மகப்பேறு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 1,217 
 
 

சகனிக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. திருமணமாகி ஐந்து வருடங்களாகிறது. ஆரம்பத்தில் ‘குழந்தை பற்றிய சிந்தனையே மகிழ்ச்சிக்குத்தடை’ என நினைத்திருந்தவளுக்கு, வருடங்கள் செல்லச்செல்ல குழந்தை மீது ஆசை வந்த பின் கிடைக்காததால் வேதனை அவளை வாட்டியது. கணவன் முகன் இதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல்  இருப்பது வேதனையை அதிகரிக்கவே செய்தது.

இரண்டு வருடங்களாக போகாத கோவில் இல்லை. பார்க்காத மருத்துவர் இல்லை என சொல்லும் அளவிற்கு முடிந்த வரை பார்த்தாயிற்று. இல்லையென இதுவரை யாரும் சொல்லவில்லை. யாரென்ன சொன்னாலும் அதை உடனே நிறைவேற்றும் மனநிலை. எப்படியாவது கிடைத்தால் தேவலை என சொன்னதையெல்லாம் உடனே செலவைப்பற்றி யோசிக்காமல் செய்தாள்.

“ஒருத்தருங்கிறது நாலு சோசியர் கிட்ட பொருத்தம் பாத்துத்தான் கல்யாணம் பண்ணி வெச்சேன். ஆருமே கொழந்த கெடைக்காதுன்னு சொல்லலை. சாதகத்துல கொறையில்ல, ஒடம்புல டாக்டரும் கொறை சொல்லலை, எல்லாமே‌ நேரம்னு சொல்லறாங்க. எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது….” நெருங்கிய உறவுப்பெண்ணிடம் சொல்லி அழுதாள் சகனியின் தாய் சகுந்தலா.

“நெசந்தான். என்ற கொழுந்தியா பொண்ணுக்கு பொருத்தமே சரியில்லைன்னு சொன்ன மாப்பிள்ளைக்குத்தாங்கொடுத்தாங்க. ஒரு தடவ ஒடம்புக்கு செரியில்லின்னு ஆஸ்பத்திரி போனப்ப டாக்டரும் கொழந்த பொறக்கறது கஷ்டம்னு சொன்னாங்க. ஆனா ரெண்டு கொழந்தைங்க நாலு வருசத்துல இப்ப கெடைச்சுப்போச்சு. பொண்ணும் பையனும் சுத்த வெகுளி. சூழ்ச்சின்னா என்னன்னே தெரியாது. யாரையும் வெறுப்பா நெனைக்க மாட்டாங்க. பொறாமைப்பட மாட்டாங்க. குசலம் பேச மாட்டாங்க. பேராசையெல்லாம் கெடையாது. நல்ல எண்ணம் மனசுல இருந்தாலே தோசமெல்லாம் தீயில போட்ட பஞ்சா காணாமப்போயிரும்னு பெரியவங்க சொல்லுவாங்க. இருட்டுக்கு வெளக்கு மாதிரி நாம செய்யற நல்லது. பகலுக்கு மேகமூட்டம் மாதிரி நாம செய்யற கெட்டது. ம்… இந்தக்காலத்துல நல்லவங்களா இருக்கறவங்களப்பார்க்கறதே குதரக்கொம்பா இருக்குது… நாஞ் சொல்லறேன்னு என்னத்தப்பா எடுத்துக்கப்படாது. உன்ற பொண்ணு சகனி அப்பப்ப சகுனி மாதர நடந்துக்குவா. தும்ப உட்டுப்போட்டு வாலப்புடிக்கிற டைப்புத்தான். மொதல்ல நாலு மாப்பள நல்ல எடமா வந்தத அதுல கொற, இதுல கொறைன்னு வேண்டாம்னு சொல்லிப்போட்டு  கடைசில சொத்தே பூராங்கொறையாக்கெடக்கிற மாப்ளய கட்டிக்கிறேன்னு கட்டீட்டா. அத மாதர தானா கெடைச்சத உட்டுறுப்பா…. அதனாலீங்கூட ஒன்னங்கெடைக்கலியோ, என்னமோன்னு எனக்கு யோசனையா இருக்குதுன்னு வெச்சுக்குவே” என பேசிய உறவுக்காரப்பெண்ணின் பேச்சிலும் நியாயம் இருப்பதாகப்பட்டது சகுந்தலாவுக்கு.

‘எதையும் வெளிப்படையாகத்தன்னிடம் பேசும் மகள் உறவுக்காரப்பெண் சொல்வதைப்போல் முதலில் முழுகாமல் இருந்திருந்தால் தன்னிடம் சொல்லியிருப்பாள். அப்படி எதுவும் நடந்திருக்காது’ எனும் யோசனையில் ஆழ்ந்தாள்.

எந்த விசேச நிகழ்வுகளுக்குப்போனாலும் உறவுகளிடம் பேசினாலே “சகனி விசேசமா இருக்கறாளா…?” என பலரும் கேட்கும் போதெல்லாம் மனது வலிக்கும். தனது முதல் பெண் விகனி திருமணமாகி ஐந்தாவது மாதத்திலேயே கருவுற்ற போது ‘ஒரு வருசமாவது தள்ளி கெடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’ என வெளிப்படையாகவே குடும்பத்தினர் முன் பேசியவளுக்கு, இரண்டாவது பெண் ஐந்து வருடமாகியும் கருவுறாமல் இருப்பது கவலையைக்கொடுத்தது.

“அக்காளுக்கு அஞ்சு மாசத்துலயே கொழந்த கெடைச்ச போது கொறைஞ்சது ஒரு வருசம், ரெண்டு வருசம் சந்தோசமா இருந்துட்டு அப்புறம் பெத்துக்கறது நல்லதுன்னு நீ பேசுனத கேட்டதுனால தான் நானும் ரெண்டு வருசம் தள்ளிப்போட்டுடேன். பெங்களூருல நாங்க இருந்த மொதல் ரெண்டு வருசத்துல ரெண்டு தடவ கொழந்த உருவானத கலைச்சிட்டேன். அத இது வரைக்கும் உங்கிட்ட மறைச்சிட்டேன். அத விட்டிருக்கோணும்னு எனக்கு இப்பத்தோணுது. எல்லாம் உன்ற யோசனைய நாங்கேட்டது தான் காரணம். உடனே பொறந்தாலும் பரவால்லேன்னு பெத்திருந்தா காலம் பூராம் சந்தோசமா இருந்திருப்பேன். இப்ப காலம் பூராம் கவலைப்படோணும் போலிருக்குது. கெடைச்சத வேண்டாங்கிறது, கெடைக்காதபோது வேணுங்கிறது நம்ம தப்புன்னு புரியுது” தாயிடம் சொல்லி விசும்பினாள் சகனி.

“சேரி நடந்தது நடந்து போச்சு. இப்பெல்லாம் படிச்சவங்க அப்படி கொழந்தைய தள்ளிப்போடறதுனால நானும் நம்ம கொழந்தைகளும் ஜாலியா இருக்கட்டும்னு ஆசைப்பட்டு சொல்லீட்டேன். இப்படியாகும்னு கனவா கண்டேன்” என தான் சொல்லியதிலும் தவறில்லை என்பது போல சொன்னாலும் மனதுள் ‘அப்படி தள்ளிப்போடச்சொல்லியிருக்கக்கூடாது. அது போல பேசியிருக்கக்கூடாது’ என வருத்தப்பட்டாள் சகனியின் தாய்.

” கண்ணாலமான போது ரெண்டு வருசம் திசா புத்தி கோட்சாரமும் நல்லா இருந்த போது கண்டிப்பா கெடைச்சிருக்கோணும். எல்லாம் நாம படிச்சுப்போட்டம்னு பண்ணற தப்புத்தான். பொருத்தமே நல்லா இருந்தாலும் கெட்ட நேரத்துல கெடைக்கிறது கஷ்டம் தான். இப்ப அஷ்டம புத்தி, அஷ்டமச்சனி சேந்ததுனால கெடைக்காமத்தடுக்குது. சாதகத்துல அஞ்சாமிடமும், அஞ்சாமிடத்துக்குடையவனும் கெடலை. பொருத்தத்துல சஷ்டாஷ்டகம்னு சொல்லற ஆறு, எட்டு ராசியுமில்ல. அடுத்த புத்தி வரும் போது ஆறு மாசத்துக்கப்பறம் அஷ்டமச்சனியும் வெலகறதுனால கொழந்த கண்டிப்பா கெடைக்கும். கவலைப்படாதீங்க. அப்புறம் என்ற நாப்பது வருச சோசிய அனுபவத்துல கண்டத சொன்னா அல்லாரும் கொஞ்சங்கேட்கோணும்.  நல்ல பூமியா இருந்தாலும், நல்ல வெதையா இருந்தாலும் மழையில்லாத காலத்துல வெதச்சா எப்புடி செடி மொளைக்காதோ அந்த மாதர படிப்பு, வேலைன்னு சொல்லிப்போட்டு நல்ல நேரத்துல கண்ணாலத்த தள்ளிப்போடறதும், கண்ணாலத்துக்கப்புறம் சந்தோசம் போயிரும்னு நல்ல நேரத்துல உருவான கருவக்கலைக்கறதும் ரொம்பத்தப்புப்பண்ணற மாதர தெரியுது. நீங்க அப்படிப்பண்ணி இருப்பீங்கன்னு நெனைக்கறேன். நல்ல காலம் எப்பவுமே இருக்காது. அதனால அந்தந்த வயசுல அதது நடக்கறது தான் நல்லது. நாம பெரியவங்க சொல்லறதத்தாஞ்சொல்ல முடியும். கடைப்புடிச்சே ஆகோணும்னு கண்டிஷனா போட முடியும்? விதி கெட்டா மதியால வெல்ல முடியும்னு நம்ம முன்னோர்கள் சொல்லி வெச்சுட்டு போயிருக்காங்க. மதியே கெட்டுப்போச்சுன்னா என்ன பண்ண முடியும்….? இந்தக்காலத்துல அனுபவப்பட்டவங்க சொல்லறத கேட்காம கடைசில வந்து பரிகாரங்கேட்டா என்ன சொல்லறது…? அப்பறம் கெட்ட நேரத்துல கெடைக்காத போது ஆஸ்பத்திரி போயி ஆபரேசன் பண்ணறாங்க. அப்பறம் கண்ட மருந்து, மாத்தரையச்சாப்பிடறதுனால கற்பப்பை கெட்டுப்போகுது. அப்பறம் நல்ல நேரமே வந்தும் கெடைக்காததுனால சோசியம் பொய்யினு நெனைக்கறாங்க. சாஸ்திரம் மனுசங்களுக்கு வழி காட்டியாத்தான் இருக்குமே தவுத்து கெட்டத என்னைக்குமே சொல்லாது. அதப்புரிஞ்சுக்கோணும் மொதல்ல” எனக்கூறிய சோதிடர் கந்தனின் ஆலோசனையை கேட்ட போது குழந்தைப்பிறப்பைத்தள்ளிப்போட்டு தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தினாலும், கண்டிப்பாக ஆறு மாதங்களுக்குப்பின் வரும் நல்ல நேரத்தில் குழந்தை கிடைக்கும் என உறுதியாக சோதிடர் சொன்னதை எண்ணி மகிழ்ந்தனர் சகனியும் அவளது தாய் சகுந்தலாவும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *