பொம்மைகளும் கிளர்ந்தெழும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 44,546 
 

சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க வேண்டும். நல்…ல ஒரு மனுச வாடைதான். பருவ வயசில் உடம்பிலிருந்து ஆணிலும் பெண்ணிலும் அப்படி ஒரு வாடை இருக்கும்.

பொம்மைகளும்

ஆயி தன்னுடைய தோள்களை கக்கத்தை முகர்ந்து பார்த்தாள். சை, இது ஒருவகையான வேர்வை வாடை நடுவயசை அடைந்துவிட்டவர்களுக்கான ஒரு இளம் கொச்சைவாடை. இது அதுஇல்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஆயி ரொம்பச் சின்ன வயசிலேயே பொட்டு(தாலி) இழந்தவள். அன்றிலிருந்து ஒருவேளைச் சாப்பாடுதான். அப்படிச் சாப்பிடும்போது அளவு கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் எவ்வளவு நேரமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். கை கழுவி விட்டால் நாள் முடிந்தது; அதனால் இலையில் கையை வைத்துக் கொண்டே ஒரு தூக்கம் போட்டுவிட்டுத் திரும்பவும் சாப்பிடலாம்! அதனால் வீட்டில் எல்லோரும் மதியச் சாப்பாடு முடித்து, பிறகுதான் இவள் சாப்பிட உட்காருவாள். நீளமான பந்திஜமுக்காளத்தை விரித்து மீதிப்பகுதியை தலையணைபோல் அமைத்துதான் உட்காருவாள்.
வீட்டின் சுகவாசிகள் மதியச் சாப்பாட்டை முடித்த தலை சாய்த்த பிறகுதான் வாய்க்கும்.

இலையில் தொடுகறிகள் முதற்கொண்டு உப்பு முதல் மோர் வரை எல்லாத்தையும் அரைவட்டமாக வைத்துக் கடை பரப்பிக் கொண்டு சாப்பிட உட்காருவாள் ஆயி.

ஆற அமர, அவசரமில்லாமல் பருப்புச்சோறு, நெய், சாம்பார், காரக்குழம்பு, ரசம் என்று ஆரம்பித்து வர்ணம் ராகம் தானம் பல்லவி என்று வரிசையாக ரயில் வண்டி டக்குகள் போலப் போய்க் கொண்டே இருக்கும். எந்தச் சோற்று உருண்டைக்கு எது தொடுகறி என்றும் எந்த தொடுகறியை எதோடு சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் அத்துபடி.

தண்ணீரை, இடையில் குடிக்காதே கடையில் மறக்காதே என்ற ஆன்றோர் வாக்கெல்லாம் மனப்பாடம்.

ஒவ்வொரு சோற்றின் முடிவில் அதிலும் ரசம், மோரில் இலையை வளித்து வளித்து நாக்கில் தேய்க்கும் தேய்ப்புக்கு உவமை சொல்லத் தெரியவில்லை. வாழை இலையின் மணமும் அதோடு சேர்ந்து வரும். இதற்கு இளவாழை இலையே விசேஷம்.

இப்படித் தொய்ந்து தொப்பையினுள் போய்க் கொண்டே இருக்க இருக்க “மூத்தவள்’ (தூக்கம்) வந்து கண் இமைகளைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்தாள். சாயப்போகும் பம்பரம் தலையை ஆட்டுவதுபோல அப்படியே பந்தி ஜமுக்காளத்தின் சுருளில் தலைசாய்த்துவிடும். வீழ்ந்தாலும், சோற்றுக்கை மட்டும் கவனமாக இலையில் இருக்கும். ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடித்து திரும்பவும் சாப்பாடு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடரும். ஆக மதியச்சாப்பாடு முடித்து எழ இளம் மாலை ஆகிவிடும்.

ராத்திரக்குப் படுக்கப் போவதற்கு முன் நாலே நாலு வயல் வாழைப்பழங்களும் ஒரு பெரிய லோட்டாவுக்கு ஒரே லோட்டா சுண்ணடக்காய்ச்சிய பால் மட்டும்தான். இது ராப்பட்டினி கூடாது என்பதற்காகத்தான். காலை சாப்பாடு என்று ஏதும் கிடையாது. டிக்கிரிப்பாலில் பனம்வெல்லாம் போட்டுக் காய்ச்சி கொஞ்சம் முதல் டிக்காக்ஷன் விட்டுச் சாப்பிடும் காப்பித் தண்ணி மட்டும்தான். மற்ற வேளைகளில் பச்சைத் தண்ணிபல்லில் படப்படாது என்று சொல்லியிருக்கிறது.

மிகச் சின்ன வயசிலேயே பூவும் பொட்டும் போய் விட்டு பிறகு ஆயிக்குட்டிக்கு இப்படியே பழகிவிட்டது. நாற்பது வருஷங்களாய்.
மனம் ஒடுங்க பட்டபாட்டினால் அவள் உடம்பு ஒடுங்கிப் போனது. அந்தக் குதிரையை இழுத்து நிறுத்த முடியவில்லை.

கடவுளே கடவுளே என்று பாசிமணி மாலையை உருட்டினாலும் வாய் கடவுள் பெயரையும் மனசு ஏதோ ஒன்றையும் இழுத்து அசைபோட்டுக் கொண்டுதான் இருக்கும்.

கட்டை (உடல்) தூக்கத்தில் கிடந்தாலும் உள்மனம் கனவுகளில் திரிந்து கொண்டிருக்கும். இந்த உடம்பை என்ன செய்ய என்று தெரியாமல் ஆயி தவித்தாள்.

விளையாட்டுப் பிள்ளைகளைக் கூப்பிட்டு, பலகார பட்சணங்களைத் தந்து, அவள் குப்புறக் கவிழ்ந்து படுத்துக் கொண்டு இடுப்பு வலிக்கிறதாகச் சொல்லி பிட்டாணிப்பகுதியில் மிதி மிதி என்று மிதிக்கச் சொல்லுவாள். அவர்களும் சந்தோசமாய் மேலே ஏறி நின்றுகொண்டு இதுக்கென்றே கட்டியிருக்கும் கொடிக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு உற்சாகமாய் போட்டிப் போட்டுக் கொண்டு மிதிசவட்டி எடுப்பார்கள். ஆயி, இன்ப முனகலாய் அலாரித்து, அப்படித்தான் அப்..படித்தாம், அய்யோ, ஆஹா என்று இன்பங் கொள்வாள். இதிலும் அடங்காத நாட்களில் குளியலறைக்குள் புகுந்து தாள்போட்டுக் கொண்டு, மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டியிலிருந்து சீறிப் பாய்ந்து வந்து முட்டும் தண்ணீர்க் கொம்பினால் உடலின் துடிக்கும் பகுதிகளில் பாயவிட்டு கண்கள் சொருக வலியின் கணக்கைத் தீர்த்துக் கொள்வாள்.

வீட்டில் வேலையில்லாத நேரங்களிலெல்லாம் சும்மா இருக்க முடியாது. ஜன்னல் வழியாக கதவு இடுக்கு வழியாக அதுவும் முடியாத போது சாவித் துவாரத்தின் வழியாக உலக நடப்புகள் நிகழ்வுகள் பேச்சுகள் இவைகளைக் கவனித்துக் கொண்டே இருப்பாள்.
“ஊருக்குள் நடக்கிறதெல்லாம் யாருக்குத் தெரியும்; ஊமைக் குமரிப் பெண்ணைக் கேட்டால்தான் தெரியும்’ என்பார்கள்.

எத்தனை வயசு ஆனால்தான் என்ன, ஆயியும் கன்னி கழியாத ஒரு குமரிப் பெண்ணே.

இந்தத் தொடர்களுக்கெல்லாம் முடிவு எப்போது?

இந்த பொம்மைகள் கிளர்ந்து எழும்போதுதான்.

– மார்ச் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)