பொம்மை வண்டி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 4,086 
 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகல் மூன்று மணி இருக்கும் தெருக் கோடியில் விளையாட்டு வண்டியின் ‘டம், டம்’ என்ற சத்தம் கேட்டது. பத்து நாட்களுக்கு முன்புதான் அந்தத் தெருவில் அவன் தன் வியாபாரத்தைத் தொடங்கியிருந்தான். வழக்கம்போல் அவன் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் நின்று, “அம்மா! குழந்தைகள் விளையாடறத்துக்கு இது நல்ல வண்டி, அம்மா!” என்பான். பிறகு, தன்னை வேடிக்கையாகப் பார்க்க வரும் குழந்தைகளை நோக்கி, “என் ராசாக்ககளா! இந்த வண்டியிலே நீங்க டெல்லிப் பட்டணம் முழுக்க ஜோரா சுத்தலாம்!!” என்று தன் விற்பனைப் பிரசங்கத்தை ஆரம்பித்தி சின்னஞ் சிறு உள்ளங்களை மயக்கி விடுவான்.

மீனாவும், பசுபதியும் டெல்லிக்கு மாற்றலாகி வந்து நான்கு ஆண்டுகளாகி விட்டன. இருந்தாலும், அந்தத் தெருவுக்கு அவர்கள் அப்பொழுது தான் புதிதாகக் குடி வந்திருந்தார்கள். அவர்கள் வீட்டு வாயிலிலும் நின்று கிழவன் உரத்துக் கூவினான். ஜன்னல் வழியாக ஓர் உருவம் தென் படவே, அந்தக் கிழவனின் உற்சாகம் அதிகமாயிற்று. ஆவலுடன் போணிக்கு அந்த உருவத்தை அவன் எதிர்பார்த்தான். திடீரென்று வாயில் கதவு திறந்தது. கண்களில் நீர் தளும்பும் ஒரு பெண்ணுருவம், “இந்த வீட்டில் குழந்தைகள் கிடையாது; நீ போ, அப்பா!” என்று ஆத்திரமும், துக்கமும் கலந்த குரலில் சொல்லி விட்டு, கதவைப் படீரென்று சாத்திக் கொண்டு உள்ளே மறைந்து விட்டது.

இந்தச் சம்பவத்தை அந்தக் கிழவன் மறக்கவேயில்லை. இல்லை யென்றால் மறுநாளும் அந்த வீட்டின் வாயிலில் வந்து அவன் நின்றிருக்க மாட்டானா?


அடுத்த நாள் அதே நேரத்தில் அவன் தெருவில் போய்ச் கொண்டிருந்தான். உள்ளே மீனாவும் அவன் கணவன் பசுபதியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று எங்கிருந்தோ வந்த பொம்மை வண்டியின் சத்தம் அவர்கள் பேச்சில் குறுக்கிட்டது. ”அது என்ன சத்தம்?1″ என்று பசுபதி கேட்டான்.

“அதுவா, குழந்தைகளுக்கான பொம்மை வண்டி! ஒரு சின்ன ‘டாங்கா’வில் ஒரு டமாாத்தைச் சேர்த்து வைத்திருக்கிறன்!’ என்றாள் மீனா.

இதைக் கேட்டவுடனேயே இத்தனை நேரமும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த பசுபதியின் முகம் மாறி விட்டதை மீனா உணர்ந்தாள். அதற்குமேல் அதிக நேரம் அவன் அங்கு உட்கார்ந்திருக்க வில்லை. தனக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டுப்போய் விட்டான். மீனாவும் அவனைத் தடுத்து நிறுத்தவில்லை. அப்படியே அவள் ஏதாவது சொல்லி யிருந்தாலும் வாதப் பிரதிவாதங்கள் பலத்து, கடைசியில் மனப் புயலில்தான் முடியும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

2

மீனாவுக்குக் கலியாணமாகி எட்டு வருஷங்களாகி விட்டன. இதுவரை புத்திர பாக்கியமே ஏற்படவில்லை. கலியாணம் ஆனதம் ஊருக்குச் செல்வதற்கு முன் மீனாவீன் மாமியார் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொள்ளும்பொழுது, “கூடிய தீக்கிரம் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு வருவீர்கள். இன்னும் ஒரு வருஷத்திற்குள் மீனாவின் சீமந்தம் வருமே அதற்கு வந்து விடுங்கள்!” என்று சொல்லிவிட்டுப் போனாள். பாவம், அவளும் அந்தச் சீமந்தத்தைப் பார்க்காமலேயே பரலோகம் போய்ச் சேர்ந்தாள்.

ஆறு மாதத்திற்கு முன்பு மீனாவின் நாத்தனார் ரங்கம்மாள் வந்திருந்தபொழுது வீட்டில் ஏக ரகளை உண்டாயிற்று. ஒரு நாள் ரங்கம்மாள் தன் தம்பியிடம், “அந்தப் பெண் மலடோ என்னவோ, அதுதான் கொழந்தை பொறக்களை! சனியனைத் தள்ளி வைச்சுட்டு வேறே நல்ல பெண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோயேன்!” என்று உபதேசித்தாள்.

இதைக் கேட்ட பசுபதி ருத்ரமூர்த்தி யானான். ”அவள் மலடி இல்லே ரங்கா, நான்தான் மலடு!” என்ற அவன் உறுமினான்.

அன்றிரவு தமக்கையை ஊருக்கு அனுப்பி விட்டுப் பசுபதி திரும்பி வந்தபோது, ”அதென்ன, சாயங்காலம் அக்காவிடம் அப்படிக் கோபித்துக் கொண்டீர்களே, அவர் மனம் நோகலாமா?” என்று மீனா கேட்டாள்.

”எது, ‘ஒரு கன்னத்தில் உன் விரோதி அடித்தால், மற்றெரு கன்னத்தையும் காட்டு’ என்றாராமே ஏசு, அவரைக்கூட நீ தோற்கடித்து விடுவாய் போலிருக்கிறதே! உன்னைத் தள்ளிவிட்டு இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கோன்று அவள் சொல்வதை நான் கேட்டுச் சகிச்சுண்டு இருக்கணுமோ? இப்ப நான்தான் மலடுன்னு டாக்டர் சொல்லியாச்சு! அப்படீன்னா உனக்கு வேறே கல்யாணம் பண்ணி வைக்க இந்த அக்கா சம்மதிப்பாளா?” என்றான்.

“சரிதான், ரொம்ப சமத்தாப் பேசாதேயுங்கோ! ஏதோ தெரியாமல் சொல்லிவிட்டார். என்ன இருந்தாலும் கூடப் பிறந்த தமக்கை இல்லையா?” என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள் மீனா.

3

ஒரு நாள் மீனாவுக்குத் தன் தோழி பஸந்தி தேவியின் நினைவு வந்தது. அவள் ஒரு ‘ஸேவா ஸ்தன’த்தின் தலைவியாக இருந்தாள். உடனே அவளை ‘டெலிபோ’னில் கூப்பிட்டு, “நான் சாயங்காலம் ஒரு முக்கிய விஷயமாக உங்களைக் காண வருகிறேன் ” என்று அறிவித்தாள்.

அன்று மாலை ஆசிரமத் தலைவியிடம் தன் ஆசையை வெளியிட்டாள் மீனா. அதைக் கேட்ட பஸந்தி, “சரியான சமயத்தில் வந்தீர்கள், மீனா! பஞ்சாப், எல்லைப்புற மாகாணக்களிலிருந்து எங்கள் ஆசிரமத்திற்கு அகதிக் குழந்தைகள் வந்த வண்ணமாக இருக்கின்றன என்றுதான் உங்களுக்குத் தெரியுமே! நான்கு நாட்களுக்கு முன்னர் இரண்டு குழந்தைகள் வந்திருக்கின்றன. சுமார் மூன்று வயது இருக்கும், இரட்டைகள் போலிருக்கிறது, பாவம், நாங்கள் என்ன சொன்னாலும் சமாதான மடையாமல் அழுகிறதுகள். அதுகள் பேசும் பாஷை எங்களுக்குப் புரியவில்லை. பஞ்சாபி, உருது, பொஷ்து எல்லாம் பேசிப் பார்த்தோம். கடைசியாக உங்களைக் கூப்பிட்டு ‘மதறாஷிக் குழந்தை’களோ என்னவோ என்று கேட்க வேண்டு மென்றிருந்தேண். அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்!” என்று ஹிந்தியில் சொன்னாள்.

அந்தக் குழந்தைகளைப் பற்றிக் கேட்டவுடனேயே, அவர்களைக் காண விரும்பினாள் மீனா. பஸந்தி தேவி அக்குழந்தைகளின் அழகும், சமர்த்தும் எல்லோரையும் எப்படி வசீகரித்துவிட்டது என்பதை வழியெல்லாம் வர்ணித்துக்கொண்டே வந்தாள். தோட்டத்தின் ஒரு கோடியில் தனியாக நின்று கொண்டிருந்த இரு குழந்தைகளைக் காட்டி, “நான் சொன்ன குழந்தைகள் இவர்கள்தான்!” என்றாள்.

கண்ணீர்க் கரை படர்ந்திருந்த இரு முகங்கள் விளையாட்டில் லயித்திருப்பதைக் கண்ட மீனாவின் உள்ளம் உடனே அவர்களிடம் தாவியது. குழந்தைகளை அணைக்க அவள் கைகள் துடித்தன. “என்ன கண்ணே, என்ன வேனும்மா? உன் பெயரென்ன பாப்பா?” என்று அவள் தங்களுக்குப் பரிச்சயமான பாஷையில் பேசவே, குழந்தைகளின் முகவாட்டம் மறைந்தது. பெண் குழந்தை, “நா தம்மூ, இது தியாகு!!” என்றது.

“சரி, அசல் தமிழ்ப் பெயர்கள் தான்! தர்மாம்பாளும், தியாகராஜனும்!” என்று பஸந்தி தேவியிடம் கூறினாள் மீனா.

சிறிது நேரம் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்ததில் மீனாவுக்குப் பொழுது போனதே தெரியவில்லை. திடீரென்று கைக் கடிகாரத்தைப் பார்த்ததும், மணி ஏழு. அவர் வரும் நேரமாகி விட்டது; நான் என்னுடனேயே குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகலாமா?” என்று வினவினாள் மீனா.

அதற்குப் பஸந்தி, “அம்மா, எங்கள் ஆசிரம விதிப்படி சுவீகாரம் எடுத்துக் கொள்பவர்கள் சில பத்திரங்களில் கையெழுத்திட்டு, குழந்தைகளைச் சரியாகக் கவனித்துக் கொள்கிறோம் என்று எழுதிக் கொடுக்கவேண்டும். உங்கள் கணவரும் கையெழுத்திட வேண்டும். ஆதலால், நீங்கள் நாளைக் காலை வாருங்கள்; அதற்குள் வேண்டிய ஏற்பாடெல்லாம் நான் செய்த வைக்கிறேன்” என்றாள்.

“சரி, நாளை பொழுது விடிந்தவுடன் நான் வந்துவிடுகிறேன்” என்று மீனா சொன்னாள்.

தம்மூ, மீனா போவதைக் கண்டதும் “அம்மா, போகாதே! நானும்…” என்று அழத் தொடங்கிவிட்டாள்.

அதைக் கேட்ட மீனாவின் உள்ளம் உருகி விட்டது.”நாளைக் காலையில் வந்து அழைத்துப் போறேண்டி. கண்ணு!” என்று தேறுதல் சொல்லிவிட்டு வந்தாள். இன்னும் சரியாக இரண்டு மணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள் தம்முவைப் பிரிவதென்றால் மீனாவுக்கு எவ்வளவு வேதனை!

4

இன்னும் இரண்டு நாள் சென்றால் தீபாவளி, ஆனால் அதைக் கொண்டாட மீனா அன்று வரை ஒரு ஏற்பாடும் செய்யவில்லை. ஆனால், இன்றோ வீட்டிற்குள் நுழைந்தவுடன் சமையற்காரனைக் கூப்பிட்டு தீபாவளி யன்றைக்கு நிறையப் பக்ஷணங்கள் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டாள். வேலைக்காரனை வைத்துக் கொண்டு இதுவரை பூட்டிக் கிடந்த மாடி அறையை ஒழித்துச் சுத்தம் செய்தாள். நாளை தியாகுவும், தம்முவும் இதில் தானே விளையாடப் போகிறார்கள்? வீடு முழுவதும் தானே மாக்கோலம் போட்டான். ஜவுளிக் கடைக்குப் ‘போன்’ செய்து, மூன்று வயதுக் குழந்தைகளுக்குச் சரியான அளவில் பட்டாடைகள் அனுப்பச் சொன்னாள். இவள் இந்த ஏற்பாடெல்லாம் செய்வதற்குள் பசுபதியின் மோட்டார் ‘ஹார்ன்’ சத்தமும் கேட்டது.

எங்கு பார்த்தாலும் விளக்கும். கோலமும், மாவிலையும், தோரணமும், தாங்க முடியாத ஆனந்தத்தால் துள்ளிக் குதிக்கும் மனைவியையும் கண்ட பசுபதிக்கு ஒன்றும் புரியவே யில்லை. ”உள்ளே வாருங்கள், எல்லாம் சொல்லுகிறேன்” என்றாள் மீனா.

அவனுக்கு வேண்டிய சிச்ருஷைகளைச் செய்து கொண்டே எல்லாவற்றையும் ஆதியிலிருந்து சொன்னாள் மீனா. இந்தச் செய்தியைச் கேட்டால் கணவனும் சந்தோஷத்தால் குதிப்பான் என்று பார்த்த மீனாவுக்கு, பசுபதியின் மௌனமும் யோசனையில் ஆழ்ந்த முகமும் சற்றே ஏமாற்றமளித்தன.

”மீனா! இதை எனக்காகச் செய்ய முன் வந்தாயா? வேண்டாம், வீண் தொந்தரவு! இதனால் எவ்வளவு சிரமம் உண்டாகு மென்று யோசித்துப் பார்த்தாயா? ஒரு சிறு குழந்தையை வளர்ப்பதே கஷ்டம், இரண்டு குழந்தைக ளென்றால் உன்னால் முடியாது!”

“நன்றாய்ச் சொன்னேள்! உங்களுக்காக என்றால், இந்தக் காரியத்தை இரண்டு வருஷங்களுக்கு முன்னேயே செய்திருக்க மாட்டேனா? இப்பொழுது மாத்திரம் என்ன, நானாவேதான் விரும்பிச் செய்கிறேன். குழந்தை மாத்திரம் வேண்டும், தேகம் நலூங்கக் கூடாது என்றால் எப்படி முடியும்?” என்று எதிர்க் கேள்விகளினால் அவனை மடக்கினா மீனா.

அன்றிரவு முழுவதும் மீனா குழந்தைகளைப் பற்றியேதான் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள். கணவன் களைப்பு மிகுதியால் தன்னையும் அறியாமல் தூங்கி வீட்டான் என்று அறிந்த பிறகே அவளும் சற்றுக் கண்ணயர்ந்தாள்.

மறுநாள் காலை எட்டு மணிக்குள் இருவரும் ஆசிரமத்தை அடைந்தார்கள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம்முவும், தியாகுவும் மீனாவைக் கண்ட மாத்திரத்தில், “அம்மா” என்று கூவிக் கொண்டே, அவள் காலைக் கட்டிக் கொண்டார்கள். பக்கத்தில் ஒரு மாமா நிற்பதைப் பார்த்ததும் தீயாகுவுக்குக் கொஞ்சம் சங்கோசமாக இருந்தது. பஸந்தி தேவியும் இவர்கள் வரவை அறிந்து அங்கு வந்தாள்.

குழந்தைகளை நேரில் கண்ட பசுபதிக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் போய்விட்டது. எப்பொழுது அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துப் போகலா மென்று அவனுக்கு ஆத்திரமாக இருந்தது. கையெழுத்துப்போடவேண்டிய தெல்லாம் போட்டு, பஸந்தி தேவியிடம் விடை பெற்றுக் கொண்டு இருவரும் குழந்தைகளுடன் வீடு திரும்பினார்கள்.

வீடு வந்ததும் பசுபதியிடம், “குழந்தை கொஞ்சம் கவனிச்சுக்குங்கோ, இதோ வந்துடறேன்!” என்று கூறி உள்ளே போனாள். கால் மணி நோம் கழித்து அவள் வந்து பார்த்த பொழுது, ட்ராயிங் ஹாலில் ஏகக் கூச்சல்! நாற்காலிக ளெல்லாம் ஒரு ஓரமாகத் தள்ளப்பட்டிருந்தன. பசுபதி கீழே தவழ்ந்து கொண்டிருந்தான். அவன்மேல் தம்மு உட்கார்ந்திருந்தாள். குழந்தைகள் இருவரும், “ஏ, யானை! போ, போ!” என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

“சரி, விளையாடினது போதும்! குளிக்க வாங்கோ!” என்ற மீனாவின் குரல் கேட்ட பின்னரே, குழந்தைகளின் உலகில் தன்னை மறந்திருந்த பசுபதியும் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் முகம் தாய்மைப் பெருமையால் பிரகாசிப்பதைக் கண்ட அவன் முகமும் மலர்ந்தது.


கடிகாரத்தில் மணி மூன்று அடிப்பதற்கும் தெருக்கோடியில் பொம்மை வண்டியின் சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது. இதுவரை அவன் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்த மீனாவும் வாசலுக்கு ஓடோடியும் வந்தாள்.

இவர்களுடைய வீட்டிற்கு மேலண்டை வீட்டில் வியாபாரம் செய்தவிட்டு, கீழண்டை வீட்டிற்குப் போகத் தொடங்கினான் அந்தக் கிழவன். மீனா அவனைக் கை தட்டி அழைத்து, “இங்கே வாப்பா, இரண்டு பொம்மை வண்டிகள் கொடு! எங்கள் வீட்டிலேயும் குழந்தைகள் இருக்கு!” என்றாள் பெருமை பொங்க.

அவள் அவ்வாறு சொன்னதைக் கேட்ட கிழவன், பிரமித்து அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

– 1948-01-04

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *