கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 13,844 
 
 

மதிப்புக்கு உரிய ‘பவார் அண்ட் கோ’ நிறுவனத்தாருக்கு…

வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

என் பெயர் விமலா. கோயம்புத்தூரில் வசிக்கிறேன். சில தினங்களுக்கு முன் உங்களுடைய வெப்சைட் வழியாக ஒரு பொம்மை வாங்கிஇருக்கிறேன். இதற்கு மேல் என்னை எப்படி உங்களிடம் அறிமுகம் செய்துகொள்வது என்று தெரியவில்லை.

உண்மையில், வெப்சைட் என்று அட்சர சுத்தமாக எழுதிவிட்டேனே தவிர, அப்படி என்றால் என்ன அர்த்தம் என்பதுகூட எனக்குத் தெரியாது. ‘டபிள்யூ டபிள்யூ டபிள்யூ பவார் டாய்ஸ் டாட் காம்’ என்று நீங்கள் தொலைக்காட்சியில் அடிக்கடி விளம்பரம் செய்வதைப் பார்த்துவிட்டு, ‘இது என்ன புதுசா இருக்கு?’ என்று என் கணவரிடம் விசாரித்தேன்.

அப்போது அவர், உங்களுடைய வெப்சைட் பற்றி நீளமாக ஏதோ சொன்னார். அதன் பிறகும் அவர் சொல்லவருகிற அடிப்படை விஷயம் என்னவென்று எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. இன்டர்நெட் என்கிற தொழில்நுட்பச் சிக்கலான இடத்தில் உட்கார்ந்துகொண்டு நீங்கள் பொம்மை விற்கிறீர்கள் என்பது மட்டும் ஓரளவு விளங் கியது. இதற்கு மேல் விளக்கம் கேட்டால், திட்டு விழுமோ என்று பயந்து, ‘அந்தக் கடையில நம்ம ப்ரியாவுக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுங்களேன்’ என்று மட்டும் சொன்னேன்.

Pommai1

‘ஓ…’ என்று பெரிதாகத் தலையாட்டியவர், மறுநாள் நீளமாக அச்சிட்ட ஒரு வால் கொண்டுவந்தார். அதில் நீங்கள் விற்கிற பொம்மைகளின் பட்டியலும் சிற்சில விளக்கக் குறிப்புகளும் இருந்தன. அதைக் காண்பித்து, ‘உனக்கு என்ன பொம்மை வேணும் ப்ரியா?’ என்று எங்கள் மகளிடம் விசாரித்தபோது, ‘வவ்வா’ என்று சொல்லி விட்டு, பக்கத்து வீட்டு நாயைக்கொஞ்சப் போய்விட்டாள்.

ஆகவே, வழக்கம்போல அவளுக்காகப் பொம்மையைத் தேர்ந்தெடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பாயிற்று. நெடுநேரம் பொடி எழுத்து ஆங்கிலத்தைச் சிரமப்பட்டு எழுத்துக்கூட்டிப் படித்து, ஒவ்வொன்றாக நிராகரித்து, கடைசியில் ஒரு பொம்மையைத் தேர்ந்தெடுத்தேன்.

அதை பொம்மை என்று சொல்வதுகூடத் தவறுதான். அறிவுபூர்வமான விளையாட்டுச் சாதனம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்த அளவுக்கு உங்களுக்குத் தமிழ் புரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, நம் இருவரின் வசதிக்காக, அதைப் பொம்மை என்றே சொல்கிறேன்.

அந்தப் பொம்மையின் திரையில், ஏ, பி, சி, டி முதலான ஆங்கில எழுத்துகள் வரிசையாகத் தோன்றும். பின்னர், அதுவே ஒவ்வோர் எழுத்தாக இசையோடு வாசித்துக் காட்டும். சில சமயங்களில் வரிசை ஒழுங்கு இல்லாமலும் எழுத்துகள் காண்பிக்கப்படலாம். அப்போது திரையில் தோன்றும் எழுத்துக்கு ஏற்ற பொத்தானைக் குழந்தை அழுத்த வேண்டும். சரியாக அழுத்தினால், பொம்மை அதனைக் கை தட்டிப் பாராட்டும். தவறாக அழுத்தினால், ‘அச்சச்சோ’ என்று பரிதாபம் காண்பிக்கும்.

இவை எல்லாம் நான் உங்களுடைய விளக்கக் குறிப்பேட்டில் படித்துத் தெரிந்துகொண்டதுதான். அந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது என்னுடைய ஆரம்பப் பள்ளிக் காலம்தான் நினைவுக்கு வந்தது.

எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தந்த சரஸ்வதி டீச்சருக்கு, பிள்ளைகள் என்றால் ரொம்பப் பிரியம். ஆனால், அவர்கள் பிடிவாதமாக ஆங்கிலம் கற்க மறுக்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வார்.

இப்போது யோசிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. பச்சைப்பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தெரியுமா, தமிழ்தான் தெரியுமா? முனைப்போடு கற்றுத் தராமல், அதுபற்றிய ஒரு பயத்தைப் பிள்ளைகள் மனதில் உருவாக்கியது யாருடைய தவறு?

இதற்கு மேல் சரஸ்வதி டீச்சரை விமர்சிப்பது சரி இல்லை. தேவையும் இல்லை. குருவைப் பற்றித் தவறாகப் பேசுகிறவர்களுக்கு ஏதோ ஒரு பிறவியில் நரகம்தான் சம்பவிக்கும் என்று இலக்கியங்களிலோ, புராணங்களிலோ சொல்லப்பட்டு இருக்கலாம். எதற்கு வம்பு?

நான் சொல்லவந்தது, உங்களுடைய பொம்மையைப் பற்றி. சரஸ்வதி டீச்சர்போல் சலிப்படையாமல், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தருவதற்குத் தயாராக இருக்கும் இந்தப் பொம்மை டீச்சர், இப்போதுதான் ‘ஏ, பி, சி, டி’ என்று ஏதோ மழலையில் உளறிப் பழகிக்கொண்டு இருக்கிற எங்கள் மகளுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான், 400 ரூபாய் என்று விலை குறிப்பிட்டு இருந்தாலும், பரவாயில்லை என்று அதனை வாங்கித் தரும்படி என் கணவரிடம் சொன்னேன்.

அவருக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் போதாது. ஞானமும் போதாது. குழந்தைக்காகவோ, எனக்காகவோ, வீட்டுக்காகவோ எதைக் கேட்டாலும் மறுபேச்சு இல்லாமல் வாங்கித் தந்துவிடுவார். இதற்காக சந்தோஷப்படுவதா, அல்லது ‘என்ன அலட்சியம்!’ என்று கோபம்கொள்வதா என்று இன்றுவரை எனக்குப் புரிய வில்லை.

இந்தப் பொம்மை விஷயத்திலும் அதுவேநடந்தது. நான் பொம்மையைத் தேர்ந்தெடுத்த தினத்தன்று மாலையே, ‘ஆர்டர் பண்ணிட் டேன் விமலா’ என்றார் பேச்சுவாக்கில்.

‘எப்போ வரும்?’ என்று ஆர்வத்துடன் கேட்டேன் நான்.

‘சரியாத் தெரியலை’ என்றார் அவர், ‘இதெல்லாம் கொஞ்சம் லேட் ஆவும். அநேகமா பதினஞ்சு நாள்ல வந்துடும்னு நினைக்கிறேன்.’

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். பொம்மையைத் தேர்ந்தெடுத்து, அதற்கு உண்டான காசை யும் கடன் அட்டை வழியே நயா பைசா மிச்சம் இல்லாமல் எண்ணிக் கொடுத்துவிட்ட பிறகு, என்னத்துக்கு 15 நாள் காத்திருக்க வேண்டும்?

இப்படிக் கோபப்பட்டாலும், நான் தேர்ந்தெடுத்து இருந்த பொம்மையின் அழகு என்னைக் கொஞ்சம் சமாதானப்படுத்திவிட்டது. எங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு ஹைடெக் பொம்மையை, அதுவும் இன்டர்நெட் மூலம் வாங்கித் தந்து ஏ, பி, சி, டி கற்பிப்பதன் மூலம், மற்ற பெற்றோரைவிட நாங்கள் ஒருபடி மேலே உயர்ந்துவிட்டதுபோல் பெருமிதமாகக்கூட உணர்ந்தேன்.

கேட்டால் சிரிப்பீர்கள்… தபால் அல்லது கூரியரில் மேற்சொன்ன பொம்மை வரும் வரை, அதுபற்றிய குறிப்புகளைத் திரும்பத் திரும்பப் பல முறை படித்துக்கொண்டு இருந்தேன். அந்தப் பக்கத்தில் அச்சிடப்பட்டு இருந்த புகைப்படத்தைப் போல் இன்றி, வேறு வண்ணத்தில், வேறு வடிவத்தில் பொம்மை இருக்கக்கூடும் என்று நீங்கள் எழுதியிருந்தது என் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துவிட்டது.

Pommai2

எங்கள் மகளுக்கு இதைப் பற்றி எல்லாம் எதுவும் தெரியாததால், அவள் பாட்டுக்கு வழக்கம்போல் விளையாடிக்கொண்டு இருந்தாள். வருகிற பொம்மை உருப்படியாகவும் அவளுக்குப் பயன்படும் விதமாகவும் இருக்க வேண்டுமே என்கிற கவலை எல்லாம் எனக்குத்தான். அந்தத் தவிப்பைத் தீர்ப்பதற்காகவேனும் உங்கள் பொம்மை சீக்கிரத்தில் வந்துவிட்டால் நல்லது என்று தோன்றியது.

இன்டர்நெட்டில் ஆர்டர் செய்த ஒன்பது தினங்களுக்குப் பிறகு, டொப் டொப் என்று வெடித்து விளையாட ஏற்ற சிறு பிளாஸ்டிக் குமிழ்கள் நிரம்பிய காகிதத்தால் பத்திரமாகச் சுற்றப்பட்டுக் கிடைத்தது உங்கள் பொம்மை. அழகான கைப்பிடியுடன் பார்க்க ஜோராக இருந்தது.

ஆனால், அதைத் திறந்து, பிரதானமான சிவப்புப் பொத்தானை அமுக்கியபோது, திரையில் எதுவும் காணோம். திகைத்துப்போய் பொம்மையைத் தலைகீழாகத் திருப்பிப் பார்த்தால், அதன் பொக்கை வாய்த் திறப்பில் மூன்று பேட்டரிகள் பொருத்த வேண்டும் என்று தெரிந்தது.

கடந்த சில நிமிடங்களில் எனக்குள் பொங்கியிருந்த உற்சாகம் எல்லாம் சடார் என்று சரிந்துவிட்டது. பொம்மை விற்ற மகராசன், கூடவே அதற்கான பேட்டரியை யும் தர மாட்டானோ என்று ஆதங்கமாக இருந்தது.

இதே பொம்மையை எங்கள் தெருமுனைக் கடையில் வாங்கியிருந்தால், ‘பேட்டரிகளும் இலவசமாகத் தந்தால்தான் ஆச்சு’ என்று சண்டை போட்டுப் பேரம் பேசியிருப்பேன். இன்டர்நெட்டில் அதெல்லாம் முடியாதோ என்னவோ?

அப்படியே முடிந்தாலும், பேரம் பேசச் செலவழிக்கும் நேரத்தில் மூன்று பேட்டரிகள் காசு போட்டு வாங்கிவிடலாம் என்று வாதிடுவார் என் கணவர். அவருக்குப் பணத்தைவிட, நேரத்தை வீணடிக்காமல் இருப்பதும் சுய கௌரவமும்தான் முக்கியம் என்று ஒரு வேஷம். அதன் பின்னணியில் இருப்பது சுத்தமான சோம்பேறித்தனம்.

ஆக, தேவையான பேட்டரிகளைத் தராமல் பொம்மையை உயிர் இன்றி அனுப்பிவைத்ததற்காக உங்கள் மேல் எழுந்த கோபம் அவர் மீது திரும்பி, கடைசியில் அம்பு முறிந்து விழுந்தது. உடனடியாக, வீட்டில் இருக்கிற சிறு கடிகாரங்களை எல்லாம் நோண்டி, எப்படியோ மூன்று பேட்டரிகளைத் தேற்றிவிட்டேன்.

ஆனால், அவற்றில் ஒரு பேட்டரி மிக மிகச் சிறியதாக, ஒன்றரை வயது ப்ரியாவின் சுண்டுவிரல் தடிமன்தான் இருந்தது. ஆகவே, உங்கள் பொம்மை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகுதான், அஞ்சறைப் பெட்டியில் சில்லறை தேடி எடுத்துக்கொண்டு, குழந்தையையும் தூக்கிக்கொண்டு பேட்டரி வாங்கக் கிளம்பினேன்.

அடுத்த கால் மணி நேரத்துக்குள், புத்தம் புதுசாக மூன்று பேட்டரிகள் வாங்கி வந்து, உங்கள் பொம்மைக்குத் தின்னக் கொடுத்தேன். ஆனால், அதன் பிறகும் சிவப்புப் பொத்தான் மௌனம் சாதித்தது. அதன் பக்கத்தில் இருக்கிற சிறு விளக்கும் எரிகிற வழியைக் காணோம்.

பொம்மையில் ஏதோ பிரச்னை என்று முதன்முறையாகத் தோன்றியது அப்போதுதான். அட்டைப் பெட்டியை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு, பேட்டரிகள் சரியான திசையில்தான் பொருத்தப்பட்டு இருக்கின்றனவா என்று சோதித்தேன். கைப்பிடியை இறுகப் பிடித்துக்கொண்டு, அதை ஒரு முறை உலுக்கிப் பார்த்தேன். ம்ஹும், பயன் இல்லை.

ஐயோ, நானூற்றுச் சொச்ச ரூபாய் போச்சே என்று பதைபதைப்பாகிவிட்டது. அவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால், கண்டிப்பாகத் திட்டுதான் விழும். ‘எப்பப் பாரு… நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கும்போதுதான் நீ போன் பண்றே… உனக்கு அறிவு இல்ல..?’

இவர் எப்போது மீட்டிங்கில் இருப்பார், எப்போது வெட்டியாக உட்கார்ந்து பல் குத்திக்கொண்டு இருப்பார் என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? இப்போது இந்தப் பொம்மையை என்ன செய்வது?

வேறு வழி இல்லாமல், மாலை வரை காத்திருந்தேன். புத்தக அலமாரி மேல் உபயோகம் இன்றிக்கிடந்த அந்தப் பொம்மையைப் பார்க்கும்போது எல்லாம் மனதில் என்னென்னவோ யோசனைகள். 400 ரூபாய் வீணாகிவிட்டது என்பதை ஏற்பதற்கு முடியாமல் தவித்தேன். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம், காரணம் இல்லாமல் அப்படிப் போய்விடாது என்று ஒரு நம்பிக்கை இருந்தது.

ஆகவே, இந்தப் பொம்மைக்கு உயிரூட்டுவதில் எனக்குத் தெரியாத ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது என்று நிச்சயமாக எண்ணினேன். அவர் அலுவலகத்தில் இருந்து வந்ததும், என்னால் கண்டறிய முடியாத அந்த ரகசியத்தைக் கண்டுகொள்வார், பொம்மை இயங்கத் தொடங்கியதும்,

என்னைப் பார்த்து ‘மக்கு… மக்கு’ என்று கேலியாகச் சிரிப்பார். 400 ரூபாய் வீணாவதைவிட, அந்தக் கிண்டல் பேச்சைத் தாங்கிக்கொள்வது உத்தமம் என்று தோன்றியது.

என் வேண்டுதல் பலிக்கவில்லை. அவரா லும் உங்கள் பொம்மையை இயக்க முடிய வில்லை. என்னைக் காட்டிலும் சற்று அதிக நேரம் அந்த பொம்மையை மேலும் கீழுமா கப் புரட்டிச் சோதித்தவர், தன்னுடைய இன்ஜினீயர் பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, ஸ்க்ரூடிரைவர் கொண்டு சில திருகாணிகளைக் கழற்றிப் பிரித்துக்கூடப் பார்த்தார். ஆனால், அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

‘ம்ஹும்…’ என்று பெரிதாக உதட்டைப் பிதுக்கியவர், ‘வேற வாங்கிக்கலாம் விடு’ என்றார் சாதாரணமாக.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ‘400 ரூபாய் சமாசாரத்தை இப்படியா விட்டேத்தி யாகத் தூக்கி எறிவார்கள்’ என்று பதற்றத்துடன் கேட்டேன்.

‘அதுக்கு என்னப்பா செய்ய முடியும்?’ என்று அலுத்துக்கொண்டவர், ‘நெட்ல வாங்கினா இப்படிதான்’ என்றார்.

‘இதை நீங்க முன்னாடி சொல்லலையே’ என்று நான் கோபமாகக் கேட்டதற்கு அவரிடம் இருந்து பதில் வரவில்லை. ‘வேற நல்ல பொம்மையாப் பார்த்து கொழந்தைக்கு வாங்கிக்கலாம். டோன்ட் வொர்ரி’ என்று சொல்லிவிட்டு, டி.வி-யைப் பார்க்கத் திரும் பிக்கொண்டார்.

அவர் பிரித்துப்போட்டு இருந்த பொம்மையைப் பல நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கண் முன்னே எங்களுடைய காசுக்கு இப்படி ஓர் அநியாயம் நடந்து இருப்பதைப் பார்க்க மனதாகவில்லை. அதை அவர் கண்டுகொள்ளாமல் பொழுதுபோக்கிக்கொண்டு இருந்தது இன்னும் ஆத்திரமாக இருந்தது.

அன்று இரவு தொடங்கி, அடுத்த மூன்று நாட்கள் எங்களிடையே தொடர் சண்டை. எப்படியாவது இதைச் சரி செய்தால்தான் ஆச்சு என்கிற என்னுடைய பிடிவாதமும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிற அவருடைய சோம்பேறித்தனமும் கடுமையாக மோதிக்கொண்டன.

‘உனக்கு ஒண்ணுமே புரியலை’ என்று என்னைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ள முயன்றார் அவர். ‘இந்த மாதிரி நெட்ல வாங்குற பொருளுக்கு எல்லாம் எந்த கேரன்ட்டியும் கிடையாது. இந்தக் கையில வாங்கி, அந்தக் கையில நமக்குக் கொடுக்கிறதுக்காக அவனுக்குக் காசு, அவ்ளோதான். மத்தபடி இது பொம்மையா, பொட்டலம் கட்டின களிமண்ணானுகூட அவனுக்குத் தெரியாது.’

‘அதை நீங்களா ஏன் முடிவுபண்றீங்க?’ என்று ஆவேசமாகத் திருப்பி வாதிட்டேன் நான்.

‘இந்த மாதிரி ஒரு பொருள் டேமேஜ் ஆயிடுச்சுனு நீங்க நெட்ல சொன்னா, அவன் பதில் சொல்ல மாட்டானா?’

‘மாட்டான்.’ முடிவாகச் சொன்னார் அவர், ‘நீ நினைக்கிற மாதிரி இன்டர்நெட்டுங்கிறது உங்க ஊர்க் கடைத்தெரு இல்லை. அங்கே போய் அநாவசியமாக் கத்திக்கிட்டு இருக்கிறது வேஸ்ட். நான் என்னோட நேரத்தை அப்படி வீணடிக்கத் தயார் இல்லை.’

அவ்வளவுதான். அதன் பிறகு பல மணி நேரங்களுக்கு நான் அவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ‘அது எப்படி ஒரு மனிதருக்கு இப்படி 400 ரூபாயை வீணடிக்க மனசு வருகிறது? இதுபோல் அநியாயமாக ஒருவன் காசைப் பிடுங்கிக்கொண்டு, ஓட்டைப் பொருளை விற்கும்போது, யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது என்றால், அது என்ன மண்ணாங்கட்டி இன்டர்நெட்டு?’

நினைக்க நினைக்க எனக்குத் தாங்கவில்லை. இந்தப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்க ஏதோ ஒரு வழி நிச்சயமாக இருக்க வேண்டும். அதை ஒழுங்காக விசாரித்துக் கண்டுபிடிக்கத் துப்பில்லாமல்தான், இவர் இப்படி வெட்டி நியாயம் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று உறுதியாகத் தோன்றியது.

மறு நாள் காலை, ‘நான் இந்தப் பொம்மையை அதே அட்ரஸுக்குத் திருப்பி அனுப்பப்போறேன்’ என்றேன் அவரிடம்.

‘வேஸ்ட்’ என்றார் அவர் ஒரே வார்த்தையில். ‘நான் வேணும்னா காசு தர்றேன். பத்து கடை ஏறி இறங்கி, இதே மாதிரி நல்ல பொம்மையைத் தேடி வாங்கிக்கோ. மத்தபடி இதைத் திருப்பி அனுப்பறது, அது ஒழுங்கா மறுபடி திரும்பி வரும்னு எதிர்பார்க்கறது எல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்!’

நான் அவருக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. பொம்மையைப் பழையபடி பெட்டிக்குள் போட்டு ஒட்டிவிட்டு, இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நான் நினைப்பது சரியா அல்லது, அவர் சொல்வதுதான் யதார்த்தமா என்று எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், இந்தக் கடிதத்தை நீங்கள் பிரித்துப் படிக்கக்கூட மாட்டீர்கள் என்று அவர் சொல்கிறார். அது உண்மையா கவும் இருக்கலாம். ஆனால், என் மனதுக்குப் பட்டதைக் கொஞ்சமாவது சொல்லிவிட்டால்தான் எனக்கு நிம்மதி.

நீங்கள் அனுப்பிய பொம்மை இயங்காததைக் கண்டதும், நான் தவித்தது எனக்குத்தான் தெரியும். எத்தனை முயன்றாலும், அந்த மன வருத்தத்துக்கு எல்லாம் சமமான ஓர் இழப்பீட்டை உங்களால் தரவே முடியாது.

மேற்படி பொம்மை மீது ஆசைகொண்டவள் நான்தான்; என் மகள் அல்ல. ஆகவே, இந்தப் பொம்மை இயங்காதது குறித்து அவளுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆசைப்பட்டதைக் குழந்தைக்கு விளை யாடத் தர முடியவில்லையே என்கிற ஏக்கம் எனக்குத்தான். அதற்காகச் செலவழித்த பணம் இப்படி வீணாகிவிட்டதே என்கிற ஆதங்கமும் எனக்குத்தான்.

இதே பொம்மையை நான் கடைத்தெருவில் வாங்கியிருந்தால், நிச்சயமாக இப்படி ஓர் ஓட்டைப் பொருளை ஏற்றுக்கொண்டு இருக்கவே மாட்டேன். எந்தக் கொம்பாதி கொம்பனும் என்னை இப்படி ஏமாற்றியும் இருக்க முடியாது.

கடைத்தெருவும் இன்டர்நெட்டும் ஒன்று இல்லை என்று என் கணவர் வாதிடுகிறார். ஆனால், பிரபஞ்ச நியாயங்கள் அப்படி எல்லாம் இடம், பொருள், ஏவல் பார்த்து மாறாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நீங்கள் உங்கள் கடையை எங்கே விரித்து இருந்தாலும் எங்களைப் போன்ற வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் உண்மையாக இயங்குவதுதான் ஒழுங்கு, அதுதான் முறையும்கூட.

உங்களைப் பொறுத்தவரை இந்தப் பொம்மைக்கான முழு விலையையும் நாங்கள் பைசா மீதம் இன்றிச் செலுத்தி விட்டோம். அதற்கு ஏற்ப, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்குத் தர வேண்டியது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் அதில் தவறிவிட்டீர்கள்.

இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத் தில்கொண்டு, நீங்கள் இந்த ஓட்டைப் பொம்மையை ஏற்றுக்கொண்டு, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்கும்படி வேண்டுகிறேன்.

ஆண்டவன் எங்களை நன்றாகவே வைத்திருக்கிறான். இன்னொரு 400 ரூபாய் செலவழித்து, இதே போன்ற பொம்மை ஒன்றைத் தேடி வாங்குவது எந்த விதத்திலும் எங்களுக்குச் சிரமமான விஷயம் இல்லை. ஆனால், வாழ்வில் நியாயத்துக்குக் கட்டுப்பட்ட ஓர் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிற என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கை, உங்களுடைய நேர்மையற்ற தன்மையால் குலைவதை நான் விரும்பவில்லை. நீங்களும் விரும்ப மாட்டீர் கள் என்றே நம்புகிறேன்.

ஒருவேளை, நீங்கள் இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமலேகூடப் போய்விடலாம். அப்படியாயின், இந்தப் பொம்மையை நான் வாங்கவே இல்லை என்று நினைத்துக்கொண்டுவிடுகிறேன்.

ஓர் அநீதியின் சாட்சியாக இந்தப் பொம்மை என்னை வாழ்நாள் முழுதும் உறுத்திக்கொண்டே இருக்க வேண்டாம். அந்த விதத்திலும், இதைத் திருப்பி அனுப்பி விடுவதுதான் நல்லது என நினைக்கிறேன்.

நன்றிகள்.
என்றும் அன்புடன்…
விமலா

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *