போட் மெயில் சாயபு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 686 
 
 

“டேய் பையா, போட்மெயில் சாயபு தலை தெரியுதான்னு கொஞ்சம் பாரு” –

ஏதோ ஒரு முக்கிய தபாலுக்காகக் காத்திருந்த என் அப்பா உத்தரவிட்ட அடுத்த விநாடியே அரை டிராயரை இடுப்புவரை ஏற்றி, எனது இடுப்பை விட்டு அது நழுவிவிடாமல் இருக்க அரைஞாண் கயிற்றால் பந்தோபஸ்து செய்து கொண்டு, ரயில் எஞ்சின் அல்லது கார் எழுப்பும் ஓசையை எனது அப்போதைய மனோநிலைக்கு ஏற்ப ஒலித்துக் கொண்டு, எங்களின் பெருமாள் கோயில் தெருவை நிமிடத்தில் கடந்து ஏரிக்கரைத் தெருவை எட்டி விடுவேன்.

கனத்த துணிப்பைகளில் நிரம்பி வழியும் தபால்களுடனும், தபால்காரர்களுக்கேயுரிய சீருடையுடனும், சற்றே நரைத்த கூர்மையான தாடி மற்றும் தடித்த மூக்குக்கண்ணாடியுடனும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டுவரும் ஐம்பது வயது தபால்கார சாயபுவிடம் சென்று, “நீங்க எப்போ வருவீங்கன்னு எங்கப்பா கேட்டாரு சாயபு” என்பேன்.

“அரே சோட்டா, நீ போய்க்கிட்டே இரு, இன்னும் அரை மணியிலே உங்க வீட்டுல இருப்பேன். உங்க அம்மா, அப்பா கிட்டே சொல்லி எனக்குப் பலகாரம், வெத்தில, பாக்கு, தட்சிணை எல்லாம் தயார் செய்யச் சொல்லு, உன்னைப் பிள்ளை கேட்டு உன் மாமியார் வூட்லேர்ந்து மஞ்சள் தடவின கடுதாசி கொண்டாந்திருக்கேன்னு சொல்லு, போ, ஜல்தி வர்றேன் சாயபுன்னு சொல்லு”

பத்து வயசுப்பையன் எனக்குக் கல்யாணம் என்று சாயபு சொன்னதும் வெட்கம் பீறிட, வந்த வேகத்தில் “டுர்ர்ர்’ என்று மோட்டார் சைக்கிள் விட்டபடி வேகமாக என் வீட்டை அடைந்து, மூச்சு வாங்கியபடி, “அரை மணியிலே வருவாராம் சாயபு” என்பேன்.

எப்போதும் ஜாலி மூடில் இருக்கும் சாயபு என்னைப் போன்ற சின்னப் பையன்களை நடுவழியில் நிறுத்தி, “உனக்கு எப்போ தம்பி கல்யாணம்?” என்கிற ரீதியில் ஏதாவது கேட்டுக் கலவரப்படுத்துவது வழக்கம்தான்… இதன் காரணமாகவே எங்கள் வீட்டுப்பக்கம் சாயபு வரும் வேளையில் அங்கே இருக்க வெட்கப் பட்டுக்கொண்டு விளையாடப் போய் விடுவேன் நான்.

“அரே சோட்டா, முதல் கல்யாணப் பத்திரிகே நீ இந்த சாயபுக்குத்தான் கொடுக்கணும், தெரியுதா ?” என்று குறும்பு மின்னும் கண்களுடன் அவர் கேட்க, அருகிலுள்ளவர்களிடம் அட்டகாசச் சிரிப்பு கிளம்புவதை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு ஏது?

இன்றைய எஸ்.எம்.எஸ்.களும், செல்போன்களும், ஈ மெயில்களும், கம்ப்யூட்டர்களும் இல்லாத காலம் அது.

இருபதாம் நூற்றாண்டில் இன்னும் மூன்று பத்தாண்டுகளுக்கும் மேல் மிச்சம் இருந்த நேரம் அது.

மனித உறவுகள், வேலை வாய்ப்புகள், திருமணங்கள், அரசு இயந்திரத்தின் இயக்கங்கள் எல்லாம் தபாலும் தபால் சார்ந்ததுவுமாக இருந்தது. ஓரளவு தந்தியைச் சார்ந்தும் இருந்தது.

தபால்காரர் என்பவர் சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கண்ணியாக இருந்தவர். தபால்கார சாயபு போன்றவர்களோ அதற்கும் மேலாக ஒரு ஊரின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் பிரித்துப் பார்க்க முடியாத அங்கத்தினராகவே இருந்தார்கள் அன்றெல்லாம்.

ஊரின் அனைத்துக் குடும்பங்களிலும் உள்ள வயதானவர், வயதில் சிறியவர், ஆண், பெண், வேலை தேடும் வாலிபர்கள், கல்யாண வயதிலிருப்பவர்கள், பிள்ளைப் பேற்றுக்குப் பிறந்த வீட்டிற்கு வந்திருக்கும் இளம்பெண்கள், தூரதேசத்திலிருந்தபடி சம்பாதித்து அனுப்பும் குடும்பத் தலைவர் அல்லது மூத்த பிள்ளை என்று எல்லா விவரங்களுக்கும் சாயபுவுக்கு அத்துப்படி.

தோற்றத்தையும் பேச்சையும் பார்த்தால் வயது அறுபதுக்கும் மேலே மதிப்பிட்டுவிடலாம் என்றுதான் தோன்றும். நாலு வருடம் முன்பே ரிடையர் ஆகிவிட்டிருக்க வேண்டும் என்று கூடச் சந்தேகம் எழும்பும்.

அந்தக்காலத்தில் மெட்ராஸிலிருந்து ராமேஸ்வரத்துக்குக் கால்நடை போலவே பயணிக்கும் போட்மெயிலின் பெயரை யாரோ சாய்புவுக்கும் வைத்துவிட்டார்கள். அபூபக்கர் என்ற அவரது நிஜப்பெயர் அவருக்கே மறந்து போகும் அளவுக்கு போட்மெயில் சாயபு புழங்கிக் கொண்டிருந்தது. சாயபுவின் நிதானத்துக்கு, அவரை “போட் பாஸஞ்சர்’ என்றே சொல்லலாம்.

காலையில் ஒன்பது மணியளவில் தபால் ஆபீஸிலிருந்து கிளம்பி, மண்டபத் தெருவிலுள்ள நாற்பது வீடுகளைக் கடந்து, பெருமாள்கோயில் தெருவில் நுழைவதற்கே மணி பதினொன்று ஆகிவிடும். நடையில் அப்படி ஒரு நிதானம். பேச்சில் ஒரு பெரிய மனிதத் தன்மை. மணிஆர்டர் கொடுத்துவிட்டுப் பல்லிளிப்பது கிடையாது. இனாம் கொடுத்தாலும் வாங்குவது கிடையாது.

“அல்லா ஆர்டர் போட்டு கவர்மென்டு மூலம் சம்பளம் கொடுக்க வெச்சிருக்கான் சாமி, எனக்கு ஜில்லுனு ஒரு சொம்பு தண்ணி குடுங்கோ போதும்… வெய்யில் என்னா போடு போடுது பாரு…” என்று சொல்லித் திண்ணையில் சுவாதீனமாக அமர்ந்து கொண்டு தண்ணீர்ச் சொம்பு முழுவதையும் காலி செய்து விட்டு அடுத்த வீட்டுக்குப் போவார் சாயபு.

சாயபு தபால் கொடுக்கும் தெருக்களில் அவரது பள்ளித்தோழர்களின் வீடுகளும் இருப்பதால், சாவகாசமாக நாலு வார்த்தை பேசிவிட்டுத்தான் நகர்வார்.

அறுபது வயதைத் தொட்டு, அவரவர் பணியியிலிருந்து ஓய்வு பெற்றுச் சொந்த ஊரிலேயே செட்டில் ஆகி, தபால்காரர்களை விட அதிக எண்ணிக்கையில் கூரியர் ஆட்களையும், ஃப்ளிப்கார்ட் டெலிவரி பாய்ûஸயும் பார்க்கின்ற என் போன்றவர்களுக்கு போட்மெயில் சாயபுவைப் பற்றிப் பேச ஏராளமான விஷயங்கள் உண்டு.

என் ஒரே தங்கைக்கு இரண்டு வயதிருக்கும் அப்போது. குழந்தை நிற்காமல் அழுகிறது. கையில் ஏந்தினால் புழுவாக நெளிகிறது. அனலாகக் கொதிக்கும் உடம்பு. அம்மாவிடமும் சாப்பிட மறுக்கிறது. கஞ்சியோ பாலோ பாலாடையில் வைத்துப் புகட்டினாலும் தள்ளிவிடுகிறது. முதல் நாள் ராத்திரியிலிருந்து ஒரே அழுகை வேறு. வீட்டில் யாரும் தூங்கவுமில்லை.

“இப்படித்தான்… அந்தக் காலத்துல…” என்று எங்கள் அப்பாவின் அம்மா தங்கள் பரம்பரையில் தான் கண்ட, கேள்விப்பட்ட குழந்தை நோயாளிகளைப் பற்றி விதவிதமாக அடுக்கினாள்.

இங்கிலீஷ் டாக்டரைப் பார்ப்பதென்றால் மாட்டுவண்டி வைத்துக்கொண்டு பக்கத்து ஊர் போக வேண்டும். குதிரை வண்டிக்கு இரண்டணா அதிகம் தரவேண்டும். அப்பாவின் எலிமென்டரி ஸ்கூல் வாத்தியார் சம்பளத்தில் கட்டுப்படியாகாத விஷயம் அது.

தேரடித்தெரு சித்த வைத்தியர் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து வரச் சொன்னார் அப்பா.

வைத்தியருக்கு எழுபது வயது. எப்பொழுதும் இடிந்து விழத் தயாராக இருக்கும் ஒரு மூதாதையர் காலத்திய ஓட்டு வீட்டில், தன்னை விடக் கச்சலாகப் பிறந்த நான்கு பெண்களைப் பெற்றுவிட்டு, அதுகளுக்குக் கல்யாணமாகாத கவலையில் அவரே ஒரு நோயாளி போலத்தான் இருப்பார்.

நான் போய்ச் சொன்ன மறுநிமிடம் ஒரு கனத்த மஞ்சள் பையுடன் கிளம்பி வந்த வைத்தியர், குழந்தையின் வயிற்றில் தனது வலது கை விரல்களால் தபேலாவுக்கு சுருதி சேர்ப்பதைப் போல் நாலைந்து முறை தட்டிப் பார்த்துவிட்டு, “வயத்துல மந்தம் தட்டி இருக்கு… இந்த மாத்திரையைப் பொடி பண்ணி நாலு வேளைக்குத் தேன்ல கலந்து குழந்தைக்குக் கொடுங்கோ… சரியாயிடும்… தாய்ப்பால் தவிர வேறு ஆகாரம் ரெண்டு நாளைக்குத் தரவேண்டாம்” என்று தமது மஞ்சள் பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து நான்கு பழுப்புக் கலர் மாத்திரைகளைப் பொட்டலம் கட்டிக் கொடுத்து விட்டு, அப்பா நாலு தரம் தடவிப்பார்த்துக் கொடுத்த ஒரு ரூபாய் நோட்டை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு, “கொஞ்சூண்டு காப்பி கிடைக்குமா?” என்று கேட்டு வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பினார்.

அன்று மதியமும் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது, தபால் கொடுக்க வந்த சாயபுவுக்குக் கேட்டு விட்டது.

“கொளந்தே ஏன் சாமி அளுவுது… நான் கொஞ்சம் பார்க்கட்டுமா?”

“தாராளமா பாருப்பா சாயபு…” என்று உள் திண்ணையில் இருந்த குழந்தையைக் காண்பித்தார் அப்பா.

“அரே அல்லா… கொழந்த எதையோ பார்த்து பயந்து போயிருக்கு சாமி… ஒண்ணு சொல்றேன் கேப்பீங்களா. இன்னிக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு குழந்தைய எடுத்துக்கிட்டு அம்மாவை நம்ம ஊர் பஜார் மசூதிக்கு வரச்சொல்லுங்கோ சாமி. உள்ளே நமாஸ் ஓதிட்டு வர்றவங்க வாயால குழந்தை கண்ணுல ஊதுவாங்க… தானே சரியாப் போயிடும் சாமி… நீங்க ஒண்ணும் பயப்பட வேணாம்…”

“நீ சொன்னா சரி சாயபு…”

அன்று இரவு குழந்தை நன்றாகத் தூங்கியது.

நாங்களும்தான்.

போட்மெயில் சாயபு தன்னுடைய சைக்கிளை ஓட்டி நாங்கள் பார்த்ததில்லை. தபாலும் தபால் சார்ந்ததுமான அன்றைய சமூக வாழ்வில் சாயபுவின் சைக்கிள் கேரியர் சுமார் இரண்டடி உயரத் தபால் கட்டுகளைச் சுமந்து கொண்டிருக்க, அதன் ஹேண்டில் பாரின் இரண்டுபுறத்திலும் தொங்கிக் கொண்டிருக்கும் யானைக்காது போன்ற பைகளிலும் தபால்கள் நிரம்பி வழியும். பழைய அட்லாஸ் சைக்கிள் அது என்று ஞாபகம். தினமும் அதைத் துடைத்து சுத்தப்படுத்தி எடுத்து வருவார். சைக்கிளின் மணிதான் கொஞ்சம் மக்கர் செய்யும். “ணிக் ணிக்’ என்ற அது எழுப்பும் ஓசை அத்தனை பேருக்கும் அத்துப்படி.

சாயபு ஒவ்வொரு வீடாகக் கொடுக்கக் கொடுக்க, யாரோ ஒருவர் அவரது கனத்த பைகளைத் தபால்களால் நிரப்பிக் கொண்டே வருவது போலவே ஒரு தோற்ற மயக்கம். சாயபுவின் நிதானத்துக்கு, அன்றைய ஒரு நாளின் தபால்களைக் கொடுத்து முடிப்பதற்கு நள்ளிரவு ஆகிவிடும் போலவே இருக்கும்.

எங்கள் ஊரில் ஏறத்தாழ பதினைந்து இருபது தெருக்கள் சாயபுவின் ஆளுமையின் கீழ். பெற்ற மகன் வெளியூரிலிருந்து அனுப்பும் பத்திருபது ரூபாய்க்காகக் காத்திருக்கும் வயதானவர்கள், பென்ஷன் வரவேயில்லையே என்று நச்சரிக்கும் ஓய்வூதியர்கள், சமையலை முடித்துக் கணவரையும் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுக் கல்கி , கலைமகளுக்காகக் காத்திருக்கும் வீட்டுப் பெண்மணிகள், இண்டர்வியூ கடிதத்தை எதிர்பார்த்திருக்கும் இளசுகள், பத்து கதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டுப் பன்னிரண்டு கதைகளாகத் திரும்பப் பெறும் கற்றுக் குட்டி எழுத்தாளர்கள் எல்லோருக்கும் சாயபுவின் தரிசனம் கண்டதும் ஒரு பரவசம். நானும் எஸ் எஸ் எல் சி படிக்கும் போது முதலும் கடைசியுமாக ஒரு கதையை எழுதியனுப்பித் திரும்பப் பெற்றிருக்கிறேன்.

என் தங்கையின் உடம்பு சரியாவதற்கு ஒரு வழி சொன்னது போல், இன்னும் ஏராளமான விஷயங்கள் எங்கள் போட்மெயில் சாயபுவைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

எதிர்வீட்டுக் காமுப்பாட்டி தனிக்கட்டை. திருச்சி ரயில்வேயில் வேலை பார்க்கும் அவளுடைய ஒரே பிள்ளை வாராவாரம் போடும் நாலுவார்த்தைக் கார்டுக்கும் மாதாமாதம் அனுப்பும் சொற்ப மணி ஆர்டருக்கும் வாசற்திண்ணையிலேயே தவம் இருப்பாள்.

ஒருதரம் மணியார்டர் வாங்கிய காமுப்பாட்டியின் வாடிய முகத்தைக் கண்டு, “கியா ஹுவா மாமி…ஒடம்புக்கு என்னாச்சுது…?” என்று கேட்டுத் தெரிந்து கொண்ட சாயபு, அன்றைய டூட்டி முடிந்து இரவு ஏழு மணிக்கு வெறும் லுங்கி சட்டையுடன் காமுப்பாட்டி வீட்டுக் கதவைத்தட்டினார்.

“என்னாப்பா சாயபு, இந்த நேரத்துல…” என்று மங்கிய அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் முனகிய பாட்டியிடம், “இந்தாங்கோ மாமி. எங்க வீட்டுத் தோட்டத்து வெளைஞ்ச ஆடாதொடை இலை ஒரு கட்டு திண்ணையிலே வெச்சிருக்கேன். ரெண்டு நாளைக்குக் கஷாயம் வெச்சுக் குடிங்கோ…எல்லாம் சரியாப்போயிடும்…” என்று சொல்லிய சாயபு, “நீ மகராஜனா இருக்கணும்பா…” என்றவளின் நன்றியைத் தலையசைத்துப் பெற்றுக் கொண்டு, சைக்கிளில் ஏறி வந்த வழியே திரும்பிவிட்டார்.

சாயபு வேலை செய்யும் எங்கள் ஊர்ப் போஸ்ட் ஆபிஸ் கிளார்க் ஜெயராமன் எங்கள் அப்பாவின் அந்த நாளைய இரண்டாம் கிளாஸ் மாணவன். எஸ். எஸ். எல். சி., பி. யூ. சி. இரண்டும் முடித்து, டிகிரி முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே போஸ்டல் கிளார்க் வேலை கிடைத்து, அங்கே இங்கே சுற்றிக் கடைசியில் சொந்த ஊருக்கே மாற்றல் கேட்டுக்கொண்டு வந்து விட்டான். கல்யாணம் குதிர்ந்த பாடில்லை. வயது முப்பதைத் தாண்டிவிட்டது. அந்தக் காலத்தில் அது ரொம்ப லேட்.

தனக்குக் கல்யாணம் நிச்சயமாக சாயபுதான் வழிகாட்டியிருக்கிறார் என்று என் அப்பாவுக்குப் பத்திரிகை கொடுக்க வந்த ஜெயராமன் கூறினான்.

“ஜய்ராம் தம்பி… இதுக்கு முன்னே இருந்த போஸ்மாஸ்டர் ஸாப் பொண்ணுக்கு மாப்ளே கிடைக்கோ ரொம்ப ரொம்ப தாமதமாச்சுது. கடைசியில ஜோசியர் சொன்னாருன்னு கும்மோணம் பக்கத்துல உப்பிலியப்ப சுவாமிக்கும் அம்பாளுக்கும் கலியாணம் செஞ்சு வெச்சாருப்பா. நானும் அந்த ஐயா கூடப் போயிருந்தேன். திகட்ட திகட்ட சர்க்கரைப் பொங்கல் சாப்ட்டேன். சாமிக்குக் கல்யாணம் செய்ஞ்சி ஒரே மாசத்துல மாப்ளே ஓடிவந்து விழுந்தான் தெரியுமா? கியோங் நஹி…நீயும் அந்த உப்பிலியப்ப சுவாமிக்கு ஒரு நிக்காஹ் செஞ்சிப்பாரேன் தம்பி” என்று ஐடியா கொடுத்தாராம் போட்மெயில் சாயபு.

உப்பிலியப்பன் கோயிலில் கல்யாண உற்சவம் செய்த கொஞ்ச நாளில் சுலபமாக வரன் அமைந்து விட்டதாம் ஜயராமனுக்கு.

“போகிற போக்கைப் பார்த்தால் இந்த போட்மெயில் சாயபு சீமந்தத்துக்கு நாளெல்லாம் பார்த்துக் கொடுப்பார் போல இருக்கே” என்று ஜயராமன் பத்திரிகை கொடுத்துவிட்டுக் கிளம்பிய பிறகு அப்பா என் அம்மாவிடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்.

தான் தபால் கொடுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், தபால் டெலிவரியையும் தாண்டி ஏதோ ஓர் உபகாரம் செய்திருக்கிற போட்மெயில் சாயபு என் விஷயத்திலும் ஒரு முறை சூப்பர்மேன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இப்போது போல பத்து காலிப்பணியிடங்களுக்குப் பத்தாயிரம் பேர் மனுப் போடுகிற காலம் இல்லை அது.

பதினெட்டு வயசு பூர்த்தியாகக் காத்திருந்து அப்ளிகேஷன் போட ஆரம்பித்தால், பத்தொன்பது தொடங்குவதற்குள் ஒரு வேலையில் உட்காந்துகொள்ளும் காலம் அது.

நானும், நாட்டுமருந்துக்கடை வெங்கடாசலம் செட்டியார் மகன் டில்லிராஜனும் மெட்ராஸ் டெலிபோன்ஸில் டெலிபோன் ஆபரேடர் வேலைக்குச் சட்டென்று தேர்வாகி விட்டோம்.

ஹைக்கோர்ட்டு எதிரில் அரண்மனைக்காரத் தெருவில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சுக்கு அப்பால் இருந்த சென்னைத் தொலைபேசித் தலைமையகத்தில் ஒரு முற்பகல் வேளையில் சிறிய தேர்வு எழுதிவிட்டுப் பசியோடு காத்திருந்து, பிற்பகலில் நேர்முகம் முடிந்த சிறிது நேரத்தில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்ட தேர்ச்சிப் பட்டியலில் என் பெயரும் டில்லிராஜன் பெயரும் இருந்தது. இரண்டு மாதம் கழித்து, ஜூன் முதல் வாரம் தொடங்க இருக்கும் பயிற்சிக்கு இரண்டு நாள் முன்னதாக அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் அனுப்பப்படும் என்று சொன்னார்கள். மூன்று மாதப் பயிற்சி முடிந்ததும் வேலை. அந்த நாளில் ஆரம்பச் சம்பளம் சுமார் ஐந்நூறு ரூபாய்.

அப்பாவுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. மறுநாள் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்பெஷலாக சகஸ்ரநாம அர்ச்சனை செய்யச்சொன்னார் அப்பா. (அர்ச்சகருக்கு ஐந்து ரூபாய் தட்சிணை).

மே மாதம் இருபது தேதி ஆயிற்று.

“தொர, எனக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வந்திருச்சு. உனக்கு வந்துதா?” என்று டில்லிராஜன் வீட்டுக்கு வந்து கேட்டது முதல் போட்மெயில் சாயபுவுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.

மறுநாளும் தபால் வரவில்லை.

“வராமல் எங்கடா போயிடும், இன்னிக்கு இல்லேன்னா நாளைக்கு அனுப்பப்போறான். எப்போ உன் ஃப்ரெண்டு டில்லிராஜனுக்கு வந்துதோ உனக்கும் வந்துதானே ஆகணும்?” என்று கேட்ட அப்பாவுக்கும் மறுநாள் லேசாக நம்பிக்கை குறைந்தது.

“ஏன்டா, நிஜமா நீ செலெக்ட் ஆனியா? செலெக்ஷன் லிஸ்ட்ல உன் பேரு இருந்துதா? இல்ல அது வேற ஒரு துரையா?” என்று கேட்டவரை, “சும்மா இருங்கோன்னா” என்று அதட்டி வாயை மூட வைத்தாள் என் அம்மா.

டில்லிராஜன் வேறு தினமும் நாலுதரம் சைக்கிள் எடுத்துக்கொண்டு வந்து, “இன்னுமா வரலே?” என்று கேட்கவும் எனக்கு அழுகை வராத குறை.

போதாக்குறைக்கு அப்பாவைப் பார்க்க வந்த நண்பர் ஒருவர், “போஸ்ட்டல் டிலே, தபாலே வரவில்லை” என்பதையெல்லாம் சென்டிரல் கவர்ன்மென்ட்காரன் ஒத்துக்க மாட்டான். அடுத்த முறை செலெக்ஷன் வரும்போது அப்ளிகேஷன் போடுன்னு சொல்லிடுவான்” என்று எங்கள் எல்லார் வயிற்றிலும் திகிலைக் கிளப்பிவிட்டுப் போய்விட்டார். அன்றைய இரவு முழுவதும் எனக்குத் தூக்கமில்லை.

மறுநாள் காலை எட்டு மணிக்கே தபால் ஆபீஸில் ஆஜரானேன். தபால் கட்டுகளுடன் வெளியே வந்து, “என்னா தம்பீ?” என்று விசாரித்த சாயபு, “உம்பேருக்கு ரிஜிஸ்டர் தபால் எதுவும் இல்லையே தம்பீ” என்றவுடன் என் கண்கள் மடைதிறந்தன.

பதறிப்போன சாயபுவிடம் நான் என் நண்பன் இருவரும் தேர்வு பெற்று, நண்பனுக்கு மட்டும் மூன்று நாட்கள் முன்னதாகவே ஆர்டர் கிடைத்துள்ள செய்தியை விவரித்தேன்.

தோளில் என்னைத் தட்டிக் கொடுத்த போட்மெயில் சாயபு, ” தொரே தம்பி, கவலைப் படாதே. அல்லா ஒன்னை நிச்சயமா கைவுடமாட்டாரு. நாளைக்குக் கட்டாயம் வந்துரும். டீ சாப்டறியா? கண்ணத் தொடச்சுக்கோ. கவலைப் படாமே வூட்டுக்குப் போ. இன்னும் ரெண்டு வருசத்துல கல்யாணம் ஆவப் பொற ஆம்பள. இதுக்கெல்லாம் அழுவலாமா?” என்று என் கண்ணைத் துடைத்து அனுப்பி வைத்தார்.

சுற்றியிருந்த ஓரிருவர் பார்க்கத் தொடங்கியதை உணர்ந்து, வேதனையுடன் வெட்கமும் சேர்ந்து கொள்ளத் தளர்நடையிட்டு வீடு திரும்பினேன்.

அப்பா ஸ்கூல் போயிருந்தார்.

அம்மா என் தலையைக் கோதிவிட்டு, “”முதல்ல சாப்பிடுரா” என்று சொல்லி, நான் சாப்பிடும் போது சைக்கிளில் வந்த டில்லி ராஜனிடம், “அவன் வெளியில போயிருக்காம்பா” என்று சொல்லி வாசலோடு அனுப்பி வைத்தாள்.

அன்று மாலை மணி நான்கு இருக்கும்.

எனக்கு ஆர்டர் வராத கவலை அப்பாவையும் கவலை பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். தலைவலி என்று கடைசி பீரியடுக்குப் பர்மிஷன் எடுத்துக்கொண்டு வீடு திரும்பி, ஒருவாய் காப்பி சாப்பிட்டுவிட்டு பெஞ்சில் ஒரு டவலை விரித்துக் கொண்டு படுத்த சற்று நேரத்துக்கெல்லாம் வாசல் கதவு சத்தம் செய்தது.

கதவைத் திறந்தால் போட்மெயில் சாயபு.

“அரே தொரே தம்பீ… அல்லா உன்னைக் கைவுடல பாத்தியா. இந்தா உன்னோட அப்பாயிண்ட்மெண்டு ஆர்டர்” வாய் நிறையச் சிரிப்புடன் சாயபு சொல்லவும், தூக்கம் கலைந்து எழுந்து வந்த அப்பா, “என்னா சாயபு விசேஷம், இப்போ வந்திருக்கீங்க?” என்றார்.

“தம்பி இன்னிக்குக் காலையில எல்லா விவரமும் சொல்லிக் கண்ணால் தண்ணி உட்டத பாத்து எனக்கு மனசு கேக்கலே சாமி. மத்தியம் என் பீட் முடிஞ்சதும் ரெண்டு மணிக்கு சாப்பிடக் கூட வூட்டுக்குப் போகாம போஸ்ட் ஆபீஸ்ல சல்லடை போட்டேன். அப்புறமாத்தான் ஞாபகம் வந்தது சாமி, நம்ம ஊர்ல உங்க பெருமாள் கோயில் தெருவுக்கு வர்ற லெட்டருங்களும், பெருமாள் முதலித்தெருவுக்கு வர்றதும் அப்பப்ப மாறிப் போவுறது வழக்கம். இன்னிக்குப் பார்த்து அந்தப் புதுப்பயல் முனுசாமி பீட் முடிஞ்சு லேட்டா மூணு மணிக்கு வந்தான். ஏன்டா, இப்படி தொரைங்கிற பேருக்கு ஒரு ரிஜிஸ்டர் தபால் இருக்கான்னு கேட்டால், ஆமாம்பா, ரெண்டு நாளா தேடறேன். பெருமாள் முதலித்தெருவுல யாருக்குமே தெரியாதுங்கறாங்க. சரின்னு இன்னிக்கு ரிட்டர்ன் அனுப்பலாம்னு இருக்கேன்னு சொன்னான். அதைக் குடுடா பையா, அது நமக்குத் தெரிஞ்ச புள்ளாண்டானுக்கு வந்ததுடான்னு கேட்டு வாங்கி, போஸ்ட் மாஸ்டர் ஐயாகிட்ட விஷயத்த சொல்லி என் பீட்டுக்கு மாத்தி எளுதி இதோ எடுத்துக்கிட்டு ஓடியாறேன் சாமி” என்று சாயபு விவரித்த மறுகணம் சட்டென்று எங்கள் வீட்டைச் சந்தோஷ வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

“ரொம்ப தேங்க்ஸ் சாயபு, நீங்க சாப்டீங்களா இல்லியா? நம்ம வீட்டுல ஒருவாய் சாப்பிடுங்களேன்”என்று அப்பா அவரது கையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.

“பரவாயில்ல சாமி, ஒரு சொம்பு தண்ணி குடுங்கோ போதும். வீட்டுல சமையல் செஞ்சி வெச்சிட்டு என்னோட பீவி காத்துக்கிட்டிருக்கும். சாப்பிடலேன்னா சண்டை போடும்”

“ஒரு வாய் காப்பியாவது சாப்பிடுங்கோ சாயபு”

“வேணாம் சார், அப்புறம் பசி இல்லாமே சோறு குறைச்சலா சாப்பிடுவேன். அதுக்கும் என் பீவி சண்டை போடும்” என்றார் சாயபு.

சட்டென்று உள்ளே சென்ற அப்பா, (இன்னும் அடகு வைக்காமல்) தான் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வெள்ளிச் சொம்பில் தானே கிணற்றில் தண்ணீர் சேந்தி வந்து சாயபுவைக் குடிக்கச் சொன்னார்.

“ரொம்ப சந்தோஷம் சாமி. பையனுக்கு நிக்காஹ் செய்யும் போது மறக்காம எனக்கு பத்ரிகே குடுங்கோ. அப்போ எனக்கு ரெண்டு கப்பு பாயசம் எக்ஸ்டிராவாக் குடுங்கோ”என்று சொல்லிக் கிளம்பியவரை நிறுத்திய அப்பா –

“டேய் பையா, நம்ம சாயபு கால்ல விழுந்து ஆசீர்வாதம்வாங்கிக்கோடா” என்றார்.

காலில் விழுந்த என்னைத் தொட்டு எழுப்பி, “நல்லா இருக்கணும் தம்பீ, வேலைல நேர்மையா இருக்கணும் சரியா, அல்லா ஆசீர்வாதம் உனக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய போட்மெயில் சாயபு, பீவியின் சாப்பாட்டுக்காக எக்ஸ்பிரஸ் வேகத்தில் கிளம்பினார்.

– டிசம்பர் 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *