மகன் வந்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 3,730 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தெருவில் மாட்டு வண்டியின் ‘ஜல், ஜல்’ என்ற ஒலி கேட்டதும் கனகம் அம்மாள் பரபரப்புடன் வெளியே வந்தாள். அவள் வீட்டைத் தாண்டிக்கொண்டு கீழ்த் திசை நோக்கிச் சென்றது வண்டி. மாட்டு வண்டி போவ தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த கனகம் மெல்லிய நகைப்பைச் சிதற விட்ட வண்ணம் உள்ளே செல்லத் திரும்பினாள். கிழக்குப் பக்கத்திலுள்ள யார் வீட்டுக்கோ யாரோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அவளுடைய அருமை மகன் துரை அந்த வண்டியில் வர வில்லை. இதில் ஏமாற்றத்துக்கு என்ன இருக்கிறது? அன்றைய தினம் கிராமத்துக்கு வருவதாக துரை கடிதம் ஏதும் எழுதவில்லை. கடந்த இருபது வருடங்களாக ஒவ் வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் துரையின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே அன்றைக்கும் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், கனகம்.

துரை இன்றைக்கும் வரவில்லை.

இப்படி எண்ணிப் பார்ப்பதற்குக்கூடக் கனகம் கூசினாள். இன்றைக்கு வரவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் ? பொழுது விடிந்ததிலிருந்து, அப்படியும் இப்படியு மாக, மணி பதினொன்றைத்தானே தாண்டியிருக்கிறது? சூரியன் மறைவதற்கே இன்னும் ஏழு மணி நேரம் இருக் கிறது. அதற்குப் பின் பன்னிரண்டு மணி நேரம் இராப் பொழுது ! அதற்குள் துரை வராமலா போய்விடுவான்? அப்படி வராவிட்டால்தான் என்ன? மறுநாள் பன்னிரண்டு மணி காலத்திற்குப் பகலும் பன்னிரண்டு மணி காலத்திற்கு இரவும் இருக்கின்றன. அதற்கு மறுநாளும் அப்படியே தான்….

‘என்னுடைய துரை என்னைப் பார்க்க வராமல் இருக்க மாட்டான். கட்டாயம் வருவான் ! என் அருமை மகனா யிற்றே! வராமல் இருப்பானா?’

அந்தப் பெரிய, பழைய வீட்டில் வாசலுக்கு எதிரில் பெரிய முற்றம். தெற்குப் பார்த்த வீடு. முற்றத்தின் கிழக் கெல்லை, வீட்டின் தாய்ச்சுவர். மற்ற மூன்று பக்கங்களிலும் விசாலமான தாழ்வாரங்கள் வாசல் படிக்கட்டைத் தாண்டியதும் ஒரு இடைகழி . அதன் இருபுறமும் இரு அறைகள். இடை கழியைக் கடந்தால் தாழ்வாரத்தில் வாசலை நோக்கி, ஒரு கை இல்லாத நாற்காலி. அதுதான் கனகத்தின் பகற்பொழுது ஸ்தானம்!

அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுதான் துரையைப் பற்றிய நினைவுகளில் ஈடுபடுவாள், அவள். இன்றைக்கா, நேற்றைக்கா? இருபது வருடங்கள் உலகத்தில் வேறு எந்தத் தனி மனிதனும் இவ்வளவு கற்பனை செய்த தில்லை என்று சொல்லும் அளவுக்குக் கற்பனை செய்து பார்த் திருக்கிறாள், கனகம்.

சென்று போன, எண்ணற்ற, எத்தனையோ நாட்கள் இருக்கட்டும்; இன்றைக்குத் துரை வந்து விடுவான் என்று நிச்சயமாக நம்பினாள், கனகம்.

துரை இன்று கட்டாயம் வரப்போகிறான்!… முற்றத்தில் காகம் வெள்ளை எச்சம் இட்டிருக்கிறதே! என்னைத் தேடிக் கொண்டு வேறு யார் வரப் போகிறார்கள்? உற்றமா , சுற்றமா?…….துரைதான் வருவான் !…..’

ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த வற்றிப் போன உடலில், உட்குழிந்த கண்களில் நம்பிக்கை ஒளி வீசிற்று . துரையின் வருகைக்காகக் கல்பகோடி காலமானாலும் பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கத் துணிந்த மனம் பெரு மிதத்தால் விம்மியது.

கண்டிப்பாக இன்று வரத்தான் போகிறான், அவன் அம்மா காத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாதா?…..

துரை, உனக்காகக் கீரைக்கூட்டு பண்ணிவச்சிருக் கேண்டா ! உனக்கு ரொம்பப் பிடிக்குமேன்னுதான் பண்ணினேன். அன்னிக்கு : அப்பாவுக்குக் கூடப் போடாமல் எல்லாத்தையும் எனக்கே போட்டு விடுன்னு சொன்னியே? அப்புறம், நீ கீரைக்கூட்டு சாப்பிட்டியோ, இல்லையோ? உன் வாய்க்கு வகையா யார் பண்ணிப் போட்டிருக்கப் போறா? அதனால்தான் நான் தயாரா வெச்சிருக்கேன்!…. ஆமாம், அன்னிக்குக் கூட்டு நன்றாக இருந்த தோன்னோ? சாப்பிட்டுக் கொண்டிருக்கிற போது, கீரையைக்கூடச் சாப் பிடாமல் பாதியிலே எழுந்து, அன்னிக்கு …’

***

அன்றைக்கு சனிக்கிழமை. பள்ளிக்கூடம் இல்லை. காலையில் எட்டரை மணிக்குப் பழையது சாப்பிட்டு விட்டு வெளியே புறப்பட்டான், துரை. அவனுடைய தந்தை அருணாசலம் ஏழு மணிக்கெல்லாம் வண்டியைக் கட்டிக் கொண்டு கழனியைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

துரை வீடு திரும்புகையில் மணி பதினொன்று. பரட்டைத் தலையும் வியர்வை வழியும் முகமுமாய் வீட்டுக்குள் நுழைந்தான். மைல் கணக்காக ஓடி வந்த வனைப்போல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிற்று. அவனைக் கண்டதும் கனகம் பயந்தே போனாள்.

“ஏண்டா , இப்படி இரைக்க இரைக்க ஓடி வரே? யாரோடு சண்டை ?…”

ஐந்து நிமிஷம் சென்ற பிறகுதான் அவனால் பேச முடிந்தது. ‘சண்டையு மில்லை, மண்டையுமில்லை’ என்றபடியே கொல்லைப்புறம் நோக்கி நடந்தான்.

அவன் முதுகைப் பார்த்தபடியே கனகம் நின்றாள். மாநிறம் என்றுகூட சொல்வதற்கில்லை. கறுப்பு தான். பதின்மூன்று வயதே ஆன சிறுபிள்ளையின் உடல் போல் இல்லை. தோலில் வழுவழுப்பும் மினுமினுப்பும் தென்பட வில்லை. வறட்சியாய், தடித்துப் போன மாதிரி தோன்றிற்று.

கனகத்தினுள்ளே தாய்மையுணர்ச்சி பொங்கியெழுந் தது. “ஏண்டா , இப்படித் தெரு நாய் மாதிரி அலைகிறாய்? படித்துப் படித்து ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். ஒரே ஒரு பிள்ளை என்று சலுகை காட்டினால் பாழாய்ப் போகிறாயே! அப்பாவிடம் அடி வாங்காத நாள் உண்டா ? தெருப் பசங்களைச் சேர்த்துக் கொண்டு ஏன் தத்தாரியாய்த் திரிகிறாய்? கிட்டா மாமாவின் பிள்ளையைப் பார். எத்தனை சமர்த்தாக இருக்கிறான் !…”

அவள் அங்கலாய்ப்பு படர்ந்து நீண்டு கொண்டே போயிற்று.

கொல்லைக் கதவை மடேர் என்று சாத்திவிட்டு, மேலண்டைத் தாழ்வாரத்திற்கு வந்தான், துரை. ஒரு எம்பு எம்பி, மேலே கொடியில் உலர்த்தியிருந்த மேல் துண்டை எடுத்துக் கொண்டான்.

“அம்மா, நான் குளிச்சுட்டு வந்துடறேன்…”

அவன் சொற்களிலேதான் எத்தனை பணிவு, அன்பு, மரியாதை! தேனொழுக்குப் போல் பேசுகிறான்! இவனைப் போய் முரட்டுப் பிள்ளை என்கிறார்களே, ஊரார்? இவனளவு சாமர்த்தியம் மற்றவர்களுக்கு வரட்டுமே, பார்க்கலாம். சிறு பிள்ளையானதால் கொஞ்சம் விளையாட்டுத் தனமாய் இருக்கிறான். அவ்வளவுதான்!

“சீக்கிரம் வந்துவிட்டா, துரை – ரேழியைக் கடந்து கொண்டிருந்தவனைப் பார்த்துக் கூவினாள், கனகம்.

“சரி, அம்மா .”

“நீ பாட்டுக்குத் துளையாதே. அக்கரைக்கும் இக் கரைக்குமாய் நீச்சல் போடாதே. உச்சி வேளை . ஈ, காக்காய் இருக்காது, குளத்தங்கரையிலே. ஐயோ, பிள்ளையே! ஒன்பது மணிக்கெல்லாம் குளிச்சிட்டு வந்திருக் கப்படாதோ ?….”

“அஞ்சு நிமிஷத்திலே வந்துடறேன், அம்மா!”

“ஜாக்கிரதை….”

அரை மணிக்குப் பின்புதான் துரை திரும்பி வந்தான். கனகத்திற்கு அவன் திரும்பி வரும்வரை வயிற்றில் நெருப்பு.

ஒவ்வொரு நாளும் இப்படித்தான்.

துரை தலைவாரிக் கொண்டு கண்ணாடியை ஆணியில் மாட்டினான்.

“சாப்பிட வரயா?”

“அப்பா வந்துடட்டுமே”

கனகத்திற்குக் கனகாபிஷேகம் செய்தாற் போல் உள்ளம் குளிர்ந்தது.

“அவர் எப்போ வருவாரோ? ஏண்டா பசிக்கல்லே? மணி பன்னிரண்டாகிறது. எட்டு மணிக்குப் பிடி பழையது சாப்பிட்டதுதானே?”

அவனுக்கு என்ன தோன்றிற்றோ, “சரி, சாதம் போட்டுடு” என்றான்.

கனகம் இலையைப் போட்டாள். எதிரில் வந்தமர்ந் தான், துரை. அவன் கண்கள் விரிந்தன.

“பேஷ், பேஷ்! கீரையா?.. இன்னிக்கு ரொம்ப நன்னாயிருக்கு! கொஞ்சம் தான் பண்ணினியோ?”

தாய் பூரித்துப் போனாள்.

“நிறையப் பண்ணியிருக்கேன்! உனக்கு வேணுங்கிறதைப் போட்டுக்கோயேண்டா !…”

“அப்படீன்னா , அப்பாவுதையும் சேர்த்து எனக்கே போட்டுடேன் !…”

கனகம் இன்ப வாரிதியில் திளைத்தாள். இவ்வளவு அழகாகப் பேச, இந்த ஊரில் வேறு எந்தப் பிள்ளைக்காவது வருமா?

“எங்கேடி, அந்தத் தத்தாரி…”

வீடு அதிர்ந்தது. கனகம் நடுங்கினாள். துரை, வாயில் இருந்த கீரையை விழுங்க முடியாமல் உணர்வற்றுப் போனான்.

அருணாசலம் சமையற் கட்டுக்கு வந்தார். “வெக்கங்கெட்ட பயலே, உனக்குச் சோறு ஒரு கேடா ?… பழி , பழி , கோடாலிக் காம்பா வந்து முளைச்சிருக்கயே…”

“அவன் சாப்பிட்டு முடிக்கட்டுமே. அப்புறம் திட்டலாம்” மெல்லச் சொன்னாள், கனகம்.

“எல்லாம் உன்னால் தான்! நீ கொடுக்கிற செல்லம்…. தெருவிலே போனால் என் மானம் போகிறது… சுப்பையன் தோட்டத்துக்குள்ளே புகுந்து, அத்தனை கொய்யா மரத்தையும் உலுக்கியிருக்கான்…”

“நான் ஒண்ணும் அங்கே போகல்லே…”

பிரமாதமான கோபம் வந்துவிட்டது, அருணாசலத்துக்கு. கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார். அவனை.

பொய்யா சொல்றே? பளாரென்று ஓர் அறை. அவன் கலங்கவில்லை. மலை போல் நின்றான்.

அவனை உலுக்கித் தள்ளிவிட்டு வெளியே வந்தார், அவர். “எங்கேயும் தொலைஞ்சுபோக மாட்டேங்கிறயே? நீ போயிட்டீன்னா நான் நிம்மதியா இருப்பேன். பாபம்…. பாபம்!…”

ஒரு நிமிஷம் நகர்ந்தது. வாசலை நோக்கி அம்பு போல் பாய்ந்தான், துரை.

“துரை, துரை,… இங்கே வாடா ….” கனகம் விம்மினாள்.

“ஏண்டி அழறே? வயத்திலே இருக்கிற கொய்யாப் பிஞ்சு ஜீரணமானால் தானே வருகிறான் !”

அவன் வரவில்லை. ‘இன்றைக்கு வருவான். முற்றத்தில் எத்தனை காக்காய்கள் கத்துகின்றன !… இருபது வருடங்கள் ஓடி விட்டனவே! ஒரு வேளை, வீட்டை அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பானோ? மாட்டான். நான்தான் பகல் முழுவதும் வாசலுக்கு எதிரேயே நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேனே!’

அப்போது ஏற்பட்ட மனவீழ்ச்சிக்குப் பின் அருணாசலம் நிமிரவேயில்லை. பல வாரங்கள், பல மாதங்கள் தேடினார். தெரிந்தவர், அறிந்தவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினார். மாதங்கள் பறந்தனவே தவிர மகிழ்ச்சி தரும் செய்தி வரவில்லை .

ஒரு வருஷம் மறைந்தது.

துரை வீட்டிலிருந்து ஓடிப்போன அதே நாள். காலையில் எழுந்ததிலிருந்து பித்துப் பிடித்தவர் போல் உட்கார்ந்திருந்தார், அருணாசலம். இவ்வளவு அதைரியமாய் அவர் என்றைக்கும் இருந்ததில்லை.

“கழனிக்குப் போகல்லியா?” தூரத்தில் நின்றவாறே கனகம் கேட்டாள்.

பதிலில்லை. அருகே வந்தாள்.

மணி எட்டாயிடுத்தே

அவருக்குத் தன் மனைவியைப் பார்க்க வெட்கமாயிருந்தது. உச்சி முகட்டைப் பார்த்தார்.

“சரியா……. ஒரு வருஷம்…… ஆயிடுத்து …….”

” “

கனகம் தன்னைத் தைரியப் படுத்திக் கொண்டாள். “தானே வருவான் ……. எழுந்திருங்கோ …….”

“கனகம்…….. கனகம் …….” அருணாசலம் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டு விசித்து அழுதார்.

“ரொம்ப நன்னாயிருக்கு! நீங்கள் செய்ற காரியமா இது?……. சீக்கிரம் அவன் வந்துடுவான் ……..”

அவள் உள்ளே போய்விட்டாள். ஒரு மணி நேரம் சென்று வெளியே வந்து பார்த்தபோது அவரைக் காணோம். வாசலில் நின்ற வண்டியையும் காணவில்லை.

***

இந்தச் சம்பவத்திற்குப் பின் துரையைப் பற்றி இருவரும் பேசத் துணியவேயில்லை. அவன் எப்பொழுதும் அவர்கள் நினைவில் வாழ்ந்து வந்தான்; இதயத்தை நிறைத்தான்.

அருணாசலத்திற்கு எள்ளளவும் சந்தேகமில்லை. துரை இந்த உலகில் இல்லை என்பதில். குளத்தில் விழுந்தானோ, ரயிலில் அரை பட்டானோ, பசியால் வாடிச் செத்தானோ? ஆனால், அவன் உயிரோடு இல்லை.

வீட்டை விட்டுச் செல்கையில் அவன் விவரம் அறியாத பாலகன் அல்ல. மூன்றாவது பாரம் படித்துக்கொண்டிருந்த இளைஞன். வயதுக்கு மீறிய பொது அறிவு; உலக ஞானம். வகுப்புப் பாடங்களில் இரட்டை இலக்க மதிப்பெண்ணைப் பார்ப்பதே அரிது. ஆனால், அவன் அசடு இல்லை. கட்டுப் பாட்டை விரும்பாத தனிப்போக்கு. வெளிக் காரியங்களில் அசகாய சூரன். ஓட்டப் பந்தயத்தில் அவன் தான் முதல்!

வாசற் கதவு கிர்ர் … கிர் …. கிர்….. என்று ஓலமிட்ட து. “யாரது?” என்றார் அருணாசலம், முன் அறையில் அமர்ந்திருந்தபடியே.

“நான்தான் மாமா, கோபாலன். அடேயப்பா , இந்தக் கதவு என்ன மாமா, இரும்பு மாதிரி கனக்கிறது. அதைத் தள்ளுவதற்குள் என் கையில் வலி கண்டுவிட்டது !..”

“போடா, சோனிப்பயலே! எப்போ வந்தே?”

“நேற்றைக்கு ராத்திரி . சௌக்கியம்தானே மாமா?”

“உம். உட்கார்.”

“இல்லே. நான் போகணும். மாமியும் சௌக்கியம் தானே? சரி, நான் வரேன். சும்மா பார்த்து விட்டுப் போகத்தான் வந்தேன்.”

துரையோடு சேர்ந்து படித்தவன், கோபாலன். கல்லூரியில் இரண்டாவது ஆண்டுத் தேர்வை எழுதிவிட்டு வந்திருக்கிறான், அவன். துரை இருந்தால்?…… ஆஜானு பாகுவாய் வளர்ந்திருப்பான் ! வாசற்கதவைத் தள்ள முடிய வில்லையே, கோபாலனால். துரையாக இருந்தால், ஒரு உதையில் திறந்துவிட மாட்டானா! பழைய வீடு. குறுகலா, கனமான நிலைப்படி. அதற்கேற்ற கதவுகள்.

“துரை, நான் பாட்டுக்குப் பணத்தைச் சேமித்துக் கொண்டே போகிறேன். யாருக்காகடா, இவ்வளவும்? நீ உயிரோடு இருந்தால் வரமாட்டாயா? எனக்காக வர வேண்டாம், உன் அம்மாவுக்காக வரமாட்டாயா? நீ வந்து விடுவாய் என்று அவள் எவ்வளவு நிச்சயமாய் இருக்கிறாள், தெரியுமா?……..”

ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் கனகத்தின் நம்பிக்கையில் ஐந்து அரிசி முனையளவுகூடக் குறைய வில்லை .

சென்ற வருஷம், அருணாசலத்தின் ஒன்றுவிட்ட அண்ணா பெண்ணுக்குக் கல்யாணம். அண்ணாவே வந்து அழைத்தார். கல்யாணம், பத்து மைல் தூரத்தில் தான் நடைபெற விருந்தது. முகூர்த்தத்தன்று அதிகாலையில் வண்டியைக் கட்டிக்கொண்டு புறப்பட்டால், சாப்பாடு முடிந்ததும் திரும்பி வந்துவிடலாம். அருணாசலம் இரண்டு, மூன்று தடவைகள் கனகத்தை அழைத்தார். அவள் வரவில்லை .

“நீங்கள் போய்விட்டு வாங்கோ. நாம் இல்லாத சமயத்தில் அவன் வந்து, பூட்டியிருக்கும் வீட்டைப் பார்த்தால் எப்படி ஏமாந்து போவான்! ஊஹும். நான் வர மாட்டேன்”

கடைசியில், அருணாசலம் மட்டும் தான் போனார்.

***

அருணாசலத்தின் வாடிய உடல் படுக்கையில் கிடந்தது. இராப்பகலாய்ப் பணிவிடை செய்துவந்த கனகமும் சோர்ந்து காணப்பட்டாள். உறவில்லாத உறவைச் சிருஷ்டித்துக் கொண்டு ஐந்தாறு பேர்கள் ஒரு மாதமாக வீட்டில் டேரா போட்டுவிட்டார்கள். கிழம் தலையைப் போட்டால், சொத்தில் நாலில் ஒரு பங்காவது நமக்குக் கிடைக்காதா? என்று ஒவ்வொருவருக்கும் உள்ளுக்குள் நைப்பாசை.

அருணாசலம் இருமினார். கனகம் அவர் மார்பைப் பிடித்து விட்டாள்.

“நான் இனிமேல் பிழைக்கமாட்டேன்……..”

“ஐயோ, அப்படிச் சொல்லாதேங்கோ ……”

“எனக்குக் கொடுத்து வைக்கல்லே… யாரோ கொள்ளி போடப்போறா…….”

“நீங்களும் தான் ஒரு மாமாங்கம் காத்துக் கொண்டிருந்தேள்”.

“அவன் வருவான் என்று எனக்கு நம்பிக்கையில்லை.”

“கட்டாயம் வருவான்… என்னை விட்டுப் பிரிந்திருக்க அவனால் முடியுமோ?” கனகத்தின் குரலில் அவநம்பிக்கை யின் ரேகையைக் கூடக் காணவில்லை. மாறாக, அமானுஷ்ய உறுதியின் சாயல் தோன்றிற்று.

அருணாசலம் அவளுக்காக வருந்தினார். இப்படியா ஒருத்தி இருப்பாள் …… மகனை இழந்த தாய் துடித்துத் துடித்து உயிர்விட மாட்டாளோ? இது என்ன. பைத்தியக் கார நம்பிக்கை !… எனக்குப் பின்னும் இவள், அவன் வரவுக் காகக் காத்திருப்பாள் போலிருக்கிறதே! அசடு!…..

“கனகம், கிட்டா மாமாவை அழைத்துக் கொண்டு வரச்சொல்லு. எல்லா விவரங்களையும் அவரிடம் சொல்லி விடறேன். விஜயத்தின் பிள்ளை ரொம்ப நல்லவன். அவன் இங்கேயே இருந்தால் உனக்கு ஆறுதல்; துணை ; பின்னால், சொத்துக்கும் …”

“அதான் துரை இருக்கானே வாரிசு இல்லாத சொத்து இல்லையே!……. எனக்கு யாரும் துணை வேண்டாம். வேலைக்காரி இருக்கிறாள். கூப்பிட்ட குரலுக்குக் கண்ணப்பன் இருக்கிறான்!…..”

பதில் சொல்வது வீண் என்று நினைத்தார் அருணாசலம். “எல்லாம் துரை வருகிறவரைதானே! அவன் வந்துட்டால் எல்லாவற்றையும் அவனே பார்த்துப்பான். முதல்லே, இந்த வீட்டை இடித்துப் புதிசாகக் கட்டச் சொல்லணும். குழந்தை இந்தப் பழைய வீட்டைப் பார்த்தாலே சிரிப் பான் ! வாசற் கதவை யாரால் சாத்தித் திறக்க முடி கிறது?….”

அருணாசலம் கேட்டுக் கொண்டிருப்பதாக அவள் நினைப்பு. ஆனால், அவளுடைய குரல் கேளாத இடத்தைச் சேர்ந்துவிட்டார், அவர்.

***

கிட்டா மாமாவுக்கு அறுபதாண்டு நிறைவுக் கல்யாணம் நிகழ்ந்து பத்துப் பன்னிரண்டு வருஷங்களுக்கு மேல் ஆகியிருக்கும். அவருடைய வயதுக்காக இல்லாவிட்டாலும், குரலுக்காகவாவது எல்லோரும் அவரிடம் மரியாதை செலுத்தியாக வேண்டும். கிராமத்தில், அவர் வாக்குத்தான் கடைசித் தீர்ப்பு. நெறி தவறாத மனிதர். எல்லா வீடு களிலும் அவருக்குச் சுதந்திரம் உண்டு.

தெருவோடு போய்க் கொண்டிருந்தவர் திறந்து கிடந்த வாசலுக்கு அப்பால், நாற்காலியில் உட்கார்ந்திருந்த கனகத்தைப் பார்த்தார். உள்ளே நுழையலாமோ , கூடாதோ என்று சந்தேகப் படுபவரைப் போலத் தயக்கத் துடன் வாசற்படியருகே வந்தார்.

கனகம் எழுந்தாள். “வாங்கோ மாமா, ஏன் தயங்கறேள்?”

நிறைந்த வரவேற்பே அவருக்குத் தடுமாற்றத்தைத் தந்தது.

“ஒண்ணுமில்லை …….. அதுக்கப்புறம் இந்த வீட்டுக் குள்ளே நுழையவேயில்லை. மூன்று வருஷமாச்சு…. உன்னைப் பார்க்கவுமில்லை ….”

“உங்க பேத்தி அடிக்கடி வருகிறாள்.”

“ஆமாம், ஆமாம்.”

“உட்காருங்கோ.” எழுந்து நகர்ந்தாள்.

“இருக்கட்டும். வீடு ரொம்ப சுத்தமா இருக்கே!”

“முந்தா நாள் கண்ணப்பனை ஒட்டடை அடிக்கச் சொன்னேன்.”

“குத்தகைக்காரன் சரியா அளக்கிறானா?”

“உம், மாமனார் காலத்திலேருந்து முத்தையன் பழக்க மானவனாச்சே”

“யோக்கியன் …”

தலையைத் திருப்பி நாற்புறமும் பார்த்தார், கிட்டா மாமா.

“ரேழி உள் பூட்டியா இருக்கு?”

“ஆமாம் ; ஒரு உள் பூட்டிக் கிடக்கு. இன்னொரு உள்ளில் நான் படுத்துக்கிறேன். ராத்திரியில் கதவைத் தட்டினால் உடனே திறக்கச் சௌகரியமா யிருக்கு மோன்னோ?”

கிட்டா மாமா ஒரு நிமிஷம் மௌனமாயிருந்தார்.

“உன்கிட்டே ஒரு காரியமா வந்தேன் …….”

“சொல்லுங்கோ.”

“நம்ப ஊர் சிவன் கோவிலைப் பார்த்திருக்கியோ?”

“எப்பவோ பார்த்திருக்கேன்.”

“இப்ப ஒரேயடியா சிதிலமாகப் போயிடுத்து. புல்லும் புதரும் மண்டிக் கிடக்கு……. கோவிலைச் செப்பனிடலாம்னு எல்லாரும் யோசனை பண்ணிக் கொண்டிருக்கா……”

“நல்லதுதான்.”

“ரொம்பக் குறைச்சலா செலவழித்தால் கூட இருபதினாயிரம் ஆகும். ஊரிலே வசூல் பண்ணினோம். ஐயாயிரம் கூடத் தேறல்லே. கொஞ்சம் நெருக்கினால் இன்னும் இரண்டு, ஒண்ணு கிடைக்கும். பாக்கி…..”

அம்மாள் பதில் சொல்லவில்லை.

“உன்னைக் கேட்கலாமென்று எல்லாரும் அபிப்பிராயப் படுகிறார்கள். முழுக்கவே நீ கொடுக்கலாம். இந்தத் தொகை ஒண்ணும் உனக்குப் பெரிசில்லே!……. இந்த மாதிரி நல்ல காரியம் செய்யவேணுமென்று உனக்கும் ஆசையாயிருக்கும். என்ன, நான் சொல்கிறது?”

கிடைக்கப்போகும் பதிலுக்காகத் தன்னுள் சில விநாடிகள் தவித்தார். மாமா.

“மாமா, நான் சொல்றனேன்னு கோவிச்சிக்காதேங்கோ. இப்படியெல்லாம் தர்மம் செய்ய எனக்கு அதிகாரமில்லை!”

“என்னது!”

“ஆமாம். நாளைக்கே துரை வந்துடுவான். அவனண்டை வந்து கேளுங்கோ. மறுபேச்சுப் பேசாமல் கொடுத்துடுவான் !….”

“அவன் இனிமே வருகிறதாவது…….”

“ஏன் வரமாட்டான்?… நீங்கள் பார்த்துக் கொண்டேயிருங்கோ. திடீரென்று ஒரு நாளைக்குத் துரை வந்து மாமா என்று உங்களை அழைப்பான் !……. நான் ஏன் பகல் முழுக்க இந்த நாற்காலியோடு ஒட்டிக் கொண்டிருக்கேன்? துரை வாசற்படி ஏறி உள்ளே நுழைவதைக் கண்ணால் காண வேண்டும் என்பதற்காகத்தான்……… ராத்திரியில், கடைசி ரயில் ஊதிவிட்டுப் போய் அரைமணி நேரம் ஆகிறவரையிலும் வாசற் கதவைத் தாளிட மாட்டேன். அவன் வந்து வீட்டு வாசலில், தாழ்ப்பாளைத் தள்ளிக் கதவைத் திறக்கிற வரையிலும், காத்துக் கொண்டிருப்பதை என்னால் சகிக்க முடியாது ………”

பத்து நிமிஷம் கற்சிலை போல் அமர்ந்திருந்து விட்டு வெறுங்கையுடன் திரும்பினார், கிட்டா மாமா.

***

காலம் கடுகிச் சென்றது. கனகத்தின் உடல் தளர்ந்து கொண்டே வந்தது; உள்ளத்தில் பலம் ஏறிக் கொண்டே போயிற்று.

கிராமத்தினருக்கு அவளுடைய போக்கு பிடிபடவில்லை. ஆனால், அதைப் பற்றிக் கனகம் கவலைப்பட்டாளா? எப்போதும் போல்தான் மற்றவர்களுடன் பழகினாள். வீட்டைத் தேடி வரும் பெண்களுடன் சந்தோஷமாகப் பேசினாள். தன் வாழ்வில் எவ்விதக் குறையும் இல்லாத வளைப் போல், நிறைந்த வாழ்க்கையை அனுபவித்து விட்ட வளைப்போல் கலகலப்பாகப் பழகினாள். துரையைப் பற்றிக் கூட மற்றவர்களிடம் தானாகப் பேசி அவர்களுள் வெறுப்பை உற்பத்தி செய்வதில்லை!

வேலைக்காரி தினமும் காலையில் வருவாள். இயந்திரம் போல் வீட்டுக் காரியங்களைச் செய்வாள். கொல்லைத் தோட்டத்திலிருந்து புதிதாகக் கறிகாய் பறித்துக் கொடுப் பாள். இரவு ஏழு மணிக்கு வீட்டுக்குத் திரும்புகையில் சோறும் கறியும் குழம்பும் எடுத்துச் செல்வாள். எல்லாம் துரைக்காகச் செய்தவை!

வெளி விவகாரங்களைக் கண்ணப்பன் நிர்வகித்தான். கனகத்திடம் உண்மையான அனுதாபம், அவனுக்கு. எசமானியின் மனம் கோணாமல் நடப்பான். சின்ன எசமான் இருந்தாருன்னா, எவ்வளவு நல்லா இருக்கும்? என்று அவன் வருந்தாத நாளே இல்லை.

சிவன் கோவிலைப் பழுது பார்க்கக் கனகம் பணம் கொடுக்காததனால் கிட்டா மாமாவுக்கு அவளிடம் வருத்த மில்லை. அவளுக்கிருந்ததைப் போன்ற நெஞ்சுத் திடத்தை அவர் வேறு எந்தப் பெண்மணியிடமும் கண்டதில்லை. கனகத்திடம் பேசிவிட்டு வந்தபின், ‘என்றேனும் ஒரு நாள் துரை வந்தாலும் வரலாம்’ என்ற எண்ணம்கூட அவரிடம் இலேசாகத் தோன்றவாரம்பித்தது.

“எனக்கென்னமோ, துரை வந்துடுவான் என்றே படுகிறது” என்று, அண்டை வீட்டுக் குப்புசாமியிடம் சொன்னார்.

அவர் சிரித்தார். “போங்கோ , மாமா…….. இந்த ஜன்மத்திலே நடக்கிற காரியமா? தீவாந்திர சிட்சை என்கிறாப்பிலே இருபது வருஷம் ஓடிப் போயிடுத்தே ….”

மாமாவுக்குக் குப்புசாமியின் பேச்சை மறுக்க வேண்டும் போலிருந்தது. என்றாலும் தன் முடிவுக்குக் காரண காரியம் ஏதுமில்லை என்பதை அவரே உணர்ந்தார். ஆக்வே தலையை அசைத்து விட்டுப் பேசாமல் இருந்தார்.

எதிரே கண்ணப்பன் வந்து கும்பிடு போட்டான்.

“என்னப்பா?” என்றார், மாமா.

“அம்மாவுக்கு உடம்பு சொகமில்லீங்க…….”

“அருணாசலத்து வீட்டு அம்மாவுக்கா?”

“ஆமாங்க. ஒரு மாசமாவே ரொம்ப பலஹீனம். இன்றைக்குக் காலையிலேருந்து எளுந்திருக்கவே இல்லீங்க….”

“அடடே !… என்ன உடம்பு? ஜுரமா?”

“அதெல்லாமில்லைங்க. வயசாயிடிச்சு. சரியான சாப்பாடு இல்லே. மனோவியாதி….”

“சரி, நீ போ. நம்ம வீட்டுப் பொண்ணை அனுப்பி விசாரிக்கச் சொல்றேன்.”

கண்ணப்பன் நகர்ந்ததும் தன் பேத்தி சரோஜாவை அழைத்துக்கொண்டு கனகத்தின் வீட்டுக்குச் சென்றார், கிட்டா மாமா.

“எனக்கு ஒண்ணுமில்லே மாமா! ரொம்ப அசதி மாதிரி இருந்தது. படுக்கையிலேயே கிடந்தேன். கண்ணப்பன் பயந்து விட்டான் போலிருக்கு!………”

“சரோஜா வேணுமானால் இங்கே இருக்கட்டுமா? கூடமாட ஒத்தாசை செய்வாள் …”

“இப்போ எனக்கு என்ன வந்து விட்டது?…. வேணு மானால் சொல்லி அனுப்புகிறேன்!”

உலர்ந்து நின்ற அவளைப் பரிதாபத்தோடு பார்த்து விட்டு வீட்டுக்குத் திரும்பினார், மாமா.

அன்றைய தினம் சமையலுக்காக அடுப்பு மூட்டு கையில், முற்றத்தில் காகம் கரைந்தது. ராஜபவனியின் போது, எல்லாவற்றுக்கும் முன்னதாக சுபச்செய்தியைத் தெரிவிக்கும் சங்கொலி போல் கனகத்தின் செவிகளில் கேட்டது, அது. ஓடோடி வெளியே வந்து பார்த்தாள். முற்றத்தில் வெள்ளை எச்சம்!

கனகத்திற்கு உடல் பலஹீனம் பறந்து விட்டாற் போலிருந்தது. கொல்லைப் புறத்திற்குப் பாய்ந்து சென்று கீரைப் பாத்தியில் கைகளை ஓட்டினாள்.

பகல் மறைந்து இருள் விரிந்தது. துரை வரவில்லை.

வேலைக்காரி வீட்டுக்குப் போய்விட்டாள். பின் கட்டுக் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டு முன்பக்கத்து அறைக்கு வந்தாள், கனகம். வாசற் கதவைச் சாத்தியபோதுதான் தன் உள்ளச் சோர்வை அவளால் உணர முடிந்தது. இடை கழியிலேயே சிறிது நேரம் தயங்கி நின்றாள். பின், அறைக் குள் படுக்கையில் படுத்தபோது உடல் நிலைகொள்ளவில்லை; புரண்டாள். இந்த மண்ணுலகத்துடன் அவளைப் பிணைத் திருந்த ஏதோ ஒன்று அவளிடமிருந்து நழுவிக் கொண் டிருப்பதாகப் பட்டது. கடைசி ரயில் வருகிற நேரம்தான். சற்றைக்கெல்லாம் வாசற் கதவைத் தாளிட வேண்டுமே!”

என்ன காரணத்தாலோ கனகத்தின் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணீர் பெருகி தலையணையை நனைத்தது. அசையாமல் கிடந்தாள், அவள்.

எவ்வளவு நேரம் சென்றதோ, வாசலில் மாட்டுச் சலங்கையின் ஒலி கேட்டதும் கண் விழித்தாள், கனகம். ‘துரை வாசலில் காத்துக்கொண்டு நிற்கிறானோ?” சரேலென்று வாசற் கதவை நோக்கி நடந்தாள்.

அந்தப் பெருங் கதவை, வாசற் புறத்திலிருந்து, பூட்ஸ் அணிந்த காலொன்று படுவேகமாக உதைத்தது. அதன் வேகத்தைத் தடுத்து நிறுத்த முயன்றது, கனகத்தின் நெற்றி.

“ஐயோ , துரை ……..”

“அம்மா” என்று அலறியவன், கீழே விழுந்த அவளை அள்ளியணைத்தான். வெள்ளைச் சட்டை செஞ்சிவப்பாய் மாறியது.

“அம்மா, அம்மா !… இதோ, பாரேன்… உன் மகன்… நான்.”

கனகம் மலங்க மலங்க விழித்தாள். நெற்றிப் பொட்டில் செந்நீர் பெருகிக் கண்களை மறைத்தது. “துரை!” என்றாள், ஒடுங்கிய குரலில்.

தன் வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே மாட்டு வண்டியைப் பார்த்த கிட்டா மாமா குப்புவுடன் வந்து வாசலில் நின்றார் . “யாரு , துரையா!” என்றபடியே உள்ளே வந்தார். அரிக்கன் விளக்கின் மங்கலான ஒளியில், கனகத்தின் முகத்தில் ஜீவனுடன் விளங்கிய மென்னகை அவரைப் பார்த்துச் சிரித்தது. ‘துரை வந்துட்டான்!’ என்று அவர் செவியருகே கிசுகிசுப்பதைப் போலிருந்தது!

‘துரை, துரை’ என்று கிட்டா மாமா அலறியதையும் பொருட்படுத்தாமல், கால் சராய்க்குள் விட்ட கையும் குனிந்த தலையுமாய், இருண்ட தெருவில் அவன் நடக்கத் தொடங்கினான்.

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *