமார், தன் மானம் கொண்டவன். எத்தருணத்திலும் அடுத்தவர் கையை எதிர்ப்பார்க்காதவன். பெண் வீட்டில் தனக்கென்று ரொக்கம், உடை, வாகனம், நகை என்று எதையும் எதிர்ப்பாராமல், விரும்பி செய்ய இருந்ததையும் மறுத்து ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டான். தனி மனிதனாக நேர்கொண்ட பார்வையுடன் ஸ்மார்ட்டாக இருந்தான்.

அவனின் குணம், பேச்சு, நடவடிக்கை மாணிக்கத்துக்கு பிடித்து இருந்தது. பேராசைப் பிடித்து அலையும் இக்கலியுகத்தில் இப்படி ஒருவன் மாப்பிள்ளையாக வந்ததில் பெருமிதம் கொண்டார். மாமனாரிடம் பற்றுதலாகவும் பரிவுடனும் நடந்துக் கொள்ளும் பாங்கு வெகுவாக கவர்ந்தது.

சென்னையில் மிகப்பெரிய ஜவுளிக்கடையின் ஸ்தாபகரும் முதலாளியுமான கிருஷ்ணகுமார், நல்லத் திறம்பட நிர்வாகம் நடத்தி வந்தான். ‘பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு’, என்பது ஐஸ்வரியாவை கரம் பிடித்த வேளையில் நிரூபணம் ஆகியது. வணிக ஸ்தாபனத்தின் மிக முக்கிய தாரக மந்திரமான, நம்பிக்கை, நாணயம், கைராசி, யுக்தியை கடைப்பிடித்து நிர்வாகத்தை அற்புதமாக நடத்தினான். அவனது ஸ்தாபனமும், இல்லறமும் மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தது.

விதி செய்த கொடுமையோ, அல்லது முன்னோர்கள் செய்த பாவமோ தெரியலை, மின்கசிவு என்ற போர்வையிற் ஒரு நாள் நள்ளிரவில் ஜவுளிக்கடையின் தரை தளத்தில் தீ பிடிக்கவே, அது மளமளவென கடை முழுவதையும் எரித்து சாம்பலாக்கியது.

இதயம் நொறுங்கிப் போனான் கிருஷ்ணக்குமார். அழுகின்ற குழந்தைக்கு பால் கொடுக்க தோன்றாதவாளாய் கல்லாய் சமைந்தாள் ஐஸ்வர்யா.

வசதியான குடும்பம் ஏழ்மை நிலைக்கு இறங்கியது. கேள்விப் பட்ட மாணிக்கம் நெஞ்சம் பதறினார். விரைந்து மருமகன் இல்லம் நோக்கி ஓடினார்.

என்ன தான் நான் ஆறுதல் சொன்னாலும், தேற்றிக்கொள்கிற மனநிலையில் நீங்கள் இல்லை என்பது தெரியும், இழப்பு தாங்கிக் கொள்ள முடியாது தான், இதில் யாரையும் நொந்துக் கொள்ள முடியாது, காசு பணத்தை திரும்ப சம்பாதித்துக் கொள்ளலாம், உயிர் போயிருந்தால் என்ன பண்ணமுடியும். கடவுள் கிருபையால் அப்படி ஏதும் இல்லாமல் இருந்தது பூர்வ ஜென்மப்புண்ணியம். கவலைப் படாதீர்கள் என்றார்.

அம்மா ஐஸ்வர்யா, மாப்பிள்ளையின் குணம் எனக்கு நன்றாகத் தெரியும், நான் சொன்னால் கேட்க மாட்டார். எதையும் கொடுத்தாலும் வாங்க மாட்டார். நீ அவரிடம் கேட்டு சொல்லும்மா, எரிந்து போன கடையை செப்பனிட்டு முதல் போட்டு தர்றேன். மறுக்காமல் அதை ஏற்று தொழிலை நடத்தச் சொல்லும்மா என்றார்.

அப்பா, வந்தோமா, பார்த்தோமா, துக்கம் விசாரித்தோமா என்று அதோடு திரும்பி போங்கள், உங்கள் கடமையை நீங்கள் குறைவன்னியில் செய்து முடித்து விட்டீர்கள், இது எங்கள் குடும்ப விஷயம் இதில் நீங்கள் தலையிட வேண்டாம், நீங்கள் கொடுத்து தான் கரைசேரனும் என்கிற அவசியம் அவருக்கு இல்லை. என் கணவர் உழைப்பாளி உழைத்து முன்னுக்கு வந்திடுவார். ‘வஞ்சகமில்லாத மகராசனுக்கு வறுத்த காணமும் (கொள்ளு) முளைக்கும்’ என்று நீங்க கேள்விப்பட்ட தில்லையா? அந்த மகராசன் தான் என் புருஷன். ஐயோ போச்சேன்னு களங்கி தலையில் கை வைத்து உட்கார்ந்து விட மாட்டார். எல்லா விதத்திலும் அவருக்கு உறு துணையாக நான் இருப்பேன். உதவி என்கிற பெயரில் அவரைப் பிச்சைக்காரனாய் ஆக்குவதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். ‘எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்’, என்று எதிர்ப்பார்க்கிற ஜாதி இல்லை அவர். மாமனார் மச்சினன் உறவுக்காரர்கள் என எவரும் கொடுப்பார்கள் என்று அவர் எதிர்ப்பார்க்க மாட்டார். உறவுக்காரர்களிடம் கடன் பட்டு நொந்து வேகறதை விட, ஊராரிடம் கடன் பட்டு செத்து சுண்ணாம்பாய் மடிவது எவ்வளோ மேல் என்று தான் நினைப்பார்.

என்னம்மா சண்டைக்காரனிடம் பேசுவது போல. விட்டேத்தியா பேசுறே, நான் உன் அப்பாடா, ‘அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தி தான்’ என்று நினைத்து பேசாதே, உங்க சுக துக்கத்தில் எனக்கும் பங்குண்டு.

இல்லப்பா, அப்படியெல்லாம் எதுவும் வரையறைப் படுத்த வில்லை. நீங்களாகவே ஏதாவது கற்பனை பண்ணிக்கொண்டு தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள். ‘அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது’ ‘அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது’, என்று எனக்குத் தெரியும். தரித்திரம் பிடித்தவளின் கை பிடித்த நேரம், கடை எரிந்து சாம்பலா போச்சுன்னு பேசாமல் இருக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுப் போங்க, என்று சொன்னதும் விக்கித்து நின்றார் மாணிக்கம்.

தன் மகள் இவ்வளவு அறிவு முதிர்ச்சியோடு பேசுவாள் என்று எதிர்ப்பார்க்காத மாணிக்கம் பெண் ஒரு அதிசயம் என்று வியந்து பெருமிதம் கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *