சுதாகர் சாலை விபத்தில் இறந்த செய்தியை அவன் மனைவியிடம் உடனே சொல்லி, அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு என் தலையில் விழுந்தது.
ஆபீசில் ரமணன், செங்குட்டுவன், பிரெடரிக், முத்துசாமி அனைவரும் இந்தப் பொறுப்பை ஏற்கவோ, அட துணையாக என்னுடன் வரக்கூட மறுத்து விட்டார்கள்.
“இதெல்லாம் வெல்ஃபேர் டிபார்ட்மென்ட் வேலை. நீ ஏன் இதில் போய் மாட்டிக் கொள்கிறாய்? அந்தம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டா யார் பொறுப்பு?”
“இல்லைப்பா. சுதாகரின் உயிர் நண்பன் என்கிற தகுதியில் என்னை போகச் சொன்னார் ஜி.எம்.”
“நண்பனா! சுதாகருக்கா? நீயா?”
“இவன்தாண்டா அந்த சிடுமூஞ்சிகிட்ட ஒண்ணு ரெண்டு வார்த்தையாவது பேசியிருக்கான்.”
உண்மைதான். சுதாகர் ஆபீசில் மற்றவரிடம் வலிந்து ஏதும் பேச மாட்டான். எட்டு கேள்விக்கு ஒரு பதில் சொல்லிவிட்டு தன் வேலையில் ஈடுபடுவான். எப்போதும் அவன் முகத்தில் ஒரு விரோதம் இருக்கும். அவன் அந்தரங்க எண்ணங்களின் உலகில் குறுக்கிடுவது போல். கிட்டே பழக எப்படிப்பட்டவன், அவனுக்கு ஏதாவது தனிப்பட்ட பொழுதுபோக்கு உண்டா, புத்தகம் படிப்பானா, மோர்சிங் வாசிப்பானா? எதுவும் ‘ஆபீஸ் நண்பன்’ என்று சொல்லப்படும் எனக்குக் கூடத் தெரிவதற்குள் இறந்து போய் விட்டான்.
என்ன பேசினோம் என்று நினைவு கூற முயற்சித்தேன். ம்ஹூம்! அடடா… இப்படி அல்பாயுசாக செத்துப் போகப் போகிறான் என்று தெரிந்திருந்தால் அவன் பேச்சை கவனித்திருக்கலாமே என்று தோன்றியது.
கணவன் இறந்த செய்தியை மனைவியிடம் அஞ்சல் செய்யும் பொறுப்பு வாழ்வில் மிக மிக அரிய சங்கடம். அதைச் சமாளிக்க எனக்கு அனுபவம் இல்லை.
மேலதிகாரி அனந்தாச்சாரி சொன்னார். “மெல்ல சொல்லு. அவங்க மனைவி கிராஜுவேட்னு பர்சனல் ரிகார்ட்ஸ்லிருந்து தெரியுது. அப்ளிகேஷன் போட்டா நம்ம ஆபீஸ்லேயே ஒரு வருஷத்துக்குள்ள வேலை கிடைக்கும்னு சொல்லு. கிராச்சுடி, பிராவிடண்ட் பண்டு எல்லா பணத்தையும் ஒண்ணாம் தேதி கொடுத்து விடுவோம்னு சொல்லு.”
சுதாகர் எங்கள் ஆபீசில் செலக்டிவ் கிரேடு அட்மினிஸ்ட்ரேட் அசிஸ்டன்டாக இருக்கிறான். மன்னிக்கவும். இருந்தான். அடுத்த ப்ரமோஷனில் ஆபீசராகும் தகுதி பெற்றிருப்பான். வயது சமார் முப்பத்தைந்து. இவ்வளவுதான் தெரியும். அவனை நான் ஆபீசுக்கு வெளியே இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். கல்யாணம் ஆனபோது, தீபாவளியில் நாங்க பிக்னிக் போனபோது. ஒரு ஓரத்தில், அலுமினிய நாற்காலி போட்டுக் கொண்டு காலை வேகமாக ஆட்டிக் கொண்டு சுதாகர் புத்தகம் படித்துக் கொண்டுக்க, இந்தப் பெண் அவனுக்கு எலுமிச்சை ரசம் கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. இறந்து போனவனைப் பற்றி சிறப்பாக நினைத்துப் பார்க்க எலுமிச்ச ரசம் போதுமா? அவள் பெயர் கூட ஞாபகமில்லை. அனந்தாச்சாரி சுலபமாகச் சொல்லிவிட்டார். ஆனால் துக்கச் செய்தி சொல்வது எப்படி என்று யாரும் புத்தகம் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. பிரெடரிக் சொன்னது போல் மயக்கம் போட்டு விழுந்து விட்டால்? அவளை கைத் தாங்ககல்லாக ஏந்திக் கொள்வது ரசாபாசமாக இருக்குமோ?
ஃபோன் பேசி முதலில் தெரிவித்து விடலாம் என்று நினைத்தேன். நேரில் சொல்வதுதான் முறை. உடனே மருத்துவ உதவி தேவையாக இருந்தால் ஆபீஸ் காரிலேயே அழைத்துச் செல்லலாம்.
தேனாம்பேட்டை சிக்னல் வழக்கம் போல் வேலை செய்யாமல் வண்டிகள் குழப்பமாக கடந்து கொண்டிருக்க முழுவதும் அடைத்திருந்தது. போலீஸ்காரர் எதிர் கடையில் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். எல்லாம் ஒரே சமயத்தில் கடக்க முயற்சித்ததாலும், கிடைத்த சந்திலெல்லாம் இரு சக்கரிகள் மூக்கை நீட்டியதாலும் ஏற்பட்ட குழப்பம் நீங்க பத்து நிமிஷமாவது ஆகும் போல் இருந்தது. யோசித்தேன். செத்துப் போய்விட்ட செய்தியை அவளிடம் இப்போது சொல்ல வேண்டாம் என்று தீர்மானித்தேன்.
முதலில் அவள் அப்பா, அம்மா எங்கிருக்கிறார்கள் என்று கண்டு பிடித்து தந்தி கொடுத்து வர வழைத்து விட்டு அவர்கள் முன்னிலையில் மரணச் செய்தியை சொல்லலாம் என்று தீர்மானித்தேன்.
அது வரை?
சுதாகரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். கவலைப்படும்படியாக எதுவும் இல்லை. உங்களுக்கு தைரியம் சொல்லவே ஆபீசில் என்னை அனுப்பியிருக்கிறார்கள். துணைக்கு யாரும் இல்லையென்றால் எதற்கும் உங்கள் அப்பா, அம்மாவை வரவழைப்பது நல்லது. அவன் ஆஸ்பத்திரியிலிருந்து வரக் கொஞ்சம் நாளாகும். இப்படி சமாளிக்கலாம் என்று தோன்றியது.
சுதாகரின் வீடு பாலாஜி நகரில் ஒரு ராட்சச வளாகத்தில் இருந்தது. முன்னேற்கவே இருந்த ஃபிளாட் வாசலில் கோலம் ஒட்ட வைத்திருந்தது. ‘வெல்கம்’ என்று பழைய பாணி பலகையைப் பார்த்ததும் ‘திக்’ கென்றது.
கதவு திறந்தவள் கல்யாணத்திலும், பிக்னிக்கிலும் பார்த்ததிலிருந்து இரட்டிப்பு வேகத்தில் வயது கூடியிருந்தாள்.
புறக்கணித்த நரைக்கீற்று, கலைந்த கூந்தல். புடவைத் தலைப்பால் கன்னத்தை ஒத்திக் கொண்டு “அவர் இல்லையே? நீங்க யாரு?”
“என் பேர் ரங்கநாதன்மா! சுதாகரோட கலீக்.”
“அவர் ஆபீஸ்தானே போயிருக்கிறார்?”
“தெரியும் மிசஸ் சுதாகர். உட்கார்ந்துக்குங்க. ஒரு சின்ன அதிர்ச்சி தரக்கூடிய சேதி. பயப்படாதீங்க. உட்காருங்க முதல்ல.” எதற்குச் உட்காரச் சொல்கிறேன்?
“அவருக்கு ஏதாவது ஆயிடுத்தா?”
“ஒரு சாலை விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம். பயப்படாதீங்க. உங்ககிட்ட சொல்லிட்டு வரச் சொன்னார்.”
“அவருக்கு ஒண்ணும் இல்லையே? பெரிசா அடிகிடி ஏதும் இல்லையே?”
“இ.. இல்லைதான்.”
“கண்ணாடி மாத்திக்கோங்கன்னு எத்தனை தேவை சொல்லியாச்சு? கேட்டாதானே? எல்லாத்லேயும் பிடிவாதம். அதும் மனைவி சொல்லிட்டா கேக்கவே கூடாதுன்னு வைராக்கியம். உக்காருங்க. காப்பி சாப்பிடறீங்களா?”
“இல்லம்மா. நான் உங்ககிட்ட சேதி சொல்லிவிட்டு உங்க ஒத்தாசைக்கு யாரும் இருக்காங்களான்னு பாத்துவிட்டு ஆபீசுக்கு போகணும்.”
“ரொம்ப தாங்க்ஸ். எந்த ஆஸ்பத்திரி?”
“ராயப்பேட்டா.”
“இப்போ உள்ளே விடுவாளோ, போய்ப் பார்க்கலாமோ?”
எப்படிச் சொல்வேன்? “பார்வையாளர் நேரம்னு சாயங்காலம் அஞ்சு மணிக்கு நானே வந்து அழைச்சுண்டு போறேன். அதுக்குள்ள தெரிஞ்சவா யாரையாவது..”
“பெரிசா அடிகிடி இல்லைதானே?”
“இல்லை” என்றேன். எனக்கு கழுத்துப் பக்கம் வியர்த்தது.
“ப்ராக்சரா?”
‘தெரியலை. நானே போய் இன்னும் டாக்டர் கிட்ட பேசலை.” (பேசியாகி விட்டது. ”இந்தாள் அங்கேயே காலமாயிட்டாருங்க. ஒரே ஒரு நல்ல விஷயம். அதிகம் சபர் பண்ணாம போயிட்டார்.”) ஒரு பொய்யில் ஆரம்பித்து எத்தனை பொய்?
“டாக்டர் சரியாய்டும்னு சொன்னாராம். உங்க அம்மா, அப்பா எங்க இருக்காங்க மிசஸ் சுதாகர்?”
“ஹைதராபாத்தில். ஏன்?”
“இல்லை. நீங்க தனியா இருக்கிறதால உங்களுக்குத் துணையாய் அவங்களை போன் பண்ணி வர வழைக்கலாமேன்னு.”
“அவா இதுக்கெல்லாம் வரமாட்டா.”
“ஏன்?”
“சண்டை போட்டுட்டார்.”
“……..”
“ஒரு ஸ்கூட்டர் விஷயத்தில் அதெல்லாம் எதுக்கு? பகைச்சுண்டாச்சு. அவரால் நானும் பகச்சுண்டாச்சு. பிறந்தாத்தோட எல்லா உறவுகளையும் துண்டிச்சுண்டாச்சு. திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்னுட்டா.”
“அப்படியா? சென்னைல இவருடைய உறவுக்காறாங்க யாரும் இல்லையா?”
“இருக்காங்க. நாத்தனார் அடையார்ல இருக்கா. ஒரு அண்ணா அசோக்நகர்ல.”
“அவங்களை கூட்டு வெச்சுக்கலாமே?”
“எதுக்கு?”
“சும்மா ஒரு…… ஒரு ஒத்தாசைக்குத்தான்.”
“அப்படி ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியா இல்லை உறவு.”
“அப்பா உங்களுக்கு ஒத்தாசைக்கு?”
“ஒத்தாசைன்னா நண்பர்கள்தான். இந்த பில்டிங்ல மாத்திரம் இருபத்துநாலு ப்ளாட்டு. அதில் இருபதாம் நம்பர் கூட மட்டும் தான் கல்யாணம் கார்த்தின்னா கொஞ்சம் போக்குவரத்து. மற்றவாளோட இவருக்கு ஏதாவது ஒரு காரணத்தில சண்டை. ஸ்கூட்டரை நிறுத்தறதில சண்டை. பசங்க பந்து அடிக்கறதில சண்டை. குப்பை போடறதில் சண்டை. இப்ப கூட இவர் ஆக்சிடென்ட் ஆயிருக்கோல்லியோ. போலீஸ்காரன் தப்பு, சரியா சிக்னல் காட்டலை. சைக்கிள்காரன்… ஏன் என் மேல கூட தப்பு சொன்னாலும் ஆச்சரியமில்லை. கார்த்தாலை சண்டை போட்டார். அதையே நினைச்சுண்டு போனேன்னு இப்படித்தான் சொல்வாரே தவிர, தான் சரியா ஓட்டலைன்னு ஒப்புக்கவே மாட்டார். நல்லவேளை நான் பின்னால இல்லை. கொஞ்ச நாள் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தாலாவது புத்தி வராதா பார்க்கலாம். ஒரு நிமிஷம் இருங்க” என்று உள்ளே சென்றாள்.
“காப்பி எல்லாம் வேண்டாம்மா.”
“செ.. செ.. அவர் கோவிச்சுப்பாரே, ஏன் காப்பி கொடுக்கலைன்னு?”
கோவிச்சுக்க மாட்டார்.
திரையை மறுபடி திறந்து, “இதில் வேடிக்கை என்னான்னா காபி கொடுத்தாலும் சில வேளைல கோவிச்சுப்பார்.”
அய்யோ தலையெழுத்து! எத்தனை மணி நேரம் இந்தப் பொய்யை நடத்த வேண்டி வரும்?
ஹாலில் மாட்டியிருந்த காலண்டர்களைப் பார்த்தேன். டி.வி. மேல், சுவரில் எல்லா போட்டோக்களிலும் சுதாகர் இருக்கான். குளிர்ப்பெட்டி மேல் சின்ன தொட்டியில் மீன்கள் கவனித்துக் கொண்டிருந்தன. அலமாரியில் காசெட்டுகள் அடுக்கியிருந்தன. மூலையில் ஒரு ஹாக்கி மட்டை மாட்டியிருந்தது. ஸ்கூட்டரின் டூல் பேக் அலமாரியில், கடிதங்களின் அருகில் இருந்தது. அவன் ஸ்கூட்டர் இன்னும் அங்கேயே கிடைக்குமா இல்லை இழுத்துப் போட்டிருப்பார்களா? சாலையில் தெரிந்த ரத்தக் கறையை மனதில் அழித்துக் கொண்டேன். அவள் கோப்பையில் காப்பி கொண்டு வந்து முக்காலியில் நகர்த்தி அதன் மேல் வைத்து, “டிவி போடலாம்னா அது ரிப்பேர். அதுக்குக் கூட நான்தான் காரணம். வெச்சு திருகிட்டேனாம். நிம்மதியா இருக்குன்னு பதினைஞ்சு நாளா ரிப்பேருக்குக் கொடுக்காம வெச்சிருக்கார்”
“உங்க கணவர் உறவுக்காரங்க மெட்ராஸ்லதான் இருக்காங்க இல்லை?”
“ஆமா. ஒரு அக்கா, ஒரு அண்ணா.”
“அவங்கள்ள யாரையாவது உங்களுக்குத் துணையா வரச் சொல்லிடுங்களேன்.”
“ரெண்டு பேரோடையும் சண்டைன்னு சொன்னேனே.”
“அப்படியா?”
“அண்ணா சுவீகாரம் போயிட்டார். அவருக்கு சொத்து பிரிக்கறதில… என்ன பெரிய சொத்து? ஒரு ஓட்டை வீடு. அதுக்கு கோர்ட்டுக்கு நடைய நடந்தாச்சு. தனக்கு நெறைய எடுத்துண்டு இவருக்கு நாமம் போட்டான்னு. என்னவோ, நான் இதையெல்லாம் கேக்கறதே இல்லை. நான் உண்டு என் குழந்தைகள் உண்டு. ரெண்டையும் முனைஞ்சு படிக்க வெச்சுட்டம்னா கடமை முடிஞ்சது. உங்களை ஒண்ணு கேட்கணும் எனக்கு ஆபீஸ்ல கூட இப்படித்தான் இருப்பாரான்னு., எப்பப் பார்த்தாலும் கோவிச்சுண்டு.”
“இல்லைம்மா. அவர் வேலையை ஒழுங்கா செஞ்சுடுவார். அதிகம் பேச மாட்டார். அவ்வளவுதான்.”
“யாருமே வேண்டாம் அவருக்கு. உறவு வேண்டாம், சிநேகிதம் வேண்டாம். மணிக்கணக்கா மீனைப் பார்த்துண்டிருப்பார்.”
சைக்கிள் ரிக்ஷாகாரன் மணியை சப்தமிட, உள்ளே அந்தப் பெண் ஓடி வந்தாள்.
“என்னடி? இதான் மஞ்சு. மாமாவுக்கு அலோ சொல்லு.”
“மம்மி! இன்னிக்கு எனக்கு சுட்டி.”
“எதுக்குடி?”
“யாரோ செத்துப் போயிட்டா” என்று கைகொட்டி சிரித்தாள்.
“செத்துப் போனதுக்கு சிரிக்கக் கூடாது கண்ணு.”
“அழணுமா?”
“மாமாவுக்கு ரைம்ஸ் சொல்லு.”
“மாமா யாரு?”
“அப்பாவோட பிரண்டு. ஆபீஸ்ல வேலை செய்யறவர். உங்க பேரைக் கூட கேட்டு வேச்சுகலை. என்னவோ சொன்னீங்களே?”
“ரங்கநாதன்”
அந்தப் பெண் சுருக்கமாக இரட்டைப் பின்னல் பின்னி, உப்பலான கன்னத்துடன் நெற்றியில் பொட்டுடன் கடவுளின் அடையாளங்கள் இன்னும் பாக்கியிருந்தன. அய்யோ! எப்படி இவள் இந்த செய்தியை தாங்கிக் கொள்ளப் போகிறாள்?
“உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?” என்றாள் மனைவி.
“இல்லைம்மா. தங்கைக்கு கல்யாணம் தள்ளிண்டு போறது.”
“நிம்மதி. கல்யாணம் பண்ணிக்காதீங்கோ. நாங்கல்லாம் லோல்படறது போறும். ரொம்ப பாடு. பிள்ளைகளை வளர்க்கிறதும், மாத்தி மாத்தி அவர்களுக்கு உடம்புக்கு வரதும். அப்புறம் எதுக்கு கோவிச்சுப்பார், எதுக்கு கோவிச்சுக்க மாட்டார்னு இவரோட பதிமூணு வருஷம் குடித்தனம் பண்ணியிருக்கேன். இன்னும் எனக்குப் புரிபடலை. இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லிடாதீங்க. ஏற்கனவே முன்கோவம். அப்புறம் ஒரு மாசம் பேச மாட்டார்.”
நான் காப்பி அருந்திவிட்டு புறப்படத் தயாரானேன்.
“சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு வரணுமா? டிஸ்சார்ஜ் பண்ணிடுவாளா? நான் வந்தா நீ ஏன் வந்தே? ஆசாமி செத்துத்தான் போயிட்டானான்னு கத்துவார்.”
செத்துதான் போயிட்டான் என்று இவளிடம் சொல்லும் பொறுப்பை ஏன் ஒத்திப் போடுகிறேன்? தனியாக ஒரு துயர மனைவியை சமாளிக்கும் அனுபவம் இலாததாலா? தைரியம் இல்லாததாலா? தயக்கமா?
“ஆஸ்பத்திரியிலிருந்து சாயங்காலத்துக்குள்ள வரமாட்டார். அதனால் யாரவது உறவுக்காரங்களை கூட்டு வெச்சுக்கறதுதான் நல்லது. அவர் பிரதர் அட்ரெஸ் சொல்லுங்க.”
முட்டாள் பெண்ணே! உனக்கு உள்ளுணர்வில் தெரியவில்லையா?
“பிரதர் அட்ரெஸ் இல்லை. பரவாயில்லை. நான் ரோகிணியை, இருபதாம் நம்பர்லிருந்து கூட்டி வெச்சுக்கறேன். நீங்க என்னைப் பத்தி கவலைப்படாதீங்க. அவரை கவனிங்க.”
“அப்ப ஒண்ணு பண்றேன் நான். ஆஸ்பத்திரி போயிட்டு..”
“நாங்க வந்து பார்க்கலாமான்னு கேட்டுருங்க”.
மற்றவன் மனைவியிடம் துக்கச் செய்தியை சொல்லும் போது மற்றொரு பெண் இருக்க வேண்டும். கட்டியணைத்து அழ ஒரு மார்பு வேண்டும். ஆபீசிலிருந்து மாலதி, சுதா, யாரையாவது போய் அழைத்து வந்து விடலாம் அதுதான் சரி. அதனால்தான் இன்னும் சொல்லாமல் மென்று முழுங்குகிறேன்.
புறப்படும்போது மூலையில் இருந்த அந்த ஹாக்கி மட்டையை மறுபடி பார்த்தேன். “சுதாகர் ஹாக்கி ஆடுவாரா?” என்றேன்.
“எப்பவோ ஆடியிருக்கார். இப்ப நாய் பூனையெல்லாம் அடிக்கறதுக்காக வெச்சிருக்கார்.”
அந்த பெண் “இதால அம்மாவையும் அடிப்பா. என்னையும் அடிப்பா அப்பா” என்றாள்.
மஞ்சு தன் மேல் சட்டையை உயர்த்தி திரும்பி “அம்மா அந்த தழும்பு காமி, மாமாவுக்கு முதுகுல.”
‘ஏய்.. பொய்யி, இவ ஏதோ சொல்றா” என்று என்னை அவசரமாகப் பார்த்து அவள் சட்டையை சரிப்படுத்தினாள்.
நான் புறப்பட்டு ஆபீஸ் காருக்குள் ஏறினேன். வாசல் வரை வந்து இருவருக்கும் நிற்க அந்தப் பெண் சின்ன விரல்களை விரித்து டாட்டா காட்டினாள்.
“போலாங்களா?”
“கொஞ்சம் இருப்பா.”
காரை விட்டு இறங்கி மீண்டும் அவளருகில் சென்றேன்.
“மன்னிச்சுக்கங்க. நான் உங்ககிட்ட உண்மையை மறைச்சேன். உங்க கணவர் சுதாகர் ஆக்சிடெண்டில் செத்துப் போயிட்டார். பாடியை மார்ச்சுவரில வெச்சிருக்காங்க” என்றேன்.
– 16-02-1997-இல் குமுதத்தில் வெளியான சிறுகதை