கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2024
பார்வையிட்டோர்: 186 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அவருக்குப் பொழுதில்லை. உலகத்தில் பொழுது இருந்து அவருக்கென்ன லாபம்? சூரியனோ சந்திரனோ மட்டம் போடு வதில்லை. கடியாரம் சண்டி மாடாவதில்லை. காலண்டர் தாளை மாதா மாதம் தவறாமல் கிழித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி யிருந்தும் அவருக்குப் பொழுதிருப்பதில்லை. 

பொழுதில்லை என்பதும் வேலை அதிகம் என்பதும் ஒன்றே. பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பதும், கூழுக்கு உப்பில்லை என்பதும் ஒரே வகை துயரம்தான். பணம் சம்பாதித்துத் தரும் வேலையானாலும் சம்பாதித்துத் தராத வேலையானாலும் பொழுதை அழிப்பதில் இரண்டும் ஒன்றே. நகர வாழ்வை மனிதன் நிர்மாணிப்பதற்குப் பதிலாக மனித வாழ்வை நகரம் நிர்மாணிக்க ஆரம்பித்த பிறகு பொழுது சுத்தமாகவே இருப்பதில்லை. 

இந்த உண்மைகள் எதுவும் எனக்குத் தெரியாது. எனக்குப் பொழுது எப்பவும் தராளமாகவே இருந்தது. ஆகையால் கிளைக்குக் கிளை தாவி உட்காரும் குருவிபோல காபி ஹோட்டல், வெற்றிலைப் பாக்குக்கடை, டாக்டர் வீடு, கூட்டுறவு மளிகை அட்வகேட் வீட்டுத் திண்ணை ஆகிய இடங்களில் எல்லாம் அமர்ந்து வந்தேன். 

அன்று டாக்டர் வீட்டுக்கு வழக்கம்போல் போயிருந் தேன். குருவி கிளைக்குக் கிளை மாறி உட்கார்ந்தாலும் செய்கிற காரியம் ஒன்றுதானே – இங்கும் அங்கும் பார்ப்பது. ரொம்ப அதிகம் என்றால் சிறகைக் கோதிக்கொண்டு சுத்தப் படுத்திக்கொள்ளும். நான் டாக்டர் வீட்டுக்குப் போனாலும் குருவி மாதிரிதான். குருவிக்குக் கிளை, எனக்கு பெஞ்சு, வெறுமனே உட்கார்ந்திருப்பேன். சிலசமயம் இல்லாத நகத்தைக் கிள்ளிக் கொண்டிருப்பேன். அங்கே இருந்து பார்த்தால் சிகப்பு ஸ்கிரீனில் டாக்டரின் நிழல் பூதமாகத் தெரியும். ஸ்டெதஸ்கோப் நிழல் அறிவியல் ஓவியம்போல் கிடக்கும். நோயாளிகள் சுய புராணம் படிப்பதும் டாக்டர் ஊம் கொட்டுவதும் தாராளமாகக் கேட்கும். 

வெகு அவசரமாக ஒரு கனவான் வந்தார். ஸ்கிரீனில் டாக்டரைத் தவிர வேறொரு நிழல் தெரிந்ததால் அவசரத் தைக் குறைத்துக் கொண்டு மிதிஅடி அண்டை ஒரு வினாடி தயங்கினார். அவருடைய முகத்தின் தசைகள்கூட ஏதோ அவசரத்தில் திமிறிக்கொண்டிருந்தன. ரொம்ப அந்தஸ்தில் உள்ளவர் என்று கண்வெட்டு சொல்லிற்று. 

நோயாளி நிழல் மறைந்ததும் இவர் உள்ளே சென்றார். “வாங்கோ வாங்கோ. வந்து ஒரு வருஷத்துக்குமேல் இருக்கும்போல் இருக்கிறதே.’ 

“அவ்வளவு ஏது சார். தப்பினால் நாலுமாசமிருக்கும். ஆனால் முடியல்லே. அவ்வளவு வேலை தொந்தரவு.” 

“இப்பொ மாத்திரம்?” 

“இதை முதல் வேலையா வைக்கும்படி ஆகிவிட்டது. எழுந்திருந்தது முதல் தலைவலி மண்டையை உடைக்கிறது. தலை இருக்கா இல்லையா என்று மூணுதரம் தொட்டுப் பார்த் துக்கொண்டேன், அதனால்தான் முதல் வேலையாக வந்தேன்.” 

“ஏன் இப்படி?’’ 

“ஒண்ணுமில்லை. அமெரிக்க வர்த்தக தூதுகோஷ்டி வந்திருக்கிறதோ இல்லையோ.” 

“ஆமாம்.” 

“மூன்று நாளாய் அலைச்சல். அதோடு நேற்று ராத்திரி அவர்களுக்கு வர்த்தக சங்கம் விருந்து அளித்தது, அதற்குப் பிறகு நடனங்கள். சங்கக் காரியதரிசி தொந்தரவு, தட்ட முடியவில்லை. ராத்திரி வீட்டுக்கு வருகிறப்போ மணி ஒண்ணரை. இத்தனைக்கும் சோடா ஜோஷி பியூக் காரிலே தான் கொண்டுவந்து விட்டுட்டுப் போனார். பிறகு தூக்கம் வரல்லே தலைக்கனம், வலி, ஆஸ்பிரோ சாப்பிட்டும் மசிய வில்லை, முதல் வேலைன்னு முடிவு செஞ்சேன். எதாவது கொடுத்து விரட்டுங்கோ.”

“உங்களையா தலைவலியையா?” 

“எப்படிச் செய்தாலும் சரி.” 

“இருக்கட்டும். மருந்து கொடுக்க எனக்கு ஆட்சேபம் இல்லை, அது வேலை செய்யாதே.” 

“என்ன டாக்டர் கிண்டல்? 

“நான் கிண்டல் பண்ணுவேனா? உங்களுக்கு இன்னிக்கு இருக்கிற ஜோலியைச் சொல்லுங்கோ, பிறகு – “

“அதைச் சொல்றேளா, வாஸ்தவம். டைரிலே எட்டு வேலை இருக்கு. எதையும் தட்டிக் கழிக்க முடியாது. 

“உங்களுக்குத் தேவையான மருந்து ஓய்வு. டாக்டரே தேவை இல்லை.” 

‘“அது சரி, இப்பொழுது ஏதாவது.”

“இதோ ஒரு மருந்து தரேன். தலைவலி நின்று போகும். இன்னொரு மருந்தும் தரேன்.” 

“செய்யுங்கோ.”

“நீங்கள் கடலை பார்த்திருக்கேளா?”

‘”நெஜந்தான். வெட்கமாக இருக்கு. அங்கேயும் இங்கே யும் காரிலே போறபோது கண்ணில் படுகிறதே அவ்வுளவு தான். இதற்கெல்லாம் பொழுது இருந்தால் தானே- இப்படி ஒரு ஜென்மம்.”

“அதனாலேதான் சொல்லுகிறேன். தினம் காலையில் கடல் பக்கம் கொஞ்சம் உலாத்துங்கள். நாளைய தினம் காலை மனைவியை அழைத்துக்கொண்டு போய் வாருங்கள். இன்றே மனைவியிடம் சொல்லி விடுங்கள். தவறாமல் காலை உலா கிடைத்துப் போகும். சீதைக்கு திரிஜடை. உங்களுக்கு உங்கள் சம்சாரம்.” 

அதற்குப் பிறகு டாக்டரின் நிழல் ஸ்கிரீனை விட்டுப் போய்விட்டது. அடுத்த சில நிமிஷத்திற்குள் அந்த கனவான் டாக்டர் வீட்டை விட்டுச் சென்று விட்டார். 

பெஞ்சின்மேல் இவ்வளவு நேரம் இருந்ததுபோதும் என்று சொல்வதுபோல என் தொடைக்கடியில் சூடு கண்டது. கிளம்பி தையற்காரன் கடைக்குப் போய் விட்டேன். 

மறுநாள் காலையில் எழுந்தேன். பொழுது பொதிமாடு மாதிரி படுத்துக் கிடந்தது. கடலைப் பார்த்திருக்கிறாயா என்று டாக்டர் கனவானைக் கேட்ட கேள்வி என் மனத்தி னுள் புகுந்தும் குளறிக் கொண்டிருந்தது என்பது அப் பொழுது தான் தெரிந்தது. ஏனென்றால் வழக்கமாக மரத்தின் முதல் கிளையாக காபி ஹோட்டலுக்குப் போகிற வனை வண்டியைக் கிழக்கே வைத்துப் பூட்டிவிட்டு மேற்கே திரும்பி ஒட்டுவதுபோல் கடல் பக்கம் கால்கள் இழுத்தன. 

எனக்குப் பொழுது கடல்போல இருந்தது. இரண்டா வது கிளை மூன்றாவது கிளைக்குத் தத்திப் போக கெடியார நிர்ப்பந்தம் எதுவுமில்லை. விவேகிகளுக்கு வேண்டிய பொழுது இருக்கும் என்று ஏனோ நினைத்துக் கொண்டு அலையோரத்தருகிலிருந்த ஒரு கட்டுமரத்தின் மேல் உட் கார்ந்தேன். 

கண் கடலாடிற்று. சாம்பல் வர்ண பகைப்புலத்தில் படகுகளும் கட்டு மரங்களும் மழை அழித்த ஓவியங்களாகத் தெரிந்தன. அதிக நேரம் சழியவில்லை. கண்ணுக்குக் குறுக்கே ஏதோ நிழலடைத்து லயத்தைக் குலைத்தது, தலை எடுத்துப் பார்த்தேன். 

என்னைத் தாண்டி ஒரு ஆணும் பெண்ணும் சென்றார் கள், முதுகுப் புறமாயிருந்தாலும் அந்த ஆணை எங்கேயோ பார்த்தது போலிருந்தது. யாரது? எங்கே பார்த்தது? விளங்கவில்லை. 

“இப்படிக் கொஞ்சம் உட்காருவோமே. சூரியன் கிளம்பி வரும். எவ்வளவோ அழகாக இருக்கும். நடை பாவாடை போட்டிருக்கிறாப் போல் செம்பஞ்சு மேகங்களை பாருங்களேன்.” 

எனக்கு நினைப்பு வந்துவிட்டது. டாக்டர் வீட்டுக்கு வந்தாரே, அந்தப் பொழுதில்லாத கனவான்! டாக்டர் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து வந்திருந்தார். இல்லை, இல்லை. குடிகாரன் பேச்சுப் போல் ஆகக்கூடாதென்று டாக்டர் ஜாமீன் வாங்கிக் கொண்டாரே அந்த ஜாமீன்தார் அழைத்து கொண்டு வந்து விட்டார். இப்பொழுது ஜாமீன்தார் ஆதிக்கம், 

“நீங்கள் தானே டாக்டர் சொன்னதை ஞாபக மூட்டுன் னேள். ஞாபகமூட்டி அழைத்துக் கொண்டு வந்ததால் முருங்கை மரம் வேதாளத்திற்கு ஏங்குகிறது. உட்காருங்கோ, அந்தப் படகிலே உக்கார இடமிருக்காதா- எல்லாரும் நிற் கிறாளே?33 

‘”கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு உட்காரப் பொழு தெங்கே இருக்கப் போகிறது?” 

“அவாதான் கடலிலே மீன் பிடிக்கிறா. நீங்க தரை யிலே இருக்கிறேளே-உட்காரப்படாதோ?” 

வேலியிலே வேஷ்டி விழுந்ததுபோல் உட்கார்ந்தார். அவர் மௌனமாய்த்தான் உட்கார்ந்திருந்தார். ஆனாலும் ஏனோ மறை ஒடிந்த வீதிக்குழாய் என் ஞாபகத்திற்கு வந்தது. இரண்டு காலுமில்லாத முடவன் ஞாபகத்திற்கு வந்தான். 

ஜவளானுக்குப் பயந்து பறக்க முடியாமல் இறகைத் தைத்துப் போட்டிருக்கிற புறா நினைப்புக்கு வந்தது. 

“டாக்டர் என்னதான் சொல்றார்?” 

“நீங்கள் இவ்வளவு வேலை வைத்துக் கொள்ளக் கூடா தென்கிறார்.” 

“டாக்டருக்குப் படிக்காமெ நானும் அதைத்தான் சொல்லிக் கொண்டு வருகிறேன். ஒண்ணு வேணா கூடச் சொல்றேன். ஆளைப் பாத்து மயங்காதே ஊதுகணை என் கிறேனே அது அதிகப்படி, டாக்டருக்கு அது தெரியாது.” 

“சரி நீ புத்திசாலிதான்.” 

அவர் கைக் கெடியாரத்தைப் பார்த்தார். 

“வந்து பன்னிரெண்டு நிமிஷமாச்சு. கொஞ்சம் நடக்க லாம் என்று பார்த்தால் நீ உட்கார்ந்தி விட்டாய்.” 

“இன்னிக்கு உக்காந்துட்டு நாளை நடந்தால் போச்சு,32 “நாளைக்கு கலெக்டர் பேரனுக்கு காஞ்சிபுரத்திலே காது குத்திக் கலியாணம். போகாவிட்டால் கெட்ட கோபம் வந்து விடும்.3 

“பேஷா போங்கோ.ஆகா அதோ பாருங்கோ கிழக்கே- காரட் வில்லையை குறுக்கே வெட்டி வச்சாப்போலே ” 

“அழகாகத்தான் இருக்கு,” 

“இதெல்லாம் பாக்கணும்னு தான் புண்ணிய தினம், நாள், நக்ஷத்திரம்னு சொல்லி வச்சிருக்கா. நமக்கு வேலை அவசரம், அதுக்கெல்லாம் போதில்லே….. இது போகட்டும். அதோ பாருங்கோ படகு.33 

ஒரு படகு கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. படகில் இருந்தவர்கள் கீழே குதிக்குமுன் கோவணம் கட்டி பையன் ஒருவன் தண்ணீரில் நீந்திப் போய் படகிலிருந்து போட்ட ஒரு கயிறைப் பிடித்து இழுத்துக்கொண்டு கரை ஏறினான். படகு கரை சேர்ந்தது. படகிலிருந்த எட்டுப் பேரும் இறங்கி இந்தக் கயிறைப் பையனுடன் சேர்ந்து இழுத்தார்கள். 

“நேரமாச்சே போவோமா?”

“என்னத்தை இழுக்கிறா,பார்த்து விட்டுப் போவோமா”

அலுப்புடன் கனவான் கால்களை நீட்டிக் கொண்டு உடலுக்கு முட்டுக் கொடுப்பதுபோல் இரண்டு கைகளையும் பின்னுக்குச் சாய்த்து ஊன்றிக் கொண்டார். 

கயிறை இழுத்துக் கொண்டே இகுந்தார்கள். 

“நாலு பர்லாங்கு நீளம் கயிறு வந்திருக்கே…… பதினைஞ்சு நிமிஷத்துக்கு மேலாச்சு.” 

“எனக்கென்ன பர்லாங்கு கணக்கு தெரியும்?” 

“அப்பொ அந்த முடிச்சிலே இருந்து வருகிற் முடிச்சை எல்லாம் எண்ணிக் கொண்டு வா.” 

மனைவி பன்னிரெண்டு முடிச்சை எண்ணினாள். ஒரு மரக்கட்டை மிதப்பு தெரிந்தது. 

“இதைத்தான் இழுக்கிறா. பார்த்தாச்சோ இல்லையோ?”

“இதையா பிடிக்க படகிலே போவா. இருங்கோ பார்த்துவிட்டுப் போவோம்.33 

கனவானுடைய அலுப்பு அழிந்ததில் தலை ஒரு பக்க மாய்ச் சாய்ந்தது. 

அதற்குப் பிறகு ஆறு முடிச்சு வந்து விட்டது. அவர்கள் இழுத்துக் கொண்டே இருந்தார்கள். 

“இதோ பார் இந்தக் கயிறை இழுத்து இப்போ முடி யாது. அதோ பாரு இன்னம் எவ்வளவு மிதப்பு தெரிகிறது. கடைசிலே வலை வரத்துக்குள்ளே மூனாலானா போற ரயில் போயிடும், திரும்பி வந்து கிண்டல் பண்ணுவார்… இன்னொரு நாளைக்குப் பார்த்துக் கொள்வோம்.’ 

கனவான் விருட்டென்று கிளம்பி விட்டார். நிழல் மட்டும் உட்கார்ந்திருக்க முடியுமா? 

அவர்களுக்கு நேரமில்லை. போய் விட்டார்கள். எனக்கு நேரமிருந்ததே. என்னாலும் உட்கார்ந்திருக்க முடியவில்லை. குருவி ஒரே கிளையில் எத்தனை நாழி உட்கார்ந்திருக்கும்? அடுத்த கிளைக்குத் தாவினேன். 

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *