“நீட்டு கையை!”
பாலா பயந்தபடி கையை நீட்ட, படீரென்று பிரம்பால் ஒரு அடி. இடது கையை நீட்டச் சொல்லி இன்னொரு அடி. பாலாவின் கண்களில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொள்ள,
தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தன் மீதே ஆத்திரம் எழுந்தது பத்மாவதிக்கு. நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்ணுக்குக் கீழ் வாங்குகிற மாணவிகளைக் கண்டிப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் தொண்ணூறு மதிப்பெண் பெற்ற சிறுமி பாலாவைத் தண்டிப்பது என்ன விதத்தில் சரி?
“தொண்ணூறு மார்க் போதுமா? நிறைய வாங்கணும். நூற்றுக்கு நூறு வாங்கத்தான் உன்னை அடிச்சேன்!” என்று பாலாவிடம் வாய் சொன்னது. ஆனால், உண்மையில் அதுதான் காரணமா?
முந்தின நாள், சக ஆசிரியை ஜூனியட், ஸ்டாஃப் ரூமில் வேறு ஆசிரியை யாரும் இல்லாத சமயத்தில் சொன்ன விஷயம் காரணமாக இருக்குமோ?
“உங்க கிளாஸ்ல பாலா, பாலான்னு ஒரு ஸ்டூடெண்ட் இருக்காளே, அவ அம்மா அஞ்சுகம் ஒரு மாதிரிப்பட்ட பொம்பளை! தெனம் சாயங்காலம் ஆட்டோவுல கௌம்பு வாளாம். ஏதோ ஸ்டார் ஓட்டல்ல பார் டான்ஸ்’ ஆட்டமாம்.
வெறும் ஆட்டம் மட்டும்தானா? இல்லை, வேற எதுவும் நடக்குதோ என்னவோ? யாருக்குத் தெரியும்? நடு ராத்திரி கார்ல வந்து இறங்குவாளாம். இது குடித்தனக்காரங்க வசிக்கிற தெரு.
இங்கே நீ இருந்தா தெருவே நாறிடும், போயிடு! என்று அவ குடியிருக்கிற தெருக்காரங்க எல்லாரும் அவளை விரட்டி, மாசம் ஒரு தெருவா வீடு மாறிகிட்டேயிருக்கான்னா பார்த்துக்குங்க!”
“பத்மாவதிக்கு, கேட்கவே காது கூசியது. நெசமாவா?”
“இதுக்கே அதிர்ச்சியாயிட்டா எப்படி டீச்சர்? சொன்னாக் கோவிச்சிக்கக் கூடாது. நான் என் கண்ணால் பார்த்ததைத்தான் சொல்றேன். வந்து… வந்து… உங்க வீட்டுக்காரருக்கு அஞ்சுகம்
ரொம்பப் பழக்கம்..”
கண்களில் கோபத்தீ பறக்க, “ஜூனியட்! நீங்க என் சக ஆசிரியை ஆச்சேன்னு பாக்கறேன். என்கிட்டே வேற யாராவது இப்படிச் சொல்லியிருந்தால் நடக்கறதே வேற…!” என்று
சீறிவிட்டு வெளியே போனாள் பத்மாவதி.
அன்று மாலை பள்ளி முழ்்ததும் டவுன் பஸ்சில் ஏறி வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கையில் ஓடைப் பிள்ளையார் கோயில் ஸ்டாப்பில் பஸ் நிற்க, பஸ் நிறுத்தத்தில் தன் கணவர் அந்த
அஞ்சுகத்திடம் நின்று பேசிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.
அவர் தன் பர்ஸிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்ட, “தாங்க்ஸ்!” என்று அவள் அதைக் கைநீட்டி வாங்கியதைக் கண்டு அதிர்ந்து போனாள் பத்மாவதி.
வீட்டுக்கு வந்ததும் நிதானமாக யோசித்தாள். ஒரு வருடத்துக்கு முன் இதே தெருவில் ஒரு வீட்டில் குடியிருந்தவள்தான் இந்த அஞ்சுகம். அப்போதெல்லாம் அவள் என்ன வேலை செய்கிறாள்
என்று பத்மாவதிக்குத் தெரியாது. இவருக்கு அப்போது முதலே அவள் பழக்கமாகியிருக்கலாமோ என்று ஒருகணம் தோன்றியது.
இரண்டு மாதங்களாகக் கணவரிடம் தெரிந்த மாற்றங்கள் பத்மாவதிக்கு ஞாபகம் வந்தது. பணி ஓய்வு பெற்றதால் மாதாமாதம் அவரின் பென்ஷன் பணம், வங்கி வழியாக, அவருக்கு
வரும். அதில் மாதம் ஆயிரம் ரூபாய் தன் கைச்செலவுக்கு வைத்துக் கொண்டு, மீதியை மனைவியிடம் தந்து விடுவார். தினம் டவுன் பஸ்ஸுக்குச் செலவு செய்து நூலகம் போய்த் திரும்புவது, ஓட்டலுக்குப் போய் சில மாலை வேளைகளில் டிபன் காப்பி சாப்பிடுவது, சில வாரப் பத்திரிகைகள் வாங்குவது எல்லாம் அந்த ஆயிரம் ரூபாயில் தான். ஆனால் இந்த இரு மாதங்களாக அவர் நூலகத்துக்கு டவுன் பஸ்ஸில் போவதில்லை, நடந்தே போய் வருகிறார். வாரப் பத்திரிகைகள் வாங்குவதில்லை… அப்போ தன் பாக்கெட் மணியை அஞ்சுகத்திடம் தந்துவிட்டுத்தான் அவர் இப்படித் தன்னை வருத்திக் கொள்கிறாரா?
அன்றிலிருந்து அவரிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டாள் பத்மாவதி. அவருக்குத் தெரியாதா ஏன் என்று?
அன்று பஸ்ஸில் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த அவள், தான் அஞ்சுகத்திடம் ரூபாய் கொடுப்பதைப் பார்த்து விட்டதை அவரும் பார்த்தார். யார் அவள்? உங்களுக்கு அவள்: என்ன உறவு? ஏன் அவளுக்கு நீங்க பணம் தரணும்? என்று கேட்பாள், வீட்டில் பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனாள் அவர் மனைவி மௌனத்தையே தன் ஆயுதமாக ஏந்திப் போராட ஆரம்பித்து விட்டாளே!
ஆயிற்று.. இரண்டு மாத காலம் ஓடிவிட்டது.
மதுரையில் வாழ்க்கைப் பட்டிருக்கும் மகள் அனுஷ் பள்ளி விடுமுறையில் மகன் நவீனுடன் வந்திருந்தாள்.
ஒருநாள் கூட ஆகவில்லை. அவளுக்குப் பளிச்சென்று தெரிந்து விட்டது. அப்பாவும் அம்மாவும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லையென்று. “என்னப்பா, சின்னக் குழந்தைகள் டூ
விட்டுக் கொள்வதைப் போல ரெண்டு பேரும் பேசாம இருக்கீங்களே?” என்று அனுஷ் தந்தையைக் கேட்டே விட்டாள்.
“என்னத்தைம்மா சொல்லுவேன்? அஞ்சுகம்னு ஒரு பொண்ணு. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஓட்டல்ல டான்ஸ் ஆடிப் பிழைச்சுகிட்டிருக்கா. ராத்திரியில ஓட்டல்ல டான்ஸ் ஆடற
பொண்ணுன்னாலும் நெருப்பா வாழ்ந்து தன் மகள் பாலாவைக் காப்பாத்திக்கிட்டிருக்கு. அந்த பாலா உங்கம்மாகிட்டேதான் ஸ்கூல்ல படிக்குது. ரொம்பக் கெட்டிக்காரப் பொண்ணு. ஒருநாள் யதேச்சையா வழியில் அஞ்சுகத்தைப் பார்த்தேன். தன் மகள் பற்றி விசாரிச்சா. பேச்சோட பேச்சா, சொல்றேனேன்னு தப்பா நினைக்காதேம்மா! உன்னைப் பத்திக் கேள்விப்பட்டேன். கேட்கவே கஷ்டமா இருக்கும்மா. சமுதாயத்துல ஓட்டல்ல டான்ஸ் ஆடற பொண்ணுன்னாக் கேவலமான பொண்ணுன்னு தான் நினைக்கிறாங்க. தயவுசெஞ்சு உன் மகளுக்காகவாவது இந்தத் தொழிலை மாத்திக்க முடியாதா? ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து இதை நான் சொல்றேன்னு சொன்னேன்!”
“இல்லீங்கய்யா, நான் எவ்வளவோ முயற்சி செஞ்சு பார்த்துட்டேன். வீட்டுக்கு வாடகை தரணும். கஞ்சியோ கூழோ தினமும் பசிக்கிற வயித்துக்குக் கொட்டணும். அப்புறம் என் மகள்
படிப்புக்கு ஆகிற செலவு வேற. எனக்குத் தெரிஞ்ச வேலை இது. அங்கே இருக்கிற ஆட்கள் என்னைத் தெரிஞ்சவங்க. இவ டான்ஸ் மட்டும்தான் ஆடுவா, வேற எந்தக் கெட்ட வழிக்கும் வர
மாட்டான்னு புரிஞ்சவங்க. வேற வேலை செய்யலாம்னு பார்த்தா எனக்குக் கிடைக்கிற வேலை, பீடி சுத்தறது, பூ கட்டறது, கொல்லத்து மேஸ்திரிக்குச் சித்தாளாப் போறது, கொஞ்சம்
நாசூக்கா ஜவுளிக் கடை வேலைக்குப் போனா, கடை முதலாளி வாயேன், ஜாலியா டூர் போயிட்டு வரலாம்கிறான். இப்பப் பார்க்கிற வேலை, பார்க்கிறவங்க கண்ணுக்குக் கேவலமா
இருந்தாலும் மானமா நான் பிழைக்கிற சூழல்லதான் இருக்குதுங்க ஐயா!”
“நீ சொல்றது எனக்குப் புரியுதும்மா. ஆனா, உன் மகளோட எதிர்காலம்னு ஒண்ணு இருக்குல்ல. அவளை நாளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அவள் எந்தச் சங்கடமும்
இல்லாம வாழணும் இல்லியா? நான் ஒரு ஐடியா சொல்றேன், கேப்பியா? உன் மகள் படிப்புக்கும் உன் குடும்பத்துக்கு உதவியா நான் மாசம் ஆயிரம் ரூபாய் தர்றேன். நீயும் இந்த ஓட்டல்
வேலைக்குத் தலை முழுகிட்டு, வீட்டில் இருந்தபடியே சிறு சிறு வேலைகள் செஞ்சு சம்பாதிச்சுக் குடும்பத்தை நடத்து. உனக்கே என் பண உதவி போதும்னு சொல்கிற வசதி எப்ப வருதோ, அப்ப சொல்லு. பணம் தர்றதை நான் நிறுத்தறேன். ஆனால் எக்காரணம் கொண்டு சமுதாயம் கேவலமாப் பார்க்கற நைட் கிளப் டான்ஸர் வேலைக்கு இனிமேப் போக மாட்டேன்னு எனக்கு நீ சத்தியம் பண்ணிக் கொடுன்னேன். கால்ல விழுந்து அழுது சத்தியம் பண்ணினா.
ஆம்பளைத் துணை இல்லாத ஒரு நல்ல பெண் நேர்மையா உழைச்சு வாழ்ந்தாலும் அவ பார்க்கிற வேலையை வெச்சு அவளைக் கெட்டவள்தான்னு இந்த உலகம் எடைபோடுது,
கேவலமாப் பேசுது. ஊர் உலகத்தையெல்லாம் மாத்தறது என் வேலையில்லை. கண்ணுக்கு முன்னால் நடக்கிற ஒரு கொடுமைக்கு நாம் சிறு உதவியாச் செஞ்சு அந்தக் குடும்பத்துக்கு
வெளக்கேத்தலாமேன்னு நினைச்சேன், அவ்வளவுதான்!
அப்படி ஒருநாள் அஞ்சுகம் என்கிட்டே பணம் வாங்கியதை உன் அம்மா பார்த்து விட்டாள். அவளுக்கு என் மேல் சந்தேகம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். அன்னிலேர்ந்து உன் அம்மா என்
முகத்திலேயே விழிக்கறதில்லேம்மா. ஏன் நான் அவளுக்குப் பணம் கொடுத்தேன்னு என்கிட்டே அவள் கேட்டிருந்தாப் போதும், நான் உண்மையைச் சொல்லியிருப்பேன். ஆனா, ஒரு
வார்த்தை கூடக் கேக்கலையேம்மா. குற்றவாளின்னு தீர்மானிக்கிற உரிமை அவளுக்கு இருக்கு. நிரபராதின்னு சொல்ல எனக்கு ஒரு வாய்ப்புத் தரலையேம்மா!” குரல் கம்மச் சொன்னார் அவர்.
“நீங்க அம்மாகிட்டே சொல்லிட்டே அஞ்சுகத்துக்குப் பண உதவி பண்ணியிருந்தா சந்தேகம் வந்திருக்காது, இல்லியாப்பா? என்ற மகளுக்கு, இல்லைம்மா. பணத்தை வீணாச் செலவழிக்கிறது உங்க அம்மாவுக்குப் பிடிக்காது. அவ மறுத்துட்டாள்னா அப்புறம் நான் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த வார்த்தையை மீற வேண்டியிருக்கும். அது தர்மமா?” என்றார் அவர்.
கர்ச்சீப்பில் தலைவலித் தைலம் தடவி அதைச் சற்றைக்கொரு தரம் மூக்கில் வைத்து இழுத்தபடி ஈஸிசேரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பத்மாவதி. பாலைக் காய்ச்சி டபரா டம்ளரில்
விட்டு ஆற்றியபடி அனுஷ் அருகில் நின்றாள்.
“அம்மா, பால் சாப்பிடும்மா!” என்றாள். பின்பு தணிந்த குரலில், “ஆனாலும் அம்மா, நீ அப்பாவிடம் இப்படி விரோத பாவம் காட்டுவது ரொம்ப அநியாயம்..” என்றாள். தாயின் முகம்
சுருங்கியது.
“அனுஷ், நீ சின்னப்பெண். உனக்கு நடந்தது ஏதும் தெரியாது..”
“இல்லேம்மா.. அப்பா எல்லாத்தையும் சொல்லிட்டார். நீதான் தப்பா நினைச்சு அவர் மனசை நோக அடிச்சுகிட்டிருக்கே..”
பத்மாவதி அவளைப் பார்த்து முறைத்தாள்.
“இல்லேம்மா. ஒரு பெண் மானமா சமூகத்துல வாழறதுக்கு அப்பா தன் பாக்கெட் மணியைத் தியாகம் செய்திருப்பது சாதாரண விஷயமா என்ன? அந்தப் பெண்ணிடம் அப்பா பணம்
கொடுக்கும்போது பார்த்த நீ அப்பாவிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே.. ஏன் கேட்கலை?”
சற்று தூரத்தில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவர் தன் மகள் அனுஷ் தாயிடம் தனக்காகப் பரிந்து வாதாடுவதைக் கேட்டார். இதற்கு பத்மாவதி என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று காதைத் தீட்டிக் கொண்டார்.
பத்மாவதி தன் மகளை ஆழமான பார்வையால் ஊடுருவினாள்.
“அனுஷ்! உன் அப்பா மேல் சந்தேகம்னு ஏன் நீயாக் கற்பனை பண்ணிக்கிறே? அவர் இன்னொரு பெண்ணுடன் தப்பாப் பழகறார்னு அந்தக் கடவுளே நேரில் வந்து சொன்னாலும் நான்
நம்ப மாட்டேன்!” என்றாள்.
“அம்மா!…”
“எனக்கு அவர் மேல் சந்தேகமில்லை. கோபம்தான். நான் வேலை பார்க்கிற ஸ்கூலில் ஒரு டீச்சர், அந்தப் பெண்ணுடன் இவர் பேசி நின்றதைத் தப்பாச் சொன்னப்ப எனக்குக் கோபம் வந்தது உண்மைதான். கணவர் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவரிடமும் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்கக் கூடாது என்பது வாழ்க்கைக்கு ரொம்பவும் அடிப்படை.
இவர் இதை என்கிட்டே முன்கூட்டியே சொல்லியிருந்தால், வெளியிடங்களில் அவளைச் சந்திக்கிறதை விட்டு நேரடியாக நம் வீட்டுக்கே வரச்சொல்லிப் பணம் கொடுத்து அனுப்பி
இருக்கலாம். நான் ஏதோ தப்பா நினைச்சுக்குவேன்னு நினைச்சு என்கிட்டே மறைச்சுட்டாரு. பாக்கறவங்களுக்குக் கேவலமாப் போச்சு.
அநாவசியமாக் காசு செலவழிக்கிறது எனக்குப் பிடிக்காதுதான். ஆனால் இது சாதரண விஷயமா என்ன? ஒரு ஏழைப் பெண்ணின் மானத்தைக் காப்பாற்றி, அவள் சமுதாயத்தில் மரியாதையோடு வாழ உதவுவது எல்லோராலும் முடியுமா? என் கணவர் உசந்த மனுஷர்! அவர் செய்து தனக்குத் தேடிக்கொண்ட புண்ணியத்தில் எனக்குப் பங்கு தராமல் எப்படி ஒதுக்கலாம்? அதுதான் எனக்குக் கோபம்!” என்றாள் பத்மாவதி.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவள் கணவர் எழுந்து வந்து அவளின் தோளைப் பற்றி, “ஸாரி பத்மா..” என்று மேலே பேச முடியாமல் நா தழுதழுத்தார்.
“இல்லீங்க நானும் கொஞ்சம் கடுமையாத்தான் நடந்துக்கிட்டேன். என்னை நீங்களும் மன்னிக்கணும் என்ற பத்மாவதி, சரி, சரி! அந்தப் பெண்ணை இனிமே நேரா நம் வீட்டுக்கே வந்து
தேவைப்பட்ட பணத்தை வாங்கிக்கச் சொல்லுங்க. நீங்க உங்க பாக்கெட் மணியை வழக்கம்போல உங்க செலவுகளுக்காகவே வெச்சுக்குங்க…” என்று கனிவுடன் கூறினாள்..
தங்கள் நெஞ்சில் இதுநாள் வரை நெருடி வந்த முள் அகன்ற சுகத்தில் தம்பதியர் முகம் மலர்ந்து சிரிக்க, அவர்களை அணைத்து மகிழ்ந்தாள் அவர்களின் செல்ல மகள் அனுஷ்.
(ஆனந்த விகடன் வார இதழ்)
இந்தக் கதை கொஞ்சம் யதார்த்த மீறலோ எனத் தோன்றுகிறது. ஆனால் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. தெளிவான கதையோட்டம். தி.தா.நா.