கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 6,867 
 
 

(1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பொட்டு வச்சிக்கிட்டு வாங்க….?’

ஷேவ் செய்து கொண்டிருக்கிறேன்.

குரலுடன் வந்த காற்று, ஒரு காதுக்குள் நுழைந்து மறுகாதால் வெளியேறியது.

‘பொட்டு வச்சிக்கிடட்டுமா….. வேண்டாமா……?’

இரண்டாவது தடவை வேகமாக வந்து வேகமாக நுழைந்து, வேகமாக வெளியேறியது.

ஷேவ் செய்யும் உத்தியில் கன்னத்துத் தோலை மேலேயும் கீழேயுமாக இழுத்துக் கொண்டிருந்தால் காதின் துவாரம் சற்றே பெரிதாகி, குரலுடன் வந்த காற்றை விரைவாக உள்ளிழுத்து விரைவாக வெளியேற்றிவிட்டதாக நினைப்பது தவறு.

காற்று வெளியேறி விட்டாலும் காற்றுடன் நுழைந்த மனைவியின் குரல் உள்ளே ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

ஒரு தமிழ்ப் பெண் அதுவும் திருமணமானவள் எப்போது பொட்டு வைக்க மாட்டாள்?

புருஷன் செத்த பிறகு!

புருஷன் தான் இதோ இருக்கிறேன், கல்லுப் பிள்ளையார் மாதிரி….. பிறகேன் ‘பொட்டு வைக்கட்டுமா’ என்னும் கேள்வி.

பொட்டு வைத்துக் கொண்டு புருஷனுடன் போவது ஒரு சராசரி மனித உரிமை.

சூழ்நிலை அதைக்கூட மறுத்துள்ளது.

நெற்றி நிறைந்த பொட்டுடன் நடக்கும் போது நான் தமிழச்சி என்பது பறைசாற்றப் படும். பஸ்ஸிலோ, பாதையிலோ போகும் போது குறு குறு பார்வைகள் வரும். குத்தல் பேச்சுகள் கேட்கும் கூட வரும் ஆண் தலையிட்டால், முதலில் வாய்த் தர்க்கம், பிறகு அடிதடி, பிறகு எங்கே போய் முடியுமோ?

அதுவே இன்னுமொரு இனக் கலவரத்துக்கும் பொட்டு வைத்து விடலாம்.

தாவாயை நிமிர்த்தி கழுத்தடியில் சேர வைத்து மேல் நோக்கி அழுத்தி இழுக்கின்றேன். தாவாயடியில் ஷேவ் செய்வதற்காக முகம் உயர்ந்ததும் பார்வை மேலே போய் விடுகிறது. இருந்தும் கழுத்தடியில் ஓடும் ரேசரை முன்னே தொங்கும் கண்ணாடியில் கவனித்துக் கொள்ளும் திறமை இருக்கிறதே!

எந்த மனிதனிடம் தான் திறமை இல்லை. வெற்றியும் தோல்வியும் அதைப் பயன் படுத்தும் விதத்தில் இருக்கிறது.

‘கொடியையாவது போட்டுக்கிடவாங்க……?’

முதற் கேள்விக்குப் பதில் கிடைக்காத ஏமாற்றத்தின் இறுக்கம் – இந்த இரண்டாவது கேள்வியில் ஆக்ரோஷமாக எதிரொலித்தது.

‘நான் மட்டும் தனியாகப் போயிருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டேன்.

இருந்தாலும் இது போன்ற இடங்களுக்கு மனைவியுடன் சென்று ஜோடியாய் அமர்ந்தெழுந்து வருவதில் இருக்கும் மரியாதையும் தனி தான். மகிழ்ச்சியும் தனிதான்.

கடைக்கு வந்து அழைப்பிதழைக் கையில் கொடுத்துக் கூப்பிட்டார்கள்.

புதிதாக வந்திருக்கும் ஒரு சிறுகதைப் புத்தகத்துக்கு வெளியீட்டு விழா நடத்துகின்றார்களாம். பேப்பர்களில் அடிக்கடி வரும் பெயருக்குரிய கவிஞர்கள் சிலர். எழுத்தாளர்கள் சிலர் என்று கூட்டமாக வந்து என்னைத் திணறடித்து விட்டார்கள்.

புத்தகத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இருந்தும் என்னைத்தேடி அத்தனை பேர் வந்து நின்றதில் எனக்குப் பெருமைதான். அந்தப் பெருமையில் இவளும் பங்கு கொள்ளட்டும் என்று தான் கிளம்பச் சொன்னேன்!

கதை, அது இது என்று என்னை விடக் கூடுதலாக வாசிப்பதும் இவள் தான். நேரம் இருக்கிறதல்லவா – எனக்கெங்கே அவைகளுக்கெல்லாம் நேரம் – எழுதுகிறவர்கள் பெயரெல்லாம் கூடத் தெரியும் இவளுக்கு. இதோ இவர்தான் – அதோ அவர் தான் என்று ஆட்களையே காட்டலாம், அதிசயப் பட்டுப் போவாள். அதற்காகத் தான் கிளம்பச் சொன்னேன்.

அமைச்சர்தான் புத்தகத்தை வெளியிடுவாராம். அவரிடம் இருந்து முதல் புத்தகத்தை நான் வாங்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய வெண்டுகோள். மந்திரி வருகின்றார் என்றால் பேப்பரில் இருந்தெல்லாம் வந்து படம் பிடிப்பார்கள். மந்திரியிடமிருந்து புத்தகத்தை நான் வாங்கும் போது பிடிப்பார்கள். எப்படியும் படம் பேப்பர்களில் வரும். படத்தில் பார்ப்பதை விட நேரில் பார்ப்பது ஒரு ‘த்ரில்’ அல்லவா! எத்தனை பெருமைப் படுவாள். அதற்காகத்தான் கிளம்பச் சொன்னேன்.

இவள் என்னடாவென்றால் பொட்டு வைக்கட்டுமா? தாலிக்கொடியைப் போடட்டுமா? என்று கொண்டு…..

படபடவென்று தண்ணீரை அள்ளி முகத்தில் அறைந்து, இரண்டு விரலை தொண்டைவரை செலுத்தி, நாலு தேய் தேய்த்து ஓங்கரித்துத் துப்பி விட்டு மீண்டும் நீரை அள்ளி கழுத்துத் தோள் முதுகென்று விசிறி தேய்த்துக் கொண்டேன்.

ஷேவ் எடுத்த முகம் லேசாக எரிந்தாலும் குளிர் நீர் படப்பட இதமாக இருக்கிறது.

முகத்தைத் துடைத்துக் கொண்டு நான் உள்ளே வரும்போது உடுத்து முடித்து மனைவி உட்கார்ந்திருந்தாள்.

நெற்றியைப் பார்த்தேன். காலியாக இருந்தது. கழுத்தைப் பார்த்தேன் காலியாக இருந்தது. ‘நான் ரெடி’ என்னும் தோரணையில் அமர்ந்திருந்தாள்.

அவளுடைய கேள்விகளை நான் அசட்டை செய்து விட்ட பொருமல் அந்த அமர்வில் தெரிந்தது.

‘நாலு மணிக்குக் கூட்டமின்னீங்க, மந்திரி வர்றாருன்னீங்க, இப்பவே மூணு ஆவுது. சுருக்கா கௌம்புங்க, நான் ரெடி’ என்றாள்.

‘நான் ரெடி’ என்னும் அந்த சொல்லின் அழுத்தம் கழுத்தைச் சுற்றி வந்து நெற்றியில் நின்றது.

‘சரி சரி வாங்க….. அழகான முகத்தை ஏன் இப்படி உம்முன்னு வைச்சிருக்கீங்க’ என்று மனைவியின் கன்னத்தை ஈர விரலால் தட்டி, சமாதானம் செய்து உள்ளே அழைத்துப் போனேன்.

மனைவி என்பதால் மட்டுமே, அவளை நீ, வா,போ என்று ஒருமையில் விளிக்கும் வழக்கம் எனக்கு உடன் பாடல்ல. மனைவி என்னை ‘நீங்கள்’ என்று கூறும் போது நான் மட்டும் ஏன் ‘நீ’ என்ற கூற வேண்டும்.

உரிமையுடன் பழகும் நண்பர்களை, உடன் தொழில் புரிபவர்களை, பாதையிற் சந்திக்கும் புதியவர்களை, பக்கத்து வீட்டுக்காரர்களை ‘நீ’ என்றா கூறுகின்றோம். நீங்கள் என்று குறிப்பிட, அவர்களை விட மனைவியாக்கப் பட்டவள் எதில் குறைந்தவளாகின்றாள்.

கட்டிலில் போடப்பட்டிருந்த மெத்தைக்கடியில் மறைத்து வைக்கப் பட்டிருந்த தாலிக் கொடியை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்து இப்போது திருப்திதானே… ம்…. ம்…… நெத்தி நெறையப் பொட்டையும் வச்சிக்கிட்டு மனைக்கு ‘வி’ தரும் மனைவியாய் கௌம்பணும்’ என்றேன்.

அவளுடைய கோபம் – ம்ஹும் அது கோபமல்ல, ஒரு ஆற்றாமை – வாழ்வுணர்வு – மறைந்து முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது.

கண்ணாடி முன் குனிந்து நெற்றிப் பொட்டை நெறிப்படுத்திக் கொண்டே கேட்டாள். ‘மனை என்றால் வீடு’ன்னு தெரியும். ‘வி’ மாதிரின்னீங்களே அது என்ன விக்டரியா?’

எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ‘வி ஃபார் விக்டரியா? அந்த அர்த்தமும் சரிதான். ஆனாலும் தமிழ் மனைக்கு இங்சிலிஸ்விக்டரி வேண்டாமுன்னு நினைக்கிறேன். தமிழ்லேயே மனையோட பொருந்துற மாதிரி ‘வி’ க்கு நெறைய அர்த்தம் இருக்கு. அழகு, காற்று, விசை, பறவை இப்படிப் பல அர்த்தம் இருக்கு. அத்தனையும் என் மனைவியின் ‘வி’க்கும் பொருந்தும்.

மனைவி அழகாகச் சிரித்தாள்.

கண்ணாடியும் எங்களை அழகாகக் காட்டி மறைந்தது- கழுத்துக்குக் கீழே!

வெளியே வந்துவிட்டோம்.

***

பஸ்ஸுக்குள் நிற்கும் போது மனைவியின் முகம் ஏதோபோல் நெளிந்தது.

பெண்களுடன் பஸ்ஸில் பிரயாணம் செய்வதன் சிரமம் எனக்கும் தெரியும் ஏதோ தகராறு தான் என்று யூகித்த வண்ணம் ‘என்ன’ என்று கண்ணால் கேட்டபடி மனைவியிடம் வந்தேன்.

‘அங்கே பாருங்கள்’ என்று கண்ணால் காட்டினாள். கண்கள் காட்டிய பக்கம் திரும்பினேன்.

இரண்டு பெண் முகங்கள். சீட்டின் சாய்வில் முகங்கள் மட்டுமே கூட்டத்துக்குள் தெரிந்தன. இரண்டு முகங்களிலும் நெற்றி நிறைந்த பொட்டு.

‘வேறொன்றும் இல்லை’ என்ற திருப்தியுடன் மனைவியை ஒரு கேலிப்பார்வை பார்த்தேன். அர்த்தம் புரிந்திருக்க வேண்டும்.

என் முகத்திடம் நெருங்கி மெல்ல காதுக்குள் கிசுகிசுத்தாள். ‘தமிழ்ப் பெண்கள் இல்லைங்க…. சிங்களம். இன்னார் தான் பொட்டு வைக்கிறதுன்னு ஒரு விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது’.

தங்களுக்கே சொந்தமான ஏதோ ஒன்று பறிபோகும் ஆத்திரம் முகத்தில் படபடத்தது.

எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. சத்தியஜித்ராயின் ‘மாநகர்’ படத்தில் கதாநாயகியிடம் – அவள் புதிதாக உத்தியோகம் பார்க்கத் தொடங்கியவள் ஒரு பறங்கிப் பெண் தானும் உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு ‘இந்தா நீயும் பூசிக் கொள் என்று லிப்ஸ்டிக்கை நீட்டுகிறாள்.’

ஏதோ பாம்பைக் கண்டவள் போல் நடுங்கிச் சிலிர்த்துப் போகிறாள். கதாநாயகி. பறங்கிப் பெண் அவளருகே வந்து முகத்தை உற்றுப் பார்க்கிறாள்.

நெற்றியில் குங்குமப் பொட்டு, நெற்றிக்கு மேல் கூந்தலை இரண்டாகப் பிரிக்கும் ‘வடுகின்’ முனையில் குங்குமப் பூச்சு.

உச்சியைத் தொட்டுக் காட்டிக் கூறுகிறாள். ‘யு புட் ரெட் ஹியர்’ நெற்றியைத் தொட்டுக் கூறுகின்றாள். ‘யூ புட் ரெட்ஹியர்’ பிறகு உதட்டைத் தொட்டுக் காட்டியபடி ‘வொய் காண்ட் யூபுட் ரெட் ஹியர்’ என்று கேட்டுச் சிரிக்கின்றாள்.

உதட்டுச் சாயம் பூசிக் கொள்ளும்படி கூறிவிட்ட அசூகையிலிருந்து அந்தக் கதாநாயகி விடுபடவில்லை . கூனிப் போய் நிற்கின்றாள்.

பரம்பரை பரம்பரையாகத் தங்களுக்கு ஒத்துவராதவைகளை வெறுத்து ஒதுக்கிவிடும் மனப் பாங்கிற்கு உதாரணமாக அந்தக் கதாநாயகி திகழ்ந்ததைப் போலவே, பரம்பரை பரம்பரையாகத் தங்களுக்கே உரித்தான தனித்துவமானவைகளை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்காத மனப்பான்மைக்கு உதாரணமாக எனது மனைவி திகழ்வதாகப் பட்டது.

சிரித்துக் கொண்டேன்.

‘என்ன கூட்டத்துக்கா… மனைவி சகிதம்?’ என்ற குரல் பின்னால் கேட்டது. எனது நண்பர் பின்னால் அமர்த்திருந்தார்.

‘ஆமாம்’ என்ற பாவனையில் முகம் புன்னகைத்துக் கொண்ட போது கை மெதுவாக சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது.

நண்பர் எழுந்து மனைவிக்கு இடம் கொடுத்தார்.

உட்கார – இடம் கிடைத்த திருப்தியைக் கூட மனைவியின் முகம் காட்டவில்லை.

மனைவிக்குப் புதிதாக இருக்கலாம்! அடிக்கடி பஸ்ஸில் பயணம் செய்யும் எனக்கு இது அத்தனை புதியதல்ல, அண்மைக் காலமாக சிங்களப் பெண்கள் நெற்றியில் பொட்டுடன் வலம் வருவதை நான் அடிக்கடி பார்த்திருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் நெற்றியில் இடும் இந்தச் சின்னப் புள்ளிக்கு ஒரு மகத்தான சக்தி இருக்கிறது. முகங்கள் தான் எத்தனை பிரகாசமாய் இருக்கின்றன. பளீரென்று, கண்ணைக் குத்துவதுபோல்.

நண்பர் இப்போது என்னருகே வந்து நின்றார். ‘அங்கே தானே’ என்றேன்.

‘அங்கேதான், ஆனால், இப்போதே அல்ல! வெளியில் ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு வருவேன். நீங்கள் நேரத்துடன் போய்விடுங்கள். உங்கள் வருகைக்காகவும் கூட்டம் தாமதப் படும்’ என்று சிரித்தபடியே இறங்குவதற்காக முன்னோக்கி நகரத் தொடங்கினார் நண்பர்.

இவர்கள் வந்து முதன் முதலாக என்னைக் கூப்பிட்டு விட்டுப் போனதுமே இவரிடம் தான் ஓடிச் சொன்னேன். ‘இப்படி வந்து அழைத்தார்கள்’ என்று.

இது போன்ற விஷயங்களில் நண்பர் நல்ல அனுபவசாலி.

‘வெரிகுட். சரியான ஆளிடம் இப்போது தான் வந்திருக்கிறார்கள்’ என்றவர், மெதுவாகச் சொன்னார், ‘முதற் பிரதி வாங்கும் போது ஏதாவது பணம் கொடுக்க வேண்டும்’ என்று.

‘எவ்வளவு கொடுக்கலாம்?’

‘அது உங்களைப் பொறுத்தது!’

‘அப்படியா…. பரவாயில்லை . சிங்கள நாடகம் போடுகிறோம். அது இது என்று எத்தனைபேர் பரவாயில்லை ….. விழா மலருக்கு விளம்பரம், டிக்கட் புத்தகம், டொனேஷன் என்று எதையாவது தூக்கிக் கொண்டு, எத்தனை பேர்…… ஐநூறு, ஆயிரம் என்று கொடுத்திருக்கின்றேன். இவர்கள் தமிழ்ப் பையன்கள். கொஞ்சம் கூடுதலாகவே கொடுப்பேன்.’

நண்பரின் முகம் சுருங்கியது.

‘கலை இலக்கியத்திற்கு ஏதாப்பா இனம்! சிங்களவர்களுக்குக் கொடுத்தேன் என்று ஏன் பிரிக்கின்றீர்கள்’.

‘சரி, சரி அதை விடுவோம். உங்களுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும், 83 க்குப் பிறகு நிறைய தமிழ்ப் பணக்காரர்கள் சிங்கள நாடகத்துக்கும், சிங்கள விளம்பரங்களுக்கும் தண்ணீராய்ப் பணம் கொடுக்கிறார்களே அது ஏன்? கலைக்கு இனமோ மொழியோ கிடையாது என்பதாலா! அது எதுவாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கும் கொடுப்பேன். எங்கே இன்னொருதரம் அடிப்பார்களோ என்ற பயத்தில். இவர்களுக்கும் கொடுப்பேன் நம் பையன்களாயிற்றே என்ற பற்றுதலில்’ என்று கூறிவிட்டு வந்தேன்.

அதுதான் நண்பரின் குரல் கேட்டதும் கை சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. வெள்ளை என்வலப்புக்குள் இரண்டாயிரம் ரூபாய்க்கான ‘செக்’ பத்திரமாக இருக்கிறது, பாக்கெட்டுக்குள்.

***

வாசலிலேயே பன்னீர் தெளித்து, சந்தனப் பொட்டு வைத்து உள்ளே அழைத்துப் போனார்கள்.

நான் தான் முதல் முதலாக வந்துள்ளது தெரிந்ததும் சங்கோஜமாக இருந்தது.

கூட்டம் தொடங்க ஐந்துக்கு மேல் ஆகிவிட்டது. நண்பர் நல்ல அனுபவசாலி என்று எண்ணிக் கொண்டேன்.

அமைச்சர் வந்ததும் கூட்டத்தில் சல சலப்பு அடங்கி எழுந்தது. ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏனோ எழுகிறது.

விழா ஏற்பாட்டாளர்களால் மலர்மாலை அணிவித்து அமைச்சர் கௌரவிக்கப் பட்ட பின் வரவேற்புரை சொன்னார் ஒருவர்.

என் பெயரையும் சொன்னார் அவர். பிறகு நூல் வெளியீடு. அமைச்சரிடம் இருந்து முதற் பிரதியை நான் வாங்கிக் கொள்வேன் என்று மைக்கில் கூறினார்கள்.

மனைவியைப் பெருமையுடன் நோக்கிவிட்டு முன்னால் நடந்தேன். அவள் முகத்திலும் ஒரு பெருமிதம்.

கேமரா லைட்டுக்கள் பள பளத்தன.

மேடையில் இருந்து இறங்கிய என்னை மறுபடியும் கூப்பிட்டு, அமைச்சரிடமிருந்து நூலை மறுபடியும் வாங்கச் சொல்லி மறுபடியும் படம் எடுத்துக் கொண்டார்கள்.

திரும்பி வந்து உட்காரும் போது மனைவியும் அருகே இருந்த பெண்ணும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்ச அவரவர்களுடைய கால் சங்கிலி பற்றியதாக இருந்தது.

என்னைப் பற்றித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பாள் என்று எதிர்பார்த்துக் கொண்டு வந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

மேடையில் ஏறியதுமே, மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுமோ!

வாங்கிய புத்தகத்தைப் புரட்டி புது மணத்தை நுகர்ந்து கொண்டிருக்கையில் கைதட்டல் கேட்டது. பிரபலம் வாய்ந்த எழுத்தாளர் ஒருவர் நூலைப் பற்றிப் பேச வந்திருந்தார்.

டி.வியில், ரேடியோவில், பேப்பர்களில், எல்லாம் அவரைப் பார்த்திருப்பதாக, கேட்டிருப்பதாக மனைவி காதுக்குள் கிசு கிசுக்கிறாள். கைதட்டலும் அவருடைய பிரபல்யத்தை ஊர்ஜிதப் படுத்தியது.

‘இந்தப் புத்தகத்தை நேற்றுத்தான் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள், முழுதாக இதை வாசித்து அதைப் பற்றி உங்களுக்குக் கூற முடியாதவனாக இருக்கிறேன்’ என்று ஆரம்பித்தவர், நீண்டநேரம் பேசினார். இடையிடையே கூட்டத்தினரிடையே இருந்து சிரிப்பும், கைதட்டலும் கேட்கின்றன.

புத்தகத்தையே இன்னும் படிக்கவில்லை என்றவர், இவ்வளவு நேரம் பேசுவதும், கேட்போர் கைதட்டி ஆரவாரிப்பதும் எனக்கு வினோதமாக இருந்தது.

தான் எழுதத் தொடங்கிய காலத்தில் பட்ட இன்னல்கள், நடத்திய போராட்டங்கள். இத்தியாதிகள் பற்றி எல்லாம் தூள் பறக்கப் பேசினார்.

‘இது போன்ற நூல்கள் வந்து நமது இலக்கியத்தை வளர்க்க வேண்டும். செல்வந்தர்கள் முன் வந்து இலக்கிய வாதிகளை ஆதரிக்க வேண்டும்’ என்றவர், என் பெயரையும் கூறி, இந்நூலின் முதற் பிரதியை வாங்கியதற்கு அவரையும் பாராட்டி நன்றி கூறுகின்றேன் என்று முடித்தார்.

வெகு நீண்ட நேரம் பேசியதால் எப்போது முடிப்பார் என்று எரிச்சல் பட்டுக் கொண்டிருந்த எனக்கே கூட என் பெயரை அவர் கூறியதும் மற்றவைகள் மறைந்து ஜில்லென்றிருந்தது.

அடுத்து ஒரு அம்மையார் வந்து பேசினார்கள். பேப்பர் ஆபீசில் வேலை பார்க்கிறார் என்பதைத் தலைவர் சொல்லத் தெரிந்து கொண்டேன்.

இவருக்கும் நேற்றுத்தான் புத்தகம் கொடுத்திருப்பார்கள் என்று நான் நினைக்கையில் அவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.

அவர் பேசத் தொடங்கியதே அந்தப் புத்தகத்தைப் பற்றித்தான். அதில் உள்ள கதைகளை ஒன்று ஒன்றாய் விவரித்தார். அந்தக் கதைகள் ஏன் எழுதப் பட்டன, ஏழுதியவர் ஏன் மற்றவர்களுக்கு அதைச் சொல்ல வந்தார். அவைகளின் சமூகப் பின்னணி என்ன என்றெல்லாம் சுட்டிக் காட்டினார்.

ஒரு சில இடங்களைப் புத்தகத்தில் இருந்து வாசித்துக் காட்டினார்.

நானும் அவ்வப்போது அவர் பேச்சுக்கேற்ப புத்தகத்தைப் புரட்டிக் கொண்டேன்.

அம்மையாரின் பேச்சு முடிந்து வணக்கம் கூறி மேடையை விட்டு இறங்கியதும் அடுத்தொருவர் பேச அழைக்கப் பட்ட போது அமைச்சர் எழுந்து வணக்கம் கூறிவிட்டு இறங்கினார்.

அவசர ஜோலிகள் எத்தனை இருக்கும் அவருக்கு!

அமைச்சர் வெளியேறியதுமே அங்கொன்று இங்கொன்று என்று சிலர் வெளியேறினர்.

புத்தகத்துக்காக வராமல் அமைச்சருக்காக வந்தவர்கள்.

அடுத்தடுத்து இருவர் பேசி முடித்தனர். நேரம் போய்க் கொண்டிருக்கிறது. வெளியுலகின் இருட்டு உள்ளே தெரியவில்லை. மணியைப் பார்க்கிறேன் எட்டுப் பிந்திவிட்டது.

‘நேரமாச்சே….. போக வாங்க’ என்ற அடிக்கடி முனகலுடன் புத்தகத்தில் அரைவாசிக்கு மேல் படித்து முடித்து விட்டாள் மனைவி.

நான் அழைப்பிதழை பார்க்கிறேன். இன்னும் நாலு பேர் பேச இருக்கிறது. ‘அடேயப்பா’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

ரொம்பவும் பிந்திவிட்டால் போவது கொஞ்சம் சிரமம் தான். முன்பெல்லாம் மாதிரி, பாதைகளில் ஜன நடமாட்டம் இருப்பதில்லை, வெறிச்சோடிக் கிடக்கும். இருட்டில் நடக்க நேர்ந்தால் போதும், இருப்பதைத் தட்டிப் பறிக்க ஒரு கூட்டமே இருக்கிறது.

அங்கே தமிழர்கள் அடிக்கிறார்கள் – இங்கே நாங்கள் அடிக்கக் கூடாதோ என்னும் நியாயங்கள் வேறு.

‘தாலிக் கொடியைப் போடாமல் கூட்டி வந்திருக்கலாம்’ மனம் அலைகிறது.

இரவு நேரம் பாதையில் ஒரு தமிழ்ப் பெண் என்றால் முதலில் கழுத்தைத்தான் தடவுவார்கள்.

நேரம்போய்க் கொண்டிருக்கிறது. பேச வருபவர்கள் தங்களது பேச்சைச் சற்று சுருக்கிக் கொள்ளுமாறு தலைவர் அடிக்கடி கூறுகிறார்.

இப்போது பேசிக் கொண்டிருப்பவர் ஏதோ கோபமாக – சண்டை பிடிப்பவர் போல் ஆக்ரோஷமாகப் பேசுகிறார். போய்க் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் இப்போதைக்கு முடிக்கமாட்டார் போலிருக்கிறது.

‘தயவு செய்து சீக்கிரம் முடிக்கவும்’ தலைவர் ஒரு துண்டை அவரிடம் நீட்டுகிறார்.

‘பேசக்கிடைத்தால் மேடையைவிட மாட்டார்கள்…… இவர்…. இவரை எல்லாம் பேசப் போட்டுக் கொண்டு’ பின்னால் ஒருவர் சற்றுப் பலமாகவே முணுமுணுக்கிறார்.

தலைவரின் துண்டுக்குப் பிறகும் சற்று நீளமாகப் பேசி முடிக்க மனமில்லாமல் முடிக்கிறார் அவர்.

மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மண்டபம் ஜெகஜோதியாய் இருக்கிறது. கடிகாரத்தைப் பார்க்காவிட்டால் இவ்வளவு நேரமாகி விட்ட விஷயமே தெரியவராது.

மனைவியின் நச்சரிப்பும் தாளவில்லை. எனக்கும் பொறுமை தவறுகிறது. அமைப்பாளர் ஒருவரிடம் கூறிவிட்டு மனைவியுடன் வெளியேறினேன்.

நண்பர் எங்காவது இருக்கிறாரா? என்று ஒரு நோட்டம் விட்டேன். அவர் மகா அனுபவசாலி! எப்போதோ போய்விட்டிருந்தார்.

பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது மாநகரின் அந்தகாரத்துள் நானும் மனைவியும் அந்தரத்தில் இருப்பதாக உணர்ந்தோம்.

தனியாக நிற்பதற்கு அச்சமாக இருந்தது. இன்னொருவர் வந்து உடன் நிற்கும் போது அதைவிடவும் அச்சமாக இருந்தது. மனைவியும் மிக உஷாராகவே இருக்கிறாள். கழுத்தையே காணவில்லை.

‘ஏதாவது வர்ற பஸ்ஸில் ஏறுவோம்’ மனைவியிடம் மெதுவாகக் கூறுகிறேன்.

வீட்டை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் முன்னேறி விடும் நினைவு.

விடுமுறை தினங்களில்- பிந்திவிட்ட இது போன்ற இரவு வேளைகளில் பஸ் அதிகமாக இராது. நேரம் செல்லச் செல்ல மனதில் ஒரு அச்சம் அரிக்கிறது.

‘கூட்டத்துக்கு வராமல் இருந்திருக்கலாமோ…. சேச்சே எவ்வளவு விரும்பி அழைத்தார்கள்.

‘பெண்களுடன் தான் பிரச்சினையே! தனியாக வந்திருக்கலாம்’ மனம் அலைகிறது.

தூரத்திலே நட்சத்திரம் போல் இரண்டு புள்ளிகள் மின்னுகின்றன.

லொட லொட என்ற சப்தத்துடன் தூங்கிவழிந்து கொண்டு வருகிறது ஒரு பஸ்.

அப்பாடா! வந்து பிறகும் கூட போர்டும் தெரியவில்லை , நம்பரும் தெரியவில்லை. இருந்தும் ஏறிக் கொண்டோம்.

உட்கார்ந்திருக்கும் நாலைந்து பேரில் கண்டக்டர் என்பது தெரியவில்லை.

நாங்கள் அமர்ந்ததும் எழுந்து எங்களிடம் வந்தவரிடம் எந்த பஸ் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். எங்களுக்கு வசதியான பஸ் இல்லை. இறங்கிய பிறகு ஒரு பத்து நிமிட நடை போடவேண்டியிருக்கும். அவ்வளவு தான்.

‘நடந்து போயிடலாமாங்க’ மனைவியின் பயம் வினாவாய் வெளிவந்தது.

‘போய்த்தானே ஆகவேண்டும்’ என்றபடி இறங்க வேண்டிய இடத்தைக் கண்டக்டரிடம் கூறினேன்.

டிக்கட் வாங்கிய அதே துணிச்சலுடன் இடம் வந்ததும் இறங்கியாகிவிட்டது. அன்றாடம் நடக்கும் பாதைதான். என்றாலும் இப்போது கண்கைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல் இருக்கிறது.

தூரத் தூர நிற்கும் மின்கம்ப லைட்டுக்கள் மெல்லிதாக ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. வேகமாக என்று நினைத்துக் கொண்டாலும் மெதுவாகவே நடக்கிறோம். தன்னையறியாமலேயே மனைவி எனது அணைப்பிற்குள் வந்துவிட்டதால் வேகம் தடைப்படுகிறது.

இந்தப் பத்து நிமிட நடையின் பாதித் தொலைவில் ஒரு பாலம் இருக்கிறது. வளர்ந்து வளைந்துள்ள பாதையோர மரங்கள் பாலத்தை எப்போதும் இருட்டாகவே வைத்திருக்கும். பாலத்தில் அடிக்கடி நடக்கும் திருட்டுக்கள், வழிப்பறிகள் பற்றி நிறையவே கதைகள் கேள்விப் பட்டிருக்கின்றோம்.

‘இன்று தான் அனுபவிக்கப் போகின்றோமோ’ என்ற நினைவு வந்ததும் மனைவியை இறுக அணைத்துக் கொண்டேன்.

‘என்னங்க…….’ என்றாள் திடுக்கிட்டு.

‘ஒன்றுமில்லை’ என்று வாய் முனகியது. பார்வை கூர்மையாகியது.

‘அதோ தெரிகிறது பாலம். பால முனையில், லைட் கம்பத்தின் அருகே ஏதோ நிழலாடின. இரண்டு உருவங்கள் ஒழிவது போல் தெரிகிறது.’

பிரமையாக இருக்குமோ என்று நான் நினைத்து, பிரமையாகவே இருக்கட்டும் என்று விரும்பிக் கொண்டாலும் பிரமை இல்லை உண்மைதான் என்று நிரூபணம் செய்கிறது, மறுபடியும் ஆடிய நிழலுருவம்.

இப்பொழுது நாங்கள் சரியாக ஒரு லைட் கம்பத்தினடியில் நடக்கிறோம். அடுத்த லைட் கம்பம் பாலத்தின் முனையில் இருக்கிறது.

வருபவர்கள் அருகே வரட்டும் என்று ஒளிந்து கொள்ளுகின்றனர் போலிருக்கிறது. வெறுமனே கேள்விப் பட்டவைகள் அனுபவிக்கப் படும் அவஸ்தை எப்படி இருக்கும்! இப்படித்தான்!

மனம் பிசைபடுகிறது. உதடுகள் வரண்டு ஒட்டிக் கொள்கின்றன. பேசுவதற்காக வாயைத் திறப்பதே சிரமமாக இருக்கிறது. கீழுதட்டைக் கடித்து ஈரமாக்கிக் கொள்ளுகிறேன்.

‘பாலத்தடியில் யாரோ பதுங்குவது போல் தெரிகிறது. ஆனாலும் பயப்படக் கூடாது. இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்…..’

நிலைமையை மனைவிக்கு அறிவித்துத் தைரியமும் கூறிக் கொண்டேன்.

இடுப்பைத் தடவும் போது தான், காற்சட்டை போட்டுக் கொண்டு வந்திருக்கலாம் என்ற நினைவு எழுந்தது.

வேஷ்டியை இறுக்கிக் கட்டி அரைஞாண் கொடியை இழுத்து வேஷ்டிக்கு மேலாகப் போட்டுக் கொண்டு, பெல்ட்டை உருவிக் கையில் எடுத்துக் கொண்டேன். பெல்டின் ஒரு முனையில் தடித்த பித்தளைப் பூண்.

மறுமுனையைக் கையில் பிடித்துக் கொண்டால் ஆளை நெருங்க விடாமல் விசிறி அடிக்கலாம். திருடன் தான் – கொள்ளைக்காரன் தான் என்றாலும் மனிதன் தானே. பெல்டின் இரும்பு முனையால் அடிபட்டால் வலிக்காதா என்ன? வலித்தால் ஓடமாட்டானா என்ன?

மனதில் வரவழைத்துக் கொண்ட தைரியத்துடனும், கையில் உருவிக் கழற்றிய பெல்டுடனும் முன்னேறினோம்.

‘ஹரியட பலாகத்தாத….. ஈய வகே குட்டிகண்ட பே……’ பாலத்தடியில் பதுங்கிய இருவர் சிங்களத்தில் கிசு கிசுத்துக் கொண்டனர்.

‘சரியாகப் பார்த்துக் கொண்டாயா நேற்றுப்போல் உதைவாங்கிக் கட்டிக் கொள்ள இயலாது’ என்றான் ஒருவன். –

‘பார்த்தேன்…. ஆனாலும் சரியாகத் தெரியவில்லை. மனிதன் என்றால் காற்சட்டை இல்லை .’

அது நிச்சயம் மனுஷி சேலை தான். ஆனால் நெற்றியில் பெரிய பொட்டு.

‘பொட்டா…..? என்றவன் மற்றவனையும் இழுத்துக் கொண்டு பாலத்தடி நிழலுக்குள் மறைந்து விட்டான்..’

நேற்றைய நினைவுகள் ஒட்டிக் கொண்ட நெருப்பாய் இன்னும் அவனைச் கட்டுக் கொண்டிருந்தன.

நேற்று இதே நேரம் இருக்கும். இதேபோல் தான் இருவர். நடையைப் பார்த்தால் பயந்து பயந்து வருவது போல் தான் இருந்தது.

ஆகாயத்தில் மிதக்கும் முழு நிலவுபோல் மனுஷியின் முகத்தில் அழகான பெரிய பொட்டு. வட்டமாக! மனிதன் வேஷ்டியும் சட்டையுமாக வந்து கொண்டிருக்கிறான்.

‘சரியோ சரி’ தமிழ் ஜோடி தான். எப்படியும் ஒரு தாலிக் கொடி தேறும் என்ற நினைவுடன் இருளில் பதுங்கிக் கொண்டவர்கள், பாலத்து முனையில் அவர்கள் கால் வைத்ததும் ‘ஹேய்’ என்ற கூச்சலுடன் அவர்கள் முன் பாய்ந்தார்கள். ஒருவன் மனுஷியை எட்டிப் பிடித்துக் கொள்ள மற்றவன் மனிதனை தாக்கினான்.

வந்தவர் ஒரு மீன் முதலாளி. எப்படியோ மனைவியுடன் இந்த நேரத்தில் இந்த இடத்தில் நடக்க வேண்டியாகிவிட்டது. வந்துவிட்டார். ஒரு வினாடி அசந்தவர் மறுவினாடி சுதாகரித்துக் கொண்டார்.

இதுபோல் எத்தனை கூச்சல் காரர்களைப் பார்த்திருப்பார்கள். தன்மேல் பாய்ந்தவனை எட்டிப் பிடித்துக் கொண்டு, மனைவியுடன் மல்லுக் கட்டியவனை எட்டி உதைத்துத் தள்ளினார். இடுப்புப் பட்டியை உருவி எடுத்து விளாசத் தொடங்கி விட்டார்.

கையில் பிடிபட்டவனுக்கு பிய்த்துக் கொண்டால் போதும் என்றாகி விட்டது. இருவரும் ஓடியே போய்விட்டார்கள்.

அரைக் கால்சட்டையுடன் நின்றவர் வெள்ளைச் சாரத்தைத் தேடி எடுத்துச் சுற்றிக் கொண்டபடி ‘தெமலு கியலா இத்துவாத….. வேசிக்கப் புத்தாளா’ என்று முனகிய படி மனைவியைத் தோளில் தட்டி இழுத்துக் கொண்டு நடந்தார்.

பாலத்தடியில் பாய்ந்து மறைந்த இருவரும் ஓடிக் கொண்டே பேசிக் கொண்டனர்.

‘சிங்ஹள, மினுக னே’ என்றான் ஒருவன்.

‘ஏனம் மொட்டு’ என்றான் மற்றவன்.

‘தெங் தியனவானே அப்பே கேனித் ‘ என்றபடி இருவரும் கண் மண் தெரியாமல் ஓடினர்.

பயந்தவர்களிடம் பிடுங்கிக் கொள்வதுதான் இவர்களுடைய வழி. இந்த மனிதன் என்னடா வென்றால்…..

நேற்றைய நிகழ்ச்சி இன்று இருவரையும் உஷாராக்கியது.

பாலத்துக்கு முந்திய லைட் கம்பத்தடியில் வரும் போது ஆட்களை நோட்டம் விட்டுக் கொள்வார்கள் ஆள் யார், ஆண் மட்டுமா பெண்ணுமா, தெரிந்தவரா அல்லது புதியவரா, தமிழா, சிங்களமா போன்றவற்றை கூடுமானவரை யூகித்துக் கொண்டு பறித்துக் கொள்ள ஏதாவது இருக்குமா என்றும் கவனிப்பார்கள்.

அப்படிக் கவனித்ததில் தான் ஆணும் பெண்ணுமாக ஒரு ஜோடி – ஆண் கால்சட்டை இல்லை – பெண்ணின் நெற்றியில் பொட்டு – இத்தியாதிகளை ஒருவன் கவனித்துக் கூறினான்.

‘பொட்டை வைத்து எதையும் நிர்ணயிக்க முடியவில்லை! மனிதனோ, கால்சட்டை போட வில்லை. ஒருவேளை………’ என்று அவர்கள் நிச்சயமின்மையால் தடுமாறிக் கொண்டிருக்கையில் மனிதன் இடுப்புப் பட்டியை உருவிக் கையில் எடுத்துக் கொண்டதை மற்றவன் கவனித்து விட்டான்.

நேற்றைய நினைவிலிருந்து அவர்கள் மீளவே இல்லை.

***

பாலத்தை நெருங்கியதும் மனைவியின் நடுக்கம் அவளது அணைப்பின் இறுக்கத்தில் தெரிந்தது.

‘பயப்படக் கூடாது’ என்று மனைவியின் காதுக்குள் முனகிவிட்டு,பெல்ட்டைப் பற்றி இருந்த கையை ஒரு நடிப்புடன் வீசி வீசி நடந்தேன்.

ஆடிய நிழலுக்குரியவன் எந்த வினாடியும் தம் முன்னால் குதிக்கலாம். அல்லது பின்னால் இருந்து தன் தோளைப் பிடிக்கலாம் என்னும் முன் ஜாக்கிரதையுடன் நடந்தேன்.

பாலத்தைத் தாண்டியுமாகி விட்டது! இன்னும் நாலெட்டு வைத்தால் வீடு வந்துவிடும்.

ஒனறையுமே காணவில்லை! என்ன ஆனார்கள்!

‘பிரமையாகத் தாங்க இருக்கணும்’ வீட்டை அடைந்து விட்ட தைரியத்தில் மனைவி கூறினாள்:

‘எது! நான் பார்த்ததா! இருந்துட்டுப் போகட்டுமே….’ என்றேன்.

‘நல்லாவே பயந்துட்டேங்க’ இது வேற கையில்….. இது வேற நெத்தியில’ என்றபடி வெளியீட்டு விழாவில் வாங்கிய புத்தகத்தை மேசைமேல் போட்டு விட்டுப் பொட்டைக் கழற்றப் போனாள்.

‘வேணாம், வேணாம். பொட்டு அப்படியே இருக்கட்டும். நெற்றி நிறைய பொட்டும் – நீண்ட கூர்மை நாசியும்’ என்று மனைவியின் பயம் தெளிய சற்று வர்ணித்து விட்டு –

‘இது கையிலும், இது நெற்றியிலும் இருந்தால் தான் இன்று தப்பித்தேன் என்று கூறும் நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு கண்ணால் நான் கண்டதே பிரமையாகிவிட்ட இன்றைய நிகழ்வே சாட்சி’ என்றேன் சிரித்தபடி.

– இதழ் 218 ஜனவரி-பெப்ரவரி 1989, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *