கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 18,040 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காபியின் நறுமணத்திற்கு விழிப்பு வந்த கா ஹரி மணியைப் பார்த்துக் கொண்டான். மளமளவென்று பல் தேய்த்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றான். ஸ்டவ் மீது ஒரு பக்கம் இட்லி வெந்து கொண்டிருந்தது. இன்னொரு அடுப்பில் குக்கர் விசிலடித்துக் கொண்டிருந்தது. மூன்றாவது அடுப்பில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. நான்காவது அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருந்தது.

ஸ்ரீவல்லி மிக்ஸ்யில் தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் எலக்ட்ரிக் காபி

மேக்கர்லிருந்து டிக்காஷன் இறங்கி கொண்டிருந்தது.

“வாவ்! ஸ்ரீ வல்லி! என் கல்பவல்லி! என்ன இதெல்லாம்? காலை ஏழரை மணிக்கு சமையலறை இப்படி போர்க்களமாகக் காட்சி தருகிறதே?”

பின்னாலிருந்து அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டே சொன்னான்.

“எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்கு கிளம்பப் போவதாக நேற்று இரவு சொன்னீங்களே?” மிக்ஸியை நிறுத்தி மூடியைத் திறந்து ஸ்பூனால் சட்னியை எடுத்து ருசி பார்த்து விட்டு சிறிது உப்பைச் சேர்த்து இன்னொரு முறை சுற்றி எடுத்தாள்.

“சொன்னது சரிதான். ஆனால் ப்ரேக்பாஸ்ட் மட்டும் செய்தால் போதுமே. காலை நேரத்தில் லஞ்சுக்கு சாப்பாடும் கட்டிக் கொடுக்கணும் என்றால் சிரமம் இல்லையா? காண்டீனில் ஏதோ ஒன்றைச் சாப்பிட்டுக் கொள்கிறேன்.” புது மனைவியை காதலுடன் பார்த்துக்கொண்டே சொன்னான்.

Gowri Kirubakaran - Pothi Maram-pic“பரவாயில்லை . பிறந்த வீட்டில் ஏழுமணிக்கு எழுந்துகொள்வது வழக்கம். இப்போ ஆறுமணிக்கு எழுந்து கொண்டால் வேலைகள் முடிந்து விடும். நீங்கள் கிளம்பிப் போன பிறகு வீட்டைச் சுத்தம் செய்து, துணிகளைத் தோய்த்துப் போட்டால் முடிந்து விடும்.” சட்னியை கிண்ணத்தில் எடுத்து வைத்தாள்.

“வேலைகள் முடிந்த பிறகு பக்கத்து பிளாட்டில் இருக்கும் மாமியிடம் வேலைக்காரியைப் பற்றி விசாரி. எல்லா வேலைகளையும் நீ தனியாக செய்துகொள்வது என்றால் கஷ்டம் இல்லையா? காபி கொடுத்தால் குளித்து விட்டு வருகிறேன்” என்றான்.

“வேலைக்காரி எதுக்கு? இரண்டு பேர் தானே. பதினோரு மணிக்குப் பிறகு சும்மாதானே இருக்கப் போகிறேன்.” காபி கோப்பையைத் தந்து கொண்டே சொன்னாள்.

“சரி. உன் இஷ்டம்.” போனில் மெசேஜ் செக் செய்து கொண்டிருந்தவன் அவள் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை.

மதியம் லஞ்ச் நேரத்தில் வழக்கம் போல் கேண்டீன் பக்கம் போகப் போன ஹரி, ஸ்ரீவல்லி லஞ்ச் பேக் கொடுத்தது நினைவுக்கு வந்ததும் திறந்து பார்த்தான்.)

அழகாக இருந்த மூன்றடுக்கு கேரியரில் சாதம், சாம்பார், பொரியல் இருந்தது. சிறிய கிண்ணத்தில் தயிர், ஊறுகாய், அத்துடன் ஸ்பூன் நேர்த்தியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

உடனே ஸ்ரீ வல்லிக்கு போன் செய்து சொன்னான்.

“வல்லி! எனக்காக லஞ்ச் பேக்கை எவ்வளவு நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கிறாய். பார்த்தாலே பசியைத் தூண்டி விடுகிறது. தாங்க்யூ!”

“நல்லா இருக்கு போங்க. எனக்கு தாங்க்ஸ் சொல்லுவதாவது? மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்க” என்றாள்.

போனை வைத்துவிட்டு கம்ப்யூட்டரில் மெயில் படித்துக்கொண்டே சாப்பிட்டான்.

“ஸ்ரீ வல்லி! சின்ன வேண்டுகோள்.”

“என்ன விஷயம் சொல்லுங்க?” காய்ந்த உடைகளை மடித்து வைத்துக்கொண்டே கேட்டாள்.

“நீ தினமும் எனக்கு கேரியர் கொடுத்து அனுப்புகிறாய் இல்லையா? அதன் மணத்தில் என் நண்பர்கள் மயங்கி விட்டார்கள். உங்கள் வீட்டுக்கு சாப்பிட அழைக்கக் கூடாதா என்று ஒரே ரகளை.” “அதற்கென்ன வந்தது? கூப்பிடுங்கள்.” “ஏற்கெனவே அழைத்து விட்டேன். நாளை சனிக்கிழமை இல்லையா. மூன்று பேர். அதாவது மூன்று ஜோடி, நாம் இருவர். மொத்தம் எட்டுப் பேர். தனியாக உன்னால் சமைக்க முடியுமா?”

“அவர்களில் யாருக்கும் குழந்தை இல்லையா?” கிண்டலாகக் கேட்டாள்.

“உன் அதிர்ஷ்டம். யாருக்கும் இல்லை .” சிரித்தான்.

“மாலை நேரத்தில் அழைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். காலை ஆறுமணிக்கு எழுந்துகொள்ளனும் என்றால் முடியவில்லை. அத்தனை பேருக்கு சமையல் என்றால் ஐந்து மணிக்கே எழுதிருக்கணுமோ என்னவோ.”

ஹரியின் முகம் மலர்ந்து விட்டது. “இரவு சாப்பாடுக்குத்தான் கூப்பிட்டு இருக்கிறேன். ஞாயிறு அன்று உன் விருப்பம் போல் தூங்கலாம். சரிதானே.”

“ஆகட்டும். மாலை நாலு மணிக்கு வேலையைத் தொடங்கினால் சரியாக இருக்கும்.” மனதிலேயே கணக்குப் போட்டுக்கொண்டு சொன்னாள்.

“ஸ்ரீவல்லி! என் ஞானவல்லி! நம் பார்ட்டி கிரான்ட் சக்செஸ்! உன் சமையலை ருசி பார்த்த என் நண்பர்கள் எவ்வளவு பொறாமைப் பட்டார்கள் தெரியுமா? மனைவியரின் காதில் விழாமல் அதிர்ஷ்டசாலியடா என்று என்னைப் புகழ்ந்தார்கள்.” சந்தோஷம் தாங்க முடியாமல் சொன்னான் ஹரி.

களேபரமாகக் கிடந்த வீட்டைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் ஸ்ரீவல்லி.

உற்சாகத்துடன் விசில் அடித்துக்கொண்டே கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ஹரி அப்படியே நின்று விட்டான். ஹாலுக்கு நடுவில் குப்பை அள்ளும் முறமும், விளக்குமாறும் கிடந்தன. சோபாக்கள் தாறுமாறாக போடப் பட்டிருந்தன. பாதி அறை வரையில் பெருக்கியதற்கு அடையாளமாக குப்பை நடுவில் கிடந்தது. எப்போதும் கண்ணாடியைப் போல் துப்புரவாக இருக்கும் வீடு இப்படி இருந்ததில் எரிச்சலுடன் குரல் கொடுத்தான்.

“ஸ்ரீ வல்லி !”

பதில் வராமல் போனதும் சமையல் அறைக்குப் போனான். அங்கே காணவில்லை. படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து பதற்றமடைந்து தட்டி எழுப்பிக் கேட்டான்.

“என்ன ஆச்சு? ஜுரமா?”

“இல்லை . டி.வி. க்கு அடியில் குனிந்து பெருக்கும் போது முதுகு பிடித்துக்கொண்டு விட்டது. எப்படியோ தவழ்ந்து வந்து கட்டில் மீது படுத்துக் கொண்டேன்.” கண்களில் நீர் சுழலச் சொன்னாள்.

“‘வேலைக்காரியை வைத்துக்கொள் என்று சொன்னால் கேட்டால் தானே? இப்போ பார். படுக்கையில் கிடக்கிறாய்.” எள்ளும் கொள்ளும் வெடித்தன அவன் முகத்தில்.

“தாகமாக இருக்கு. கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்.” சோர்ந்து போன குரலில் சொன்னாள்.

பிரிஜ்ஜிலிருந்து ஒரு பாட்டிலை கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சொன்னான்.

“இந்தப் பணிவிடைகளை என்னால் செய்ய முடியாது. எனக்குப் பசியாக இருக்கு. இன்றைக்கு டிபன் எதுவும் பண்ணவில்லை இல்லையா?”

“நான் காலை முதல் எதுவும் சாப்பிடவில்லை . வேலைகள் முடிந்த பிறகு குளித்து விட்டு சாப்பிடு வது வழக்கம். இதற்குள் இப்படி ஆகி விட்டது. காலையில் காபி குடித்தேன், அவ்வளவுதான்.”

“நான் வெளியில் போய் ஏதாவது சாப்பிட்டு வருகிறேன்.”

“என் முதுகுப் பிடிப்பிற்கு ஏதாவது மாத்திரை வாங்கி வாருங்கள்.”

“மாத்திரையின் பெயரைச் சொல்லு.” எரிச்சலுடன் கேட்டான்.

“இது போல் நிகழ்வது இது தான் முதல் முறை. மருந்துக் கடையில் கேட்டால் தருவார்கள்.”

விசனம் கொண்டவன் போல் வேகமாக வெளியேறினான். ஒரு மணி நேரம் கழித்து அரைகுறைத் தூக்கத்தில் இருந்த ஸ்ரீ வல்லிக்கு மசாலா வாசனையில் விழிப்பு வந்தது.

டி . வி . யைப் பார்த்துக்கொண்டே ஹோட்டலிலிருந்து கொண்டு வந்த பிரியாணியைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்து விட்டு அவளருகில் வந்தான். மாத்திரை ஸ்ட்ரிப்பை கொடுத்து விட்டு, “தினமும் காலையிலும் இரவிலும் இரண்டு மாத்திரை வீதம் ஐந்து நாட்களுக்குப் போட்டுக் கொள்ளணுமாம்” என்றான்.

“வெறும் வயிற்றில் சாப்பிடலாமோ கூடாதோ. பிரட் ஆவது வாங்கி வந்திருக்கலாம்.”

“நீ சொல்லி இருக்கலாம் இல்லையா? எனக்கு என்ன தெரியும்? எனக்கு நோய் என்றாலும், நோயாளிகள் என்றாலும் அருவருப்பு.” நெற்றியைச் சுளித்துக்கொண்டே சொன்னான்.

“போகட்டும். காலையில் செய்த இட்லிகள் உணவு மேஜை மீது ஹாட் பேக்கில் இருக்கும். கொண்டு வந்து தருகிறீர்களா? ரொம்ப பசியாய் இருக்கிறது.” துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.

போய் ஹாட் பேக் கொண்டு வந்து அவளருகில் வைத்தான்.

” நான் ஹாலில் படுத்துக் கொள்கிறேன். நீ குளிக்கவில்லை இல்லையா? வியர்வை வாடையில் எனக்குத் தூக்கம் வராது. நாளை அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலை. குட் நைட்!”

பெரும் முயற்சி செய்து பக்க வாட்டில் புரண்டு, ஹாட் பேக் திறந்தாள். சில்லென்று இரண்டு இட்லிகள். சட்னி கேட்டால் அவன் மேலும் எரிச்சல் அடையக்கூடும். மெதுவாக தண்ணீ ருடன் சேர்த்து விழுங்கி மாத்திரையைப் போட்டுக் கொண்டு தூங்க முற்பட்டாள்.

காலையில் காபியின் நறுமணத்திற்கு விழிப்பு வந்தது. மளமளவென்று முகம் அலம்பிக்கொண்டு சமையல் அறைக்குள் சென்றான்.

ஒரு ஸ்டவ் மீது குக்கர் விசில் அடித்துக் கொண்டிருந்தது. இன்னொரு ஸ்டவ் மீது தக்காளி பருப்பு வெந்து கொண்டிருந்தது. இன்னொரு ஸ்டவ் மீது உருளைக்கிழங்கு வதக்கல் இருந்தது. நாலாவது ஸ்டவ் மீது ஸ்ரீ வல்லி தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஸ்ரீ வல்லி! என் காதல் கள்ளி! நீ இன்றைக்கு எழுந்துகொள்வாய் என்று நினைத்திருக்கவில்லை. காபி கொடுத்தால் குளித்து விட்டு வருகிறேன். நேற்று இரவு சாப்பிட்ட பிரியாணி கொஞ்சம் கூட நன்றாக இல்லை . ஒரே பசி.” பின்னாலிருந்து வந்து கட்டிக் கொண்டான்.

“குளிக்காமல் என்னைத் தொடாதீங்க.” மென்மையாக விடுவித்துக் கொண்டாள். “இது எப்போதிலிருந்து?” வியப்படைந்தான். “ஞானோதயம் ஆனால் தான் மனிதன் மேலும் மேலும் வளருவான்.” சொன்னாள்.

“நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை . காபி கொடு முதலில்.” லஞ்ச் பாக்ஸ் கொடுத்துவிட்டுச் சொன்னாள். “ஆறுமணிக்கு எழுந்து கொண்டால், தூக்கம் போதவில்லை. அதனால் ப்ரேக்பாஸ்ட், டின்னர் மட்டும் செய்கிறேன். நாளை முதல் லஞ்ச் கட்டித் தரமுடியாது என்று நினைக்கிறேன்.” “அதென்னது?” தூக்கி வாரிப்போட்டது

அவனுக்கு.

“காலையில் அடுத்த வீட்டு மாமியிடம் வேலைக்காரியைப் பற்றி விசாரித்தேன். அவங்க வீட்டு வேலைக்காரியே செய்வாளாம். மாதம் இரண்டாயிரம் சம்பளம். இன்று முதல் வரச் சொல்லி இருக்கிறேன்.”

“வேலை இல்லை என்றால் பொழுது போகாது என்றாயே?”

“ஆமாம். ஆனால் வேலை செய்து உடல் சோர்ந்து

போனால் கஷ்டம் இல்லையா? படுக்கையில் விழுந்தால் கேட்க நாதி இல்லை என்று புரிந்து விட்டது. இப்போதாவது கண்களைத் திறக்க வேண்டும் இல்லையா.”

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை . “கீழ் வீட்டில் ஒரு மாமி பாட்டு கற்றுக் கொடுக்கிறாளாம். பொழுது போவதற்காக சேரலாம் என்று நினைக்கிறேன். மாதம் இரண்டாயிரம் தான். இன்னொரு விஷயம். என்னிடம் சொல்லாமல் உங்கள் நண்பர்கள் யாரையும் சாப்பிட கூப்பிடாதீங்க. நான் பிசி. இரண்டாவது மாடியில் ஒரு மாமி பெயிண்டிங் கற்றுத் தருவாளாம். சிறுவயது முதல் எனக்கு ஓவியம் வரைவது என்றால் மிகவும் பிடிக்கும். இந்தம்மாளுக்கு ஆயிரம் ரூபாய். மாதம் உங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கூடுதல் செலவு. உங்கள் ஸ்ரீவல்லி என்றுமே சுகுமார வல்லியாக இருப்பாள். சரிதானே!” குறும்பாகச் சிரித்தாள்.

– டிசம்பர் 2017 (தெலுங்கில்: பத்மஜா)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *