போதி மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 5,879 
 

ஆபீசை விட்டு வெளியே வந்ததும் என் கால்கள் அந்தப் பெட்டிக் கடைக்கு என்னை இழுத்துச் சென்றன.

ஒரு டீ, ஒரு சிகரெட், என் தினசரி சாயந்தர வழக்கங்களில் ஒன்று. ஆத்மா அப்போதுதான் திருப்தி அடைவது போல ஒரு எண்ணம். கடையருகில் செல்லும்போதே மணி என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தான். மணி அந்தக் கடையின் ஓனர். சுமார் நாற்பது வயதிருக்கும். ஒரு புன்னகையால் யாரையும் சட்டென்று சிநேகப்படுத்திக் கொள்ளும் களையான முகம்.

“வாங்க சார்! இந்தாங்க பில்டர்! டீ இதோ போடறேன்” என்று சொல்லி ஒரு சிகரெட்டை என் கையில் கொடுத்தான். நானும் அதைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்து நெஞ்சில் புகையை நிரப்பிக் கொண்டேன்.

“இந்தாங்க டீ. சார், ஒண்ணு கேக்கறேன் தப்பா எடுத்துக்காதீங்க. ஒரு நாளைக்கு எத்தனை தம் போடுவீங்க?”

“ ஒரு மூணு அல்லது நாலு ”

“எனக்கு கணக்கே இல்லை சார். பத்து பதினஞ்சுனு போவுது” என்று சொல்லி கொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

“கடைல ஒக்காந்து தம்மடிக்காதே மணி” என்றேன்.

“விட்ருவேன் சார் கருமத்தச் சீக்கிரமே”

எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. “சரி நாளைக்குப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

வீட்டுக்குச் செல்லும்போது யோசித்துக்கொண்டே சென்றேன். நானும் இந்தப் பழக்கத்தை விட வேண்டும் என்று ரொம்ப நாட்களாக முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. அட்லீஸ்ட் இப்பவாவது ஒரு effort எடுத்து விட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீடு போய் சேர்ந்தேன்.

வீட்டுக் கதவைத் திறந்த மனைவி, என்னிடமிருந்து வந்த வாசனையைத் துல்லியமாக அறிந்து கொண்டாள். முகத்தைச் சுளித்தாள்.

“சீக்கிரம் போய் face wash பண்ணிக்கிட்டு வாங்க.”

சரியென்று தலையாட்டிவிட்டு பாத்ரூமிற்குள் சென்றேன்.

இரவு அவள் என்னுடன் சரியாகப் பேசவில்லை. அந்தப் பக்கம் திரும்பிப் படுத்து கொண்டு தூங்கி விட்டாள்.

மறு நாள் காலை ஆபீஸ் கிளம்புமுன் “ இன்னைக்கு சாயந்தரம் நானும் அபர்ணாவும் (என் பெண்) உங்க ஆபீஸுக்கு வர்றோம். அங்கிருந்து கொஞ்சம் வெளில போகணும் பர்சேஸ் பண்ண” என்றாள்.

அவள் பேசிய சந்தோஷத்தில் தலையை ஆட்டிவிட்டு ஆபீஸ் சென்றேன்.
சாயந்திரம் சொன்ன படியே ஐந்து மணி சுமாருக்கு போன் செய்தாள். “உங்க ஆபீஸ் வாசல்ல தான் இருக்கோம். சீக்கிரம் வாங்க”

ஐந்து நிமிடத்தில் வெளியே வந்த நான் அவர்களைக் கூட்டிக்கொண்டு ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தேன். அப்போது மணி கடையைக் கடக்க வேண்டி வந்தது. வாய் நமநமத்தது. அடக்கிக் கொண்டேன்.

“வணக்கம் சார்” மணி உரத்த குரலில் சொன்னான்.

“வணக்கம் மணி. பேமிலி வந்திருக்காங்க. வெளில போறோம்” டீ சிகரெட் வாங்காததற்கு அவன் கேட்காமலேயே விளக்கம் சொன்னேன்.

“சரி சார்” என்றான். அப்போதுதான் நான் அந்தச் சிறுவனை கவனித்தேன்.

“என் மகன் சார்” மணி சொன்னான்.

“ அப்படியா? நல்லது. என்ன படிக்கறான்?”

“எட்டாவது படிக்கறான் சார்.”

“நல்லா படிக்கணும் தம்பி” என்று சொல்லி நான் அவன் பக்கம் திரும்பியபோது தான் பார்த்தேன் அவன் என் மகளையே வைத்தக் கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
நான் கவனிப்பதைப் பார்த்து அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். நாங்கள் சட்டென்று அங்கிருந்து நகர்ந்தோம்.

என் மனைவிக்கு ரொம்ப கோவம். “ என்னங்க அந்தப் பையன் நம்ம அபர்ணாவ அப்படிப் பார்க்கறான்? முன்ன பின்ன பொம்பளப் பிள்ளைங்கள பாத்ததில்லையா?” என்று வெடித்தாள்.

“நான் நாளைக்கு அவன் அப்பாகிட்ட சொல்லிக்கறேன்.” என்று அபர்ணாவைப் பார்த்தேன். அவள் முகம் வாடியிருந்தது.

மறுநாள் மணியிடம் இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் டீ சிகரெட் உந்துதலை விட அதிகமாக இருந்தது. கடை அருகில் சென்றபோது தான் கவனித்தேன் கடை மூடியிருந்தது. சரியென்று வேறு கடைக்குச் சென்று என் மாலைக் கடமைகளை முடித்தேன்.

அப்புறம் இரண்டு வாரம் வரையில் மணி கடை திறக்கவில்லை. பக்கத்துக் கடையில் கேட்டால் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள். வேறு விவரம் எதுவும் அவர்களுக்கும் தெரியவில்லை.

இரண்டு வாரம் கழித்து ஒரு மாலை நேரம் ஆபீசிலிருந்து வெளியே வந்தபோது கடை திறந்திருந்தது. சரி மணி எப்படி இருக்கிறான் என்று கேட்பதற்காக சென்றால், அங்கே அவன் இல்லை. அவன் பிள்ளை மட்டும் இருந்தான்.

என் பெண் விஷயமாக அவனைக் கேட்கலாம் என்று நினைத்து அவன் முகத்தைப் பார்த்தால், அது வாடியிருந்தது. “வாங்க சார்! டீயா?” என்று கேட்ட அவனிடம் “மணி எங்கடா? இப்ப ஒடம்பு பரவாயில்லையா” என்று பதில் கேள்வி கேட்டேன்.

“எங்க அப்பா செத்திட்டாரு சார்” என்று அழ ஆரம்பித்தான். அவனை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டபோது தான் தெரிந்தது மணிக்கு கேன்சராம்! அது முற்றிய நிலை என்று செக்கப் சென்ற போதுதான் தெரிந்தது. என்ன செய்தும் காப்பாற்ற முடியவில்லையாம்.

“விட்ருவேன் சார் கருமத்தச் சீக்கிரமே” என்று மணி என் நினைவில் சிரித்தான். கொஞ்சம் சமாதானமான பையன் டீயைத் தந்தான். “சிகரெட்?” என்று கேட்ட என்னைப் பார்த்து “இல்லை சார்” என்றான். ஆனால் என் கண்கள் அவன் கடையில் செய்தித்தாளுக்கு அடியில் வைக்கப் பட்டிருந்த பில்டர் சிகரெட் பாக்கெட்டைப் பார்த்து விட்டது. நான் ஒன்றும் சொல்லாமல் டீ குடித்து விட்டு, அதற்கான காசைக் கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

பக்கத்தில் இருந்த இன்னொரு கடையில் பில்டர் வாங்கி பற்ற வைத்தேன். அதில் ஒரு இழுப்பு இழுப்பதற்குள் மணி பையன் என்னிடம் ஓடி வந்தான்.

“சார் மன்னிச்சுருங்க சார்! நா வேணும்னே தான் சிகரட் தரல. என் அப்பா இந்தச் சிகரெட்டால தான் செத்தார். ஸ்கூலுக்குப் போயிட்டிருந்த நான் இப்ப வேலை செய்ய வேண்டிய கட்டாயம். மனசு ரொம்ப நோகுது சார். ஆனா நாங்க எல்லாம் கஷ்டத்துக்குப் பழகினவங்க. இதுவும் எனக்குப் பழகிப் போவும். ஆனா உங்க வீட்டுல அப்படி இல்ல சார். அன்னிக்கு உங்க மகளப் பார்த்து நான் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப பயந்த சுபாவம் போல. உங்க மேல ரொம்ப பாசம்னும் தெரிஞ்சுக்கிட்டேன். பாவம் சார்! எங்க அப்பாக்கு ஆன மாரி ஒங்களுக்கு எதுனாச்சியும் ஆச்சுனா அந்தப் பொண்ணு தாங்காது சார்! அத மனசுல வச்சுக்கிட்டுத்தான் சிகரெட் இல்லேன்னு சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க சார்” என்று கலங்கிய குரலில் சொன்னான்.

என் கையில் இருந்த சிகரெட் கீழே விழுந்தது.

அன்று வீட்டுக்கதவைத் திறந்த மனைவி முகம் சுளிக்கவில்லை. ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“அபர்ணா” என்று கூப்பிட்டேன். “என்னப்பா?” என்று வந்த மகள், என் முகத்தைப் பார்த்து “ என்னப்பா ஏதோ வித்தியாசமாத் தெரியற!” என்றாள்.

“ஆமாண்டா! இனிமே எல்லாம் சேஞ்தான்” என்று பெருமையாகச் சொல்லி மனைவியைப் பார்த்தேன். அவள் கண்களில் நன்றி.

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *