போதி குளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 13,755 
 
 

‘த்ரில்’ என்ற வார்த்தை பரிச்சயமானது என்றாலும், அவள் அதை அனுபவித்தது ஒரு வாரமாகத்தான்!

இடதுபுற கண்ணாடி தடுப்பின் பின்னே கை நீட்டி அள்ளிவிடலாம் போல பஞ்சாக மேக மெத்தை. கன மேகங்களை ஊடுருவி விமானம் பறக்க, நேர்ந்த அதிர்வும்கூட ஒரு த்ரில்தான்.

அவளது வலதுபுறம், கோவா நகரின் மேப்பை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்த ஆறடி ஆண் & அவள் கணவன் & நான்கே நாட்களுக்கு முன்பு அவளுக்குத் தாலி கட்டியவன்!

பவித்ரன் & அவன் பேரை நினைத்ததுமே இனித்தது. தன்னை மீறி புன்னைகைத்தாள்.

“என்ன நீலு.. ஹனிமூன் கற்பனையா?” இவளது தோளுக்கு சரிந்தான்.

“ஐயோ.. பார்க்கப் போறாங்க.”

“யாரு? அவங்கவங்களுக்கு அவங்கவங்க வேலை.. நமக்கு இது’’ & குனிந்து அவளது கன்னத்தில் முத்தமிட, குறுகினாள்.

“இதப் பார் ஹனி. நாம கோவா போறதே ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும்னு தான். விசா கிடைச்சு, நீ அமெரிக்கா வர மூணு மாசங்கூட ஆகலாம். இப்ப குறுக்கீடுகள் இல்லாம நாம பேசி பழகிக்கணும். ரைட்?”

“எங்க வீட்டு வளர்ப்பு ஒரு கால் நூற்றாண்டு பின்னே.. நீங்க அரை நூற்றாண்டு முன்னே இருக்கீங்க..”

“முக்கால் நூற்றாண்டு பிளவா?’’ நெற்றியை யோசனையாக நீவினா-ன்.. “ஒரே வாரத்துல சரி பண்ணிடலாம் ஹனி..”

தான் தேறுவோமா என்ற சந்தேகத்துடன் அவனை ஏறிட்டாள். ‘‘என்ன நீலு.. இப்படி பப்பி டாக் போல பாக்கற? உன்னைப் பிடிச்சு தான், நான் மனைவி ஆக்கிட்டேன். எங்க வீட்ல அத்தனை பேரையும் அசத்திட்ட டார்லிங். உன் சமையல், சிரிப்பு, குங்குமக் களை, பாட்டு.. எல்லாம் கொண்டு பலமாய் பாலம் போட்டுட்டியே.. பிறகென்ன?”

இனி எது எப்படியென்றாலும் இவள் வாழ்வு அவனோடுதான். அயல்தேச எம்பஸியில் வேலை பார்த்த பவித்ர னின் அப்பா ஓய்வு பெற்றுவிட, அவர் களது குடும்பம் தாய்நாடு திரும்பி விட்டது. சில வருடங்கள் கழித்து அவனுமே இந்தியாவில்தான் வாழ்வு அமைப்பான் என்றதால் இவர்கள் வீடு சம்மதித்து விட்டது. ஆனால், அயல்தேசத்தில் வளர்ந்தவனுக்கு ஏற்றாற்போல தான் இருக்க வேண்டுமே.. அது சற்று திகிலான சந்தேகம்தான்.

நீள விரித்து காயவைத்த சேலையாக கீழே கடல் தெரிந்தது.. பச்சைக் கலந்த நீலத்தில் மின்னல் தெறிப்புடன்.

‘‘ஹையோ.. என்ன அழகுல்ல?” -& வாய் பொத்தி வியந்தான்.

‘‘உனக்கு தண்ணி பிடிக்குமா?”

புரியாமல் விழித்தாள்.

‘‘அருவி, குளம், கடல் இப்படி.. ஐ லவ் டு ஸ்விம். உனக்கு?’’

‘‘அருவி, ஆறு எல்லாம் ரம்மியந் தான். தலை நீட்டலாம், துணி துவைத்து, கால் நனைக்கலாம்.. ஆனால், நீச்சல்.. ம்ஹ¨ம்..”

‘‘கத்துக்கோ.. ரொம்ப ரிலாக்ஸிங்.”

‘‘நேத்துதான் கார் ஓட்டப் பழகிக் கோன்னீங்க..’’

‘‘அது அவசியம் நீலு.”

‘‘நான்.. அத்தனை தைரியமில்லை..’’

‘‘காரோட்ட கொஞ்சம் பொறுமையும் நிறைய பழக்கமும் போதுமே.. தவிர, அமெரிக்காவில் பஸ், ஆட்டோவெல்லாம் கிடையாது. ஷாப்பிங், பார்லர், ரெஸ்ட்டரன்ட் எல்லாம் குறைஞ்சது இருபது மைல் தொலைவில்தான்.’’

‘‘நீங்க இல்லாம நானேன் அங்கெல்லாம் போறேன்?’’

‘‘நான் காலை ஏழரைக்கு ஆபீஸ் கிளம்பிடுவேன். ஒரு மணி நேர ட்ரைவ். அப்பதான் அங்கே காலை பலகாரம்கூட சாப்பிடறது..”

‘‘கார் ஓட்டிட்டேயா?”

‘‘சிக்னலுக்கு நிற்போமே & அப்பதான் பேப்பரும் வாசிச்சுக்கறது!’’

‘‘மெஷின் வாழ்க்கை..’’ ‘‘அதான்.. ரெண்டு வருஷங்களில் நம்ம நாட்டுக்குத் திரும்பிடறோம். அதுக்குள்ளே உனக்கேதும் கோர்ஸ் படிக்கணும்னா பயன்படுத்திக்கோ. இல்லை, சின்னதாக ஒரு வேலை..’’

‘‘வேலையா?’’

‘‘சம்பளம் குறைஞ்சது ஆயிரத்து ஐநூறு டாலர் கிடைக்கும். ‘நான் மாசம் அரை லட்சம் சம்பாதிக் கறேன்’னு இங்கே வந்த பிறகு நீ பீற்றிக்க வசதி.’’

மாறப் போகும் வாழ்வு பிரமிப்பு தந்தது.. த்ரில்!

ஆனால், அதில் தான் பொருந்துவோமா என்ற திகிலும் இழைந்து கிடந்தது.

‘‘சரி.. ஆனால், ஏன் நீச்சல் கத்துக்கணும்.’’

‘‘நம்ம வீட்டிலேயே நீச்சல் குளம் இருக்கே..’’

‘‘நிஜம்மா?”

‘‘அஞ்சாறு வீடுங்க சேர்ந்தது ஒரு காண்டிமினியம்.அதற்கும் பொதுவாக ஒரு நீச்சல் குளம்.’’

‘‘நாம நீந்தறப்போ பக்கத்து வீட்டுக்காரங்களும் இருந்தா?’’

‘‘சேர்ந்து நீந்தலாம்.. நீச்சல் போட்டி’’ & கண்களை உருட்டினான். ‘‘நீங்க செய்ங்க எல்லாம். நான் உங்களுக்கு எண்ணெய் தடவி, நீவி விடறேன்.’’

அவன் மோவாய் உயர்த்தி பெரிதாக சிரித்தான். ரோஜா உதடுகளுக்கு நடுவே தந்த வளையம்போல பளீரிட்ட பற்களை மனசு துள்ள பார்த்தாள்.. த்ரில்!

‘‘அசட்டு நீலு.. நா எண்ணெயோட குளத்துல இறங்கினா என்னை ஸ¨ பண்ணிடுவான். அபராதம் அல்லது ஜெயில்!’’ & அவன் சொன்னதும்.. திகில்!

கோவாவில் ‘டாஜ் வில்லேஜ்’ போகும் வழியி லேயே டவுனில் அவன் தேடி அவளுக்காக ஒரு நீச்சல் உடையை வாங்கிக் கொண்டான். மறுக்கும் துணிவின்றி அசட்டு முழிப்புடன் நின்றிருந்தாள்!

‘வரதட்சணை எதிர்பார்க்கலை.. பண்பும் இனிமையு மான பெண் வேண்டும்’ என்ற இந்த வரன் வந்தபோது வீடு ஆவலானது. விசாரித்து திருப்திபட்டதோடு, மேற்படிப்பை முடிக்க பவித்ரன் மறு மாதம் அமெரிக்க பறக்கவேண்டும் என்பதால், சொடக்கிடும் நேரத்திற்குள் நிச்சயமுமானது. கம்ப்யூட்டர் திரை மூலம் பரிச்சய மானார்கள் இருவரும். தொடர்ந்ததெல்லாம் தித்திப்பு தான்!

ஆனால், வேற்று கிரகம் போலத் தோன்றக்கூடும் அயல்மண்ணில் தான் ஒன்ற முடியுமா? பரவசத்திற்கும் பதட்டத்திற்கும் நடுவே அலை மோதினாள்.

வெல்கம் பானத்தை உறிஞ்சியபடி கடற்கரையில் நின்றார்கள். அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆழமற்று, செல்ல அலையடித்தது ஆழி.

‘‘வாவ் ஹனி.. குளிக்கலாமா?’’

‘‘கால் மட்டும் காட்டறேன்..’’

‘‘அது மெரினாவில்.. இங்கே குளிக்கலாம்.. ஆபத்தில்லை, அழுக்கில்லை.’’

‘‘சேலையோடத்தான்?’’

‘‘அது ராமேஸ்வரத்தில்!’’

அங்கு சோம்பலாய் திரிந்த, படுத்திருந்த சிலர் இருந்தது நீச்சல் உடையில்தான். குறுகுறுப்பாகப் பார்த்தாள். சினிமாவில் இதுபோன்ற காட்சியில்.. ‘ஐய.. கர்மம்’ என்று பாட்டி சீற.. இவள் முகம் திருப்பிக் கொள்வாள். இங்கு அந்த உடை விகல்பமாக தோன்றவில்லை.

‘‘ரூம் போய் ட்ரஸ் மாத்திட்டு வரலாம் பேபி!”

‘‘நாளைக்கு.. இப்ப டயர்டாய் இருக்குது..”

ஒரு கணம் அவளையே பார்த்தவன் புன்னகைத்தான் & ‘‘உன் இஷ்டம் நீலு.”

நெகிழ்ந்தாள்.. தானும் ஏன் அவன் இஷ்டத்துக்கு சற்று வளையக் கூடாது? மதியம் அவன் கண்ணயர்ந்த தும், உடம்பு கழுவி நீச்சலுடைக்குள் நுழைந்தாள். குளியலறை கதவின் பின்புறமிருந்த முழுநீளக் கண் ணாடியில் ஒரு புது நீலு சிக்கெனத் தோன்றினாள்!

அந்தப் பளீர் நீல உடை அவளது வளைவுகளில் மென்மையாகப் பொருந்தியது. கை, காலை வீசிப் பார்க்க சிறகு போலிருந்தது.

பெரிய டவலால் உடலைப் போர்த்திக் கொண்டு கிளம்பினாள். இந்தப் புது வாழ்வில் பொருந்துவதற்கு, இது, தான் வைக்கும் முதல் அடி என்று தோன்ற.. மனம் விம்மியது.

ஓட்டலின் புல்தரையைக் கடந்து நீல நிறக் குளத்தை அடைந்தவள், அதைப் பார்த்தபடி நின்றாள். அங்கு கூட்டம் இல்லை. இருந்த வெகு சிலரும் இவளைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

ஆழ மூச்செடுத்து தன் துவாலையை உருவி விலக்கியபோது கூச்சம் அவளைப் போர்த்தியது. குன்றினாள். எவர் கண்ணும் அவளைக் கூறு போட வில்லை. பொடி நீல டைல்கள் பதித்த படிகளில் இறங்க, நீர் வெதுவெதுவென்று அவளைச் சுற்றியது.

ஆசையாக முன்னேறினாள்.

‘‘மேம், கான் யு ஸ்விம்?’’ & அருகிலிருந்த ஓலைக் கீற்று கொட்டகைக்குள்ளிருந்து கேள்வி வந்தது. பளீர் மஞ்சள் சட்டையில் ‘ஃலைப் கார்ட்’ என்ற சிவப்பு எழுத்துக்களுடன் இருந்த தலை நரைத்த ஒருவர் இவளிடம்தான் கேட்டிருந்தார்.

‘‘நோ’’ & தலையசைத்தாள்.

‘‘அப்ப.. நீங்க அந்த கோட்டைத் தாண்ட வேண் டாம். ஆழம் அதிகம்.’’

போர்த்துக்கீசிய ஆங்கிலத்தில் புன்னகையுடன் எச்சரித் தார். முறுக்கிய வெளுத்த மீசையின் இருபுறமும் பளபளவென்ற சிவந்த கன்னங்கள் திரண்டன.

‘‘தாங்க்ஸ்.’’

இடுப்பளவு நீரில் அமிழ்ந்து அளைந்தாள்.

நான்கு குழந்தைகள் ஓடி வந்து ‘தொப்’பென நீரில் குதித்து, தலை மட்டும் தெரிய மீன் குஞ்சுகளாக குளம் முழுக்க நீந்தின. ‘‘ஹாய்’’ என பெரியவரைப் பார்த்து சிநேகக் கூச்சலிட்டனர். அவரும் கையாட்டி விட்டு குளத்தை கவனித்தபடி நிற்க, நீலுவிற்கு உதவி இருக்கும் துணிவு சேர்ந்தது.

அந்தப் பிள்ளைகளைப் போல கால் கைகளை அடிக்க, அசைக்க முயற்சித்தாள். மொத்த உடம்பும் கனமாக நீருக்குள் அமுங்கியது. உதறிக் கொண்டு காலூன்றி னாள். பழரசம் பருகியபடி அமர, காளான் வடிவ சிமென்ட் இருக்கைகள் குளத்தினுள்ளேயே நின்றன. அதைப் பற்றியபடி கால்களை மாறி மாறி உதைத்தாள்.

அடிவயிறோடு சேர்த்து இழுத்தாலும் மூழ்கிப் போகும் சோதனை இல்லை. இருபது நிமிடப் பயிற்சியில் விரல் நுனிகள் மட்டுமே பற்றியிருக்க, இலகுவாக இயங்கியது உடல். நீர் வசப்பட்ட குஷியில் மேலும் சில நிமிடங்கள்.. பிடிமானத்தை முழுக்க விட்டு, கைகளால் துழாவி துடுப்பு போட்டாள். உடல் மிதந்தது.. உள்ளமும்தான்!

வாயெல்லாம் பல்லாக, கை வீசி முன்னேற, நாலாவது வீச்சில் தடுமாறியது. பரவாயில்லை.. இப்போதைக்கு போதுமென்று கரையேறினாள்.

அறைக்குத் திரும்பியவள், குளித்து ஆரஞ்சு நிற ஷிபானைச் சுற்றினாள் (வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற சலுகையில்தான் இந்த ரகப் புடவைகள் வாங்கப்பட்டன)! கூந்தலைச் சிக்கெடுத்து, பொட்டிட்டாள். காதுகளில் நீள பவளத் தொங்கல்கள்.

‘‘ஹாய்.. யு லுக் ராவிஷ்ஷிங்’’ & விசிலடித்தான்.

‘‘நல்ல தூக்கம் போல?’’

‘‘ம்ம்.. டீ கொண்டு வரச் சொல்றியா ஹனி?’’

‘‘யார்ட்ட?’’

‘‘போன் அடி..‘‘

‘‘எந்த நம்பருக்கு?’’

அதற்குள் அவன் குளியலறைக்குள் போக.. அங்கிருந்த சிறு குறிப்பேட்டில் உரிய எண்ணைத் தேடி எடுத்துத் தட்டினாள். ஆறாம் நிமிடம் அறைக்கு கண்ணாடி ஜாடிகளில் தேநீர், பால், சதுர சர்க்கரைக் கட்டிகள் தனித்தனியே வந்தன.. பிஸ்கெட்டுகளுடன்.

பதமாக கலந்து & ‘‘டூ க்யூப்ஸ்?’’ என்று வினவிய போது (ஆங்கில சினிமா ஒன்றில் பார்த்தபடி) அவளுக்குத் தன் மீதே ஒரு மதிப்புதான்! வாழ்வு என்பது ஆர்வமும் தெளிந்த துணிவும்தான் என்று மிதப்பு ஏறியது.

குளித்தவன் ஜிம் கிளம்ப, ‘‘நான் அரைமணி நேரம் படுக்கறேங்க. கண்ணைச் செருகுது’’ & பாவனையாகச் சோம்பல் முறித்தாள். நிஜத்தில், புதையல் வேட்டை யின் ஆர்வத்துடன் விழித்திருந்தது புத்தி. மறுபடி நீரின் சூட்சமத்தை கண்டுபிடிக்க, அதில் திளைக்க உடம்பு பரபரத்தது.

அவனில்லாத மூன்று மாதங்களை வெற்று பெரு மூச்சுகளில் கரைக்காமல் காரோட்ட, விருந்து சமைக்க, பரிமாற, பேக்கிங், அலங்காரம், விருந்தோபசாரம் எல்லாம் கற்க வேணும். வெளியே புடவை, மெட்டி என்று பூவாய் தோன்றினாலும் இவளுள்ளும் உலோக ஆற்றல் உண்டென்பதை பவித்ரன் அறிய.. இல்லை.. முதலில் இவள்தானே உணர வேண்டும்.

‘‘ஓகே. ஸ்லீப்பிங் ப்யூட்டி. ஐ’வில் வேக் யு வித் எ கிஸ்.’’

அவன் முதுகு மறைந்த வினாடி நீச்சல் உடைக்கு மாறி துவாலையுடன் வெளியே பாய்ந்தாள்.

ஆவலாக நீலக் குளத்துள் இறங்கி.. கண்மூடி நீரை மேலும் பரிச்சயப்படுத்திக் கொண்டாள். மஞ்சள் சட்டைக்காரரும் பரிச்சய புன்னகைத் தந்தார்.

தண்ணீர் அவளைச் சுற்றிலும் தளும்பிச் சிரித்தது. ஆழ மூச்சிழுத்தவள் எம்பி கை வீசி தாளகதியில் கால்களையும் அசைக்க, நீர் விலகி விலகிச் சேர்ந்தது.. அவளைச் சுமந்து. ஹா.. இதுதான் நீச்சல்!

அந்த இன்ப பதட்டத்தில் உடல் அமிழ்ந்தது. தலையை உதறிக் கொண்டு மீண்டும் முயன்றாள். குழையும் பிஞ்சு கால்களுடன் மழலை மீண்டும் மீண்டுமாக சுவர் பற்றி நடக்க முயற்சிப்பதுபோல பயிற்சி தொடர்ந்தது. முங்கினாள்.. மிதந்தாள்.. கற்கும் வெறியில் நேரம் நழுவியது அறியவில்லை.

‘‘மணி ஏழரை. இருட்டிடுச்சு மேம்’’ & கார்ட் கிளப்ப சூழ்நிலை புரிந்தது. அடிவயிறும் தொடைகளும் கடுத்து கனத்தன. ஆனால், உள்ளே கனமில்லை.. பயம் விட்ட உல்லாசம்! தன் மன வீர்யம் புரிந்த உற்சாகம்!

மனதைக் குவித்து குறி வைத்தால் முடியாததில்லை என்ற கண்டுபிடிப்பில் ‘யுரேகா’ எனக் கத்தத் தோன்றியது. சாதனை சூட்சுமம் பிடிபட்ட த்ரில்! திகிலெல்லாம் நீர்த்து கரைந்தது. அதைக் குளத்திலேயே வடித்துவிட்டு, படியேறினாள். நெற்றியின் ஈரக் கற்றைகளை சிலுப்பி விலக்க.. எதிரே வியப்பில் விழி விரிந்த பவித்ரனின் முகம்!

பெருமிதமாகக் கட்டை விரல் உயர்த்தி சிரித்தான். ‘‘ஒலிம்பிக்கின் தங்க மெடலிஸ்ட் போலல்ல படியேறுற ஹனி!’’

பொடித் தவளைகளை வலைக் கம்பி மூலம் நீரிலிருந்து அகற்றிக் கொண்டிருந்த நரைத்த மீசை கார்டும் விரிய சிரித்து கட்டை விரல் உயர்த்தினார்.

அந்த ஜெயிப்பின் பூரிப்பை உணர்ந்தாள். பரிசாக அவளைச் சுற்றிக் கொண்டன, அவனது வெதுவெதுப்பான கைகள்.. இருவருக்குள்ளும் ஊடுருவி ஓடியது.. த்ரில்!

– அக்டோபர் 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *