பொண்ணு பொறந்த நேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2024
பார்வையிட்டோர்: 1,342 
 
 

மனைவி என்னும் மகராசி வந்த நேரமும், மகள் பிறந்த நேரமும் சேர்ந்து, தன் வாழ்க்கையை மாற்றி இருப்பதாக சுதாகர் நினைத்தான்.

அவன் வாடகைக்கு ஆட்டோ ஒட்டிக்கொண்டு இருந்த காலத்தில், லட்சுமியை திருமணம் செய்தான். அப்போது வரை, அரைவயிறும் கால் வயிறுமாக கஞ்சியை குடித்துக் கொண்டு, வரவுக்கும் செலவுக்கும் இடையே கால்பந்தாக இருந்த, அவனோட வாழ்க்கை லட்சுமி வந்த பிறகு முன்னேற தொடங்கியது.

வாடகை ஆட்டோவில் இருந்து, வார சம்பளத்திற்கு ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தான். அப்புறம் கொஞ்சம் துணிஞ்சு லோன் எடுத்து, சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிற அளவுக்கு முன்னேறினான்.

மகள் மானசி பிறந்ததுமே .. சொந்தமாக ஒரு சரக்கு வேன் ஒன்றும் வாங்கி, டிரைவராக லட்சுமியோட அண்ணன் கதிரவனையும் சேர்த்து கொண்டான்.

மகள் மானசி வளர வளர, அவன் செல்வமும் செல்வாக்கும் வளர்ந்தது.

இப்போது ‘மானசி டிரான்ஸ்போர்ட்’ என்னும் நிறுவனத்தின் உரிமையாளராக வளர்ந்து நிற்கும் சுதாகருக்கு, டாக்டர் மானசியின் அப்பா என்ற பெருமையும் சேர்ந்து விட்டது.

ஆம்… காலம் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அவனுடைய மகள், அவன் எதிர்பார்த்தபடியே மருத்துவ படிப்பை முடித்து, டாக்டர் ஆகி விட்டாள். இன்று மகள் மானசிக்கு திருமணம் நடக்க இருக்கிறது!

மாலையும் கழுத்துமாக அலங்கரித்து கொண்டு நிற்கும் மகளை, பார்க்க பார்க்க சுதாகருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மகள் வளர்ந்து, இப்போது மணப்பெண்ணாக நிற்பதை பார்க்கும் பொழுது… அவனுக்கு, மனைவி லட்சுமி கல்யாணமாகி வரும் போது இருந்தது போலவே தெரிந்தாள்.

உயிருக்கு உயிராக இத்தனை வருஷம் வளர்த்த மகளை திருமணம் என்ற பெயரில் பிரிய வேண்டி இருக்கிறதே என்று நினைத்த போது, அவனுக்கு கவலையாக இருந்தது. கண்கள் கலங்கியது.

“மானசி, அப்பா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கம்மா”

என்று அவன் மாமியார் சொன்னதும்…

மகள் மானசியின் கண்களில் கண்ணீர் முத்துக்கள் துளிர்க்க… அப்பா சுதாகரின் காலில் விழுந்து வணங்க வந்தாள்.

காலை தொட குனிந்தவளை தடுத்து நிறுத்தி, அவளின் தோள்பட்டையை பிடித்து தூக்கி அணைத்து கொண்டான்.

அப்பாவின் அணைப்பில் மானசி அழ ஆரம்பிக்கவே … அதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த பாச உணர்வில், அவனும் குலுங்கி குலுங்கி அழுதான்.

மகளை மார்போடு அணைத்தபடி அவன் அழுவதை பார்த்ததும், அவனை சுற்றிலும் இருந்த அனைவரும்…

அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர் .

“ஏங்க .. என்ன ஆச்சு. ஏன் அழறீங்க “

என்று மாமியார் பதட்டத்தோடு கேட்க…

“ஏங்க .. புள்ளய கையில வாங்கினதில இருந்து இவ்வளவு நேரமா திகைச்சு போன மாதிரி, அப்படியே அவளையே பார்த்துட்டு இருந்தீங்க. இப்ப திடீருனு இப்படி ஒஓன்னு அழறீங்க.?! என்ன ஆச்சுங்க?”

பதட்டதோடு மனைவி லட்சுமியும் கேட்டாள்.

‘இராத்திரி பன்னிரண்டு மணிக்கு, அவளுக்கு வயித்து வலி வந்துடுச்சுன்னு சொன்னதும், ஆட்டோவில இந்த அரசு மருத்துவமனைக்கு கூட்டி வந்து… காலையில அவளுக்கு பிரசவம் ஆகிறவரைக்கும் தூங்காம காத்திருந்த மனுஷன்….

பொட்ட புள்ள பொறந்து இருக்குன்னு சொன்னதுமே ஆசையாய் அவளை கையிலே வாங்கிட்டு… இப்ப இப்படி அழறாரே?!’

மருத்துவமனை படுக்கையில் படுத்தபடி இருந்த லட்சுமி, கணவனை குழப்பத்தோடு பார்த்தாள்.

“ஏன் மச்சான் அழுவுறே?! இப்பதான் புள்ள பொறந்திருக்கு… இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ பார்க்க வேண்டி இருக்கு. இப்பவே இப்படி அழுதா எப்படி?! “

சுதாகரின் தோளை தொட்டு, லட்சுமியின் அண்ணன் கதிரவன் கிண்டலாக கேட்க, அப்போது தான் சுதாகர் சுயநினைவுக்கு வந்தான்.

அந்த அரசு மருத்துவமனை வராந்தாவில விடிய விடிய தூங்காமல் காத்திருந்த சுதாகரை…

‘பெண் குழந்தை பிறந்து இருக்கு, வாங்க வந்து பாருங்கன்னு”

நர்ஸம்மா சொன்னதுமே, தாயையும் சேயையும் பார்க்கும் ஆவலோடு, லட்சுமி இருந்த படுக்கைக்கு அருகில் வந்தான்.

அவனுடைய மாமியார் மகளை ஒரு துணி சுருளோடு எடுத்து, கையில் கொடுக்க …

கண்களை இன்னும் சரியாக கூட திறக்காத மகள், அவன் கை பட்டதுமே சிணுங்கினாள்.

மகளை கையில் வாங்கியதுமே… சுதாகருக்கு பல எதிர்கால கனவுகள் பட படவென்று திரைப்படம் போல ஓடதொடங்கி விட்டது.

அவன் அந்த கனவிலேயே ஒன்றி போய் மகளை டாக்டருக்கு படிக்க வைத்து, வரன் பார்த்து திருமணம் செய்வது வரைக்கும் போய் விட்டான். அதில் மணப்பெண்ணாக மகளை பார்த்தவுடன், அவளை பிரிய வேண்டுமே என்று நினைத்து அழவும் ஆரம்பித்து விட்டான்.

அவன் அழுவதைப் பார்த்தவர்கள், ‘என்னவோ ஏதோ’ என்று கேள்விகளை கேட்ட பிறகு தான் அவன் சுயநினைவுக்கு வந்தான்.

“அடடா … மகளை கையிலே வாங்கி இரண்டு நிமிஷம் கூட ஆகலை, அதுக்குள்ள இருபது… இருபத்தி ஐந்து வருஷதுக்கு அப்புறம் வரப்போறதை பத்தி கனவு காண ஆரம்பிச்சிட்டேனே “

“ஏங்க, பொண்ணு பொறந்திருச்சேன்னு அழறீங்களா ?!. நீங்க தானே பொண்ணு வேணுமுன்னு கேட்டீங்க”

இன்னமும் அவன் அழுகைக்கு காரணம் புரியாமல் லட்சமி கேட்டாள்.

அவனை சுற்றிலும் நின்று அவனையே பாத்துகிட்டு இருக்கும் எல்லோருக்கும்…

‘என்ன காரணம் சொல்வது’. அவன் கண்ட கனவை சொன்னால் சிரிப்பார்களே. ‘ என்று அவன் யோசித்தான்.

மாமியார் அவன் கையில் இருந்து குழந்தையை வாங்கி, லட்சமிக்கு அருகில் படுக்க வைத்தாள்.

“அது ஒண்ணுமில்லம்மா. நீயும் புள்ளையும்,பிரசவம் முடிந்து நல்ல படியா வரணுமேன்னு கவலையில் இருந்தேன். இப்ப எனக்கு ஒரு மகாலட்சுமி பிறந்துட்டா. இத்தனை நாளா மனசுல இருந்த பயம், பாரம் எல்லாம் விலகிடுச்சு. அதான் கொஞ்சம் கண் கலங்கிட்டேன்.”

ஒரு சமாளிப்போடு மனைவியிடம் பேசி, மழுப்பலாக சிரித்தான்.

நிஜமாகவே லட்சுமி வந்த பிறகு தான்… சொந்தமாக அவன் ஆட்டோ வாங்கி ஒட்டிக்கொண்டிருக்கிறான். இப்போ பிறந்த மகளுக்கு மானசீகமாக மானசின்னு பேரு வெச்சிருக்கான்.

இதை போலவே அவன் கண்ட மற்ற கனவுகளும் நனவாகும் என்ற நம்பிக்கையோடு… மீண்டும், மகளின் மழலை முகத்தை பார்த்தான்.

மகளோ சிணுங்காமால், அப்பாவை பார்த்து புன்னகைத்தாள். அப்பாவும் மகளும் சிரிப்பதை பார்த்து, லட்சுமியும் குழப்பம் நீங்கி… மனசு தெளிவாகி.. புன்னகைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *